Friday 24 March 2017

முக்கிய தலைவர்களின் சமாதி இடங்கள்

முக்கிய தலைவர்களின் சமாதி இடங்கள்

- மகாத்மா காந்தி சமாதி - ராஜ்காட்

- ஜவஹர்லால் நேரு சமாதி - சாந்திவன்

- அம்பேத்கர் சமாதி - சைத்ரபூமி

- இந்திராகாந்தி சமாதி - சக்திஸ்தல்

- ஜெயில்சிங் சமாதி - ஏக்தாஸ்தல்

- ராஜீவ்காந்தி சமாதி - வீர் பூமி

- மொரார்ஜி தேசாய் சமாதி - அபய்காட்

- குல்சாரிலால் நந்தா சமாதி - நாராயண்காட்

- ஜகஜீவன்ராம் சமாதி - சமதா ஸ்தல்

- லால்பகதூர் சாஸ்திரி சமாதி - விஜய்காட்

அவநம்பிக்கைகளை எடுத்து எறியுங்கள்.

குருப் 1 தேர்வின் முதல்நிலை தேர்விற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்வாளர்களின் தயாரிப்புகள் இன்னும் புத்துணர்வு பெறவில்லை என நினைக்கிறேன்.இதற்கு காரணம் எதிர் மறையான சிந்தனைதான் .

முதலில் தேர்வின் பால் இருக்கும் அவநம்பிக்கைகளை எடுத்து எறியுங்கள்.

முடிவுகள் தாமதமாக வருகின்றன,இதனால் நம்மின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்ற எண்ண ஓட்டம் நியாயமானது தான்,அதற்காக நம்மின் தயாரிப்புகளில் சோர்வு இருக்க கூடாது.

கணிதம் சார்த்த கேள்விகளுக்கு முக்கியத்துவம் தந்து பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

அதிகளவு திருப்புதல் தேர்வுகளை எழுதி பாருங்கள்.

உற்சாகம் என்பது பந்தில் உள்ள காற்று போன்றது.அது தொடர்ந்து இருந்தால் தான் பந்து எழும்ப முடியும்.அது போல் தான் நாமும் தொடர்ந்து படிக்க முடியும்.

சிந்தனையும் செயல்படும் ஒருங்கே அமைத்தல் வேண்டும்.

வெற்றி என்பது வேரில் தொடக்கி கனியில் முடிவது.ஒரே நாளில் நிகழ்வது அல்ல.எனவே தொடர் முயற்சி வேண்டும்.

மிக பெரிய வெள்ளம் கூட சிறு மழை துளியின் மூலம் தான் தொடங்குகிறது.அது போல் உங்களின் முயற்சி இருக்குமாயின், வெற்றி வெள்ளம் உங்கள் வீட்டின் கதவை தட்டும்.

வலியான வாழ்கை தான் வளமையும் வலிமையையும் நமக்கு தரும்.

வெல்க...வாழ்க.....

முக்கிய கல்வெட்டுகள்:

முக்கிய கல்வெட்டுகள்:
அசோகரின் பாறை கல்வெட்டு - மௌரியர் வரலாறு
ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்
ஜூனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்
மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்
அலாகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்
ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தகசோழன்
ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்

Shortcut

#சமுத்திரகுப்தர் பார்க்க அழகா இருந்தாரு

#கும்பாவுல காரமா சாப்பிட்டா சுவையா இருக்கும்
#ஜூனாகத்-அ இந்தியாவோட இணைக்க படேல் ருத்ரதாண்டவம் ஆடுனாரு
#மண்ட போட்டா எமதர்மன் கூப்ட வருவாரு

#ஸ்ரீரங்கத்தில இருந்து தேவராயர் சண்டைக்கு வந்தப்போ அவரு கைலகால்ல (ஹய்ஹோல்) விழுந்து இரண்டாம் புலிகேசி சரணடைந்தான்
#உத்திரத்துக்கு போகனும்னா பறந்து போகனும்

வங்கதேசத்தின் தாய் மொழி பற்று

மனிதன் கண்டுபிடித்த அற்புதமான விஷயங்களில் மொழிகளுக்குதான் முதலிடம். தாய்மொழி இல்லையென்றால் நாம் என்ன செய்வோம்... யோசித்துக் கூட பார்க்க முடியாது. உலகில் செழுமையும் பழமையும் கலந்த பல மொழிகள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், சமஸ்கிருதம் போன்றவை முதன்மையானவை. எழுத்துரு இல்லாத மொழிகள் எளிதில் மக்களிடையே இருந்து மறைந்து விடும். புத்தர் பேசிய மகாதி மொழி கூட அப்படித்தான் அழிந்து போனது.

வங்கதேசத்தின் தாய் மொழி பற்று

இந்த நூற்றாண்டுக்குள், இன்னும் பல பழமையான மொழிகள் அழிந்து போகும் நிலையில் உள்ளன. மொழிகளைக் காக்க உலகம் முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.  ஒரு மொழியைத் திணிப்பது இன்னொரு மொழியை அழிப்பதற்குச் சமம் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. அதனால், தங்களது விருப்பத்தை மீறி ஒரு மொழி திணிக்கப்படும்போது போராட்டங்கள் வெடிக்கின்றன.

இன்று உலக தாய் மொழி தினம். இப்படி ஒரு தினம் பிறக்கக் காரணமாக அமைந்ததும், ஒரு போராட்டமும் உயிர்  தியாகமும்தான்.
வங்க தேசம் என்றால் உடனே 1971-ல் நடந்த போர்தான் நமக்கு நினைவுக்கு வரும். பாகிஸ்தானிடம் போரிட்டு வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கியது இந்தியாதான். ஆனால், அந்த பிரிவினைக்கான போராட்டம் வெடிக்க முக்கிய காரணமாக இருந்தது வங்கதேச மக்களின் தாய் மொழிப்பற்று. இயற்கையாகவே வங்க தேசம் நம் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள பகுதி. அதனால்தான் மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என முன்னர் அழைப்போம். இங்கு வசிக்கும் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் என்றாலும் அவர்களது தாய்மொழி வங்காளம். அதே வேளையில் பாகிஸ்தானில் வசிக்கும் மக்களின் தாய் மொழி உருது.

பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு, பாகிஸ்தான் முழுமைக்கும் உருது தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் இரண்டுக்குமே உருது மட்டுமே தேசிய மொழி என சட்டம் இயற்றப்பட்டது. பாகிஸ்தான் நாட்டு கரன்சியில் இருந்து வங்க மொழி அகற்றப்பட்டது. பாகிஸ்தான் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், வங்க மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியில் இருந்து நீக்கியது

இதனால் கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் கடும் கோபம் கொண்டனர். 1947 செப்டம்பர் 15-ல் தாய் மொழியைக் காக்க வேண்டுமென கருதி Tamuddun Majlish என்ற அமைப்பு உருவானது. வங்க மொழியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். இந்த அமைப்பின் தலைவராக டாக்கா பல்கலையின் இயற்பியல் பேராசிரியர் அபுல் காசிம் என்பவர் இருந்தார். மாணவர்களிடையே போராட்ட குணத்தை விதைத்தார். மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். களம் சூடானது.

போராட்டம் தீவிரமடையவே,  1948 மார்ச் 19-ல் பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னா, டாக்கா வந்தார். மார்ச் 24-ல் டாக்கா பல்கலைக்கழகத்தில்  மாணவர்களிடையே ஜின்னா உரையாற்றினார். அப்போது, ''முஸ்லிம்களைப் பொறுத்தவரை உருதுதான் ஒரே மொழி. அதனை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு விரோதிகள்''  என்றார். பின்னர் மாணவர்களிடத்திலும் தேசிய மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பேசினார். ஆனால், மாணவர்கள் மசியவில்லை. 1947-ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் நடந்து கொண்டேதான் இருந்தது. இந்தப் போராட்டத்தில் 'வங்கதேசத்தின் தந்தை ' என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானும் முக்கிய பங்காற்றினார்.

மாணவர்கள் போராட்டத்துக்கு டாக்கா மருத்துவப் பல்கலைக்கழகம்தான் முக்கிய ஸ்தலமாக இருக்கிறது என  பாகிஸ்தான் கருதியது. 1952 பிப்ரவரி 21-ம் தேதி அந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், முகமது சலாலூதீன், அப்துல் ஜபார், அப்துல் பெர்கத், ரிஃப்லுதீன் அகமது, அப்துல் சலாம் ஆகிய மாணவர்கள் பலியாகினர். உலகின் முதல் மொழிப்போர் தியாகிகள் இவர்கள்தான். மாணவர்கள் பலியானதையடுத்து, டாக்கா முழுவதுமே கலவரம் பரவியது. அடுத்த நாள் மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் குதித்தனர். அப்போதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 4 பேர் இறந்தனர். வங்கதேசமே ரணகளமாகிப் போனது. வங்க தேச அரசியல் தலைவர்களையும், மாணவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஆயிரக்கணக்கானோர் துன்புறுத்தப்பட்டனர். ஆனாலும் மொழிப்பற்று மிக்க மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. 1954 மே 7-ம் தேதி வங்க மொழியை பாகிஸ்தான், அரசு மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்தது. 1956-ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வங்க மொழியை ஆட்சி மொழிகளுல் ஒன்றாக அங்கீகரித்து சட்டம் இயற்றியது. ஒரு கட்டத்தில் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே போர் நடந்தது. 1971-ல் கிழக்கு பாகிஸ்தான் மேற்கில் இருந்து பிரிந்தது. தாய்மொழி மீது கொண்ட பற்றால் வங்கதேசம் என்ற புதிய நாடும் பிறந்தது.

இன்று உலக தாய் மொழி தினம்!

இறையன்பு ஐ.ஏ.எஸ்- 'வலி(மன)களைத் தாங்குவோம்'

இறையன்பு ஐ.ஏ.எஸ்- 'வலி(மன)களைத் தாங்குவோம்'

வடகிழக்கு மாகாணங்களில் யாராவது கீழே விழுந்தால் நம்மைப்போல் அவர்கள் 'அச்சச்சோ' என்று சூள் கொட்டுவதில்லை. விழுந்தவரைப் பார்த்து எல்லாரும் சிரிப்பார்கள். அவரும் வெட்கமாக சிரித்துக்கொண்டே எழுந்து வருவார். நம்மூரில் நாம் பரிதாபப்பட்டதும் சாதாரணமாக எழுந்தவர் அழுது கொண்டு வருவார். வலியை ஒட்டுமொத்த சமூகம் எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதே அச்சமுதாயத்தின் வலிதாங்கும் திறனை நிர்ணயிக்கிறது.

சின்னவயதிலிருந்தே வலியைப் பெரிதுப்படுத்தாத சூழலை உருவாக்கினால் அதற்காக மனம் உடைகிற வழக்கம் துளிர்விடாது. வலிகளைத்தாங்கும் போது தான் வாழ்க்கையில் நாம் எண்ணியதைச் சாதிக்க முடியும். உலகின் தலைசிறந்த நகைச்சுவைகள் யூதர்களிடம் புழங்குகின்றன. மிகுந்த துயரங்களுக்கு இடையே காலம் தள்ளியவர்கள் அவர்கள். அவர்களுடைய நகைச்சுவையே அவர்களுக்கு உயிர்கொடுத்தது. அந்தச்சிரமங்களை எருவாக ஆக்கிக் கொண்டு எண்ணற்ற கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அதிக நோபல் பரிசுகளை அவர்கள் தட்டிச் ​செல்கிறார்கள் . வலியைக்கூட சிரிக்க கற்றுக் கொண்டு புறந்தள்ள வேண்டும் என்பது அவர்கள் நெறி. வள்ளுவரும் இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்னது அதனால் தான்.

உடல்வலியைத் தாங்கி கொள்கிறவர்கள் கூட மனவலியைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. நாம் எப்போது நம்மை விட மற்றவர்கள் முக்கியம் என்று நினைக்கிறோமோ, அப்போது மனவலியைத் தவிர்க்க முடியாது. நம்மை நிருபிக்க நினைக்கிற போதும் நம்மைவிட அடுத்தவர்கள் முக்கியம் என்று நினைக்கிற போதும் நாம் மகிழ்ச்சியை காவு கொடுப்போம். இன்னொருத்தர் நம்மைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொன்னால் அதற்காக நாம் அவமானப்படவேண்டியதில்லை. உண்மையான அவமானம் நம்மிடம் இருந்து உருவாக்க வேண்டும். நாமே நினைத்துக்கூசுகிற மாதிரி ஒரு செயலைச்செய்தால் அது நம்மை வருத்த வேண்டும் பிறகு திருத்த வேண்டும். மாட்டிக் கொண்டால் உடல் கூசுவது அவமானத்தில் அடங்காது.

ஜப்பானில் உடல் வலியில் ஒப்பற்று விளங்கும் சாமுராய்கள் கூட தற்கொலை செய்து கொள்வது சகஜம். செப்புக்கு என்று அதற்குப்பெயர். மனவலி ஒரு விதமான கண நேர வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. நமக்கு உரைக்க வேண்டும் என்பதற்காக சிலர் வைவது உண்டு. அது நியாயமான குறையா என்று யோசித்து பார்க்க வேண்டியது நம்முடைய கடமை.

'நான் இறந்ததும் நீ வருத்தப்படுவாய்' என்கிற மனோபாவம் ஜப்பானில் அதிகமிருந்தது. இதற்கு 'மாயாஜாலசிந்தனை' என்றுபெயர். ஒருவர் அவமானப்படுத்திவிட்டால் அவருடைய வீட்டிற்குச் சென்று அவர் வாசலில் நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்வது பழைய ஜப்பானியமரபு. இன்றும் சில இடங்களில் நம்மூரில் மனவலியை ஏற்படுத்தியவர்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிற மாயாஜாலசிந்தனை இருக்கவே செய்கிறது. அவரவர்களுக்கு இருக்கிற பிரச்சனையில் இவையெல்லாம் அதிகத்தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதே யதார்த்தம்.

மாதவிலக்கு வலியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சில செய்திகளைப் பார்க்கலாம். மாதவிலக்குச் சுழற்சி மனச்சோர்வை ஏற்படுத்துவதால் அது ஏற்கனவே தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களை அதை நோக்கி தூண்டுகிறது. அதை மரணத்தை வரவழைக்கும் வலியாகக் கருத வேண்டியதில்லை. மருத்துவர் திருநாவுக்கரசு கூறுவதைப் போல பிரசவலியை விடவா மற்ற வலிகள் பிரமாண்டமானவை.

என​வே வலியும் (மன) ஒரு முக்கியமான அனுபவம். சிரிப்பைப் போல கண்ணீரும் தேவையான ஒன்று. அழுகிற போது துயரத்தினால் உடலில் உண்டாகும் ரசாயனங்கள் கண்களின் வழியாக கழிகின்றன. வலிகளைத் தாங்குகிறவர்களே வரலாறு படைக்கிறார்கள்.

நன்றி: தினமணி-இ​ளைஞர் மலர்.

பகத்சிங்

“நான் இறந்தால், என் பிணத்தை வாங்காதே... அப்படி வாங்கினால், நீ அழுவாய்; அதனால், புரட்சிக் கனலும் தாக்கமும் குறைந்துவிடும். எனவே, என் உடலை வாங்காதே” என்று தன் தாயிடம் சொன்னவர், இந்திய விடுதலைக்காகப் போராடிய பகத்சிங். அவருடைய நினைவு தினம் இன்று.

இந்தியாவில் சுதந்திர வேட்கை 1857-ல் இருந்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கும் அவர்கள் நம்மிடம் நடந்துகொண்ட விதத்தையும் எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த காலம். பல உயிர்களை இந்தியா தியாகம் செய்துவந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராகப் பல போராட்ட வீரர்கள் களத்தில் இறங்கி, தங்கள் நாட்டுக்காகத் தங்கள் பங்களிப்பை அளித்து வந்தனர். ஆனால், போராட்டம் நமக்குச் சாதகமாக அமையும் என்றும், சுதந்திரம் கிடைத்துவிடும் என்றும் இந்திய மக்கள் நம்பினர். மகாத்மா காந்தி வருகைக்குமுன்... வருகைக்குப்பின் என்ற நிலை இந்திய வரலாற்றில் அமைந்தது என்றால், அது மிகையாகாது. காந்திஜியின் அஹிம்சை வழிப் போராட்டங்களில் ஒன்றான ஒத்துழையாமை இயக்கத்தில் இந்தியா முழுதும் பலர் பங்குபெற்றனர். அதில் ஈர்க்கப்பட்ட ஒரு 13 வயது சிறுவன்தான் பகத்சிங். ஆனால், சௌரிசௌரா நிகழ்வுக்குப் பிறகு, அஹிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது, வேறு வகையானப் போராட்டத்தினால் மட்டுமே சாதிக்க முடியும் என்று எண்ணிய பகத்சிங், மார்க்சீசியக் கொள்கைகளோடும் கம்யூனிசக் கொள்கைகளோடும் மீசையை முறுக்கி களத்தில் நின்றார். 1926-ம் ஆண்டு தன் நண்பர்களாகிய ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரோடு எழுச்சிப் பெற்று புரட்சி நாயகர்களாக உருவெடுத்து உயர்ந்து நின்றார். 1928, சைமன் கமிஷனில் சட்டவரையரைகள் கொண்டு வரப்பட்டபோது, அதனை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் தலைவர்கள் போராடினர். அதில், பிரிட்டிஷ் போலீஸார் கடுமையாகத் தடியடி நடத்த ஆணையிட... அந்தச் சம்பவத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் லாலா லஜபதிராய் உயிரிழந்தார்.

இதனால் கடும்கோபத்துக்கு ஆளான இந்தப் புரட்சியாளர்கள், சாண்டர்ஸ் என்னும் ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தலைமறைவாயினர். அதே வருடம், ஏப்ரல் 8-ம் தேதி தொழிலாளர்களுக்கு எதிராகப் பல சட்டத்திட்டங்களை அமல்படுத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். அதில், இந்த மூன்று நாயகர்களும் குண்டுகளை வீசினர். இதில், யாருக்கும் உயிர்ச்சேதம் இல்லை. காரணம், புரட்சி என்பது மக்களைக் கொல்வதிலோ, துன்புறுத்துவதிலோ இல்லை என்ற நிலையான நாட்டுப்பற்றைக் கொண்டிருந்தனர். இந்தக் குண்டுவீச்சு நடந்து முடிந்தபிறகு, மூவரும் சரணடைந்தனர். சாண்டர்ஸை கொலை செய்ததற்கும் குண்டுவீச்சில் ஈடுபட்டதற்கும் பிரிட்டிஷ் அரசு இவர்களுக்கு மார்ச் 24-ம் தேதி தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், சில காரணங்களுக்காக முதல் நாளே தூக்கிலிடப்போவதாக தகவல் வந்தது. அந்தச் சமயத்தில் பிரிட்டிஷ் அரசு ஓர் ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தது. அதன் பெயர்தான் காந்தி - இர்வின் ஒப்பந்தம். இதன் தலையாய காரணமே பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களை தூக்கில் போடலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்குத்தான். ஆனால், இந்த ஆலோசனையில் காந்திஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அதற்காகத்தான், 'இர்வின் – காந்தி ஒப்பந்தம் என்றுவைக்காமல் காந்தி – இர்வின் ஒப்பந்தம் என்று வைத்தனர்' என வரலாறு கூறுகிறது. ஆனால், காந்தியோ “உங்கள் சட்டம் என்ன சொல்கிறதோ, அதைச் செய்யுங்கள்..” என்றார். தூக்குத் தண்டனை முடிவான பிறகு, பகத்சிங்கின் தந்தை கிஷான் சிங், ஆங்கிலேய அரசுக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தை அனுப்பினார். இதனை அறிந்த பகத்சிங், “நீங்கள் செய்த செயல் இந்த நாட்டையும் என் தாத்தா அர்ஜுன் சிங்கையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இனி, நான் உங்களைத் தந்தை என்று எண்ணமாட்டேன். நீங்கள் செய்த காரியத்துக்கு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்று கடிதம் அனுப்பினார். அவர் சிறையில் இருந்தபோது, சுரண்டலற்ற சமநீதி கிடைக்கும் சமுதாயம் அமைய வேண்டும், மத வன்முறைகளை எதிர்ப்பதற்கும், மதவாதங்களை ஒழிப்பதற்கும் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என எப்போதும் சிந்தித்துக்கொண்டிருந்தார். அத்துடன் அங்கு, தினமும் டைரி எழுதும் பழக்கமுடைய பகத்சிங், 404 பக்கங்களை எழுதியிருந்தாராம். பகத்சிங் ஒரு புத்தகப் பிரியர். எப்போதும் கையில் ஏதேனும் ஒரு புத்தகத்தை வைத்திருப்பார். சிறையில் இருந்த காலத்தில், வசதிகள் இல்லை; தினமும் செய்தித் தாள் வேண்டும்; உணவு சரியில்லை என அனைத்துக்கும் உண்ணாநோன்பு இருந்து அதில் வெற்றியும் கண்டார்

“சாகப்போகிறோம் என்றாகிவிட்டது.. இந்த நேரத்தில் புத்தகம் எதற்கு” என்று ராஜ்குரு கேட்ட கேள்விக்கு,  “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்.” என்று புன்னகைத்துக்கொண்டே பதிலளித்தார் புரட்சி நாயகன் பகத்சிங். தூக்குத் தண்டனைக்காக... தூக்கு மேடையை நோக்கிவந்த மூவரில், பகத்சிங்... “எனக்கு ஒரு 10 நிமிடம் கால அவகாசம் கொடுங்கள்” என்றார். எதற்கு என்றதற்கு, “ஒரு புரட்சியாளன், இன்னொரு புரட்சியாளனிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்றார். எதுவும் புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பிறகுதான் அவர் கையை உற்றுநோக்கினர். ஆம், அவரது கையில்.. லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற புத்தகம் இருந்தது. இறுதியாக, அங்கிருந்த ஆங்கிலேயரைப் பார்த்து, “இந்த உலகில் நீதான் அதிர்ஷ்டக்காரன்.. ஏன் தெரியுமா? ஒரு 23 வயது இளைஞன், தன் நாட்டுக்காக மரணத்தை முத்தமிட்டு வரவேற்கும் காட்சியைப் பார்க்க, உனக்கு பாக்யம் இருந்திருக்கிறது” என்றார் புன்சிரிப்புடன். பின், தூக்கிலடப்பட்டார் அந்தப் புரட்சிவீரன. 23 வயது இளைஞனான பகத்சிங்கின் செயல்களும் தியாகங்களும் அவர் பெயரை என்றும் வரலாறு பேசும்படி செய்துவிட்டது.

அதிக வட்டி..அதிக வருமானம்... இந்த 8 அஞ்சலகத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!

அதிக வட்டி..அதிக வருமானம்... இந்த 8 அஞ்சலகத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!

வங்கியில் பணம் போட்டால் குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தருவார்கள். ஆனால், இப்போது நம்மிடமே பணம் பறிக்கிறார்கள். நம் பணத்தை அவர்களிடம் சுழற்சிக்குக் கொடுத்து நாம் அதற்கு கமிஷன் தர வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். பெரும்பாலும் பொதுமக்கள் வங்கியையே சேமிப்புத் திட்டங்களில் முதலீடு மேற்கொள்ள நாடுகின்றனர். ஆனால், வங்கியைவிட அதிக வட்டி, அதிக லாபம் தரும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.

post office, சேமிப்பு, அஞ்சல் அலுவலகம்,


`செல்வ மகள் சேமிப்புக் கணக்கு, பொன் மகன் பொது வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம்' எனக் குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை அஞ்சல் துறையில் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன.

1. செல்வ மகள் சேமிப்புக் கணக்கு!

இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டம். 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்ச தொகையாக 1,000 ரூபாய் செலுத்தி அஞ்சலகங்களில் கணக்கைத் தொடங்கலாம். இந்திய அஞ்சலகத்தின் அனைத்துக் கிளைகளிலும் இத்திட்டத்தைத் தொடங்கலாம். ஒரு நிதி ஆண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

2. பொன் மகன் பொது வைப்பு நிதி!

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனைத்து வயதினருக்கும் பொதுவான ‘பொன்மகன் சேமிப்புத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்ச முதலீடாக 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். ஆண்டுக்கு 8 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

3. தொடர் வைப்புக் கணக்கு!

மாதாந்திர சேமிப்புக்காக தொடர் வைப்புக் கணக்கு (Recurring Deposit (RD) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.3 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம், அதிகபட்சம் என்று ஒன்றும் இல்லை, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சேமிக்கலாம். எந்த உச்ச வரம்பும் இல்லை.

4. கால வைப்புக் கணக்கு!

குறைந்த கால சேமிப்புக்காகக் கால வைப்புக் கணக்கு (Time Deposit (TD) Account) தொடங்கப்பட்டது. ஒரு ஆண்டுக்கு 7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேநேரம் 2 வருடங்களுக்கு 7.1 சதவிகிதமும், 3 வருடங்களுக்கு 7.3 சதவிகிதமும், 5 வருடங்களுக்கு 7.8 சதவிகிதமும் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

5. முதியோருக்கான சேமிப்புத் திட்டம்!

அதிகபட்ச வட்டியுடன் வருமான வரிச் சலுகையும் (80C) பெற முதியோருக்கான சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS) Account)தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

6. மாதாந்திர வருமானத் திட்டம்!

நிலையான மாத வருமானத்துக்கு மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme (MIS) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 4.5 லட்சம் வரை முதலீடு மேற்கொள்ளலாம்.

7. தேசிய சேமிப்புப் பத்திரம்!

வருமான வரிச் சலுகை (80C) பெறத் தேசிய சேமிப்புப் பத்திரம் (National Savings Certificates -NSC) திட்டம் தொடங்கப்பட்டது. ஐந்து வருடங்கள் வட்டி 8 சதவிகிதம் வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை.

8. கிஸான் விகாஸ் பத்திரம்!

112 மாதங்களில் பணம் இரட்டிப்பாக கிஸான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra - KVP) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை.

`அதிக வட்டி, அதிக லாபம்' தருகிறேன் என்று யார் சொன்னாலும், எந்த நிறுவனம் சொன்னாலும் நம்பாதீர்கள். அலசி ஆராய்ந்து அதன் பின்னே முதலீட்டினைத் தொடங்குங்கள். நம் ஊரில் வங்கிச் சேவை இல்லாத கிராமம்கூட இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் அஞ்சல் அலுவலகம் இல்லாத எந்த ஒரு கிராமமும் இல்லை. இன்றும் ஏதோ ஒரு மூலையில் தனது சிறகினை விரித்து சேவையை வழங்கி வருகிறது. வங்கிகளைப்போல பரிவர்த்தனைக் கட்டணம், மினிமம் பேலன்ஸ் என்று எந்த ஒரு நெருக்கடியும் அஞ்சல் சேமிப்புக் கணக்கில் இல்லை. 50 ரூபாய்தான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அஞ்சல் சேமிப்புக் கணக்குபோல, குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் துறையில் இருக்கின்றன. நாளைய பாதுகாப்புக்கு இன்றே சேமிக்கத் தொடங்குங்கள். உங்களுடைய ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.