Saturday 25 January 2014

உலகமும் உலகப் பொதுமறையும்! -

உலகமும் உலகப் பொதுமறையும்! -
Posted Date : 10:12 (12/12/2013)Last updated : 11:12 (12/12/2013)
தீபிகை கந்தசாமி
திருக்குறள் 'உலகப் பொதுமறை’ என்று அழைக்கப்படுவது வெறும் சம்பிரதாயம் கருதி அன்று. தனது ஐம்பது வயதுக்குள் ஐம்பது நூல்கள் அல்லது ஐநூறு நாவல்கள் எழுதும் எழுத்தாளரைப்  போலில்லாமல் வள்ளுவர் தான் வாழ்நாள் முழுக்க திட்டமிட்டு எழுதிய ஒரே நூல் ஒப்பற்ற நூல் திருக்குறள். தமிழ், மூவேந்தர், கங்கை, காவிரி போன்ற உள்ளூர் பெயர்கள் எதுவுமின்றி, மாறிவரும் அறிவுக்கு (Knowledge)அழுத்தம் தராமல் மாறாத மெய் அறிவுக்கு(Wisdom)  அதிக அழுத்தம் தந்து இலக்கியல் Idealism) மற்றும் இயல்பியல்(Realism)ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டதால்தான் காலம், இடம் என்னும் இரு பரிமாணங்களைக் கடந்து வாழும் வள்ளுவமாக திருக்குறள் இருக்கிறது என்பார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி.
காலந்தோறும் உலகில் உருவாகி வந்துள்ள புத்தம் புதிய இலக்கிய- தத்துவக் கோட்பாடுகளைத் தழுவியும், மாறிவறும் புதிய உலகத்திற்கு பொருந்தி வரக்கூடிய பற்பல சிந்தனைகளை தன்னுள் பொதிந்து வைத்தும், உலகின் நிகழ்வுகளுக்கு உதாரணமாக சுட்டவல்ல சில பொன்னான கருத்துகளை உள்ளடக்கியும் திருக்குறள் உண்மையிலேயே ஓர் உலகப் பொதுமறையாக நீடித்த நிலைத்த வளர்ச்சி (Sustainable Development)   அடைந்து வருவதை எடுத்துக்காட்ட முயல்வோம்.
உலக இலக்கியத் தத்துவ கோட்பாடுகளும் குறளும்
துறவு, முயற்சி, அறிவு போன்றவற்றைப் பற்றி பேசும்போது திருக்குறளில் இலக்கியலும், இயல்பியலும் மிளிர்கிறது. எண்ணங்களையும், உள்ளத்தையும் பற்றி பேசும்போது நேர்மறை சிந்தனையும் (Positive thinking) சில சூழல்களில் இருத்தலியல் வாதமும்(Existensialism) ஒளிர்கின்றன.
துறவு
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
என்று சாமியார்களுக்கு இலக்கணம் வகுப்பது இலக்கியல்.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதம்
ஐந்தும் அகத்தே நகும்.
என்பது இவ்வுலகை ஏமாற்றும் போலிச்சாமியார்களுக்கான எச்சரிக்கையாக வெளிப்படும் இயல்பியல்.
மனத்தது மாசாக மாண்டர் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
என்பது உலாவரும் சாமியார்களில் பலபேர் போலிச் சாமியார்கள்தான் என்ற இயல்பியல் உண்மையை இந்த உலகுக்கு அடையாளங்காட்டும் முயற்சி.
மனத்தை சுத்தம் செய்யாமல் மண்டையை மட்டும் மழித்து என்ன பயன் என்று தம்மபதம் புத்த பிட்சுகளுக்கு கூறும் அறிவுரையை அடிஒற்றி அதை மொட்டையுடன் திகழும் பௌத்தத் துறவிகளுக்கும் (மழித்தல்) தாடி வளர்க்கும் இந்தத் துறவிகளுக்கும் (நீட்டல்) பொதுவாக்கி ஒரு துறவியின் அடையாளம் என்பது அவனது புற அடையாளம் அல்ல; இந்த உலகம் பழிக்கும் செயல்களில் இருந்து விலகி ஒழுகும் அக அடையாளமே என்று இலக்கியல் பேசுகிறது. அதே சமயத்தில் மனதில் வஞ்சனையோடு வெளி உலகத்திற்கு துறவி போல் நடிப்பவர்களைப் பார்த்து ஐம்பூதங்களும் சிரிக்கும் என்று அபாய மணி ஒலிக்கிறார் வள்ளுவர். அதுமட்டுமில்லாமல், பலர்/சிலர் என்ற சொற்களை இடம் அறிந்து நுணுக்கமாக பயன்படுத்தும் வள்ளுவர், மனத்தது மாசாக வெளி உலகுக்கு மட்டும் தூய்மையானவர்களாக காட்சி அளிக்கும் போலித் துறவிகள் பலராக இருக்கும் இயல்பியல் பார்வையை தனது குறளில் தயக்கமின்றி பதிவு செய்கிறார்.
முயற்சி
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
தாழாஅது உஞற்று பவர்
என்று முயற்சியை முன்னிலைப்படுத்தி தெய்வத்தை விடவும் விதியை விடவும் முயற்சி சிறந்தது; வெற்றி தருவது என்று சுட்டிக்காட்டி பகுத்தறிவாதமும்(Rationalism)  இலக்கியல் வாதமும் பேசும் வள்ளுவர்,
ஊழில் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முறிந்தார் பலர்
என்று விதியினாலும், தன் வலியறியாமையாலும் தோல்வி விளையும்
என்று இயல்பியல் வாதமும் பேசுகிறார்.
இருப்பினும் ஊழ்வினையையும் ஆள்வினையையும் ஒப்பு நோக்கி,
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்று நேர்மறை சிந்தனை (Positive thinking)  பேசுவதோடு,
'உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’, 'உள்ளத்தனையது உயர்வு’,
'உள்ளற்க உள்ளம் சிறுகுவ’ என்று மேன்மேலும் நேர்மறை சிந்தனைக்கு  அழுத்தம் சேர்ப்பதைக் காண முடிகிறது.
அறிவு
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சமூக சமத்துவம் பேசிய வள்ளுவர் 'அறிவொக்கம் எல்லா உயிர்க்கும்’ என்று அறிவு சமத்துவம் பேசவில்லை. ஏனெனில், ஆளுக்கு ஆள்  IQ (Intelligence Quotient)  வேறுபடும் என்பதை Alfred-Binetஇருவருக்கும் பல நூற்றாண்டுகள் முன்பே உணர்ந்திருந்தவர் வள்ளுவர். அதனால்தான்
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்
என்று தெளிவாகப் பேசுகிறார். அதாவது நுணுக்கமான நூல்கள் பலவற்றைக் கற்றாலும் ஒருவருக்கு இயல்பாக என்ன அறிவு இருக்குமோ அதுவே பெருகும் என்கிறார். இது இயல்பியல்.
இப்போது, ஒருவன் பிறப்பிலேயே என்னைவிட அறிவாளியாக இருக்கிறான். நான் அவனை விட அறிவாளியாக முடியாதா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அந்தக் கேள்விக்கு வள்ளுவரிடமிருந்து நேர்மறையாக பதில் வருகிறது. ''முடியும். நீ அவனை விடவும் அதிகம் முயன்று கற்றால், அவனை விடவும் ஆழமாக தோண்டித் தோண்டி உழைத்து படித்தால், அவனைவிட அறிவாளியாகி விடலாம்,, என்று நம்பிக்கை ஊட்டி நம்மைப் படிக்கத் தூண்டுகிறார்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி  மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு.
 திருக்குறளில் நேர்நிலை இயல்
நேர்மறை சிந்தனை(Positive thinking) என்பதற்கும் நேர்நிலை வாதம்(Positivism) என்பதற்கும் வேறுபாடு உண்டு. நேர்மறை சிந்தனை என்பதை ஒருவாறு இலக்கியலின் ஓர் அங்கமாக அடக்க இயலும். நேர்நிலை வாதம் என்பது முற்றிலும் வேறான ஒரு தத்துவம்.
சமூகவியலின் தந்தை எனப்படுபவரான அகஸ்டிகாம்டே இந்த உலகத்தின் நிகழ்வுகளை அறிவியலில் எவ்வாறு புவியீர்ப்பு விசைபோன்ற சில விதிகளின் அடிப்படையில் விளக்க முடிகிறதோ, அதேபோல் சமூக இயல்புகளையும் சில விதிகளுக்குள் கொண்டுவந்து விட முடியும் என்று நம்பினார். அவர் ஒரு நேர்நிலை வாதி  நேர்நிலைவாதிகள் இச்சமூகத்தில் மறுநிகழ்வுத் தன்மை(Replicability),நம்பகத் தன்மை (Realiability),  மற்றும் செல்லுபடியாகும் தன்மை (Realiability), கொண்ட செயல்களே மீண்டும் மீண்டும் நிகழ்வதாகக் கருதுவர்.
40க்கும் மேற்பட்ட குறள்களில் 'உலகு’ என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவர்,  இந்தச் சமூகத்தின் செயல்களை கூர்ந்து கவனித்து  பல குறள்களில் உலக சமூகத்தின்  இயல்பை வரைறுக்க முயல்கிறார்.
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவி லாதார்.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு
உலகப் புகழ் பெற்ற கிரேக்க தத்துவஞானியும் நேர்நிலைவாதியுமான பிளாட்டோ, கவிஞர்கள் குறித்து கடுமையாக விமர்சிப்பார். கவிஞர்கள் நேர்நிலை வாதத்துக்கு முற்றிலும் எதிரானவர்கள் என்றும், எப்போதும் கற்பனா வாதத்தில் திளைப்பதால் கவிஞர்களே நாட்டுக்குத் தேவையில்லை என்றும் வாதிடுவார். ஆனால், உலக பொதுமறையைத் தந்த வள்ளுவரோ அறம் மற்றும் பொருட்பால்களில் நேர்நிலைவாதியாகவும் இன்பத்துப் பாலில் கற்பனாவாதம் மிக்க கவிஞராகவும் திகழ்ந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.
 திருக்குறளில் இருத்தல் இயல்

 இருத்தல் இயல்(Existensialism) என்பது பத்தொன்பது - இருபதாம் நூற்றாண்டுகளில் பிரான்ஸில் உருவாகிய இலக்கியக் கோட்பாடு தாஸ்தாவெஸ்கி, தனக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை வாங்கிக் கொள்ள மறுத்த பிரெஞ்சு எழுத்தாளரான ழான் பால் சார்தர் போன்றோர் முக்கிய இருத்தல் இயல்வாதிகள்.
இருத்தல் இயல் கோட்பாட்டின்படி ஒருவரின் தொடக்கப்புள்ளி இருத்தல் இயல் மனப்பான்மையை (The Existential attitude)  அடிப்படையாகக் கொண்டது. இருத்தல் இயல் மனப்பான்மை என்பது அடிப்படையில் பொருளற்றதும் அடிமுட்டாள்தனமானதுமான இந்த உலகத்தை எதிர்கொள்ளும்போது மனிதனுக்கு ஏற்படும் குவியமற்றதும் குழப்பமானதுமான உணர்வைக் குறிக்கும் (The existential attitude is a sense of disorientation and confusion in the face of apparently meaningless and absurd world).
பல குறள்களில் நேர்நிலைவாதியாக நின்று இந்த உலகத்தின் இயல்பை தெளிவாக வரையறுக்கும் வள்ளுவர், இந்த உலகத்தின் இயல்பு என்னவென்று புரியாமல் குழப்பமாக பார்கும் ஒர் இடமும் உண்டு.
 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமு செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
இந்த குறளில் பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய  ஆக்கமும் பொறாமை இல்லாத நல்லனுடைய கேடும் ஆராயத்தக்கவை என்கிறார். நல்லவனுக்கு நல்லதும், கெட்டவனுக்கும் கேடும் நிகழும் என்ற கருத்து இருத்தல் இயலில் ஏற்படுவதில்லை. இந்த உலக நிகழ்வுகள் தம்போக்கில் நிகழ்பவை என்னும் இருத்தல் இயல் கோட்பாடு இந்தக் குறளில் நிழலாடக் காண்கிறோம் .
திருக்குறளில் பின் நவீனத்துவம்
பின் நவீனத்துவம்(Post Modernism) என்னும் இலக்கியக் கோட்பாடு 'சுருக்கமான தத்துவத்தின் மீதான அடர்த்தியான அனுபவம்’(Concrete experience on abstract principles)  பற்றிப் பேசுகிறது.
ஒவ்வொருவரும் இந்த உலகின் உண்மைநிலை என்ன என்பதை சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக அமைவது அவர்கள் பொருள் கொள்ளும் முறையே ஆகும். (Reality comes into being through our interpretations of what the world means to us independently) இந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே 'பன்முக வாசிப்பு’ என்னும் நடைமுறை. 'பன்முக வாசிப்பு’ நடைமுறையின்படி ஓர் இலக்கியம், அதை வாசிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் அவரவர் அறிவின் நீள அகலங்களுக்கு ஏற்பவும் அனுபவ பின்புலத்திற்கு தக்கவாறும் பல பொருள்களைத் தர வேண்டும். அப்படித் தந்தால்தான் அது இலக்கியம். அப்படித் தர இயலாதது வெறும் சமூகச் செய்தியாகவே நின்றுவிடும். இலக்கியமாகாது, என்பர் பின் நவீனத்துவவாதிகள்.
நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெருடா ஒரு சமயம் ‘A drop of crocodile on the wall’என்றொரு வரி எழுதி இருந்தாராம். அதன் பொருள் என்ன என்பது குறித்து ஆளாளுக்குத் தங்கள் அறிவின் நீள அகலங்களுக்கு ஏற்ப பல பொருள் கூறி விவாதித்து, நிறைவாக கவிஞரிடமே சென்று கேட்டனராம். அதற்கு அவர் 'சுவரில் ஒரு மரப்பல்லி’ என்பதைத்தான் தான் அப்படி எழுதியதாகக் கூறினாராம். அந்தக் கவிதையில் இருந்த இருண்மை உத்தி அவ்வாறு பல பொருள்களை வாசகர் உருவாக்கிக்கொள்ளக் காரணமானது.
வள்ளுவரும் தன் 'சொற்செட்டு; அர்த்த அடர்த்தி’ என்ற உத்தி மூலம் ஒரு குறளுக்குப் பல பொருள் ஏற்படச் செய்து ஒரே நேரத்தில் பகுத்தறிவுவாதிகள், இலக்கியவாதிகள், இயல்பியல்வாதிகள் எனப் பலரையும் திருப்திப்படுத்துவார். இதற்குப் பல சான்றுகளை ஆய்வறிஞர்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டி உள்ளனர்.
'நவில்தொறும் நூல்நயம் போலும்’ என்று வள்ளுவரே கூறி இருப்பதுபோல ஒரு குறளே மாறிவரும் உலகத் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளைத் தரக் காண்கிறோம்.
பண்முக வாசிப்பு என்னும் பின் நவீனத்துவ உத்தியைக் கொண்டு ஐந்து குறள்களுக்குப் புதுப்பொருள் தேடலாம்.
சில சமயங்களில் சில குறள்களுக்கு வள்ளுவரே கற்பனை செய்திராத பல புதுப்புதுப் பொருள்களை காலப் பரிமாணத்திற்கேற்ப நாம் கொள்வதற்கு அவர் பின்பற்றிய 'சொற்செட்டு; அர்த்த அடர்த்தி’ என்ற உத்தி துணைபோகிறது.
பெண்ணின் கற்பும், பொருளாதார சுதந்திரமும்
 தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
என்ற குறள் 'வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தின் கீழ் உரையாசிரியர்கள் பின்பற்றிய வைப்பு முறையால் அடைபட்டுக் கிடப்பதால் இது இல்லறத் தலைவிக்கான இலக்கணமாக குறுகிப் போகிறது. இதை கட்டுடைப்பு (Deconstruction) செய்து வெளியே கொணர்ந்தால் பெண்ணுக்கான பொது இலக்கணமாக இருக்க முடியும்.
இந்தக் குறளில் உள்ள 'தற்காத்து’ என்ற சொல்லுக்கு 'தன் கற்பைக் காத்து’ என்று உரையாசிரியர்கள் 'கற்பு’ என்ற சொல்லை வருவித்துச் சொல்கின்ற பொருளைப் புறந்தள்ளி இக்காலப் பெண்ணுரிமைக் கோட்பாட்டிற்கு ஏற்ப 'தன்னை பொருளாதாரரீதியாகக் காத்து’ என்று புதுப்பொருள் கூறலாம். பெண் விடுதலையில் முக்கியமானதாக பார்க்கப்படுவது பொருளாதார விடுதலைதான். பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாததே பெண்ணடிமைத் தனத்துக்கு தலையாயக் காரணம் என்றார் தந்தை பெரியார். பொருளாதாரச் சுதந்திரம் (Economic independence) ஒரு பெண்ணுக்கு முதன்மையானது என்ற இந்த 20-21-ம் நூற்றாண்டு சிந்தனையைத் தன்னுள் பொருத்திக் கொள்வதற்கு வழிவைத்து அமைகிறது குறள். காரணம் அதன் சொற்செட்டு.
தற்காத்து என்று வள்ளுவர் எழுதியதற்கு 12-ம் நூற்றாண்டுக்காரர் 'தன் கற்பைக் காத்து’ என்று பொருள் வருவிக்கும்போது 21-ம் நூற்றாண்டுக்காரர் 'தன்னை பொருளாதாரரீதியாக காத்து’ என்று புதுப்பொருள் வருவிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. எழுதிய கவிஞனே எண்ணிப் பார்த்திராத புதுப்பொருளை, படிக்கும் வாசகன் உருவாக்கிக்கொள்ளும் இலக்கிய சுதந்திரத்தை பின்நவீனத்துவம் நமக்கு வழங்குகிறது. பின்நவீனத்துவம் தரும் சுதந்திரத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக குறளைப் படைத்த வள்ளுவரின் எழுத்துத் திறன் இங்கே மெச்சத்தக்கது.
'தற்காத்து’ என்னும் குறளுக்கான மரபுப் பொருளையும், புதுப் பொருளையும் இப்போது பார்க்கலாம்.
கற்பு நெறியில் தன்னைக் காத்துக்கொண்டு தன் கணவனையும் காப்பாற்றி தகுதி அமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண் - மு.வ.உரை.
 She is a wife who unweariedly guards herself, takes care of her husband and preserves an unsulled fame.
-G.V.Pope Explanation.
Who guards herself, for husbands comfort cares, her household’s fame. In perfect wise with sleepless soul preserves give her a woman’s name.
-G.V.Pope (Direct Translation)
Who guards herself என்பதற்குப் பதில் Who economically guards herself என்று பொருள் வருவித்துக்கொண்டால் வள்ளுவர் புகழ்பெற்ற பெண்ணியல்வாதி ஆகி விடுவார்.
இந்தக் குறளைப் பொருத்தமட்டில், தகைசான்ற சொற்காத்து என்பதிலேயே கற்பையும் உள்ளடக்க முடியும் என்பதால் தற்காத்து என்ற சொற்றொடருக்கு இடையே கற்பு என்ற சொல்லை வருவிக்க வேண்டிய அவசியமில்லை.
எனவே ''பொருளாதாரரீதியாக தன்னைக் காத்துக்கொண்டு, தன் துணைவனையும் கவனித்து, தகுதி அமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்'' என்று புதுப்பொருள் கூறி இரண்டாயிரம் ஆண்டு பழமையான கவிதையில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் கருத்தை ஏற்றிவைக்க முடிகிறது. அதனால்தான் அது நீடித்த நிலைத்த வளர்ச்சி (Sustainable Development) பெறும் உலகப் பொதுமறையாக உள்ளது.
 மரண தண்டனையும், என்கவுன்டரும்
இதைப் போலவே பல குறள்களுக்கு 21-ம் நூற்றாண்டு நியாயங்களுக்கு ஏற்ப புதுப்பொருள் வருவிக்க முடியும்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்
(கொடியவர் சிலரைக் கொலைத் தண்டனையால் அரசன் தண்டித்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்)
-இந்தக் குறள் மரண தண்டனைக்கு ஆதரவாக வள்ளுவர் தரும் Voice  ஆகவும், Encounterசெய்யும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு வள்ளுவர் கொடுக்கும் அனுமதியாகவும் பார்க்கப்படுகிறது.
 இல்லறமும், மணமுறிவும்
இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்வான் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
என்று இல்லறத்தின் சிறப்பைப் பேசும் வள்ளுவத்தில் மணமுறிவு பற்றிய குறளா என்று வியப்படையாதீர்கள். மணமுறிவு என்பது சில நேரங்களில் சேதம் அதிகமாகாமல், குழந்தைகளின் எதிர்காலம் கருதி எடுக்கப்படும் பாதுகாப்பான தீர்வாக அமையும்போது அதற்கான ஆதரவைத் தரும் குறளாக,
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்களுள்
பாம்போடு உடனுறைந் தற்று
(அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் பாம்போடு உடன் வாழ்ந்தாற் போன்றது) என்ற குறளை ஒரு வழக்கறிஞர் பார்க்கிறார்.
 தடுப்பு மருந்தும், வள்ளுவமும்
இந்த குறள் அறத்துப்பால் இல்லறவியலில் இடம் பெறவில்லை. பொருட்பாலில் அரசனுக்குரிய உட்பகை பற்றிய குறளாகத்தான் உள்ளது. இருப்பினும் அதிகாரத்தை கட்டுடைத்துப் பார்க்கும் பின் நவீனத்துவ சுதந்திரத்தோடு வள்ளுவரை அணுகும்போது இக்குறள் புதுப்பொருள் தரும் இல்லறவியல் குறளாகவும் பின் நவீனத்துவவாதி ஒருவருக்குத் தெரிக்கிறது.    உலகிலேயே அதிக கால்நடை வளங் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவின் ஆன்மா மட்டுமின்றி இந்தியாவின் பெரும்பாலான கால்நடைகளும் கிராமங்களிலேயே வாழ்கின்றன. கால்நடை வளம் பேணுவதற்கென்று கால்நடைகளுக்குத் தடுப்பூசிகளை அரசாங்கமே இலவசமாகப் போடுகிறது. ஆனால் சில தடுப்பு ஊசிகள் போடும்போது அயர்ச்சி (Stress)காரணமாக கால்நடைகள் தரும் பால் அளவு ஓரிரு நாட்கள் குறையும். ஆனால் பால் குறைந்துவிடுமே என்று கால்நடைகளுக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பவர்கள், நோய் தாக்குதல் காரணமாகத் தங்கள் வாழ்வாதாரமான கால்நடைகளையே சில சமயங்களில் இழக்க நேரிடும். இந்தப் பிரச்னை பற்றி வள்ளுவருக்குத் தெரியாது. இருந்தாலும்,
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்
என்ற குறளைக் கூறி கால்நடை தடுப்பூசிகளுக்கு ஆதரவாக ஒரு கால்நடை மருத்துவர் பிரசாரம் செய்ய முடியும்.
நிர்வாகத்தில் ரகசிய காப்பு
உலகின் சந்து, பொந்து, இண்டு, இடுக்கெல்லாம் உளவு பார்க்கும் அமெரிக்காவின் கண்களுக்கு எட்டாமல் 1998-ல் Operation Shakthiஎன்ற வெடிகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது இந்தியா. Operation Shakthi என்ற பெயரும் கர்னல் பிருத்விராஜ் (Dr.அப்துல்கலாம்), கர்னல் நடராஜ் (Dr.சிதம்பரம்), மாமாஜி (அனில் ககோட்கர்) என்ற புனைபெயர்களும் இந்தியா ஏதாவது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறது என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கியதால்தான் Operation Shakthi   என்ற அணுகுண்டு சோதனை வெற்றி சாத்தியமானது. கடும் மந்தனம் (Strictly Confidential)இருந்தால்தான் சில வெற்றிகள் சாத்தியமாகும். இதைத்தான்,
கடைக்கொட்க செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கி
எற்றா விழுமந் தரும்
என்று உலகப் பொதுமறை கூறிச் செல்கிறது.
 திருக்குறளும் உலக வரலாறும்
இரண்டாம் உலகப் போரில் Little Boy, Fat man என்னும் குண்டுகள் ஹிரோஷிமா, நாகாசாகி மீது போடப்பட்டபின் வளமான ஜப்பான் வாடிப் போனது. இருப்பினும் சில ஆண்டுகளில் தனது மனித வளத்தால் மகத்தான எழுச்சி பெற்று எழுந்து நின்றது. ஜப்பானின் இந்த வரலாறு எதுவும் அறியாமலேயே
கேடறியா கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை
என்று ஜப்பானுக்கென்றே ஒரு குறள் உலகப் பொதுமறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சில குறள்கள் உலக வரலாற்று நிகழ்வுகளோடு வரலாற்று நாயகர்கள் சிலரின் பெயரையும் நேரடியாக நம் நினைவுக்கு கொண்டு வருகின்றன.
காலம் கருதாமல் கடுங்குளிர் காலத்தில் ரஷ்யாவின் மீது படையெடுத்து தங்கள் வாழ்வுக்கு நிறைவுரை எழுதத் தொடங்கிய நெப்போலியன் போனாபர்ட், ஹிட்லர் இருவரையும் நினைவுபடுத்தும் குறள்...
பகல்வெல்லும் கூகையை காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
இந்த உலகத்தை வெல்ல நினைத்து தன் சோம்பல் இல்லா சுறுசுறுப்பான வீரத்தால் அதை நிறைவேற்றியும் காட்டிய மஹா அலெக்ஸாண்டரை நினைவூட்டும் குறள்...
மடியில மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
அரிச்சந்திரன் நாடகம் பார்த்தபோது தன் மனதில் பதிந்த உண்மையை தன் வாழ்வில் இறுதி வரை பழுதுபடாமல் காத்த உலக உத்தமர் காந்தியை நினைவூட்டுவது
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்
எனும் குறள்.
இப்படி உலக இலக்கியக் கோட்பாடுகளையும், உலகியல் நிகழ்வுகளையும், உலக வரலாற்று சம்பவங்களையும் நம் உலகப் பொதுமறை என்னும் கண்ணாடி வழியாகக் கண்டு ஒளி பெறலாம்.
பின்குறிப்பு: உலகப் பொதுமறையை தற்கால உலக இலக்கியக் கோட்பாடுகளோடு பொருத்திப் பார்க்கும் ஒரு மழலை முயற்சியே இக்கட்டுரை. மழலையின் மொழியில் பிழைகள் மலிந்து கிடக்கலாம். அதற்காக குரல் வளையை நெரிக்கும் அளவுக்கு யாரும் கோபப்பட வேண்டாம்.

No comments:

Post a Comment