Saturday 25 January 2014

மெய்ப்பாட்டு நுண்ணறிவு-ஓர் அறிமுகம்

மெய்ப்பாட்டு நுண்ணறிவு-ஓர் அறிமுகம்
Posted Date : 14:12 (17/12/2013)Last updated : 15:12 (17/12/2013)
உமா மகேஷ்வரி ராமச்சந்திரன்
மனித இனம் பரிணாம வளர்ச்சியடைந்து, இவ்வுலகையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு பரந்து விரிந்து வளர்ந்து வாழ்வதற்கு அறிவு மட்டுமே காரணமில்லை. உறவுகளையும் அவற்றின் உணர்வுகளையும் உணர்ந்தறிந்து அதற்கேற்ப செயல்பட்டதே மனித சமூகத்தின் மகத்தான வெற்றிக்கான காரணமாகும்.
இன்றைய அதிவேக யுகத்தில் வாழ்க்கை என்பது ஒருவரையருவர் முந்த வேண்டும் என்ற குதிரைப்பந்தயமாக மாறிவிட்டது. வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஓடும் இப்பந்தயத்தின் முடிவில் வெற்றியே பெற்றாலும் கூட நாம் எதையோ இழந்தது போன்ற வெறுமை கொண்டு தவித்துப் புலம்புகிறோம். ஏன் இந்த நிலை? நாம் நமது மனித உணர்வுகளை மறந்து அல்லது மறைத்து, கிட்டத்தட்ட இயந்திரங்களாக மாறியதால்தானே?
மனிதன் ஒரு சமூக விலங்கு. கூட்டம் கூட்டமாக வாழ்ந்தே பழகிய மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்தவே ஒலிகளை எழுப்பி மொழியை உருவாக்கினான். ஆனால் இன்றோ, நம் உணர்வுகளை வெளிக்காட்டும் அறிவின்றி, கண்டபடி வெளிக்காட்டி மனித உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுத்தி அல்லல்படுகிறோம்.
உணர்வுகளை (emotions) வெளிப்படுத்தும் போது நமது உடலில், அதாவது மெய்யில் மாற்றங்கள் ஏற்படுவதால் இதனை மெய்ப்பாடு என்பார் தொல்காப்பியர். ஒருவேளை உள்ளத்தின் உண்மையான அதாவது மெய்யான வெளிப்பாடு ஆகையால் மெய்ப்பாடு எனவும் அவர் பெயரிட்டிருக்கலாம்.
இவ்வாறு வரும் மெய்ப்பாட்டினை இடம் பொருள் அறிந்து ஒரு கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்துவதே 'மெய்ப்பாட்டு நுண்ணறிவு’ (Emotional Intelligence).
மெய்ப்பாட்டு நுண்ணறிவு என்பது மெய்ப்பாடுகளை வெளிக்காட்டாமல் இருத்தல் இல்லை; வெளிக்காட்டாமலே இருந்தால் மன அழுத்தம் உண்டாகி விடும். ஒரு குழந்தையைப் பாருங்கள் அது எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அழுகை வந்தால் அழுது விடுகிறது; சிரிப்பு வந்தால் சிரித்து விடுகிறது. இவ்வாறு உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்திவிடுவதால் குழந்தைக்கு வருத்தப்படவோ, கவலைகொள்ளவோ அவசியமே ஏற்படுவதில்லை. என்ன, நாம் குழந்தைபோல இல்லாமல், கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் வெளிக்காட்டினால்தான் உள்ள உறவுகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். மெய்ப்பாடுகளை வெளிப்படுத்துகையில் கொஞ்சம் அறிவைப் பயன்படுத்தினால், மெய்ப்பாட்டு நுண்ணறிவுடையவர் என்ற தகுதியை அடையலாம்.
ஒரே கல்வித் தகுதியுடைய ஒரே நிறுவனத்தில் பணிபுரியக் கூடிய இரு நபர்களைக் கருத்தில் கொண்டோமேயானால், அவ்விருவரும் ஒரே மாதிரியான வெற்றிகளைப் பெற்று நிறைவடைவதில்லை எனக் காண்கிறோம். இந்த ஒற்றுமையில் வேற்றுமைக்கு என்ன காரணம் என ஆராய்ந்தால் மெய்ப்பாட்டு நுண்ணறிவுதான் என அறியலாம். சொல்லப்போனால், அறிவுக்கூர்மையை விட மெய்ப்பாட்டு நுண்ணறிவு உள்ளவரே வெற்றிகரமான, இனிமையான வாழ்க்கையை வாழ்கிறார். வெறும் இயக்கமும் இருப்பும் வாழ்க்கையல்ல வாழ்க்கையை வாழ்வது தான் வாழ்க்கை என்று உணர்ந்தாலே மெய்ப்பாட்டு நுண்ணறிவு நம் வசப்பட்டுவிடும்.
மெய்ப்பாட்டு நுண்ணறிவு என்பது
1. நாமும் பிறரும் எப்படி உணர்கிறோம் என்பதறிதல் மற்றும் அந்த உணர்வுகள் குறித்து என்ன செய்யப்போகிறோம், இவ்வுணர்களுக்கு என்ன எதிர்வினையாற்றப் போகிறோம் என்ற அறிவு
2. எதை நிறையாக உணர்கிறோம், எதை குறையாக உணர்கிறோம் என்பதறிந்து, குறையிலிருந்து நிறைக்கு எவ்வாறு நகர வேண்டுமென அறிந்து தெளிதல்.
சுருங்கக்கூறின் மெய்ப்பாட்டு நுண்ணறிவு என்பது,
அ. உணர்வுகளைக் கூர்ந்து கவனித்தல்
ஆ. உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல்
இ. உணர்வுகளைக் கையாளுதல்
ஈ. உணர்வுகளைப் பயன்படுத்துதல்
இங்கு, உணர்வுகள் என்பது, நமது உணர்வுகள் மட்டுமன்றி பிறரின் உணர்வுகளையும் உள்ளடக்கியதேயாகும்.
 மெய்ப்பாட்டு நுண்ணறிவின் முக்கியம்சங்கள்
1. சுயமறிதல்-நீ உன்னை   அறிந்தால் (Self awareness)....
நாம் யார், நமது தேவையென்ன, நமது உணர்வுகள் அவற்றால் விளையும் செயல்கள் என்ன போன்றவற்றை பற்றிய அறிவுடன் திகழவேண்டும்.
கோபமோ, வெறுப்போ எவர்மீதும் திடீரெனப் பொங்கிவிடுவதில்லை. ப்ரஷர் குக்கரில் அழுத்தம் போல சூடு ஏற ஏற, கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வரும். ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தால் கூட வெடித்துச் சிதறிவிடும். இந்த வெடிப்பு மீள முடியாத சேதாரத்தை ஏற்படுத்திவிடும். கோபம், வெறுப்பு போன்ற உணர்வு வரத்தொடங்கும் போதே நம்மையும், நமக்கும் பிறருக்கும் உண்டான உறவையும் காத்துக் கொள்ளும் முகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டோமானால், அதுதான் மெய்ப்பாட்டு நுண்ணறிவு. நம் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்து கொள்ளுதலே சுயமறிதல்.
நமது பலம் என்ன, பலவீனம் என்ன, எதைச் செய்ய இயலும், எதை செய்ய இயலாது என்பவற்றை சுயமதிப்பீடு செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
2. சுய ஒழுக்கம்
உணர்வுகளை ஒழுங்குபடுத்தி உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்காமல் இருத்தலே சுய ஒழுங்குபடுத்துதல் ஆகும். எண்ண ஓட்டத்தின் விளைவாகத்தான் ஒவ்வொரு செயலும் நடைபெறும். எனவே எண்ண ஓட்டத்தினை ஒழுங்குபடுத்தினால் செயல்களிலும் ஒழுங்கு ஏற்படும்.
உணர்ச்சி வேகத்தில் உடன் பிறந்தவரையோ, பெற்ற தாய் தகப்பனையோ, மனைவியையோ, கணவனையோ கொலை செய்தவர்கள் பற்றி பலமுறை கேள்விப்பட்டிருக்கி றோம். ஏன் டீக்கடையில் சில்லறை தராததற்கெல்லாம் தகராறு முற்றி கொலை வரை போயுள்ளதை அறிவோம். இதற்கெல்லாம் காரணம் இவர்கள் சிந்தனைத் திறனை தூர வீசிவிட்டு, உணர்ச்சிப் பெருக்கிற்கு ஆட்பட்டு செயல்பட்டதே ஆகும். அவ்வாறு செயல்படும் முன்னர் ஒரு நொடியேனும் 'நாம் என்ன செய்கிறோம்? ஏன் செய்கிறோம்’ என மனதை ஒழுங்குபடுத்தி செயல்பட்டால் இவ்வாறான துர் விளைவுகள் ஏற்படாது. இவர்களின் செயல்கள் இவர்களை மட்டுமன்றி இவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
3. உன்னைப்போல் ஒருவன் (Empathy)
மெய்ப்பாட்டு நுண்ணறிவுடையவர்கள் தன் உணர்வுகளைக் கையாளுதலைப் போன்றே பிறர் மனநிலையையும் உணர்வுகளையும் அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்படுவர். இதைத்தான் வள்ளலார் 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேனே’ என்கிறார். வள்ளலாரைப் போன்று பிறர் துன்பங்களைக் கண்டு வாடவில்லையாயினும் பிறர்நிலை உணர்ந்து அறிந்து அதற்கேற்றாற்போல் வழிநடத்துதல் வெற்றியை நோக்கிய நம் பயணத்தை எளிதாக்கும்.
மற்றவரின் உணர்வறிந்து அதற்கேற்ப செயல்படுபவர்கள் வெற்றி பெறுவர். எதை, எப்போது பேச வேண்டும், எதைப் பேசாது தவிர்க்க வேண்டும் போன்ற முடிவுகளை நாம் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டால் தான் எடுக்க முடியும்.
4. சமூகமாகச் செயல்படும் திறன் (Social Skill)
சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்தீவாக செயல்பட இயலாது. எனவே பிறரோடு தொடர்பு கொள்ளுதல், பிரச்சனைகளுக்கும் பிணக்குகளுக்கும் தீர்வு காணுதல் சமூகமாக வளர்தல் போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதே இத்திறன்.
இந்தத் திறமை இல்லையென்றால் எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டு, வாழ்க்கையை இடியாப்பச் சிக்கலாக்கிக் கொண்டு அல்லல்படத்தான் வேண்டும். இணைந்து பணியாற்றினால் பல்வேறு சிறந்த சிந்தனைகளின் சங்கமம் ஏற்பட்டு அற்புதமான முடிவுகள் கிடைக்கும்.
5. உன்னால் முடியும்
ஊக்கத்துடன் செயல்பட்டால் செய்யும் ஒவ்வொரு காரியமும் வெற்றியில் மிளிரும். சோர்ந்து, சோம்பிக் கிடந்தால் நம்மீது நமக்கே ஒரு வித கோபமும் வெறுப்பும் தோன்றி அந்த வெறுப்பு நம்மீதான அதிருப்தியாக மாறிவிடும். அதுவே மெல்ல மெல்ல எல்லோர் மீதான அதிருப்தியாக மாறி, எதிர்மறையாளராக்கிவிடும். எதிலும் குற்றத்தை மட்டுமே பார்க்கத் தொடங்கிவிடுவர். இது நம்மீது பிறருக்கு அதிருப்தியை உண்டுபண்ணி விடும்.
ஆனால் மெய்ப்பாட்டு நுண்ணறிவுடையோர் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளி, அசைவிலா ஊக்கத்துடன் செயல்படுவர். சவால்களை விருப்பத்துடன் எதிர்கொண்டு, தடைகளை இன்முகத்துடன் தகர்ந்தெறிந்து முன்னேறிச்செல்ல ஊக்கம் அவர்களுக்கு உறுதணை செய்யும்.
 நிர்வாகத்தில் மெய்ப்பாட்டு நுண்ணறிவின் பயன்பாடுகள்
மெய்ப்பாட்டு நுண்ணிறிவில் சிறந்தவர்கள் பின்வரும் குணங்களில் தங்களின் தனி முத்திரையைப் பதித்து விடுவார்கள்.
மனப்பான்மை (Attitude)
நமது மனப்பான்மை என்பது நமது எண்ணங்கள், நம்பிக்கைகள், உணர்ச்சிகள், போன்றவற்றைக் கொண்டவையும், நமது நடத்தையாகும். நாம் சுவாமி விவேகானந்தர் 'தனித்திரு, விழித்திரு’ என்றதற்கேற்ப, தனித்தன்மையுடன் இருந்து நமது உணர்வுகளை வெளிப்படுத்துகையில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நாம் நாமாக இருக்க வேண்டும். பிறருடன் நம்மை நாம் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கும் கணத்திலிருந்தே நமது சுயத்தையும் தனித்தன்மையையும் இழந்து சமூகக் கடலில் தொலைந்து போகிறோம்.
ஒப்பிட்டுப் பார்ப்பதால் நாமே அடையாளந் தொலைந்து காணாமல் போகிறோமென்றால் அந்த ஒப்பீடுதான் எதற்கு? ஒப்பீடு வேண்டாமே!!
தன்னையறிந்து, தானாக இருந்து தன்னம்பிக்கையுடன் செயல்படுபவரே நிலைத்த வெற்றிபெற முடியும்.
நடப்பட்ட ஒரு விதை, காற்று, நீர், மண், சூரிய ஒளி ஆகியவற்றின் துணைகொண்டு உயிர் பெறுகிறது. அவ்விதை, காற்றாகவோ, நீராகவோ, மண்ணாகவோ, சூரிய ஒளியாகவோ வளர்வதில்லை. ஒரு செடியாகவே வளர்கிறது.
எனவே தனித்தன்மையுடன், சுயம் தொலைக்காது தன்னிலை தவறாது வாழ்தல் சிறந்த நிர்வாக முடிவுகளை எடுக்கப் பயன்படும். அதற்காக அனுசரித்துப் போகும் தன்மை இன்றி இறுக்கமாக வேலை பார்க்கக்கூடாது. நமது பணியிடத்தில் சற்று நெகிழ்ந்தும் செயல்பட வேண்டும்.
இக்கணத்தில் வாழ்
ஈரு ஜென் துறவிகள் ஆற்றைக் கடக்கையில் அவர்களிடம் ஒரு பெண் ஆற்றைக் கடக்க உதவி கேட்கிறாள். அதிக வெள்ளம் காரணமாகத் தன்னால் நடக்க முடியவில்லையென்றும் எனவே தன்னை மறுகரைக்குத் தூக்கிச் செல்லுமாறும் வேண்டினாள். முதல் துறவி அவ்வாறே அவளுக்கு உதவி செய்தார். பின்னர் அவர்களிருவரும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர்.
சில மணிநேரம் கடந்தபின் இரண்டாம் துறவி, முதல் துறவியிடம் 'ஒரு துறவியான நீர் ஒரு பெண்ணை எப்படித் தூக்கி வரலாம்?'  என வினவ, முதல் துறவி புன்சிரிப்புடன் 'நான் அவளை ஆற்றின் கரையிலேயே விட்டுவிட்டேன்; ஆனால் நீர் அவளை இன்னமும் சுமந்து வருகிறீரே' என்றார். இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் இதன் நீதியான, 'நிகழ்காலத்தில் மட்டும் நிலவுங்கள்’ என்பது மட்டும் நினைவில் நிற்பதில்லை.
நம் வாழ்வின் பெரும் பகுதி கடந்த காலத்தின் குறைகளையும், எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளையும் சிந்திப்பதிலேயே கழிந்து விடுகிறது. எனவே நிகழ்காலத்தின் அருமையறிந்து அந்தந்த தருணங்களை வாழவேண்டும்.
எப்போதோ, ஏதோ ஒரு நாள் நம் நண்பர் காயப்படுத்தியிருப்பார்; அல்லது அவரால் நமக்கு ஒரு அவமானம் ஏற்பட்டிருக்கும். மனம் அதை மறக்காமல் திரும்பத்திரும்ப அசைபோட்டு, அந்த நண்பர் மீது காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விடும். நமக்கு பிடிக்காத படத்தின் சி.டி.யை நம்மில் யாரேனும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்ப்போமா? நிச்சயமாக இல்லை மூன்று மணிநேரம் பார்க்கும் சினிமாவிலேயே நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துபவற்றைத்தானே தேர்ந்தெடுக்கிறோம். பின்னர் ஏன் நம் மனதில் காயப்படுத்திய நிகழ்வுகளை மறுபடி மறுபடி நினைத்துப் பார்த்து நம் காயங்களை நாமே ஆழமாக்கிக் கொள்ள வேண்டும்?
தொடர்பு கொள்ளும் திறன் (Communication Skill)
மனதில் நினைத்ததைப் பிறருக்குத் தெளிவாகப் புரியும் வண்ணம் எடுத்துரைத்து விட்டால் நமது தொடர்பு கொள்ளும் திறன் அபாரம்தான். நமது எண்ணங்கள் நேர்த்தியான தகவல்களாகப் பிறரைச் சென்றடைந்தால் தான், அவ்வெண்ணங்கள் சிறப்பான செயல்களாக உருவெடுக்க முடியும்.
ஒரு சமயம், வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய புத்தகத்தைப் படித்து அவரது நண்பர் ஒருவர், 'இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்திருந்தால் புத்தகத்தை இன்னும் விரிவாக  எழுதியிருப்பீர்கள். நீங்கள் சொல்ல முற்பட்ட கருத்துகளும் இன்னும் தெளிவாக இருந்திருக்கும்' என்றார். அதற்கு சர்ச்சில், 'இன்னும் கொஞ்சம் நேரம் மட்டும் கிடைத்திருந்தால் புத்தகத்தை இன்னும் சுருக்கமாக எழுதி என் கருத்தை உங்களுக்கு விளங்க வைத்திருப்பேன்' என்றார். இவ்வாறு நாம் நினைப்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறும் சிறந்த கலையை நாம் வளர்த்துக் கொள்ளுதல் சிறந்த நிர்வாகத்திற்கு உதவும்.
மற்றவர் பேசிக் கொண்டிருக்கையில், நம் கருத்தைப் பதிவு செய்ய வேண்டுமாயின், தயங்காமல், கிடைக்கும் சரியான இடைவெளியில், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தெளிவாக நம் கருத்தைக் கூறிவிட வேண்டும். நம் கருத்துகளைத் வீரியமாகப் பதிவு செய்திட வேண்டும். அதற்காக, 'நான் மட்டும்தான் பேசுவேன்’ என்னும் விதமாக ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்காமல் மற்றவர் கருத்துக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.
மற்றவருடன் தொடர்பு கொள்ளும் திறன், இணைந்து செயலாற்றும் திறன் போன்ற மென் திறன் (soft skill) உள்ளவர்களைத்தான் பெரிய நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துகின்றன. ஏனெனில் இவையே வாழ்க்கையை ஜெயிக்க உதவும்.
பிறரின் கருத்தைக் கேட்டல்
உரையாடற்கலை என்பது கேட்கப்படுவதும், பிறரைக் கேட்க வைப்பதும் ஆகும். நமது கருத்தினை வெளிப்படுத்தத் தரப்படும் முக்கியத்துவம், பிறரின் கருத்தினை வெளிப்படுத்திடவும் தரவேண்டும். பலரின் அனுபவங்களைக் கேட்டறிதல் பல தவறுகளைத் தவிர்க்க உதவும். பலபேரின் கருத்துகளும் அபிப்ராயங்களும் சிறந்த முடிவுகளெடுக்க ஏதுவாகும்.
எவ்விதச் சார்புமின்றி ஒருவர் சொல்வதைக் கவனித்தல் கடினமான செயல். இருப்பினும் பலரது கருத்துகளைக் கேட்டு தெளிவான முடிவுகளெடுக்க பெரிதும் உதவும். எனவே, எந்த முன் முடிவுகளுமின்றி, பிறரது பேச்சினைக் கவனித்து, தெளிவான முடிவெடுப்பர் மெய்ப்பாட்டு நுண்ணறிவாளர்கள்.
குறிப்பறிதல்
நம்முடன்  உரையாடுபவருக்கும் நாம் பேசுவது புரிய வேண்டும். அவ்வாறில்லையெனில், பேசுபவர், கேட்பவர் என இருதரப்பிற்குமே கால விரயம்தான்.
உரையாடலில் ஈடுபாடு உள்ளதா, இல்லையா, என்பன போன்ற விவரங்களை கேட்பவரது முகம் பளிங்கு போலக் காட்டிவிடும் அல்லது அங்க அசைவுகள் உணர்த்திவிடும். எனவே அவர்களின் அகத்தின் அழகை முகத்தில் கண்டு, குறிப்பறிந்து, பேச்சைத் தொடரவோ, பேச்சை மாற்றவோ அறிந்திருத்தல் அவசியம்.
குறிப்பறிதலின் முக்கியத்துவம் அறிந்து தான் வள்ளுவரே 'குறிப்பறிதல்’ என்ற தலைப்பில் இரண்டு அதிகாரங்களை எழுதியிருக்கிறார்.
ஒருவரின் முகக்குறிப்புகளும் அங்க அசைவுகளான உடல்மொழியும் அவரது உள்ளத்தை வார்த்தைகளைவிடத் தெளிவாக உணர்த்திடும். எனவே பிறரின் குறிப்பறிந்து அதற்கேற்ப செயல்படுதல் சிறந்த மெய்ப்பாட்டு நுண்ணறிவாகும்.
உற்சாகமும் உத்வேகமும்
நடக்கத் துவங்கும் ஒரு குழந்தை எழுந்தவுடன் நன்றாக நடந்து விடுவதில்லை. பலமுறை கீழே விழுந்தாலும் உற்சாகம் மாறாமல் நடக்கப்பழகிக் கொண்டேயிருக்கும் குழந்தை, ஒரு நாள் ஓடவும் தயாராகி விடுகிறது.
உலகின் சிறந்த கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டான் 'நான் ஜெயிப்பதற்காகவே விளையாடுகிறேன். அது பயிற்சியானாலும் போட்டியானாலும் நான் ஜெயிப்பதற்காகவே விளையாடுகிறேன். எனக்கும் எனது உத்வேகத்திற்கும் தடையாக எதையும் நான் வரவிடுவதில்லை.' என்கிறார். ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகத்தீ எரிந்து கொண்டேயிருந்தால் தான் நம் வாழ்க்கைப் பயணம் உற்சாகத்துடன் தொடரும்.
உற்சாகமும் உத்வேகமும் இருந்தால் தான் பல தோல்விகளைக் கண்ட பிறகும் வெற்றியை நோக்கியே முயற்சி இருக்கும். முயற்சி திருவினையாக்கும்.
நமது உற்சாகமெனும் உணர்வைத் தம்முடன் பணியாற்றுபவருக்குத் தெளிவாகப் புரியவைத்துவிட்டால் உற்சாகம் நிச்சயம் அவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். அவர்களும் தம் பங்களிப்பினை உற்சாகத்துடன் தருவர்.
'அனைவரும் உரிய நேரத்திற்கு வரவேண்டும்' என உத்திரவிட்டுவிட்டு நாம் தாமதமாக வந்தால்? நாம் தினமும் நேரம் தவறாது அலுவலகத்திற்கு வந்தால், அனைவரும் தன்னாலேயே சரியான நேரத்திற்கு வருவார்கள்.
அறிவும் தொடர் கற்றலும்
தொடர்ந்து கற்றுக் கொண்டேயிருப்பவர், எப்போதுமே அறிவு எனும் பெரும் புதையலுக்கு உரிமையாளராயிருக்கிறார். கற்றலுக்கு வயது ஒரு தடையல்ல. வாழ்க்கை முழுவதும் நாம் எதையேனும், எவரிடமிருந்தேனும், எவ்வாறேனும் கற்றக்கொண்டேதான் இருக்கிறோம். தொடர் கற்றல்தான் நம்மை என்றும் உயிர்ப்புடன் இருக்கச் செய்யும்.
'எனக்கு ஒன்றும் தெரியாது’ என்று அறிந்திருத்தலே சிறந்த அறிவு என்பார் சாக்ரடீஸ். எனவே எப்போதும் கற்றுக்கொள்ளத் தயாராக நம் மனமெனும் கலனை வைத்துக்கொண்டால் அறிவு தன்னால் பெருகும்.
தேவைகளே கண்டுப்பிடிப்பு களுக்குக் கருவறையாக இருக்கின்றன என்பர். எனவே நமது தேவை களுக்கேற்ப கற்பனைத்திறனோடு, நம் அறிவையும் சேர்த்து புதிய வழிமுறைகளை உருவாக்கிட வேண்டும். புதுமைகளைப் புகுத்திடவோ, புதிய சிந்தனைகளை நம்முடன் வேலை செய்பவரிடமிருந்து வரவேற்கவோ தயக்கம் காட்டாது செயல்பட வேண்டும்.
 ஒன்றறக் கலந்து உழைத்தல்
எந்தவொரு வேலையையும் கடமையாகக் செய்யாமல், ஆர்வத்தோடு செய்தால் தான் சிறந்த பலன் கிடைக்கும். நாம் செய்யும் காரியங்களை நம்மால் ரசிக்க முடிந்தால், கட்டாயம் உலகம் ரசித்து ஏற்றுக்கொள்ளும். உலகின் வெற்றியாளர்கள் பலரைக் கவனித்தால் இவர்கள் தாம் வேறு, தமது தொழில் வேறு எனக் கொள்ளாமல், கருமமே கண்ணாயிருந்து உழைத்திருப்பர்.
இன்னொரு ஜென் கதை, குளிர் காலத்தில் பயணித்த ஒரு ஜென் துறவி ஒரு புத்த மடாலயத்தில் தங்க அனுமதி கேட்டார். அம்மடத்திலிருந்த பிற புத்த துறவிகள் அவரை அன்றிரவு தங்க அனுமதித்தனர். இரவில் குளிர் தாங்காத அந்த ஜென் துறவி, அங்கிருந்த மரத்தாலான புத்தர் சிலைகளை அடுக்கி தீ மூட்டி குளிர் காய்ந்தவர். மறுநாள் காலை இதைக்கண்ட பிற புத்த துறவிகள் புத்தர் சிலைகளை எரித்ததற்காகக் கோபம் கொண்டனர். அவரோ அமைதியாக, 'எனக்குள் இருந்த புத்தருக்கு குளிர் எடுத்ததால் நான் இந்த மரக்கட்டைகளுக்கு தீ மூட்டினேன். ஆனால் உங்களது புத்தர் இவையென்று எனக்குத் தெரியாது' என்றார். இதுதான் தான் செய்யும் செயலுடன் தான் இரண்டறக் கலந்தலாகும்.
நாம் எதுவாக ஆக விரும்புகிறோமோ, அதுவாகவே மாறிவிட்டால் நமது வெற்றி எளிதாகும் என்பதை உணர்ந்து, மற்றவருக்கும் உணர்த்தி வழிநடத்தினால் நிச்சயம் சிறந்த நிர்வாகத்தைத் தரலாம்.
சுய திருத்தமும் வளர்ச்சியும்
தன் தவறுகளை ஒப்புக்கொணடு, திருத்திக் கொள்பவருக்கே வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படும். 'எல்லாம் எனக்குத் தெரியும்’ என்ற அகந்தையில் சிக்கிச் சுழலாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம்மைத் திருத்திக் கொண்டு வளர்ச்சியை நோக்கி சென்றால், பலன் நிச்சயம்.
நம்மைப்பற்றிய குறைகளை யார் சொன்னாலும், அதன் உண்மைத் தன்மை உணர்ந்து அதை ஒப்புக்கொண்டு அவற்றைக் களைய தயாராயிருக்க வேண்டும். குறைகளை களைந்து கொண்டே வந்தால், ஒரு நாள் நிச்சயம் நிறைகளால் நிறையப் பெற்றவர்களாக இருப்போம். கணினி,  வைரஸ் என்னும் குறையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஸ்கேன் செய்வதுபோல, அவ்வப்போது நம்மிடம் உள்ள குறைகளையும் களைந்திடுவர் மெய்ப்பாட்டு நுண்ணறிவாளர்கள்.
சரியான தருணத்திற்கு காத்திருத்தல்
வாய்ப்புகள் எப்போதும் நம்மைச் சுற்றி அமைவதில்லை. எப்போதாவது வரும் வாய்ப்பினை தக்க தருணம் பார்த்துக் காத்திருந்து அபகாரித்தால் தான், நமது திட்டமும், செயல்பாடும் வெற்றி பெறும்.
காலங்கருதி இருப்பவருக்கு இந்த உலகமே வசமாகும். மழை வரும் முன்னே நிலத்தைப் பதப்படுத்தி தயார் நிலையில் வைத்தால்தான் சிறந்த அறுவடையைப் பெற முடியும்.
நம்முடன் இருப்பவாறின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து செயல்பட வேண்டும். பலமானவர்களை பகைத்துக் கொள்ளாமல் முடிந்தால் அவர்களின் நல்லெண்ணத்தில் இருந்து, காரியம் கைவரப்பெற வேண்டும். வீண் பிடிவாதத்தாலோ வெற்று விவாதங்களாலோ எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து விவேகத்துடன் செயல்பட்டு கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எங்கேயும் எப்போதும்
இருத்தல் என்பது 'நானும் இருக்கிறேன்' என்னும் பெறும் பெயரளவிலான இருத்தலில்லை. நமது குழுவிற்கு தேவைப்படும் போதெல்லாம் நமது பங்களிப்பையும் வழிநடத்தும் யோசனைகளையும் வழங்கி துணையாக இருத்தலே ஆகும்.
குழுவின் தோல்விக்கு தான் பொறுப்பெழுத்து வெற்றியை குழவினருக்கு உரித்தாக்குவதே சிறந்த தலைமைப் பண்பு.
ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருப்பின் உணர்ச்சி வேகத்தில் கோபப்பட்டு, கத்தி கூப்பாடு போடுவதால் ஒரு பயனுமில்லை. தவறு நடந்தது நடந்து விட்டது; இனி அதை எப்படி சரி செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும். அவ்வாறு யோசித்து முடிவெடுக்க நிதானம் வேண்டும்.
மெய்ப்பாட்டு நுண்ணறிவுடையவர், தன் குழுவின் எங்கேயும் எப்போதும் துணையிருந்து நிதானத்தை கடைபிடித்து சிறந்த முடிவெடுப்பர்.
மன அழுத்தம் வேண்டாமே!
நம் மீதான நமது அல்லது பிறரது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய நாம் நடத்தும் போராட்டமே வாழ்க்கைப் போராட்டமாக உருவெடுத்து மன அழுத்தத்தை உண்டு பண்ணுகிறது. நமது தேவைக்கும் நம்மிடம் இருக்கும் வளத்திற்கும் உள்ள இடைவெளியும் மன அழுத்தத்தை ஏற்படுத்திடும் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது.
பல நேரங்களில் மன அழுத்தத்தில் இருக்கும் போது நமது சிந்திக்கும் திறனை மறந்து விடுகிறோம். ஆனால் மன அழுத்தத்தில் இருக்கும் போது நாம் சிந்தித்தால் தான் நம்மை நிலைநிறுத்திக் கொள்ள இயலும். சிந்தனை என்பது எதிர்மறையானதாய் இல்லாமல் நல்ல விளைவுகளைத் தரும் நேர் சிந்தனைகளாக அமைய வேண்டும்.
மாறி வரும் பருவ நிலைகளைப் போன்று வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறிவரும் என்பதறிந்தாலே எந்த சவாலையும் எளிதில் எதிர்கொள்ளலாம். மேலும், 'தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதை நினைவில் கொண்டு நம் மனநிலையை சம நிலையில் வைத்துக் கொண்டால் தான் முழு ஈடுபாட்டுடன் ஒவ்வொரு செயலையும் செய்ய முடியும். ஈடுபாட்டுடன் செய்யும் செயல்கள் யாவும் சிறந்ததாய் அமையும்.
கோபப்படாதே சகோதரா!
பேருந்துகளிலும் பஸ்களிலும் பெரும்பாலும் பெரும் சண்டைகள் நிகழக் காரணம் பார்த்தோமேயானால் கூட்ட நெரிசலில் யாரோ யார் காலையோ மிதித்தாக இருக்கும். 'சே, யாராவது தெரிந்தே காலை மிதிப்பாங்களா'ன்னு ஒரு நிமிடம் யோசித்தால் பல சூடான வார்த்தைப் பரிமாற்றங்களை தவிர்க்கலாம். இந்த வெற்றுச் சண்டையின் விளைவு அன்று முழுதும் நாம் பார்க்கும் அனைத்து நபர் மீது ஏற்படும்; அவர்களின் எரிச்சல் அவரவர் குடும்பத்தினர் மீதேல்லாம் எதிரொலிக்கும். இப்படி கோபம் சங்கிலித் தொடராய்ப் பயணித்து எல்லோருடைய மனநிலையையும் கெடுத்து விடும்.
தான் சொன்னபடி வேலை நடக்கவில்லையெனில் சில உயரதிகாரிகள் கோபத்தில் பொருட்களை வீசி எறிவர். இதனால் விளையும் பயன்கள்?
1. தூக்கி எறிந்த பொருள் உடையும்  பொருள் நஷ்டம்
2. நமது மூளை சூடாகும்  அன்றைய தினத்தின் வேலைகள் யாவும் பாதிப்படையும்.
3. கீழதிகாரியின் மனதில் 'மனுஷனே இல்லப்பா, பேய் மாதிரி கோவம் வருது' என்ற எண்ணம் மட்டுமே மிஞ்சும். மற்றபடி, அவர் மனதில் தனது தவறினைப் பற்றிய குற்றவுணர்வு சிறிதும் வராது.
உணவிற்கு உப்புபோல, கோபமும் அளவாக, அவசியத்திற்காகத் தான் வரவேண்டும்.
அதற்காக, கோபமே படக்கூடாது என்பதில்லை. வில்லியம் ப்ளேக் எனும் கவிஞர் தன் 'A Poison Tree’ எனும் கவிதையில் 'நண்பனிடம் கோபப்பட்டேன்; அக்கோபத்தை அவனிடம் தெரிவித்தேன் என் கோபம் முடிவுக்கு வந்தது. என் எதிரியிடம் ஏற்பட்ட கோபத்தை நான் தெரிவிக்கவில்லை  என் கோபம் விஷ மரமாய் வளர்ந்தது’ என்பார். எனவே கோபம் எனும் சேர்ந்தாரைக் கொல்லியை, சுயக் கட்டுப்பாட்டை மீறாமல் காட்டுதல் மிகச்சிறந்தது.
மேலும் 'கடிதோச்சி மெல்ல எய்தல்’ எனும் இயல்பு நம்மைச் சிறந்த நிர்வாகியாக அடையாளங் காட்டும்.
சகிப்புத்தன்மை
கூட்டாகப் பலர் ஓரிடத்தில் வேலை செய்யும் போது, ஒரு முடிவு எடுக்கப் பல நேரங்களில் தாமதம் ஏற்படும். அனைவரும் ஒன்று போல சிந்திப்பதுமில்லை, செயல்படுவதுமில்லை. அந்நேர்வுகளில் பொறுமையும் பொறுத்தருளலும் மிகப்பெரிய தேவையாகும்.
ஏற்றுக்கொள்ளல், பொறுத்திருத்தல் மற்றும் மன்னித்தல் ஆகியன ஒருவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும் பெருங்குணங்கள்.
'செல்லா இடத்துச் சினந்தீது’ என்ற வள்ளுவர் வாக்கினை நினைவில் கொண்டு பொறுத்து, அரவணைத்துச் சென்றால் சிறப்பான குழு செயல்பாடு விளையும்.
எல்லாம் பயமயம்
பயம் உண்மையில் ஒரு நல்ல விஷயம்தான்; அளவாய் இருக்கும் வரை. பயம் வந்தால் நம் மூளை விழித்துக்கொண்டு நமக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள ஆணையிடும். ஆனால் எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டேயிருந்தால் வாழக்கையின் அஸ்திவாரமே ஆட்டங்கண்டுவிடும்.
ஒரு வேலையை கொடுத்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்; இல்லையெனில் உயரதிகாரி கோபப்படுவார் என்ற பயம்தான் நிர்வாகத்தைப் பலநேரங்களில் நடத்திச் செல்லும். எனவே பயமும் அவசியம் தான், ஆனால் அளவாய்.
முடிவுரை
உணர்ச்சிகளின் மீது கட்டுப்பாடு உள்ளவர்களால் தான் வாழ்வில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற முடியும்.
நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என நினைக்கிறோமோ அவ்வாறே நாம் மற்றவாரிடமும் நடந்து கொண்டாலே மனித மனங்களை வென்று, நமக்கான வெற்றித் தளத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
நம் வாழ்வில் எத்தனை வருடங்கள் இருந்தன என்பதை விட, எத்தனை வருடங்கள் வாழ்வை வாழ்ந்தோம் என்பதே முக்கியம். எனவே நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ விட மெய்ப்பாட்டு நுண்ணறிவினை மேம்படுத்துவோம்.
(கட்டுரையாளர் தமிழக அரசில் துணை ஆட்சியராக பயிற்சியில் உள்ளார்)

No comments:

Post a Comment