Thursday 28 August 2014

இந்திய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படும் ஆகஸ்ட் 29-ம் தேதிக்கும் ஹாக்கிக்கும் உள்ள தொடர்பு பற்றித் தெரியுமா ஃப்ரெண்ட்ஸ்?

இந்திய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படும் ஆகஸ்ட் 29-ம் தேதிக்கும் ஹாக்கிக்கும் உள்ள தொடர்பு பற்றித் தெரியுமா ஃப்ரெண்ட்ஸ்?
தயான் சந்த் என்ற இந்திய ஹாக்கி வீரரின் பிறந்த தினத்தையே தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடுகிறோம். ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் இருக்கும்போது, தயான் சந்த் எந்த விதத்தில் கூடுதல் சிறப்புப் பெறுகிறார்?
1928, 1932 மற்றும் 1936-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவுக்கு ஹாக்கி விளையாட்டில் தங்கம் பெற்றுக் கொடுத்த வெற்றித் திருமகன் தயான் சந்த். இவர் கையில் இருப்பது ஹாக்கி மட்டையா... மந்திரக்கோலா? என்று வியக்காதவர்கள் இல்லை.
இவரைப் பற்றி சொல்லும் சில விஷயங்கள் உண்மையா... வதந்தியா? எனத் தெரியாது. தண்டவாளம் மீது ஹாக்கிப் பந்தை வைத்து, அது கீழே விழாமல் வெகுதூரத்துக்கு ஹாக்கி மட்டையால் அடித்தபடியே ஓடுவாராம். பெர்லினில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், இவரது விளையாட்டுத் திறமையைக் கண்டு ஹிட்லரே அசந்துபோனாராம். ஜெர்மன் குடியுரிமை தந்து, தன்னுடைய ராணுவத்தில் உயர் பதவி அளிக்க விரும்பினாராம்.
1905 ஆக்ஸ்ட் 29-ல் அலகாபாத்தில் சாமேஷ்வர் என்ற பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரரின் மகனாகப் பிறந்தவர் தயான் சந்த். ஆறு ஆண்டு பள்ளிப் படிப்புடன் இவரது கல்வி முடிவடைந்தது. 16 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். வேலை நேரம் முடிந்து, இரவு நிலா வெளிச்சத்தில் பயிற்சி மேற்கொள்வார். அதனால்தான் இவரை 'சந்த்’ என்ற அடைமொழியுடன் நண்பர்கள் அழைத்தனர். 'சந்த்’ என்றால், நிலா.
இந்திய ராணுவ ஹாக்கிக் குழுவில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட தயான் சந்த், கோல் சாதனைகள் படைத்தார். சர்வதேச நாடுகளுடன் நடந்த ஹாக்கிப் போட்டிகளில்... 400-க்கும் மேற்பட்ட கோல்கள் போட்டிருக்கிறார். 'இவரை ஹாக்கி விளையாட்டு வீரர் என்பதைவிட, 'ஹாக்கி மந்திரவாதி’ என்பதே சரி’ எனப் பத்திரிகைகள் பாராட்டின.
புதுதில்லியில் உள்ள 'நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ என்ற பெயர் மாற்றப்பட்டு, 'தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம்’ என சூட்டப்பட்டுள்ளது. இவரது பிறந்த தினத்தன்று பல ஹாக்கிக் குழுக்களிடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஆண்டுதோறும் இவரது பிறந்த நாளில், விளையாட்டு தொடர்பான உயரிய விருதுகளான 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, 'அர்ஜுனா விருது’, 'துரோணாச்சாரியார் விருது’ போன்றவற்றைக் குடியரசுத் தலைவர் வழங்குகிறார். விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு 'தயான் சந்த் விருது’ என்னும் மிக உயரிய விருதும் வழங்கப்படுகிறது.