Saturday 25 January 2014

சைபர் க்ரைம் - கலைச்சொற்கள்

சைபர் க்ரைம் - கலைச்சொற்கள்
Posted Date : 18:12 (16/12/2013)Last updated : 22:12 (16/12/2013)
காம்கேர் கே. புவனேஸ்வரி
1. வெர்ச்சுவல் உலகம் (Virtual World)
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் போல மற்றொரு உலகம் இன்டர்நெட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனை வெர்ச்சுவல் உலகம்(Virtual World)  எனலாம். கம்ப்யூட்டர், இன்டர்நெட் சார்ந்து உருவாகியிருக்கும் வெர்ச்சுவல் உலகை, சைபர் உலகம்(Cyber World) என்றும் சொல்லலாம்.
இன்டர்நெட் உலகத்தோடு இணைந்து பயணம் செய்யும் போது தான் நம்மால் இந்த உலகத்தோடு ஒட்டி வாழ முடியும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் நாம் செய்கின்ற அத்தனை வேலையையும், இன்டர்நெட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் வெர்ச்சுவல் உலகிலும் செய்ய முடியும்.
இப்போது இந்த உலகம் நமக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. ஒன்று நேரடியாக அந்தந்த அலுவலகங்களுக்குச் சென்று வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வது; மற்றொன்று இன்டர்நெட்டில் ஆன்லைனில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அவற்றைப் பெறுவது. இனி வரும் காலத்தில் எல்லாமே இன்டர்நெட் மயமாக்கப்பட்டிருக்கும். புத்தகங்கள், தியேட்டர்கள், கடைகள், லைப்ரரிகள், பள்ளிகள், கல்லூரிகள்...இப்படி எல்லாமே இருக்கும் இடம் தேடி இன்டர்நெட் மூலம் வந்து விடும். மனிதர்களின்  சேவைகள் குறைந்து எங்கும் எதிலும் கம்ப்யூட்டர்  மற்றும் அதன் தொழில் நுட்பங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத குறையாக மனித உதவி குறைந்து போயி ருக்கும். எனவே, இப்போதி லிருந்தே, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தோடு இணைந்து வளர்ந்து வாருங்கள். அப்போது தான் இனி வரும் காலத்தில் மற்றவர்களை சார்ந்திருக்காமல் வாழ முடியும்.
2. சைபர் க்ரைம் (Cyber Crime)
வெர்ச்சுவல்  உலகில் வாழுந்து வரும் டிஜிட்டல் மனிதர்களாகிய நம்மை இணைப்பது இன்டர்நெட், வங்கி மற்றும் மொபைல் இவை மூன்றும் தான். இவற்றின் மூலம் நடைபெறுகின்ற குற்றங்களுக்கு சைபர் க்ரைம் என்று பெயர். சுருங்கச் சொன்னால்  கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் சார்ந்த குற்றங்களுக்கு சைபர் க்ரைம் என்று பெயர்.
தனிநபர்களின் கம்ப்யூட்டர்களில் இருக்கும் தரவுகளை அவர்கள் அனுமதி இன்றி பயன்படுத்துவது, அவர்களின் தகவல்களை பென் டிரைவ், சிடி போன்றவற்றில் காப்பி எடுத்தல் இவையும் சைபர் குற்றமாகவே கருதப்படும். அதுபோலவே காமிரா மற்றும்  மொபைல் மெமரி கார்ட் இவற்றில் உள்ள தகவல்கள் மீதான அத்துமீறல்களும் சைபர் குற்றம் என்ற பிரிவில் தான் வரும்.
3. ஸ்கிம்மர் (Skimmer)
சைபர் க்ரைமில் ஈடுபடும் திருடர்கள் ஸ்கிம்மர் என்ற கருவியை ஏ.டி.எம் இயந்திரத்தில் அல்லது ஸ்வைப்பிங் செய்கின்ற இயந்திரத்தில்,  கார்டை பொருத்தும் இடத்தில் நமக்கே தெரியாமல் பொருத்தி வைத்திருப்பார்கள். நாம் அதை கவனிக்காமல், நம் கார்டை பொருத்தி விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறி நம் வேலையை கவனிக்கச் சென்று விடுவோம். நம் கார்டின் ஒட்டு மொத்த பயோ டேட்டாவும் அந்த ஸ்கிம்மர் கருவி யில் பதிவு செய்யப்படுகின்றன.
ஸ்கிம்மரில் இருந்து தகவல்கள் ரீடர் என்ற கருவி மூலம் கம்ப்யூட்டரில் பதிவாக்கப்படுகின்றன.
பின்னர் அந்த தகவல்கள் இமெயில் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அது போலவே வெளிநாடுகளில் இருந்தும் தகவல் கள் இந்தியாவிற்கு அனுப்பப் படுகின்றன.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் புதிதாக கார்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் ஸ்கிம்மர் மூலம் சேகரிக்கப்பட்ட கார்ட் எண் மற்றும் பிற விவரங்கள் என்கோடிங் செய்யப்படுகின்றன.
இவற்றை வைத்துக் கொண்டு மற்றவர்கள் அக்கவுண்ட்டில் இருந்து ஆன்லைன் பர்சேஸ், ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்தல் போன்றவை கனஜோராக நடைபெறுகின்றன.
இது போன்ற ஏமாற்று வேலைகள் நைஜீரியன் நாட்டினரால் பெரும்பாலும் செய்யப்படுவதால் இதற்கு நைஜீரியன் மோசடி என்று பெயர்.
4. சிபில் (CIBIL)
Credit Information Bureau (India) Limited  என்பதன் சுருக்மே CIBIL.  சிபில் அமைப்பில் உள்ள தகவல் தளத்தில், வங்கி மற்றும் இதர நிதிநிறு வனங்களும் தங்கள் வாடிக்கை யாளர்களைப் பற்றிய விவரங்களை சேமிக்கின்றன. கடன் கொடுக்கும் வங்கிகள் வாடிக்கையாளரிடம் பெறும் அனைத்து தகவல்களும், பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண்கள் மற்றும் அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை / பாஸ்போர்ட் /டிரைவிங் லைசன்ஸ்/ரேஷன் கார்ட்/பான் கார்டு/ புகைப்படம் அனைத்துமே சிபில் அமைப்பில் சேமிக்கப்படு கிறது. 
ஒரு வங்கியிலோ அல்லது நிதிநிறுவனத்திலோ கடன் வாங்கிவிட்டு உரிய முறையில் திரும்ப செலுத்தாத வாடிக்கை யாளர்களின் பெயரும்  மற்ற விவரங்களும் மோசமான வாடிக்கையாளர் பட்டியல் என்ற பிரிவில் தனியாக சேகரிக்கப்படும்.
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள், புதிதாக ஒரு நபருக்கு கடன் வழங்கும் போது, கடனுக்கான விண்ணப்பத்தை பெற்றவுடன் அந்த  வாடிக்கையாளர் குறித்த விவரங்களை சிபில் அமைப்புக்கு தெரிப்பார்கள் / தெரிவிக்க வேண்டும். அந்த வாடிக்கையாளர் வேறு ஏதேனும் வங்கியிலோ அல்லது நிதி நிறுவனத்திலோ கடன் வாங்கி திரும்ப செலுத்தியிராவிட்டால் அவரது பெயர் மோசமான வாடிக்கையாளர் பட்டியலில் இருப்பது தெரியவரும். உடனே அத்தகவல் சிபில் அமைப்பால் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்கு தெரிவிக்கப்படும். பிறகு சொல்லவா வேண்டும் என்ன நடக்கும் என்று? அவர் வங்கிக்கடன் என்பதையே மறந்து விட வேண்டியதுதான்.
5. CVV எண் (CVV Number)
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பின்பக்கத்தில் ப்ரிண்ட் செய்யப்பட்டிருக்கும் எண்ணுக்கு CVV எண் என்று பெயர். இது Card Verification  Value  என்பதன் சுருக்கமாகும். இது கார்டின் பின்புறம் உள்ள எண்ணின் கடைசி மூன்று இலக்கங்கள் ஆகும். இந்த எண்ணை வைத்து தான் ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இதை யாருக்கும் தெரியாமல் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
6. PIN எண் (PIN Number)
Personal Identification Number என்பதன் சுருக்கமே PIN என்பதாகும். இந்த எண், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏ.டி.எம் மற்றும் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய உதவுகிறது. இயந்திரத்தை இயக்குகின்ற மனிதன் சரியான நபர் தானா என்பதை உறுதி செய்து கொள்ள உதவுகின்ற எண்களால் ஆன பாஸ்வேர்ட் தான் பின் எண். இதை பிறர் அறியா வண்ணம் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் வங்கியில் உள்ள உங்கள் பணம் உங்களுடையதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை களவாடிச் செல்பவர்கள் உங்கள் கார்டைப் பயன்படுத்தி மொத்த பணத்தையும் ஸ்வாகா செய்து விடுவார்கள்.
7. லாகின் பாஸ்வேர்ட் (Login Password)
ஆன்லைனில் வங்கி அக்கவுண்ட்டுக்குள் செல்வதற்கு உதவுகின்ற பாஸ்வேர்ட் லாகின் பாஸ்வேர்ட் என்பதாகும். இதை குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி நீங்களாக மாற்றம் செய்யவில்லை என்றால் வங்கியின் வெப்சைட்டே பாஸ்வேர்டை மாற்றச் சொல்லி வலியுறுத்தும். மாற்றினால் தான் வெப்சைட்டின் உள்ளே செல்லும் வகையில் அந்த வெப்சைட் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
8. ட்ரான்ஸாக்ஷன் பாஸ்வேர்ட் (Transaction Password)
ஆன்லைனில் வங்கி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் போது, டிரான்ஸாக்ஷன் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி தான் ஒரு அக்கவுண்ட்டில் இருந்து மற்றொரு அக்கவுண்ட்டுக்கு பணத்தை அனுப்ப இயலும். இந்த பாஸ்வேர்டையும் குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி நீங்களாக மாற்றம் செய்யவில்லை என்றால் வங்கியின் வெப்சைட்டே பாஸ்வேர்டை மாற்றச் சொல்லி வலியுறுத்தும். மாற்றினால் தான் பணப்பரிமாற்றம் செய்ய இயலும் வகையில் அந்த வெப்சைட் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
9. OTP பாஸ்வேர்ட் (OTP Password)
One Time Password என்பதன் சுருக்கமே OTP என்பதாகும். ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்யும் போது, OTP – One Time Password என்ற பாஸ்வேர்ட் நம் மொபைலுக்கு அனுப்பப்படும். அந்த பாஸ்வேர்டைப் பயன்படுத்தி தான் ஆன்லைனில் நாம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இது பணப்பரி மாற்றத்துக்கு சிறப்புப் பாதுகாப்புக் கொடுக்கிறது. இந்த பாஸ்வேர்ட் நம் மொபைலுக்கு அனுப்பப்படுவதால், வேறு யாரேனும் நம் அக்கவுண்ட்டை நம் அனுமதியின்றி பயன்படுத்திக் கொண்டிருந்தால் நமக்கு தெரிந்து விடும். நாம் விழித்துக் கொள்ளலாம் அல்லவா?
10. இரகசியக் கேள்வி (Secret Question)
ஆன்லைனில் வங்கி அக்கவுண்ட்டுக்குள்ளும், இமெயில் உருவாக்கும் போதும் இரகசியக் கேள்வி ஒன்றை உங்களிடம் கேட்கும். அக்கேள்விகள் What was your First Teacher?, What was your childhood nick name? என்றெல்லாம் இருக்கும். இரகசியக் கேள்வி உங்கள் அக்கவுண்ட்டுக்கு மேலும் ஒரு பாதுகாப்பைக் கொடுக்கிறது. இந்த இரகசியக் கேள்விகளுக்கு நீங்கள் கொடுக்கின்ற பதிலை நீங்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் அக்கவுண்ட்டை உங்கள் அனுமதி இன்றி மற்றவர்கள் திருடி எடுத்துக் கொள்ள நினைக்கும் போது அவர்கள் உங்கள் பாஸ்வேர்டைத் தான் முதலில் திருட முயற்சிப்பார்கள். அப்படி முயற்சிக்கும் போது நீங்கள் உங்கள் அக்கவுண்ட்டிற்குக் கொடுத்திருக்கும் இரகசியக் கேள்வியை எழுப்பும். அதற்கான பதிலை அவர்கள் சரியாகக் கொடுத்தால் தான் பாஸ்வேர்டை சுலபமாக திருட முடியும். எனவே இரகசியக் கேள்விக்கான பதிலை பிறர் அறியா வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கே உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போனால் கூட Forget Password கொடுத்து நீங்கள் பாஸ்வேர்டை திரும்பப் பெற முயற்சிக்கும் போது, இரகசியக் கேள்விக்கான பதிலை சரியாக டைப் செய்தால் தான் பாஸ்வேர்டை திரும்பப் பெற முடியும். எனவே இரகசியக் கேள்விக்காக நீங்கள் கொடுத்திருக்கும்  பதிலை மறக்காமல் வைத்துக் கொள்ளவும்.
11. ஃபேக் (Fake)
Fake என்றால் போலி, பொய் என்று பொருள்படும். நம் இமெயில் முகவரி, ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் முகவரி மற்றும் வெப்சைட்டின் முகவரி போலவே போலியான பெயரில் இன்டர்நெட்டில் உலா வருகின்ற முகவரிகளுக்கு Fake என்று பெயர்.
12. ஹேக்கிங் (Hacking)
நம்மை அறியாமல் நம் மூலமாகவே அல்லது நமக்குத் தெரியாமல் நம் இமெயில், வங்கி மற்றும் பல ஆன்லைன் அக்கவுண்ட்டுகளின் பாஸ்வேர்டைத் திருடுவதே Hacking எனப்படுகிறது. இச்செயலை செய்பவர்களுக்கு Hackers என்று பெயர்.
இமெயில் முகவரி, சமூக வலைதள முகவரி, வங்கி அக்கவுண்ட் மற்றும் பிற ஆன்லைன் அக்கவுண்ட்டு களின் பாஸ்வேர்டைத் திருடுவதே இவர்களின் முதன்மையான நோக்க மாகும். இதுபோல வெப்சைட்டு களையும் திருடி விடுகிறார்கள்.
13. ஃப்ஷிங் (Phishing)
மீன் பிடிக்கத் தூண்டில் போடுவதைப் போல, நமக்கு போக்கு காண்பித்து, உங்களுக்கு உயர்ரகக் கார் பரிசு விழுந்துள்ளது, லாட்டரியில் ஒருகோடி பரிசு விழுந்துள்ளது என்பதைப் போன்ற ஆசை வார்த்தைகளைக் கொட்டி இமெயில் அனுப்பி, நம்மிடம் இருந்தே நம் வங்கி அக்கவுண்ட்டின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை வாங்கிக் கொண்டு நம் வங்கி அக்கவுண்ட்டை முடக்குதல்; நம் கம்ப்யூட்டரையும், நம் ஆன்லைன் அக்கவுண்ட்டுகளையும் செயலிழக்கச் செய்தல் போன்ற வேலைகள் சைபர் வேர்ல்டில் திறம்பட நடைபெறும். இதற்கு றிலீவீsலீவீஸீரீ  என்று பெயர்.
14. ஃப்ஷிங் இமெயில் (Phishing Email)
தூண்டில் போடும் சாதுர்யமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, இன்டர்நெட் பயனாளர்களை ஏமாற்றி அவர்கள் பாஸ்வேர்டை திருடும் நோக்கத்துடன், அவர்களுக்கு அனுப்பப்படும் இமெயில்களுக்கு Phishing இமெயில் என்று பெயர்.
அவை வங்கிகளில் இருந்து அனுப்பப்படும் இமெயில்கள் போல இருக்கலாம்; மைக்ரோ சாஃப்ட், கூகுள், ஜிமெயில், யு-டியூப் போன்ற நம்பகமான வெப்சைட்டுகளில் இருந்து அனுப்பப்படும் இமெயில் முகவரி போல இருக்கலாம்;நம் நெருங்கிய நண்பர்கள்/உறவினர்களிடம் இருந்து அனுப்பப்படும் இமெயில் போலவும் இருக்கலாம். கண்களை ஏமாற்றி, காசு பறிக்கக் காத்திருக்கும் தந்திர இமெயில்கள் அவை.
15. ஃப்ஷிங்  லிங்க் (Phishing Link)
இமெயில்களில் உண்மையான வெப்சைட் முகவரிகளைப் போலவே வெளிப்படும் போலி லிங்குகள் அனுப்பப்படும். அவற்றைக் கிளிக் செய்தால், அது நம்மை போலி வெப்சைட்டிற்கு அழைத்துச் சென்று நம்மை ஏமாற்றி நம் பாஸ்வேர்ட் போன்றவற்றை பெற்றுக் கொள்ளும் அல்லது நம்மிடம் கேட்காமலேயே நம் தகவல்களை காப்பி செய்து கொள்ள வழி வகுக்கும். அதுபோன்ற போலி லிங்குகளுக்கு Phishing  லிங்க் என்று பெயர்.
16. ஃப்ஷிங்  போன் அழைப்புகள் (Phishing Phone Calls):
வங்கியில் இருந்து போன் செய்வதாகச் சொல்லி, 'உங்கள் வங்கி அக்கவுண்ட்டை மெயின்டன்ஸ் செய்கிறோம் எனவே உங்கள்  வங்கி அக்கவுண்ட்டின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை கொடுக்கவும்’ என்று மிக அழகாகப் பேசி நம்மிடம் இருந்து நம் பாஸ்வேர்டைப் பெற்றுக் கொண்டு விடுவார்கள். நாமும் அவர்களை நம்பி பாஸ்வேர்டைக் கொடுத்தோமேயானால், நம் அக்கவுண்ட்டில் உள்ள பணம் மொத்தமும் அவர்கள் பாக்கெட்டில் தான். எனவே இதுபோல வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று சொல்லி வருகின்ற அழைப்புகளுக்கு பதில் அளிக்காதீர்கள். எந்த தகவலையும் சொல்லாதீர்கள். நேரடியாக வங்கிக்குச் சென்று அவர்களிடம் கேட்டு வங்கியில் இருந்து தான் போன் வந்ததா உறுதி செய்து கொள்ளுங்கள்.
அதுபோல மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆன்டி வைரஸ் நிறுவனங்கள் என்று நம்பகமான நிறுவனங்களின் சார்பில் போன் அழைப்புகள் வந்தாலும் அவர்களிடமும் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில் அந்த அழைப்புகளும் நம்மிடம் பாஸ்வேர்டை தெரிந்து கொண்டு ஏமாற்ற வருகின்ற அழைப்புகளாகும்.
போனில் பேசி ஏமாற்றுகின்ற செயலுக்கு Phishing போன் அழைப்புகள் என்று பெயர்.
17. ஸ்பூஃபிங் (Spoofying)
ஸ்பூஃபிங் என்றால் பொய் என்று பொருள்படும். ஃபிஷிங்  இமெயில் தகவல்களில் இறுதியில் உண்மை யான வெப்சைட்டுகளின் பெயரைக் குறிப்பிட்டு Copyright  என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தாலும் அது போலி இமெயில் தான் என்பதை உணர வேண்டும். Copyright, Law இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால், நம்மக்கள் பயந்து கொண்டு கேட்டதைக் கொடுத்து விடுவார்கள் என்று நினைத்து ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. எனவே கவனம் தேவை. 
18. த்ரெட்ஸ் (Threats)
ஃபிஷிங் இமெயில் தகவல்களில் 'நாங்கள் கேட்டிருக்கும் விவரங்களை 24 மணி நேரத்தில் கொடுக்காவிட்டால் உங்கள் அக்கவுண்ட் முடக்கப்படும்’ என்பதைப் போன்ற மிரட்டல்கள் வந்தால் அதுவும் போலி இமெயில் தான் என்பதை உணர வேண்டும். இது போன்ற மிரட்டல்களுக்கு த்ரெட்ஸ் என்று பெயர். ஏனெனில் எந்த நிறுவனமும் தங்கள் வாடிக்கை யாளர்களை இந்த அளவுக்கு மிரட்டி விவரங்களை வாங்காது என்பதை உணர வேண்டும். 
19. ஸ்சைபர் ஸ்டால்கிங் (Cyber Stalking)
இன்டர்நெட்டில் பின் தொடர்தல் என்பதைத் தான் Cyber Stalking என்று சொல்வார்கள். பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள், நம் பெயரில் இன்டர்நெட்டில் போலி ஐடியில் உலா வருதல், நம் ஐடியை வைத்து கொண்டு நாம் மிரட்டுவதைப் போல நம் தொடர்பில் உள்ளவர்களுக்கு போலி இமெயில், மிரட்டல்கள் விடுத்தல், சமூக வலைதளங்களில் தவறான புகைப்படங்களை போஸ்ட் செய்தல், குறுஞ் செய்திகளை அனுப்புதல் போன்றவை இவ்வகை சைபர் க்ரைமில் அடங்கும். நமக்கும் இவ்வகை மிரட்டல்கள் வரலாம்.
20. ஸ்பாம் (Spam)
முன்  பின்   அறிமுகமில்லாதவர்களிட மிருந்து தினமும் நமக்கு வேண்டாத இ-மெயில்களெல்லாம் வந்து குவிந்து நம் இமெயில் இன்பாக்ஸை நிரப்புவதைப் பார்த்திருப்போம் தானே? நாம் கேட்காமலேயே நம்மிடம் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்காக, வர்த்தக நோக்கத்தில் வருகின்ற இதுபோன்ற  வேண்டாத மெயில்களே ஸ்பாம் (Spam) எனப்படுகிறது. இவற்றை ஜங்க் (Junk) இமெயில்கள் என்றும் சொல்லலாம். வேண்டாத இந்தக் குப்பை இமெயிலை அனுப்புவோரை ஸ்பாமர் (Spammer) என்பர்.
21. http Vs https
Hyper Text Transfer Protocol என்பதன் சுருக்கம் http ஆகும்.  Hyper Text Transfer Protocol Secure என்பதன் சுருக்கம் https. இதற்கு பாதுகாப்பான வெப்சைட் என்று பொருள்படும்.
வெப்சைட்டுகளின் முகவரி https:// என்று தொடங்காமல்  http://  என்று தொடங்கியிருந்தால் அது போலி வெப்சைட்டுகளாகவும் இருக்கலாம். அவை அச்சு அசலாக உண்மையான வெப்சைட்டைப் போன்ற தோற்றத்துடன் வெளிப்படும். எனவே கவனம் தேவை. குறிப்பாக வங்கியில் பணப்பரிமாற்றம் செய்யும் வெப்சைட்டுகள் https  என்று தொடங்கியுள்ளதா என கவனித்து செயல்படவேண்டும். இல்லை என்றால், போலி வங்கி வெப் சைட்டுகள் உங்கள் பாஸ்வேர்டை திருடி, வங்கியில் உங்கள் அக்கவுண்ட்டில் உள்ள மொத்த பணத்தையும் ஸ்வாகா செய்ய 100 சதவிகிதம்வாய்ப் புள்ளது.
22. Cc Vs BCc
CC என்றால் Carbon Copy என்று பொருள்படும். BCC என்றால் Blind Carbon Copy என்று பொருள்படும். இமெயில் அனுப்பும் போது சிசில் இமெயில் முகவரிகளை டைப் செய்தால் நாம் அனுப்புகின்ற இமெயிலின் ஒரு காப்பி Cc-ல் டைப் செய்கின்ற இமெயில்களுக்கும் அனுப்பப்பட்டு விடும். அப்படி அனுப்பும் போது Cc-ல் இணைத்துள்ள இமெயில் முகவரிகளின் உரிமையாளர்கள் அந்த இமெயிலை பார்வையிடும் போது, அந்த இமெயில் யார் யாருக்கெல்லாம் அனுப்பப் பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள முடியும்.
அதுவே BCC-ல் இமெயில் முகவரிகளை டைப் செய்தால் நாம் அனுப்புகின்ற இமெயிலின் ஒரு காப்பி BCCல் டைப் செய்கின்ற இமெயில்களுக்கும் அனுப்பப்பட்டு விடும். ஆனால் அப்படி அனுப்பும் போது BCCல் இணைத்துள்ள இமெயில் முகவரிகளின் உரிமையாளர்கள் அந்த இமெயிலை பார்வையிடும் போது, அந்த இமெயில் யார் யாருக்கெல்லாம் அனுப்பப் பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள முடியாது.
23. பேரன்டல் கன்ட்ரோல் சாஃப்ட்வேர் (Parental Control Software)
பேரண்டல் கன்ட்ரோல் (Parental Control) என்ற சாஃப்ட்வேர் மூலம் நாம் பிரவுசரைக் கண்காணிக்க முடியும். ஆபாச வெப்சைட்டுகளை வெளிப்படுத்தாமல் இருக்க பிரவுசருக்கு கன்ட்ரோல் கொடுத்து வடிகட்ட முடியும். இதற்காகவே ஏராளமான சாஃப்ட்வேர்கள் வந்து விட்டன. அவற்றில் தரமான சாஃப்ட்வேரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இதிலும் போலிகள் ஒளிந்திருக்கின்றன. குழந்தைகளைக் கண்காணிக்கும் சாஃப்ட்வேரை வாங்க, நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பேரன்டல் கன்ட்ரோல் சாஃப்ட்வேர்  என்ற பெயருடைய இந்த சாஃப்ட்வேர் மூலம் குழந்தைகள் என்னென்ன வெப்சைட்டுகளைப் பார்வையிடலாம், எதை பார்வையிடக் கூடாது என்று நாம் கட்டுப்படுத்த முடியும். அதற்கான சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொண்டால், உங்கள் குழந்தைகளை இன்டர்நெட்டினால் பாதிக்கப்படாமல் பாதுக்காக்க முடியும். அதே நேரம் அவர்களை நேரடியாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
24. கீலாகர் (Keylogger)
Keylogger என்பது ஒரு சாஃப்ட்வேராகும். இது மிக மிக அபாயகரமான மென் பொருளாகும். இதன் மூலம் நாம் டைப் செய்யும் ஒரு எழுத்து விடாமல் அத்தனையையும் நாம் அறியாமல் படிக்க முடியும். அதாவது காப்பி செய்து வைத்துக் கொள்ளும். எனவே நாம் டைப் செய்கின்ற யூசர்நேம், பாஸ்வேர்ட் போன்றவற்றை அப்படியே காப்பி செய்து தன் இமெயிலுக்கு அனுப்பி வைத்துக் கொள்ளும் திறன் வாய்ந்தவை அந்த சாஃப்ட்வேர்கள். அதை வைத்து உடனடியாகவோ அல்லது சில நாட்கள் கழித்தோ நம் தகவல்களையும், பணத்தையும் திருடி எடுத்துச் செல்வர். இவ்வகை சாஃப்ட்வேர்கள் அழையா விருந்தாளியாய் நாம் இன்டர்நெட்டில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ அல்லது ஸ்பைவேர் சாஃப்ட்வேர்கள் மூலமாகவோ நம் கண்களுக்குப் புலப்படாமல் நம் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்ளும். அவை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகி இருப்பதே நம் கண்களுக்குத் தெரியாது. எனவே ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர்களின் ஒரிஜினல் பதிப்பை காசு கொடுத்து வாங்கி இன்ஸ்டால் செய்து கொள்ளுவதால் இப்பிரச்சனையில் இருந்து ஓரளவுக்கு நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.
25. ஐ.எம்.இ.ஐ எண் (IMEI Number)
International Mobile Station Equipment Identity  என்பதன் சுருக்கமே IMEI. ஒவ்வொரு மொபைலுக்கும் தனித்தனியாக IMEI  எண் இருக்கும். இரு மொபைல் போன்களுக்கு ஒரே எண் இருக்காது. இந்த எண் மொபைல் தொலைந்து விட்டால் கண்டுபிடிப்பதற்கு உதவுகிறது. மொபைல் போனில் IMEI எண்ணைத் தெரிந்து கொள்ள *#06# என்று டயல் செய்தால் போதும். போன் டிஸ்ப்ளேவில் ஒரு எண் வெளிப்படும். அது தான் IMEI எண்.
26. வீடியோ லைசன்ஸ்(Video License)
ஏராளமான வீடியோ காட்சிகளை நாம் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையுடன் யு-டியூபில் வெளிப் படுத்தியிருப்பார்கள். இவ்வாறு உரிமம் கொடுப்பதற்கு லைசன்ஸ் கொடுத்தல் என்று பெயர். யு-டியூப் வீடியோக்களில் இரண்டு விதமான லைசன்ஸ்கள் உண்டு. ஒன்று standard License. மற்றொன்று, Creative Common License. முதலாவதாக உள்ள Standard License என்பது யு-டியூபில் அப்லோட் செய்கின்ற அல்லது செய்யப்பட்ட எல்லா வீடியோக்களுக்கும் கொடுக்கப்படுகின்ற லைசன்ஸ். அது வீடியோக்கள் யு-டியூபின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இவ்வகை லைசன்ஸை பெற்றிருக்கும் வீடியோக்களை பார்வையாளர்கள் பார்வையிடலாம், பயன்படுத்தலாம், மற்றவர்களுக்கு அனுப்பி பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் வியாபார நோக்கில் பயன்படுத்தக் கூடாது.
இரண்டாவதாக உள்ள Creative Common License என்பது மற்றவர்கள் தங்கள் வீடியோவோடு இணைத்து பயன்படுத்தலாம் என்ற அனுமதி கொடுத்து பப்ளிஷ் செய்யப்படுகின்ற வீடியோக்களுக்கான லைசன்சாகும். இவ்வகை வீடியோக்களை உங்கள் வீடியோவோடு ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தி அதை பப்ளிஷ் செய்யலாம் அல்லது உங்கள் விருப்பம் போல பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வகை வீடியோக்கள் ஒரு மனிதன் நிற்பதைப் போன்ற ஐகானோடு Creative Commin (Reuse Allowed) என்ற தலைப்பில் வெளிப்படும். இந்த தலைப்பில் வெளிப்படுகின்ற வீடியோக்களை நாம் ரீமிக்ஸ் செய்தும் பயன்படுத்த முடியும். யு-டியூப் வெப்சைட் ஆன்லைனிலேயே இதுபோன்ற லைசன்ஸ்களை கொடுக்கின்றன. யு-டியூபில் லைசன்ஸ் பெற்றுக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஏமாற்றுகின்ற நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
27. மால்வேர் (Malware)
தீங்கு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்படும் சாஃப்ட்வேர் மால்வேர் எனப்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தகவல்களை காப்பி செய்து பிறருக்கு அனுப்புவதும், பின்னர் அவற்றை உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து அழிப்பதும் தான் இதன் முதன்மையான பணியாகும். டவுன்லோடு செய்யும் ஃபைல்களில் திருடன் போல ஒளிந்திருந்து இந்த வேலையை திறமையாகச் செய்கின்றன இவ்வகை சாஃப்ட்வேர்கள்.
28. ஸ்பைவேர் (Spyware)
இன்டர்நெட்டில் ஏராளமான ஸ்பைவேர் சாஃப்ட்வேர்கள் உள்ளன. அவை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வெப்சைட்டு களையே வேவு பார்த்துக் கொண்டிருக்கும். அவை நாம் சைன் அவுட் செய்யாமல் திறந்து வைத்துக் கொண்டு வேலை செய்கின்ற வெப்சைட்டுகளின் தலைப்பைப் போல தன் பெயரை வெளிப்படுத்தி நம் கண்களை ஏமாற்றும். நீண்ட நேரம் இமெயில் வெப்சைட்டை சைன் அவுட் செய்யாமல் திறந்தே வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரில் மற்ற வேலைகளை செய்து கொண்டிருந்தால், நம் கம்ப்யூட்டரின் டாஸ்க் பாரில் நாம் இறக்கி வைத்திருக்கும் இமெயில் வெப்சைட்டின் பெயரைப் போலவே ஸ்பை வெப்சைட் தன் பெயரை வெளிப்படுத்திக் கொண்டு, மீனுக்காக வலை விரித்து விட்டு காத்திருக்கும் மீனவனைப் போல காத்திருக்கும்.
நம் வேலையை முடித்து விட்டு, திரும்பவும் இமெயில் வெப்சைட்டை கிளிக் செய்தால் அது திரும்பவும் யூசர் நேம், பாஸ்வேர்ட்டைக் கேட்கும். இங்கு தான் கவனமாக இருக்க வேண்டும். இது ஸ்பை வெப்சைட்டின் வேலையாக இருக்கலாம். அதன் பெயர் நம் இமெயில் வெப்சைட்டின் பெயரைப் போலவே இருக்கும். நாம்  யூசர் நேம், பாஸ்வேர்டை டைப் செய்தால் அவ்வளவு தான், அவை ஸ்பை வெப்சைட்டை வைத்திருப்பவர்கள்  கைக்குச் சென்று விடும். இது நம் கவனத்துக்கு வரவே வராது. ஏனெனில் அவர்கள் நம் பாஸ்வேர்டை உடனடியாகப் பயன்படுத்தி நம் தகவல்களை திருட மாட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு தான் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பிப்பார்கள்.
வங்கி பாஸ்வேர்டாக இருக்கும் பட்சத்தில் பணத்தை சுருட்டி விடும் அபாயம் உண்டு.  எனவே பயன் படுத்தாத போது வெப்சைட்டுகளில் இருந்து சைன் அவுட் செய்து கொண்டு வெளியே வந்து விட வேண்டும். இல்லை என்றால் ஸ்பைவேர்களால் நம் அக்கவுண்ட்டு களும், தகவல்களும் வேவு பார்க்கப்பட்டு திருடப்பட 100 சதவிகித வாய்ப்புகள் உண்டு.
அடுத்து இன்டர்நெட்டில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்தால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அவற்றில் வைரஸ் இருக்கலாம் அல்லது ஸ்பைவேர்கள் இருக்கலாம். எனவே நம் கம்ப்யூட்டரில் நன்றாக செயல்படக் கூடிய ஆன்டி வைரஸ் சாஃப்ட் வேர்களை இன்ஸ்டால் செய்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் வைரஸ் களில் இருந்து நம் கம்ப்யூட்டரை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
ஸ்பைவேர்கள் நம் கம்ப்யூட்டரின் வேகத்தைக் குறைக்கும்; அதிகமான பாப் அப் விளம்பரங்களை வெளிப்படுத்தும்; ஒரு வெப்சைட் முகவரியை டைப் செய்தால் வேறு வெப்சைட்டுக்கு அழைத்துச் செல்லும்.
29. ஆட்வேர் (Adware)
நம் வீட்டு வாசலில் இருக்கின்ற தபால் பெட்டியை திறந்தால் நமக்கு  அத்தியாவசியமான தபால்களை விட, விளம்பரக் கவர்களும், மார்கெட்டிங் தபால்களும் தான் குப்பையாக கொட்டிக் கிடக்கும். 'நான் ஒவ்வொன்றையும் பிரித்து படிப்பேன்’ என்று உங்களில் யாராவது சொல்லுங்கள் பார்ப்போம். கண்ணை மூடிக்கொண்டு அத்தனை கடிதங்களையும் கிழித்து குப்பையில் தானே போடுகிறோம்.
அதுபோல தான் நம் கம்ப்யூட்டரில் பாப் அப் விளம்பரங்கள் நம் கண் முன் தோன்றி ஆசையைத் தூண்டும். முக்கியமான விளம்பரங்களைக் கிளிக் செய்தால் 80% முதல் 90% வரை தள்ளுபடி என்று விளம்பர வாசகங்களைப் போட்டு நம்மை அப்பொருட்களை வாங்க வைக்கும். இதுபோன்ற விளம்பரங்களை வெளிப்படுத்துகின்ற சாஃப்ட்வேர் களுக்கு ஆட்வேர் என்று பெயர்.
30. ஆன்டி வரைஸ் (Anti Virus)
இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் என்றாலே இன்டர்நெட் இணைப்போடு தான் என்ற நிலை உருவாகியுள்ளதால், நம் கம்ப்யூட்டரில் ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொள்வது தான் முதல் வேலையாகும். கம்ப்யூட்டரில் வைரஸ் வராமல் தடுப்பதற்கு உதவுகின்ற சாஃப்ட்வேர் தான் ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர் எனப்படுகிறது.
அதுவும் ஒரிஜினல் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டும். யானை வாங்கி விட்டு அங்குசம் வாங்க யோசிக்கலாமா என்பதைப் போல, கம்ப்யூட்டர் வாங்கி விட்டு, ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர் வாங்க யோசிக்கக் கூடாது. இன்டர்நெட்டில் இலவசமாகக் கிடைக்கின்றவற்றை இன்ஸ்டால் செய்தால் அவை முழுமையாக செயல்படாது. எல்லா வைரஸ்களையும் கண்டு கொள்ளாது;அழிக்காது. எனவே நன்றாக செயல்படுகின்ற ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேரைத் தேர்ந் தெடுத்து ஒரிஜினல் சாஃப்ட்வேரை காசு கொடுத்து வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
உங்கள் கம்ப்யூட்டரில் ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், வைரஸ்கள் வராமல் இருப்பதோடு, மால்வேர்கள், ஸ்பைவேர்கள், ஆட்வேர்கள் போன்றவையும் பெரும்பாலும் குறைந்து விடும்.
31. குக்கீஸ் (Cookies)
Cookies  என்பது நாம் அடிக்கடி பார்வையிட்ட வெப்சைட்டுகள் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருக்கும் வசதியாகும். உதாரணத்துக்கு கூகுளிலோ அல்லது யு-டியூபிலோ நாம் குறிப்பிட்ட தகவலை தேடிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றால் அவை பற்றிய சிறு குறிப்பு, குக்கீஸாக பதிவாகி இருக்கும். திரும்பவும் அது சம்பந்தப்பட்ட தகவலை அதே கம்ப்யூட்டரில் தேடும் போது அவை வேகமாக திரையில் வெளிப்படும். அதுவே புதிதாக ஒரு டாப்பிக்கைக் கொடுத்து தேடும் போது சர்வரில் முழுமையாக தேடி எடுத்து வெளிப் படுத்த, சில நொடிகள் அதிகமாக எடுத்துக் கொள்ளும்.
உதாரணத்துக்கு www.vikatan.com என்ற வெப்சைட்டில் நாம் தினமும் ஆனந்த விகடன் என்ற லிங்கைக் கிளிக் செய்து ஏதேனும் படித்து வருகிறோம் என்றால், அதுபற்றிய சிறு குறிப்பு குக்கீஸ் பகுதியில் பதிவாகி விடும். எனவே மற்ற லிங்குகளைக் கிளிக் செய்யும் போது அவை திறப்பதற்கு தாமதமாகலாம். ஆனால் ஆனந்த விகடன் லிங்க் விரைவாக திறக்கப்படும். ஏனெனில் அது குக்கீஸில் இருந்து திறக்கப்படும்.
32. பிரவுஸிங் ஹிஸ்டரி (Browsing History)
History  என்பது நாம் பார்வையிட்ட வெப்சைட்டுகளின் பெயர்களை வெளிப்படுத்தும் வசதியாகும். பிரவுசரில் முன்பு நாம் பயன்படுத்திய வெப்சைட்டின் பெயரை டைப் செய்ய ஆரம்பித்தாலே, அந்த வெப்சைட்டின் பெயர் தானாகவே வெளிப்படும். ஏனெனில் அந்த பெயர் ஹிஸ்டரி பகுதியில் பதிவாகி இருக்கும்.
33. பைரசி (Piracy)
பைரசி என்பது விலை கொடுத்து வாங்க வேண்டியதை தொழில் நுட்பத்தின் உதவியுடன் இலவசமாகப் பெறுதல் என்பதாகும். உதாரணத் துக்கு திருட்டு விசிடி மூலம் படம் பார்ப்பதை விசிடி பைரசி எனலாம். அதுபோல ஒரிஜினல் சாஃப்ட்வேரை பயன்படுத்தாமல் அதை காப்பி செய்து பயன்படுத்துவதை சாஃப்வேர் பைரசி எனலாம்.
இதுபோல ஒருவரது படைப்பை (அது சினிமாவாக இருக்கலாம் அல்லது சாஃப்ட்வேராக இருக்கலாம் அல்லது வேறு எந்த படைப்பாக வேண்டுமானாலும் இருக்கலாம்) அவரது உரிமை இல்லாமல், அவருக்கே தெரியாமல் திருட்டுத் தனமாகப் பயன்படுத்துவதை பைரசி என்று சொல்லலாம்.
34. ஃபிளேகியாரிசம் (Plagiarism)
ஒருவரது படைப்பை எடுத்து, அதில் ஆங்காங்கே மாற்றியமைத்து வேறொரு புதிய படைப்பாக மாற்றி வெளிப்படுத்தும் ஏமாற்று வேலைக்கு ப்ளேகியாரிசம் என்று பெயர். ப்ளேகியாரிசம் என்பது, ஒருவரது படைப்பில் ஆங்காங்கே வார்த்தை களை மாற்றிஅமைக்கலாம்; அப்படியே ஒவ்வொரு வார்த்தைக்கும் புதிதாக வார்த்தைகளைப் போட்டு புதிதான படைப்பைப் போல வெளிப்படுத்தலாம்; ஐடியாவை மட்டும் அப்படியே எடுத்துக் கொண்டு படைப்பை புதிதாக வெளிப்படுத்த லாம்.
35. இன்ஃப்ரின்ஞ்ண்ட் (Infringement)
இன்ஃப்ரின்ஞ்மெண்ட் என்பது விதிமுறையை அல்லது ஒப்பந்தத்தை மீறுதல் என்று பொருள்படும். ஒருவரது படைப்பை தன்னுடையதைப் போலவே வெளிப்படுத்துதல் இந்தப் பிரிவில் வரும். மேலும் அப்படைப்பை புகழ்பெற்ற நபர்களின் பெயரில் வெளியிடும் போது அதன் மூலம் லாபமும் அதிகமாக கிடைக்கும்.
36. சாஃப்ட்வேர் கிராக்கிங் (Software Cracking)
ஒரிஜனல் சாஃப்ட்வேரை அதற்குரிய பணத்தைக் கொடுத்து வாங்காமல், காப்பி செய்து பயன் படுத்துவதற்கு அதன் சீரியல் எண்ணை சட்ட விரோதமாக உடைத்து பயன்படுத்துவதை சாஃப்ட்வேர் கிராக்கிங் என்று சொல் வார்கள். ஒரிஜினல் சாஃப்ட்வேரின் சீரியல் எண்ணை உடைத்தல், காப்பி செய்து பயன்படுத்துதல், மற்றவர்களுக்கு விற்பனை செய்தல் போன்றவையும் சாஃப்ட்வேர் கிராக்கிங் என்ற சைபர் குற்றத்தின் கீழ் வரும்.
ஒரிஜினல் சாஃப்ட்வேரை சட்ட விரோதமாக காப்பி செய்து பயன் படுத்த, கம்ப்யூட்டர், இன்டர்நெட் தொழில்நுட்ப விவரங்களைப் பயன்படுத்தி, அவற்றின் பாதுகாப்பு சீரியல் எண்களையும், பாதுகாப்பு கட்டமைப்புகளையும் உடைக்கிறார் கள் சாஃப்ட்வேர் கிராக்கிங் செய்கின்றவர்கள்.
37. ஹச்.டி.டி.பி (HTTP)
Hyper Text Transfer Protocol என்பதன் சுருக்கமே HTTP. இது வெப்சர்வரில் இருந்து தகவல் களை வெப்பிரவுசரில் வெளிப்படுத்த உதவுகிறது. அதாவது http://ww.vikatan.com என்று டைப் செய்தால், வெப்சர்வரில் இருந்து விகடன் வெப்சைட்டில் பதிவாகியுள்ள தகவல்களை நம் கண் முன் உள்ள கம்ப்யூட்டர் மானிடரில் பிரவுசர் சாஃப்ட்வேர் மூலமாக வெளிப்படுத்த உதவுகிறது.
38. எஃப்.டி.பி (FTP)
File Transfer Protocol என்பதன் சுருக்கமே FTP. இது இன்டர்நெட்டில் இணைந்துள்ள நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல் களை வெப்சர்வருக்கு அப்லோடு செய்து அனுப்பவும், வெப்சர்வரில் இருந்து தகவல்களை நம் கம்ப்யூட்டருக்கு டவுன்லோடு செய்து இறக்கிக் கொள்ளவும்  உதவுகின்றது. பொதுவாக வெப்டிஸைனிங் செய்து விட்டு, அதை சர்வரில் ஹோஸ்ட் செய்யும் போது இவ்வகை சாஃப்ட்வேர்கள் உதவுகிறது.
39. ஆண்டி தெவ்ட் சாஃப்ட்வேர் (Anti Theft Software)
மொபைல் போன் தொலைந்து விட்டால் கண்டுபிடிப்பதற்கு உதவுகின்ற சாஃப்ட்வேருக்கு ஆண்டி தெவ்ட் சாஃப்ட்வேர் என்று பெயர்.
மொபைல் போன் வாங்கும் போதே அதில் நாம் Anti Theft சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். அப்போது அது இரண்டு வேறு மொபைல் எண்களை பதிவு செய்யச் சொல்லி கேட்கும். அதற்கு ரெஃபரென்ஸ் எண்கள் என்று பெயர். அதற்கு  நம் அம்மா, அப்பா, கணவன், மனைவி அல்லது பிள்ளைகளின் மொபைல் எண்களைக் கொடுத்துக் கொள்ளலாம். ஏன், நம் மற்றொரு மொபைல் எண்ணையே கொடுத்துக் கொள்ளலாம். அந்த எண் வேறொரு தனி மொபைலில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நம் மொபைல் போன் தொலைந்து போய், வேறு நபர்கள் எடுத்து விட்டால் அவர்கள் நம் சிம் கார்டை அல்லது மெமரி கார்டை வேறு போனில் மாற்றும் போதோ அல்லது கம்ப்யூட்டரில் தகவல்களை டவுன்லோட் செய்ய முயலும் போதோ, அந்த சிம்மின் எண் ரெஃபரென்ஸாக நாம் கொடுத்துள்ள மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ் ஆக வரும். நம் போனை எடுத்த நபர் எத்தனை முறை போனை ஆஃப் செய்து ஆன் செய்தாலும், அவரது சிம் எண் எஸ்.எம்.எஸ்ஸாக வந்து கொண்டே இருக்கும். அந்த எண்ணை வைத்து அவர் எங்கிருந்து நம் போனை பயன்படுத்திக் கொண்டி ருக்கிறார் என்று கண்டுபிடித்து விட முடியும். அவர் தப்பிக்கவே முடியாது.
40. வெப்சர்வரும், கிளை யிண்ட்டும் (WebServer Vs Client)
உலகளாவிய அளவில் செயல்படுகின்ற அதிகத் திறன்வாய்ந்த கம்ப்யூட்டர் சர்வர் எனப்படுகிறது. அதிக வேகம், அதிக சேமிப்பு, அதிக கொள்ளளவு கொண்ட சர்வர் கம்ப்யூட்டரில் உலகெங்கிலும் உள்ள மற்ற கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட்டு இன்டர்நெட் இணைப்பில் இணைகின்றன. இன்டர்நெட் இணைப்பில் இணைத்த பின், நம் கம்ப்யூட்டர் கிளையிண்ட் கம்ப்யூட்டராக செயல்படுகிறது. கிளையிண்ட் கம்ப்யூட்டர்கள் கேட்பதைக் கொடுப்பது தான் சர்வர் கம்ப்யூட்டரின் பணியாகும். உதாரணத்துக்கு ஓட்டலில் சென்று சாப்பிடுபவர்கள் கிளையிண்ட்டுகள். சாப்பாடு பரிமாறுகின்ற ஓட்டலும், பணியாளர்களும் சர்வர்கள். சாப்பிடச் செல்லும் கிளையிண்ட்டுகள் கேட்கின்ற பதார்த்தங்களை பரிமாறுவது தானே சர்வர்களின் பணி. இதே தான் இன்டர்நெட்டிலும் நடைபெறுகிறது. கிளையிண்ட்டுகள் கேட்பதைக் கொடுப்பது தான் சர்வர்களின் பணியாகும்.
41. யு.ஆர்.எல் (URL)
Uniform Resource Locator என்பதன் சுருக்கமே URL. இது வெப்சைட்டுகளின் முகவரியை குறிக்கிறது. http://www.google.com என்பது கூகுள் வெப்சைட் டின் யு.ஆர்.எல் ஆகும். வெப்சர்வரில் பதிவாகியிருக்கும் வெப்சைட்டுகளை பார்வையிட, பிரவுசர் சாஃப்ட்வேர் மூலம், அவற்றின் யு.ஆர்.எல் முகவரியை கொடுத்தால் தான், அவை வெப்சர்வரில் இருந்து நம் கம்ப்யூட்டர் மானிட்டரில் வெப்பக்கமாக வெளிப்படும்.
42. ஐ.பி முகவரி (IP Address)
Internet Protocol என்பதன் சுருக்கமே IP. இன்டர்நெட் இணைப்பில் உள்ள ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு எண் முகவரியாகக் கொடுக்கப் பட்டிருக்கும். அந்த முகவரியை வைத்தே ஒவ்வொரு கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டில் அடையாளம் காணப்படுகின்றன. அந்த எண்ணுக்கு இன்டர்நெட் புரொடோகோல் முகவரி என்று பெயர். சுருக்கமாக ஐபி முகவரி என்பார்கள். கம்ப்யூட்டரின் நினைவகத்தில் அந்த முகவரி பைனரியாகப் பதிவாகி இருந்தாலும், நமக்குப் புரிவதற்காக அது தசம எண்களாகவே வெளிப்படும். உதாரணத்துக்கு ஒரு ஐபி முகவரி: 145.10.34.3
இந்த முகவரி 4 பைட்டினால் உருவாகி இருக்கும். அதாவது 4 பைட் = 32 பிட்டுகள். இந்த உதாரணத்தில் பைனரி எண்களாக உள்ள இன்டர்நெட் புரொடோகோல் முகவரிக்கு இணையாக உள்ள 145.10.34.3 என்ற எண்கள் நமக்குப் புரிவதற்காகவும், நினைவில் வைத்துக் கொள்வதற்காகவும் கம்ப்யூட்டரினால் கொடுக்கப்படும் தசம எண்களாகும்.
43. ரிமோட் கம்ப்யூட்டர் அக்ஸஸ் (Remote Computer Access)
நம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு, உலகில் வேறோர் இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டரை இயக்க முடியும். அதற்கு ரிமோட் கம்ப்யூட்டர் அக்ஸஸ் என்று பெயர். இவ்வாறு இயக்குவதற்கு அந்த கம்ப்யூட்டரின் ஐபி முகவரி தேவை. நம் கம்ப்யூட்டரில், எந்த கம்ப்யூட்டரை இயக்க நினைக்கி றோமோ, அந்த கம்ப்யூட்டரின் ஐபி முகவரியை பயன்படுத்தி இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இணைப்பை ஏற்படுத்திக் கொண்ட வுடன் தொலைதூர கம்ப்யூட்டரின் ஹார்ட்டிஸ்கில் உள்ளவை அப்படியே நம் கம்ப்யூட்டர் மானிட்டரில் வெளிப்படும். பிறகு அதை நம் கம்ப்யூட்டரை இயக்குவதைப் போலவே இயக்க முடியும். இதுபோல செய்யும் போது தகவல் பாதுகாப்பை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வைரஸ் பாதிக்கலாம். பாஸ்வேர்ட் போன்றவற்றின் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். சைபர் க்ரைம்கள் இது போன்ற தொலைதூர கம்ப்யூட்டர் அக்ஸஸ் போன்ற தொழில்நுட்பத்தில் அதிகம் நடைபெற வாய்ப்புண்டு.
44. ஆகாய கம்ப்யூட்டர் / மேகவழி கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் (Cloud Computing Technology)
கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது ஆகாய கம்ப்யூட்டர் என்று பொருள்படும். உலகளாவிய சர்வர். அதில் சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து வைத்திருப்பார்கள். அந்த சாஃப்ட்வேர்களை அங்கிருந்தபடி பயன்படுத்திக் கொள்ளலாம். நம் கம்ப்யூட்டரில் அந்த சாஃப்ட்வேர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதுபோல நம் ஃபைல்கள், ஃபோல்டர்கள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் என அனைத்தையும் அந்த சர்வரிலேயே பதிவாக்கிக் கொள்ளலாம். இதனால் நம் கம்ப்யூட்டரில் /லேப்டாப்பில் /ஐபேடில்/டேப்லெட்டில்/மொபைல் போன்றவற்றில் இன்டர்நெட் தொடர்பை மட்டும் வைத்திருந்தால் மட்டும் போதும்.
தகவல்களையும், சாஃப்ட் வேர்களையும் கிளவுட் கம்ப்யூட்டரில் இருந்தே பெற முடியும். ஆகாயம் எப்படி நாம் செல்லும் இடங்கள் எல்லாம் வருகிறதோ, அதுபோல நாம் செல்லும் இடங்களில் எல்லாம் கிளவுட் கம்ப்யூட்டரை பயன்படுத்த முடிவதால் தான் ஆகாய கம்ப்யூட்டர் என்று பொருள்படும் வகையில் பெயர் சூட்டியுள்ளார்கள்.
ஆக இன்று நாம் உலகத்தில் எங்கிருந்தாலும், நம் மொபைலில் எந்த சாஃப்ட்வேரையும் டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும். நம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்துவதைப் போன்ற ஒரு உணர்வுடன் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழிநுட்பத்தைப் பயன்படுத்த முடியும். நம் கம்ப்யூட்டரையே ஆகாயத்தில் வைத்துக் கொண்டு செல்லும் இடங்களில் எல்லாம் அதைப் பயன்படுத்துவதைப் போல கற்பனை செய்து பாருங்கள். அத்தனை அழகான தொழில்நுட்பம் கிளவுட் கம்ப்யூட்டிங். இந்த சூப்பர் வேகத்தில் தான் சைபர் வேர்ல்ட் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நம் தகவல்கள் எல்லாமே நம்மை விட்டு வெகு தொலைவில்...ஆகாயத்தில்... சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் ஏராளாம். பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டியது நம் கடமை.
45. கூகுள் கிளாஸ் (Google Glass)
கூகுள் கிளாஸ் - தொழில்நுட்ப உலகில் இன்று பரபரப்பாக பேசப்படும் கண்ணாடி. இது ஒரு கம்ப்யூட்டர் மூக்குக் கண்ணாடி. புளூடூத் கருவியை விட பெரியதாகும். இன்றைய நவீன ஸ்மார்ட்போன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். மொபைல் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள் ளது.
நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக் கூடியதாகவும், மனதால் நினைப் பதைக் கூட செயல்படுத்தக் கூடிய தாகவும் உள்ளது கூகுள் கிளாஸ்.
கூலிங் கிளாஸ் அணிந்து கொள்வதைப் போல, கூகுள் கிளாஸ் அணிந்து கொண்டால், நம் கண்கள் எதையெல்லாம் பார்க்கின்றதோ, அவற்றையெல்லாம் கூகுல் கிளாஸின் காமிராவும் பார்க்கும்.
நாம் தெருவில் நடந்து செல்லும் போது, நம்முன் செல்லுகின்ற மனிதர்கள், கடந்து செல்கின்ற பஸ், ஸ்கூட்டர், கார் போன்றவற்றை ஸ்கேன் செய்து அவற்றின் தகவல்களை எல்லாம் திரட்டி நமக்கு அளிக்க முற்படும். இதன் மிகப் பெரிய சிக்கலே, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றி இருப்பவற்றைப் பற்றியும் தகவல்களை தொடர்ந்து சேகரித்து பதிவு செய்து கொண்டே இருக்கும்.
இவ்வாறு நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றி உள்ளவர்கள் பற்றியும் சேகரிக்கப்படும் தகவல்கள் கூகுளில் பதிவாகும். இதை நம்மால் ஜீரணிக்க முடியுமா என்பது பெரிய கேள்விக் குறி தான்.
ஆக, சைபர் உலகில் இனி நமக்கென்று எந்த இரகசியமும், ஒளிவு மறைவும், அந்தரங்கமும் இருக்காது. எங்கேயும், எப்போதும் நம் செயல்களை உலகம் உற்று நோக்கிக் கொண்டே இருக்கும் பேரபாயம் உண்டாகி விடுவது சர்வ நிச்சயம்.
நாம் கூகுள் கிளாஸ் அணியா விட்டாலும், நம் அருகில் இருப்பவர் அதை அணிந்திருந்தாலும் கூட நம்மைப் பற்றிய தகவல்கள் பதிவாகிக் கொண்டே வருவது உறுதி.
சைபர் வேர்ல்டில் பாதுகாப்புக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் வேலையில் கூகுள் கிளாஸ் ஒரு வித அச்சத்தைக் கொண்டு வந்துள்ளது. முன்னை விட இன்னும் அதிகமாக பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியத் தேவையில் இருக்கிறோம்.

No comments:

Post a Comment