Saturday 25 January 2014

இதிகாச குவிஸ் குறிப்புகள்

இதிகாச குவிஸ் குறிப்புகள்
Posted Date : 20:12 (16/12/2013)Last updated : 21:12 (16/12/2013)
ராமாயணம்
ஜெயந்தி வாசுதேவன்
 ராமாயணத்திலுள்ள 7 காண்டங்கள் (பிரிவுகள்)
1. பால காண்டம், 2. அயோத்யா காண்டம், 3. ஆரண்ய காண்டம், 4. கிஷ்கிந்தா காண்டம், 5. சுந்தர காண்டம், 6. யுத்த காண்டம், 7. உத்தர காணடம்.
குறிப்பு: வால்மீகி ராமாயணமும், கம்ப ராமாயணமும் யுத்த காண்டத்துடன் முற்றுப் பெறுகின்றன உத்தர காண்டம் பிற்காலப் புலவர்களால் சேர்க்கப்பட்டது.
4 யுகங்கள்
1. கிருத யுகம் (சத்ய யுகம்) திருமாலின் முந்தைய அவதாரங்கள்
2. திரேதா யுகம் - இராமாயணம்
3. துவாபர யுகம் - மகாபாரதம்
4. கலியுகம்.
நல்லவர்களும் தீயவர்களும்
1. கிருதயுகம் - வேறுவேறு உலகத்தில் வாழ்ந்தனர்
2. திரேதாயுகம் - ஒரே உலகத்தில் வாழ்ந்தனர்
3. துவாபரயுகம் - ஒரே குடும்பத்தில் வாழ்ந்தனர்
4. கலியுகத்தில் தேவகுணமும் அசுர குணமும் ஒரே மனிதனுக்குள் உள்ளது.
இராமாயணமும் மகாபாரதமும்
இராமாயணம் சூரிய வம்சத்தைப் பற்றியது (ரகு வம்சம்), மகாபாரதம் சந்திர வம்சத்தைப் பற்றியது (குரு வம்சம்)
இராமாயணம் காலத்தால் முந்தியது.
இராமாயணத்தில் நடுநாயகன் - ஸ்ரீராமன், மகாபாரதத்தில் நாயகன் - ஸ்ரீகிருஷ்ணன். எல்லாச் செயல்களுக்கும், நிகழ்வுகளுக்கும் காரணமாயிருந்தாலும் எதிலும் நேரடியாக கண்ணன் பங்கு கொள்ளவில்லை.
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்பதே மத்திய கோட்பாடு.
வால்மீகிக்கு ராம மந்திரத்தை உபதேசித்தவர் நாரதர்
ஆரம்பத்தில் வால்மீகியால் 'ராம’ என்று உச்சரிக்க முடியவில்லை. 'மரா’ என்று திருப்பித் திருப்பி சொல்ல.. அதுவே 'ராம’ என ஆயிற்று.
ராமனுக்கு முந்தைய அரசர்கள் பற்றியும், ராமன் பற்றியும் காளிதாசர் இயற்றிய நூல் 'இரகுவம்சம்’.
1. பால காண்டம்
அயோத்தியில் பாய்ந்த நதி சரயு (கங்கையின் இணை நதி)
வால்மீகி உச்சரித்த ஒரே மந்திரம் 'ராம’.
வால்மீகி என்னும் சொல்லுக்கு 'புற்று கட்டும் அளவுக்கு தவம்புரிந்தவர்’ என்பது பொருள்.
அயனம் என்னும் சொல்லுக்கு 'கதை’ என்று பொருள்.
சீதை என்னும் சொல் (கலப்பை) படைச்சால் என பொருள்படும்.
படைச்சாலில் கண்டெடுக்கப்பட்டு, ஜனகனால் வளர்க்கப்பட்டதால் 'ஜானகி’ எனப் பெயர் பெற்றாள்.
 'அயோத்யா’ என்னும் சொல் 'யுத்தத்தில் அசைக்க முடியாத’ என்னும் பொருள்படும்.
வால்மீகியும் ராமனும் சமகாலத்தவர் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால், வால்மீகி காலத்துக்கு முன்பே கர்ண பரம்பரையாக விளங்கிய கதைக்கு வால்மீகி எழுத்து வடிவம் கொடுத்தார் என்றும் சிலர் சொல்வதுண்டு.
 அயோத்தி நகரை நிர்மாணித்த அரசர் 'மனு’.
 இராமாயணத்தின் மூல காரணம் - பெண்ணாசை. மகாபாரதத்தில் மூல காரணம் - மண்ணாசை.
வால்மீகி ராமாயணத்தில் ராமன் ஒரு சிறந்த வீரனாகவும், நல்லவனாகவும் மட்டுமே சித்தரிக்கப்படுகிறான். அவதார புருஷனாக அல்ல. ஆனால் கம்பரும், துளசிதாசரும் இராமனை மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் காட்டுகின்றனர்.
 கம்பராமாயணம் வெறும் மொழிபெயர்ப்பு அல்ல. தமிழர் பண்பாட்டையும், பக்தியையும், ஆழ்ந்த தமிழறிவையும் கலந்து தன் வாழ்வின் சாரமாகக் கம்பர் படைத்தார்.
 வால்மீகி ராமாயணத்தில் ராவணன் சீதையைத் தொடைமீது வைத்து கடத்திச் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கம்பர், இராவணன் சீதையை பர்ணசாலையோடு கவர்ந்து சென்றதாகக் கூறுகிறார்.
வாலியின் மறைவுக்குப் பின் அவன் மனைவி தாரை, சுக்ரீவனை மணக்கிறாள் என்பது வால்மீகி ராமாயணம். ஆனால் கம்பராமாயணத்தில் தாரை விதவையாக வாழ்ந்தாள். சுக்ரீவனுக்கு அறிவுரை சொல்லும் மரியாதையான கதாபாத்திரம்.
வால்மீகி ராமாயணம் Blank Verse (அகவற்பா முறையில் அமைந்தது).
ஆனால் கம்பராமாயணம் Lyrics   நிருத்தியத்துக்குத் தகுந்தது.
தசரதன் - என்னும் பெயர், ஒரே நேரத்தில் பத்து இரதங்களைப் போரில் நடத்த வல்லவன் எனப் பொருள்படும்.
தாய் - மகன்
கோசலை - ராமன், கைகேயி - பரதன், சுமித்திரா தேவி - லட்சுமணன், சத்ருக்னன்
புத்திர காமேட்டி யோகம் - முனிவர் ரிஷ்யசிருங்கர் தலைமையில் நடந்தது.
மந்தரை - கூனியின் மறுபெயர்.
சபலை - வசிஷ்டரிடம் இருந்த அபூர்வ சக்தி வாய்ந்த பசு. விஸ்வாமித்திரன் அரசனாக இருந்தபோது சபலையை தனக்கு வேண்டுமெனக் கோரினார். வசிஷ்டர் மறுத்ததால் இருவரும் எதிரிகள் ஆயினர்.
தன் யாகத்தைத் தடுத்த அரக்கர்களை அழிக்க ராம, லட்சுமணர்கள விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றார்.
பலம், அதிபலம் - விஸ்வாமித்திரரால் ராமனுக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரங்கள். பசி, தாகம், களைப்பைப் போக்கும்.
தாடகை - ராமலட்சுமணர்களால் கொல்லப்பட்ட அரக்கி. மாரீசனின் தாய்.
மாரீசன் - மானாக மாறி சீதையை ராவணன் கவர உதவியவன். தாடகையின் முதல் மகன்.
சுபாஹு தாடகையின் 2ம் மகன் ராமனால் கொல்லப்பட்டான்.
அகலிகை - கௌதமர் மனைவி. சாபத்தால் கல் ஆனாள். இராம பாதம் பட்டு பெண் ஆனாள்.
2. அயோத்தியா காண்டம்
மிதிலை - ஜனகனின் நாடு
ராமன் ருத்ரவில் (சிவதனுசை) ஒடித்துச் சீதையை மணந்தான்.
பரசுராமரின் தந்தை 'ஜமதக்னி’யை கார்த்தவீர்யார்சுனன் என்ற மன்னன் கொன்றான். அதனால் 21 தலைமுறை க்ஷத்திரியர்களை அழிக்க விரதம் பூண்டவர் பரசுராமர். பரசுராமரிடம் இருந்தது விஷ்ணுதனுசு.
சுமந்திரன் - தசரதனின் ஆலோசகர்.
3. ஆரண்ய காண்டம்
 வனவாசத்தில் ராமன் பரதனை சந்தித்தது - சித்திரக்கூடம் என்னும் மலை அடிவாரம்.
 குகன் - கங்கைக் கரையிலிருந்த படகோட்டி. ராமனுடைய 5வது சகோதரன் என போற்றப் படுபவன்.
 தண்டகாரண்யம் என்ற காட்டுப்பகுதிக்குச் சென்ற இராமன் அங்கு 'விராதன்’ என்னும் அரக்கனுக்கு சாப விமோசனம் அளித்தான்.
 தண்டகாரண்யம் கோதாவரி நதியின் எல்லையில் இருந்த இடம். பஞ்சவடியில் ஜடாயுவை சந்தித்தனர் (தசரதன் தோழன்).
 சூர்ப்பணகை : ராவணன் தங்கை. லட்சுமணனால் மூக்கு அறுபட்டதும் ராவணனால் நியமிக்கப்பட்ட கரன், தூஷணன் என்ற அரக்கர்களிடம் முறையிட்டாள். பின் ராமனால் இருவரும் கொல்லப்பட்டனர். கரன், தூஷணன் என்பவர்கள் இராவணனுடைய தாயாதிகள் (பங்காளிகள்).
திரிசிரன் என்பவன் கரனுடைய சேனாதிபதி. ராமனால் கொல்லப்பட்டான்.
 அகம்பனன் : தண்டகாரண்யத்தில் கரன், தூஷணன் மாண்டு போனதை இலங்கைக்குச் சென்று ராவணனிடம் சொன்னவன்.
சபரி : சீதையைத் தேடி ராமன் பம்பைக்குச் செல்லும் வழியில் சபரியைச் சந்தித்தான். கனிகளைச் சுவைத்துப் பார்த்து பிறகு ராமனுக்குப் படைத்தவள்.
ரிஷ்யமுகம் : வாலிக்குப் பயந்து சுக்ரீவன் வாழ்ந்து வந்த மலை.
சம்பாதி : கழுகரசன் ஜடாயுவின் அண்ணன். சீதை இலங்கையில் உள்ளதாக வானரர்களுக்கு வழி சொன்னவன்.
ஜாம்பவான் (கரடி வேந்தன்) : அனுமனுடைய பலத்தை விளக்கி, மகேந்திர கிரியிலிருந்து கடலைத் தாண்ட உதவியவன்.
அங்கதன் - வாலியின் மகன்.
நலன், நீலன் - கடலில் பாலம் அமைத்த வானரங்கள்.
திரிசடை - விபீஷணன் மகள். அசோகவனத்தில் சிறையிலிருந்த சீதைக்கு உதவியவள்.
மாரீசன் (தாடகையின் மகன்) : விஸ்வாமித்திரருடைய யாகத்துக்கு கெடுதல் விளைவித்ததால் ராமபாணத்தால் கடலுக்குள் வீசப்பட்டவன். தப்பித்து இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்தவன். பிறகு ராவணன் உத்தரவுப்படி மானாக மாறி, சீதை கவரப்பட உதவினான்.
ஜடாயு : கழுகரசன். தசரதனின் நண்பன். சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனுடன் போரிட்டு இறக்கைகள் கத்தியால் அறுபட்டு வீழ்ந்தவன். ராமனிடம் சீதை இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டதைச் சொல்லி, இறந்தான்.
கபந்தன் (கபந்தபாகு) : இந்திரனுடைய சாபத்தால் வினோதமான விலங்காக தண்டகாரண்யத்தில் வாழ்ந்தவன். இராமனால் சாபவிமோசனம் பெற்றான். பம்பா நதிக்கரையில் ரிஷ்யமுகம் என்ற சிறிய குன்றில் வசிக்கும் 'சுக்ரீவன்’ என்பவனுடன் நட்பு கொள்ளுமாறு ராமனைத் தூண்டினான்.
4. கிஷ்கிந்தா காண்டம்
வாலி : கிஷ்கிந்தை ராஜா. மனைவி: தாரை. மகன் : அங்கதன். தம்பி : சுக்ரீவன்.
சுக்ரீவனின் மனைவி 'ருமை’ என்பவளை அபகரித்து, சுக்ரீவனை கிஷ்கிந்தையை விட்டுத் துரத்தினான்.
சுக்ரீவனிடம் தன் பலத்தை நிரூபிக்க இராமன் ஒரே அம்பினால் 7 ஆச்சா மரங்களைத் துளைத்தான்.
வாலி யாருடன் போரிட்டாலும் அவர்களது வலிமையில் பாதி வாலிக்கு வந்துவிடும் என்று வரம் பெற்றிருந்தான். எனவே ராமன் மறைந்திருந்து வாலியைக் கொல்ல வேண்டியதாயிற்று.
'துந்துபி’ என்கிற எருமை வடிவ அரக்கனுடன் போரிட்டுஅவனைக் கொன்றான் வாலி. அந்தச் சடலத்தைத் தூக்கி எறிந்தான். சில இரத்தத் துளிகள் ரிஷ்யமுகத்தில் வாழ்ந்த மதங்க மஹரிஷி மேல் விழுந்தன. 'இதற்குக் காரணமானவன் இங்கு வந்தால் இறப்பான்’ என்று சாபம் இட்டார். எனவே, வாலி வரமுடியாத ரிஷ்யமுகத்தில் சுக்ரீவன் வாழ்ந்திருந்தான்.
 ஹனுமான்
தாய் : அஞ்சனா தேவி, தந்தை : வாயு.
சுக்ரீவனின் மந்திரி ஹனுமான்.
ஹனுமானை சிவனின் வடிவமாகச் சொல்வதுண்டு. 'சிவம்’ என்ற சொல்லின் பொருள் : மங்களம்.
ராமாயணத்தில் பல மங்களமான செய்திகளை அனுமான் சொல்வதாகக் கூறப்படுகிறது.
1. ராமனைப் பற்றி சுக்ரீவனிடம் சொல்லி இருவருக்கும் நட்பு உண்டாக்கினான்.
2. சிறையிருந்த சீதைக்கு ராமனைப் பற்றிச் சொன்னான்.
3. 'கண்டேன் சீதையை’ என்று சொல்லி ராமனுக்கு உற்சாகம் அளித்தான்.
4. ராவண சம்ஹாரம், ராமஜெயம் என்ற செய்தியைப் போருக்குப்பின் முதலில் சீதையைக் கண்டு சொன்னான்.
5. ராமன் திரும்பிவரும் செய்தியைக் குகனுக்கும், பரதனுக்கும் சொல்லி, பரதன் (தற்கொலை) அக்கினிப் பிரவேசம் செய்ய இருந்ததைத் தடுத்தான்.
(கணையாழி) ராமனுடைய மோதிரத்தை சீதையிடம் சேர்ப்பித்தான். சீதையின் சூளாமணியை ராமனிடம் சேர்ப்பித்தான்.
ஹனுமான் கடலைத் தாண்டி சீதையைக் கண்டு இலங்கையில் நிகழ்த்திய சாகஸங்களைச் சொல்வது 'சுந்தர காண்டம்’. (சீதை சிறையிருந்த இடம் : அசோக வனம்)
லங்காதேவி : இலங்கையை காவல் காத்து வந்தவன். ஹனுமனால் தாக்கப்பட்டு மறைந்தாள்.
ராவணன் என்னும் சொல்லுக்கு 'அழச் செய்பவன்’ என்பது பொருள்.
அஷன் : அசோகவனத்தில் ஹனுமானால் கொல்லப்பட்ட  ராவணனின் 2ம் மகன்.
இந்திரஜித் : ராவணனின் முதல் மகன். பிரம்மாஸ்திரத்தால் அசோக வனத்தில் ஹனுமானை சிறைப்பிடித்தவன். நாகாஸ்திரத்தால் லட்சுமணனை மயக்கமுறச் செய்தவன். பிரம்மாஸ்திரத்தால் மீண்டும் ராமனையும், லட்சுமணனையும் மயக்கமுற்று கட்டுண்டு விழச் செய்தான். ஜாம்பவான் யோசனைப்படி அனுமான் கொண்டுவந்த சஞ்சீவி மூலிகைகளால் இருவரும் உயிர் பிழைத்தனர். கடைசியில் லட்சுமணன் (இந்திராஸ்திரத்தால்) இந்திரஜித்தைக் கொன்றான்.
அனுமன் கொண்டுவந்த சஞ்சீவி மூலிகைகள்:
1. மிருத்ய சஞ்சீவினி - இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும்.
2. விசல்யசரணீ - காயத்தை ஆற்றும்.
3. சாவர்ண்யகரணீ - உறவினர்களுக்கு மட்டும் உயிர் கொடுக்கும்.
4. சந்தானகரணீ - சிதறடைந்த உடல் உறுப்புகளை ஒன்றாக்கும்.
விபீஷணன் : ராவணனின் கடைசித் தம்பி. தனது நீதிமொழிகளை ராவணன் புறக்கணித்ததால் ராமனோடு சேர்ந்தான். பிறகு இலங்கை அரசனாக முடிசூட்டப்பட்டான்.
கும்பகர்ணன் : ராவணனின் தம்பி. சீதையைத் திரும்ப ராமனிடம் ஒப்படைக்க அறிவுறுத்தினான். ராவணன் மறுத்தாலும் அண்ணனுக்காகப் போர்புரிந்து ராமனால் கொல்லப்பட்டான்.
5 மாதங்கள் தொடர்ந்து உறங்கி 1 மாதம் மட்டும் விழித்திருக்கும் சாபத்தை பிரம்ம தேவனால் பெற்றான்.
கும்பன், நிகும்பன் : கும்பகர்ணனின் மகன்கள்.
ஆதித்ய ஹ்ருதயம் : அகஸ்தியர் என்ற முனிவரால் ராமனுக்குப் போர்க்களத்தில் வைத்து உபதேசிக்கப்பட்டது.
நந்தி கிராமம் : அயோத்திக்கு பக்கத்தில் உள்ளது. ராமனின் பிரதிநிதியாக பரதன் 14 வருடம் நந்தி கிராமத்தில் இருந்து ஆட்சி செலுத்தினான்.
முதல் அரசர் : சந்தனு
சந்தனுவுக்கும் கங்கைக்கும் பிறந்தவர் பீஷ்மர். பீஷ்மரின் இயற்பெயர் தேவவிரதன். 'பீஷ்மர்’ என்ற சொல்லின் பொருள், 'செயற்கரிய செயலைச் செய்பவர்’.
பெயர்க் காரணம் : தந்தைக்காக ஆயுள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருக்க விரதம் பூண்டவர். குலத் தலைவர்.
சந்தனுவின் 2ம் மனைவி : சத்தியவதி.
2 மகன்கள் : சித்திராங்கதன் - விசித்திரவீர்யன்.
அம்பாலிகையின் வேலைக்காரிக்குப் பிறந்தவன் 'விதுரன்’.
அம்பை: காசிராஜாவின் மகள். 'சால்வன்’ என்ற மன்னனைக் காதலித்தவள். சுயம்வரத்தில் பீஷ்மரால் தன் சகோதரிகள் அம்பிகை, அம்பாலிகையுடன் ஹஸ்தினாபுரம் கொண்டு செல்லப்பட்டவள் பிறகு பீஷ்மரும் சால்வனும் நிராகரித்ததால் தற்கொலை செய்து அடுத்த பிறவியில் சிகண்டியாகப் பிறந்து பீஷ்மர் இறப்புக்குக் காரணமானவள்.
திருதராஷ்டிரன் : பிறவிக் குருடன். மனைவி காந்தாரி. (காந்தாரியின் தம்பி சகுனி) தன் கண்களைக் கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு வாழ்ந்தாள். கௌரவர்களின் தாய்.
பாண்டுவுக்கு 2 மனைவிகள்.
1) குந்தி 2) மாத்ரி
குந்திக்கு திருமணத்துக்கு முன் 'சூரியன்’ மூலம் பிறந்தவன் கர்ணன். ஆற்றில் விடப்பட்டு தேரோட்டியால் வளர்க்கப்பட்டான் கர்ணன். பிறகு துரியோதனனால் அங்கதேச ராஜா ஆக்கப்பட்டவன். கர்ணன் தானம் செய்வதில் நிகரற்றவன்.
துரோணரிடம் மாணவர்களாகச் சேரும்முன் கௌரவர்கள், பாண்டவர்களுக்கு குருவாக இருந்தவர்: 'கிருபாச்சாரியார்’
பாண்டு மனைவியைத் தீண்ட முடியாத சாபம் பெற்றான்.
குந்திக்கு எமன் (தர்மதேவன்) மூலம் பிறந்தவன்: தருமன்
'வாயு’ மூலம் பிறந்தவன் : பீமன்
'இந்திரன் ’ மூலம் பிறந்தவன் : அர்ஜுனன்
மாத்ரிக்கு அஸ்வினி தேவர்கள் மூலம் பிறந்தவர்கள்: நகுலன் - சகாதேவன்
பீமனுக்கும், துரியோதனனுக்கும் 'கதை’ (கதாயுதம்) வித்தை கற்றுக் கொடுத்தவர் : 'பலராமன்’ கிருஷ்ணனின் சகோதரன்.
கௌரவர்கள், பாண்டவர்களுக்குக் குரு : துரோணர்
மனைவி : கிருபி, மகன்: அஸ்வத்தாமன். உப பாண்டவர்களைக் (பாண்டவர்களின் மகன்கள்) கொன்றவன்.
பீமன், இடும்பிக்குப் பிறந்தவன் : கடோத்கஜன்
அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் (கிருஷ்ணன் தங்கை) பிறந்தவன் 'அபிமன்யு’. பத்ம வியூகத்தை உடைத்துச் செல்லத் தெரிந்தவன். மீண்டும் வெளியில் வரத் தெரியாததால் கௌரவர்களால் கொல்லப்பட்டான். (13ம் நாள் போர்). அபிமன்யு மரணத்துக்கு முக்கியக் காரணம்: 'ஜயத்ரதன்’. அர்ஜுனன் சிவனிடமிருந்து பெற்ற 'பாசுபதம்’ என்ற அம்பினால் ஜயத்ரதனைக் கொன்றான்.
துருபதன் : பாஞ்சால நாட்டு அரசன். மகன்: திருஷ்டத்யும்னன் (துரோணரை கொன்றவன்), மகள் : பாஞ்சாலி/திரௌபதி
ஜராசந்தன் : மகத தேசத்து அரசன். உடல் இரண்டு துண்டானாலும் மீண்டும் உயிர்பெறும் வரம் பெற்றவன். பீமனால் கொல்லப்பட்டவன்.
சிசுபாலன் : கிருஷ்ணனை அவதூறாகப் பேசியதால் கிருஷ்ணனால் கொல்லப்பட்டவன்.
பாண்டவர்கள் வனவாசம் 12 வருடம், அஞ்ஞாத வாசம் (யாருக்கும் தெரியாமல்) 1 வருடம் வாழ்ந்தனர்.
ஏகலைவன் : துரோணரை மானசீக குருவாக வழிபட்டவன். பின் குருதட்சணையாக வலது கை கட்டை விரலை அளித்தவன்.
யஷப் பிரச்னம்
வனவாசத்தின் போது தர்மனுக்கும் தர்ம தேவதைக்கும் நடந்த உரையாடல்
வனவாசத்தின்போது மாயப் பொய்கை (அ) நச்சுப் பொய்கையை அடைந்த பாண்டவர்கள் தாக மிகுதியால் அசரீரி வாக்கைப் பொருட்படுத்தாமல் நீரை அருந்தி ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர்.
பின் தர்மன், அசரீரியாக ஒலித்த தர்மதேவதையின் கேள்விகளுக்குப் பதில் சொன்னான்.
தம்பிகளில் யாரேனும் ஒருவருக்கு மட்டும் உயிர்தர முடியும் என தர்மதேவதை கேட்டபோது, நகுலனுக்கு உயிர்தர வேண்டினான்.
குந்தியின் மகனாக தான் இருப்பதால், பலம் வாய்ந்த பீமனையோ அல்லது அர்ஜுனனையோ கேட்காமல் சித்தி மாத்ரிக்கும் ஒரு மகன் வேண்டும் என்பதால் நகுலனுக்கு உயிர்தர வேண்டினான்.
பின் தர்ம தேவதை நான்கு தம்பியரையும் மீண்டும் உயிர்பெற வைத்தது.
கீசகன் : அஞ்ஞாதவாசத்தில் பாஞ்சாலியைக் காதலித்து அதனால் பீமனால் கொல்லப்பட்டவன்.
ஆநிரை கவர்தல் : பகைவனைப் போருக்கு அழைக்க, அவனது பசுக்களை ஓட்டிச் சென்று விடுதல்.
தோற்றவர்களின் மேலாடையை எடுத்து வருவது வெற்றிச் சின்னமாகக் கருதப்பட்டது.
விராடனின் மகன் : உத்தரன் (போரில் சல்லியனால் கொல்லப்பட்டான்)
விராடன் மகள் உத்தரை (அர்ஜுனன் மகன் அபிமன்யுவின் மனைவி)
சுசர்மன் : கௌரவர்கள் விராட தேசத்தை வடக்கிலிருந்து தாக்கும் முன் தென் திசையிலிருந்து தாக்கியவன். அர்ஜுனனைத் தவிர பிற பாண்டவர்கள் துணையுடன் வந்த விராட அரசனால் தோற்கடிக்கப்பட்டான். போரில் அர்ஜுனனால் (13ம் நாள் போரில் கொல்லப்பட்டான் (சம்சப்தக யுத்தம்).
அஞ்ஞாத வாசத்தில் ஒரு வருடம் முடியும் முன் பாண்டவர்களில் யாரேனும் ஒருவரைக் கௌரவர்கள் பார்த்து விட்டால் பாண்டவர்கள் மீண்டும் 12 வருடம் வனவாசம் போக வேண்டும் என்று விதி.
கீசகன் மரணத்தால் சந்தேகப்பட்டு கௌரவர்கள் விராடன் நாட்டின் மீது படையெடுத்து, பசுக்களைக் கவர்ந்து சென்றனர்.
பிருகன்நளா (அர்ஜுனன்) விராடன் மகன் உத்தரனுக்குத் தேரோட்டியாக அமர்ந்து சென்றான். பின் தனி ஒருவனாகக் கௌரவ சேனைகளை அர்ஜுனன் தோற்கடித்தான். மீண்டும் பிருகன்நளையாக விராட நாட்டுக்கு வந்தான்.
உபப்பிலாவியம் : அஞ்ஞாதவாசம் முடிந்தபின் பாண்டவர்கள் தங்கியிருந்த இடம். போர் குறித்து மந்திராலோசனை நடந்தது.
சல்லியன் : நகுல, சகாதேவர்களின் தாய் மாத்ரியின் தம்பி. துரியோதனனின் வரவேற்பைத் தர்மனுடையது என நம்பி ஏமாந்தான். அதனால் கௌரவர் பக்கம் போர் புரிந்தான். கர்ணனுக்குத் தேரோட்டியாக இருந்தான்.
போரில் நாகாஸ்திரத்தை அர்ஜுனனின் மார்புக்குக் குறி வைக்கச் சொன்னான். கர்ணன், அர்ஜுனனின் கழுத்துக்குக் குறிவைத்து எய்தான். கண்ணனால் அர்ஜுனன் காப்பாற்றப்பட்டான். சல்லியன் கர்ணனைப் பிரிந்து போய்விட்டான்.
 அர்ஜுனனும் துரியோதனனும் துவாரகைக்கு ஒரே சமயத்தில் போரில் கிருஷ்ணன் உதவியை நாடிச் சென்றனர். அர்ஜுனன் விருப்பப்படி கிருஷ்ணன் மட்டும் பாண்டவர் பக்கம் சேர்ந்தான். கிருஷ்ணனுடைய சேனைகள் கௌரவர் பக்கம் சேர்ந்தன.
கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் பீமன், துரியோதனன் இருவருக்கும் குரு. (கதை யுத்தம் கற்றுக் கொடுத்தவர்). அதனால் போரில் கலந்து கொள்ளவில்லை.
சஞ்சயன் : திருதராஷ்டிரனுக்கு உதவியாளன். கௌரவர்களுக்காகத் தூது போனவர்.
பாண்டவர்களுக்காக கிருஷ்ணன் தூது போனார். 'ஊசி முனை அளவு நிலமும் இல்லை’ என துரியோதனன் சொன்னான்.
 போருக்கு முன் குந்திதேவி கர்ணனிடம் சென்று அவன் தனது மகன், தேரோட்டி மகனல்ல என்ற உண்மையைச் சொல்லி பாண்டவர் பக்கம் சேரச் சொன்னாள். கர்ணன் மறுக்கவே 2 வரங்கள் கேட்டாள்.
1) அர்ஜுனன் மேல் நாகாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேல் விடக் கூடாது.
2) அர்ஜுனனைத் தவிர மற்ற 4 பாண்டவர்களைக் கொல்லக் கூடாது.
திருஷ்டத்யும்னன் : பாஞ்சாலியின் அண்ணன். போரில் பாண்டவ சேனைக்கு தளபதி. துரோணரைக் கொன்றவன்.
மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது.
கௌரவ சேனாதிபதிகள் : முதல் 10 நாட்கள் - பீஷ்மர், பின் துராணர், பின் கர்ணன், பின் சல்லியன்.
பீஷ்மர் மீதுள்ள கோபத்தால் கர்ணன் பீஷ்மர் வீழும் வரையில் போரில் கலந்து கொள்ளவில்லை.
பகவத் கீதை
18 அத்தியாயங்கள் கொண்டது. உறவினரைக் கொல்லப் பயந்த அர்ஜுனனுக்குக் கண்ணனால் உபதேசிக்கப்பட்டது.
கீதாசாரம் : 1) எந்த எந்தச் சமயத்தில் எந்த எந்த கடமை ஏற்படுகிறதோ அதை சரிவரச் செய்ய வேண்டும்.
2) அந்த பலனை ஆண்டவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
புகழ்பெற்ற சுலோகம் : பூமியில் எப்போதெல்லாம் தர்மம் அழிந்து, அதர்மம் மேலோங்கும் போது தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காக்க கண்ணன் மீண்டும் மீண்டும் பிறப்பான்.
பகதத்தன் : 12ம் நாள் போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான். போர் யானைகளை வழிநடத்தி எதிரிகளைத் தாக்குவதில் ஒப்பற்றவன்.
சுப்ரதீகம் - பகதத்தனுடைய பட்டத்து யானை. (ஐராவதம் - இந்திரனுடைய யானை)
சகுனியின் சகோதரர்கள் விருஷன், அசலன். இருவரும் அர்ஜுனனால் கொல்லப்பட்டனர்.
கடோத்கஜன் : பீமனுக்கும் இடும்பி என்ற அரக்கிக்கும் பிறந்தவன். கர்ணனால் கொல்லப்பட்டான்.
சகுனி, சகாதேவனால் கொல்லப்பட்டான்.
கர்ணனின் முடிவுக்குக்
காரணங்கள்
1. தேவேந்திரன் கர்ணனது கவச குண்டலங்களை தானமாகப் பெற்றான்.
2. பரசுராமர் சாபம்
3. பிராமணரின் சாபம்
4. குந்தியின் வேண்டுகோள்
5. சல்லியனின் இகழ்ச்சி
6. கிருஷ்ணனின் தூண்டுதல்
7. கிருஷ்ணனின் யாசகம்
1. பிறக்கும்போது கவச குண்டலங்களுடன் பிறந்தவன் கர்ணன். தேவேந்திரன் அருளால் பிறந்தவன் அர்ஜுனன். அர்ஜுனனின் வெற்றிக்கு உதவ, தேவேந்திரன் அந்தணர் வேடமிட்டு வந்து கர்ணனின் வள்ளல் தன்மையைப் பயன்படுத்தி கவச குண்டலங்களை அபகரித்தான்.
2. பரசுராமரிடம் தான் ஒரு பிராமணன் எனப் பொய் சொல்லி, சீடனாகி வில் வித்தை கற்றான். க்ஷத்திரியர்களை 21 தலைமுறைகளாக அழிப்பதற்காக விரதம் பூண்டவர் பரசுராமர். கர்ணன் மடியில் படுத்திருந்த போது வண்டு துளைப்பதை பொறுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து கர்ணன் க்ஷத்திரியன் என்பதைக் கண்டுபிடித்தார். கற்ற வித்தைகள் தக்க சமயத்தில் பயனற்றுப் போக சாபம் அளித்தார்.
3. பிராமணரின் பசுவைத் தவறுதலாக அம்பு எய்து கர்ணன் கொன்றான். பசுவைப் போல அதர்ம முறையில் கொல்லப்படுவாய் என சாபமிட்டார்.
4. குந்தியின் வேண்டுகோள்: 1. நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. 2. அர்ஜுனனைத் தவிர பிற பாண்டவர்களைத் தாக்கக் கூடாது என்று குந்திக்குத் தந்த வாக்குறுதியைக் கடைசிவரை கர்ணன் காப்பாற்றினான்.
5. சல்லியனின் இகழ்ச்சி: அர்ஜுனனுன் நடந்த இறுதிப் போரின் போது தேரோட்டியான சல்லியன், பாண்டவர்களது பெருமையைப் பேசி, கர்ணனை மிகவும் இழிவுபடுத்தி பேசிக் கொண்டே இருந்தான்.
நாகாஸ்திரத்தை அர்ஜுனனின் மார்புக்குக் குறிவைத்து ஏவுமாறு சல்லியன் சொன்னான். கர்ணன் கழுத்திற்குக் குறிவைத்து எய்தான். கண்ணன் தேரை பூமிக்குள் அழுத்தவே அர்ஜுனனின் கிரீடம் மட்டும் விழுந்தது. சல்லியன் அகன்றான்.
6. தேர்ச்சக்கரம் பூமியில் சிக்கிக் கொண்டபோது, கர்ணன் அதை எடுக்க முயன்றபோது கிருஷ்ணனது தூண்டுதலால் அர்ஜுனன் அம்பு எய்து தாக்கினான்.
7. கடைசியில் தன் உயிரைக் காத்த தர்மத்தையும், பிராமணனாக வந்த கிருஷ்ணனிடம் தானமாகத் தந்து மாண்டான்.
துரியோதனன் மரணம்
பீமனுக்கும் துரியோதனனுக்கும் 'கதாயுத’ சண்டை நடந்தது. இருவருமே பலராமனின் மாணவர்கள். சமமான திறமை படைத்தவர்கள் என்பதால் நெடுநேரம் சண்டை நீடித்தது.
கிருஷ்ணனுடைய தூண்டுதலால் பீமன் யுத்த விதிகளை மீறினான். நாபிக்குக் கீழே தாக்கக் கூடாது என விதியை மீறி துரியோதனனின் தொடை எலும்புகளை நொறுக்கி, போரில் வென்றான்.
அத்துடன் போர் முடிந்தது.
ஆனால் அஸ்வத்தாமன் (துரோணர் மகன்) தன் தந்தையைக் கொன்ற பாஞ்சாலியின் அண்ணன் திருஷ்டத்யும்னனைத் தூங்கும் போது கொன்றான்.
உபபாண்டவர்கள் (திரௌபதியின் 5 மகன்கள்) அஸ்வத்தாமனால் தூங்கும்போது கொல்லப்பட்டனர். பாசறைக்குத் தீ வைத்துவிட்டு அஸ்வத்தாமன் வியாசரிடம் அடைக்கலம் சேர்ந்தான்.
கொல்ல வந்த பாண்டவர்களிடம் தனது ஜோதிமணி கிரீடத்தைக் கொடுத்துவிட்டு தோல்வியை ஒப்புக் கொண்டு வனம் சென்றான்.
திருதராஷ்டிரனும், காந்தாரியும் மற்ற பாண்டவர்களை மன்னித்தாலும் பீமனை மட்டும் மன்னிக்கவில்லை. கௌரவர்கள் 100 பேரையும் கொன்றவன் பீமன்.
கௌரவர்களின் தவறுகள்
மகாபாரதப் போரில் தான் செய்த தவறுகளுக்கான காரணமாக கௌரவர்களின் தவறுகளை பட்டியல் இட்டு கண்ணன் கூறுகிறான்.
1. வறண்ட நிலமான இந்திரப் பிரஸ்தத்தை பாண்டவர்களுக்குக் கொடுத்தது.
2. அரக்கு மாளிகையில் தீ வைத்து பாண்டவர்களைக் கொல்ல முயன்றது.
3. சூதாட்டத்தில் வென்றது.
4. பாஞ்சாலியை அவமானப்படுத்தியது.
5.வனவாசம் முடிந்து திரும்பிய பாண்டவர்களுக்கு ஊசிமுனை நிலம் கூட தர மறுத்தது.
6. போரில் ஆயுதமின்றி நின்ற அபிமன்யுவைக் கொன்றது.
கண்ணனின் மாற்று வழிகள்
தீயவர்களை அழிக்க தர்மத்திலிருந்து சிறிது விலகுவது தவறல்ல என்பது கண்ணன் கொள்கை.
1. சிகண்டியை முன் நிறுத்தி பீஷ்மரை வலுவிழக்கச் செய்தான்.
2. அஸ்வத்தாமன் என்ற யானையை பீமன் கொன்றதைத் துரோணர் தம் மகன் இறந்ததாக நம்ப வைத்தான்.
3. ஜயத்ரதனைக் கொல்ல, சூரியன் மறையும் முன் மாய இருளை உருவாக்கினான்.
4. கௌரவர்கள் பக்கம் போர் புரிந்த 'பூரிசிரவசு’ என்பவன் கைகள் வெட்டப்பட்டது (அர்ஜுனனால்). அப்போது தன் உறவினனான சாத்யகியை பூரிசிரவஸைக் கொல்ல வைத்தான்.
5. அர்ஜுனனை நாகாஸ்திரத்தாலும், சக்தியாஸ்திரத்தாலும் கொல்லப்படாமல் காப்பாற்றினான்.
6. கர்ணனின் தர்மங்களைத் தானமாகப் பெற்றான். கர்ணனிடம் வரம் கேட்க, குந்தியைத் தூண்டியதும் கிருஷ்ணனே.
பாண்டவர்களின் வாரிசு (பேரன்)
 பரீட்ஷித்து (அபிமன்யு, உத்தரைக்குப் பிறந்தவன்)
 கிருஷ்ணனின் மகன் 'பிரத்யும்னன்’.
பூத உடலுடன் தர்மனை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல இந்திரன் வந்தான். அப்போது தன்கூட வந்த நாயும் சொர்க்கத்துக்கு வரவேண்டும் என நிர்ப்பந்தித்தான். இந்திரன் அதை நிராகரிக்கவே தான் மட்டும் சொர்க்கத்துக்கு வர மறுத்தான் தர்மன். நாயாக வந்த தர்ம தேவதை தர்மனை ஆசீர்வதித்து மறைந்தது.
 மகாபாரதம் 18 என்ற எண்ணுடன் தொடர்புள்ளது.
1. போர் 18 நாட்கள் நடந்தது.
2. கீதை 18 அத்தியாயங்கள் கொண்டது. (11+7 = 18).
3. கௌரவர்கள் பக்கம் 11 அக்ரோணி (ஞிவீஸ்வீsவீஷீஸீ), பாண்டவர்கள் பக்கம் 7 அக்ரோணி சேனைகள் போரில் பங்கேற்றன.
4. மகாபாரதம் 18 பருவங்களைக் கொண்டது. (ஆதி பர்வம் முதல் சுவர்க்க ஆரோஹணிக பர்வம் முடிய.)
மகாபாரத யுத்தம்
- முக்கிய நிகழ்வுகள்
முதல் நாள் : பாண்டவர் பக்கம் போராடிய விராட மன்னன் மகன் 'உத்தரன்’ என்பவன் சல்லியனால் கொல்லப்பட்டான். உத்தரன் தம்பி 'சுவேதன்’ பீஷ்மரால் கொல்லப்பட்டான்.
4ம் நாள் : பீமன் கௌரவர்கள் 8 பேரைக் கொன்றான்.
5ம் நாள் : பாண்டவர் பக்கம் போரிட்ட 'சாத்யகி’ (கிருஷ்ணனின் பங்காளி)யின் 10 மகன்கள் 'பூரிசிரவஸ’ என்பவனால் கொல்லப்பட்டனர்.
7ம் நாள் : விராடனின் 3ம் மகன் சங்கன் துரோணரால் கொல்லப்பட்டான்.
8ம் நாள் : பீமன் கௌரவர்கள் மேலும் 16 பேரைக் கொன்றான் (இதுவரை 24 பேர்). அர்ஜுனன் மகன் 'இராவான்’ (நாககன்னிக்குப் பிறந்தவன்) 'அலம்பசன்’ என்பவனால் கொல்லப்பட்டான்.
10ம் நாள் : சிகண்டியை முன் நிறுத்தி, அர்ஜுனன் பீஷ்மரை அம்புப் படுக்கையில் வீழ்த்தினான். தன் தந்தையிடமிருந்து கற்ற மிருத்யுஞ்சய மந்திரத்தால் மரணத்தை உத்தராயண காலம் வரை பீஷ்மர் ஒத்தி வைத்தார்.
போர் முடிந்த பின்னர் தர்மனுக்கு  அம்புப் படுக்கையிலிருந்து பீஷ்மர் உபதேசித்தவை 'சாந்தி பர்வம்’ (அ) 'அனுசாஸன பர்வம்’ என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மோட்ச தர்மத்தைப் பற்றியது.
11ம் நாள் : பீஷ்மருக்குப் பின் துரோணர் கௌரவ சேனாதிபதியானார். தர்மனை உயிருடன் பிடிக்க வேண்டும் என்று துரியோதனன் சொன்னான். துரோணர் இசைந்தார். ஆனால் அர்ஜுனன் துரோணர் முயற்சியைத் தடுத்து விட்டான்.
12ம் நாள் : சமசப்தக விரதம் பூண்ட திரிகர்த்த நாட்டு மன்னன் சுசர்மன் மற்றும் அவனது 4 சகோதரர்கள் அர்ஜுனனை அறைகூவி தனியே போருக்கு அழைத்துச் சென்றனர்.
'பகதத்தன்’ சுப்ரதீகம் என்ற தன் யானை மீதேறிப் பாண்டவர் படையை நாசம் செய்தான். பீமன் உள்ளிட்ட பாண்டவர்கள் அனைவரும் தோற்ற நிலையில் மீண்டும் அர்ஜுனன் வந்து பகதத்தனை வென்றான்.
13ம் நாள் : சமசப்தக விரதம் பூண்ட சுசர்மன் உள்ளிட்ட திரிகர்த்தர்கள் போருக்கு அர்ஜுனனை அறைகூவி வெகுதூரம் தென்திசையில் அழைத்துச் சென்று விட்டனர்.
துரோணர் கௌரவப் படைகளை 'பத்ம வியூகத்தில்’ (தாமரை வடிவம்) அமைத்தார். அதை உடைக்கத் தெரிந்தவன் அர்ஜுனனக்கும், கிருஷ்ணன் தங்கை சுபத்திரைக்கும் பிறந்த அபிமன்யு மட்டுமே. ஆனால் அபிமன்யுவிற்கு பத்ம வியூகத்தின் உள்ளே சென்றபின் மீண்டும் வெளியேவரத் தெரியாது.
இருந்தாலும் அவன் உள்ளே சென்றதும் பிற அரசர்கள் அவனைத் தொடர்ந்து வந்து வியூகத்தை உடைப்பர் என்று தர்மன் சொன்னதால் அபிமன்யு முன்னேறிச் சென்று பத்மவியூகத்தை உடைத்தான். ஆனால் அவனைத் தொடர்ந்து யாரும் பத்மவியூகத்தின் உள்ளே செல்லாதபடி 'ஜயத்ரதன்’ என்பவன் தடுத்து விட்டான்.
அபிமன்யு மட்டும் தனியே பத்மவியூகத்தில் மாட்டிக் கொண்டாலும் பலரைக் கொன்று விட்டான்.
கர்ணன், துரோணர் உள்ளிட்ட 6 பேர் அபிமன்யுவைப் பின்புறமாகத் தாக்கிக் கொன்றனர்.
சம்சப்தகர்களை கொன்று திரும்பிய அர்ஜுனன் தன் மகன் கொல்லப்பட முக்கியக் காரணமான ஜயத்ரதனை மறுநாள் கொல்வேன் அல்லது தான் சாவேன் என சபதம் எடுத்தான்.
14ம் நாள் : ஜயத்ரதனைக் காத்து நின்ற எல்லோரையும் அர்ஜுனன் தோற்கடித்தான். இருந்தாலும் சூரியன் மறையும் நேரம் நெருங்கியதால் கிருஷ்ணன் மாய இருளை உண்டாக்கினான். ஜயத்ரதன் மகிழ்ந்திருந்த சமயம் அர்ஜுனன் சிவனிடமிருந்து பெற்ற பாசுபத அஸ்திரம் மூலம் ஜயத்ரதனின் தலையைக் கொய்து அவன் தந்தை 'விருத்தாஷத்திரன்’ மடியில் விழச் செய்தான். அதை அவன் கீழே இடறியதால் முன்பு பெற்ற வரத்தின்படி விருத்தாஷத்திரனும் இறந்தான். (தன் மகன் ஜயத்ரதனுடைய தலையை யார் கீழேவிழச் செய்கிறானோ அவன் தலை வெடித்து இறக்க வேண்டும் என்று விருத்தாஷத்திரன் வரம் வாங்கியிருந்தான்)
14ம் நாளில் சாத்யகி, பூரிசிரவஸைக் கொன்றான். 14ம் நாள் இரவிலும் யுத்தம் தொடர்ந்தது. பீமன் மகன் கடோத்கஜனை கர்ணன் கொன்றான். பீமன் கௌரவர்களில் துரியோதனன், துசசாதனனைத் தவிர மற்ற அனைவரையும் கொன்றான்.
15ம் நாள் : துரோணரை யாருமே வெல்ல முடியாததால் அவரது மகன் அஸ்வத்தாமன் மீதிருந்த பாசத்தினால் அவரை வெல்ல முடிவு செய்தான் கண்ணன்.
பீமன் அஸ்வத்தாமன் என்ற யானையைக் கொன்று விட்டான். பிறகு அஸ்வத்தாமன் இறந்தான் என்று கூவினான். கலங்கிய துரோணர், தர்மனிடம் கேட்டபோது தர்மனும் அதை ஆமோதித்தான்.
''பீமன் அஸ்வத்தாமன் என்ற யானையைக் கொன்றான்'' என்கிற செய்தியில் 'என்ற யானையை’ என்பதை மெதுவாக தர்மன் சொன்னான். (அதேசமயம் கண்ணன் சங்கொலி செய்து 'என்ற யானை’ எனப்படும் வார்த்தை துரோணருக்குக் கேட்காமல் செய்தான்.)
யுத்தகளத்தில் யோகத்தில் இருந்த துரோணரை பாஞ்சாலியின் அண்ணன் திருஷ்டத்யும்னன் தலையை வெட்டிக் கொன்றான்.
16ம் நாள் : கடோத்கஜன் ஏற்படுத்திய பேரழிவினால் வேறு வழியின்றி அர்ஜுனனைக் கொல்ல வைத்திருந்த 'சக்தி’ என்ற ஆயுதத்தை கர்ணன், கடோத்கஜன் மீது ஏவி அவனைக் கொன்றான்.
17ம் நாள் : பீமன், துச்சாதனனைக் கொன்றான். அர்ஜுனன், கர்ணனைக் கொன்றான்.
18ம் நாள் : சல்லியன் கௌரவ சேனாதிபதியானான். சல்லியனை தர்மன் கொன்றான். நகுலன் சகுனியின் மாமன் உலூகனைக் கொன்றான். சகாதேவன் சகுனியைக் கொன்றான்.
யுத்த நிகழ்வுகளை திருதராஷ்டிரனுக்குச் சொன்னான் சஞ்சயன்.
மகாபாரதப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட விரதங்கள்/கோட்பாடுகள்
1. அர்ஜுனனைத் தவிர பிற பாண்டவர்களைக் கொல்ல மாட்டேன் என கர்ணன் முடிவெடுத்தான்.
2. பாண்டவர் யாரையும் கொல்வதில்லை என பீஷ்மர் முடிவெடுத்தார்.
3. ஆயுதம் எடுப்பதில்லை என கிருஷ்ணன் முடிவெடுத்தான்.
4. பீமன் கௌவர்கள் அனைரையும் தானே கொல்வதாகச் சபதம் செய்தான்.
5. துச்சாதனனின் இரத்தத்தைத் தோய்த்தாலன்றி கூந்தலை முடிவதில்லை என்பது பாஞ்சாலியின் சபதம்.
யுத்தம் முடிந்தபின் உயிரோடு இருந்தவர்கள்:
பாண்டவர்கள் : 5, கிருஷ்ணன், சாத்யகி = 7 பேர்.
கௌரவர்கள் பக்கம் 3 பேர்: அஸ்வத் தாமன், கிருபாச்சாரியார் (துரோணரின் மைத்துனர்), கிருதவர்மன்.

No comments:

Post a Comment