Saturday 25 January 2014

மூட்டு நோய்கள் - ஒரு பார்வை

மூட்டு நோய்கள் - ஒரு பார்வை
Posted Date : 12:12 (16/12/2013)Last updated : 12:12 (16/12/2013)
டாக்டர் தானப்பன், M.B.B.S., M.S., (ortho)
மாறி வரும் வாழ்க்கை முறைகளால் மக்களிடையே அதிகரித்து வரும் நோய்களில் முக்கியமானது எலும்பு மற்றும் மூட்டு நோய்கள்.
பொதுவாக 60 வயதிற்கு மேல் வரவேண்டிய எலும்பு மற்றும் மூட்டு தேய்மானத்தால் தற்போது 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர்.
வாழ்நாள் அதிகரிப்பு மற்றும் வயதானவர்களின் அதிக எண்ணிக்கையால் உலகம் முழுதும் எலும்பு மற்றும் மூட்டு நோயாளிகள் அதிகமாகி விடுகின்றனர்.
பொதுவாக 150 வகையான எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த நோய்கள் இருந்தாலும் மக்களை அதிகம் பாதிப்பவை 5 வகை நோய்கள்
1. மூட்டு தேய்மானம் (Osteoarthritis)
2. முடக்கு வாதம் (Rheumatoid Arthritis)
3. எலும்பு பலவீனம் (Osteoporosis)
4. தண்டுவட பிரச்னைகள் (Spinal disorder)
5. பெரும் அங்க விபத்துகள் (Major Limb Trauma)
(WHO) உலக சுகாதார நிறுவனம் 2000 முதல் 2010 வரை எலும்பு மற்றும் மூட்டுக்கான பத்தாண்டுகளாக அறிவித்திருந்தது. (Bone and Joint decade 2000-2010)
உலகம் முழுவதும் 750க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.
இதன் மூலம் பல்வேறு மருத்துவ வல்லுநர்களும் நோயாளிகளும் இணைந்து செயல்படும் வாய்ப்பு ஏற்பட்டது. இப்பேரியக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது.
இந்த நோய்களின் தாக்கம் குறிப்பாக வளரும் நாடுகளில் (இந்தியா, பிரேசில், சைனா, தாய்லாந்து) அதிகரித்து வருகிறது.
அதிர்ச்சி தரும் புள்ளி விபரங்கள்
உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி கீழ் முதுகு வலி என்பது கிட்டத்தட்ட தொற்றுநோய் போல் பரவலாகி விட்டது. 80 சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கையில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பாதிக்கப்படுகின்றனர்.
2011 ல் Osteoporosis எனப்படும் எலும்பு பலவீனத்தால் 2.7 மில்லியன் இடுப்பெலும்பு உடைதல் (Hip Fracture) ஏற்பட்டன. இந்த எண்ணிக்கை 2050ல் 6 மில்லியன் ஆகலாம்.
முடக்குவாதத்தால்  பாதிக்கப்பட்டோரில் 60% பேர் பத்து ஆண்டுகளுக்குள் முற்றிலும் வேலை செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
மூட்டு தேய்மானத்தால் 25% மக்கள் தங்கள் தினசரி வேலைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்துள்ளனர்.
33% இந்திய பெண்கள் Osteoporosis என்னும் எலும்பு பலவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை குறையும் வாய்ப்பை விட அதிகமாகும் வாய்ப்பே மிகுதி.
உடல்பருமன் அதிகரிப்பு, வேலை காரணமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் வயது அதிகரிப்பு தவறான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் நிலைமை மேலும் சிக்கலாகி வருகிறது.
'Silent Killer’ எனப்படும் எலும்பு தேய்மான நோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட காரணங்கள்.
பெண்மைத் தன்மைக்குக் காரணமான ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் எலும்புகளில் கால்சியம் என்ற சுண்ணாம்பு சத்தினைச் சேர்க்கிறது.
மாதவிலக்கு நின்ற பின் இந்த ஹார்மோன் இல்லாததால் எலும்புகள் வலுவிழக்க தொடங்குகின்றன. இளம் வயதில் கருப்பை எடுக்கப்பட வேண்டிய சூழலுக்கு ஆளாகும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
கர்ப்ப காலத்தின் போதும், பாலூட்டும் போதும் தாயின் உடலில் இருந்து கால்சியம் சத்து குழந்தைக்குச் செல்வதால் இயல்பாகவே பெண்களுக்கு  எலும்பு பலவீனம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிக உடல் உழைப்பு இல்லாமை (எ.கா சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பின்) மற்றும் போதிய அளவு கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமை இந்நோயைத் துரிதப்படுத்துகின்றன. இருபது முதல் இருபத்தைந்து வயதிற்குள் எலும்பின் அதிகபட்ச திண்மை ஏற்படுகிறது. 30 வயதுக்குபின் தேய்மானம் மெல்ல துவங்குகிறது. இதனால் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை (முக்கியமாக கால்சியம், இரும்புச்சத்து, போலிக் அமிலம்) அளிப்பதால் பிற்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம்.
குளிர்பானங்களில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் எலும்பில் கால்சியம் சேர்வதைத் தடுக்கிறது.
அதிக அளவு காபி மற்றும் டீ உணவில் உள்ள கால்சியம் குடலில் உட்கிரக்கப்படுவதைத் தடுக்கிறது. ஆல்கஹால் மற்றும் நிகோடின் பாதிப்புகளை நாமே ஊகிக்கலாம்.
இந்த பாதிப்புகளை உடனடியாக நம்மால் உணர முடியாது. எலும்பு முறிவுக்குப் பின்னர் தான் பலரும் இதைப்பற்றி யோசிக்கின்றனர்.
பொதுவாகப் பெண்கள் நோய் என்று கருதப்பட்டாலும் ஆண்களும் தப்புவதில்லை.
1. அதிக மது மற்றும் புகைப் பழக்கம்
2. வைட்டமின் D குறைபாடு
3. நீண்டகாலமாக வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளுதல்
4. தைராக்ஸின் அதிகம் சுரத்தல்
5. பிராஸ்டேட் புற்றுநோய்க்கான மருந்துகளால் ஆண்களுக்கும்  எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது.
6. சத்தற்ற உணவுகள்
7. உடற்பயிற்சி இல்லாமை
போன்ற காரணங்களால் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர் (அமெரிக்காவில் மட்டும் 2 மில்லியன் ஆண்கள்).
நம் சுகாதார கொள்கை அமைப்பாளர்கள் இந்த நோய்களின் தாக்கம் மற்றும் சமாளிக்கும் வழிமுறைகள் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை.
ஆனால் மேலை நாடுகளில் எலும்பு மற்றும் மூட்டு வியாதிகள் பற்றிய விழிப்புணர்வு அதிகம். பலதரப்பட்ட இயக்கங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அரசாங்கம் எலும்பு மற்றும் மூட்டு வியாதிகள் பற்றிய ஆய்வுக்கும், சிகிச்சைக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
இதே நிலை நம் நாட்டில் ஏற்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் ஆரோக்கியமான இந்தியா உருவாகும்.
(கட்டுரையாளர் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்)

No comments:

Post a Comment