Saturday 25 January 2014

உலகப் போர்கள்

உலகப் போர்கள்
Posted Date : 12:12 (12/12/2013)Last updated : 12:12 (12/12/2013)
கோபிநாத்
போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர். இதனடிப்படையிலேயே போர்கள் நடைபெற்றன, நடை பெறுகின்றன. ஆதிக்கமுடைய நாடு மற்ற நாடுகளை அடிமையாக்கியது.

உலக நாடுகளிடையே ஏற்பட்ட பகைமை, ஆதிக்கத்தினால், தொழிற்சந்தையை விரிவுபடுத்தி இரு அணிகளாக பிரிந்து உலகையே பங்குபோட்ட நிகழ்வுதான் உலகப் போர் கள். இதனால் இரண்டு உலகப்போர் களால் உலகமே பலவாக பிளவுற்றது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய வல்லரசுகளிடையே பல்வேறு அரசியல் பொருளியல் காரணங்களால் சிக்கல்கள் பல தோன்றின. பரஸ்பரம் போட்டி, பொறாமை, கசப்புணர்வு, பழிவாங்கத் துடிக்கும் மனப்பான்மை, ஆகியவை களால் சிக்கல்கள் அதிகரித்தன.
வல்லரசுகளின் ராஜதந்திர நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட ரகசிய கூட்டுடன்படிக்கைகள் அவற்றை மேலும் அதிகரித்தன. இதன் காரணமாக போர் மூண்டது.
இப்போர் ஐரோப்பாவில் மட்டுமின்றி ஆப்பிரிக்கா, ஆசியா, பசிபிக் தீவுகள் ஆகிய இடங்களிலும் நடைபெற்று, உலகின் பெரும்பான்மையான நாடுகளும் கலந்துகொண்டதால் இந்த போர் உலகப்போர் என அழைக்கப்படுகிறது.
முதல் உலகப்போர்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வல்லரசுகளின் ராஜதந்திர நடவடிக்கைகள் காரணமாக ஐரோப்பா இரு ராணுவ முகாம்களாக பிளவுபட்டிருந்தது. 1870 -71-ல் பிஸ்மார்க் பிரான்ஸைத் தோற்கடித்து ஜெர்மன் பேரரசை நிறுவினார்.
1870-ம் ஆண்டு ஜெர்மனி ஒருங்கிணைந்த பிறகு, அங்கு தொழிற்சாலையில் வளர்ச்சி ஏற்பட்டது.
இதன் விளைவாக ஏராளமான மூலப்பொருட்களையும், மற்ற பொருட்களை விற்பனைச் செய்ய சந்தையும் தேவைப்பட்டன.
கெய்சார் இரண்டாம் வில்லியம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் உரிமை, திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உண்டு என்று அறிவித்தார்.
இத்தகைய ஜெர்மானிய பேராதிக்க பேராசை முதல் உலகப்போருக்கு முக்கிய காரணமானது.
ரகசிய உடன்படிக்கைகள்
ஐரோப்பிய நாடுகள் இருபெரும் பகை பிரிவுகளாக பிரிந்திருந்தன. இந்த இருபகைப்பிரிவு நாடுகளிடையே உருவான ரகசிய உடன்படிக்கைகள் மற்றும் ராணுவ ஒப்பந்தங்கள், பகைமையையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி முதல் உலகப் போருக்கு வழிவகுத்தன.
முக்கூட்டு உடன்படிக்கை(Triple Allaiance)  1882-ம் ஆண்டு இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரிய  ஹங்கோரி ஆகிய மூன்று நாடுகளிடையே ஏற்பட்டது.
1907-ம் ஆண்டு இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, முதலிய நாடுகள் தங்களிடையே முக்கூட்டு நட்புறவு உடன்படிக்கை (Triple Entente)  செய்து கொண்டன. இத்தகைய ரகசிய ராணுவ உடன்படிக்கைகள் ஐரோப்பாவில் பெரும் போர்ச்சூழலை ஏற்படுத்தின.
பிரான்சின் பழிவாங்கும் உணர்ச்சி
1870-- 71-ல் நடைபெற்ற பிராங்கோபிரஷ்யப் போரில் தோல்வியுற்றது. அல்சரஸ், லொரைன் மாநிலங்களைப் பறிகொடுத்தது. நாட்டுப்பற்று மிக்க பிரெஞ்சுக்காரர்கள் உள்ளத்தில் இது ஆறாதவடுவாக மாறிவிட்டது.
அவ்வெற்றியை தொடர்ந்து பிஸ்மார்க் வெர்செய்ல்ஸ் மாளிகையில் விழாவெடுத்து ஜெர்மன் பேரரசைப் பிரகடனப்படுத்தியது. தங்களை மேலும் இழிவுபடுத்தியதாக வேதனையடைந்த பிரெஞ்சுக்காரர்கள்;. அல்சரஸ், லொரைன் பகுதிகளை மீட்க உறுதி புண்டனர்.
ராணுவக் கொள்கை:
புதிய திட்டத்தின் மூலம் ரஷ்யா, பிரான்ஸ் தங்களின் படைபலத்தை விரிவுபடுத்தின.
பிரிட்டன் கப்பல் படையை வலிமைப்படுத்தியது. பிரான்சு தன்னை தாக்கும் என்ற அச்சத்தில் ஜெர்மனியும் தனது படைபலத்தை அதிகரித்தது.
மொரக்கோ சிக்கல்
மொராக்கோவை பிரான்சு கைப்பற்றியது. இதனை பிரிட்டன் அங்கீகரித்தது.
ஜெர்மனி அதனை சர்வதேச குடியேற்ற நாடாக்க விரும்பியது. எனவே தனது போர்க்கப்பலை மொராக்கோவிற்கு அனுப்பியது.
இங்கிலாந்தின் தலையீட்டால் ஜெர்மனி தனது போர்க்கப்பலை திரும்பப்பெற்றது. இதற்கு ஜெர்மனி பழிவாங்க விரும்பியது போருக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
பால்கன் பிரச்சனை
பால்கன் நாடுகள்: செர்பியா, பல்கோரியா, அல்மேனியா, கீரிஸ், மாண்டிநிக்ரோ.
பால்கன் நாடுகள் துருக்கிக்கு எதிரான முதல் பால்கன் போரில் வெற்றி பெற்று தங்களை சுதந்திர நாடுகளாக அறிவித்துக்கொண்டன.
1912-ம் ஆண்டு லண்டன் உடன்படிக்கையின்படி இப்போர் முடிவுற்றது.
போரில் கிடைத்த பகுதிகளை பிரித்து கொள்வதில் செர்பியாவிற்கும் பல்கேரியாவிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, போர் நடைபெற்றது.
போரில் பல்கேரியா தோற்கடிக்கப்பட்டு செர்பியா பெரும் பகுதிகளை தன்னுடன் இணைத்துகொண்டது.
ரஷ்யாவும் ஆஸ்திரியாவும் தங்களது சுய நலக்கொள்கைகளை பால்கனில் திணித்து அரசியல் ஆதாயம் பெற முயன்றன.
தோற்கடிப்பட்ட துருக்கியும், பல்கேரியாவும் இழந்த பகுதியை திரும்ப பெற ஜெர்மனியிடம் உதவி கோரின. இது போருக்கு வழிவகுத்தது.
உடனடிக் காரணங்கள்
1908-ம் ஆண்டு பெர்லின் மாநாட்டின் முடிவிற்கு மாறாக செர்பியாப் பகுதிகளை ஆஸ்திரியா தன் நாட்டுடன் இணைத்து கொண்டதால் இரு நாடுகளிடையே பகைமை ஏற்பட்டது.
1914 ஜூன் 28-ல் செரோஜியாவில் செர்பிய இளைஞனால் ஆஸ்திரிய இளவரசன் பிரான்சிஸ் பொர்னான்டும் அவரது மனைவி இசபெல்லாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ஆஸ்திரியா விளக்கம் கேட்க செர்பியாவின் பதில் அதற்கு திருப்தி அளிக்காததால் ஆஸ்திரியா 1914 ஜூலை 28-ல் செர்பியா மீது போர் அறிவித்தது.
ரஷ்யா செர்பியாவிற்கு ஆதரவாக தனது படைகளை போருக்கு அனுப்பியது. இதனால் ஜெர்மனி ரஷ்யாவிற்கு எதிராக போரை அறிவித்தது.
பிரான்சு தனது நட்பு நாடான ரஷ்யாவிற்கு ஆதரவாக போரில் இறங்கியது. எனவே ஜெர்மனி பிரான்சு மீது போரை அறிவித்தது.
பிரான்சுடன் இங்கிலாந்து சேர்ந்து கொள்ளவே முதல் உலகப்போர் துவங்கியது.
போரின் போக்கு
1914 ஜூலை 28-ல் தொடங்கிய முதல் உலகப்போர் 1918-ல் நவம்பர் 11-ம் தேதி முடிவுற்றது.
ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும் மைய நாடுகள் (Central Power)   எனவும் இங்கிலாந்தும் அதன் நட்பு நாடுகளும் நேச நாடுகள் (Allied)எனவும் அழைக்கப்பட்டன.
இப்போரில் மொத்தம் 33 நாடுகள் பங்கு பெற்றன. எனவேதான் இப்போர் உலகப் போர் என அழைக்கப் பட்டது.
மேற்கு முனை போர்க்களம்
ஜெர்மனி பெல்ஜியம் வழியாக பிரான்சு மீது படையெடுத்தது. ஆங்கில பிரான்சு படை மார்ன் நதிக்கரையில் ஜெர்மானிய படைகளை தடுத்து முன்னேறாமல் இருக்க செய்தது.
கிழக்குமுனை போர்க்களம்
ரஷ்யப்படைகள் ஜெர்மனியையும் ஆஸ்திரியாவையும் தாக்கின. டானென்பாக் போரில் ரஷ்யா தோல்வியுற்றது. இச்சமயத்தில் ஆஸ்திரியாவுக்கு ஜெர்மனி ஆதரவு அளித்தது. ஜெர்மனியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ரஷ்யப்படை ஆஸ்திரியாவை விட்டு வெளியேறியது.
கிழக்கு முனை அருகாமை போர்க்களம்
1914-ல் அக்டோபாரில் துருக்கி மைய நாடுகளுக்கு ஆதரவாக போரில் இறங்கியது. இது ரஷ்யாவிற்கும் அதன் கூட்டணி நாடுகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கிடையே இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது.
போரில் பல்கேரியா ருமேனியா
1915-ல் டார்டனலஸ் போரில் ஆங்கிலப் படைக்கு ஏற்பட்ட தோல்வி பல்கேரியாவை மைய நாடுகள் பக்கம் சேர வழிவகை செய்தது. 1916-ம் ஆண்டு ருமேனியா நேச நாடுகளுடன் சேர்ந்தது.
கடற்போர்
டாகார் நதிக்கரைப் போரில் ஜெர்மானியப் படைகள் ஆங்கிலப்படைகளால் அழிக்கப்பட்டன.
1916-ல் ஜட்லாண்ட் போரில் ஜெர்மானியப் படைகள் தோற்றுப் பின் வாங்கின. ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பல் போர் முறையினால் நேசநாடு களின் போர்கப்பலை அழித்தது.
அமெரிக்கா போரில் ஈடுபடுதல்
1917-ல் அமெரிக்காவின் லூசிடானியா உட்பட நான்கு வணிகக் கப்பல்களை ஜெர்மானிய நீர்மூழ்கிக்கப்பல் மூழ்கடித்தது. இந்நிகழ்ச்சி அமொரிக்க அதிபர் உட்ரோ வில்சனை கோபமுறச் செய்ததால் 1917 ஏப்ரல் 6-ல் புனித வெள்ளி அன்று ஜெர்மனி மீது போர் அறிவிப்பு செய்தார்.
ரஷ்யா பின்வாங்குதல்
முதல் உலகப் போரினால் ரஷ்யா வில் பெரும் அளவில் உயிர் இழப்பும் பொருளாதார சீரழிவும் ஏற்பட்டது.
இதனால் 1917-ல் அக்டோபர் புரட்சி ஏற்பட்டு ரஷ்யாவை ஆட்சி செய்து வந்த சார் மன்னரின் ஆட்சி லெனினால் தூக்கி ஏறியப்பட்டது. எனவே, ரஷ்யா போரில் இருந்து விலக்கிகொண்டது.
1918-ம் ஆண்டு பிராஸ்ட்லிடோஸ்க் உடன்படிக்கையினை மைய நாடு களுடன் ஏற்படுத்திக்கொண்டது.
போரின் முடிவு
ஆரம்பத்தில் மைய நாடுகள் சில வெற்றிகளைப் பெற்றபோதிலும் இறுதியில் தோல்வியை தழுவின. ஜெர்மனி போரில் முழுமையாக தோல்வியைத் தழுவியதால் துருக்கியும் பல்கேரியாவும் அச்சம் அடைந்தன.
ஆஸ்திரியா சமாதானத்தினை எதிர்நோக்கியது.
ஜெர்மனி பேரரசர் இரண்டாம் கெய்சார் வில்லியம் போரினை சமாளிக்க முடியாமல் ஹாலந்து நாட்டிற்கு தப்பி ஓடினார்.
எனவே, ஜெர்மனி 1918 நவம்பர் 11-ம் நாள் அமைதியை நாடியது.
போரின் விளைவுகள்
1919-ல் பாரிஸ் அமைதி மாநாட்டின் மூலம் முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது.  அமைதி மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள், கிளமென்ஸ் (பிரான்சு), லாயிட் ஜார்ஜ் (பிரிட்டன்), ஆர்லண்டோ (இத்தாலி) மற்றும் உட்ரோ வில்சன் (அமெரிக்கா).
ஜெர்மனி வெர்சைல்ஸ் அமைதி உடன்படிக்கையில் கையப்பம் இட்டது. தோல்வியுற்ற நாடுகளுடன் இம்மாநாட்டில் பல்வேறு உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டன.
ஜெர்மனியின் உடன்படிக்கை ஆஸ்திரியாவுடனும், டிரியனான் உடன்படிக்கை ஹங்கேரியுடனும், நியூலி உடன்படிக்கை பல்கேரியாஉடனும், செவ்ரேஸ் உடன்படிக்கை துருக்கியுடனும் செய்துகொள்ளப்பட்டது.
போரின் விளைவாக ஹங்கேரி, யுகேஸ்லேவியா, சேக்கோஸ்லேவியா, போலந்து, பின்லாந்து, லித்துவேனியா, லாட்வியா, எஸ்த்தோனியா போன்ற புதிய நாடுகள் தோன்றின.
ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி நாடுகளில் புரட்சிகள் தோன்றி முடியாட்சி ஒழிக்கப்பட்டது.
முதல் உலகப்போரில் மூலம் அமெரிக்கா உலக அரங்கில் பிரவேசித்தது. பிரிட்டனை விடவும் வல்லரசு ஆக முதலிடம் வகிக்கலாயிற்று. அமொரிக்க யுகம் தோன்றலாயிற்று.
மதிப்பீடு
ஜெர்மனி கடுமையாக தண்டிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு மனப்பான்மையும் ராணுவ வெறியும் கொண்டு பிரான்சு போன்ற அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஏற்ற தண்டனையாக அமைந்தது.
ஜெர்மனியின் குடியேற்ற நாடுகளுக்கு விடுதலை அளிக்காமல், பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் ஆகிய நாடுகள் தமக்குள் பங்கு போட்டுக் கொண்டு சுரண்ட துவங்கிய செயல் அவற்றின் ஏகாதிப்பத்திய வெறிக்கு சிறந்த உதாரணமாகும்.
பல பேரரசுகளை உடைத்து தேசிய மற்றும் இன அடிப்படையில் பல புதிய அரசுகளை உருவாக்கிய நிகழ்வு வரவேற்கத்தக்க செயல் ஆகும்.
1920-ல் ஜனவரி 20-ம் தேதி சர்வதேச சங்கம் அமைக்கப்பெற்றது. வரவேற்கத்தக்க ஒரு முயற்சி யாகும்.
இரண்டாம் உலகப்போர்
முதல் உலகப்போர் முடிவுற்று 20 ஆண்டுகள் கழித்து இரண்டாம் உலகப்போர் துவங்கியது. இந்த போர் ஆறு ஆண்டுகள் நடைபெற்றது.
முதல் உலகப்போரை காட்டிலும் இரண்டாம் உலகப்போரின் சீற்றம் மிகுதியாக காணப்பட்டது.
முதல் உலகப் போரினை தொடங்கியது, ஆஸ்திரியா  ஹங்கேரியின் பூசல் என்று கூறினாலும் கூட உண்மையில் ஜெர்மனியின் அதிபர் இரண்டாம் கெய்சார் வில்லியம் தான் இப்போருக்கு அடிப்படை காரணம். அதே வகையில் இரண்டாம் உலகப் போருக்கும் ஜெர்மனியே காரணமாக இருந்தது.
இரண்டு உலகப்போரிலும் ஜெர்மனியானது , பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு நாடுகளிடம் நேரடியாக போரிட்டது.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் அச்சு நாடுகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டது. இப்போரில் ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல் நடுநிலை நாடுகளாக இருந்தன.
இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள்
வொர்செயில்ஸ் உடன்படிக்கை
முதல் உலகப் போரின்போது போடப்பட்ட இந்த உடன்படிக்கை அநேக நாடுகளுக்கு திருப்தி அளிக்க வில்லை.
ஜெர்மனி போருக்கான முக்கிய குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டு ஜெர்மனியின் குடியேற்றங்கள் பறிக்கப்பட்டன.
கனிமவளம் நிறைந்த அல்சேஸ், லொரைன் பகுதிகள் திரும்பப் பெறப்பட்டன. மேலும், இதன் ராணுவ பலம் குறைக்கப்பட்டது. ஜெர்மனியை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது.
தேசிய உணர்வு
ஜெர்மனி  ஜெர்மனியர்களுக்கே, இத்தாலி  இத்தாலியர்களுக்கே என்ற கொள்கைகள் தேசிய எழுச்சியை உருவாக்கின. ஜெர்மானியர்கள், தாங்கள் மட்டுமே உலகத்தை ஆளத் தகுதி உடையவார்கள் என்று கருதினர்.
சர்வதேச சங்கத்தின் தோல்வி
முதல் உலகப் போர் முடிவுற்ற நிலையில் எதிர்காலத்தில் போர்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென சர்வதேச சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
படைகளைக் குறைத்து போர்களைத் தடுப்பது அதன் நோக்கம். ஆனால், அச்சங்கம் அமைதி காக்க தவறிற்று.
வல்லரசு நாடுகள் இச்சங்கத்தில் அதிக செல்வாக்கு பெற்று சங்கத்தினை மதிக்கத் தவறின. மேலும், அமெரிக்கா இச்சங்கத்தில் உறுப்பு நாடாக இடம் பெறவில்லை.
ஜப்பானின் எழுச்சி
முதல் உலகப்போர் முடிந்த பிறகு ஜப்பான் பெரும் வலிமை மிக்க நாடாக விளங்கிற்று.
ஜப்பான் தனது தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார உயர்வு காரணமாக ஏகாதிபத்தியக் கொள் கையை பின்பற்றத் தொடங்கியது.
1937-ம் ஆண்டு ரோம் - பெர்லின் - டோக்கியோ அச்சு ஒப்பந்தம் உருவானது.
சர்வாதிகார எழுச்சி
முதல் உலகப் போருக்குப் பின் உலகில் ஜனநாயகம், பொதுவுடைமைக் கொள்கைகள், பாசிசம், நாசிசம் போன்றவை உருவாகின.
ஐரோப்பாவில் உருவான புதிய குடியரசு ஆட்சியின் தோல்வி, ஹிட்லர், முசோலினி போன்றவர்களின் சர்வாதிகார வளர்ச்சிக்கு வழி செய்தன.
இந்த சர்வாதிகாரிகள் போர் தொடுத்தல், கைப்பற்றுதல் ஆகிய கொள்கைகளைப் பின்பற்றினர்.
போலியான அமைதிக் கொள்கை
வல்லரசு நாடுகள் தங்களது கொள்கைகளை முற்றிலும் மறந்து போலியான அமைதிக் கொள்கைகளைப் பின்பற்றின. இதனை ஏகாதிபத்திய நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டன.
அச்சு நாடுகளின் கூட்டு
ஜெர்மனியில் ஹிட்லர் இனவெறி பிரசாரத்தில் ஈடுபட்டார். வெர்செயில்ஸ் உடன்படிக்கையில் கூறப்பட்ட ஆயுதகுறைப்பைக் கைவிட்டு ஒரு புதிய விமானப்படையை ஏற்படுத்தி னார். கட்டாய ராணுவ சேவையை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.
ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு கொள்கை
1938-ல் ஹிட்லர்,  சுவிட்சர்லாந்தைக் கைப்பற்றப் போவதாகக்கூறி செக்கோஸ்லோவேகியாவுக்கு மிரட்டல் விடுத்தார்.
உடனடியாக இங்கிலாந்து பிரதமர் நிவில் சேம்பர்லைன் தலையிட்டு, ஹிட்லருடன் மியூனிச் என்னுமிடத்தில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஹிட்லர் மியூனிச் தவிர செக்கோஸ்லோவேகியாவின் எந்த பகுதியையும் கைப்பற்றமாட்டேன் என உறுதி கூறினார்.
அடுத்த ஆறு மாதகாலத்திற்குள் ஹிட்லர் செக்கோஸ்லோவேகியா முழுவதையும் கைப்பற்றிக்கொண்டார்.
உடனடிக் காரணம்
1939-ல் ஹிட்லர் ஜெர்மனியையும் கிழக்கு ரஷ்யாவையும் போலந்து வழியாக இணைக்கும் ராணுவச் சாலை ஒன்று அமைக்கும் உரிமையை வழங்குமாறு போலந்து நாட்டைக் கேட்டுக்கொண்டார். மேலும் டான்சிக் துறைமுகத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்தினார்.
போலந்து இதனை ஏற்க மறுத்து விட்டது. இதனால் ஹிட்லர் 1939-ல் மின்னல் வேகத்தாக்குதல் நடத்தி போலந்தினை கைப்பற்றினார்.
இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகள்
துவக்கம்
1939 செப்டம்பர் முதல் நாள் அதிகாரப்பூர்வமாக இரண்டாம் உலகப் போர் தொடங்கிற்று.
ஹிட்லர் அதிர்ச்சியடையும் வகையில் பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனிக்கு எதிராக போர் அறிவிப்பு செய்தன.
சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு (1939 - 41)
ஏற்கெனவே சோவியத் ரஷ்யா ஜெர்மனியுடன் ரகசிய ஆக்கிரமிப்பு உடன்படிக்கை செய்திருந்தது. இந்த உடன்படிக்கையின்படி ரஷ்யா நடுநிலைமை வகித்தது.
பிரிந்து சென்ற எஸ்தோனியா, லாட்வியா, லூதுவேனியா, கிழக்கு போலந்து ஆகிய பகுதிகள் போருக்குப் பிறகு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டன.
இத்தருணத்தில் முசோலினி நேச நாடுகளின் மீது போர் அறிவிப்பு செய்து பிரான்சினுடைய பல பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டார்.
பிரிட்டனுக்கு எதிராக போர்
ஹிட்லர் பிரிட்டனுக்கு எதிராக தனது கவனத்தைத் திருப்பினார். குறிப்பாக லாஃப்ட்வோஃப் என்ற விமான தாக்குதலை நடத்தினார்.
U வடிவ நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் இங்கிலாந்து கப்பல்களை நாசப்படுத்தினார். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடர்ந்து லாஃப்ட்வோஃப் என்ற விமானத் தாக்குதல் லண்டன் மேலும் மற்ற நகரங்களில் நடைபெற்றது.
துவக்கத்தில் பிரிட்டன் பல தோல்விகளை சந்தித்தாலும் பிரிட்டனின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஜெர்மனியைத் தடுத்து நிறுத்தினார் ஜெர்மனிக்கு எதிராக வான்வழி தாக்குதலைத் தொடர்ந்தனர்.
பார்போரிய கடல்போர் நடவடிக்கைகள்
பிரிட்டனுடன் நடந்த போரில் தோல்வியை கண்ட ஹிட்லர் தனது கவனத்தை ரஷ்யா மீது திருப்பினார். ரஷ்யா அதிபர் ஸ்டாலினுடன் செய்து கொண்ட போர்தடை ஒப்பந்தத்தை துணிச்சலாக மீறினார்.
ஹிட்லா, கம்யூனிசக் கொள்கையை அது தோன்றிய மண்ணிலேயே அழிக்க முயற்சித்தார்.
யூகோஸ்லோவியா, கீரிஸ் நாடுகள் மீது ஹிட்லர் பயங்கர தாக்குதல் நடத்தினார். இத்தாலி மற்றும் ஜெர்மானிய படைகள் கிரிஸ் நாட்டைக் கைப்பற்றின.
அச்சு நாடுகள் தங்கள் வலிமையை பயன்படுத்தி பால்கன் நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
சோவியத் யூனியன் தாக்குதல் அழித்து பின்வாங்கும் கொள்கை:
1941-ம் ஆண்டு ஜூன் 22-ம் நாள் ரஷ்யாவுடன் செய்த போர் தடை உடன்படிக்கையை ஹிட்லர் மீறினார்.
ரஷ்யா மீது போர் தொடுத்தார். இந்த நெருக்கடியான நேரத்தில் ரஷ்யாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது.
ஜெர்மானிய படைகள் ரஷ்யாவிற்குள் நுழைய முடியாதபடி மாஸ்கோவில் தங்கிவிட்டனர். ஸ்டாலின் மாஸ்கோ நகரத்தினை அழித்தார்.
அட்லாண்டிக் சாசனம்
1941 ஆகஸ்ட்ல் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அமெரிக்கா ஜனாதிபதி தி.ஞி. ரூஸ்வெல்ட் இருவரும் அகஸ்டா என்ற போர் கப்பலில் சந்தித்து அட்லாண்டிக் சாசனத்தில் கையெழுத்திட்டனர். பிரிட்டனும், அமெரிக்காவும் சேர்ந்து ஜெர்மனியைத் தாக்குவது என தீர்மானித்தனர்.
அமெரிக்கா போரில் பங்கு பெறுதல்
1941 டிசம்பரில் ஜப்பான், அமெரிக்கா கப்பற்படைத்தளமாகிய முத்து துறைமுகத்தை(Pearl Harbour) திடீரென தாக்கியது.
இந்தத் தாக்குதலால் அமெரிக்காவுக்கு அழிவு ஏற்பட்டது. உடனடியாக அமெரிக்கா போரில் இறங்கியது. மறுநாளே ஜப்பான் மீது போர் அறிவிப்பு செய்தது.
முசோலினி ஆப்பிரிக்காவில் ஆக்கிரமிப்பு
முசோலினி, எத்தியோப்பியாவை கைப்பற்றினர். அதன்பின், கென்யா, சூடான் ஆகிய நாடுகளைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்து படைகள் எதிர்த்து போராடி எரிட்டீரியா, சோமாலியா, எத்தியோப்பாவின் தலைநகரான அடிஸ் அபாபா ஆகியவற்றைக் கைப்பற்றியது.
போரின் முடிவு
கூட்டுப்படைகள், இங்கிலாந்திலிருந்து பிரான்ஸை எதிர்த்து போராட முடிவு செய்தனர். மே மாதம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கூட்டுப்படைகள் நார்மண்டி என்ற இடத்தில் முகாமிட்டனர்.
பிரான்ஸின் உளவுப்படையும் இந்த கூட்டுப் படைகளுடன் சேர்ந்து கொண்டது.
அனைத்து திசைகளிலுமிருந்தும் ஜெர்மனி தாக்கப்பட்டது. கிழக்கிலிருந்து ரஷ்யப்படைகள் ஜெர்மனிப் படைகளைத் துரத்தின.
இரு பக்கங்களிலிருந்து படைகள் வருவதைக் கண்ட ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்.
இத்தாலி படைகள் தோற்கடிக்கப்பட்டன. கூட்டுப்படைகள் இத்தாலியைக் கைப்பற்றின. முசோலினி கொல்லப்பட்டார்.
கூட்டுப்படைகள் ஜெர்மனிக்குள் நுழைந்தன. மே 7, ஜெர்மனி சரண் அடைந்தது.
ஜெர்மனியின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 6-ல் ஜப்பான் ஹீரோசிமா மீதும் ஆகஸ்ட் 9-ல் நாகசாகி மீதும் அணுகுண்டுகளை வீசி ஜப்பானிய நகரங்களை அழித்தன. ஜப்பான் பெரும் சேதம் அடைந்தது.
ஜப்பான் எவ்விதமான நிபந்தனை எதுவும் இல்லாமல் சரணடைந்தது. இவ்விதம் இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது.
இப்போரின் விளைவுகள்
ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளில் இருந்த சர்வாதிகார ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்பட்டது. கூட்டு நாடுகளால் ஜெர்மனி கைப்பற்றப்பட்டது. ஜெர்மனி இரு பிரிவாக பிரிக்கப்பட்டது.
அமெரிக்கப் படை தளபதி ஜெனரல் மெக் ஆர்தர் தலைமையில் ஜப்பான் கைப்பற்றப்பட்டது.
இரண்டாம் உலகப்போர், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை வலுவிழக்கச் செய்து இரண்டாம் நிலைக்குத் தள்ளியது. அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் வல்லரசுகள் என்ற அந்தஸ்தை அடைந்தன.
இப்போரினால் ரஷ்யாவின் ஏதேச்சதிகாரத்திற்கு முடிவு வராத காரணத்தினால் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் திகழ்ந்தது.
இரண்டாவது உலகப்போர் ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுதந்திரப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
மலேசியா, இந்தியா, பர்மா, எகிப்து, இலங்கை, சுதந்திரப் போராட்டத்தை நடத்தி பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தன.
பிலிப்பைன்ஸ், அமெரிக்காவிடமிருந்தும், இந்தோ சீனா, பிரான்சிடமிருந்தும், இந்தோனேசியா, டச்சுக்காரர்களிடமிருந்தும் சுதந்திரம் பெற்றன.
அகில உலக அளவில், சமாதானம், ஒற்றுமையை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை (United Nations Organization) ல் ஏற்படுத்தப்பட்டது.
உலக மக்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த இந்த சபை பாடுபட தொடங்கியது.
முடிவுரை
பன்னாட்டு அரசியலிலும், உறவுகளிலும், சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக் கிடைத்தது.
அணு அயுதங்கள் உற்பத்தி என்பது படைக் குறைப்பு சக்திச் சமநிலை, கூட்டுப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான புதிய அணுகுமுறைகளையும் நிலைகளையும் உருவாக்கியது.
பன்னாட்டு அரசியல் எனும் சதுரங்கத்தில் அமெரிக்காவும் சோவியத் நாடும் முக்கிய பங்கேற்பினைப் பெற்றன.
(கட்டுரையாளர் பொது அறிவு ஆர்வலர்)

No comments:

Post a Comment