Saturday 25 January 2014

பெண்ணால் முடியும் தம்பி

பெண்ணால் முடியும் தம்பி
Posted Date : 13:12 (17/12/2013)Last updated : 13:12 (17/12/2013)
கவிஞர் நெல்லை ஜெயந்தா
பெண்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு ஆறுதலே கிடைத்திருக்காது.
பெண்கள்  இல்லாவிட்டால் ஆண்களுக்கு ஆறுதலே தேவைப்பட்டிருக்காது.
பார்த்தீர்களா... குறும்பு மொழியிலேயே கோடிட்டுக்  காட்டி விட்டாரே பெர்னாட்ஷா, எல்லாமும் பெண்கள்தான் என்று!
'கடவுள் சாப்பிடவே கூடாது என்று கை காட்டிவிட்டுப் போன கனியை தானும் சாப்பிட்டு ஆதாமையும் சாப்பிட வைத்தாளே ஏவாள்... அன்றே தொடங்கிவிட்டது பெண்களின் அறிவாதிக்கம்’ என்று யாரோ சொன்னதை எப்படி மறுப்பது?
''விளக்கு என்ற சொல்லின் பொருள் விளக்குவது. ஓர் ஆணுக்கு விளங்காத பல விஷயங்களை விளக்க வருகிற பெண்ணைத்தானே விளக்கேற்ற வந்தவள் என்கிறோம்'' என்று பெரியவர் ஒருவர் சொல்லும்போது பேச முடியுமா...?
எல்லாம் சரி!
கலைகளிலும் இலக்கியங்களிலும் பெண்ணைக் கொண்டாடுகிற சமூகம் நிஜவாழ்க்கையில் அவளை பந்தாடுவது நிஜம் தானே...!
''போகத்துக்காகப் படைக்கப்பட்ட பொதுவுடைமைப் பொருள் பெண்'' என்கிற சாக்ரடீஸும், ''ஒன்று ஆள்வதும் மற்றொன்று ஆளப்படுவதும் இயற்கையின் விதி. எனவேதான் ஆண் ஆள்கிறான், பெண் ஆளப்படுகிறாள்.'' என்ற அரிஸ்டாட்டிலும் மறுபடி மறுபடி மனிதர்களுக்குள் வந்துபோவதை மறுக்க முடியவில்லையே.
''ஒரு நடிகையை செருப்பால் அடிப்பேன் என்று அதே துறையைச் சார்ந்த, அதிலும் பொறுப்பான பதவியில் இருக்கிற ஒருவர் பேசுவதும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே ஒரு நடிகையிடம் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்வதும், நமது நினைப்பிலும் சமூகத்தின் நிலையிலும் பெண்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் காட்டி விடுகிறது'' என்கிறது ஒரு பத்திரிகை தலையங்கம். அதைப் படிக்கிறவர்கள் கன்னங்ளில் எல்லாம் பளீரென்று அறையும்போது மௌனமாய் இருக்க முடிகிறதே தவிர மறுக்க முடியவில்லையே!
சரி...! ''அரசியலில், அலுவலகங்களில், கலை இலக்கிய உலகங்களில், நடைபாதைகளில், பொது மேடைகளில் இப்படி எங்கெங்கும் நிறைந்திருக்கும் ஆதிக்க சக்திகளை மிஞ்சி எங்களால் எப்படி ஜெயிக்க முடியும்...?'' என்று கேட்கிறது ஒரு பெண் குரல்.
என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் போதே 'ஏன் முடியாது...?’ என்று எதிர்க்குரல் வருகிறது. உற்றுப் பார்த்தால்தான் தெரிகிறது உலக வீரப் பெண்மணிகளின் பட்டியலில் உச்சத்திலிருக்கும் பிரான்ஸ் தேசத்தின் ஜோன் ஆப் ஆர்க் குரல்தான் அது என்று.
ஒரு பக்கம் இங்கிலாந்து படைகளின் தாக்குதல், இன்னொரு பக்கம் உள்நாட்டு எதிரிகளின் சூறையாடல் என்று பிரான்ஸின் எல்லையோரக் கிராமங்கள் ரணமாகிக் கொண்டிருந்த நேரம். 'என் நாட்டை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவேன்’ என்று சொல்லி பதின்மூன்று வயதுப் பெண்ணொருவள் படை திரட்டினால் யார் அவளை ஏற்றுக் கொள்வார்கள்...?
ஆனால்... ஏற்றுக் கொள்ள வைத்தாளே!
யுத்தத்தின் பிடியிருந்த தன் நாட்டின் தளபதிக்கும் இக்கட்டின் மடியிலிருந்த தன் தேச அரசருக்கும் ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமி தன் மீதும் தன் செயல்கள் மீதும் நம்பிக்கை ஏற்பட வைத்தாளே, எப்படி நடந்தது அது...?
அவள் உள்ளுணர்வின் மீது அவளுக்கிருந்த நம்பிக்கை, எதற்கும் கலங்காத இதயம், முன்வைத்த காலைப் பின் வைக்காத உறுதி, எதிரிகளைக் கூட நேசிக்கிற இயல்பு... இவைதான் பிஞ்சுப் பருவத்திலேயே வரலாற்றுக்குள் வந்த பிரான்ஸ் தேசத்தின் ஜோன் ஆப் ஆர்க்கை இன்றுவரை கொண்டாட வைக்கிறது.
'இப்படி இருந்தால் பெண்களால் சாதிக்க முடியும்’ என்று ஜோன் ஆப் ஆர்க் சொல்லும் போது எப்படி மறுப்பது?
துரதிருஷ்டம் என்னவென்றால் போர்க்களத்தில் மட்டுமல்ல, பிற துறைகளிலும் போரிட்டுத்தான் ஜெயித்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இரு பாலருக்கும்தான் இருக்கிறது என்றாலும் பெண்களுக்கு எதிரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கிறது.
''தற்போதிருக்கும் நிலையிலிருந்து தான் விரும்பும் நிலைக்கு உயர முயற்சிக்கும் போது எதிர்ப்படும் போராட்டமே வாழ்க்கை'' என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி சொன்னது உண்மைதானே...
ஜான் ஸ்கடரின் மகனிடமிருந்த போராட்ட குணம் உங்களிடமும் இருந்தால் நீங்களும் ஜெயிக்கலாம்.
வேலூரிலிருந்த மருத்துவர் ஜான் ஸ்கடரின் மகள் ஐடா ஸகடர் அப்பாவைப் பார்க்க அமெரிக்கா விலிருந்து வேலூர் வருகிறார். ஒரு நாள் இரவு மூன்று பெண்கள் பிரசவ வலியுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆண் மருத்துவர் பிரசவம் பார்க்கக் கூடாதென்று சொல்லி, ஜான் ஸ்கடரைத் தடுத்த பெண்களின் கணவர்கள் இளம்பெண் ஐடா ஸ்கடரைப் பிரசவம் பார்க்கச் சொல்லிக் கெஞ்ச, முதலுதவி செய்யக்கூட முன் பயிற்சியில்லாத ஐடா ஸ்கடர் தடுமாற, முடிவில் மூன்று பெண்களும் மரணத்தைத் தழுவினர். அந்த சோகத்தில் ஐடா ஸ்கடர் எடுத்த முடிவுதான் அமெரிக்கா சென்று படித்து மருத்துவர் ஆகவேண்டும் என்பது.
பெண்கள் மருத்துவம் பயில தடை இருந்த காலம். போராடிப் போராடி அனுமதி பெற்று கல்லூரியில் சேர்ந்து கார்டினல் மருத்துவக் கல்லூரியின் முதல் பெண் மருத்துவராக 1899ல் வெளிவந்தார் ஐடா ஸ்கடர். வெற்றிகரமாக வேலூர் வந்து அன்று ஒரே ஒரு படுக்கையோடு டாக்டர் ஐடா ஸ்கடர் தொடங்கிய வேலூர் மருத்துவமனைதான் இன்று 1700 படுக்கைகளையும் தாண்டி கம்பீரமாய் நிற்கிறது.
''உலக வரலாறு என்பது என்ன...? தன்னம்பிக்கை கொண்ட சில மனிதர்களின் வாழ்க்கைக் குறிப்புதான் உலக வரலாறு'' என்று விவேகானந்தர் சொன்னது உண்மைதானே!
ஜுலியஸ் சீசர் ஒரு தடவை படகில் செல்லும் போது புயலில் சிக்கிய படகு பழுதடைய, படகோட்டி அமிக்கலாஸ நிலைகுலைய 'அமிக்கலாஸ், பயப்படாதே! நீ சீசரையும் அவருடைய அதிஷ்ட்டத்தையும் சுமந்து செல்கிறாய்’ என்று சீசர் சொன்ன வார்த்தைதான் நமக்குள் இருக்க வேண்டிய, நம்மைப் பற்றிய தன்னம்பிக்கைக்கு உதாரணம்.
வறுமை, சோகம், வகுப்புவாதம், உடல் நோய் இப்படி எத்தனையோ தடைக்கற்களை படிக்கற்களாய் மாற்றிய பெண்களின் வாழ்க்கைதான் பாடமாக இருக்கிறது மற்றவர்களுக்கு.
யாருக்கு இல்லை வறுமை...?
உயர்நிலைப் பள்ளியிலிருந்து தலைசிறந்த மாணவிக்குரிய தங்கப் பதக்கத்தோடு வெளியே வந்த மேரியாவை, கல்லூரியில் சேரவிடாமல் தடுத்த கடும் வறுமை பணக்கார வீடுகளில் தாதியாகப் பணி செய்ய வைத்து பார்த்ததே.
தாயாரின் மரணம், தமக்கை ஒருவரை இழந்த சோகம், ஆசிரியர் பணியைத் தந்தையிடமிருந்து பறித்து அரசாங்கம் ஏற்படுத்திய இழப்பு... இப்படி சின்ன வயதிலேயே சிறகுகள் முறிக்கப்பட்டாலும் விடாமுயற்சி இருந்தால் ஒரு பெண் வென்று காட்டலாம் என்பதற்கு உலகப் பெண்களுக்கே கிடைத்த உதாரணம் மேரிகியூரி அல்லவா...?
யாருக்கு இல்லை சோகம்?
''எனக்கு ஹாலிவுட்டைத் தெரியும். ஒரு முத்தத்திற்கு ஆயிரம் டாலர் கொடுப்பார்கள். ஆன்மாவிற்கு ஐம்பது சென்ட் கொடுக்கக் கூட யோசிப்பார்கள்.'' என்று ஒரு நடிகை, அதிலும் தன் வாழ்வில் அடையக் கூடிய உச்சபட்ச புகழை அடைந்த நடிகை என்று வர்ணிக்கப்படும் மர்லின் மன்றோ சொன்னாரெனில் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கிற சோகத்தை உணர முடிகிறதல்லவா...?
மர்லின் மன்றோ நடித்து வந்த படத்தைப் பார்ப்பதோடு அவர் நடந்து வந்த பாதையையும் பாருங்கள்... நம்மால் முடியுமென்ற நம்பிக்கை வரும.
யாருக்கு இல்லை எதிர்ப்பு...?
கையில் குறைவான பணத்துடனும், கண்களில் குறையாத கருணையுடனும், ஏழைகளுக்காகவும் நோயாளிகளுக்காகவும், தன்னலமற்ற சேவையைத் தொடங்கிய அன்னை தெரசாவிற்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் வந்ததென்றால் உங்களுக்கு எப்படி எதிர்ப்புகள் வராதிருக்கும்...?
பெண்தானே என்று அலட்சியமாய் பேசுகிறவர்களை எண்ணி நேரத்தையும் நினைவுகளையும் செலவழிக்காதீர்கள். ''எந்த முட்டாளும் குறை சொல்ல முடியும். கண்டனம் செய்ய முடியும். புகார் கூற முடியும். நிறைய முட்டாள்கள் அதைத்தான் செய்கிறார்கள்'' என்று பெஞ்சமின் பிராங்களின் சொன்ன வாசகத்தை அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
உன்னால் முடியாது என்று உளறுபவர்களிடம் பெண்ணால் முடியும் தம்பி! என்று உரக்கச் சொல்லுங்கள்.
சொன்னால் கேளிது முறையல்ல -பூமி
சோம்பிக் கிடக்கும் அறையல்ல...
பெண்ணாய் இருப்பதும் தடையல்ல
பிறந்தாய் பூமியை நீ வெல்ல..!
இந்திய முதன்மைப் பெண்கள்
முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதிபா தேவ் சிங் பட்டீல்.
முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி.
முதல் பெண் முதல்வர் - சுசேதா கிருபளானி (உ.பி.).
முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு (உ.பி.).
முதல் பெண் காபினட் அமைச்சர் - ராஜ்குமாரி அம்ரித் கௌர்.
முதல் பெண் சபாநாயகர் (லோக்சபா) - மீரா குமார்.
முதல் பெண் சபாநாயகர் (மாநில சட்டமன்றம்) - ஷானாதேவி (கர்நாடகம்).
முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா.
முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி - கிரண் பேடி.
முதல் பெண் வெளிநாட்டு தூதர் - விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா, 1947-49).
முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி - அன்னாசாண்டி.
முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி - லீலா சேத்.
முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி - ஃபாத்திமா பீவி.
முதல் பெண் பைலட் - கேப்டன் துர்கா பேனர்ஜி.
முதல் பெண் விமானப் படை பைலட் - அனிதா கௌர்.
முதல் பெண் பேருந்து ஓட்டுநர் - வசந்தகுமாரி.
முதல் பெண் ரயில் இன்ஜின் ஓட்டுநர் - சுரேகா யாதவ்.
விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி - கல்பனா சாவ்லா.
விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி - சுனிதா வில்லியம்ஸ்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி - கர்ணம் மல்லேஸ்வரி.
மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற முதல் பெண்மணி - ரீட்டா ஃபரீயா.
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண்மணி - சுஷ்மிதா சென்.
இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண்மணி - ஆர்த்தி குப்தா.
எவரெஸ்டில் ஏறிய முதல் பெண்மணி - பச்சேந்திரி பால்.
நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி - அன்னை தெரசா.
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்தியப் பெண் தலைவர் - சரோஜினி நாயுடு.
முதல் பெண் வழக்கறிஞர் - ரெஜினா குகா (1922).
ஞானபீட பரிசு பெற்ற முதல் பெண்மணி - மஹா ஸ்வேதா தேவி.
முதல் பெண் மருத்துவர் - ஆனந்தபாய் ஜோஷி.
முதல் பெண் பொறியாளர் - லலிதா (1937).
முதல் பெண் துணைவேந்தர் - ஹன்சா மேத்தா.
பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி: இந்திரா காந்தி (1971).

No comments:

Post a Comment