Saturday 25 January 2014

சென்னை வானொலி 75

சென்னை வானொலி 75
Posted Date : 10:12 (15/12/2013)Last updated : 10:12 (15/12/2013)

-பழ. அதியமான்
கல்வி, மருத்துவம், ஊடகம் ஆகிய துறைகளில் நூற்றாண்டு சேவையைக் கடந்தும் நோக்கியும் தமிழ்நாட்டின் சென்னை கிறித்துவக் கல்லூரி(1837), ஸ்டான்லி மருத்துவமனை(1938), சென்னை வானொலி(1938) ஆகிய மூன்று முக் கிய நிறுவனங்கள் முன்னேறி உள்ளன.  இவற்றுள், பவளவிழா கண்ட அகில இந்திய வானொலியின் சென்னை நிலையம் பற்றியது இக்கட்டுரை.
India ’s Public Service Broadcasterஎன்று தன்னை அறிவித்துக் கொள்ளுகிற பிரசார் பாரதி தன்னுரிமை பெற்ற நிறுவனம்.  அகில இந்திய வானொலியும் தொலைக்காட்சியும் அதன் இருபெரும் அங்கங்கள்.  இவற்றுள் வயதிலும் கட்டமைப்பிலும் மூத்த, பெரிய நிறுவனம் அகில இந்திய வானொலி.
விரிவான கட்டமை ப்புள்ள உலக ஊடகநிறுவனங்களுள் ஒன்று அகில இந்திய வானொலி.   அதன் 231 ஒலிபரப்பு நிலையங்கள் மூலமாக மக்கள்தொகையில் 99.14 சதவீதம் மக்களையும் பரப்பளவில் 91.79 சதவீத நிலப்பரப்பையும் அகில இந்திய வானொலி சென்று சேர்கிறது.  வானொலி கடந்துவந்த பாதை நீண்டது.   1926ம் ஆண்டு மார்ச்மாதம் உருவான இந்திய ஒலிபரப்புக் குழுமமே (Indian Broadcasting Company) இந்திய ஒலிபரப்பின் அமைப்புரீதியான் முதல்முயற்சி எனலாம்.  இவ்வமைப்பு உருவாகுமுன்பே பம்பாய்(1923), கல்கத்தா(1923), சென்னை(1924) ஆகிய நகரங்களில் ரேடியோ கிளப்புகள் மூலம் ஒலிபரப்பு தொடங்கிவிட்டிருந்தது.  இந்திய ஒலிபரப்புக் குழுமம், தன்னுடைய முதல் நிலையத்தை பம்பாயில் 1927ம் ஆண்டு ஜுலை 23ஆம் தேதி திறந்தது. அன்றைய வைஸ்ராய் லார்டு இர்வின் அதைத் தொடங்கிவைத்தார்.  ஆனால் பொருளாதாரநலிவால் அந்தக் குழுமம் நான்காண்டுகளுக்கு மேல் செயல்படமுடியவில்லை.  பிறகு 1930, ஏப்ரல் முதல்நாள் அரசின் கட்டுப்பாட்டில் ஒலிபரப்பு அமைப்பொன்று தொடங்கியது.  இந்தியநாட்டு ஒலிபரப்புச் சேவை (Indian State Broadcasting Service) என்ற புதிய பெயரில் அவ்வமைப்பு இயங்கியது.  அரசு, அவ்வமைப்பைத் தொடர்ந்து நடத்த விரும்ப வில்லையானாலும் மக்களின் வி ருப்பம் காரணமாகத் தொடர்ந்தது.  1935ம் ஆண்டு லயனல் பீல்டன் என்ற BBCஅதிகாரி இந்தியாவின் முதல் ஒலிபரப்பு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப் பட்டார்.  இந்திய வானொலியின் கட்டுக்கோப்பான வளர்ச்சிக்குக் காரணமான முதல்மனிதர் என்று அவரைச் சொல்லலாம்.  அவரது முயற்சியில் 1936 ஜுன் 8 முதல் இந்தியநாட்டு ஒலிபரப்புச் சேவை என்பது, அகில இந்திய வானொலி (All India Radio) எனப் புதிய பெயரைப் பெற்றது.  இவரது பணிக்காலத்தில் இந்தியாவின் முக்கியமான முதல் நிலையங்கள் தோற்றம் பெற்றன.  மைசூர்(1935, செப்டம்பர் 10 ), தில்லி (1936, ஜனவரி 1),  லாகூர் ( 1937, டிசம்பர்  16), லக்னோ (1938, ஏப்ரல் 2), சென்னை (1938, ஜுன் 16 ),  திருச்சி (1939 மே 16  ), டாக்கா (1939, டிசம்பர் 6 ) நிலையங்கள் உருவாயின.
விடுதலை அடைந்த இந்தியாவில் செயல்பட்ட ஆறு நிலையங்களில் ஒன்றாக இருந்தது சென்னை வானொலி.  1938ல் தொடங்கப்பட்ட சென்னை வானொலி தமிழ்நாட்டின் முதல் நிலையமாக திகழ்ந்தது.  அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இந்த வானொலி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே, ரேடியோகிளப் மூலம் ஒலிபரப்பு தொடங்கிவிட்டிருந்தது.  1924 மே 16இல் அமைக்கப்பட்ட மெட்ராஸ் பிரெசிடென்சி கிளப் ஜுலை முதல் நிகழ்ச்சிகளை வான்அலைகளில் பரப்பிவந்தது, தென்னிந்திய ஒலிபரப்பின் தந்தை என்று புகழப்படும் பொறியியலாளர் சி.வி. கிருஷ்ணசாமி செட்டி இந்த அமைப்பிற்குக் காரணமாக விளங்கினார்.  1930ல் சென்னை மாநகராட்சி முறையான ஒலிபரப்பை வளர்த்தெடுத்திருந்தது.  மத்திய அரசாங்கத்தின் ஒலிபரப்பு தொடங்கியதும் மாநகராட்சி தனது ஒலிபரப்பை நிறுத்தி விட்டது.  1938ம் ஆண்டு தொடங்கிய சென்னை வானொலி 75 ஆண்டுக்காலம் மக்கள்சேவையை ஆற்றி தன் பவளவிழாவை 2013ம்ஆண்டு கொண்டாடியது.
சென்னை, எழும்பூரில் மார்ஷல்சாலையில் ஈஸ்ட் நூக் என்ற கட்டிடத்தில் முதலில் செயல்பட்ட வானொலி, 1954 ஜுலைமாதம் தற்போது இயங்கும் மயிலாப்பூர், காமராசர் சாலை, கலங்கரை விளக்கத்துக்கு எதிரில்உள்ள இடத்திற்கு மாறியது.  1938 ஜுன் 16ம்தேதி நிகழ்ந்த சென்னை வானொலியின் தொடக்கவிழாவில் அன்றைய ஆளுநர் லார்டு எர்ஸ்கின், சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜி, தொடர்புத்துறை உறுப்பினர் சர் ஆண்ட்ரு க்ளோ, இந்திய ஒலிபரப்பின் கட்டுபாட்டு அதிகாரி லயனல் பீல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  லார்டு எர்ஸ்கின் தொடங்கிவைக்க, இராஜாஜி ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார்.  75 ஆண்டு நிறைவுக்கான பவளவிழா  2013 ஜுன் 18 அன்று சென்னை, தியாகராய நகர், வாணி மகாலில் நடைபெற்றது.  பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அலுவலர் ஜவஹர் சர்க்கார் சிறப்புரை ஆற்றினார்.  பிரசார் பாரதியின் உறுப்பினர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் வி.ஏ.எம்.ஹுசேன் தலைமை தாங்கினார்.  1938ல் வானொலியின் முதல் இயக்குநராக விக்டர் பரஞ்சோதி திகழ்ந்தார்.  75ம்ஆண்டில் 25வது இயக்குநராக க.பொ. சீனிவாசன் விளங்குகிறார்.
விடுதலைக்கு முன்னும் பின்னுமாகச் சென்னை வானொலியின் முக்கால் நூற்றாண்டுப் பயணத்தை மாட்சி, தளர்ச்சி, மறுமலர்ச்சி, மாற்றம் என நான்கு பெரும் வரலாற்றுக் கட்டங்களாகப் பொதுவாகப் பிரித்து புரிந்து கொள்ளலாம்.
பிரிட்டிஷ் இந்தியாவிலும்  விடுதலைபெற்ற இந்தியாவிலும் தொழிலில் போட்டியில்லாத நிலையில் தனிக்காட்டு ராஜாவாக வானொலி வாழ்ந்த காலம்தான் அதன் மாட்சிமைக்காலம்.  வானிலிருந்து வரும் ஒலியை அசரீரி என்று கருதும் மரபு நமக்குண்டு என்றாலும் ஒரு பெட்டியிலிருந்து மனிதக்குரல் வந்தது நம்மை ஆச்சர்யப்படுத்தியது.  தொடக்க காலத்தில் வானொலி எல்லாநிலை மக்களையும் சென்றடையும் வண்ணம் விலை மலிவாக இல்லை.  அது அப்போது எட்டாப்பொருள்.  ஒரு கிராமத்தில் ஒரு பணக்காரர் வீட்டில் இருந்தால் அது அதிசயம்.  ஏறக்குறைய 1960கள் வரை அதுதான் நிலைமை.  கிராம பஞ்சாயத்துகளில் ரேடியோ வைத்து மாலை நேரத்தில் ஒலிபரப்புவார்கள்.  பஞ்சாயத்து கட்டிடம் அல்லது ஊர்த்தலைவர் வீடு என்று ஏதாவது ஒரு இடத்தில் ரேடியோவை வைத்திருப்பார்கள்.  அங்கே மக்கள் கூடி உட்கார்ந்து கேட்பார்கள்.  அந்த வால்வு ரேடியோ, மரப்பெட்டி அளவில் இருக்கும்.  ஒலி வருவதும் போவதும் கேட்கவும் பார்க்கவும் வேடிக்கையாக இருக்கும்.  மரப்பெட்டியின் வலது பக்கத்தில் வெள்ளை வண்ணத்தில் இன்டிகேட்டர் போல ஒன்று இருக்கும்.  அதில்தான் அந்த வெளளை ஒளி வரும்.  டிரான்சிஸ்டர் என்ற நிலைக்கு ரேடியோ மாறும்வரை இந்தக் கூத்து நடந்தது. வானொலி தன்னிகரற்ற சாதனமாய் தனியாட்சி செய்த காலம் 1938 முதல் 1975 வரை எனலாம்.
வானொலியின் தங்கையாக தொலைக்காட்சி, தமிழ்நாட்டுக்கு 1975ல் நுழைந்தது.  எங்குப் பார்த்தாலும் தொலைக்காட்சி என்ற பேச்சுத்தான்.  வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் (திரைப்படப்பாடல் காட்சி), ஞாயிறு திரைப்படம் ஒளிபரப்பாகும் நேரத்தில் தெருவில் மக்கள் நடமாட்டம் இருக்காது.  பந்த் சமய தெருக்களாய் வெறிச்சோடி இருக்கும்.  வீட்டில் ஹாலில் வாயைப் பிளந்து கொண்டு தொலைக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்க, திருடன் படுக்கை அறைக்குள் நுழைந்து திருடிக்கொண்டு போவான்.  இது புனைவல்ல உண்மை.  வானொலியின் தன்னிகரற்ற இடத்தை இப்படித் தொலைக்காட்சி பிடிக்க, வானொலி அமைதியாக பின் இருக்கைக்குச் சென்று அமர்ந்துவிட்டது.  ஆனாலும் முன் பிறந்தவள் ஹோதா மட்டும் உண்டு.  தளர்ச்சியுடன் கழிந்த காலம் 1975 -  80 எனலாம். இக்காலத்தில் தொடங்கப்பட்ட பண்பலை ஒலிபரப்புகளும், பொழுது போக்குக்காக தொடங்கப் பட்டு பின்னர் வர்த்தக விளம்பரங்களைத் தாங்கி வந்த விவித்பாரதி வர்த்தக ஒலிபரப்புகளும் செல்வாக்கு பெறத் தொடங்கிய காலம் இது.  பண்பலையின் தனியார் ஒலிபரப்புகளும், விவித்பாரதியில் திரைப்படப்பாடல்களின் ஊடே வலம் வந்த விளம்பரங்களும், விளம்பரதாரர் நிகழ்ச்சிகளும் மக்கள் விரும்பிக் கேட்கத் தொடங்கிய காலம் இது எனலாம்.  பிரதான அலைவரிசை பின்னகர்ந்து வர்த்தக அலைவரிசைகள் முன்னுக்கு வரத்தொடங்கியது தளர்ச்சி எனப்பட்ட இக்காலத்தில் எனலாம்.
மூன்றாம் கட்டமாக 1980  90க்கும் இடையிலான காலத்தைச் சுட்டலாம்.  பண்பலை ஒலிபரப்புகளுக்கு கிடைத்த வரவேற்பால், பண்பலை, விவித்பாரதி மட்டுமல்ல பிரதான அலைவரிசைகளும் மக்களால் மீண்டும் கேட்கப்பட்டன.  மாநகரங்கள் எல்லாம் பண்பலை அலைவரிசைகளைத் தொடங்கின.  புதிய வடிவலான நிகழ்ச்சிகள் இடம்பெறலாயின.  அரசாங்கம், இந்திய ஒலி, ஒளிபரப்பை சுயாட்சி கொண்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க விரும்பி செய்த முயற்சிகளும் கனியத் தொடங்கியது.  1990ல் பிரசார் பாரதி சட்டம் இயற்றப்பட்டது.  அதுவரையான காலத்தை மறுமலர்ச்சி காலம் எனலாம்.  நான்காவதான இப்போதைய காலப் பகுதியை மாற்றம்பெற்ற காலம் எனச் சுட்டலாம்.  1997ல் பிரசார் பாரதி நடைமுறைக்கு வந்தது.  வானொலியும் தொலைக்காட்சியும் அதன் கட்டுப்பாட்டுக்கு மாற்றம் பெற்றன.  எனினும் ஊழியர்நலன் சார்ந்த பிரச்னைகள் பற்றிய விவாதம் எழுந்தது.  இவை போன்ற சிக்கல்களால் பிரசார் பாரதி தன்னுரிமையை முழுமையாகச் செலுத்தாமலும் அரசிடமிருந்து முற்றிலும் பிரிந்துவிட இயலாமலும் நகரும்காலம் நான்காம் கட்டம்.  தன் சொந்தக்கால்களில் நிற்க,  கால்களை வலுவேற்றும் முயற்சியில் பிரசார் பாரதி தற்போது ஈடுபட்டு வருகிறது.
மேற்கட்டுமானத்தில் நான்கு பெரும் கட்டங்களைச் சந்தித்து நடைபோடும் வானொலி, அதன் நெடும்பயணத்தில் வெகுமக்களின் நலன்நாடுவதிலும், வெகுமக்களுக்கு மகிழ்வூட்டுவதிலும் தொடர்ந்து சளைக்காமல் பணியாற்றிக் கொண்டே வந்துள்ளது.
சென்னை கி என்கிற ஒற்றை அலைவரிசையில் தொடங்கிய சென்னை வானொலி, இன்றைக்கு 75ஆம் ஆண்டிலே ஏழு அலைவரிசைகளில் தன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது.  விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு(1969), பண்பலை வரிசைகள்(1977, 2001) ஆகியவை வானொலி நேயர் எண்ணிக்கையை விரிவாக்கிய குறிப்பிடத்தக்க அலைவரிசைகள்.  செய்தி, இலக்கியம், நாடகம், கல்வி, சமூகம் வளர்ச்சித் திட்டங்கள், நலவாழ்வு, இசை, வேளாண்மை, அறிவியல், குழந்தைகள், பெண்கள், இளைஞர், முதியவர், தொழிலாளர் நிகழ்ச்சிகள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒலிபரப்பாகின்றன.  அதன் மூலம் சமூகத்தின் பலதரப்பட்ட மக்களையும் அடைய வானொலி முயன்று வருகிறது.  அதற்கென பல தனிப்பிரிவுகளைத் தொடங்கி சிறப்பு கவனத்தைச் செலுத்தி வந்தது, வருகிறது.
1954ல் மாநில செய்திப் பிரிவு, 1967ல் சுகாதாரம் மற்றும் குடும்பநலப் பிரிவு,  1970ல் இளைஞர் பிரிவு, 1972ல் விளையாட்டுப் பிரிவு, 1976ல் அறிவியல் பிரிவு, 1977இல் பண்ணை இல்லப் பிரிவு ஆகியவை தனிப்பிரிவுகளுள் சில.  பொதுவான நிகழ்ச்சிகள் இருப்பினும் ஆழமாகவும் விரிவாகவும் சேவை செய்ய இத்தகைய தனிப்பிரிவுகள் உதவின.  ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பிரிவு தன் திறமைமிக்க பணிகளால் முன்னுரிமை பெற்று தம் பெருமையை ஸ்தாபித்து வந்துள்ளன.  எனினும் செய்திப்பிரிவும், பண்ணை இல்ல ஒலிபரப்பும் மாறாப் பெருமையுடன் திகழ்கின்றன.  மக்களின்  உணவுத் தேவையை நிறைவு செய்ய வேளாண்மையும், ஆர்வத்தூண்டலாக செய்தியும் விளங்குவதால் இப்பிரிவுகளின் சேவை மக்களிடம் ஆழப்பதிகின்றன போலும்.
வானொலியின் ஒலிபரப்பில் கணிசமானநேரம் பாரம்பரிய இசைக்கும் அதற்கடுத்து திரைஇசைக்குமே அளிக்கப்படுகிறது.  இசைவாணர்களை நிலைய கலைஞர்களாகப் போஷித்தும் வருகிறது.  பாலமுரளி கிருஷ்ணா, டி.கே. கோவிந்தராவ், ஜி.என். பாலசுப்பிரமணியன் முதலிய புகழ்பெற்ற கலைஞர்கள் வானொலியில் சேவை செய்தவர்களே.
தமிழ் இலக்கியஉலகில் புகழ்பெற்ற பலர் வானொலியை அலங்கரித்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.  சாகித்திய அகாதெமி விருதாளர்களான தி.ஜானகிராமன், மீ.ப.சோமு, அகிலன் (இவர் ஞானபீட பரிசும் பெற்றவர்), அ.ச.ஞானசம்பந்தன், சு.சமுத்திரம் ஆகியோர் அவருள் சிலர்.  மக்களிடம் செல்வாக்குடன் திகழ்ந்த ஒலிபரப்பாளர்கள் பலர்.  அவர்களுள் அமரர்கள் தென்கச்சி கோ.சுவாமிநாதன், எம்.பி.சீனிவாசன், சுகி.சுப்பிரமணியன், பார்வதி ராமநாதன், எம்.கே.மூர்த்தி ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள்.  இவர்கள் மக்கள் அறிந்தவர்கள் என்றால் வானொலி 'கௌரவமான ஸ்தாபனம்’ என்று நற்பெயர் பெற உழைத்த அதன் ஊழியர்களும், இயக்குநர்களும் பலர் உள்ளனர்.  எத்தனை பேரைக் குறிப்பிட்டாலும் முக்கியமான சிலர் விடுபட வாய்ப்புண்டு என்பதால் சுட்டிஒருவர் பெயர்சொல்லாமல் இருப்பதே கௌரவமானது.  இவர்கள் அடிக்கல்லைப் போன்றவர்கள் எவ்வளவையும் தாங்குவார்கள்.  வெளியில் தெரிய விருப்பப்படாதவர்கள்.
பொதுவாக வானொலி கடைப்பிடிக்கும் முதல்நெறி அதன் நேரம்தவறாமை.  நேரக் கட்டுக்குள் விஷயச் செறிவை அடக்கிக் காட்டுவது இரண்டாவது.  மூன்றாவது சிறப்பு அதன் பண்பாட்டம்சம்.  இந்தத் திரைப்படம் பார்த்து இந்தக் கொலையைச் செய்தேன் என்ற வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஒலிக்கக் கேட்டிருக்கலாம்.  இந்த நாவலிலிருந்து தான் அந்த விஷத்தைக் கேள்விப்பட்டு பயன்படுத்தினேன் என்ற வாக்கியத்தொடரை நீங்கள் படித்திருக்கலாம்.  ஆனால் வானொலி கேட்டு கெட்டுப்போனேன் என்று ஒரு செய்தியை அது உயர்தனி ஆட்சி நடத்திய காலத்தில் கூட கேட்டிருக்கவோ, படித்திருக்கவோ  மாட்டீர்கள்.  ஆம் வானொலி ஒரு பண்பாட்டுக் கிடங்கு.
வானொலி என்றதும் படித்த, சென்ற தலைமுறையினர்க்கு நினைவுக்கு வரும் இன்னொரு விஷயம், அது நடத்திய வானொலி என்ற பத்திரிகை.  1940களில் வானொலி நிகழ்ச்சி விவரங்களைப் பிரதானமாக தாங்கி 15 நாள்களுக்கு ஒருமுறை வெளிவந்த அவ்விதழை சென்னை வானொலி நடத்திவந்தது.  டி.கே. சிதம்பரநாத முதலியார் மகன் தீத்தாரப்பன் அதன் ஆசிரியராக இருந்தார் என்பார்கள்.  அது 1987 மார்ச்மாதம் நின்றுவிட்டது.  இதற்கு இணையான தெலுங்கு இதழ் வாணி.
வானொலி வளர்ச்சியின் ஊடாக நிகழ்ந்த இன்னொரு நிகழ்வு, அதன் ஒலிக்களஞ்சியங்களைக் குறுந்தகடுகளாக்கி மக்களிடம் சேர்க்கும் திட்டம்.  இறந்த காலத்தை நிகழ்காலமாக்கி, எதிர்காலத்திற்கு அளிக்கும் முயற்சி.  2002 ம்ஆண்டில் தொடங்கப்பட்ட ஆகாஷ்வாணி சங்கீத் என்ற இத்திட்டம் இந்தியா முழுவதிலும் செயல்படுத்தப்பட்டது.  அதில் சென்னை வானொலியின் பங்கு குறிப்பிடத்தக்கது.  முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், டி.என்.ராஜரத்தினம் பிள்ளை,எம்.டி.ராமநாதன், ஆலத்தூர் சகோதரர்கள், எம்.எஸ்.சுப்புலஷ்மி, டி.பிருந்தா  டி.முக்தா, செம்பை வைத்தியநாத பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி, மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் இசைக் குறுந்தகடுகள் முதலில் வெளிவந்தன.  தொடர்ந்து வெளிவந்த வண்ணமுள்ளன.  இவ்வரிசையில் அடுத்து இலக்கியச் சொற் பொழிவுகளை குறுந்தகடு களாக்கி வெளியிடும் திட்டம் யோசனையில் உள்ளது.
விளம்பரம் என்றாலே கெட்டவார்த்தை போலப் பார்த்த பார்வை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.  நிகழ்ச்சிகளை வழங்க வந்த விளம்பரதாரர்கள் நிகழ்ச்சிகளை விழுங்க வந்தவர்களாக பின்னால் மாறிப்போனார்கள், என்றாலும் தம் சொந்தக்காலில் நிற்க விரும்பும் நிறுவனங்கள் விளம்பர வருமானத்தைப் பெருக்க வேண்டியுள்ளன.  வானொலியில் விளம்பர அறிமுகம் கட்டம் கட்டமாக நிகழ்ந்தது.  முதலில் விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு, பிறகு பிரதான அலைவரிசையில் செய்திகள், பின்னர் நிகழ்ச்சிகள் என அவை நடந்தன.  விவித் பாரதியில் அதற்கென வர்த்தகஒலிபரப்புகள் தோன்றி விளம்பரப்பொறுப்பை ஏற்றன.  சென்னையில் வர்த்தக ஒலிபரப்பு 1969 இல் தொடங்கிச் செயல்பட்டு வருகிறது. 
விளம்பர வளர்ச்சியின் நீட்சியாக நாடெங்கும் விற்பனைப் பிரிவுகள் ; (விணீக்ஷீளீமீtவீஸீரீ ஞிவீஸ்வீsவீஷீஸீ) ஆரம்பிக்கப்பட்டன.  அவ்வகையில் சென்னையில் 2001 செப்டம்பர் 15  இல் விற்பனைப் பிரிவு தொடக்கம் பெற்றது.  இந்தியாவிலேயே அதிக வருமானம் ஈட்டும் வானொலி, தமிழ்நாட்டின் கொடைக்கானல் பண்பலைவரிசை என்பது இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கது.
வானொலி தமிழுக்குச் செய்த சேவையைப் பற்றி தனி நூல்களே வெளிவந்துள்ளன.  எனினும் குறிப்பிடத்தக்க அம்சமாக அதன் சரியான உச்சரிப்பை பிரபலப் படுத்துவதையும், நவீன மாற்றத்துக்கேற்ப புதிய சொற்களை உருவாக்கிப் பரப்புவதையும் குறிப்பிடலாம். BBC எப்படி ஆங்கில உச்சரிப்புக்குச் சான்று காட்டும் நிலையமாக விளங்குகிறதோ அப்படி தமிழுக்குச் சென்னை வானொலி இருக்கிறது என்று தமிழறிஞர் பொற்கோ சென்னை வானொலியைப் பாராட்டியுள்ளார்.  வானொலி உருவாக்கிய பரப்பிய சில சொற்களாவன.  பண்பலை (Frequency Modulation), அரங்இசை (Kutchery),பல்லிய விருந்து (வாத்திய விருந்தா), அஞ்சல்(Relay),அஞ்சலி (Tribute)   என்பவை.  இன்னும் பல உண்டு.
வாய் ஓயாமல் எல்லோரிடமும் பேசி செய்திகளைச் சொல்லித் திரியும் இயல்புள்ள மனிதர்களை ஆல் இண்டியா ரேடியோ என அழைக்கும் கிண்டல் கிராமங்களில் மிகுதி.  செய்திகளைப் பரப்புவதில் வானொலிக்கு இருக்கும் திறன் கிராமத்து சாதாரணன் வரை எட்டிவிட்டது என்பதுதான் இந்தக் கேலிக்குப் பின்னிருக்கும் உண்மை.  எந்தச் செய்தியின் உண்மைத் தன்மையைப் பற்றி சந்தேகம் வரும் போதும் ரேடியோவில் சொன்னார்கள் என்று உறுதிப்படுத்தும் நிகழ்வுகள் இன்றும் கிராமத்தில் உண்டு.  நகரத்தில் எப்படியோ கிராமப்புறத்தில் வானொலியின் நம்பகத்தன்மைக்கு இன்றும் ஈடில்லை.  75 ஆண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகளுள் இதுவே மகத்தானதாக எனக்குப்படுகிறது.
விளம்பரம் என்பது நுகர்வுக்கலாசாரம் செல்வாக்கு பெற்றுள்ள இக்காலத்தில் தவிர்க்கவியலாதது.  ஆனால் வேளாண்மை கலாசாரம் செல்வாக்கு செலுத்திய 1930களிலேயே விளம்பர ஒலிபரப்பு பற்றிய எண்ணம் சிலருக்குத் தோன்றியிருக்கிறது.  பம்பாயைச் சேர்ந்த சி.சி.எம். ஹார்டி என்பவர் இந்திய ஒலிபரப்புக் கட்டுப்பாட்டதிகாரி லயனல் பீல்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார் (24 அக்டோபர் 1938).  விளம்பரதாரர் நிகழ்ச்சிக்கென, ரேடியோதமாஷ் என்ற பெயரில் ஒரு வானொலியை அறிமுகப்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்து, அதற்கான திட்டத்தையும் விவரித்திருந்தார் ஹார்டி.  கடிதத்தைப் பெற்றுக் கொண்ட லயனல் பீல்டன், ஆழ்ந்த யோசனை மற்றும் முயற்சிக்குப் பிறகு எழுதிய பதிலின் பகுதி பின் வருவது.  நானும்கூட ஏறக்குறைய இந்த முறையில் யோசித்திருக்கிறேன்.  அப்படி ஒரு வானொலி தொடங்கினால் நானே அதன் இயக்குநராகவும் விரும்புகிறேன்.  ஆனால் என்ன செய்வது!  என்னால் ஆனமட்டும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன்.  ஆனால் சிறிதளவே நம்பிக்கை உள்ளது.  உங்கள் கடிதத்திற்கு நன்றி.  எப்படியோ இத்திட்டம் ஒருநாள் பயனளிக்கும், எதை யார் கண்டது (இண்டியன் பிராட்காஸ்டிங், ப.368). லயனல் பீல்டனின் கனவுவானொலிதான் விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்புகள் எனத் தோன்றுகிறது.
சில சேவைகள்
Radio on Demand நேயர்கள் தொலை பேசியில் தெரிவு செய்யும் பாடல்கள் கணினி வழிச் சேவையில் ஒலிபரப்பும் முறை (1998).
Direct To Home செயற்கைக்கோள் வழியான சேவை ரெயின்போ பண்பலையின் சேவையும், 'ராகம்’ என்ற பெயரில் கர்னாடக இசைச்சேவையும் இதன் வழி கிடைக்கும் தமிழ் ஒலிபரப்புகள் (16 டிசம்பர் 2004).
News on Phone  தொலைபேசி வழி தலைப்புச் செய்திகளை அறியும் வசதி (28 ஜனவரி 2002).

No comments:

Post a Comment