Friday 24 January 2014

இந்தியாவில் கல்வி

இந்தியாவில் கல்வி
Posted Date : 10:12 (13/12/2013)Last updated : 10:12 (13/12/2013)
ருவரது அறிவு, நடத்தை, திறமை ஆகியவற்றில் விரும்பத்தக்க மாறுதல்களை ஏற்படுத்தும் கருவியே கல்வி ஆகும். 
கற்பவரின் அகத்தினுள் புதையுண்டிருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதே கல்வியின் நோக்கம்.
சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும், நிலைகளிலும், எல்லா வளங்களையும் அளிக்கவல்லது  கல்வி.
இந்திய அரசமைப்பில் கல்வி பொதுப்பட்டியலில் அமைந்துள்ளதால் மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே கல்வி வளர்ச்சியில் கடமையாற்றுகின்றன.
பழங்கால இந்தியாவில் கல்வி
பண்டைய இந்தியாவில் மாணவர்கள் குருவின் வீட்டிலேயே தங்கி கல்வி கற்கும் குருகுலக் கல்வி முறை வழக்கத்தில் இருந்தது.
பௌத்த கல்வி முறை மாணவர்களைக் குழுக்களாக அமைத்துக் கற்பிக்கும்  முறையைக் கையாண்டது.
சமண, பௌத்த பள்ளிகள் கல்வி போதிப்பதில் சிறந்து விளங்கியதால் தான் கல்விக்கூடங்களுக்கு 'பள்ளி’ என்ற பெயர் நிலைத்தது.
இந்திய வரலாற்றில் தட்சசீலம், நாளந்தா, விக்ரமசீலம் போன்ற பல்கலைக்கழகங்கள் புகழ்பெற்று விளங்கின.
காஞ்சிபுரத்தில் அமைந்திருந்த 'காஞ்சி கடிகை’ சமஸ்கிருதக் கல்வி அளிப்பதில் தலைசிறந்து விளங்கியது.
முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியில் இந்தியாவில் ஆரம்பக் கல்வி அளிப்பதில் மதரஸாக்கள் மற்றும் மக்தப்கள் சிறந்து விளங்கின.
பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் கல்வி வளர்ச்சி
1781-ம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங்ஸ் கல்கத்தாவில் ஒரு மதரஸா அமைத்தார். இங்கு பெர்சியன் மற்றும் அரபி மொழிகள் கற்பிக்கப்பட்டன.
1791-ம் ஆண்டு பனாரஸில் ஒரு சமஸ்கிருத கல்லூரி துவங்கப்பட்டது.
1800-ம் ஆண்டு வெல்லெஸ்லி கிழக்கிந்தியக் கம்பெனிக்கு தேவையான குடிமைப் பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் நோக்கத்தில் ஃபோர்ட் வில்லியம் பயிற்சிக் கல்லூரி யைத் தொடங்கினார்.
மெக்காலே பரிந்துரையின் அடிப்படையில் 1835 மார்ச் ஏழாம் தேதி ஆங்கிலம் இந்தியாவில் பயிற்சி மொழியானது.
1813-ம் ஆண்டு சாசனச் சட்டம் (Charter Act - 1813) இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கு ஒரு லட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்தது.
டல்ஹெளசி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உட்ஸ் அறிக்கைப்படி(1854) கல்கத்தா, சென்னை, பம்பாய் நகரங்களில் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன.
உட்ஸ் அறிக்கை 'இந்தியாவின் அறிவு சாசனம்’ (Intellectual Charter of India) என்று அழைக்கப்படுகிறது.
ரிப்பன் பிரபு காலத்தில் ஏற்படுத்தப்பட்ட  ஹன்டர் கமிஷன் (1882) மாநகராட்சி பள்ளிகள் தொடங்க வழிவகை செய்தது.
1901-ல் கல்வி அமைப்புகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு  கர்ஸன் பிரபு, சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.
1902-ம் ஆண்டு சர் தாமஸ் ராலே என்பவரது தலைமையில் ஒரு கல்விக் கமிஷன் அமைக்கப்பட்டது.இதில் சையது ஹூஸைன் பில்கிரஸி, குருதாஸ் பானர்ஜி எனும் இரண்டு இந்திய உறுப்பினர்கள் இடம் பெற்றனர்.
1904-ம் ஆண்டு ராலே கமிஷன் அறிக்கைப்படி இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1913-ல் கொண்டுவரப்பட்ட பிப்ரவரி மசோதாவில் இந்தியாவில் எழுத்தறிவின்மையை அகற்றுவதற்காக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை கொள்கை அளவில் பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொண்டது.
உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக 1917, 1919-ல் அமைக்கப்பட்ட ஸாட்லர் கமிஷனில் சர் அசுதோஷ் முகர்ஜி, டாக்டர் சியாவுதீன் அஹமது எனும் இரண்டு இந்தியப் பிரதிநிதிகள் இடம்பெற்றனர்.
12 வருட மெட்ரிகுலேஷன் படிப்பு, அதைத் தொடர்ந்து இன்டர்மீடியட், பின்பு பல்கலைக்கழக கல்வி என்னும் கல்விமுறை, பல்கலைக்கழகப் படிப்புகளை மூன்று வருடங்களாகப் பிரித்தல், பட்டப்படிப்பில் பாஸ் கோர்ஸ்  ஹானர்ஸ் கோர்ஸ் என்ற பாகுபாடு, பெண்கல்விக்கான தனி அமைப்பு போன்றவை ஸாட்லர் கமிஷனின் முக்கிய பரிந்துரைகள்.
1919 -ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மான்ஃபோர்டு சீர்திருத்தத்தால் கல்வித்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மாகாண அரசுகளுக்கு கைமாறியது.
கல்வித்துறை மாகாண அரசுகளுக்கு கைமாறிய பின் நாட்டில் கல்வித்தரம் குறையத் தொடங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ஆராய்வதற்காக  1929-ல் சர் பிலிப் ஹார்டோக் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
துவக்க கல்விக்கு அதிக முக்கியத்துவம், சிறந்த மாணவர்களை மட்டும் உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்புதல் போன்றவை ஹார்டோக் கமிட்டியின் முக்கிய பரிந்துரைகள்.
மகாத்மா காந்தியின் கல்வி சிந்தனையான வார்தா திட்டத்திற்கு வடிவம் கொடுத்து 1937-ல் டாக்டர் ஜாகீர்ஹூசைன் கமிட்டி 'நை தாலிம்' என்றழைக்கப்பட்ட அடிப்படைக் கல்விக்கான பாடத்திட்டங்களை வரையறை செய்தது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் இந்தியக் கல்வி அமைப்பை மறுசீரமைக்கும் நோக்கத்தில் 1944-ல் சார்ஜென்ட் அறிக்கை வெளியிடப்பட்டது.
சார்ஜென்ட் அறிக்கை, இங்கிலாந்தில் அடையப்பட்ட கல்வி முன்னேற்றங்கள் நாற்பது வருடங்களுக்குள் இந்தியாவிலும் அடையப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆரம்ப துவக்கக் கல்வி  (3 - 6 வயது), இலவச ஜூனியர் அடிப்படைக் கல்வி (6  - 11 வயது), இலவச சீனியர்  அடிப்படைக் கல்வி (11 - 14 வயது), தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான ஆறு வருட உயர்நிலைக் கல்வி,(11 – 17 வயது), உயர்நிலைக்கல்வியில் இருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மூன்று வருட பட்டப்படிப்பு ஆகியவை சார்ஜென்ட் அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள்.
சார்ஜென்ட் அறிக்கை மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்புக் கல்வி, அனைவருக்கும் கட்டாய உடலியல் கல்வி, உயர்நிலைக் கல்வியில் தாய்மொழி வழிக் கல்வி ஆகியவற்றையும் பரிந்துரைத்தது.
மத்திய மாநில அரசுகளில் கல்வித்துறை உருவாக்கம், வேலைவாய்ப்பு மையங்கள் அமைத்தல், கல்வியில் சமூக மற்றும் பொழுதுபோக்கு செயல்களுக்கு இடமளித்தல் ஆகியவையும் சார்ஜென்ட் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.
சுதந்திர இந்தியாவில் கல்வி வளர்ச்சி
1948-ல் டாக்டர். எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் உருவாக்கப்பட்ட  பல்கலைக்கழக கல்வி கமிஷன் இந்தியாவின் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் மேற்பார்வையிடவும், தேவைப்படும் நிதி உதவி வழங்கவும் பல்கலைக்கழக மானியக் குழு உருவாக்கப் பரிந்துரை செய்தது.
இந்திய சமூக, அரசியல் வரலாற்றின் அடிப்படையில் கல்வி இலக்குகளை நிர்ணயித்தல், ஆசிரியர் தர மேம்பாட்டு வகுப்புகள், ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு,  ஆராய்ச்சிக்கென தனி ஃபெலோஷிப்புகள், தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் ஆகியவையும் பல்கலைக்கழக கமிஷனின் பிற முக்கிய பரிந்துரைகள்.
இந்தியாவில் இடைநிலை கல்வி முறையைப் பற்றி ஆராய 1952-ல் சென்னைப் பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர் ஏ.லெக்ஷ்மண சுவாமி முதலியார் தலைமையில்  அமைக்கப்பட்ட முதலியார் கமிஷன் 1953-ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
முதலியார் கமிஷன், பாடத்திட்ட உருவாக்கத்தில் அனுபவ முழுமை, பாடத்தெரிவில் வகைமையும் நெகிழ்ச்சியும், சமூக வாழ்வோடு தொடர்பு , பாடங்களுக்கிடையே இயைபு, ஓய்வுக்குப் பயிற்சி ஆகிய கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியது.
1964-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கோத்தாரி கல்விக்குழு 1966-ல் அளித்த அறிக்கையின்படி 1968-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை (National Education Policy)) கொண்டுவரப்பட்டது.
தேசிய வருமானத்தில் 3% ஐ கல்விக்காக செலவிட வேண்டும் என்பதும், 10+2+3 முறையில் கல்வி அமைய வேண்டும் கோத்தாரி  கமிட்டி பரிந்துரையின் முக்கிய அம்சங்களாகும்.
1986-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி ஆட்சிகாலத்தில் புதியக் கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது.
புதியக் கல்விக்கொள்கைப்படி ஊரக மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுடன் 'நவோதய வித்யாலயா’ என்னும் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
தற்போது இந்தியாவில் 576 ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
நவோதயா பள்ளிகள் CBSE பாடத்திட்டத்தில் இயங்கும் இரு பாலின உறைவிடப் பள்ளிகளாகும். (Co-educational Residential Schools) 
தமிழ்நாடு அரசு கட்டாய இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால் 'மும்மொழிக் கொள்கை’ கொண்ட நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் மட்டும் தொடங்கப்பெறவில்லை.
பணி மாற்றலாகும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு சீரான கல்வி வழங்கும்பொருட்டு 1962-ல் மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தொடங்கியது.
அண்மைக்கால கல்வி வளர்ச்சி சட்டங்களும் திட்டங்களும்
ஆறுமுதல் 14 வயது வரையான குழந்தைகளுக்கான கல்வியை அடிப்படை உரிமையாக்கும் 21A என்ற உறுப்பு அரசமைப்புச் சட்டத்தின் 86 ஆவது திருத்தம் (2002) மூலம் அடிப்படை உரிமைகளில் சேர்க்கப்பட்டது.
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (Right of Children to Free and compulsory Education Act of 2009) தனியார் பள்ளிகளில் 25% இடங்களை இலவசமாக குழந்தைகளுக்கு வழங்க வழி செய்கிறது.
நாட்டிலுள்ள தொடக்கப் பள்ளிகளில் 80% அரசு பள்ளிகளாகவோ அரசின் உதவி பெறும் பள்ளிகளாகவோ உள்ளன.
தொடக்கக்கல்வியை பொதுமையாக்கும் (Universalization Of Primary Education) நோக்கத்தோடு அனைவருக்கும் கல்வித்திட்டம் (Sarva Siksha Abhiyan) 2001-ல் தொடங்கப்பட்டது.
2017-க்குள் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி அளிக்கவும் (Universalization of Secondary Education)  2020-க்குள் அதை நிலைநிறுத்தவும் (Retention) RMSA  (ராஷ்டிரிய மத்யாமிக் சிக்ஷ£ அபியன்) எனப்படும் அரசு இடைநிலைக் கல்வித் திட்டம் 2009-ல் தொடங்கப்பட்டது. 
1988-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய எழுத்தறிவு திட்டம் (National Literacy Mission) 2010-ஆம் ஆண்டு முதல் படிக்கும் பாரதம் (Saakshar Bharat) என்ற பெயரில் பெண் எழுத்தறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டமாகச் செயல்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment