Saturday 25 January 2014

உடல் தடுப்பரண்

உடல் தடுப்பரண்
Posted Date : 15:12 (13/12/2013)Last updated : 19:12 (14/12/2013)
டாக்டர்  ஆனந்தசித்ரா
நமது உடலில் பல்வேறு அரண்கள் நோய்க்கிருமிகளை வளரவிடாமல் தடுக்கின்றன. அதில் முக்கியமான பங்கு நமது தோல், வயிறு மற்றும் நாசிகளுக்கு உண்டு.
தோலில் சுரக்கும் வேதிப் பொருட்கள், வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் மூலக்கூறுகள், நாசித் துவாரத்தின் முடிகள், சுவாசக் குழாய்களின் மெல்லிழைகள் மற்றும் கோழை, நோய் கிருமிகளைத் தடுக்கின்றன அல்லது அழிக்கின்றன.
தூசி  அல்லது கிருமி காரணமாக  நாம் தும்மும் போது, காற்று மணிக்கு 100 மைல் வேகத்தில் வெளியேறி, கூடவே கிருமிகளையும் இழுத்துச் சென்றுவிடுகிறது.
செல்லில் உற்பத்தியாகும் இன்டர்பெரான் (Interferon) என்ற மூலக்கூறு செல்லினை மற்ற வைரஸ்கள்  தாக்காமல் பாதுகாக்கின்றது.
ரத்தத்திலும் உடலின் மற்ற பாகங்களிலும், நுண்ணுயிரிகளையும், இதர எதிர்நச்சுக்களையும் பிடித்து உள்வாங்கி அழிக்கும் சக்தியுள்ள நியூட்ரோபில் (Neutrophil) மற்றும் மேக்ரோபேஜ் (Macrophage) போன்ற வெள்ளை அணுக்கள் இருக்கின்றன.
உடலில் ஏதாவதொரு இடத்தில் நுண்ணுயிரியோ அல்லது வேறெந்த எதிர்நச்சோ தாக்கத்தை ஏற்படுத்த முயன்றால், உடனே போர்க்கால அடிப்படையில் நோய் தடைக் காப்பு மண்டலத்திலுள்ள செல்கள் இணைந்து அதனை அழிக்க முற்படுகின்றன.
நோய் தடைக் காப்பு மண்டலத்தின் முக்கிய செல்லான T-லிம்போசைட் என்ற வெள்ளை அணுக்கள் கழுத்துப் பகுதியிலிருக்கும் தைமஸ் (Thymus) என்ற உறுப்பில் வளர்ந்து முழு வளர்ச்சி அடைகிறது.
எதிர்புரதத்தை சுரக்கும் மற்றொரு முக்கிய செல்லான B-லிம்போசைட் எலும்பு மஜ்ஜையில் (Bone marrow) உற்பத்தியாகி பருவமடைகிறது.
மற்ற வெள்ளை அணுக்கள் எலும்பு மஜ்ஜையிலுள்ள ஸ்டெம் செல்களிலிருந்து உற்பத்தியாகி உடலின் மற்ற பாகங்களுக்கு செல்கின்றன.
அனைத்து வெள்ளை அணுக்களும் மண்ணீரலிலும், உடலில் ஆங்காங்கே காணப்படும் நிணநீர் முடிச்சுகளிலும் இரத்தத்திலும் தங்கியிருந்து எதிர்நச்சுக்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றன.
ஒரு மனிதன் பருவமடையும் பொழுது (Puberty) நோய் தடைக் காப்பு மண்டலமும் முழுமையாக வளர்ந்திருக்கும்.
சைட்டோகைன் (Cytokine)
எதிர்ப்பாற்றல் துல்லியமாக வெளிப்படுவதற்கு லிம்பாய்டு செல்கள் (Lymphoid cells), அழற்சிக் கான செல்கள் (Inflammatory cells) மற்றும் இரத்த செல்கள் (Haematopoietic cells) இணைந்து செயல்பட வேண்டும். இந்த 3 வகை செல்களுக்கு இடையேயான தூதுவர்களாக செயல்படும் புரதம் தான் சைட்டோகைன்.
சைட்டோகைன்கள் டார்கெட் (Target)  செல்லின் வெளிச்சவ்வில் அதற்கேயுரிய ரிசப்டார்களில் (Receptor) இணைந்து டார்கெட் செல்லில் தேவையான மாற்றங்களை மரபணு வெளிப்படுத்தல்கள் (Expressions) மூலம் கொண்டு வருகின்றன.
நூறுக்கும் மேற்பட்ட சைட்டோகைன்கள் கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றில் பெரும்பான்மையான சைட்டோகைன்களை உதவும் டிலிம்போசைட் மற்றும் மேக்ரோபாஜ் தான் சுரக்கின்றன.
சைட்டோகைன்கள் மூன்று வகைகளில் செயலாற்றலாம்.1, எந்த செல் சைட்டோகைனை சுரக்கின்றதோ அதே செல்லிலேயே செயலாற்றுதல் (Autocrine action),  சைட்டோகைனை சுரக்கும் செல்லுக்கு அருகிலேயே உள்ள செல்களில் செயலாற்றுதல் (Paracrine action),  சில சமயங்களில், வெகு தொலைவிலுள்ள செல்களின் மேல் செயலாற்றுதல் (Endocrine action)
சைட்டோகைன்களின் வகைகள்
லிம்போசைட் வெள்ளை அணு சுரக்கும் சைட்டோகைன்கள் லிம்போகைன் (Lymphokine) எனப்படும். அதுபோல், மேக்ரோ பேஜ் சுரக்கும் சைட்டோ கைன்களுக்கு மோனோகைன் (Monokine) என்று முன்னர் அழைக்கப்பட்டது.
வெள்ளை அணுக்களுக்கிடையே தூதுவர்களாக செயல்படும் சைட்டோகைன்கள் இன்டர்லூகின் (Interleukin) என்றழைக்கப்படுகிறது. இதுவரை 25 வகையான இன்டர்லூகின்கள் கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ் நச்சுயிரி செல்லினுள் புகாமல் தடுக்கும் இன்டர்பெரானும் (Interferon) ஒரு சைட்டோகைன் தான். அழற்சியை உண்டாக்கும் சைட்டோகைன்கள் கீமோ கைன்கள் (Chemokine) என்றழைக்கப்படுகிறது.
எதிர்ப்பாற்றலில் சைட்டோகைன்களின் செயல்கள்
சைட்டோகைன்கள் எதிர்ப்பாற் றலை தூண்டவோ அல்லது தடுக்கவோ செய்கின்றன. மேலும் எதிர்ப்பாற்றல் வெளிப்படும் கால அளவு மற்றும் தீவிரத்தன்மையை (Intensity) வரையறைப் படுத்துவதும் (Regulation) சைட்டோகைன்களே.
நோய் தடைகாப்பு மண்டலத்தின் செல்கள் மற்றும் ரத்த சிவப்பு அணுக்களின் பெருக்கத்தையும் மற்றும் வித்தியாசப் படுத்தலையும்  (Differentiation) நெறிப்படுத்துகின்றன.
ரத்த வெள்ளை அணுக்களை திறனேற்றம் (Activation) செய்கிறது.
எதிர்பொருள் அல்லது மற்ற சைட்டோகைன்கள் சுரத்தலை வரையறைப்படுத்துகிறது
புண்களை ஆற்றும் திறன் கொண்டது.
அழற்சியை தூண்டும் செயலில் ஈடுபடுகிறது (Induction of inflammation).
ஒரே சைட்டோகைன் பல்வேறு செல்களில், பல்வேறு செயல்களை செயலாற்றும் திறனுடையதாகவும் (Pleiotrophy), பல வேறு சைட்டோ கைன்கள் ஒரே செயலை புரியு மாறும் (Redundancy) இருக்கின்றன.
இரு சைட்டோகைன்கள் இணைந்து சினர்ஜிஸ் டிக் இபக்ட் (Synergistic effect) கொடுக்கின்றன.
ஒரு சைட்டோகைனின் செயலை மற்றொரு சைட்டோகைன் குறைக்கலாம் அல்லது தடுக்கலாம் (Cascade effect).
ஒரு சைட்டோகைனின் செயலினால் தொடர்ச்சியாக செல்கள் பல சைட்டோகைன்களை சுரக்கும் பண்புடையதாக இருக்கலாம் (Antagonistic effect).
எதிர்நச்சுகளுக்கு எதிராக நோய் தடைக் காப்பு மண்டலத்தின் செல்கள் சைட்டோகைன்களை சுரந்தாலும் அவைகள் எதிர்நச்சுக்களுக்கு தனித்தன்மையுடையவைல்ல (Non-specific antigen).
மாறுபடுத்தும் தொகுப்பு மூலக்கூறுகள் (Cluster of differentiation -CD)
வெவ்வேறு  லீனியேஜை (Lineage) சேர்ந்த அல்லது பருவத்தில் லிம்பாய்ட் செல்கள் அதன் வெளிச்சவ்வில் வெவ்வேறு மூலக்கூறுகளை வெளிப்படுத்தும். அந்த மூலக்கூறுகளை ஒரே B- லிம்போசைட் குளோனிலிருந்து சுரக்கும் எதிர்ப்பொருளைக் (Monoclonal  antibodies) கொண்டு இனம் கண்டறியப்படுகிறது.
அவ்வாறு ஒரு B- செல் குளோன் எதிர்ப்பொருளால் கண்டறியப்படும் மூலக்கூறுகளை ஒரே குழுவில் வைத்து அவற்றை Cluster of  differentiation (CD) என்று அழைக்கிறோம்.
CD மூலக்கூறுகள் வெளிப்படுத்து தலை வைத்து அது எந்த இனத்தை சேர்ந்த லிம்பாய்ட் செல்கள் என்பதை அறிந்து கொள்ளலாம் அல்லது தேவைப்பட்டால் பிரித்தெடுத்துக் கொள்ளலாம்.
உதவும் T- லிம்போசைட் (Th) CD4 மூலக்கூறினையும், செல்லை அழிக்கும் T- லிம்போசைட் (Tc) CD8 மூலக்கூறினையும் அதன் வெளிச்சவ்வில் வெளிப்படுத்து கின்றன.
Major Histocompatibility Complex - MHC
அனைத்து பாலூட்டிகளும் MHC எனப்படும் மரபணுக்கள் குழாமை (Cluster of genes) கொண்டிருக்கின் றன. இந்த மரபணுக்களினால் வெளிப்படும் புரதங்கள் செல்லின் சவ்வில் வெளிப்படுத்தி செல்களுக்கிடையேயான தொடர்பினையும் (Intercellular recognition), தன்னை பிறவற்றிலிருந்து வேறுபடுத்தவும் உதவுகின்றன.
MHC மூலக்கூறுகள் ஹிமோரல் (Humoral) மற்றும் செல் மீடியேடட் ரெஸ்பான்ஸ்க்கு (Cell mediated immune response) முக்கிய பங்காற்றுகின்றன.
நோய் தடை காப்பு மண்டலத்தின் பிரதான செல்லான T லிம்போசைட்டுகள் எதிர்நச்சினை இந்த MHC மூலக்கூறுடன் இணைந்து தான் இனம் கண்டு எதிர்ப்பாற்றலை தூண்ட செயலாற்றுகின்றன. அதனால் ஒரு வகையில் இந்த MHC மூலக்கூறுகள் ஒருவரின் நோய்வாய்ப்படும் தன்மையை தீர்மானிக்கின்றன.
MHC மரபணுக்களின் ஒரு அல்லீல் தாயிடமிருந்தும் மற்றொன்று தந்தையிடமிருந்தும் சேய்க்கு வருகின்றன. அதனால் குழந்தை 50 சதவீத அளவிலேயே தான் பெற்றோருடன் ஒத்துப் போகும்.
சகோதர சகோதரிகளுக்குள் 0 - 100 சதவீதம் வரை ஒத்துப் போகலாம். இந்த மரபணுக் குழாம் மனிதனில் குரோமோசோம் எண் 6லும், சுண்டெலியில் குரோமோசோம் எண்17லும் இருக்கின்றன.
MHCல் இரண்டு முக்கிய மூலக்கூறுகள் உள்ளன. MHC-1 மூலக்கூறுகள் அனைத்து நியூக்ளியஸ் உள்ள செல்களிலும், MHC-2 மூலக்கூறுகள் எதிர்நச்சை பிரசண்ட் செய்யும் செல்களில் (Antigen Presenting Cells) மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது.
MHC-1 மூலக்கூறுகள் புற்றுநோய் மற்றும் வைரஸ் தாக்கிய செல்களை அழிப்பதற்கும், MHC-2 மூலக்கூறுகள் பாக்டீரியாக்களை அழிப்பதற்கும் உதவுகின்றன.
MHCயின் முக்கியத்துவம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது தான் உலகத்திற்கு தெரிய வந்தது.
தானமாக பெறப்பட்ட உறுப்பிலுள்ள செல்களில் வேறுவகை MHC-1 மூலக்கூறுகள் வெளிப்படுவதால் தானம் பெற்றவரின் டிலிம்போசைட்டுகள் அவற்றை வேறு வகை என இனம் கண்டு அந்த செல்களை அழிக்கத் துவங்குகின்றன. அதனால் தானமாக பெறப்பட்ட உறுப்பு நிராகரிக்கப்படுகிறது.
அபோடோசிஸ் (Apoptosis)
அபோடோசிஸ் என்பது திட்டமிடப்பட்ட செல் இறத்தல்  (Programmed cell death) ஆகும்.
இதில் செல் சுருங்கி (Cell shrinkage),  குரோமேட்டின் ஒருங்கிணைந்து (Chromatin condensation) நியூக்ளியஸ் அமில துண்டுகளாக பிரிந்து (Nuclear  fragmentation) இறுதியில் செல் சிறு சிறு துகள்களாக (Blebbing) பிரிந்துவிடும்.
இந்த சிறு துண்டுகளை விழுங்கும் செல்கள் உடனடியாக பிடித்திழுத்து உள்வாங்கி செரித்துவிடுகின்றது.
மற்ற செல்லுக்கு எந்த வித பாதிப்புமில்லாமல் அபோடோசிஸ் நடைபெறுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படாமல் நன்மையே செய்கின்றன.
ஒவ்வொரு வளர்ந்த மனிதனிலும் நாளன்றுக்கு 50 - 70 பில்லியன் செல்களும், 14 வயதுடைய சிறுவர் சிறுமியரில் 20 -30 பில்லியன் செல்களும் அபோடோசிஸ் முறையில் இறக்கின்றன.
உறுப்புகளில் அதிகமான அளவில் அபோடோசிஸ் நடைபெற்றால் அவை சுருங்கிவிடும் (Atrophy). அதேசமயம், குறைவாக இருந்தால் செல் பெருக்கம் தொடர்ந்து நடந்து புற்றுநோயை உண்டாக்கும்.
ஒவ்வொரு செல்லிலும் பிம்/பாக்ஸ்/பாக் (Bim/Bax/Bak) போன்ற மூலக்கூறுகள் அபோடோசை துரிதப்படுத்தவும், பிசிஎல்2/பிசிஎல்எக்ஸ்எல்/எம்சிஎல்1 (Bcl-2/Mcl-1/Bcl-Xl) போன்ற மூலக்கூறுகள் அவற்றை தடுக்கும் வேலையையும் செய்கின்றன.
பிசிஎல்2 மூலக்கூறுகள் அதிக அளவில் வெளிப்படுத்துவதால் தான் நினைவாற்றல் B செல் (Memory) அழியாமல் பல ஆண்டு கள் உயிரோடு இருக்கின்றன.
எய்ட்ஸ் நோயல்ல : ஒரு குறைபாடே
உயிர்க்கொல்லி நோய் எனக் கருதப்படும் எய்ட்ஸ், HIV என்ற வைரஸ் நச்சுயிரியால் ஏற்படுகிறது. 
எய்ட்ஸ் நச்சுயிரியால் நேரிடையாக மனிதர்கள் மடிவதில்லை.  இது T  லிம்போசைட் என்ற நோய் தடைக் காப்பு மண்டலத்தின் முக்கிய வெள்ளை அணுவில் புகுந்து வளர்ந்து அதை அழித்து விடுகின்றது. 
T- லிம்போசைட் செல்லின் எண்ணிக்கை தொடந்து குறைந்து கொண்டே வருவதால், எதிர்ப்பாற்றல் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சாதாரண கிருமிகளை அழிக்கும் திறனைக் கூட இழந்து விடுகிறார்கள். 
எதிர்ப்பாற்றல் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடுவதால் தான் எய்ட்ஸ் (AIDS – Acquired Immunoeficiency Syndrome) ஒரு எதிர்பாற்றல் குறைபாடு என அழைக்கப்படுகிறது.
ரத்தத்தில் இந்த T- லிம்போசைட்டின் எண்ணிக்கையை வைத்து எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட மனிதனின் வாழ்நாளை தோராயமாக குறிக்கலாம்.
எச்ஐவி வைரஸ் தொற்றைத் தடுக்கக் கூடிய தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை.  ஏனெனில், இந்த நச்சுயிரி வெகு விரைவில் தன்னுடைய வெளிப்புறத் தோலின் புரதங்களை மாற்றிக் கொண்டேயிருப்பதால் எதிர்ப்பாற்றலிலிருந்து தப்பி நச்சுயிரி பெருகிக் கொண்டேயிருக்கின்றன. 
எய்ட்ஸ் நச்சுயிரிக்கு எதிரான ஒரு மருந்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தாலும், அதற்கு எதிராக நச்சுயிரியில் எதிர்ப்பு சக்தி தோன்றி மருந்தின் வீரியத்திலிருந்து தப்பித்துக் கொள்கின்றன. 
தற்போது பிரபலமான ஹார்ட் (HAART) மருத்துவ முறையில் 3 வகை மருந்துகளை சுழற்சி முறையில் நோயாளிகளுக்கு தருவதால் அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி வராமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.
இந்த மருந்துகள் நோய் கிருமியின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துமே தவிர அவற்றை முற்றிலுமாக அழிக்காது. 
மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டால், T- லிம்போசைட் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து எதிர்ப்பாற்றல் சக்தியும் குறைந்து இதர கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுவார்கள். 
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தை பிறக்கும் போதோ (அ) தாய்ப்பாலின் வழியாகவோ சேய்க்கு இந்த நச்சுயிரி தொற்றுகிறது.  இதைக் கட்டுப்படுத்த தற்போது நெவிராபின் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.
உறுப்பு மாற்று சிகிக்சை
நமது உடலின் எதிர்ப்பாற்றல் சக்தியானது சரியான நேரத்தில் சரியான அளவில் செயலாற்றி நம்மை அனைத்து வகை எதிர் நச்சுக்களிடமிருந்தும் பாதுகாக்கின்றன. 
உறுப்பு மாற்று சிகிச்சை  போன்ற சமயங்களில், எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகளை பயன்படுத்த நேரிடுகிறது. 
நமது கையிலுள்ள கைரேகை போல், ஒவ்வொரு மனிதனின் செல்லும் ஒரு விதமான MHC என்ற மூலக்கூறினை செல்லின் வெளிச் சவ்வில் வெளிப்படுத்துகிறது. 
உடலில் தானமாகப் பெறப்பட்ட உறுப்பில் வேறுவகை எம்ஹெச்சி மூலக்கூறு வெளிப்படுவதால் தானம் பெறுபவரின் T லிம்போசைட் அதனை இனம் கண்டு தானமாக பெறப்பட்ட உறுப்பின் திசுக்களை கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து அந்த உறுப்பை நிராகரிக்கச் செய்து விடுகின்றன.
ஒரே இரத்த வகை மற்றும் நெருங்கிய சொந்தங்களில் இருந்து உறுப்பு தானமாகப் பெற்றால் தான் நிராகரித்தல் சதவீதத்தை குறைக்கலாம். 
T-லிம்போசைட்டுகளின் செய லாக்கத்தைக் குறைப்பதற்காக சைக்கிளோஃஸ்போரின் போன்ற மருந்துகளை தொடர்ந்து மருத்துவர்கள் தானம் பெற்றவருக்கு கொடுக்கின்றனர். 
சைக்கிளோஃஸ்போரின் போன்ற மருந்துகளை தொடர்ந்து உபயோகித்தால் புற்றுநோய், ரத்தக் கொதிப்பு மற்றும் இதர வியாதிகளுக்கு உள்ளாக நேரிடும் அபாயமும் உள்ளது.
கண்ணில் உள்ள கார்னியா மற்றும் இருதய வால்வு ஆகிய உறுப்புகளை நமது உடல் நிராகரிக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும். 
கண்ணிலுள்ள கார்னியாவிற்கு ரத்த ஓட்டம் கிடையாது என்பதால் வெள்ளை அணுக்கள் அங்கு செல்லாது.  அதனால் கார்னியா மாற்றம் செய்தால் அவைகள் நிராகரிக்கப்படுவதில்லை.
இயற்கையின் மற்றொரு அதிசயம் குழந்தை வளர்வது.  தாயும் சேயும் வேறு வேறு இரத்த வகை மற்றும் எம்ஹெச்சி அளவில் இருந்தாலும், தாயின் வெள்ளை அணுக்கள் கருவை நிராகரிப்பது இல்லை. 
கருப்பையில் (அ) கருவினால் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் வேதிப் பொருட்கள் சுரந்து கருவை நிராகரிப்பதை தடுத்து விடுகின்றன.
புற்றுநோய்
பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் தற்போது தொற்றுநோயால் எற்படும் உயிரிழப்புகளை விட இருதய நோயினாலும் புற்றுநோயினாலுமே அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 
ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு வாழ்நாள் காலம் உள்ளது.  அதற்கேற்றவாறு ஸ்டெம் செல்களிலிருந்து புதிய செல்கள் உருவாகின்றன. 
பருவமடைந்த மனிதனில் செல் அழிதலும் புதுப்பித்தலும் சரிசமமாக இருக்கும்படி சீராக பார்த்துக் கொள்ளப்படுகிறது.  இந்த கட்டுக் கோப்பு கலையும் போது, தொடர்ந்து செல்கள் பெருகுவதால் தான் புற்றுநோய் உண்டாகிறது.
புற்று நோயை உண்டாக்கும் வேதிப் பொருட்கள் (அ) வைரஸ் கிருமிகள் சாதாரண செல்கள் தொடர்ந்து பல்கி பெருகுவதற்கு தூண்டுகின்றன.
சாதாரண செல்களில் தொடர்ச்சியான செல் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் மரபணுக்களின் மூலக்கூறுகளை தடுப்பதன் மூலம் செல்பெருக்கம் தொடர்ந்து புற்றுநோய் உருவாகிறது. 
அபோடோசிஸ் முறையில்,  இயற்கையான செல் இறப்பை தூண்டும் மூலக்கூறுகளைத் தடுப்பதன் மூலம் செல்களின் வாழ்நாளை நீடித்து,  செல்கள் பெருகுவதற்கு தூண்டுவதன் மூலமும் புற்றுநோய் உண்டாகலாம்.
எதிர்ப்பாற்றல் மண்டலத்திலுள்ள செல்களிலும் புற்றுநோய் உண்டாகும்.  லிம்ஃபோமா (Lymphoma) கட்டி எலும்பு மஜ்ஜை, நிணநீர் முடிச்சு (அ) தைமஸ் போன்ற உறுப்புகளில் வளரும். 
லுக்கீமியா (Leukemia) என்ற ரத்த புற்றுநோய் தனித்தனி செல்லாக வளரும் தன்மை கொண்டது.  அதனால் இரத்தத்தில் அபரிமிதமான எண்ணிக்கையில் வெள்ளை அணுக்கள் இருக்கும். 
சாதாரணமாக புற்றுநோய் கண்ட செல்களை இயற்கை கொல்லி செல் (Natural Killer cell) மற்றும் T-லிம்போசைட்டுகள் இனம்கண்டு அழித்துவிடும். அவைகளால் இனம் கண்டு கொள்ளமுடியாதவாறு தப்பிக்க பல்வேறு வழிகளை புற்றுநோய் செல்கள் பெற்றிருப்பதால், இதற்கு தகுந்த சிகிச்சை முறையும்  இதுவரை கண்டறிய இயலவில்லை. 
நோய் தடைக் காப்பு மண்டலமும் எதிர்நச்சுக்களின் தூண்டுதலுக்கேற்ப செயல்படும் பண்புடையது. சுத்தம், சுகாதாரம் என்று அளவுக்கதிகமாகப் பார்த்தால் எதிர்ப்பாற்றல் தூண்டுதல் குறைந்து எதிர்ப்புச் சக்தியும் குறைந்துவிடுகிறது.
எதிர்ப்பாற்றல் குறைந்த மனிதர்களை ஏதாவதொரு வீரியம் குறைந்த நுண்ணுயிர் கூட அதிகத் தாக்குதலை ஏற்படுத்தும். அதனால் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதித்து நமது சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப நமது உடலின் நோய் தடைக் காப்பு மண்டலத்தை தயார்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமானது.
நுண்ணுயிர்கள் காற்று, நீர், நிலம், நமது உடலின் உள்ளும் புறமும் நிறைந்து காணப்படுகின்றன. நமது உடலிலுள்ள செல்களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்கள் உடலின் உள்ளேயும் வெளியேயும் வாழ்கின்றன. ஒரு கைப்பிடி தோட்ட மண்ணில் பில்லியனிலிருந்து பல நூறு பில்லியன் நுண்ணுயிர்களும்,  ஒரு மிலி உமிழ்நீரில் 500 கோடி பாக்டீரியாக்களும் இருக்கின்றன. ஆனால் நாம் ஆரோக்கியமாக வாழ்கின்றோம். இதற்கு முக்கிய காரணம் நமது நோய் தடை காப்பு மண்டலம் தான். இது பல்வேறு வகையான செல்களையும் மூலக்கூறுகளையும் உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றிருப்பதால் எண்ணற்ற வெளி எதிர்நச்சுக்களை இனம் கண்டு உடலிலிருந்து வெளியேற்றுகின்றது. இம்மண்ட லத்தின் கூட்டு செயலாற்றல் நரம்பு மண்டலத்தின் செயல் பாட்டிற்கு இணையானது.
(கட்டுரையாளர் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியர்)
 நோய் தடைக் காப்பு மண்டலத்தின் சிறப்பம்சங்கள்
தனித்தன்மை (Specificity) மிகத் துல்லிய வேறுபாடுகளுள்ள இரு எதிர்நச்சுகளை இனம் கண்டு அதற்கு எதிரான சரியான இரு வேறு எதிர்புரதத்தை உருவாக்கும் தன்மை
நினைவாற்றல் (Memory) ஒரு முறை எதிர் கொண்ட எதிர்நச்சை மறுமுறை எதிர்கொள்ள நேரிட்டால், உடனடியாக அதிக ஆற்றலுடன் (Anamnestic response) அதனை அழிக்கும் நினைவுத் திறன்
பன்முகத்தன்மை (Diversity) இவ்வுலகிலுள்ள கோடிக் கணக்கான எதிர்நச்சுகளைக் கண்டறிந்து வெளியேற்ற அதற்கேற்ற எதிர்புரதத்தையும் செல்களையும் உருவாக்கும் வல்லமை
வேறுபடுத்துதல் (Self/non-self differentiation) தன்னுடலிலுள்ள செல்களை மற்றவைகளிடம் இருந்து பிரித்தறிந்து, வெளியிலிருந்து வரும் எதிர்நச்சுகளை மட்டுமே தாக்கி அழிக்கும் திறன்
தடுப்பு மருந்தும், எதிர் உயிரி மருந்தும்

தடுப்பு மருந்து என்பதை ஆங்கிலத்தில் Vaccine என்கிறோம். எதிர் உயிரி மருந்து என்பது ஆங்கிலத்தில் Antibiotic என்று அழைக்கப்படுகிறது. தடுப்பு மருந்து என்பது நோய் ஏற்படுவதற்கு முன்னால் நம் உடம்பின் நோய் தடுப்பரணை ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக அதிகரித்துக் கொள்வதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், Antibiotic என்னும் எதிர் உயிரி மருந்துகளை நோய் ஏற்பட்டபின், அந்நோய்க்கு காரணமான கிருமிகளை அழிப்பதற்காக எடுத்துக்கொள்கிறோம்.
தடுப்பு மருந்துகளில் நோய்க்கு காரணமான கிருமியை வீரியம் குறைத்து அல்லது ஏதேனும் வேதிப் பொருட்களைக் கொண்டு அக்கிருமியின் நோய் உண்டாக்கும் தண்மையை அழித்து பயன்படுத்துகிறார்கள். நாம் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும் போது அந்த தடுப்பு மருந்தில் காணப்படும் Antigen என்னும் புரதம் நம் உடம்பினில் Immunoglobulin என்னும் நோய் எதிர்ப்பு பொருளை உருவாக்கி நமக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. ஆனால், Antibiotic என்னும் எதிர் உயிரி மருந்துகள் நோய்க்கு காரணமான கிருமிகளை நேரடியாகத் தாக்கி அழிக்கின்றன.
தடுப்பு மருந்துகளை பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களுக்கு எதிராக எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், Antibioticகள் பாக்டீரியா நோய்களுக்கு எதிராக மட்டுமே செயல்படக்கூடியவை. வைரஸ்கள் செல் அற்ற வளர்சிதை மாற்ற நிகழ்வுகளை மேற்கொள்ளாத நுண்ணுயிரிகளாக இருப்பதால் அவற்றை அழிப்பதற்கு Antibioticகளால் இயலாது. உலகில் முதல் நோய் தடுப்பு மருந்தை பெரியம்மை நோய்க்கு எதிராக எட்வர்ட் ஜென்னர் உருவாக்கினார். உலகின் முதல் Antibioticகான பென்சிலின் அலெக்சாண்டர் ப்ளம்மிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment