Friday 24 January 2014

உலகை வென்ற காந்தியம்

உலகை வென்ற காந்தியம்
Posted Date : 11:12 (14/12/2013)Last updated : 11:12 (14/12/2013)
- எஸ். உஷா கௌரி
காத்மா காந்தியின் பெயர் ஐந்து முறை நோபல்பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு நோபல்பரிசு வழங்கப் படவில்லை. 1948 ஆம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பதற்கு மிக அதிகமான சாத்தியம் இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக 1948 ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் கொல்லப்பட்டு விட்டதால், நோபல்பரிசு உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற மரபுப்படி 1948ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை. வாழும் மனிதர்களில் யாரும் அந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல்பரிசுக்குத் தகுதிபெறவில்லை என்று நோபல்கமிட்டி அறிவித்தது காந்தியடிகளுக்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய சர்வதேச மரியாதை எனலாம். ஆனால், காந்திஜியின் கைகளுக்கு வரத் தவறிய நோபல் பரிசு அவரின் சித்தாந்தத்தை போற்றிய உலகத்தலைவர்கள் ஆறுபேருக்கு பின்னாளில் கிடைத்தது. இது உலகில் காந்திய நெறிக்கு கிடைத்த பெருவெற்றி.
அகிம்சையும், சகிப்புத்தன்மையும் காந்தியின் கொள்கைகளில் மிக முக்கியமானவை.  அகிம்சை வழியில் மட்டுமே மீட்சி இருக்கிறது என அவர் நம்பினார்.
இலக்கியத்திற்காக நோபல்பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர். ரோமன் ரோலந்து என்பவர் ''உலகின் அமைதி என்பது காந்தியின் சாத்வீக வழியில்தான் உறைந்திருக்கிறது'' என்றார்.
காந்திஜியின் ஆழமான அர்ப்பணிப்பும் சத்யாகிரக சட்டமறுப்பின் மீது அவருக்கு இருந்த ஓழுக்கமான நம்பிக்கையும் உலகம் முழுக்க அவருக்கு சீடர்களைப் பெற்றுத் தந்தது. கொடுங்கோன்மை, அடக்குமுறை, அநீதி ஆகியவற்றைச் சாத்வீகமாக எதிர்ப்பது என்னும் காந்தியக் கொள்கையைக் கையாண்டு அமைதிக்கான நோபல பரிசு வென்ற வெற்றியாளர்கள் அறுவர். அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங், தென் ஆப்பிரிகாவின்  நெல்சன் மண்டேலா, திபெத்தின் 14 வது தலாய்லாமா, தென்னாப் பிரிக்காவின் டெஸ்மாண்ட்டூடூ,  மியான்மாரின் ஆங் சாங் சூகி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஆகிய அறுவரும் நோபல் பரிசு பெற்ற காந்தியவாதிகள் டான் சானியாவின் ஜீலியஸ் நராரே லத்தீன் அமெரிக்க திராட்சை தோட்ட தொழிலாளர் வாழ்வுக்காகக் காந்திய வழியில் நின்று போராடிய மெக்ஸிகன் அமெரிக்கர் செசார் சாவேஸ், பூமிதான இயக்கத்தில் பங்கேற்ற இத்தாலியர் லான்சா தெல் வாஸ்தோ, ஆப்கானிஸ்தான் பஷ்டூன் இன மக்களுக்காகப் போராடிய கான் அப்துல் கபார்கான் போன்றோர் காந்திய நெறியின் சர்வதேச வெற்றிக்கு சான்றுகளாவர்.
அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங் வழிநடத்திய அரசியல் போராட்டங்கள் சாத்வீக முறையில் அமைய காந்திஜியே உந்து சக்தியாக திகழ்ந்தார். 'எங்களுக்கு இயேசு கிறிஸ்து இலக்குகளைத் தந்தார் காந்திஜி அவற்றை அடைவதற்கான உத்திகளை வகுத்துத்தந்தார்' என நிறவெறியை ஒழிக்கப் போராடிய மார்டின் லூதர் கிங் காந்தியைப் பற்றிக் கூறினார்.
1989ல் பதினான்காம் தலாய்லாமாவிற்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்கிய போது, நோபல் கமிட்டி திபெத்தின் விடுதலைக்காகப் போராடியதையும், அமைதி வழியில் தீர்வுகளை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகளையும் பாராட்டி மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் விதத்தில் அமைதிக்கான நோபல்பரிசு தலாய் லாமாவிற்கு வழங்கப்படுவதாக அறிவித்தது.

2010 இந்திய நாடாளுமன்றத்தில் உரை ஆற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, காந்தியும் அவர் இந்த உலகுக்கும் அமெரிக்காவுக்கும் தந்த செய்தியும் இல்லையெனில் நான் அமெரிக்க அதிபராக இந்த இடத்தில் நின்றிருக்க முடியாது என்றார்.
காந்தியம் என்பது மகாத்மா காந்தியின் வாழ்க்கை, நோக்கு எண்ணங்கள் ஆகியவற்றை பற்றிய சித்தாந்தம், சத்தியாகிரகமும் உண்மையும் அதன் அடி நாதங்கள். காந்தியம் என்பது அரசியல் சமூக மேம்பாட்டு கோட்பாடு மட்டுமன்று; அரசியல் சமூகம் சாராத தனிமனிதனையும் உய்விக்கும் ஓர் உயரிய தத்துவமாகும்.
காந்தியம் என்ற கொள்கைக்கு அச்சாணியாக இருப்பது சத்தியாகிரகம் ஆகும். உண்மையை அதன் வடிவத்திலேயே ஏற்றுக்கொள்வதே சத்தியாகிரகம் ஆகும் (Holding firmly to what actually is) அரசியல் மற்றும் வாழ்வியலுக்குள் ஊடுருவும் தூய சக்தியாகச் சத்தியா கிரகம் விளங்குகிறது.
காந்தியம் என்பது உண்மையைக் கண்டறிவதில், காந்தியடிகளுக்கு இருந்த ஆர்வத்தையும் அதற்கான பயணத்தையும் குறிக்கும் ஆனால், காந்தியம் என்பது ஒரு கோட்பாடு என்பதையே மகாத்மா மறுத்தார். அழிவற்ற உண்மைகளை அன்றாட வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வாகத் தன்போக்கில் முயற்சித்ததாகவும் அவை முடிவான கருத்துக்களோ மாற்றமற்ற முடிவுகளோ அல்ல என்றார். அவை நாளையே மாறலாம். உலகிற்கு தான் போதிக்க எதுவும் இல்லை, உண்மையும், சத்தியாகிரகமும் உலகம் தோன்றிய காலத்திலிருந்தே உள்ள மிகப்பழமையான விஷய மாகும் என்றும் அவர் கூறினார்.
காந்தி சமூகப் பாவங்கள் ஏழு என்றார் அவை:
1. கொள்கையற்ற அரசியல்
2. உழைப்பற்ற செல்வம்
3. அறமற்ற வணிகம்
4. மனசாட்சியற்ற மகிழ்ச்சி
5. ஒழுக்கமில்லா கல்வி
6. மனிதத்தன்மையற்ற அறிவியல்
7. தியாகமற்ற வழிபாடு
காந்தியின் சமாதானப் போக்கு என்பது ஆன்மிக ரீதியிலானது தேவையான அரசியல் விளைவுகளை அதைக் கொண்டு ஏற்படுத்த முடியும் என்பது அவரது நம்பிக்கை. பல உயிர்களைக் கொல்லும் திறனுடைய ஆயுதங்களைவிட உண்மை என்பது மிகவலிமையான ஆயுதம் என்பது அவரது ஆழமான எண்ணம்.
உண்ணாவிரதம் என்பது அடிப்படை ஆசைகளை வெல்வதற்கான மனக் கட்டுப்பாடு ஆகும். உடம்பை மனத்தினுடைய கட்டுப்பாட்டிற்குள் முழுமையாகக் கொண்டுவர உண்ணாவிரதம் உதவுகிறது. உண்ணாவிரதத்தின் கடுமை. நம்முள் இருக்கும் துணிச்சலை தூண்டி வலிகளையும் உள்ளுணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி நமது ஆன்மாவை சுத்தப்படுத்துகிறது.
இப்படி அகிம்சை, அறம், சாத்வீகம், சத்யாகிரகம், உண்மை, உண்ணாவிரதம் என்னும் தூண்கள் மீது கட்டப்பட்ட காந்தியம் உலகை வென்ற சான்றுகளைப் பட்டியலிட்டு விட்டோம். காந்தியத்தைக் கடைப்பிடித்து நாளை நோபல் பரிசு பெறப்போகும் இந்தியத் தலைமை எங்கேனும் தென்படுகிறதா என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
மகாத்மாவையும், காந்தியத்தையும் களங்கமில்லாமல் வடிவமைத்தது அவரின் குழந்தைப் பருவ குணங்கள்தான் என்பதால் நம் பார்வை எதிர்காலத்தின் நம்பிக்கை கீற்றுகளான இன்றைய குழந்தைகள் மீதே சென்று நிலைபெறுகிறது.
(கட்டுரையாளர் ஓர் அரசு ஊழியர்)

No comments:

Post a Comment