Saturday 25 January 2014

விகடன் விஷன் - 2013 நிகழ்வுகளும் மனிதர்களும் - தமிழகம்

விகடன் விஷன் - 2013 நிகழ்வுகளும் மனிதர்களும் - தமிழகம்
Posted Date : 14:12 (12/12/2013)Last updated : 19:12 (14/12/2013)
 தமிழகம்
தாது மணல் கொள்ளையும் தடுப்பு நடவடிக்கைகளும்
கடலோர வெற்று மணல் பரப்பாகவும், மொட்டை மலைகளாகவும், சீமைக் கருவேல மரங்கள் சூழு தேரிக் காடுகளாகவுமே நம் கண்ணில் பட்ட தென் தமிழகத்தின் பல பகுதிகள் விலை மதிப்பு மிக்க கனிமங்களைக் தன்னகத்தே கொண்ட பொன்விளை யும் பூமி. மற்றவர்களுக்கு தெரியாது இந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்ட உள்ளூர் தரகு முதலாளிகள் மலையை மொட்டை அடித்தனர். அலைகளைவிட வேகமாக கடற்கரையை அரித்தெடுத்து கோடிகளில் கொழித்து வந்தனர்.
மதுரை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேலூர், கீழையூர், இ.மலப்பட்டி, செம்மினிப் பட்டி உள்ளிட்ட இடங்களில் கிரானைட் கொள்ளையர்கள் 39, 30, 431 கன மீட்டர் அளவுக்கு சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுத்துள்ளனர்.  இதனால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் பதினாறு ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிட்டு அறிக்கை தயார் செய்தார் அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.
அதை தொழில்துறை செயலாளருக்கும் அனுப்பி வைத்தார். ஆனால், அரசு இயந்திரம் பி.ஆர்.பி. மீது அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கலெக்டர் சகாயத்தை கோப்-ஆப் டெக்ஸ் துறைக்கு தூக்கியடித்தது. இதையடுத்து இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானது. அவ்வளவுதான் விவகாரம் வில்லங்கமானது.
புதிய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளைத் தேடித் தேடிக் கண்டுபிடித்தார். அவை அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டன. பி.ஆர்.பி. மற்றும் அவரைப் போன்ற கிரானைட் முதலாளிகள் சட்டவிரோதமாக வெட்டியெடுத்து, கண் மாய்க்குள்ளும், வயல்களுக்கு இடையிலும், தண்ணீருக்கு அடியிலும் மறைத்து வைத்திருந்த பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் மீட்கப்பட்டன. பி.ஆர்.பி.சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அதேபோல், நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் மணலில் புதைந்து கிடக்கும் கனிமங்களை பிரித்தெடுக்கும் தொழிலில் ஏகபோகமாக செயல் பட்டு வருபவர் வைகுண்டராஜன். அந்தப் பகுதியில் கொட்டிக் கிடக்கும் மணலில் விலைமதிப்பு மிக்க இல்மனைட், கார்னெட், ரூட்டைல் போன்ற கனிமங்கள் கலந்திருந்தது. அரசு விதி முறைகளை மீறி, அந்த மணலை கடத்தி கனிமங்களை ஏற்றுமதி செய்து வந்தார்.
காலம் காலமாக அரசு இயந்திரத்தின் ஆசியுடன் ஜோராக நடைபெற்று வந்த வைகுண்ட ராஜனின் சாம்ராஜ்ஜியத்துக்கு சிக்கல் கலெக்டர் ஆஷிஷ் குமார் வடிவத்தில் வந்தது. திடீரென அதிரடி ரெய்டு நடத்திய கலெக்டர் ஆஷிஷ் குமார் வைகுண்டராஜனின் குவாரிகளில் அதிரடி சோதனையில் இறங்கினார். சில குவாரிகளுக்கு உரிய லைசென்ஸ் இல்லை என்று கோரி அவற்றுக்கு சீல் வைத்த துடன், வைகுண்டராஜனால் அரசாங்கத்துக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்களைக் கூட்டி பேட்டி அளித்தார். பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
தமிழகத்தில் கனிம மணல் அள்ளுவதற்கு தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டது. வருவாய்த்துறை செயலாளர் ககன்திப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, குவாரிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. அரசாங்கத்தின் இந்த அதிரடிகள் கண்துடைப்பாக இருந்துவிடாமல், கனிமக் கொள்ளைக்கு நிரந்தர முடிவு கட்டுவதாக இருக்க வேண்டும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து கனிம சுரங்க பகுதிகளிலும் சட்டவிரோதமாக பெருமளவில் கடற் கரை மணல் எடுக்கப்பட்டது என்று தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஸ் குமார், தமிழக கனிம சுரங்க கமிஷனருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலை யில் அவர் இடமாற்றம் செய்யப்பட் டது சர்ச்சையை கிளப்பினாலும் பல ஆண்டுகளாக நீருபூத்த நெருப்பாக இருந்த கடல் மணல் பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்தது.
அரசு உயர் அதிகாரிகளுடன் இது குறித்து முதல்வர் கலந்தாலோசித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையின் கீழ், வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை ஆகஸ்ட் 9ம் தேதி அமைத்து, ஒரு மாத காலத்திற்குள் ஆய்வறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இது மட்டுமல்லாமல், இந்தச் சிறப்புக் குழுவின் ஆய்வு முடியும் வரை சுரங்க நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு தூத்துக்குடி மாவட்ட கனிமத் துறை உதவி இயக்குநருக்கும்  உத்தரவிடப்பட்டிருந்தது.
உத்தரவின் பேரில், 1957 ஆம் ஆண்டு சுரங்கம் மற்றும் கனிமங்களின் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் பிரிவு 24-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி மேற்படி சிறப்புக் குழு விரிவான ஆய்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொண்டது.  இந்தச் சிறப்புக் குழுவையும் தாண்டி, ஆறு உப கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தக் குழுக்களும் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த குழுக்கள், கனிம பகுப்புத் தொழிற்சாலைகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டன. சிறப்புக் குழு மற்றும் உப குழுக்கள் மேற் கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி,  செப்டம்பர் 17ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்தார்.
இதனை பெற்றுக் கொ ண்ட முதல்வர் திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மற்றும் மதுரை மாவட்டங்களில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள எஞ்சிய 71 பெருங்கனிம குவாரிகளை இந்த சிறப்புக் குழு ஆய்வு செய்து உண்மை நிலையை அரசுக்கு சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வருவாய் த் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தலைமையில் இந்த சிறப்பு குழு செயல்படும் என்றும் மேற்படி ஆய்வு முடியும் வரை கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் பெருங்கனிம குவாரிகளின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் போக்குவரத்து உரிமச்சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டார்.
இதர மாவட்டங்களில் உள்ள  பெருங்கனிம குவாரிகள் குறித்த ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அதன் அடிப்படையில் பெருங்கனிம குவாரிகள் குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அக்டோபர் 29ம் தேதி, சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், ''கனிம மணல் முறைகேடாக அள்ளப்படுவதை தடுப்பதே அரசின் கொள்கை முடிவு. இயற்கை வளங்கள் அனுமதியின்றி வரம்பு மீறி எடுக்கப்படுவதை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது. கனிம மணல் குறித்த ககன் தீப் சிங் பேடி அறிக்கை மீது ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது'' என்று அறிவித்தார்.
அரசுபள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி
தமிழ் மொழி இன்னும் வாழ்கிறது என்றால், அது அரசுப் பள்ளிகளின் தயவில்தான். முந்தைய தி.மு.க. அரசு சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தபோது, அதில் இருந்து தப்பிக்க விரும்பிய பெற்றோர் சமச்சீர் கல்விக்குக் கட்டுப்படாத கல்வி முறையை நோக்கி ஓடினார்கள். தமிழை ஒரு மொழிப் பாடமாகக்கொண்டு தேர்வெழுதி 10-வது மற்றும் +2 தேர்வுகளில் உச்சபட்ச மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை 'மாநில முதல்வர்களாக’ அறிவிக்கும் நடைமுறை காரணமாகவே, லட்சக்கணக்கான மாணவர் களின் புத்தகப் பைகளில் தமிழ்ப் புத்தகம் இருக்கிறது. இப்படியெல்லாம் காலந்தோறும் அரசுப் பள்ளிகள் மட்டுமே தமிழைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், எதிர் வரும் கல்வி ஆண்டிலிருந்து அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அமல்படுத்தப்படும் என்று அறிவித்து அதிர்ச்சி கிளப்பிஇருக்கிறது தமிழக அரசு.
'இது தமிழ் மொழி மீது அரசாங்கம் தொடுத்திருக்கும் இறுதி யுத்தம்!’ என்று கல்வியாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் கொதிக்க, அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களோ, 'இனி தங்கள் பிள்ளைகளுக்கும் ஆங்கில வழிக் கல்வி கிடைக்கும்’ என்று மகிழ்கிறார்கள்.
தமிழகத்தில் ஏகப்பட்ட கல்வித் திட்டங்கள் அமலில் இருக் கின்றன. பெற்றோர்களிடம் நிலவும் ஆங்கில மோகத்தை அடிப்படையாக வைத்து, சுமார் ஏழு விதமான கல்விக் கொள்கைகள் கீழிருந்து மேலாக சாதியைப் போல அடுக்கிக் கட்டப்பட்டு உள்ளன. அரசுப் பள்ளி, மெட்ரிக் பள்ளி, மத்தியக் கல்வித் திட்டம், சர்வதேச உறைவிடப் பள்ளி எனப் பல்வேறு வகையான படிப்புகள். இதில் மேல் அடுக்கில் இருக்கும் மாணவர்கள் தனக்குக் கீழ் இருப்பவர்களை இழிவாகப் பார்க்கும் மனோபாவத்தைத் குழந்தைப் பருவத்திலேயே விதைத்துவிட்டிருக்கிறது நம் சமூக அமைப்பு.
தமிழகத்தின் மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால், ''இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தபோது உருவானதுதான் இந்தக் குழப்பமான கல்வி முறை. 1978-ல் அமெரிக்க உதவியுடன்தான் நமது மதிய உணவுத் திட்டங்கள் நடைபெற்றன. அப்போதைய அமெரிக்க நெருக்கடி காரணமாக, மதிய உணவுத் திட்டங்களுக்கு மாற்று வழியில் நிதி திரட்டவே முதல்வர் எம்.ஜி.ஆர். கல்வியைத் தனியார் வசம் ஒப்படைத்தார். அன்று தொடங்கி இன்று வரை புற்றீசல்போல தனியார் பள்ளிகள் முளைத்து தமிழகத்தில் கல்விச் சூழலையே நாசமாக்கிவிட்டார்கள். ஆங்கில மோகம் மட்டுமே தனியார் பள்ளிகள் கோலோச்சுவதற்குக் காரணம். இப்போது அரசும் ஆங்கிலக் கல்வியைக் காட்டி, தனது செல்வாக்கை உயர்த்த நினைக்கிறது. இது வெறும் கல்வி முறை சார்ந்த பிரச்னை மட்டுமல்ல, சமூகநீதி சார்ந்த விஷயம்'' என்கிறார்.
புற்றீசல்போலப் பெருகும் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தவும், தனியார் பள்ளிகள் மீதான மோகத்தைக் குறைக்கவுமே அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் என்ற முடிவை அரசு எடுத்ததாகக் கூறுகிறார்கள்.
''பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள், தமிழில்தான் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்கள். ஏனெனில், அவர்களுக்கே ஆங்கில அறிவு அரைகுறையாகத்தான் இருக்கிறது. அதனால்தான் எல்.கே.ஜி. முதல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு வரை சுமார் 16 ஆண்டுகள் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகப் படித்தும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை இல்லாமல்போகும் அவலம் நிலவுகிறது!'' என்று கற்றுக்கொடுத்தலில் உள்ள குறைபாட்டைச் சுட்டிக் காட்டுகிறார் சமூக ஆர்வலர் நலங் கிள்ளி.
ஆங்கில வழிக் கற்றலில் என்ன சிக்கல்கள் நேரும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் கல்விமணி. ஆரம்பக் கல்வியைத் தமிழில் பயின்றுவிட்டு, ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் கற்கத் துவங்கியபோது அது ஆரோக்கிய மான கல்வி புகட்டலாக இருந்தது. ஆனால், இப்போது தாய்மொழியைக் கற்பதற்கு முன்பே ஆங்கிலத்தைக் கற்பிப்பது நிச்சய மாகக் கடுமையான பின்விளைவு களை உருவாக்கும். ஆங்கில மொழி படிப்பது வேறு, ஆங்கில வழியில் படிப்பது என்பது வேறு. இந்த வேறுபாட்டைப் பெற்றோர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பலரும் ஆங்கில வழி யில் படித்தால்தான் ஆங்கிலத்தில் நன்றாகப் பேச முடியும் எனக் கருதுகின்றனர்.
ஆங்கில வழிக் கல்வி புகட்டும் வகுப்பறையில் வேதியியல், இயற் பியல் என அந்தந்தப் பாடங்களைப் புரியவைப்பதில்தான் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவார்களே தவிர, ஆங்கில இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள். மேலும், சில பொதுவான, பிரபலமான சொற்களை மட்டும் ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுப்பார்கள். ஒரு வினை அல்லது ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட அனைத்துச்சொற்களையும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள்.
ஆக, ஒரு மாணவனின் ஆய் வறிவு என்பது அந்த ஆசிரியர் சொல்லிக்கொடுத்த மிகச் சில வார்த்தைகளுக்குள் அடங்கிவிடுகிறது. 
இன்றும் தமிழகத்தில் 80 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். 12-ம் வகுப்புப் பாடத்தை 11-ம் வகுப்பிலேயே கற்று மாவட்ட அளவில் முதல் இடம் பெறும் நாமக்கல் பள்ளிகளின் மாணவர்கள் சரா சரியாக 1,180 மதிப்பெண் பெறுகிறார்கள். டிசம்பர் மாதம் முதலே அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடம் படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களோ மாவட்ட அளவில் 1,160 மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆனால், அந்தந்த பாடத்தை அந்தந்த வருடம் மட்டுமே பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் 1,145 மதிப்பெண்கள் பெறுகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மற்றவர் களுக்கும் சராசரியாக 20 முதல் 40 வரை மதிப்பெண்கள் வித்தியாசப் படுகின்றன. இதில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி, மாணவர்களின் வறுமைச் சூழல், வகுப்புச் சூழல் என எல்லாவற்றையும் கணக்கில்கொண்டு பார்க்கும்போது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகச் சிறப்பாகவே பயில்கிறார்கள். ஆக, இப்போதைய உடனடித் தேவை அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி கிராமப்புற மாணவர் களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து சம நிலையை உண்டாக் கும் நடைமுறைகள்தான். இதைச் சாதித்தாலே அரசுப் பள்ளி மாணவர்கள் பல துறைகளில் பரிமளிப்பார்கள்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம்  வகுப்பு வரை தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இதுதான் வருங்காலச் சந்ததியினருக்கான சரியான பாதையாக இருக்க முடியும்!'' என்று முடித்தார் பேராசிரியர் கல்விமணி.
100 கோடி ரூபாய் செலவில் தமிழ்த் தாய்க்குச் சிலை வைக்கும் முதல்வர், அந்தத் தமிழ்த் தாயின் கையில் ஆங்கிலப் பாடப் புத்தகத்தைக் கொடுப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குரலும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.
தமிழக மீனவர் பிரச்சனையும் சில தீர்வுகளும்
இத்தாலிய மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கேரள மீனவக் குடும்பங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியது கேரள அரசு. அந்த மாலுமிகளைத் திருப்பி அனுப்ப மறுக்கும் இத்தாலிய அரசுக்கு எதிராக பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விட்டார். ஒட்டுமொத்தக் கேரள அரசியல்வாதிகளும், 'இது கேரள மாநிலத்தின் பிரச்னை’ என்ற அம்சத்தில் ஓர் அணியில் நீன்றார்கள். ஆனால், தமிழ்நாட்டின் நிலை என்ன?
தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றனர்; கடத்தப் பட்டனர். இந்திய அரசு பெயர் அளவுக்குக்கூட இதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை. கண்ணுக்கெட்டிய தொலைவில் தேர்தல் இல்லாததால், தமிழக ஓட்டுக் கட்சி அரசியல்வாதி களும் அதைப் பற்றிய கவலை ஏதும் இல்லாமல் இருக்கிறார்கள். ராமேஸ்வரத்து மீனவனின் துயரம் முடிவில்லா மல் தொடர்கிறது.
''முதலில் ஒரு விஷயத்தை உடைத்துப் பேச வேண்டும். 'எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள்’ என்பதுதான் இலங்கைக் கடற்படை நம்மவர்களைச் சுடுவதற்கு சொல்லும் காரணம். இது உண்மையா என்றால், ஆம்... உண்மைதான். எல்லை தாண்டித் தான் மீன் பிடிக்கிறோம். ஆனால், அப்படித் தாண்டாமல் தொழில் செய்ய முடியாது. 'இந்தப் பக்கம் எனக்கு; அந்தப் பக்கம் உனக்கு’ எனக் கோடு போட்டுக்கொள்வதற்கு, கடல் ஒன்றும் கிரிக்கெட் மைதானம் அல்ல; அது ஓர் எல்லையற்ற பரப்பு. அதில் தனக்கான உணவைத் தேடி மீனவன் வலைபோடுகிறான். இங்கு இல்லை என்றால் அங்கு, அங்கும் இல்லை என்றால் அடுத்த இடம்... எனக் கடலில் மீனவனின் வேட்டை நகர்ந்துகொண்டே இருக்கும். ஒரு கடல் பழங்குடி என்ற வகையில் காலம்காலமாக மீனவர்களின் வேட்டைத் தொழில் இப்படித்தான் இருக்கும். திடீரென தேச எல்லை களைப் பிரித்துக்கொண்டு அந்தப் பக்கம் போகாதே, இந்தப் பக்கம் போகாதே என்றால், கடலில் தொழில் செய்ய முடியாது. எங்கு மீன் இருக் கிறதோ, அங்குதான் வலைபோட முடியும். மீன் இல்லாத இடத்தில் வலை போட்டு, வெறுங்கையோடு கரை திரும்ப முடியுமா? இந்த உண்மையை வெளிப்படையாகப் பேசுவதன் மூலம்தான் இதற்கு ஒரு தீர்வு காண முடியும்'' என்கிறார் அருளானந்தம். ராமேஸ்வரத்தில் செயல்படும் நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின்
ஆனால், இது சட்டத்தை மீறிய வாதம்போல தோன்றுகிறதே... தேச எல்லைகளை மதித்து நடக்க வேண்டாமா? மீன் இருக்கும் இடத்தில்தானே வலைபோட முடியும் என்பதற்காக, அடுத்தவர்களின் சொத்துக்களை அபரிகரிக்க முடியுமா?
20 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக மீனவர்களுக்கு இடையில் பிரச்னை வந்தது இல்லை. தேச எல்லைகளைப் பிரித்து, கடற் படையை உருவாக்கிய பிறகுதான் இந்த எல்லைப் பிரச்னை எல்லாம் வருகிறது. அதுவும் கடற்படையும் கடலோரப் பாதுகாப்புப் படையும்தான் தொல்லைகொடுக்கிறதே தவிர, மீனவர்களுக்கு இடையில் பெரும் பாலும் பிரச்னை வருவது இல்லை. ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கைக் கடல் எல்லையில் ஒரே ஒரு இடத்தில் தான் மீன் பிடிக்கிறார்கள். ஆனால், இலங்கை மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைகளில் 10 இடங்களில் மீன் பிடிக்கிறார்கள். இது எங்களுக்கும் தெரியும். ஆனால், நாங்கள் இதை ஒரு பிரச்னையாக மாற்றுவது இல்லை. ஏனெனில் இந்தத் தொழிலை இப்படித்தான் செய்ய முடியும். சமீபத்தில் நாங்கள் இலங்கை மீனவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்கூட, எல்லை தாண்டுவதை அவர்கள் ஒரு பிரச்னை யாகவே சொல்லவில்லை. 'இழு வலையைப் பயன்படுத்தாதீர்கள்’ என்பதுதான் அவர்கள் வைக்கும் ஒரே கோரிக்கை. இதுதான் யதார்த்தம்.
அதையும் தாண்டி சட்டப்படிதான் பேசுவோம் என்றால், உலக நடப்போடு ஒப்பிட்டுப் பேச வேண்டியது அவசியம். உலகில் எங்கெல்லாம் மீனவன் இருக்கிறானோ, அங்கெல்லாம் எல்லை தாண்டுவதும் நடக்கிறது. இலங்கை, மியான்மர், ஜப்பான், தைவான், உகாண்டா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என அனைத்து நாடுகளின் மீனவர்களும் எல்லை தாண்டுவது சர்வ சாதா ரணம். அதற்காக அவர்களைக் கைதுசெய்வார்கள்; அபராதம் விதிப்பார்கள்; அதிகபட்சம் சிறைத் தண்டனை விதிப்பார்கள். ஆனால், உலகின் எந்த நாட்டிலும் எல்லை தாண்டும் மீனவனைச் சுடுவது இல்லை. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும்தான் இந்தக் கதி.
1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி இலங்கைக் கடற்படையால் முதன்முதலாக ராமேஸ்வரம் மீனவன் சுடப்பட்டான். அது இன்றுவரை தொடர்கிறது. காஷ்மீர் எல்லையில் ஒரு இந்தியன் சுடப்பட்டால், தேசமே பதறுகிறது. 'இந்தியாவுக்கு சுரணை இல்லையா?’ என்று ஊடகங்கள் அலறுகின்றன. ராமேஸ்வரமும் இந்த நாட்டின் எல்லைதான். அங்கு இத்தனை இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்களே... ஏன், யாரும் பதறுவது இல்லை? வேறு ஏதோ ஒரு நாட்டில் இத்தனை மீனவர்கள் சுடப்பட்டு இருந்தால், இந்த நேரத்துக்கு ஒரு போர் மூண்டு இருக்கும். ஆனால், இங்கு மீனவர்களாகிய நாங்கள் மேலும் மேலும் வஞ்சிக்கப்படுகிறோம்!'' என்று கோபமாகிறார் அருளா னந்தம்.
மீனவர்கள் மீதான அடக்குமுறை என்பது வெறுமனே துப்பாக்கியால் மட்டும் நிகழ்த்தப்படுவது இல்லை. நீரோடி முதல் பழவேற்காடு வரையிலும் தமிழ்நாட்டின் சுமார் 1,078 கி.மீ. நீளக் கடற்கரையில் 500-க்கும் அதிகமான மீனவக் கிராமங்கள் இருக்கின்றன. சுமார் 15 லட்சம் மீனவர்கள் வசிக்கிறார் கள். பல்வேறு வகையான தொழிற்சாலை நச்சுக் கழிவுகள் கடலில்தான் கொட்டப்படுகின்றன. கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது ஒரு பக்கம் என்றால், சுற்றுலா என்ற பெயரில் மீனவர்களின் கடல்பரப்பு அதிவேகமாக சுருக்கப் படுகிறது. 'சுனாமி’ பயம் காட்டி கடலோரத்திலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு பெரிய பெரிய நட்சத்திர விடுதி களைக் கட்டுகின்றனர். இறால் பண்ணைகள், சேது கால்வாய்த் திட்டம், கல்பாக்கம்; கூடங்குளம் அணு உலைகள் என அனைத்தும் மீனவர்களையே குறிவைக்கின்றன. இத்தனை இன்னல்களுக்கு இடையில் பாடு பார்க்க கடல் சென்றால், இலங்கை ராணுவம் சுட்டு வீழ்த்துகிறது. எல்லை தாண்டுவதால்தான் இது நடக்கிறது என்றால், இதை நிறுத்துவதற்கான சாத்தியமான வழி உள்ளதா?
''இருக்கிறது. நாங்களே அதை அரசுக்குப் பரிந்துரைத்திருக் கிறோம். மன்னார் வளைகுடாவில் கன்னியாகுமரிக்கு அருகில் வெர்ச்பேங்க் என்ற கடற்பகுதி இந்தியக் கடல் எல்லையைச் சேர்ந்தது. நிறைய மீன்வளம் கொண்ட அந்தப் பகுதியை இலங்கை அரசு, இலங்கை மீனவர்களுக்காகக் குத்தகைக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது. இலங்கையில் போர் நடந்தபோதும், இப்போதும் இலங்கை மீனவர்கள் அங்குதான் மீன் பிடித்துவரு கிறார்கள். அதேபோல ராமேஸ்வரம் மீனவர்களுக்கும் மீன்வளம் மிக்க ஓர் கடல் எல்லையைக் குத்தகைக்கு எடுத்துத் தர வேண்டும். போருக்குப் பிறகான இலங்கையின் புனர் வாழ்வுக்கு 4,200 கோடி ரூபாய் தருகிற இந்திய அரசு தன் சொந்த நாட்டு மீனவர்களின் நலனுக்காக 500 கோடி ரூபாய் செலவழித்தால் இது சாத்தியமான திட்டம்தான்.
பாக் நீரிணையில் ஒரே ஒரு இடத்தில்தான் ராமேஸ்வரத்து மீனவர்கள் எல்லை கடக்கிறார்கள். அங்கு மட்டும்தான் தொடர்ந்து பிரச்னையும் ஆகிறது. அந்தப் பகுதியையோ, அதை ஒட்டிய மீன்வளம் மிகுந்த பகுதியையோ குத்தகைக்கு எடுத்துத் தந்தால், இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம். 1952 வரை தங்கச்சிமடம் மீனவர்கள் லைசென்ஸ் பெற்றுக்கொண்டு இலங்கைக் கடற்பகுதியான தலைமன்னாருக்குப் போய் தங்கியிருந்து மீன் பிடித்தி ருக்கிறார்கள். அந்த முறையையும் திரும்பக் கொண்டுவரலாம்!'' என்கிறார் அருளானந்தம்.
ராமேஸ்வரத்து மீனவர்கள் பயன் படுத்தும் அதிநவீன வலைகளைத்தான் இலங்கைத் தமிழ் மீனவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். 30 ஆண்டு காலப் போரின் விளைவாக அவர்களுக்கு மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் கிடைக்கவில்லை. அவற்றைப் பெறுவதற்கு அவர்களுக்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கலாம். அதுவரையிலும் தமிழ்நாட்டு மீனவர்களின் வலை பயன்படுத்தும் முறையை ஒழுங்குபடுத்துவதும், அதை ஓர் ஒப்பந்தம் மூலம் செயல்படுத்துவதும் இதற்கு ஒரு தற்காலிகத் தீர்வைத் தரலாம் என்கிறார்கள் மீனவப் பிரதிநிதிகள். மீன்வளம் மிக்க மூக்கையூர் கடல் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் ஒன்றை உருவாக்கினால், சரிபாதி ராமேஸ்வரம் மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு கொண்டுவர முடியும் என்பதும் அவர்களின் கருத்து. 
இது ஒரு பக்கம் இருக்க... நல்ல உடல் வலுவும், வீரமும், திருப்பித் தாக்கும் வலுவும், மன உறுதியும் கொண்டவர்கள் மீனவர்கள் என்பது அனைவரும் அறிந்தது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட் டத்தில் பங்கெடுப்பது மீனவர்கள் என்பதால்தான், அது ஒரு வருடத் தைக் கடந்தும் கட்டுப் பாட்டுடனும் மன உறுதியுடனும் தொடர்கிறது என்ற கருத்தை பலரும் சொல்கிறார்கள். அப்படி இருக்கும் போது கடலில் தன் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலை எத்தனை காலம்தான் மீனவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்?
''தாங்கள் எல்லை கடந்து மீன் பிடிக்கிறோம் என்ற எண்ணம் இருப்பதால்தான், இந்த அடக்கு முறைகளை மீனவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள். அதுவும் ஒரு கட்டத்துக்கு மேல் தாங்காது. தங்களுக்கு என்று ஓர் அரசியல் இயக்கமோ, தலைமையோ இல்லாததன் விளைவு தான் இவை எல்லாம் என்பதை மீனவ இனம் உணரத் தொடங்கி யிருக்கிறது. மீனவக் கிராமங்களுக்கு இடையிலான இணைப்பும், போராட்ட வழிமுறை களையும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். மீனவ மக்கள் திரண்ட சக்தியாகப் போராடும் காலம் ஒன்று விரைவில் வரும்!'' என்று உறுதியாக முடிக்கிறார் அருளானந்தம்.
 தூத்துக்குடி துறைமுகம் வந்த மர்ம கப்பல்
2008-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து மும்பையை தாக்கி 170 பேரை கொன்று குவித்தது நாட்டின் பாதுகாப்பையே கேள்விக் குறியாக்கியது. (பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கசாப் மும்பை ஏரவாடா சிறையில் 2012ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தூக்கிலிடப் பட்டார்).
மும்பை தாக்தலுக்கு பிறகு கடலோர பாதுகாப்பில் கவனம் செலுத்த முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் நாட்டின் பாதுகாப்பையே கேலிக்கூத்தாக்கும் வகையில் தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி இரண்டு மூன்று நாள் சுற்றிக் கொண்டிருந்த அமெரிக்க கப்பல் 2013 அக்டோபர் 12-ம் தேதி, இந்திய கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்தனர். பின், தூத்துக்குடி துறை முகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
''சீ மேன் கார்டு ஓகியோ'' என்ற அந்த கப்பல் மேற்காப்பிரிக்க நாடான சீயாரா லியோனில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்கா வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 'அட்வென்ட் போர்ட்’ என்ற தனியார் மெரைன் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமானது அந்த கப்பல் என்றாலும் அதில் அனுமதியைவிட அதிகமாக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்ததுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
தமிழக கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பவானீஸ்வரி, மத்திய அரசின் ரா உளவு அமைப்பின் உதவி கமிஷனர் சசிகுமார் ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு டீமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர், கப்பலில் இருந்த 35 நவீன துப்பாக்கிகள், 5680 தோட்டாக்களை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றி தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு சொந்தமான ஆயுத கிடங்கில் ஒப்படைத்தனர். கப்பல் கேப்டன் டூட்னிக் வாலன்ஸ்டின்  உள்பட கப்பலில் இருந்த 35 பேரும் கைது செய்யப்பட்டனர்.
''அந்தக் கப்பல் கடைசியாக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து புறப்பட்டு வந்திருப்பதும் கொச்சியில் கப்பலை சுத்தப்படுத்திய போது ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று சான்று பெற்றுள்ளனர். அப்படி இருக்கும் போது கப்பலுக்கள் துப்பாகிகள், தோட்டாக்கள் வந்தது எப்படி? கப்பல் செல்ல அனுமதி இல்லாத மன்னார் வளைகுடா பகுதிக்குள் அமெரிக்க கப்பல் ஆயுதங்களுடன் நுழைந்தது ஏன்? கப்பலுக்கு திருட்டுத்தனமாக டீசல் வாங்கியது ஏன்?'' என்றெல்லாம் சந்தேகம் வலுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங் கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் பகுதியில் தூத்துக்குடி துறைமுகம், விஜயநாராயணபுரம் ஐ.என்.எஸ். கட்டபொம்மன்(கடற்படை தளம்), இஸ்ரோ மகேந்திரகிரி திரவ எரிபொருள் பரிசோதனை மையம், கூடங்குளம் அணு மின் நிலையம் என்று நாட்டின் முக்கிய மையங் களின் பாதுகாப்பை இந்த சம்பவம் கேள்விக்குறியாக்கி உள்ளது..
 வினோதினி ஆசிட் வீச்சு
தமிழகத்தை உலுக்கிய சம்பவம் வினோதினி ஆசிட் வீச்சு. காரைக்காலை சேர்ந்த பெண் இன்ஜினீயர் வினோதினி (23). இவரை ஒருதலையாகக் காதலித்த சுரேஷ் என்ற வாலிபர், தமது காதலை ஏற்க மறுத்ததால், வினோதினி மீது கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி ஆசிட் வீசினார்.
இத்தாக்குதலில் வினோதினியின் முகம், கை, தோள் முழுவதும் பாதித்தது. 2 கண்களிலும் பார்வை இழந்த சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று உயிருக்கு போராடியவர் இந்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.
காரைக்கால் எம்.எம்.ஜி. நகரைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் வினோதினி. கடந்த ஆண்டு, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக காரைக்கால் வந்தார் வினோதினி. பண்டிகை முடிந்து சென்னைக்கு செல்வதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி இரவு 10 மணியளவில் காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு தந்தை மற்றும் நண்பர்ருடன் வினோதினி சென்று கொண்டிருந்தபோது சுரேஷ் குமாரால் அமில வீச்சிற்கு ஆளானார்.
திருவேட்டக்குடியில் கட்டிட வேலைக்கு பயன்படும் உபகரணங்களை வாடகை விடும் தொழில் செய்து வந்தவர் சுரேஷ்குமார். வினோதினியை ஒரு தலையாக காதலித்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும், வினோதினியின் தந்தை ஜெயபாலிடடும் மகளை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார் சுரேஷ்குமார். இதில் வினோதினிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் துளியும் விருப்பமில்லை. இந்நிலையில் தான் ஊருக்கு செல்ல விருந்த வினோதினி மீது சக்தி வாய்ந்த அமிலத்தை வீசியுள்ளார். சக்தி வாய்ந்த அமிலம் வினோதினியின் முகத்தை முற்றிலுமாக சிதைத்து விட்டது.
இந்நிலையில் சென்னை கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், அங்கிருந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். கண்களில் அமிலம் பட்டு பார்வை பறிபோனது. மூக்கு, உதடு பகுதிகள் அமிலத்தால் சேதமடைந்து மூச்சு விடுவதற்கே வினோதினி சிரமப்பட்டார். பார்வையிழந்து தன்னை செயலற்றவளாக முடக்கி போட்ட சுரேஷ் குமார் குறித்து, அவனை சும்மா விடாதீங்க. இது போல நிலைமை இனி யாருக்கும் வர கூடாது என்று அடிக்கடி மருத்துவமனையில் சொல்லி அழுது இருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று மூச்சுதிணறல் காரணமாக வினோதினியின் உயிர் பிரிந்தது. சுரேஷ் குமாரை கைது செய்தது காவல்துறை. கடந்த ஜூன் மாதம் இவ்வழக்கு விசாரணை காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. இவ்வழக்கை விரைவாக முடிக்க வேண்டி காவல்துறை துரிதமாக செயல்பட்டு 560 பக்க குற்றப் பத்திரிகை தாக்க செய்தது. மாவட்ட நீதிபதி மார்க்கரட் ரோசலின் விசாரனையை மேற்கொண்டனர். ஆசிட் வீச்சில் இளம் பெண் வினோதினி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆகஸ்ட் 20ம் தேதி அன்று ஆயுள் தண்டனை விதித்துள்ள காரைக்கால் அமர்வு நீதிமன்றம், ஒரு லட்சம் அபராதம் விதித்து இருக்கிறது.மரணிக்க வைக்கப்பட்ட காதல்
மரணிக்க வைக்கப்பட்ட காதல்
 2012-ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்த திவ்யா இளவரசன் காதல் அத்தியாயம், 2013-ம் ஆண்டு ரத்தக்கறையுடன் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த இளவரசனோடு மரணத்தில் முடிந்தது.
காதலித்த உள்ளங்கள் திருமணத்தில் இணைவதா? அல்லது காதலோடு பிரிவதா? என்பதை   காதலர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதிகம் போனால், பெற்றோர்கள் தலையிடலாம். ஆனால், திருமணத்தில் இணைந்த திவ்யா-இளவரசன் காதல் ஜோடி, சேர்ந்து வாழக்கூடாது என்பதை சாதியும், அதன் அடித்தளத்தின் மேல் எழுந்து நிற்கும் நாடக அரசியலும் முடிவு செய்தன. 
2012-ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்ட திவ்யா இளவரசன் காதல் ஜோடியை கதா பாத்திரங்களாக்கி, நாடக அரசிய லைத் தொடங்கினார்கள்.  தர்ம புரியில் பிரச்னைக்குப் புகை மூட்டம் போடப்பட்டது. அதையடுத்து சரசரவென பற்றிய தீயில் தலித்துகள் வாழும் 17  கிராமங்கள் பற்றி எரிந்தன. அவர்களின் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. குறி வைத்து வாழ்வாதாரங்கள் அழிக்கப் பட்டன.
இந்தக் களேபரங்களால் மன ரீதியாக, பொருளாதார ரீதியாக திவ்யாவும் இளவரசனும் தனித்துவிடப்பட்டனர். திவ்யாவின் அம்மா தேன்மொழி மகளின் மனதை மெல்ல மெல்ல கரைக்கத் தொடங்கினார். இதையடுத்து ஒரு நாள் திடீரென இளவரசனைப் பிரிந்து சென்றார். பிரச்சினை நீதிமன்றம் வந்தது.
பா.ம.க.வழக்கறிஞர்கள் திவ்யாவுக்காகத் தனது படை பரிவாரங்களுடன் நீதிமன்றக் கோதாவில் குதித்தார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளிடம் தனியாக தன் தரப்பை எடுத்து வைத்த திவ்யா, இளவரசன் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். ஊர் ரெண்டு பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், கணவரை இழந்து தவிக்கும் என் தாயுடன் செல்வதையே விரும்புகிறேன். எதிர்காலத்தில் இளவரசனுடன் சேர்ந்து வாழ்வது பற்றி முடிவெடுப்பேன் என்றார். இடையில் என்ன நடந்ததோ தெரியாது, மீண்டும்  ஜுலை-3 ம் தேதி நீதிமன்றம் வந்த திவ்யா, இனிமேல் இளவரசனுடன் சேர்ந்து வாழவே முடியாது என்று திட்ட வட்டமாக அறிவித்தார்.
அப்போதே இளவரசன் மன தளவில் செத்துப்போனான். அதற்கு மறுநாள் ஜுலை 4-ம் தேதி,  தர்மபுரி,கலைக் கல்லூரிக்கு பின்புறமுள்ள ரயில் தண்டவாளத்தில், உச்சி வெயில் நேரத்தில், ரத்தக் கறைபடிந்த வெள்ளை நிறச் சட்டையுடன் பிணமாகக் கிடந்தார் இளவரசன். அவரது பேண்ட் பாக்கெட்டில் இரண்டு காதல் கடிதங்கள் இருந்தன. அடுத்த ஜென்மத்திலாவது ஒன்றாகச் சேர்வோம் என்று வேண்டியிருந்தார் அந்தக் கடிதத்தில். அதன்பிறகு அது கொலையா தற்கொலையா என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. 
இளவரசனின் மரணம், ஆதிக்க சாதியினர் அதிகம் உள்ள ஊர்களில் வசிக்கும் காதலர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகரீகம் பெற்ற சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியை நியாயம் அறிந்தவர்களிடம் ஏற்படுத்தியது. சமூக நீதியின் தாயகத்தில் தலித்துகளின் நிலை தமிழகத்தில் இவ்வளவுதானா என்ற ஏளனத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவை எதற்கும் இன்று வரை விடை இல்லை.
 சர்ச்சையில் சிக்கிய தமிழ்த்திரைப்படங்கள்
விஸ்வரூபம்
கமலஹாசன் நடித்து, இயக்கிய விஸ்வரூபம், இந்திய உளவாளியைப் பற்றிய த்ரில் படம். நடிகைகள் பூஜாகுமார், ஆண்ட்ரியா மற்றும் ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் நடித்தது. 95 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான விஸ்வரூபம் படத்தை தமிழ் மற்றும் தெலுங்குவில் கடந்த ஜனவரி 25ல் டி.டி.ஹெச் மூலம் திரையிட கமல ஹாசன் திட்டமிட்டார். தெலுங்குவில் டப்பிங் செய்யப்பட்டது. டிடிஎச் ஒளிப்பரப் பிற்கு தியேட்டர் ஓனர்கள் பிள்ளையார் சூழியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அடுத்து, படத்தில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளைப்போலவும், குரான் தவறுதலாகச் சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும் முஸ்லிம் அமைப்பு கள் குற்றம் சாட்டின. இதுதொடர்பாக தமிழக அரசையும்,நீதிமன்றத்தையும் நாடி படம் வெளியிடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை வைத்தனர்.இதனால் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. படத்தை ஆவலுடன் எதிர்பார்த்த கமலஹாசன் ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
இதற்கிடையில் விஸ்வரூபம் படம் திரையிடப்படாததால், கமலஹாசன், தனது மனக்குமுறலை பத்திரிக்கையாளிடம் கொட்டித் தீர்த்தார். ஒரு கட்டத்தில், தமிழகத்தை விட்டு வெளியேறுவதாகவும் அதிரடியாக அறிவித்தார்.
இதன்பிறகு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவது தொடர்பாக முஸ்லிம் அமைப்புகள், படக் குழுவினர் ஆகியோருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை ஏற்படுத்தியது. சர்ச்சை களுக்கு நடுவில் இந்தியில் விஸ்வ ரூபம் படம் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி திரையிடப்பட்டது. தமிழகத்தில் பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வந்தது. சர்ச்சையில் சிக்கி மீண்ட விஸ்வரூபத்தை பார்க்க ரசிகர்கள், மக்கள் கண்டு ரசித்தனர்.
இந்த படத்தை யு டியூப்பில் தமிழில் 6,82,000, இந்தியில் 1,94,000, தெலுங்கில் 20,000 பேர் பார்த்துள்ளனர். முதல் முறையாக புதிய நியூ ஆட்டோ 3 டி சவுன்ட் தொழில்நுட்பம் இப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்து விஸ்வரூபம் 2 படத்தை கமலஹாசன் நடித்து, இயக்கி திரையிட தயராக உள்ளது.
தலைவா
துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்த படம் தலைவா. இப்படம் மும்பை தாராவி குடிசை வாழ் பகுதி மக்களை மையப்படுத்தி எடுக்கப் பட்டதாகும். அமலாபால் ஹீரோயின். மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையும் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ் அமைத்துள்ளார்.  சத்யராஜ் குடிசை வாழ் பகுதி மக்களின் தலைவராக இருக்கிறார்.
சத்யராஜ் கொல்லப்பட, விஜய் தலைமை ஏற்க கதை நகர்கிறது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியைத் தவிர மற்ற இடங்களில் திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 7ம் தேதி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.கே.கர்ணன் என்பவர், நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.
அதில், தலைவா படத்தின் கதை, எனது தாத்தா எஸ்.எஸ்.கே, அப்பா எஸ்.கே.ஆர் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக எடுக்கப்பட்டுள்ளது. எனது தாத்தாவும், அப்பாவும் மும்பை தாராவி தமிழ் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். இதே போன்று தான் தலைவா படக்கதையும் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். இப்பிரச்னைக்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆனால் தலைவா படம் வெளியாக இருந்த தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை யடுத்து தமிழகத்தில் மட்டும் வெளியிடப்படவில்லை. மற்ற மா நிலங்களில் படம் வெளியானது. படம் வெளியிட தாமதமானதால் திருட்டு சிடிக்கள் வெளிவரத் தொடங்கின. இதனால் தமிழகத்தில் படத்தை வெளியிட உதவ வேண்டும் என்று படத் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின், முதல்வர் ஜெய லலிதாவுக்கு கோரிக்கை வைத்தார். மேலும், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
இதற்கிடையில் தலைவா பட பிரச்னை தொடர்பாக உண்ணா விரதம் இருக்க படக்குழு சார்பில் காவல் துறையிடம் கேட்கப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டது. உண்ணா விரதத்தில் நடிகர் விஜய், நடிகை அமலாபால், சத்யராஜ் மற்றும் படக் குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். பின்னர் டைம் டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்டு தமிழகத்தில் 20ம் தேதி திரையிடப்பட்டது.
இதுவரை விஜய் தமிழில் 57 படங்களில் நடித்துள்ளார். அவரது 56வது படம் தான் தலைவா. படம் வெளியிடப்பட்ட பிறகு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டார். 2013ம் ஆண்டு வசூலில் இந்த படத்துக்கு முதலிடமாம்.
சென்னையில் உலக செஸ் சாப்பியன் போட்டி
ஆறாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்ல, சொந்த மண்ணில் களம் இறங்கினார் விஸ்வநாதன் ஆனந்த். தன்னைவிட 20 வயது இளையவரான மேக்னஸ் கார்ல்ஸன் எனும் நார்வே வீரரை எதிர்கொண்டார்.
கார்ல்ஸன், தற்போது ரேக்கிங்கில் உலகின் நம்பர் ஒன் வீரர். ஆனந்த், உலக சாம்பியன் என்றாலும் ரேங்கிங்கில் ஏழாவது இடத்தில் உள்ளார். இந்த நூற்றாண்டின் மிகக் கடுமையான செஸ் போட்டியாக இருக்கும் என இந்த போட்டி கணிக்கப்பட்டது. ஆனந்த் - கார்ல் ஸன் மோதிய போட்டி, சென்னையில் நவம்பர் 7 முதல் 26-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
செஸ் ஜாம்பவான் விளாடிமிர் க்ராம்னிக்கைத் தோற்கடித்து, ஆனந்தை எதிர்த்து விளையாடும் வாய்ப்பைப் பெற்றிருந்தார் கார்ல் ஸன். மேலும், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆனந்துக்கு எதிரான போட்டியில் கார்ல்ஸன்தான் வின்னர். கார்ல்ஸனின் பலமே யூகிக்க முடியாத கேம் பிளான்தான். 'முதலில் நிதான மாக ஆடுவது, அதன் பிறகு தடுத் தாடுவது, பிறகு அதிரடியாக ஆடுவது என எந்த ஃபார்முலாவும் இல்லாமல் கார்ல்ஸன் விளையாடுவர். அதனால் அவருடைய அடுத்த மூவ் இப்படி இருக்கும் என யாராலும் கணிக்க முடியாது’ என்றனர் செஸ் நிபுணர் கள்.
ஆனந்தும் கார்லஸனும் இந்த போட்டிக்கு முன்பு வரை, 29 முறை நேருக்குநேர் மோதி யுள்ளனர். இதில் ஆறு முறை ஆனந்தும், மூன்று முறை கார்ல்ஸனும் வெல்ல, 20 போட்டிகள் டிராவில் முடிந்திருந்தன.
செஸ் விளையாட்டில் ஒவ்வொரு பிளேயருக்கும் பின் நான்கு பேர் கொண்ட குழு இருக்கும். பயிற்சியின் போது இவர்கள் பல்வேறு விதங் களில் வீரருக்கு உதவுவார்கள். 2007 -08-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் போது ஆனந்த் அணியில் இருந்தார் கார்ல்ஸன். அதனால் ஆனந்தின் ப்ளஸ், மைனஸ்களைத் கார்ல்ஸன் தெரிந்துவைத்திருப்பார் என்கின்றனர் விளையாட்டு நோக்கர்கள். அவர்கள் கருதியது போலவே சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்தை வீழ்த்தி சாதனை படைத்தார் மேக்னஸ் கார்ல்ஸன்.

No comments:

Post a Comment