Saturday 25 January 2014

தைராய்டு - பணியும் பாதிப்பும்

தைராய்டு - பணியும் பாதிப்பும்
Posted Date : 21:12 (14/12/2013)Last updated : 21:12 (14/12/2013)
Dr. தானப்பன், M.B.B.S., D.G.O.,
இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் முக்கியமானது தைராக்ஸின் குறைபாடு. இக்குறைபாடு பரம்பரையாகப் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், நம்மையும் நம் சந்ததிகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் பற்றி ஆராய்வோம்.
தைராய்டு ஹார்மோன்கள் உடலின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன. உடலின் ஒவ்வொரு உறுப்பின் செயல்திறனும் தைராய்டை சார்ந்தே உள்ளது. உடல் தனக்குக் கிடைக்கும் உணவுச் சக்தியை எவ்வாறு உபயோகிக்கிறது என்பதையும் இச்சுரப்பி தான் நிர்ணயிக்கிறது. இதனை பேசல் மெடபாலிக் ரேட் ((Basal Metabolic Rate BMR)) என்று கூறுவோம்.
இச்சுரப்பி கூடுதலாகத் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி செய்தால் உடல் வேகமாகச் செயல்படத் தொடங்கும். (உதாரணத்திற்கு: படபடப்பு, அதிக வியர்வைத் தன்மை, தூக்கமின்மை) தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறைந்தால் உடல் ஆமை வேகத்தில் செயல்பட ஆரம்பித்து விடும். (உதாரணத்திற்கு : மாதவிடாய் 23 மாதங்களுக்கு வராமல் இருக்கும், சோர்வு, அதிக தூக்கம், மலச்சிக்கல் இவ்வாறு)
பெண்களைப் பொறுத்தவரை இச்சுரப்பி, அவள் பருவம் அடையவும், அதற்கேற்ற மாற்றங்கள் ஏற்படவும், பின் அவள் கருத்தரிக்கவும், அக்கருவை ஆரோக்கியமாக 40 வாரங்கள் சுமக்கவும், அந்த குழந்தையின் ஆரோக்கியமான உடல், மன மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் ஏதுவாக விளங்குகிறது. இது சம்பந்தப்பட்ட நோய்கள் ஆண்களை விட பெண்களை 10 மடங்கு அதிகம் பாதிக்கிறது.
தைராய்டு என்றால் என்ன?
இது ஒரு 2 அங்குலம், பட்டாம்பூச்சி போன்ற வடிவம் கொண்ட ஒரு சிறிய ஹார்மோன் சுரப்பி. 1 அவுன்ஸ் எடை கொண்டது. நம் கழுத்தின் முன்பகுதியில் காற்றுக்குழாயின் மீது, வலது  இடது புறங்களில் பாதி பாதியாக உள்ளது. இது தான் உற்பத்தி செய்யும் தைராய்டு ஹார்மோனை, தனக்குள் சேர்த்து வைத்து, அவ்வப்போது இரத்தத்தில் செலுத்திவிடுகிறது. அவ்வாறு இரத்தத்திற்குள் செல்லும் தைராய்டு ஹார்மோன் உடலின் எல்லா செல்களுக்கும் சென்று. அவற்றின் செயல்பாட்டை மேற்பார்வை செய்து, சீர் செய்கிறது. தைராக்ஸின் (Thyroxine) டி3, டி4 என்ற இரண்டு ஹார்மோன்கள் உற்பத்தி ஆகின்றன. இவைகளை உற்பத்தி செய்யும் மூளையின் பிட்யூட்டரி சுரப்பி TSH (Thyroid Stimulating Hormone) என்கிற உந்துதல் ஹார்மோனைச் செலுத்தி, டி3, டி4 உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. தைராய்டு சுரப்பி செயலிழந்தால், டி3, டி4 அளவுகள் குறையும். அப்போது பிட்யூட்டரி TSH அளவைக் கூட்டி இந்தக் குறைபாட்டை சரிசெய்யும். தைராய்டு ஹார்மோன் அளவு கூடிவிட்டால், TSH அளவைக் குறைத்து விடும். ஆதலால், இரத்தத்தில் உள்ள வுளுர் அளவின்  மூலம் நாம் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டினை அறியலாம்.
தைராய்டு ஹார்மோன்களின் வேலை என்ன?
உடலின் செயற்கூற்றைக் கண்காணிப்பதோடு அல்லாமல் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி, சுவாசம் சீராகச் செயல்பட, இருதயம் சீராக துடிக்க, உடலின் தட்பவெப்பநிலை, தசைகளின் வலிமை, தோலின் ஈரத்தன்மை, மாதவிலக்கு சரியான நேரத்தில் வர மற்றும் இரத்தப்போக்கு அளவு, உடல் எடை, கொழுப்புச்சத்து அளவு  இவை எல்லாவற்றையுமே கண்காணிக்கிறது. கட்டுப்படுத்துகிறது.
அயோடினின் வேலை: (Iodine)
தைராய்டு ஹார்மோன் உற்பத்தியில் அயோடின் பெரும் பங்கு வகிக்கிறது. அது TSH மூலமாக டி3, டி4 (தைராக்ஸின்) ஹார்மோனுக்குள் இடம் பெறுகிறது. அதனால், உடலில் அயோடின் அளவு குறைந்தால், ஹார்மோன் உற்பத்தி குறையும். நாளன்றுக்கு 150-200 mg  அளவு அயோடின் நம் உணவில் இருக்க வேண்டும். இது நம் உப்பில் 100 mg  கிலோ வீதம் சேர்க்கப்பட்டுக் கடைகளில் கிடைக்கிறது.
தைராய்டு குறைபாடு (ஹைப்போ தைராய்டிஸம்) (Hypothyroidism)
காரணங்கள்:
பிறவிலேயே தைராய்டு சுரப்பி இல்லாமல் போதல் (Thyroid Gland Atresia)
அயோடின் குறைபாடு
மரபு சார்ந்த தைராக்ஸின் உற்பத்தி குறைபாடு
தாய்க்குத் தைராய்டில் கிரேவ்ஸ் (Grave’s Disease) நோய்க்கு ரேடியோ அயோடின் செலுத்தினால், குழந்தையின் சுரப்பிகள் செயலிழத்தல்.
தைராய்டில் ஹஷிமோட்டோ (Hashimoto) என்ற தன் எதிர்ப்பு நோய் (Autoimmune)
அறுவை சிகிச்சை செய்து தைராய்டை முழுவதுமாய் நீக்கியிருந்தால்.
பீட்யூட்டரி அல்லது ஹைபோதலாமஸ் சுரப்பிகளின் மேற்பார்வையில் கோளாறோ அல்லது கட்டியோ இருந்தால் தைராய்டு செயலிழக்கும் அபாயம் உள்ளது.
புரொலாக்டின் (Prolactin) ஹார்மோன் உற்பத்தி கூடி இருந்தால் தைராய்டைக் கட்டுப்படுத்தி விடும்.
மரபணுக்களில் 21வது அல்லது 'X’ மரபணுவில் எண்ணிக்கை மாற்றம் காரணமாக (Down’s) டவுன்ஸ் நோய் அல்லது (Turner’s) டர்னர்ஸ் நோய் காரணமாகத் தைராய்டு வளர்ச்சியே அடையாமல் போகும்.
இவை போக உடலில் சில சமயங்கள் தன் எதிர்ப்பு அணுக்கள் (Autoimmune Antibodies) தைராய்டைத் தாக்குவதால் வரும் தைராய்டு குறைபாடுகள்:
உதா: Hashimotos disease மோட்டோ நோய்
Rheumatoid Arthritis – ரியுமடாய்ட் அணுக்கள்
Vitiligo – தோலின் மெலனின் எதிர்ப்பு அணுக்கள்
Myasthenia Gravi’s – மயஸ்தீனியா கிராவிஸ்
Idiopathic Thrombocytopenic purpurea ITP  இரத்தம் உறையும் அணுக்களின் நோய், சிறு வயது நீரிழிவு நோய் (Junenile Diabetes) இவை மரபணுக்கள் மூலமாகக் குடும்பத்தில் வழிவழியாகவும் வரலாம். அல்லது அயோடின் உடலில் மிகக் அதிகமாகவோ, மிக குறைவாக இருப்பின் பிறப்பு எடை மிக அதிகமாகவோ, மிக குறைவாக இருப்பின், பிறப்பு எடை மிக குறைவாக (2Kg) இருந்திருந்தால், உடலில் செலினியம் பற்றாக்குறை (Selenium) ஒருசில கருத்தடை மாத்திரைகள் உடலில் சேராமல் போயின் அதிக பதற்றம், ஒவ்வாமை (Atopy), புகைப் பிடித்தல், கதிரணுக்களின் தாக்கம் (Radiation), வைரஸ் கிருமித் தொற்று, லித்தியம் போன்ற மருந்துகளின் தாக்கம்.
தைராய்டு குறைபாடினால் வரும் மாற்றங்கள்
குளிர்ந்த சீதோஷ்ணம் சேராமல் தவிப்பு
மலச்சிக்கல்
கண்களில் கரோடின் படிதல்
கை தசைகளில் வீக்கம் காரணமாக நரம்பு செயலிழத்தல் (Carpal Tunnel Sydrome)
சருமம் தடித்து, வறண்டு போதல்
சோர்வு
முடி உதிர்வு
சுறுசுறுப்பின்மை, வேலைகளின் வேகம் குறைதல்
உடல் பருமன் அடைதல்
வேலையில் கவனம் குறைதல்
ஞாபகமறதி அதிகமாதல்
பெண்களுக்கு மாதவிடாய்  தள்ளி போகலாம் (23  மாதங்கள்) அல்லது உதிரப்போக்கு மிகவும் கூடுதலாகலாம்.
பரிசோதணை
தைராக்ஸின் ஹார்மோன்கள் டி3, டி4 அளவு குறைதல்
தைராய்டு ஸ்டிமுலேடிங் ஹார்மோன் (TSH) அளவு கூடுதல்
தன் எதிர்ப்பு அணுக்கள்  TPO, TSRAb, TSAb, LATS இவைகளை இரத்தத்தில் கண்டறிதல்.
தீர்வு
இயற்கை தைராக்ஸினுக்கு இணையாக செயற்கை தைரொக்ஸின் ஹார்மோன், மாத்திரைகள் 25Mg, 50 மைக்ரோகிராம், 100 மைக்ரோகிராம் அளவுகளில் கிடைக்கின்றன. அவரவர் TSH அளவை வைத்து, மருத்துவர்களின் பரிந்துரைப்படி இம்மாத்திரைகளை நாள் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
உணவில் முட்டைகோஸ், காலிப்ளவர் தவிர்க்க வேண்டும்.
அயோடின் கலந்த உப்பாக இதனை உட்கொண்டால் தினசரி அயோடின் தேவையை உடலுக்கு சேர்க்க முடியும்.
கர்ப்பிணிப் பெண்களும் தைராய்டு குறைபாடும்
1-2% கர்ப்பிணிகளுக்கு தைராய்டு குறைபாடு ஏற்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இயற்கையாகவே தைராய்டு குறைபாடுக்கான வாய்ப்புகள் அதிகம். கருவின் நஞ்சு hCG என்கிற ஹார்மோன் (8-10 வாரங்களில்) உற்பத்தி செய்கிறது. இது TSH போலவே இருப்பதால், அது தைராய்டு சுரப்பியை மேலும் செயல்படுத்தும். இதனால், டி3, டி4 அளவுகள் கூடும். கருவிற்காக 16-20 வாரங்களில் உற்பத்தியாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தைராய்டு இணையும் புரத அணுவை உற்பத்தி செய்து, அதிக அளவிலான டி4ஐ இரத்தத்திலிருந்து தனக்குள் தேக்கி வைத்துக் கொள்கிறது. அயோடின் கர்ப்பிணிகளின் சிறுநீரில் அதிகம் வெளியேறுகிறது.
இந்த மாற்றங்களால் டி3, டி4 அதிகமாகச் சுரந்தும் கூட, செயல்பட முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. இதுபோக கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதங்கள் கூடும் போது இயற்கையாகவே வரும் சோர்வு, உடல் பருமன், சுறுசுறுப்பின்மை போன்றவையால் தைராய்டு குறைபாடு கண்டறியப்படாமல் போய்விடுகிறது.
பாதிப்புகள்
கருவுறுவதே தாமதமாகலாம்.
தன் எதிர்ப்பு அணுக்களால் கருச் சிதைவு ஏற்படலாம்.
கரு 12-14 வாரங்கள் ஆகும் போதுதான் தானாகவே தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. அதை கருவின் இரத்தத்தில் 18 வாரங்களில் கண்டறிய முடியும். அதுவரை குழந்தை தாயின் தைராக்ஸின் ஹார்மோனைத்தான் சார்ந்து உள்ளது. இந்த கட்டத்தில் தாயின் தைராய்டு குறைபாடு கண்டறியவில்லையேல் குழந்தையின் மூளை நரம்பு வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. IQ 4 – 7 பாயிண்டுகள் குறையும். குழந்தை இறந்து பிறத்தல், பிறந்து சில நாட்களில் இறத்தல் கூட நிகழலாம்.
செய்ய வேண்டியவை
தைராய்டு குறைபாடு கர்ப்பம் தரித்தபின் கண்டறியப்பட்டால், உடனே தைராக்ஸின் மாத்திரைகள் (TSH அளவுக்கேற்ப) ஆரம்பிக்க வேண்டும். முன்னமே தைராய்டு மாத்திரை உட்கொள்பவராக இருந்தால் மாத்திரையின் அளவு கூடுதலாகத் தேவைப்படும். மீண்டும் TSH அளவு பார்த்து மருந்து அளவைக் கூட்ட வேண்டும். TSH அளவு  2.5 mIU/L க்குள் இருந்தால் சிறந்தது. கர்ப்பக் காலத்தில் 68 வாரங்களுக்கு ஒருமுறை TSH அளவைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் 250 மைக்ரோகிராம் அயோடின் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் மூலம் குழந்தையின் தைராய்டு சுரப்பி கண்காணித்தல், குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருப்பதைக் கவனித்தல், எலும்பு முதிர்வைக் கண்காணித்தல், தாயின் உடலில் TSRAb அணுக்கள் இருக்கின்றனவா எனக் கண்டறிதல், தைராய்டை தாக்கும் மருந்துகளை தவிர்க்க வேண்டும். செலெனியம் உணவில் இயற்கையாகவோ, மருந்தாவோ சேர்க்க வேண்டும்.
பிரசவத்திற்கு பின்
68 வாரம் கழித்து ஒரு முறை TSH அளவு சரி பார்க்க வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு
நஞ்சுக் கொடியிலிருந்து அல்லது குதிகாலிலிருந்து இரத்தப் பரிசோதனை செய்து டி4 அளவு 2mg/dl க்கு மேல் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
சோதிப்பதால் ஏற்படும் நன்மைகள்
20 வாரங்களுக்குள் கண்டறிந்து சரிசெய்தால், தைராய்டு குறைபாடினால் வரும் விளைவுகள் 4.8% க்குக் குறைவாகவே இருக்கிறது. 20 வாரங்களுக்கு மேல் மருத்துவம் செய்து 19% பின் விளைவுகளோடு உள்ளது. கண்டறியாமலே போனால் 31.5% கர்ப்பிணிகளும், அவர்கள் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே, எல்லா பெண்களும் கருவுறும் தருவாயில் ஒருமுறை தைராய்டு பரிசோதனை செய்து கொண்டால் பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். இயலவில்லையேல், குறைந்தபட்சம் குடும்பத்தில் இந்த பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமாவது உங்கள் மருத்துவர்களை அணுகி அதனை சோதித்துக் கொள்ளுங்கள். தாங்களும் ஆரோக்கியம் காத்து, அடுத்த தலைமுறையையும் ஆரோக்கியமானவர்களாக்க முயலுங்கள்.

நாளமில்லாச் சுரப்பிகளும் ஹார்மோன்களும்
நாளமில்லாச் சுரப்பிகளின் தலைமை சுரப்பி (Master gland) எனப்படுவது பிட்யூட்டரி.
மற்ற சுரப்பிகளைத் தூண்டும் 'Trophic Hormone’-களைச் சுரப்பது - பிட்யூட்டரி.
தூண்டும் ஹார்மோன்களைச் ('Trophic Hormone’) சுரந்து பிற சுரப்பிகள் கட்டுப்படுத்துவதால் பிட்யூட்டரி 'தலைமைச்சுரப்பி’ எனப்படுகிறது.
பிட்யூட்டரி முன்கதுப்பு ஹார்மோன்கள் - FSH, LH, ICSH, ACTH, GH, TSH, புரோலாக்டின்.
பிட்யூட்டரி நடுகதுப்பு ஹார்மோன்கள் - MSH.
பிட்யூட்டரி பின்கதுப்பு ஹார்மோன்கள் - வாசோபிரஸ்ஸின், ஆக்சிடோசின்.
தைராய்டு சுரப்பி - தைராக்சின், கால்சிடோனின்.
தைராக்ஸின் 'டெரா அயோடோ தைரோனின்’ எனப்படுகிறது.
தைராக்ஸின் மறைமுகமாக உடல் வளர்ச்சியைப் பாதிப்பதால் அதை 'ஆளுமை ஹார்மோன்’ (Personality Hormone) என்கிறோம்.
தைராக்ஸின் நம் உடம்பில் வளர்சிதை மாற்ற விகிதத்தை உயர்த்துகிறது.
இரைப்பை கோழைப்படலம் - கேஸ்ட்ரின். (இரைப்பை என்சைம் சுரப்பைத் தூண்டுவது)
குடல் கோழைப்படலம் - செக்ரிடின், பான்கிரியோசைமின், கோலிசிஸ்டோகைனின்
செக்ரிடின் - கணைய சாற்றில் பைகார்பனேட் அயனிகளை அதிகரிப்பது.
பான்கிரியோசைமின் - கணைய சாற்றில் என்சைம்களை அதிகரிப்பது.
கோலிசிஸ்டோகைனின் - பித்தநீர் உற்பத்தியைத் தூண்டுவது.
சிறுநீரகம் - எரித்திரோபாய்டின் RBC உற்பத்தியை அதிகரிப்பது)
அண்டகம் - ஈஸ்ட்ரோஜன், புரோஜேஸ்ட்ரோன், ரிலாக்ஸின்
நஞ்சுக்கொடி - புரோஜஸ்ட்ரோன், HGC.
பாராதைராய்டு சுரப்பி - பாராதார்மோன்
தைமஸ் சுரப்பி - தைமோஸின் (T லிம்போசைட் வேறுபாடடைதலைத் தூண்டுவது)
பீனியல் சுரப்பி - மெலடோனின் (உடல்பாகங்களில் மெலனின் நிறமியை அடர்வு செய்வது)
கணைய லாங்ஹர்கான் திட்டுகள் ஆல்ஃபா செல் - குளுக்கோகான்
கணைய லாங்ஹர்கான் திட்டுகள்  பீட்டா செல் - இன்சுலின்
அட்ரீனல் கார்டெக்ஸ் - கார்டிகோ ஸ்டிராய்டுகள், அல்டோஸ்டீரோன்.
அட்ரீனல் மெடுல்லா - அட்ரீனலின், நார் அட்ரீனலின்.
அட்ரீனல் சுரப்பி சிறுநீரகங்களுக்கு மேலே அமைந்துள்ளதால் 'சுராரீனல் சுரப்பி’ எனப்படுகிறது.
அட்ரீனலின் ஹார்மோன்தான் 'Fight or Flight Hormone’.
அவசர காலங்களில் சுரப்பது - அட்ரீனலின்.
சிறுநீர் கழித்தலைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் - 'வாஸோபிரஸ்ஸின்'.
என்சைம்களும் ஹார்மோன்களும்
என்சைம்களைச் சுரப்பவை நாளமுள்ள சுரப்பிகள் (Exocrine glands ).
ஹார்மோன்களை சுரப்பவை நாளமில்லாச் சுரப்பிகள் (Endocrine glands).
எல்லா என்சைம்களும் புரதங்களே [(Ribozyme)  என்ற ஒரே என்சைமைத் தவிர).]
ஹார்மோன்கள் புரதங்களாகவோ, அமைன்களாகவோ, ஸ்டீராய்டுகளாகவோ இருக்கும்.
இன்சுலின், குளுக்கோகன் போன்றவைப் புரத ஹார்மோன்கள்.
அட்ரீனலின், வாசோபிரஸ்ஸின் போன்றவை அமைன் வகை ஹார்மோன்கள்.
ஈஸ்ட்ரோஜன், ஆன்ட்ரோஜன், புரஜெஸ்டிரோன் போன்றவை ஸ்டீராய்டு ஹார்மோன்கள்.
(கட்டுரையாளர் பெண்கள் நல மருத்துவர்)

1 comment: