Friday 24 January 2014

தமிழக அரசின் நலத்திட்டங்கள்

தமிழக அரசின் நலத்திட்டங்கள்
Posted Date : 15:12 (15/12/2013)Last updated : 15:12 (15/12/2013)
 ஆர்.ஹரிகிருஷ்ணன்
அரசின் சட்டங்கள் நம்மை ஆட்சி செய்கின்றதென்றால், சமூகத்தினை பிரச்னைகளில் இருந்து மீட்சியடையச் செய்வது சமூக நலத் திட்டங்களே. அத்தகையத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்
6 வயது வரை உள்ள குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்குப் பல சேவைகளைத் தொகுத்து வழங்கும், இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியே. இந்தத் திட்டம் குழந்தைகளை நோய் எதிர்ப்பு சக்தி மிக்க  நற்குடிமகன்களாக உருவாக்கிட வழி செய்கின்றது.
தொட்டில் குழந்தை திட்டம்
பெண் சிசுக்கொலை கொடுமை யை ஒழிப்பதற்காக 1992-ல் முதன்முதலாக இத்திட்டம் சேலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பெற்றோர்களால் கைவிடப்பட்டப் பெண் குழந்தைகளை மீட்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், காப்பகங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டன. இது பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப் படுத்தியது.
சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தை காப்பகங்கள்
ஆதரவற்ற மற்றும் தாய்- தந்தையற்ற குழந்தைகளைக் காத்திட  தமிழகம் முழுவதும் 27 இல்லங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குடும்பத்தில் இருப்பது போன்றே  அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் இலவசமாகவே வழங்கப் படுகின்றன. அவ்விடத்திலேயே அந்தக் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியும், பின்னர்  அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உள்ளாட்சி  பள்ளிகளில் உயர்கல்வியும்  வழங்கப்படுகின்றது. மேலும் தொழிற் பயிற்சியும் அளிக்கப்படுகின்றது. இதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஒன்று செயல்படுகின்றது. இக்குழுவில் சமூக ஆர்வலர்கள் உட்பட  கல்வி, சுகாதாரம், சமூக நலம் ஆகிய துறைகளின் பிரதிநிதிகளும் உள்ளனர்.
குழந்தை தத்தெடுத்தல் திட்டம்
தமிழகத்தில் 22 அரசு சாரா தத்தெடுப்பு நிறுவனங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் 9 நிறுவனங்களுக்கு வெளிநாடுகளுக்குத் தத்து கொடுக்கும் அதிகாரம் மத்திய தத்து வள ஆதார நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒரு பக்கம் குழந்தையின்மையால் அவதிப்படும் தம்பதியருக்கும், ஆதரவற்றக் குழந்தைகளுக்கும் ஒரு பாலமாகச் செயல்படுகின்றது.
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்
ஆண் குழந்தைகளையே விரும்பும் மனப்போக்கினை மாற்றிடவும், சிறு குடும்ப நெறியை ஊக்கப்படுத்தவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் 2001-ல் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்கீழ் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்து, ஆண் குழந்தை இல்லாத பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டு இருந்தால், அந்தப் பெண் குழந்தையின் பெயரில் ரூ. 22,200 முதலீடு செய்யப்படுகின்றது. இந்தத் தொகை 50 ஆயிரமாக உயர்த்திட இருக்கிறது.
ஆண் குழந்தை இல்லாமல் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்து, பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருந்தால், ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூ.15,200 முதலீடு செய்யப்படுகின்றது. (இந்தத் தொகை 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தொகை முதலீடு செய்யப்பட்ட ஐந்தாமாண்டு முடிவிலிருந்து ஆண்டுதோறும்  கல்வி உதவித் தொகையாக ரூ.1800 வழங்கப்படுகின்றது. மேற்கண்ட முதலீடு செய்யப்பட்ட தொகைகள் 20 ஆண்டுகள் வரை வைப்பீடாக வைக்கப்பட்டு, அந்தப் பெண் குழந்தை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே முதிர்வுத் தொகை வழங்கப்படும்.  இதன் மூலம் பெண் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடைநிற்றலும் தவிர்க்கப்படுகின்றது.
இளைஞர் நீதிக் குழுமங்கள்
2006-ம் ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்ட, 2000-ம் ஆண்டின் இளைஞர் நீதிச் சட்டப் பிரிவு 4(1)-ன் படி  இளைஞர் நீதிக் குழுமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்கு முரணாகச் செயல்பட்ட சிறார்கள் குறித்த வழக்குகளைத் தீர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டன.
பெருநகர் நீதிமன்ற நடுவர் அல்லது முதல்வகுப்பு நீதிமன்ற நடுவர் மற்றும் இரண்டு சமூகப்பணியாளர்கள் (குறைந்தபட்சம் ஒரு பெண் உட்பட) இணைந்து நீதிமன்ற நடுவர் குழுமமாகச் செயல்படுகின்றார்கள். இந்தக் குழுமங்கள் கூர்நோக்கு இல்லங்களில் வாரத்துக்கு மூன்று முறை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கூடுகின்றன.
வள மையங்கள்
ஏற்கெனவே இருந்த இளைஞர் வழிகாட்டி மையங்கள் மாநிலம் முழுவதும் 31 வளமையங்களாக அரசால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த வள மையங்கள் ஆற்றுப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் போன்ற சேவைகளை வழங்குகின்றன. இம்மையங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம், அரசு மானிய உதவியுடன் இயங்கி வருகின்றன.
பிற்காப்பு நிறுவனங்கள்
குழந்தை இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களில் அவர்கள் இருப்புக் காலத்துக்குப் பின் வெளியேறும் சிறுவர் சிறுமிகளைப் பராமரிப்பதற்காக இந்த நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் உயர்கல்வியைத் தொடர, தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கப்பட்டு, அவர்கள் சமூகத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றனர்.
சத்துணவுத் திட்டம்
இந்தத் திட்டம் 1.7.1982 அன்று தொடங்கப்பட்டு, இன்று பல்வேறு மாற்றங்களுடன் செயல்பட்டு வருகின்றது. முதலில் ஊரகப்பகுதிகளில் 2 முதல் 5 வரையிலான முன் பருவ குழந்தைகளுக்காகவும், 5 முதல் 9 வரையிலான தொடக்கக் கல்வி மாணவ-மாணவிகளுக்காகவும் செயல்படுத்தப்பட்டது. பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் நகர்ப்புற பகுதிகளுக்கு விரிவாக்கப்பட்டது.
1984-ம் ஆண்டு முதல் 10 வயதிலிருந்து 15 வயது வரையிலான மாணவ-மாணவிகளுக்கும்  விரிவாக்கப்பட்டு, பள்ளி வேலை நாட்களில் மட்டும் உணவளித்துச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது ஏனையோர்க்கு ஆண்டு முழுவதும் வழங்கப்படுகின்றது.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெற்றோருக்கு இந்தத் திட்டம் வரப் பிரசாதமாக உள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் இடையில் நின்றுவிடுவதையும் தவிர்க்கின்றது.
மகளிர் நலத் திட்டங்கள்
நாட்டின் கண்களான பெண்களின் நிலை இன்றும் சில இடங்களில் குறிப்பிடும்படி இல்லை. சில இடங்களில் பெண்கள் ஆச்சரியக்குறியாக நிமிர்ந்து நின்றாலும்,  பல்வேறு இடங்களில் அவர்களுடைய நிலை இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. அவர்களின் நிலையினை மாற்றிட தமிழக அரசாங்கம் செயலாற்றும் சில திட்டங்களை இப்போது நாம் அறிவோமா...
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்:
இந்தத் திட்டத்தின்கீழ் நிதி உதவியாக பட்டம்/பட்டயம் வரை படித்தப் பெண்களுக்கு ரூ.50,000 மற்றும் 10-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ. 25,000  வழங்கப்படுகின்றது. இந்த நிதியுதவி, பெற்றோர் தங்கள் மகளை உயர்கல்வி தொடர வைக்கத் தூண்டுகோலாக அமைகின்றது.
மேலும், அனைத்துப் பெண்களுக்கும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகின்றது. பயனாளிகள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 24,000-க்கு மிகாமல் இருந்திடல் வேண்டும்.
அனைத்து முகாம் வாழ் இலங்கை தமிழ்ப் பெண்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதி உடையவர்களாவர்.
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு மறுமண திருமண உதவித் திட்டம்
விதவைகளின் மறுவாழ்விற்கான இந்தத் திட்டம், பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 (30,000 காசோலை+20,000 தேசிய சேமிப்புப் பத்திரம்) மற்றும் பிற பெண்களுக்கு ரூ.25,000 (15,000 காசோலை+10,000 தேசிய சேமிப்புப் பத்திரம்)மற்றும் கூடுதல் உதவியாக திருமாங்கல்யத்துக்காக 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகின்றது.
இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லாத நிலை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் விதவை மறுமணம் மேற்கொள்ள வித்திடுகின்றது.
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவித் திட்டம்
விதவை மறுமணம் மட்டுமல்லாமல் அவர்களுடைய மகளுக்கும் திருமண நிதி உதவி அளிக்கும் இந்தத் திட்டம் வரவேற்புக்கு உரியது. ஏனெனில் அவர்கள் மறுமணம் செய்ததாலேயே... அவர்கள்தம் மகளுக்கு திருமண வாய்ப்பு ஒருவேளை குறைவாகக் கூட இருக்கலாம் அல்லவா! இந்தத் திட்டத்தின் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் போன்றே வழங்கப்படுகின்றது.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்றப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டம்
ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இந்தத் திட்டம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்தத் திட்டத்தில் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் போன்றே வழங்கப்படுகின்றது.
மணமாகாத தாய்மார்கள் இல்லம்
பாலியல் கொடுமையினால் தாய்மை அடைந்த மகளிர் மற்றும் சிறுமியர், சென்னை அரசினர் காப்பகத்தில் இருக்கும் ஸ்திரிசதனாவில் தங்க வைக்கப்படுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலபுரத்தில், புனித பிரான்சிஸ் சேவியர் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலமும் ஒரு இல்லம் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வில்லங்களில் உணவு, உடை, உறைவிடம், மருத்துவம், பாதுகாப்பு, ஆகியவை வழங்கப்பட்டு அவர்கள் துயர் துடைக்கப்படுகின்றது.
பணிபுரியும் மகளிர் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கான காப்பகங்கள்:
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பெற்றோரின் 5 வயது வரையிலான குழந்தைகள் இந்தக் காப்பகங்களில்  அனுமதிக்கப்படுகின்றனர். மாநில அரசின் மானிய உதவியுடன், தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப் படுகின்றது. மேலும், குழந்தைகளுக்குச் சத்தான உணவும் கல்வியும் வழங்கப் படுகின்றது. மேலும் பெண்கள் பணிக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் பணிபுரியும் மகளிருக்கு அரசு விடுதிகள் அமைக்கப்படுகின்றன. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள்
கரைசேர வழியின்றி கலங்கியிருந்த மாற்றுத் திறனாளிகளுக்குக் கடந்த சில வருடங்களாகவே மிகுந்த வேகத்துடன் பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு நிறைவேற்றி வருகின்றது. அது அவர்கள்தம் வாழ்வினில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. அவற்றுள் சிலவற்றை இனி காண்போம்.
மீட்புத் திட்டம்
சாலையோரங்களில் தன்னிலை மறந்து திரிந்துகொண்டு இருக்கும் மன நோயாளிகளை மனநல மருத்துவமனையிலோ, தொண்டு நிறுவனங்கள் மூலம் அரசால் நடத்தப்படும் அல்லது அரசு சாரா
மறுவாழ்வு இல்லங்களிலோ உரிய விதிமுறைகளைப் பயன்படுத்தி சேர்க்க வழி செய்கின்றது. அவ்வாறு சேர்ப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கும் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்கின்றது.
வழிகாட்டும் திட்டம்
அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் 32 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாற்றுத் திறனாளி நலப்பணியாளரும், மற்ற இடங்களில் அதாவது 6,000 மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒரு மாற்றுத்  திறனாளி நலப்பணியாளரும் நியமிக்கப் படுகின்றனர். ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒரு மாற்றுத் திறனாளி ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்படுகின்றனர்.
மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து அரசு திட்டங்கள் குறித்து விழிப்பு உணர்வினை ஏற்படுத்துவதும், அவர்களுக்குத் தேவையான சேவை களைச் செய்வதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு  இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
விதவைகள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனுடைய ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கி, அவர்கள் வாழ்க்கை சிறக்க வழி செய்யப்படுகின்றது. இந்தத் திட்டம் முகாம் வாழ் இலங்கை தமிழ்ப் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்
புதுமணத் தம்பதியரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராகவோ அல்லது பழங்குடியினராகவோ இருந்து, மற்றொருவர் இதர வகுப்பினராக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருத்தல் வேண்டும். டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம் போன்றே நிதியுதவி மற்றும் தங்க நாணயம் இந்தத் திட்டத்துக்கும் வழங்கப்படுகின்றது
திருநங்கைகளுக்கான திட்டங்கள்
திருநங்கைகளுக்கான சமூக நல வாரியம்,  அவர்கள் வருவாய் ஈட்டிச் சுயசார்புடன் வாழ்வதற்கு 25 விழுக்காடு மானியத்துடன் திருநங்கைகள் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவி வழங்குகின்றது. மாவட்ட அளவில் திருநங்கைகளைக் கண்டறிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஒன்று செயல்படுகின்றது.
முதியோர் இல்லங்கள்
தற்போது 93 முதியோர் இல்லங்களை 62 வட்டாரங்களில் தொண்டு நிறுவனங்கள் மூலம் சமூக நலத்துறை செயல்படுத்தி வருகின்றது. மேலும், முதியோருக்கும் ஆதரவற்றக் குழந்தைகளுக்குமான சிறப்பு இல்லங்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகம் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வட்டாரத்திலும் அமைக்கப்பட உள்ளது.
மழைநீர் சேகரிப்புத் திட்டம்
2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அதனைப் புதுப்பித்தல், மறுசீரமைத்தல், பாதுகாத்தல் குறித்த விழிப்பு உணர்வுச் செயல்திட்டம் ஏற்படுத்தப்பட்டுச் செயலாக்கப்பட்டு வருகின்றது.
தாய் திட்டம்
தமிழகத்தில், 12,524 கிராம ஊராட்சிகளில் 79,394 கிராமங்கள் உள்ளன. சராசரியாக ஒரு கிராம ஊராட்சியில் 7 குக்கிராமங்கள் உள்ளன. இவற்றுக்கிடையில் வளங்களைப் பகிர்ந்தளிப்பதில் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதிலும், குறைந்தபட்ச அடிப்படை  உட்கட்டமைப்பு வசதிளை ஏற்படுத்தவும் 'தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய் திட்டம்)’ 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இது தேசிய அளவில் முதல் முறையாக குக்கிராமங்களை வளர்ச்சி அலகாகக் கொண்டு செயல்படும் முதல் திட்டமாகும். குறைந்தபட்ச அடிப்படை தேவைகளாக குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள், சாலைகள், இடுகாடு மற்றும் அதற்கான சாலை வசதிகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
கூடுதல் தேவைகளாக அங்கன்வாடி மையம், பொது விநியோகக் கடை, சுயஉதவிக் குழுக் கட்டடம், கதிரடிக்கும் களம், விளையாட்டு மைதானம் ஆகியவை கருதப்படுகின்றன. அரசால் அனுமதிக்கப்பட்ட பிற திட்டங்கள் இதர பணிகளாகக் கருதப்படுகின்றன.
முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்
ஒவ்வொரு வீடும் 1.80 லட்சம் செலவுத் தொகையில் 300 அடி சதுர பரப்பளவில் கட்டப்படுகின்றது. சூரிய மின்சக்தியால் இவ்வீட்டின் மின் உபயோகம் இருக்கும்படி கட்டப்படுகின்றது என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.
ஆண்டு ஒன்றுக்கு 60,000 வீடுகள் அடிப்படையில் 20.11.12 முதல் ஐந்து வருடங்களுக்கு கட்டப்பட உள்ளது. முழு செலவினையும் அரசே ஏற்கின்றது.
ஒவ்வொரு வீட்டிலும் சூரிய ஒளி சக்தியில் எரியும் 5 அடர் குறு விளக்குகள் அமைக்கப்படும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் நிரந்தரக் காத்திருப்போர் பட்டியலில் இருப்போர் இந்தத் திட்டத்தின் பயனாளிகள் ஆவர்.
ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்
சென்னையைத் தவிர, பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றின் நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள திட்டங்களை ஒருங்கிணைத்து இந்தத் திட்டம் செயலாற்ற உள்ளது. குடிநீர் வழங்கல் திட்டப் பணிகளுக்குத் தலையாய முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. அனைத்து நகரங்களிலும் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதாரத்  திட்டம்
இந்தப் புதிய திட்டத்தினை கடந்த நிதியாண்டில் (2012-13) தொடங்கப் பட்டது. தற்போதுள்ள பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு முன்னுரிமை அளித்துச் செயல் படுத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை
மேம்படுத்தும் திறன் வளர்ப்புப் பயிற்சித் திட்டம்
(STEP UP)
தொழில்நுட்பத் தகுதியை மேம்படுத்துவதன் மூலம், சுயதொழில் அல்லது வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதாகும். மொத்தப் பயனாளிகளில் 30 விழுக்காட்டுக்குக் குறையாமல் பெண்கள் தேர்வு செய்யப்படல் வேண்டும். அதிலும் 3 விழுக்காடு மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படல் வேண்டும். அந்தப் பேரூராட்சியில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்வோரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் எத்தனை விழுக்காடு
உள்ளனரோ அதற்குக் குறையாத அளவில் பயனாளிகள் தேர்வு செய்யப்படல் வேண்டும்.
இது தவிர, தமிழக அரசு கிராமப் புற மேம்பாட்டுக்காக புது வாழ்வுத் திட்டம், தன்னிறைவுத் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், முழு சுகாதார
இயக்கம், தேசிய கரிம வாயு திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், ராஜீவ்காந்தி மறுவாழ்வுத் திட்டம் ஆகியவற்றைச் செயலாற்றி வருகின்றது.
நகர்ப்புற மேம்பாட்டுக்காக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டம், நகர்ப்புற பெண்களுக்கான சுய உதவித் திட்டம், நகர்ப்புற கூலி வேலை வாய்ப்புத் திட்டம், புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம், நகர்ப்புற உட்கட்டமைப்புத் திட்டம் போன்ற இன்னும் பல திட்டங்களைச்  செயல்படுத்தி வருகின்றது.
பள்ளிக் கல்வியினை மேம்படுத்த 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டுக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டு, அவர்களின் கல்விசாராப் படைப்பாற்றல் திறனை மதிப்பீடு செய்து, அதற்கும் மதிப்பெண்களை அளித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதை வரும் கல்வி ஆண்டுகளில் உயர் வகுப்புகளுக்குக் கொண்டுசெல்ல அரசு திட்டமிட்டுள்ளது.
இது தவிர, மாற்றுத்  திறன் கொண்ட மாணவர்களுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டம், மாதிரிப் பள்ளிகள் அமைத்தல், கற்கும் பாரதம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.
சுதந்திரம் பெற்ற காலகட்டத்திலிருந்தே நம் அரசாங்கம் சமூக நலத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. அதற்குரிய பலன்களை நம்முடைய வளர்ச்சியில் அடையாளம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.
அந்த அடையாளம் நம்மை இப்போது, பல நாடுகளுக்கு அறிமுகம் செய்து அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கின்றது என்றால், அது மிகை ஆகாது.
எத்தனை திட்டங்களை அரசாங்கம் கொண்டுவந்தாலும் அதன் வெற்றி செயல்படுத்துவதில்தான் அடங்கி இருக்கின்றது.  எந்த ஒரு திட்டமும் எளிதில் வெற்றியடைவது சாத்தியமல்ல. அரசாங்கமும், மக்களும் இணைந்த கடினமான கூட்டு முயற்சிக்குப் பிறகு மட்டுமே அதன் வெற்றி தீர்மானிக்கப் படுகின்றது.
அத்தகைய நெறியில் அனைத்துத் திட்டங்களும் மக்களைச் சென்றடைந்து சமூகம் மறுமலர்ச்சி பெற்றிட நாமும் வாழ்த்திடுவோம்.

No comments:

Post a Comment