Saturday 25 January 2014

பேரிடர் மேலாண்மை - ஒரு சவால்

பேரிடர் மேலாண்மை - ஒரு சவால்
Posted Date : 20:12 (12/12/2013)Last updated : 19:12 (14/12/2013)
டாக்டர் ழி.சுப்பையன்
அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வேகத்திற்கு இணையாக பேரிடர்களும் வளர்ந்து கொண்டே வருகின்றன.  இத்தகைய பேரிடர்களுக்கிடையே தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளும் அவசியம் மனித இனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
பேரிடர்கள் இயற்கையாகவும், மனிதனாலும் உருவாகின்றன.
நிலநடுக்கம், நிலச்சரிவு, புயல், வெள்ளம், காட்டுத்தீ தொடர்பான பேரிடர்கள் இயற்கையாக உருவாகின்றன.  வேதியியல், அணு மற்றும் உயிரியல் தொடர்பான பேரிடர்கள் மனிதர்களால் ஏற்படுகின்றன. 
அனைத்து வகையான பேரிடர்களும் திடீரென வருவதால் அதன் மூலம் உருவாகும் பொருள் மற்றும் உயிரிழப்புகள் மிக அதிகம். 
வறட்சி போன்ற மெதுவாக நிகழக்கூடிய பேரிடர்கள் தவிர பிற பேரிடர்களை முன்கூட்டி அறிவது மிக கடினம்.
பேரிடர் மேலாண்மை
அடிக்கடி நிகழும் பேரிடர்களில் இருந்து நம்மை காக்க பேரிடர் மேலாண்மை அவசியம்.  இது ஒரு கூட்டு முயற்சி. 
பேரிடருக்கு முன், பேரிடர் தருணம் மற்றும் பேரிடருக்கு பின் என பேரிடர் மேலாண்மையை மூன்று கட்டங்களாக அணுகலாம்.
பேரிடர் மேலாண்மையில், பேரிடரை தடுத்தல், தயார் நிலையில் இருத்தல், துயர் துடைத்தல் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றன.
பேரிடருக்கு முன்பாக எத்தகைய பேரிடரையும் எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருப்பதற்கு விழிப்புணர்வும், தயார்நிலையும் அவசியம் (Emergency Prepared-ness). 
இந்த தயார்நிலை பேரிடரின் தன்மை, நிகழுமிடம், காலம் ஆகியவற்றைப் பொருத்தது. 
தயார்நிலையின் முக்கிய குறிக்கோள் பேரிடரினால் ஏற்படும் சேதாரத்தினை முடிந்த வரையில் குறைப்பதே.
பேரிடர் மேலாண்மை சட்டம் 2005
(Disaster Management Act 2005)
இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும். இந்திய நாடாளுமன்றத்தில் இச்சட்டம் 23.12.2005ல் இயற்றப்பட்டது. 
இச்சட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆணையம் (District Authority), உள்ளூர் ஆணையம் (Local Authority), மாநில ஆணையம் மற்றும் இந்திய அளவில் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகளின் பணிகள், அதிகாரங்கள் ஆகியவற்றை வரையறுத்துள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் ஆகியவையும் இச்சட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன.
பேரிடருக்கான நிவாரணத்தின் வகை, தரம் அவை வழங்கப்படும் அளவு ஆகியவையும் இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.
பேரிடர் மேலாண்மை தொடர்பான அரசு மற்றும் இதர அமைப்புகள்
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Institute of Disaster Management),  பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் நிறுவப்பட்டது.
மனிதவள மேம்பாடு பயிற்சி, ஆராய்ச்சி, கொள்கை முடிவு தயார் செய்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் தொடர்பான பணிகளை மேற்கொள்வது இந்நிறுவனத்தின் பணியாகும். 
இந்நிறுவனம் முன்னதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையமாக (National Centre for Disaster Management) இந்திய பொது நிர்வாக நிலையத்தின் கீழ் (Indian Institute of Public Administration) செயல்பட்டுவந்தது.
இந்நிறுவனத்தில் துணைத் தலைவர் நிலையிலான உயர் அலுவலர் மூலம் அன்றாட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.   மத்திய உள்துறை அமைச்சர் இதன் தலைவராக உள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 42 உறுப்பினர்கள் இதன் நிர்வாகத்தில் பங்கெடுக்கின்றனர்.
இந்நிறுவனம் 5 பிரிவுகளாக பணிகளை மேற்கொள்கிறது.  அவை நிலம் சார்ந்த பிரிவு, நீர் மற்றும் காலநிலை தொடர்பான பிரிவு, கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவு, பிரதிசெயல் (Response) பிரிவு, நிர்வாகம் மற்றும் நிதி பிரிவு ஆகியவை.
பல்வேறு மாநிலங்களும் பேரிடர் ஆபத்து நிறைந்த பகுதிகளும் இந்நிறுவனத்தின் மூலம் உரிய பயிற்சிகளையும் திட்டங்களையும் பெற்று கொள்ள இயலும்.
மாநில அளவில் வருவாய் துறையின் கீழ், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பேரிடர் தொடர்பான திட்டமிடல், நிவாரணம் மற்றும் மேலாண்மை பணிகளை மேற்கொள்கிறது.
மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை மையம் செயல்பட்டு வருகின்றது.  மாவட்ட ஆட்சித் தலைவர் பல துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
உள்ளூர் அளவில், பேரிடர் காலங்களில், உள்ளாட்சி நிர்வாகம் அதன் நிர்வாக பகுதிகளில் நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்கிறது. 
தேசிய அளவில் இந்தியாவில் அவசரநிலை நிர்வகித்தலின் பங்கு இந்தியாவின் தேசிய பேரழிவு நிர்வகித்தல் ஆணையத்தின் கீழ் இருக்கிறது.  இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பு. 
அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தினுள் இயங்கும் அமைப்பான சர்வே ஆஃப் இந்தியாவும் அவசரநிலை நிர்வகித்தல் செயல்பாட்டுக்கு புவியியல் வல்லுநர்களின் தர்க்க ரீதியான அறிவு மற்றும் ஆய்வு நுண்திறமை ஆகியவற்றைக் கொடுப்பதன் மூலமாக இந்தத் துறையில் அங்கம் வகிக்கிறது.
பொது/தனியார் கூட்டாக அவசரநிலை நிர்வகித்தல் மற்றும் ஆய்வு நிறுவனத்தை (EMRI) அண்மையில் அரசாங்கம் அமைத்திருக்கிறது. 
இது பேரழிவுகளாக விவரிக்கப்பட்ட நிகழ்வுகளில் அவசர நிலைகளுக்கு ஏற்ப சமூகங்களின் பொதுவான பிரதிசெயலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. 
சில குழுக்களின் முந்தைய முயற்சிகள், முதல் பிரதிசெயல்புரிபவர்களுக்கான (இந்தியாவின் முதல்) அவசர நிலை நிர்வகித்தல் பயிற்சியினை முன்னேற்பாடு செய்தல், ஒற்றை அவசரநிலைத் தொலைபேசி எண்ணை உருவாக்குதல் மற்றும் EMS, பணியாளர், உபகரணம் மற்றும் பயிற்சி ஆகியவற்றுக்கான தரங்களை நிறுவுதல் ஆகியன உள்ளடக்கியதாக இருக்கின்றன. 
தற்போது இது ஆந்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற இந்திய மாநிலங்களில் இயங்குகிறது. 
இலவச தொலைபேசி எண் 108 இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
உயர் திறன் குழு
(High Power Committee)
தேசிய அளவிலும், அனைத்து மாநில மற்றும் மாவட்ட அளவிலும் இயற்கை மற்றும் செயற்கை பேரிடர் மேலாண்மை திட்டம் வகுப்பதற்காக ஆகஸ்டு 1989ஆம் ஆண்டு திரு.ஜே.சி.பந்த் அவர்கள் தலைமையில், சிறந்த வல்லுநர்களை உறுப்பினர்களாக கொண்ட உயர்திறன் குழு அமைக்கப்பட்டது. 
ஐந்து வகை பேரிடர்கள்
1. நீர் மற்றும் கால நிலை சார்ந்தவை (வெள்ளம், புயல், இடி, மின்னல், கடும்புயல் (Hurricane), பனிப்பொழிவு, கடல் கொந்தளிப்பு, ஆலங்கட்டி புயல் (Hailstorm), வறட்சி)
2. நிலம் மற்றும் மண் சார்ந்தவை (மண் சரிவு, நில நடுக்கம், தீ, அணை உடைப்பு மற்றும் வெடிப்பு)
3. உயிரியல் சார்ந்தவை ( நோய் பரவல், கால்நடை நோய் பரவல், உணவு விஷமாதல், பூச்சிகள் தொல்லை )
4. வேதியியல்/அணுக்கள் தொடர்புடையவை (அணுக்கதிர், தொழிற்சாலை,வாயுக் கசிவு)
5. விபத்து சார்ந்தவை (காட்டுத் தீ, எண்ணெய் கசிவு, கட்டிடம் இடிதல், கூட்ட நெரிசல்  வெடிவிபத்து, மின்கசிவு, சாலை விபத்துகள்)
உயர் திறன் குழு பேரிடர் மேலாண்மைக்கான திட்டமிடலை நான்கு நிலைகளாக வகைப்படுத்தியுள்ளது.
நிலை 1: பேரிடரை எதிர்கொள்ளவும் கண்காணிக்கவும் தயார் படுத்தும் நிலை
நிலை 2: மாவட்ட அளவிலேயே மேலாண்மை செய்துவிடக்கூடிய பேரிடர்கள்
நிலை 3: மாநில அளவில் மேலாண்மை செய்துவிடக்கூடிய நிலையிலான பேரிடர்கள்
நிலை 4: மிகக் கடுமையான பேரிடர், தேசிய அளவிலான மேலாண்மை தேவைப்படும் நிலை.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA)
சரியான முறையிலும், உரிய நேரத்திலும் பேரிடர் மேலாண்மை மேற்கொள்ள கொள்கை முடிவுகள் எடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தவும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ் வாணையம் கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்கிறது. 
தேசிய அளவிலான பேரிடர் மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதலளித்தல்
பல்வேறு அமைச்சகங்களின் திட்டங்களை, தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்திற்குட்பட்டு அங்கீகரித்தல்.
பேரிடர் புனரமைப்பிற்கான நிதி ஆதாரங்களை பரிந்துரைத்தல்
மாநில பேரிடர் ஆணையத்தினால் விடுவிக்கப்பட வேண்டிய மாநிலத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குதல்.
தேசிய வெளியுறவுக் கொள்கைக்குட்பட்டு பேரிடரால் பாதிக்கப்பட்ட அயல்நாடுகளுக்கு உதவுதல்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுத்துவதற் கான நெறிமுறைகளை உருவாக்குதல்.
பேரிடர் மேலாண்மை பரிமாணங்கள்
பேரிடர் மேலாண்மையில் அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டிருந்த நிலை குறைந்து, பல்வேறு தனியார் நிறுவனங்களும் இப்பணியை ஒரு வணிகமாக செயல்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. 
அவசரநிலை மேலாண்மையில் பயிற்சி அளித்தலும் தனியே ஒரு வணிகமாக உருவாகியுள்ளது.  Certified Emergency Manager, Certified Business Continuity Professionalபோன்ற சான்று பெற்ற அலுவலர்கள் பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பேரிடர்களின்போது ஏற்படும் அவசர நிலையை நிர்வகிப்பதற்காகத் தேவைப்படும் பல்வேறு கருவிகள், பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதும் ஒரு தொழிலாக பரிமாணம் அடைந்துள்ளது.
பேரிடர் தொடர்பான தொகுப்புகள், நூல்கள், கடந்தகால அனுபவங்கள் ஆகியவற்றை தொகுத்து வைத்து நூலகங்கள், ஆவணக்கிடங்குகள், அருங்காட்சியகம் போன்றவைகளும் வளர்ந்து வரும் பேரிடர் மேலாண்மை முறைகளுடன் ஒருங்கிணைந்து உள்ளன.
வணிக மயமாக்கல் பணிகள் மூலம் பேரிடர் மேலாண்மைப் பணிகள் எளிதாகவும், குறித்த காலத்தில் முடிவு பெறவும் பேரிடர் ஏற்படுத்தும் இழப்புகளை தவிர்க்கவும் பெரும் பங்கு வகிக்கின்றன.
இத்தகைய வணிக ரீதியிலான அமைப்புகளும் நிறுவனங்களும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியத்துவம் வகிக்கின்றன.
சர்வதேச அமைப்புகள்
அவசர நிலை மேலாளர்களின் சர்வதேச அமைப்பு (மிகிணிவி) :  இது ஒரு தன்னார்வ கல்விசார் அமைப்பு. இதன் உறுப்பினர்களுக்கு அவசரநிலை நிர்வாகம், தொழில் மேம்பாடு தகவல் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை லாப நோக்கில் லாமல் அளிக்கிறது.
செஞ்சிலுவை / செம்பிறை சங்கம்: பேரிடர் ஏற்படும் பகுதி களில் உடனடி மீட்புப் பணியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபை : ஐ.நா. உறுப்பு நாடுகளில் ஏற்படும் பேரிடர் மேலாண்மையை அந்தந்த நாட்டு அரசின் மூலமாக கிடைக்கும்  நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் மேற்கொண்டு வருகிறது.
உலகவங்கி : பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புக்கு தேவையான நிதி ஆதாரத்தினை வழங்குவதில் பெரும்பங்காற்றுகிறது. பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அதற்குரிய கட்டமைப்புகள் ஆகியவற்றை பல்வேறு நாடுகளில் நிறுவி உள்ளது.
உலக நாடுகளில் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்
ஆஸ்திரேலியா அவசரநிலை நிர்வாகம் (Emergency Management of Australia – EMA)
கனடா பொது பாதுகாப்பு (Public Safety Canada) அமைப்பு
ஜெர்மானிய பேரழிவு நிவாரணம், குடியியல் பாதுகாப்பு அமைப்பு (German Cadastral)
தேசிய நெருக்கடி நிலை அமைப்பு, நெதர்லாந்து (National Cadastral Centre)
குடியியல் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை நிர்வாக அமைச்சகம் நியூசிலாந்து
அவசர கால சூழ்நிலைகளின் அமைச்சகம், ரஷ்யா
உள்நாட்டு பாதுகாப்பு துறை, அமெரிக்கா.
உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் பல்வகை பேரிடர்களால் தாக்கப்படும் வாய்ப்புள்ள பகுதிகளாகஅறியப்பட்டுள்ளன.  (Multi-Hazard Prozone)
கிழக்கு கடற்கரை பகுதிகள் அனைத்தும் சுனாமி பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக அறியப்பட்டுள்ளன.
நிலநடுக்கம்
பூமிக்கடியில் அதிகப்படியான அழுத்தத்தினால் சக்தி வெளியேற்றப்பட்டு தளதட்டுகள்(Tectonic Plates)  நகர்வதால் ஏற்படும் அதிர்வே நிலநடுக்கம் (அ) பூகம்பம். 
இந்த அதிர்வின் அளவை நிலநடுக்க மானியினால் (Seismograph) ரிக்டர் அளவு மூலம் அளவிடலாம். 
பொதுவாக ரிக்டர் அளவுகோலில் 3க்கும் கீழ் உள்ளவை உணரப்படுவதில்லை. 
7 ரிக்டருக்கும் கூடுதலாக அளவுள்ள நில நடுக்கங்கள் நிகழும் இடத்தை பொருத்து பலத்த சேதத்தை ஏற்படுத்தும். 
தள தட்டுகள் (Tectonic Plates)
பூமியின் மேற்பரப்பு (Lithosphere)  நகரும் வகையிலான 7 பெரிய தட்டுகளாகவும், சுமார் 12 சிறிய தட்டுகளாகவும் சூழ்ந்துள்ளன. 
5 கண்டங்களும் (ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்த்திரேலியா, ஆப்பிரிக்கா) பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங் கடல் ஆகிய பெருங்கடல்களும் 7 பெரும் தட்டுகளில் அடங்கும். 
இந்த தட்டுகள் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டிருக்கும். 
இத்தட்டுகளின் அடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருக்கும்.  பூமியின் சுழற்சி, பாறைக் குழம்பு நகர்வு ஆகியவற்றினால் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதும் நகர்வதும் நிகழ்கின்றன. 
ஏறத்தாழ ஆண்டொன்றுக்கு 1 முதல் 13 செ.மீ. வரை இத்தட்டுகள் நகர்கின்றன.
ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்து காணப்பட்டாலும், இவை தனித்தனி தட்டுகளில் அமைந்துள்ளன.  இந்தியா மற்றும் தெற்கு ஆசியா பகுதிகள் தனி தட்டாக அமைந்துள்ளது.
நிலநடுக்கப் பகுதிகள்
இந்திய துணைக் கண்டம் ஐந்து நிலநடுக்கப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  இவை முறையே ஒன்று முதல் ஐந்து வரை எண்களால் குறிப்பிடப்படுகிறது.
பகுதி  1  (Zone – 1) குறைந்த அளவு பாதிப்புக்குள்ளாகும் பகுதி.
பகுதி  2  (Zone – 2) குறைந்தது முதல் மிதமானது வரை பாதிப்புக்குள்ளாகும் பகுதி  தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள் ஆகியவை இதில் அடங்கும்.
பகுதி 3  (Zone – 3) மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதி  மேற்கு கடற்கரையில் சில பகுதிகள், கங்கை சமவெளி பிரதேசம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகியவற்றின் சில பகுதிகள், பஞ்சாப், ஹரியானா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகியவற்றின் சில பகுதிகள்.
பகுதி4 (Zone – 4) அதிகமான பாதிப்புக்குள்ளாகும் பகுதி  மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகள் இதில் அடங்கும்.
பகுதி 5 (Zone – 5) மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதி  வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து முழுவதும்,  ஜம்மு  காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளும் அந்தமான் நிக்கோபர் தீவுகளும் மிக அதிகமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
நில நடுக்கப் பகுதியில் செய்யக்கூடியவை
கட்டிடங்களில் உள்ள விரிசல்கள் சரிசெய்யப்படவேண்டும்.
மின்விளக்குகள் மேற்கூரையுடன் நன்கு இணைக்கப்பட வேண்டும்.
உரிய கட்டிட விதி முறைகளை (BIS Code) பின்பற்ற வேண்டும்.
பெரிய, கனமான பொருட்கள் கீழ்தளத்திலும், கீழ்அலமாரியிலும் வைக்க வேண்டும்.
கனமான தொங்கும் படங்கள், கண்ணாடிகள் போன்றவற்றை படுக்கை மற்றும் இருக்கையிலிருந்து தள்ளி வைக்க வேண்டும்.
பழுதடைந்த மின்சாதனங்கள், மின்கம்பங்கள், கனமான எரிவாயு குழாய்கள் செப்பனிடப்பட வேண்டும்.
வீட்டிற்குள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பான இடமாக தெரிவு செய்து வைக்க வேண்டும்.  வீட்டிற்குள் வலிமையான கட்டிலின் கீழ்பகுதி, உணவு மேசையின் கீழ்பகுதி, வீட்டின் வெளியே திறந்த வெளி ஆகியவை சில பாதுகாப்பான இடங்களாகும்.
அவசர தொலைபேசி எண்கள் (காவல், மருத்துவமனை, தீயணைப்பு, உள்ளூர் நிர்வாகம் ஆகியவை) நினைவில் வைத்திருக்கலாம்.
பேட்டரியுடன் டார்ச் லைட், கூடுதல் பேட்டரிகள், முதலுதவி சாதனங்கள், வழிகாட்டி நெறிமுறைகள், உலர்ந்த நிலையில் உள்ள அவசர கால உணவுகள், சிறிய கத்தி, குளோரின் மாத்திரைகள், அவசியமான மருந்துகள், பணம் மற்றும் கடன் அட்டைகள், ஆகியவை அடங்கிய அவசரகால உதவி பெட்டியை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அவசர கால தகவல் தொடர்பு திட்டம்
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வெவ்வேறு இடங்களில் பணியிலோ வசிப்பிடத்திலோ இருப்பின் அவர்களுடன் தொடர்பு கொள்ள ஒரு பொதுவான தொலைவில் உள்ள உறவினர் அல்லது நண்பரின் பெயர், தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை தயார் நிலையில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
குடியிருப்பு பகுதிகளில் நிலநடுக்கத்தின்போது செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய கட்டிட முறைகள் அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் குறித்து அனைவருக்கும் தெரிவிக்கலாம்.
நிலநடுக்கம் ஏற்படும் தருணத்தில் நீங்கள் கட்டிடத்திற்கு உள்ளே இருந்தால் வலிமையான மேஜையின் கீழோ அல்லது கட்டிலின் கீழோ படுத்து நிலநடுக்கம் நிற்கும் வரையில் அசையாமல் இருக்கலாம்.
கண்ணாடி ஜன்னல், கண்ணாடியாலான பொருட்கள் அருகே நிற்கக்கூடாது. தலை மற்றும் முகப்பகுதிகளை தலையணை கொண்டோ, மெத்தையைக் கொண்டோ மூடிக் கொள்ளலாம்.
நிலநடுக்கத்தின் போது இங்கும் அங்கும் ஓடாமல் பாதுகாப்பு கருதி ஓரிடத்தில் இருப்பது சரியானது.  மின்உயர்த்தி (Lift), நகரும் படிகட்டுகள் (Escalator) ஆகியவற்றை உபயோகப்படுத்தக்கூடாது.
நிலநடுக்கச் சமயத்தில் மின் தடை ஏற்படுவதும், தீக்கான அலாரம் அடிப்பதும் மற்ற தானியங்கி தீ தடுப்பு உபகரணங்கள் இயங்குவதும் நிகழலாம்.
நிலநடுக்கத்தின் போது கட்டிடத்திற்கு வெளியே இருந்தால் மரங்கள், தெருவிளக்குகள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றிலிருந்து தூரமாக ஒதுங்கி நிற்கவேண்டும்.
பறந்து வரக்கூடிய பொருட்களிலிருந்து தற்காத்து கொள்வதற்காக தலை, முகம் மற்றும் உடற்பகுதிகளை மூடிக்கொள்வது நல்லது.
நிலநடுக்கத்தின் போது வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தால், உடனடியாக வண்டியை அணைத்து நிறுத்தி விட்டு வண்டிக்குள்ளேயே இருக்க வேண்டும்.  வண்டியை நிறுத்தும் போது பாலம், கட்டிடங்கள், மரங்கள், மின்வயர்கள் அருகில் நிறுத்தக் கூடாது.
வண்டியை தொடர்ந்து செலுத்தும் போது எச்சரிக்கையுடன் மெதுவாக செலுத்த வேண்டும்.  ஏனெனில் எதிர்பாராத விரிசல்கள் சாலைகளில் ஏற்பட்டிருக்கலாம்.
நிலநடுக்கத்திற்கு பிறகு செய்ய வேண்டியவை
அமைதியாக இருந்து, தொலைக்காட்சி, வானொலி மூலம் வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
பெரும் அலைகள் வருவதற்கான வாய்ப்பிருப்பதால், கடற்கரை பகுதியிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
தண்ணீர் குழாய், எரிவாயு, மின் இணைப்புகளை நிறுத்த வேண்டும்.
தீக்குச்சி, சிகரெட், மின்விளக்கு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.  டார்ச் பயன்படுத்த வேண்டும்.
தீ விபத்து ஏற்பட்டால், தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும் அல்லது தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.
உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற வேண்டும்.  காயம் பட்டவர்களை அசைக்காமல் முடிந்த அளவு முதலுதவி அளிக்க வேண்டும்.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அகற்ற வேண்டும்.
மண்ணில் புதையுண்ட நபர்களை காப்பாற்ற உடனடியாக நிவாரணக் குழுவிடம் தகவல் அளிக்க வேண்டும்.
அறுந்து விழுந்த மின்கம்பிகளை தொடாமலும் அருகில் உள்ள மற்ற பொருட்களை தொடாமலும் இருக்க வேண்டும்.
திறந்த நிலையில் உள்ள நீர் நிலைகளிலிருந்து தண்ணீர் அருந்தக் கூடாது.  சுத்தமான துணியின் மூலம் வடிகட்டி தண்ணீர் குடிக்க வேண்டும்.
உங்கள் குடியிருப்பு மோசமான நிலையில் இடிந்திருந்தால் அதிலிருந்து வெளியேறி விட வேண்டும்.  தண்ணீர் பாத்திரங்கள், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இடிந்துள்ள கட்டடங்கள் அருகிலோ உள்ளேயோ செல்லக் கூடாது.
பேரிடரின்றி மனிதவாழ்வு சாத்தியமில்லை.  எத்தகைய பேரிடரையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது மட்டுமே பேரிடர் மேலாண்மையின் முக்கிய நோக்கம்.  தெரிந்த பேரிடர்கள் மட்டுமின்றி கற்பனைக்கு எட்டாத பேரிடர்களையும் எதிர்கொள்ளும் வகையில் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.  உயிரிழப்பு, பொருளிழப்பு, தவிர்க்க இயலாதது என்ற போதிலும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இவ்வகை இழப்புகளை பெருமளவில் குறைக்கும்.  வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு முற்றிலும் எதிராக செயல்படாமல் இயற்கையுடன் சார்ந்த வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது மட்டுமே இன்றைய சந்ததி மட்டுமின்றி வருங்கால தலைமுறைகளையும் வாழ வைக்கும்.
(கட்டுரையாளர் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது மாவட்ட ஆட்சியராக உள்ளார்)

No comments:

Post a Comment