Saturday 25 January 2014

2013-ல் இதயம் தொட்ட எட்டு புத்தகங்கள்

2013-ல் இதயம் தொட்ட எட்டு புத்தகங்கள்
Posted Date : 20:12 (14/12/2013)Last updated : 20:12 (14/12/2013)
விகடன் வரவேற்பறைக்கு வந்து மதிப்புரை பெற்ற புத்தகங்கள் பல. அவற்றுள் நம் இதயம் தொட்ட பத்து புத்தகங்களின் மதிப்புரைகள் இங்கே
இரோம் சர்மிளா
 மலையாளத்தில்: பி.சிறீராஜ் தமிழில்:  மு.ந.புகழேந்தி
வெளியீடு: எதிர், 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-2.
'இந்தியாவின் இரும்பு பெண்மணி’ மணிப்பூரைச் சேர்ந்த இரோம் சர்மிளாவின் வாழ்க்கைக் கதையே இந்த நூல். 
உலகின் நீண்டகால உண்ணா நிலை போராட்டம் இரோம் சர்மிளாவுடையது. அவரது ஒரே கோரிக்கை, மணிப்பூரில் அமலில் இருக்கும் ஆயுதப் படைச் சிறப்புச் சட்டத்தை மத்திய அரசு உடனே விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான். ஏனெனில், அந்தச் சட்டம் மணிப்பூர் மக்களின் அன்றாட வாழ்க்கையையே நரகமாக்கிவிட்டது. ஆயுதப் படை யாரையும் சுடலாம், யார் வீட்டுக்குள்ளும் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம். அவர்களைக் கேள்விகேட்க முடியாது. பேருந்துக்காகக் காத்திருந்த 10 பேரை ராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றதை நேருக்குநேர் பார்த்த பிறகுதான், இதை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தவர் சர்மிளா.
மணிப்பூர் மக்களின் வாழ்க்கைமுறை, கலாசாரம், பழக்கவழக்கங்கள்... என வரலாற்று ஆதாரத்தோடு தொடங்கும் இந்த நூல், மணிப்பூர் பெண்களின் போராட்டக் குணங்களை விளக்குகிறது. மன்னாராட்சியோ... மக்களாட்சியோ... அதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதில் மணிப்பூரிகள் ஒருபோதும் தயக்கம் காட்டியதே இல்லை. அப்படிப்பட்ட கடந்தகாலப் போராட்டங்கள் பல வற்றுக்கும் பெண்களே தலைமை ஏற்றுள்ளனர். இந்த மரபில் வந்த வர்தான் இரோம் சர்மிளா.
சர்மிளாவின் உடல், இப்போது தளர்ந்துவிட்டது. ஆனால், போராட்டக் குணம் மேலும் வலுவடைந்திருக்கிறது. இன்னும்கூட மணிப்பூரில் 'ஆயுதப் படைச் சிறப்புச் சட்டம்’ விலக்கிக்கொள்ளப்படாத நிலையில் பத்திரிகைகளுக்கு செய்தியாக, அரசின் பார்வையில் ஒரு குற்றவாளியாக தன் போராட்டத்தைத் தொடர்கிறார் சர்மிளா. 'இது எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமை. நிச்சயம், சத்தியம் வெல்லும்’ என்பது சர்மிளாவின் நம்பிக்கை!
தனிநாயக அடிகளாரின் படைப்புகள்
 உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் தவழ்ந்து வருவதற்கும், உலகின் பல்வேறு மொழி பேசுபவர்களும் தமிழைப் படிப்பதற்கும் காரணம்... தனிநாயகம் அடிகளார். உலகத்தமிழ் மாநாடு நடத்துவதற்கான தூண்டுதலும், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பலரும் இன்று தமிழ்ஆய்வில் ஈடுபடக் காரணமும் இவரே. தமிழை உலக மொழியாக மாற்றிய உன்னத மனிதர்தான் ஈழத்தைச் சேர்ந்த தனிநாயகம் அடிகளார். அவரது ஒருசில கட்டுரைகளின் தொகுப்பு இது.
தமிழ் படிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தவர் இவர். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் படிக்கும்போது தமிழைப் படிக்கவே இல்லை. ஈழத்தில் இருந்து தமிழகம் வந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த போதுதான் தமிழ் ஆர்வம் துளிர்த்தது. 'பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்ற ஆய்வேட்டைத் தயாரித்தார். பிறகு, உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று தமிழ் பற்றிய ஆய்வுரைகள் நிகழ்த்தினார். 'தமிழ் கல்ச்சர்’ என்ற ஆய்விதழைத் தொடங்கினார். இதன்காரணமாகத்தான் உலகத் தமிழா ராய்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது. அதன்மூலம் உலகத்தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டன. தனியரு மனிதராக இருந்து தமிழைத் தரணி எங்கும் கொண்டுசென்றவர் தனிநாயகம் அடிகளார். தான் சென்ற அனைத்து நாடுகளைப் பற்றியும் அவர் எழுதியுள்ள கட்டுரைகள், உலக வரலாற்றுச் சுருக்கம். கிரேக்க, ரோமிய, புத்த ஒழுக்க இயல்புகளையும் திருக்குறளையும் ஒப்பிட்டு அவர் எழுதியுள்ள கட்டுரைகள் திருக்குறளின் பெருமையையும் தனிநாயகம் அடிகளாரின் புலமையையும் வெளிப்படுத்துகின்றன.
'வேற்று நாடுகளில் குடியேறியிருக்கும் தமிழர், தமிழை ஒருவாறு மறப் பதற்கு அவர்களுடைய சூழ்நிலை காரணமாக இருப்பதால், அந்நாடுகளின் மொழிகள் வாயிலாகவும் தமிழின் புகழைப் பரப்புவது நம் கடமை. வேற்று நாடுகளுக்கு, தமிழ்நாட்டில் இருந்து கல்வியின் பொருட்டும் வணிக மற்றும் அரசியல் நோக்கிலும் செல்லும் தமிழர்கள், தமிழ் வரலாற்றையும் தமிழ் இலக்கியங்களையும் நன்குணர்ந்து செல்வாராயின், அவரும் தமிழ்க் கலைத் தூதைப் பெரிதும் நிகழ்த்துவதற்கு வழிகளைக் காண்பர்’ என்று, தனிநாயகம் அடிகளார் சொல்வதைப் பின்பற்றினால் உலக நாடுகள் முழுவதும் தமிழ் தழைக்கும். தமிழ் பற்றிப் பேசுவது என்பது ஒழுக்கம், பண்பாடு குறித்த கல்வியாகவும் அமைய வேண்டும் என்கிறார் அடிகளார். 'தமிழர் பண்பாட்டில் பக்தி எங்ஙனம் சிறந்து விளங்கியதோ... நீதியும் அவ்வாறு சிறந்து விளங்கியுள்ளது.  ஒழுக்கமென்பது தமிழர் பண்பாட்டின் ஓர் அடிப்படைக் கொள்கையாக அமைந்து, இன்றும் தமிழர் வாழ்க்கைக்குப் பெரும் அழகையும் மனநிறைவையும் நல்குகிறது’ என்கிறார்.
நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில், தனிநாயகம் அடிகளார் சொல்லும் கட்டளை... தமிழர்கள் தங்கள் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்!
பெயரற்றது - சயந்தன்
போருக்குப் பிந்தைய ஈழத்துப் படைப்புகள், காத்திரமான யுத்த இலக்கியங்களாக உருவாகி வருகின்றன. சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழரான சயந்தன் எழுதியுள்ள 'பெயரற்றது’, புலம்பெயர் இலக்கியத்தின் இன்னோர் உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
மொத்தம் எட்டுக் கதைகள். அனைத்துமே போரின் வலிகளைப் பேசுகிறது. 'தமிழ் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ்’ என்ற சிறுகதை, புகலிடத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலைசெய்யும் ஒருவருடைய குறிப்பு. தாய்நாட்டில் வாழ முடியாத சூழல் நிலவுவதை நிரூபித்தாக வேண்டிய நிர்பந்தம், தஞ்சம் கோருவோருக்கு உண்டு. இந்தக் கதையில் தஞ்சம் கோரும் பிரதீபன், ராணுவத்தால் ஏற்படும் தொல்லைகளைப் பட்டியலிடுகிறார். விசாரணை அதிகாரியோ, 'உனக்கு ராணுவத்தாலும் பிற குழுக்களாலும் பிரச்னை. உன்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் புலிகளால் உனக்கு உயிராபத்து ஏதும் இல்லை’ என்கிறார். ஏதோ ஒரு குறை வைத்துவிட்டதை உணர்ந்த பிரதீபனின் அடுத்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது. மனிதர்கள் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய இயல்புடையவர்கள் என்பதை மிகவும் நுட்பமாகச் சொல்கிறது இந்தக் கதை.
நூலின் தலைப்பான 'பெயரற்றது’ கதை, ஈழத்தில் உள்ள சாதி முரண்களைச் சரடாகவைத்துப் பின்னப்பட்டுள்ளது. இயக்கம், அமைப்பு, போராட்டம் எல்லாம் ஒரு கவர்ச்சியாக மக்களிடம் கவிந்திருந்தாலும், பொதுச் சமூகம், சாதி என்னும் சாபக்கேட்டை மீறாமல் இருப்பதை 'பெயரற்றது’ கதை உணர்த்துகிறது. நீடித்த யுத்தம், கடற்தொழிலைப் பாழாக்கி வறுமையைக் கொடுக்கும்போது, எப்படியாவது தன் மகனை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் 'சின்ராசு மாமா’ கதை, முடிவில் மூன்று விதமான அரசியல் கோட்பாடுகளை விமர்சிக்கிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள எட்டுக் கதைகளில் '90 சுவிஸ் பிராங்குகள்’ எனும் கதைதான் ஈழத் தமிழர்களின் புகலிட வாழ்வின் யதார்த்த நிலையை தோலுரித்துக் காட்டுகிறது. 'அபிதேமி’ என்ற கறுப்பின ஆஃப்ரிக்க அகதி, ஈழத் தமிழ் அகதியிடம் தன் கதையைச் சொல்கிறாள். தாய் நிலம் பிரிந்த அந்தப் பெண்ணின் கதையை வலியோடு ஈழ அகதி கேட்டுக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைகிற இன்னோர் ஈழத் தமிழரான றமணன், இப்படிச் சொல்வதோடு அந்தக் கதை முடிகிறது 'கள்ளக் கறுவல் நாய்களோடு உனக்கென்ன கதை வேண்டியிருக்குது!’
சயந்தனின் கதைகளில் வரும் மனிதர்கள் சராசரிக்கும் கீழான எளிய மனிதர்கள். இத்தகைய இயல்புடையவர்களின் கதையை, கிண்டலுடன் கூடிய மொழியில் சொல்லும்போது, அது மேலும் வலுப்பெறுகிறது.
சியாங் சிங்- ஜாஃபியா ராயன் (தமிழில்: வான்முகிலன், திலகன்)
 'வலிமைகொண்டு போராடுவதால் எதிரிகளின் தோலையும் சதையையும் வேண்டு மானால் தொட்டுவிடலாம். ஆனால் காரணகாரிய விவாதங்கள் மூலமாகவே அவர்களுடைய உள்ளங் களைத் தொட முடியும்.’
'நியாயத்தின் அடிப்படையில் தாக்குக; வன்முறை மூலம் தற்காத்துக் கொள்க.’
'ஒவ்வொரு நாளும் அதிகாலை சேவல் கூவும் பொழுதே வாளுடன் ஒரு சிறந்த தளபதியைப் போலத் தயாராக வேண்டும்.’
'புரட்சி செய்வது ஒன்றும் குற்றமில்லை’ - இப்படிப்பட்ட ஏராளமான புரட்சிகர இலக் கணங்களை உருவாக்கியவர் சியாங் சிங். உலகப் பொதுவுடைமை இயக்கவாதிகள் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட பெயர் இது. புரட்சிகர சீனாவை கட்டி அமைத்த மாவோவின் மனைவி. மாவோ தனது அரசியல் வழி நடப்பவராக சியாங் சிங்கை அடையாளம் காட்டினார். மாவோ இறந்தபின் அவரது கல்லறையில் சியாங் சிங் வைத்த மலர் வளையத்தில், 'உங்களுடைய மாணவரும் தோளோடு தோள் நிற்கும் தோழரிடமிருந்து’ என்ற வாசகத்தை பொறித்து இருந்தார். அப்படிப்பட்ட சியாங் சிங்கின் புரட்சிகரமான வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் இது.
சீனாவின் ஷான்டுங் மாகாணத்தில் ஏழை கைவினைஞர் குடும்பத்தில் பிறந்த சியாங் சிங், 1938-ம் ஆண்டு மாவோவைத் திருமணம் செய்தார். 1976-ல் மாவோ இறந்தார். இடைப்பட்ட 38 வருட கால மண வாழ்க்கையில் முழுக்கவும் மாவோவுக்கு உறுதுணையாக இருந்தார். விவசாயிகளுடன் கலந்து பழகினார். இளைஞர்களுடன் சேர்ந்து போராடினார். உணவு உற்பத்தி செய்தார். மாவோவின் மனைவி என்று அவர் செயல்படவில்லை. ஒரு தோளில் மண்வெட்டியும் மறுதோளில் துப்பாக்கியுமாக அலைந்தார். புரட்சிக்குப் பின் சீனாவின் கிராமப்புறங்களை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுத்தார்.
மாவோ இறப்புக்குப் பிறகுதான் சியாங் சிங்கின் முழுமையான பரிமாணத்தை சீனா பார்த்தது. மாவோ மறைவுக்குப் பின்னால் சீனா திரிபுவாதிகளின் கையில் சிக்கியது. சியாங் சிங் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 'உங்களிடம் இப்போது அதிகாரம் இருக்கிறது; எனவே மற்றவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்று எளிதாகக் குற்றம்சாட்ட முடியும். உங்களது குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாகப் போலியான ஆதாரங்களை உருவாக்க முடியும். ஆனால் நீங்கள் சீன மக்களையும் உலகெங்கும் உள்ள மக்களையும் முட்டாளாக்க முடியும் என்று நினைத்தால் நீங்கள் முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் அல்ல உங்களது சிறுகும்பல்தான் வரலாற்று நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறீர்கள்’ என்று அவர் அளித்த வாக்குமூலம் இன்றும் சீன ஆட்சியாளர்களை நோக்கியதாகவே இருக்கிறது.
'தலைவர் மாவோவின் கடனை அடைப்பதற்கு நான் மகிழ்ச்சியும் கௌரவமும் அடைகிறேன்’ என்ற வார்த்தை இன்றும் உஷ்ணம் கிளப்பியபடியே இருக்கிறது.
வனசாட்சி  - தமிழ்மகன்
'கங்கை கொண்டான், கடாரம் வென்றான்’ எனக் கடந்த காலத் தமிழ் வீரம் பேசிக்கொண்டு இருப்பதன் அபத்தம், சில சமயங்களில் பளிச்சென்று முகத்தில் அறையும். பிஜி தீவின் கரும்புத் தோட்டங்களில், தாய்லாந்தின் சயாம் ரயில் பாதைகளில், பர்மாவின் உடல் உழைப்புத் தொழில்களில், மலேசியாவின் தேயிலைத் தோட்டங்களில், தென் ஆப்பிரிக்காவின் உதிரி வேலைகளில், இலங்கையின் மலையகக் காடுகளில்... இங்கெல்லாம் தமிழர்கள் அரசாளச் செல்லவில்லை. அடிமைகளாக அழைத்துச் செல்லப் பட்டனர். நாம் வசதியாகப் பேச மறந்துவிடுகிற இந்த உண்மையின் ஒரு பகுதியைப் பேசுபொருளாகக்கொண்டு வெளிப்படுகிறது தமிழ்மகன் எழுதிய 'வனசாட்சி’ நாவல்.
'உலகிலேயே இலங்கைத் தேயிலைதான் தரம்மிக்கது’ என இன்று சொல்லப்படுகிறது. அந்தத் தரம்மிக்க தேயிலையின் ஒவ்வோர் இணுக்கும் தமிழனின் உழைப்பு. அடர்ந்து விரிந்த பிரமாண்ட மலைக் காடுகளைச் செப்பனிட்டு, செடிவைத்து, வளர்த்து, கொழுந்து பறித்து, கோடிகளாகப் பெருக்கியது தமிழன். இறுதியில் தெருக்கோடியில் வீசப்பட்டவனும் தமிழன்தான். அந்த வலியை உண்மைக்கு நெருக்கமாக ஒரு நாவலாகப் பதிவுசெய்த விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் தமிழ்மகன்.
வாட்டி வதைக்கும் வறுமை தமிழர்களை இலங்கைத் தீவை நோக்கித் தள்ளுகிறது. 'அடைவதற்கு ஒரு பொன்னுலகம் காத்திருப்பதாக’ நம்ப வைத்து அழைத்துச் செல்கிறார்கள் கங்காணிகள். ஆனால், அங்கே காத்திருப்பது பொன்னுலகம் அல்ல... பொல்லாத உலகம். கடல் காற்றின் உப்பு மேனி எங்கும் ஊசியாய்க் குத்த, கரையில் இறங்கிய கணம் முதல் துன்பம் மட்டுமே அவர்களுக்குப் பரிசு. கங்காணிகள், வெள்ளைக்காரர்களுக்கு ஆள்காட்டிகளாக இருந்து தமிழ்த் தொழிலாளர்களை வாட்டி வதைக்கின்றனர். உணவு இல்லை; ஓய்வு இல்லை; உறக்கம் இல்லை. நோய்கள் தின்ற உயிர்கள் போக எஞ்சியவர்கள் மலையகம் சென்று சேரும் வரையிலான நாவலின் முதல் பாகம், நம் நெஞ்சில் அழுத்தமாக அறைகிறது.
தமிழர்களை மிருகங்களைப் போல வேலை வாங்குவதும், எந்தவித வசதிகளும் அற்ற லைன் வீடுகளின் நரக வாழ்க்கையும், கங்காணிகளின் கொள்ளையும் துளித் துளியாக விவரிக்கப் பட்டுள்ளது. பண்டார நாயகா ஒப்பந்தத்துக்குப் பிறகு, மலையகத் தமிழர்கள் மறுபடியும் தமிழ் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படும் பகுதி நாவலில் முக்கியமான கட்டம்.இரண்டு  தலைமுறைகளாக உழைத்துச் சீராக்கிய நிலத்தை விட்டு வெளியேற முடியாமல் அவர்கள் தவிக்க, 'வெளியேறத்தான் வேண்டும்’ என்று இலங்கை அரசு கட்டாயப்படுத்த... அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்திருக்கும், மலையகத் தமிழர்களின் மன உணர்வு எவ்வகைப்பட்டது என்பதைத் துல்லியமாகப் பேசுகிறது நாவல்.
ஒட்டுமொத்தமாக நாவலின் உள்ளடக்கம் புதியதாக இருக்கிறது. அதுவே நம்மை ஈர்த்து, இழுத்துச் செல்கிறது. இதுவரை பேசப்படாத இலங்கை மலையகத் தமிழர்களின் பிரச்னைகளை உரக்கச் சொல்லியிருக்கும் வகையில், நிச்சயம் இது 'வனசாட்சி’தான்! 
செவ்வி
பேரா.தொ.பரமசிவன் நேர்காணல்கள்
தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவை, அடித்தட்டு மக்களின் நோக்கில் ஆய்வு செய்துவருபவர் பேராசிரியர் தொ.பரமசிவன். தமிழர்கள் முடி  மகிழ்ந்து கொள்வதும் பௌத்தத் தில் இருக்கும் சைவ நாயன்மார்கல் துவராடை (காவி) அணிவது சமணத்தில் இருதும் வததை எடுத்துக் காட்டியவர் நூல் பிடித்து வரலாற்றை அணுகாமல் நெகிழ்ச்சிப் போக்கோடு பன்மைத்தன்மையைப் பேணுவது தொ.பரமசிவத்தின் சிறப்பு. அதனாலேயே தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் என அனைவராலும் கொண்டாடப் படுபவராக இருக்கிறார் தொ.ப. 'செவ்வி’ என்ற இந்த நூலில் அவருடைய ஏழு நேர்காணல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். பண்பாடு, வரலாறு, மதம், சிறுதெய்வ மரபு... என நாம் அறிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்களைச் சுமந்திருக்கிறது இந்த நூல். தன்னுடைய வளர்ப்பு தொடர்பான கேள்விக்கு,  ''சமய நல்லிணக்கம்’ என்பது பெரியாரைப் படித்து எனக்கு வரவில்லை. அது இயல்பாகவே என் வீட்டில் இருந்தது. இந்த ஊரில்கூட இதைப் பார்க்கலாம். சவேரியார் கோயில் திருநாளில் மற்ற மதத்துக்காரர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். கிறிஸ்துமஸுக்கு 'பாலகன் பிறப்பு’னு இருக்கும். பிறந்த குழந்தையைப் பார்க்க சோப்பு, பால், பவுடர் டின் எல்லாம் வாங்கிட்டு எல்லா சாதி, மத மக்களும் போவாங்க. இந்தச் சமய நல்லிணக்கம், பெண்களிடம்தான் இயல்பா இருக்கு. நம்மில் சரிபாதியாக பெண்கள் இருக்கிறதாலதான் இங்க மதக் கலவரங்கள் இல்லை’ என்று தமிழகத்தின் தென்பகுதி மக்களிடம் நிலவும் எல்லை கடந்த பண்பாட்டு நினைவுகளைச் சொல்கிறார்.
13-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் செல்வாக்குச் செலுத்திய பண்பாட்டுப் படையெடுப்புகள் தொடர்பாகப் பேசும்போது, 'விஜயநகர ஆட்சியில் பிராமணர்கள் தொடங்கி ஒடுக்கப்பட்டவர்கள் வரை தெலுங்கு மக்கள் தமிழகத்தில் குடியேறினார்கள். அவர்களுடைய வருகைக்குப் பிறகுதான் நிறைய விஷயங்கள் புராண அடிப்படையிலும் ஆகம அடிப்படையிலும் மாற்றப்பட்டன. அதற்கு முன்பு காரடையான் நோன்பும் வரலட்சுமி நோன்பும் இங்கே கிடையாது. தீபாவளிகூடச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டதில்லை.
விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் இவர்கள் குடியேறிய பின்னர், தமிழகத்துக்கு ஏற்பட்ட பாதகம்தான் அதிகம். சாதகமான அம்சம் என்று பார்த்தால், அங்கிருந்து வந்த உழைக்கும் மக்கள் வேளாண்மைக்கும் நெசவுக்கும் செய்த தொண்டுகள் அதிகம். குறிப்பாக, சௌராஷ்டிரர்களின் பங்கு கணிசமானது’ என்கிறார்.
கருணாநிதி ஆட்சியில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்காதது தொடர்பான கேள்வியன்றுக்கு இப்படிப் பதில் சொல்கிறார். 'ஏனெனில், தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனால் அதில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்தேன். கலைஞர் அழைத்ததினால் சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்!’
நாட்டார் தெய்வங்கள், மறைக்கப்பட்ட மக்கள் பண்பாடு, மன்னர்கள் பற்றிய மதிப்பீடுகள், பெரியாரை கிராம தெய்வ நோக்கில் அணுகல்... எனக் காய்த்தல் உவத்தல் இன்றி வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் தொ.ப-வோடு பயணிக்கலாம்!
டாலர் நகரம்-ஜோதிஜி
வந்தாரை வாழவைத்த திருப்பூர் நகரம், இப்போது விரக்தியால் திருப்பி அனுப்பி வருகிறது. 'திருப்பூருக்குப் போனா எப்படியும் பிழைக்கலாம்’ என்று நம்பி ஊரை விட்டு ஓடிவருவார்கள். ஆனால் இன்று, அந்த ஊரை விட்டு பலரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட திருப்பூரின் கதை இது. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் எழுத்தாளர் ஜோதி கணேசன், தன்னுடைய அனுபவங்களின் மூலமாக திருப்பூரின் வரலாற்றைச் சொல்கிறார்.
திருப்பூரில் சின்னஞ்சிறுவர்கள் எப்படியெல்லாம் உழைக்கின்றனர் என்பதை ஜோதி கணேசன் சொல்லும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.
''திருப்பூருக்கு நான் உள்ளே நுழைந்த காலத்தில் பணிபுரிந்து​கொண்டிருந்த நிறுவனத்தில், நண்டும் சிண்டுமாய் உள்ளே ஒரு பெரிய கூட்டமே இருந்தது. இடுப்பு அளவுக்குக்கூட இல்லாதவர்கள் சிங்கமாய் நடு இரவு வரை பணிபுரிந்துவிட்டு, மறுநாள் காலை எட்டு மணிக்கு மீண்டும் வந்து வேலைபார்த்துக்கொண்டிருந்தனர்'' என்கிறார். வறுமை, அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு மணி நேரத்தையும் உழைத்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் செய்தது.
பெண்கள் இரவுகளில் பட்ட பாலியல் கஷ்டங்களையும் கண்ணீருடன் சொல்கிறார்.இதனால்தான் பழைய தொழிலாளிகள் ஓடிப்போய்விட்டு, அந்த இடத்துக்கு புதிய தொழிலாளிகள் வந்துவிடுகிறார்கள். கடைசி வரை தொழிலாளியாகவே இருந்தவர்கள் கதை, மனதை ரணம் ஆக்குகிறது.
மின்வெட்டு, சாயப் பட்டறைகள் மூடல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள தேக்கம், டாலர் வீழ்ச்சி... என ஏதோ ஒரு காரணத்தை வைத்து திருப்பூரின் வர்த்தகம் சமீபகாலமாக பெரும் சரிவை அடைந்தது. திருப்பூரை விட்டு இரண்டு லட்சம் மக்கள் வெளியேறி விட்டனர். வெளியேற முடியாதவர்கள் வெளிறிப்போய் நிற்கின்றனர். வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்களும் சம்பள நாள் என்பதால் முன்பெல்லாம் தீபாவளி மாதிரி பணப்புழக்கம் இருக்கும். இன்று எல்லா நாளும் ஞாயிற்றுக்கிழமையைப்போல வெறிச்சோடி கிடக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கையின் பூமராங் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் திருப்பூர். தொழில் நகரங்களின் கதைகளை நாம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் இந்தப் புத்தகம் இருக்கிறது!
ஓமந்தூரார்: முதல்வர்களின் முதல்வர்- எஸ்.ராஜகுமாரன்
காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் ஒருமுறை சொன்னார், 'ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை எதிர்காலச் சமுதாயம் நம்ப மறுக்கும்’ என்று. அப்படி ஒரு மனிதர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியிலும் உட்கார்ந்து இருந்தார். அவர்தான் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இந்தியா சுதந்திரம் அடையும்போது, அன்றைய சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தவர். அன்று, பிரதமர் என்றுதான் அழைப்பார்கள். மொத்தமே இரண்டு ஆண்டுகள்தான் அவர் அந்த நாற்காலியில் இருந்தார். அவர் கடைப்பிடித்த அரசியல் நாகரிகம், பொதுவாழ்க்கையில் ஒழுக்கம், நிர்வாகத் திறமை, துரித மான நடவடிக்கைகள் ஆகியவை இன்றுவரை பாடமாக இருக்கிறது.
'ஓமந்தூரார் கள்ளங்கபடமற்ற கிராமவாசி. அரசியல் சூதாட்டத்துக்கு அப்பாற்பட்டவர். தியாக முத்திரையை அரசியல் சந்தையிலே விற்கத் துணியும் வணிகராக இருக்க மறுப்பவர். சொந்த வாழ்க்கையையும் நலனையும் மிகமிகக் குறைவான அளவினமாக்கிக் கொண்ட துறவு மனப்போக்கினர்’ என்று அண்ணா இவரைப் பற்றி எழுதினார். அப்படிப்பட்ட மனிதரைப் பற்றிய ஆழமான வரலாறு இது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் அரசு சின்னம் ஒன்று வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தபோது தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்வுசெய்தவர் ஓமந்தூரார். 'சமயச் சார்பற்ற ஒரு அரசாங்கத்தின் சின்னமாக இந்துக் கோயில் கோபுரத்தை எப்படி வைக்கலாம்?’ என்று பிரதமர் நேரு வரை புகார் போனது. 'கோபுரம் என்பது சமயச் சின்னம் மட்டும் அன்று. அது தமிழ்ப் பண்பாட்டின் சின்னம். எங்கள் மாநிலத்தின் தனிச் சிறப்பாக உலகம் போற்றும் திராவிடக் கட்டடக் கலையின் அடையாளம்’ என்று பதில் அளித்தபோது பிரதமரால் அதை மறுக்க முடியவில்லை. அந்தச் சின்னத்தின் கீழே, 'சத்தியமேவ ஜெயதே’ என்று எழுதியதும் ஓமந்தூரார்தான். அதைத்தான் அண்ணா முதல்வராக இருந்தபோது, 'வாய்மையே வெல்லும்’ என்று தமிழ்ப்படுத்தினார். தான் எழுதியதற்குத் தகுந்தமாதிரியே வாய்மையான வாழ்க்கையை ஓமந்தூரார் வாழ்ந்து காட்டினார். முதல்வர் பதவியிலிருந்து விலகிய தினமே வடலூர் ராமலிங்க அடிகள் மடத்துக்குப் போய் குடியேறியவர் ஓமந்தூரார். அதன்பிறகும் பல்வேறு பதவிகள் அவரைத் தேடி வந்தன. எதையும் அவர் ஏற்கவில்லை.
'ஒரு பக்கம் மலினமாகிவிட்ட அரசியல். இன்னொரு பக்கம் நவீனமயமாகிவரும் வாழ்க்கை முறை. ஓடிக்கொண்டே இருக்கும் இளைய தலைமுறைக்கு இத்தகு நூல்கள் மட்டுமே உட்கார்ந்து சிந்திக்க வைக்கும்’ என்ற நல்ல நோக்கத்தோடு எம்.ராஜகுமாரன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த நோக்கத்தை முழுமை யாகப் பூர்த்தி செய்கிறது இந்தப் புத்தகம்.
எண்களின் அன்பர் ஸ்ரீநிவாச இராமானுஜன்- இரா.சிவராமன்
'இராமானுஜனின் கணிதப் படைப்புகளின் தன்மையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி, மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டி இதுபோல் மேதைகளை உருவாக்குவதே நமது கடமை’ என்ற நோக்கத்துடன் பை கணித மன்றம் அமைப்பு இந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்துள்ளது.
இராமானுஜனைப் பற்றி ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழில் மிகக் குறைவான அளவிலேயே வந்துள்ளது. அந்தக் குறையை இரா.சிவராமன் போக்கிவிட்டார்.
இராமானுஜனின் ஜனன ஜாதகத்தில் இருந்து தொடங்கும் இந்தப் புத்தகம் அவர் கண்டுபிடித்த கணக்குச் சூத்திரத்தின் கையெழுத்துப் பிரதியுடன் முடிகிறது.தென் இந்தியாவின் கேம்பிரிட்ஜ் என்று சொல்லப்பட்ட கும்பகோணத்தில் படித்து... தன்னுடைய சொந்த முயற்சி, ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய மேதைமையை வளர்த்துக்கொண்டவர் இராமானுஜன். மற்ற மாணவர்கள் விளையாடிக் கழித்தபோது, அதனைப் பொருட்படுத்தாமல் கணிதத்தில் கழித்தார். 12 வயதில்  ஏற்பட்ட கணித ஆர்வம் அவரது மரணப் படுக்கை வரை இருந்ததை அங்குலம் அங்குலமாக வர்ணிக்கிறது இந்தப் புத்தகம்.
இன்று உலகம் புகழும் மேதை, அன்று எத்தகைய புழுக்கத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பதைப் படிக்கும்போது வருத்தமாக இருக்கிறது. மேதைகளின் வாழ்க்கையும் கணக்கைப்போலவே புரிந்துகொள்ளச் சிக்கலான​தாக இருக்கி றது. இவை இன்றைய தலைமுறை படிக்க வேண் டிய பாடங் களாகவும் இருக்கின்றன.

No comments:

Post a Comment