Friday 24 January 2014

இந்திய சினிமா 100 - பகுதி 2

இந்திய சினிமா 100 - பகுதி 2
Posted Date : 11:12 (14/12/2013)Last updated : 11:12 (14/12/2013)
தென்னிந்திய சினிமா
தமிழகத்தின் முதல் திரையரங்கு
மேஜர் வாரிக் என்பவர் சென்னையில்  1900ஆண்டில் கட்டிய 'எலக்டரிக் தியேட்டர்’  என்பது தான் தமிழகத்தில் முதல் திரையரங்கு  ஆகும். இது இப்பொழுது அண்ணா சாலையில் உள்ள போஸ்ட் ஆபீஸ் கட்டிடத்தின் ஒரு பகுதியாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறு மௌனப்படங்கள் இங்கு திரையிடப்பட்டன.
லிரிக் தியேட்டர்
மவுண்ட் ரோடில் நீண்ட காலம் சென்னை வாழ் ஆங்கிலேயர்களின்  மனமகிழ்வு மன்றமாகத் திகழ்ந்த லிரிக் தியேட்டர் 1905ல்  கோஹன் என்பவரால் கட்டப்பட்டது. இந்த அரங்கில் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட  சில மௌனப்  படங்களும் திரையிடப்பட்டன.
தொடக்க கால சினிமாவில் பெண்கள்
இருபதாம்  நூற்றாண்டின் தொடக்கத்தில் சினிமா பார்ப்பதே பாவம் என்ற நம்பிக்கை பல வைதீகக் குடும்பங்களில் இருந்ததால், பெண்களை சினிமாவில் நடிக்க வைக்க இயலாத நிலை நிலவியது. விலைமகளிர் கூட சினிமாவில் நடிக்க முன்வரவில்லை.
இந்தியாவின் முதல் படமான ராஜா ஹரிச்சந்திராவில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தனர்.
1918ல் உருவான தென்னிந்தியப் படமான 'திரௌபதி வஸ்திராபரணம்’ என்னும் படத்தில் திரௌபதியாக நடித்தவர் வயலெட்பெரி என்னும் அயல்நாட்டுப் பெண்மணி.
1926ல் உருவான 'அனார்கலி’ திரைப்படத்தில் ரூபிமேயர்ஸ் என்ற யூதப்பெண்ணை சுலோசனா என்று பெயர் மாற்றி நடிக்க வைத்தனர்.
ரெனீஸ்மித் என்கிற ஆங்கிலோ- இந்தியப்பெண்மணியின் பெயரை சீதா தேவி என்று பெயர் மாற்றி  'லைட் ஆப் ஏசியா’ என்கிற படத்தில் கௌதமரைக் காதலிக்கும் இளவரசி கோபாவாக நடிக்க வைத்தனர். நடிக்க வரும் பெண்களுக்கு பெயர் மாற்றுவது என்பது சினிமா தொடங்கிய காலத்திலேயே உருவாகி விட்டது.
துர்காபாயும் அவரது மகள் கமலாபாய் கோகலேயும் தாதா சாஹேப் பால்கேயின் இரண்டாவது படமான மோகினி பஸ்மசூர்(1914) என்ற படத்தில் நடித்தனர். இவர்களே திரைப்படத்தில் நடித்த முதல் இந்தியப் பெண்மணிகளாவர்.
ஒரு பெண் தயாரித்த முதல் இந்தியப் படம் புல்புல் எ பரிஸ்தான்(1926). ஃபாத்மா பேகம். என்பவர் இயக்கியுள்ளார்.
சாமிக்கண்ணு வின்சென்ட் வாங்கிய சினிமா புரொஜெக்டர்
1905ல் திருச்சியில் தென்னிந்திய ரெயில்வேயில் குமாஸ்தாவாக இருந்த, சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் டியூப்பாண்ட் என்ற பிரெஞ்சுக்காரரிடமிருந்து ஒரு சினிமா புரொஜெக்டரை முதன் முதலாக விலைக்கு வாங்கி ஊர் ஊராகச் சென்று கொட்டகையில் சினிமா காட்டினார்.
தென்னிந்தியாவில் முதல் மௌனப் படம்
1916 ஆம் ஆண்டு  திரு. R. நடராஜ முதலியார். உருவாக்கிய முதல் படம் 'கீசக வதம்',. தென்னிந்தியாவின் முதல் மௌனப் படம் இதுதான். இந்தப் படம் நம்மிடம் இப்போது இல்லை. மாகாத்மா காந்தியின் மகனான தேவதாஸ் காந்தி இந்தப்படத்தின் இந்தி மொழி உரையாடல்களுக்கான வசனங்களை எழுதி இருந்தார்.
கோவை 'வெரைட்டி ஹால்’
1917ஆம் ஆண்டு கோவை டவுன் ஹால் ரோட்டில், சாமிக்கண்ணு வின்சென்ட் கட்டிய 'வெரைட்டி ஹால்’ தென்னிந்தியாவின் தொடக்ககால சினிமா தியேட்டர்களில்  குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவின் முதல் சினிமா கம்பெனி
தென்னிந்தியாவை பொறுத்தவரையில் சினிமா என்பது ஆர்.நடராஜ முதலியாராலேயே தொடங்கப்பட்டது. 1917ல் சென்னையில் இந்தியன் பிலிம் கம்பெனி என்ற நிறுவனத்தை இவர் உருவாக்கினார்.
சென்னையில் முதல் முழு நேர சினிமா தியேட்டர்
தெலுங்கு சினிமாவின் தந்தையான இரகுபதி வெங்கையா நாயுடு. தென்னிந்தியாவில் முதன்முதலில் சொந்தமாக, சென்னை நகரத்தின் நிரந்தரமான, முழு நேர முதல் சினிமா தியேட்டரான 'கெயிட்டி’யை 1912ல் கட்டினார். கிரவுன், ராக்ஸி என்ற பெயர்களில் மேலும் இரு கொட்டகைகளை சென்னையில் கட்டினார். இவரது நினைவாக தெலுங்கு சினிமாவின் உயரிய விருதான நந்தி விருதுகளில் ஒரு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
சென்னையில் முதல் சினிமா ஸ்டுடியோ
ஆர்.பிரகாஷ் ராக்ஸி, கெயிட்டி தியேட்டருக்கு பின்னால், ஸ்டார் ஆப் தி ஈஸ்ட் என்ற ஸ்டூடியோவைக் கட்டினார். இங்கு பீஷ்மப்பிரதிக்ஞா, கஜேந்திரமோட்சம் போன்ற ஊமைப்படங்களைத் தயாரித்தார். இவருடன் பணியாற்றியவர்களில் சிலர் ஒய்.வி.ராவ், பி.வி.ராவ், சி.புல்லையா, எ.நாராயணன், ஜித்தன் பேனர்ஜி ஆவார்கள்.
மௌனப் பட இயக்குனர் ராஜா சாண்டோ
ஆர்.பத்மநாபன்  என்பவரால் சைதாப்பேட்டை வட்டாரத்தில் அசோசியேட் பிலிம்ஸ் என்ற ஒரு ஸ்டூடியோ உருவானது. இவர் பிரபல ஊமைப்பட நடிகர், நட்சத்திர இயக்குநர், தமிழ் சினிமா முன்னோடியான ராஜா சாண்டோ (பி.கெ.நாகலிங்கம்), இயக்கத்தில் பல மௌனப் படங்களைத் தயாரித்தார்.
தென்னிந்தியாவில் முதல் பேசும் படம்
தென்னிந்தியாவின் முதல் பேசும் படம் தெலுங்கில் வெளிவந்த 'பக்த பிரகலாதா’(1931). இப்படத்தைத் தயாரித்து இயக்கிய பி.வி.ரெட்டி என்பவர்தான் தமிழகத்தின்  முதல் பேசும் படமான காளிதாஸ் (1931.) என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால் காளிதாஸ் முழுக்க முழுக்க தமிழ் படம் இல்லை. படத்தின் கதாபாத்திரங்கள் பல மொழிகள் முக்கியமாகத் தெலுங்கில் அதிகம் பேசினர்.
முதல் மலையாளத் திரைப்படம்
ஜே.சி.டேனியல் இயக்கிய  விகதகுமாரன்(1928) என்ற திரைப்படம் தான் முதல் மலையாள முழுநீளத் திரைப்படம் ஆகும்.
முழுக்கத் தமிழ் பேசிய முதல் தமிழ்த் திரைப்படம்
முழுக்க முழுக்க தமிழ் பேசிய முதல் திரைப்படம் 1933 ஆம் ஆண்டு வெளியான கலவா. அர்ஜுனனின் பெருமையைச் சொன்ன இந்தப் படத்தை இயக்கியவர், P.P.ரங்காச்சாரி.
தொடக்கக்கால தமிழ் சினிமாக்கள்
1931 முதல் 6ஆண்டுகளில் தமிழில் 100 படங்கள் எடுக்கப் பட்டிருந்தன. இவைகளில் 10 படங்களைத் தவிர மீதமுள்ள 90 படங்களும் புராணக் கதைகள், நாட்டுக் கதைகள். தொடக்கக் கால தமிழ் சினிமாவைப் பற்றி பாரதிதாசன், 'பரமசிவர் வந்து, வந்து அருள் புரிந்து போவார், பதிவிரதைக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்’  என்று கிண்டலாகப் பாடினார்.
ராஜா சாண்டோ இயக்கிய மௌனப் படங்கள்
ராஜா சாண்டோ ஒரு முற்போக்கு வாதி. சினிமா மக்களைச் சிந்திக்க வைக்கும்படியும், நல்ல  பாடங்களைக் கற்பிக்கும் கருவியாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினார். அநாதைப் பெண், உஷா சுந்தரி, நந்தனார் என்ற மௌனப்படங்களை  அதே நோக்கில் எடுத்தார்.
தென்னிந்தியாவில் கேளிக்கை மௌனப் படங்கள்
ஆர்.பிரகாசும், எ.நாராயணனும் பொழுது போக்கிற்காகக் கேளிக்கை நிறைந்த ஊமைப்படங்களை எடுத்தார்கள். இவர்களுடைய படங்களில் இனக் கவர்ச்சியும் அதிகம். திரைப்பட சென்ஸார்முறை சட்டப்படி இருந்த போதிலும் அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசு இவைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பாடல்கள் நிறைந்த தமிழ் படங்கள்
அந்த நாட்களில் தமிழ் நாடகம் என்றாலே பாடல்கள் மயம்தான். ஒரு நாடகத்தில் 40 முதல் 50 பாடல்களுக்கு குறையாமல் இருக்கும். அப்படிப்பட்ட நாடகங்கள் திரைப்படங்களாக வந்தபோது, படங்களில் அதே வகையில் பாடல்களாகவே அமைந்து விட்டன. பாடல்கள் நிறைந்த ஒரு படத்தைப் பற்றி விமர்சனம் எழுதிய போது கல்கி, 'இது டாக்கி அல்ல, பாட்டி’ என்று எழுதினார்.
பாடகர்களே நடிகர்கள்
பின்னணி பாடும் முறைக்கான தொழில் நுட்ப வசதிகள் அன்று இல்லாததால், திரையில் தோன்றி நடிப்பவர்களே சொந்தக் குரலில் பேசி, பாடி நடிக்க வேண்டியிருந்தது. எனவே, தமிழ் திரைப்பட உலகின் ஆரம்ப ஆண்டுகளில் பெரும்பாலும் பாடும் திறமையுள்ளவர்களே முக்கிய வேடங்களில் நடிக்க முடிந்தது. எஸ்.வி.சுப்பையா பாகவதர், மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஜி.என். பாலசுப்ரமணியம், முசிறி சுப்ரமணிய ஐயர், வி.வி. சடகோபன், எம்.எஸ். சுப்புலஷ்மி, என்.சி.வசந்த கோகிலம் போன்றோர்களது இசையினால் பல படங்கள் வெற்றிப் படங்களாகவும் திகழ்ந்தன.
தென்னிந்தியாவில் சமூக சீர்திருத்தப்படங்கள்
சமூக சீர்த்திருத்தம் என்ற அடிப்படையில் சுப்ரமணியம் 1930களில் 3படங்களை இயக்கி வெளியிட்டார். பாலயோகினி (1937), சேவா சதனம் (1938), தியாக பூமி (1938) இந்த திரைப்படங்கள் தமிழ் திரைப்பட வரலாற்றில் பெரும் புகழ் பெற்றவை.
தென்னிந்தியாவின் முதல் குழந்தை நட்சத்திரம்
தமிழில் குழந்தைகளை வைத்து எடுத்த முதல் படம்தான் பாலயோகினி (1937). பாலயோகினி படத்தில்  முக்கிய வேடத்தில் நடித்த சிறுமி சுப்ரமணியத்தின் சகோதரனின் மகள் பேபி சரோஜா தென்னாட்டின் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திர மானார்.
தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.டி.
1934-ல் பவளக்கொடி மூலமாக திரைக்கு வந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், தனது இனிமையான குரலால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டார். ஏழிசை மன்னர் என்றும், எம்.கே.டி. என்றும் அழைக்கப்பட்ட தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் சென்னையில் பிராட்வே பகுதியில் இருந்த தியேட்டர் ஒன்றில் இடைவிடாமல் 110 வாரங்கள் ஓடி 3 தீபாவளிகளைக் கண்டது.
தென்னிந்தியாவின் முதல் ஆக்ஷன் ஹீரோ பி.யூ.சின்னப்பா
பி.யூ.சின்னப்பா, கத்திச் சண்டை, குத்துச் சண்டை போன்றவைகளில் வல்லவர். ஆரியமாலா (1941), கண்ணகி (1942), ஜகதலபிரதாபன் ((1943), குபேர குசேலா (1943), கிருஷ்ணபக்தி (1948) போன்ற படங்கள் மூலம் அழியாத புகழைப் பெற்றார்.
தமிழ் சினிமா வரலாற்றில் புது யுகம் கொண்டு வந்த எஸ்.எஸ்.வாசன்
1940களில் தமிழ் திரைப்பட வரலாற்றில் புதியதோர் யுகத்தை உருவாக்கிய எஸ்.எஸ்.வாசன் ஜெமினி ஸ்டூடியோ நிறுவனத்தைத்  துவங்கினார். பாலநாகம்மா (தெலுங்கு 1942), மங்கம்மா சபதம் (1943), சந்திரலேகா (1948), அபூர்வ சகோதரர்கள் (1949) போன்ற பல மகத்தான வெற்றிப் படங்களை எடுத்தவர் வாசன். 1948ல் எஸ்.எஸ்.வாசன் சந்திரலேகா மூலம் ஹிந்தி திரைப்பட உலகில் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டினார். மேலும் பல ஹிந்தி படங்களை எடுத்த எஸ்.எஸ்.வாசன், ஜெமினி நிறுவனத்தை நிறுவி பஹுத் தின் ஹுவே (1954), குங்கட் (1960), 'ருஹஸ்தி (1964), இன்ஸானியத் (1955), ராஜ்திலக் (1958), ஜிந்தகி (1964), சம்சார் (1951) போன்ற படங்களின் மூலம் புகழ் பெற்றார்.
இந்திய சினிமா வரலாற்றில் சந்திரலேகா
எஸ்.எஸ்.வாசன் 1948ல் சந்திரலேகா திரைப்படத்தை மிகப் பிரமாண்டமாக இந்தியில் தயாரித்து இந்திய நாட்டையே திகைக்க வைத்தார். அந்த காலத்தில் அதிக பிரிண்ட்கள் போடப்பட்ட திரைப்படம் என்பதற்காகவும், பிரமாண்டமான ட்ரம் நடனம் இடம் பெற்ற படம் என்பதற்காகவும் சந்திரலேகா இன்றும் இந்திய மக்களின் நினைவில் நீங்காத இடம் பெற்றுள்ளது.
இந்திய சினிமாவில் ஏ.வி.எம்.
புதுமைகள் படைப்பதில் ஆர்வம் கொண்டவரான ஏவி.மெய்யப்பன் தயாரித்த, சபாபதி (1941), ஸ்ரீவள்ளி (1945), நாம் இருவர் (1941), வாழ்க்கை (1950) போன்ற பல படங்கள் தொடக்க கால தமிழ்த் திரைப்பட வரலாற்றில் வெற்றி படங்களாக அமைந்தன. ஏவி.எம். நிறுவனம் பல மொழிகளில் பல வெற்றிப் படங்களை தந்தது. வாழ்க்கையின் இந்தி பதிப்பான பஹார் (1950) படம் இந்தியிலும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பாப் பேடே (1959), பாபி 91957), பாயி பாயி (1956), சோரி சோரி (1956), ஹம் பஞ்சி ஏக் தால் கே 9157), லட்கீ (1955), லாட்லா (1966), மை சுப் ரஹூங்கி (1962) போன்ற படங்களைத் தயாரித்தார்.
திரைத்தமிழை ஆண்ட தென்னாட்டு முதல்வர்கள்
சி.என்.அண்ணாதுரையும், கலைஞர் மு.கருணாநிதியும் சமூகச்சீர்திருத்தம், ஜாதி பேதங்கள் ஒழிப்பு, மூடநம்பிக்கைகளை அகற்றுதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்பட வசனங்களை எழுதி பெரும் புகழ்  பெற்றனர். அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி (1949) திரைப்படத்தில் இடம் பெற்ற 'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு’ என்ற வசனம் பெரும் புகழ் பெற்றது.
ராஜகுமாரி திரைப்படத்தின் மூலம், திரைப்பட வசனக் கர்த்தாவாக அறிமுகமான கலைஞர் கருணாநிதி பராசக்தி திரைப்படத்தில் எழுதிய, 'ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’, 'கோவிலில் குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. அது கொடிய வர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக’ போன்ற வசனங்கள் தமிழ் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாதவை.
வெற்றி தந்த எம்.ஜி.ஆர். பார்முலா
1936-ல் அமெரிக்கரான தமிழ் பட இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனின் சதிலீலாவதி மூலமாகத்  திரைப்படவுலகில் நுழைந்த எம்.ஜி.ராமச்சந்திரன் என்கின்ற எம்.ஜி.ஆர். பின்னாளில் தனக்கென வடிவமைக்கப்பட்ட All Good doer கதாபாத்திரங்களில் நடித்து, தமிழக மக்களின் ஆதரவைப் பெற்று தமிழக முதல்வராக உயர்ந்தார். இவர் நடித்த நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற பல படங்கள் இவரின் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தவை.
பால்கே விருது வென்ற சிவாஜி கணேசன்
1952ல் வெளியான பராசக்தியில், கலைஞர் கருணாநிதி எழுதிய வசனங்களை உயிரோட்டத்தோடும், உச்சரிப்புத் தெளிவோடும், குரல் ஏற்றி இறக்கத்தோடும் பேசி அறிமுகமான சிவாஜி கணேசன், பின்னாளில் பல்வேறு சரித்திர புராணப் படங்களில் சிறப்பாக நடித்து, தமிழ் திரைப்பட வரலாற்றில் தனி இடம் பெற்றதோடு, 1995ஆம் ஆண்டு இந்திய திரைப்படத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்காகத் தாதா சாகிப் பால்கே விருதும் பெற்றார். இவர் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், திருவிளையாடல், முதல் மரியாதை போன்ற பல படங்கள் இவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.
புதுப்பாதை கண்ட கே.பாலச்சந்தர்
1960களில் தமிழ் திரையுலகை புது திசைக்கு நகரச் செய்தவர் இயக்குநர் கே.பாலசந்தர்.  மத்தியத்தர மக்களின் வாழ்க்கையை தன் படங்களில் துல்லியமாக, கலையம்சத்தோடு படம் பிடித்து பெரும் புகழ் பெற்றவர்.எதிர் நீச்சல், மேஜர் சந்திரகாந்த், அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, தண்ணீர், தண்ணீர், போன்ற பல சிறந்த படங்களைத் தந்தவர். நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், கமலஹாசன் போன்ற நடிகர்களை மிளிரச்செய்தவர். ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பெரும் ஆளுமைகளைத் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர். 2010ஆம் ஆண்டு தாதா சாகிப் பால்கே விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.
அம்மா என்றால் அன்பு
ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை (1965) திரைப்படத்தில் அறிமுகமாகிய செல்வி. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண் போன்ற படங்களில் கதாநாயகியாக புகழ் பெற்று, அடிமைப் பெண் திரைப்படத்தில் அவரே பாடிய, 'அம்மா என்றால் அன்பு...’ என்ற பாடலைப் பின்னாளில் தன் அபிமானிகள் பலரையும் பாடவைத்து, தமிழகத்தின் முதல்வராக உயர்ந்தார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகள்
தமிழ் இலக்கியத்தின் செழுமையையெல்லாம் தன் பாடல்கள் மூலம் காற்றில் ஏற்றிய கவிஞர் கண்ணதாசன், இனிமையான இசை தந்த எம்.எஸ்.விஸ்வநாதன், ஐந்து தலைமுறைகளுக்குப் பாடல் எழுதிய கவிஞர் வாலி, தமிழ் கிராமிய இசையால் இந்திய இசை உலகையே திரும்பி பார்க்க வைத்த இளையராஜா...
பானுமதி, சாவித்ரி, பத்மினி, சரோஜாதேவி, ஜெயலலிதா, லட்சுமி, ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி, ராதிகா போன்ற பல்வேறு திரைப்பட நடிகைகள்...
தமிழ் திரைப்படங்களை கிராமங்களை நோக்கி திருப்பிய பாரதிராஜா, திரைக்கென்று தனியான காட்சி மொழியை உருவாக்கி பலரின் கருத்தைக் கவர்ந்த பாலுமகேந்திரா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சகலகலா வல்லவான உலா வந்து, சிறந்த நடிப்புக்கான நான்கு தேசிய விருதுகளை தன் குழந்தைப் பருவம் முதல் பெற்ற கமலஹாசன், எளிமையாக அறிமுகம் ஆகி, தன் தனிப்பட்ட ஆளுமையால் பெரும் உயரத்தை அடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது வித்தியாசமான திரைப்படங்களால் இந்திய திரையுலகையே வியக்க வைத்த மணிரத்தினம், ஷங்கர், இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 6 முறை வென்ற கவிஞர் வைரமுத்து என்று நீண்டு கொண்டே போகின்ற தமிழ் சினிமாவின் ஆளுமைகள்.
முதல் கன்னட திரைப்படம்
முதல் கன்னட திரைப்படம் படம் ஒய்.வி.ராவ் இயக்கி 1934 ல் வெளியான சதி சுலோசனா. பக்த துருவா முன்னதாக ஆரம்பிக்கப்பட்டாலும் அது 2வது படமாகத்தான் வெளிவந்தது.
கன்னடத்தில் புதுயுகம்
1970களில் கர்நாடகத்தில் ஒரு புது இயக்கம் தோன்றியது. இந்த இயக்கத்தினர் உருவாக்கிய படம் டி.பட்டாபிராமி ரெட்டி இயக்கிய சமஸ்காரா (1970). இதில் ஆடல் பாடல் காட்சிகள் கிடையாது. காதல் ஜோடிகள் இல்லை. இந்தப் படத்தின் மூலம் கிரீஷ் கர்னாட் மிகவும் பிரபலமடைந்தார்.
தெலுங்கு சினிமாவில் முதல் முயற்சிகள்
தமிழைப் போலவே 1931ல் தெலுங்கு பேசும் படம் பக்த பிரகலாதா பம்பாயில் இயக்குநர் ஹெச்.எம்.ரெட்டியால் தயாரிக்கப்பட்டது. பல ஆண்டுகள் வரை புராணக் கதைகள், நாட்டுப்புறக் கதைகளாகவே அமைந்திருந்தன. 1938 ல் இவர் தயாரித்த கிருஹலக்ஷ்மி தெலுங்குத் திரைப்படவுலகில் முதல் சமூக வெற்றிப்படமாக அமைந்தது.
கன்னட நடிகர் ராஜ்குமார் சிறந்த கதாநாயக நடிகராக புகழ் பெற்ற தோடு, கன்னட ரசிகர்களின் அபரிமித மான அன்பைப் பெற்றார். பின்னாளில் இந்திய அரசு இவருக்குத் தாதா சாகிப் பல்கே விருது வழங்கியது.
பால்கே விருது வென்ற தெலுங்கு சினிமா முன்னோடிகள்
எல்.வி.பிரசாத் தீண்டாமை ஒழிப்பு, குடியானவரின் நிலப்பிரச்சினைகள் போன்றவற்றை அலசும் மாலபில்லா (1938), ரைது பிட்டா (1939) எனும் படங்களின் மூலம் பிரபலமடைந்தார். இயக்குநராகவும், நடிகராகவும் புகழ் பெற்ற எல்.வி.பிரசாத்துக்கு பிற்காலத்தில் இந்திய அரசாங்கம் தாதா சாகிப் பல்கே விருது வழங்கி கவுரவித்தது.
புராணக் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற என்.டி.ராமராவ், பின்னாளில் அரசியலில் ஈடுபட்டு ஆந்திர பிரதேசத்தின் முதல்வரானார். தெலுங்கு சினிமாவில் பல முத்திரைகள் பதித்த ஏ.நாகேஸ்வரராவ் பின்னாளில் தாதா சாகிப் பால்கே விருது பெற்றார்.
மலையாள மௌனப் படத்தின் ஒரே சாட்சியான மார்த்தாண்ட வர்மா
மலையாளத் திரைப்படம் பேசுவதற்கு முன்பு அந்த நாட்டில் விகடகுமாரன், மார்த்தாண்ட வர்மா எனும் இரு மௌனப் படங்கள் எடுக்கப்பட்டன. மார்த்தாண்டவர்மா படம் ஒரு பிரபல நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இதை இயக்கிய பி.வி.ராவ் நாவல்களைப் படமாக்குவதற்கு, அதன் திரைப்பட உரிமைகளை வாங்காததால் இந்த ஊமைப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இன்று அது பூனாவில் இருக்கும் அரசாங்க நிறுவமான நேஷனல் பிலிம் ஆர்கைவ் ஆப் இந்தியா என்ற திரைப்படப் பாதுகாப்பு நிறுவனத்திடம் பத்திரமாக இருக்கிறது. தென்னிந்தியாவில் எடுக்கப்பட்ட நூற்றுக்கு மேலான ஊமைப்படங்களில் மிஞ்சியது மார்த்தாண்ட வர்மா ஒன்று தான்.
முதல் மலையாள பேசும் படம்
முதல் மலையாள பேசும் படம் 'பால்’ 1938 ல் எடுக்கப்பட்டது. இதைத் தயாரித்தவர் பிரபல தமிழ்த் திரைப்பட அதிபர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம்.
மலையாள திரையுலகின் திருப்பு முனைகள்
மலையாளத் திரைப்பட வரலாற்றிலே ஒரு திருப்பு முனையாக அமைந்த படம்  நீலக்குயில் (1954). இந்தப் படம் வெற்றி பெற்று அரசு பரிசையும் வென்றது.
1964 ல் ராமு காரியட் இயக்கிய செம்மீன் மலையாளத் திரைப்படத்தின் புகழை உலகெங்கும் பரப்பியது. பிரசித்தி பெற்ற தகழி. சிவங்கரன்பிள்ளை எழுதிய நாவல் அடிப்படையில் உருவான இந்தப் படத்தில், கதாநாயகனாக நடித்த சத்யன் இந்தியாவின் தலைசிறந்த நடிர்களில் ஒருவரானார்.
மலையாளத் திரைப்பட உலகின் புகழ் பெற்ற கலைஞர்களில் மது, கொட்டாரக்கரா, அடூர் பாசில், எஸ்.பி.பிள்ளை, ஷீலா, அம்பிகா, குமாரி போன்றவர்கள் சிறந்தவர்கள்.
மலையாள திரைப்படத்தில் புதுயுகம்
1970களில் மலையாள திரையுலகில் புதுயுகம் தொடங்கியது. முதல் படமான சுயம்வரம் அகில இந்திய ரீதியில் பரிசைப் பெற்றது. வித்யாசமான முறையில் இயக்கிய பெருமைக்காக அடூர் கோபால கிருஷ்ணன் புகழ் பெற்றார். இவர் எடுத்த எலிபத்தாயம், மதிலுகள் போன்ற படங்கள் உலகப் பிரசித்தமாயின.

இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கே
பால்கே 1870 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30-ம் நாள் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். பரோடாவில் உள்ள ஓவியப்பள்ளியில் ஓவியம் மற்றும் சிற்பக்கலைகளில் தேர்ச்சி பெற்றார்.அதன் பின் புகைப்படக்கலைஞர், அகழ்வாய்வுத்துறையில் வரைபடக்கலைஞர், மேஜிக் கலைஞர் என பல பணிகள் பார்த்தார். பின்பு இராஜா ரவிவர்மாவிடம் லித்தோகிராப் உதவியாளராகச் சேர்ந்தார். ஜெர்மன் சென்று அச்சுத்தொழில் கற்று, மும்பையில் அச்சகம் ஒன்றைத் தொடங்கினார்.
பால்கேயின் கலை ஆர்வம் அவர் ஆர்வம் காட்டிய ஓவியம், புகைப்படம், வரைகலை, அச்சுத்தொழில் உள்ளிட்ட கலைகளோடு இன்னும் பல கலைகளும் இணைந்த திரைப்படக்கலைக்குப் பிதாமகன் ஆக்கியது.
இயேசு கிறிஸ்து பற்றிய மௌனப்படம் ஒன்றை பார்த்த அவர் நம்நாட்டுக் கடவுள்கள் பற்றிக் குறிப்பாக விஷ்ணு பற்றி படம் எடுக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டார். அதுவே பின்பு  அவரது முதல் படமான இராஜா ஹரிச்சந்திராவைத் தயாரிக்க காரணமாக அமைந்தது.
ராஜா ஹரிச்சந்திரா படம் எடுக்கும் முயற்சியில் பால்கே இறங்கியபொழுது, தேசியத்தலைவர் பாலகங்காதர திலகர் போன்றவர்களிடம் நிதி உதவி திரட்டி சுமார் 8000 ரூபாயோடு லண்டன் சென்று கேமிரா வாங்கிக்கொண்டு வந்தார்.
இராஜா ஹரிச்சந்திரா திரைப்படத்தில் தன்  குடும்ப உறுப்பினர்கள் அனைவரையுமே (மொத்தம் 18 பேர்) பால்கே நடிக்க வைத்தார். அவர் மேற்கொண்ட கடும் முயற்சிகளால் இந்தியாவின் முதல் மௌனப்படமான ராஜ ஹரிச்சந்திரா உருவானது.. இந்திய திரைப்படத்துறைக்குப் பெருந்தொண்டு ஆற்றியவர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை 1969 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு இவர் பெயரில் வழங்கிவருகிறது.
பால்கே உருவாக்கிய 'லங்கா தகனம்’ படம் மிகப்பெரும் வெற்றியைப்பெற்றது. கூட்டம் நிரம்பி வழிந்ததால் அன்றே ஐந்து காட்சிகளாக திரையிடல் மாற்றப்பட்டது. முதல் பத்து நாளில் மட்டும் ரூ.32,000 வரை வசூல் ஆனது. இது அந்த காலத்தில் மிகப்பெரும் வசூல்.
பால்கே, ஆப்தே என்ற ஜவுளித்தொழில் செய்யும் அதிபரின் உதவியுடன் இந்துஸ்தான் பட நிறுவனத்தைத் தொடங்கினார். 1918ல் தொடங்கிய இந்துஸ்தான் பிலிம் கம்பெனி 97 படங்களை எடுத்தது. 
அவற்றில் 40க்கும் மேற்பட்டவை அவரே இயக்கியவை.1937ல் கங்காவர்தன் என்ற பேசும் படத்தை இயக்கினார். தனது 74வது வயதில் 1944 பிப்ரவரி 16ல் காலமானார்.

No comments:

Post a Comment