Saturday 25 January 2014

விகடன் விஷன் - 2013 நிகழ்வுகளும் மனிதர்களும் - இந்தியா

விகடன் விஷன் - 2013 நிகழ்வுகளும் மனிதர்களும் - இந்தியா
Posted Date : 15:12 (12/12/2013)Last updated : 19:12 (14/12/2013)
உணவுப் பாதுகாப்புச் சட்டம்
 பாராளுமன்றத்தில் கடும் விமர்சனங்களுக்கு இடையே உணவு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 12ல் நிறைவேற்றப்பட்டது. பொருளா தாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளவர்கள் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் இந்திய மக்கள் தொகையில் 63.5 சதவீதம் பேர் பயன்பெறுவர்.
குறிப்பாகப் பெண்கள், குழந்தை கள், ஆதரவற்றோர், இயற்கை பேரழிவில் சிக்கினோர், பட்டினியால் வாடுபவர்கள் என அனைவருக்கும் கட்டாயமாக உணவு கிடைக்கும். முன்னுரிமை பிரிவினர், பொது பிரிவினர் என வகைப்படுத்தப் பட்டுள்ளதே இச்சட்டத்தை எதிர்ப் பதற்கு பிரதான காரணமாக இருந்தது. முன்னுரிமை பிரிவினருக்கு மாதம் 7 கிலோ உணவு பொருட்கள் அரிசி கிலோ 3 ரூபாய்க்கும், கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும், சிறு தானியங்கள் கிலோ ஒரு ரூபாய்க்கும் வழங்கப்படும்.
பொதுப் பிரிவு குடும்ப அட்டைதாரர்களுக்கு மூன்று உணவு பொருட்கள் கிடைக்கும். இதன் மூலம் கிராமங்களில் 75 சதவீத மக்களுக்கும், நகர்புறங்களில் 50 சதவீத பேருக்கும் மானிய விலையில் உணவு பொருட்கள் பெறுவர். ஆனால் முன்னுரிமை பிரிவினர், பொதுப் பிரிவினர் என யாரும் அடையாளப் படுத்தப்படவில்லை. இதுவே இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா உள்பட எதிர்கட்சிகள் தலைவர்கள் எதிர்த்தனர்.
இந்த சட்டத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத் தில் எந்த சட்டமும் இல்லாமல் 100 சதவீதம் பேருக்கு உணவு பொருட் கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வாங்கப்படுகிறது. அதே நேரத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு மசோதாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக அதை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். குறிப்பாகத் தனியார் கடன் வட்டி விகிதம் அதிகமாகும். உற்பத்தி துறையில் பாதிப்பு ஏற்படும்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்துக்கு வழங்கப்படும் அரிசி மாதந்தோறும் ஒரு லட்சம் மெட்ரிக் டன் அளவு குறையும். இதை ஈடு செய்ய கூடுதலாக 3 ஆயிரம் கோடி செலவு ஏற்படும். இதற்கான திருத்தங்களை சட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் இவைகள் எல்லாம் நிறைவேற்றப்படாமல் சட்டம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது அமலாக்கும் போது தான் மக்களும், அரசு பிரச்னைகளை எத்தகைய சங்கடங்களை சந்திக்க வேண்டியது தெரியும்.
இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி!
 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 28.8.2013 அன்று 68.83 ஆக வீழ்ச்சி அடைந்தது. 1995-ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்தது இதுவே முதல் முறையாகும். 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஒரு டாலர் மதிப்பு ஒரு ரூபாய்.
1966-ம் ஆண்டு ஏற்றுமதியை அதிகரிக்க ரூபாய் மதிப்பை குறைத்த போது ஒரு டாலர் மதிப்பு 6.35 ரூபாய். 1973-ம் ஆண்டு அன்னிய செலாவணி மோசடியை தடுக்க திட்டம் கொண்டு வந்த போது ஒரு டாலர் மதிப்பு 7.67 ரூபாய். 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்திய போது ஒரு டாலர் மதிப்பு 8.41 ரூபாய்.
1991-ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியால் இந்திய தங்கத்தை அடமானம் வைத்தபோது ஒரு டாலர் மதிப்பு 22.69 ரூபாய். 1996-ம் ஆண்டு இறக்குமதி லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட போது ஒரு டாலர் மதிப்பு 35.43 ரூபாய். 1997-ம் ஆண்டு வரிகுறைப்பு பட்ஜெட்டை சிதம்பரம் தாக்கல் செய்த போது ஒரு டாலர் மதிப்பு 36.32 ரூபாய். 2002ம் ஆண்டு கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை கொண்டு வந்த போது ஒரு டாலர் மதிப்பு 48.60 ரூபாய்.
2004ம் ஆண்டு மன்மோகன்சிங் பிரதமராக பதவி ஏற்ற போது ஒரு டாலர் மதிப்பு 45.32 ரூபாய். 2009ம் ஆண்டு மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஏற்பட்ட போது ஒரு டாலர் மதிப்பு 48.40 ரூபாய். 2012ம் ஆண்டு வரிசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பேது ஒரு டாலர் மதிப்பு 53.32 ரூபாய். 2013ம் ஆண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு 28.8.13 அன்று ஒரு டாலர் மதிப்பு 68.83 ரூபாய் என்று உச்சத்தை எட்டியது.
வீழ்ச்சி ஏன்?
பொருட்களைப் போன்றே தேவை மற்றும் சப்ளையை பொறுத்து ஒரு நாட்டின் நாணய மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் டாலருக்கான தேவை அதிகமாக உள்ள நிலையில் அதன் சப்ளை குறைவாக இருப்பதால் இந்திய ரூபாய்க்கு எதிராக டாலர் மதிப்பு உயர்கிறது. அதாவது ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி அந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்தும் வகையில் மாதந்தோறும் 8500 கோடி டாலர் கடன் பத்திரங்களை வாங்குகிறது. இதனால் அந்த நாட்டில் பணப் புழக்கம் அதிகமாக உள்ளது. எனவே, அன்னிய நிதி நிறுவனங்கள் இந்த நிதியை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்கின்றன.
இந்நிலையில், அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நிலையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி கடன் பத்திரங்கள் வாங்குவதை குறைக்கும். அப்போது, அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் முதலீட்டை விலக்கும். ஆக, இந்தியாவில் இருந்து அதிகளவு டாலர் வெளியேறுவதால் இங்கு இறக்குமதிக்கு டாலர் தேவை அதிகரித்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிகிறது.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு 5 சதவீதமாகத்தான் இருக்கிறது. அந்த நிலையிலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. சர்வதேச அளவில் பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் டாலரில்தான் மேற்கொள்ளப்படுவதே இதற்கு காரணம்.
 நிலக்கரி: கொள்ளையா? கொள்கை முடிவா?
ஆதர்ஷ் ஊழல்... ஸ்பெக்ட்ரம் ஊழல் வரிசையில் வந்தது நிலக்கரி சுரங்க ஊழல். இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழல்களின் மகாராணி நிலக்கரி ஊழலை சர்வதேச ஊடகங்கள் வர்ணித்தன. மக்களுக்கான கனிம வளங்களையும், சேவை நிறுவனங்களாக இயங்க வேண்டிய பொதுத்துறை நிறுவனங்களையும் தரகு முதலாளிகளின் ஏகபோக உரிமையாக மாற்றும்  தனியார்மயக் கொள்கையின் புதிய வாரிசாக வந்து உதித்தது தான் நிலக்கரி சுரங்க ஊழல்.
2004-ம் ஆண்டே நிலக்கரி சுரங்க ஊழலுக்கான வித்து நடப்பட்டு விட்டது. அப்போது தொடங்கி 2009-ம் ஆண்டு வரை கோல் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி வயல்களை மன்மோகன் சிங் அரசு தனியார் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு வாரி வழங்கியது. சந்தடி சத்தமில்லாமல் மன்மோகன் சிங் அரசு நடத்திய இந்தப் பந்தியில், ஜிண்டாலும் அகர்வாலும், டாடாக்களும் பிர்லாக்களும்,  எஸ்ஸார் குழுமமும் அதானியும் உண்டு கொழுத்தனர். மொத்தம் மத்திய அரசின் கைவசம் இருந்த நிலக்கரி வயல்களில் 3316.9 கோடி டன் நிலக்கரி இருப்பு இருந்தது.
இதைக் கொண்டு, ஒரு நாளைக்கு 1,50,000 மெகாவாட் வீதம் (இந்தியாவின் மின்சார உற்பத்தி) அடுத்த 50 ஆண்டுகளுக்கு அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதை சரி பாதியாக பிரித்து 1700 கோடி டன் நிலக்கரி இருப்பு கொண்ட வயல்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், 1616.9 கோடி டன் நிலக்கரி வயல்கள் மத்திய மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டது.
உலகச்சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.14,000. பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் மூலம் மானிய விலையில் விற்கப்படுவதால் இந்தியச் சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை மேற்கூறிய காலகட்டத்தில் ரூ.2000 முதல் ரூ. 2500 வரையே இருந்தது. அதாவது, நாட்டின் இயற்கை வளத்தை ஒரு டன் ஐம்பதுக்கும் நூறுக்கும் என்ற ரீதியில் தள்ளிவிட்டது மன்மோகன்சிங் அரசு. மார்ச் 2011 நிலவரப்படி நிலக்கரியின் இந்தியச் சந்தை விலையை வைத்துக் கணக்கிட்டாலே அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 10.67 இலட்சம் கோடி ரூபாய் என்று துல்லியமாக கணக்குச் சொன்னது மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை.
அதேசமயம் நிலக்கரி வயல்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிய ம.பி. மாநிலத்திலுள்ள பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 25 கோடி டன் நிலக்கரியை கள்ளச்சந்தையில் விற்று ரூ.4000 கோடி இலாபமடைந் துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தின் நிலக்கரித் தேவை 50 இலட்சம் டன்; ஆனால் இந்நிறுவனத்துக்கு 96.3 கோடி டன் நிலக்கரி இருப்புள்ள சுரங்கங்கள் தரப்பட்டுள்ளன. ஒரிசாவின் நவபாரத் நிறுவனம் 1,050 மெகாவாட் அனல்மின் நிலையத்திற்கென வாங்கிய நிலக்கரிச் சுரங்கத்தை எஸ்ஸார் குழுமத்திற்கு 200 கோடி ரூபாய்க்கு விற்று இலாபம் சம்பாதித்துள்ளது.
இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. வயல்களைப் பெற்ற 90% நிறுவனங்கள் ஒரு கிராம் நிலக்கரியைக் கூட எடுக்கவில்லை. நிலக்கரி விலை உயரும்போது நல்ல விலைக்கு விற்பதற்காக ரியல் எஸ்டேட்டுகளைப் போல போட்டு வைத்திருக்கிறார்கள். வேறு சிலர், சுரங்கம் தோண்டும் நிறுவனங்களுக்கு வயல்களை ஏலம் விட்டு, ஆயிரக்கணக்கான கோடிகளைச் சுருட்டியிருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கும் நாம் அட்சர சுத்தமாக மாட்டிக் கொள்வோம் என்று நினைத்திராத மத்திய அரசு அதன்பின் நடத்திய காமெடிகளை தனித் தொகுப்பாகவே வெளியிடலாம். முதலில் சி.ஏ.ஜி. பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டு, தனது கருத்தை சி.ஏ.ஜி. மாற்றிக் கொண்டுவிட்டதாகப்  பிரச்சாரம் செய்தது பிரதமர் அலுவலகம். அடுத்த நாள் சி.ஏ.ஜி.யின் முழுக் கடிதத்தை ஊடகங்கள் வெளியிட்டன. முறையான ஏலம்  கடைப்பிடிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள 10.67 இலட்சம் கோடி  இழப்பை, அரசுக்கு ஏற்பட்ட 'நட்டம்’ என்று அழைப்பதா அல்லது, 'மனமறியாமல் தரப்பட்ட ஆதாயம்’ என்று அழைப்பதா என்ற முடிவுக்கு அவர்கள் வரவில்லை என்பதுதான் சி.ஏ.ஜி. யின் கடிதம் தெரிவித்த கருத்து.
இதையடுத்து, நிலக்கரி சுரங்க ஊழலை விசாரிக்க மத்திய கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி) மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனத்தைக் (சி.பி.ஐ) அமைத்தது. இந்த உத்தரவைப் பிறப்பித்தவர் யார் என்று பார்த்தால், மத்திய கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமார். 2006இல் நிலக்கரி அமைச்சகத்தின் சிறப்புச் செயலராக இருந்து, 15 நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்தவர் அவர். இதை மன்மோகன் சிங் அரசாங்கம் வசதியாக மறைத்தது. அதன்பிறகு சி.பி.ஐ. சில கோப்புகளை பிரதமர் அலுவலகத்திடம் இருந்து கேட்டபோது, அவை தொலைந்து போய்விட்டன என்று பிரதமர் அலுவலகம் பதில் சொன்னது. அப்போதுதான் நாடே சிரிப்பாய் சிரித்தது.
நாடாளுமன்றம் எதிர்கட்சிகளின் அமளியால் அல்லோலகல்லோலப்பட்டது. அதன்பிறகு இது பற்றி ஒரு வழியாய் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பித்த பிரதமர் மன்மோகன்சிங், கோப்புகள் காணமல் போகவில்லை. இங்குதான் இருக்கின்றன. அவற்றை தேட முடியவில்லை என்று ஏதோதோ உளறிக் கொட்டினார். ஒரு வழியாக சி.பி.ஐ. கேட்ட கோப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையே இந்தப்பிரச்சினையில் கைதான முன்னாள் நிலக்கரித்துறை செயலர் பி.சி. பரேக், தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.
அப்போது ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பி.சி.பரேக், நாங்கள் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை செயல்படுத்தும் அதிகாரிகள் மட்டுமே. இதில் நாங்கள் குற்றவாளிகள் என்றால், இந்தக் கொள்கையை வடிவமைத்து எங்களை செயல்படுத்த தூண்டிய பிரதமரும், அவருடைய அமைச்சரவை சகாக்களும் குற்றவாளிகள் தான். அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் விசாரிக்க வேண்டும் என்று கூறி மன்மோகன் சிங் வயிற்றில் புளியைக் கரைத்தார்.
ஆனால், கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத மன்மோகன் சிங், சி.பி.ஐ. விசாரணையை தராளமாக சந்திக்கிறேன் என்று பதில் சொன்னார். மன்மோகன்சிங்கை விசாரிக்கலாமா வேண்டாமா என்ற விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்றது. அந்தப் பதவிக்கான கண்ணியத்தை கருத்தில் கொண்டோ என்னவோ உச்ச நீதிமன்றம் கடந்த பிரதமருக்கு விசாரணையில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.
நவம்பர் மாதம் சி.பி.ஐ நடத்திய கருத்தரங்கில் பேசிய பிரதமர் கொள்கை முடிவுகளை ஊழல்கள் போல கருதக் கூடாது என்று புது விளக்கம் கொடுத்தார்.
ஐ.பி.எல். சூதாட்டம்
இந்தியாவை மட்டும் அல்ல உலக கிரிக்கெட் ரசிகர்களையே திரும்பிப் பார்க்க வைத்தது இந்தியா வில் நடந்த 2020 ஐ.பி.எல் கிரிகெட் போட்டிகள். இந்த ஆண்டு ஐந்தாவது வருடமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னை, மும்பை, டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் பேட்டிகள் நடைபெற்றது. இதில், சில கிரிகெட் வீரர்களே சூதாட்டத்தில் ஈடுபட்டு தெரியவந்தது தான் இந்த ஆண்டு அதிர்ச்சி ஹைலைட்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கடந்த மே மாதம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் மற்றும் சில புரோக்கர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்து, நிறுபிக்கப்பட்டது. கிரிகெட் வீரர்கள் உட்பட பல புக்கிகளும் இதில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் மற்றோரு முகம் இந்த ஆண்டும் வெளிவந்தி​ருக்கிறது.
பெட்டிங் கம்பெனி, அதற்குக் கீழ் புக்கிகள், அவர்களுக்குக் கீழ் ஏஜென்ட்கள் என்று செயல்படுகிறார்கள் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். வீரர்களின் இந்த சூதாட்ட பேரம் இந்தியா பாராளு மன்றம் உட்பட பல இடங்களிலும் பலத்த சர்ச்சை கிளம்பியது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சூதாட்ட புகார் குறித்து ஐ.பி.எல்.நிர்வாக குழுவும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் அவசர ஆலோசனை நடத்தி, ஸ்ரீ சாந்த், ராஜஸ்தான் ராயல் அணி வீரர் அங்கீத் சவானும் கிரிக்கெட் போட்டி களில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ராஜஸ்தான் அணி வீரர் அமித் சிங்கிற்கு 5 வருடங்கள் தடையும், சித்தார்த் திரிவேதிக்கு ஒரு வருடமும் தடை விதித்து நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரியும், பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் மீது பந்தயம் கட்டியதாகவும் மோசடி செய்த தாகவும் குற்றம் எழுப்பப்பட்டு இருக்கிறது. இதனால், ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பணியாற்றத் தகுதி அற்றவர், எனவே பி.சி.சி.ஐ., தேர்த லுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி பிகார் கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன் றத்தை அணுகியது. அதில் எந்த பயனும் இல்லை. அவர், மேல் முறையீடு செய்து செப்ட்டம்பர் 29ம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக மீண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.ஸ்ரீநிவாசன் போட்டி யின்றி மீண்டும் தேர்தெடுக்கப்பட்டார்.
சூதாட்டப் புகாரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த ஆண்டு.
 உத்தரகாண்ட் நிலச் சரிவு
இந்த ஆண்டின் மாபெரும் துயரமாக மாறியிருக்கிறது உத்தர காண்ட் வெள்ளப் பேரழிவு. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை யின் திடீர் சீற்றத்தால் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜூன் மாதம் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 5700க்கும்  மேற்பட்ட மக்கள் பலியாகினர். குறிப்பாக பத்ரிநாத், கேதார் நாத் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக் கானோர் உயிரிழந்தனர். முழுக்க மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில் சூழ்ந்த உத்தரகாண்ட் மா நிலத்தில்தான் ரிஷிகேஷ், ஹரித்வார், கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் போன்ற இந்துக்களின் புனிதத் தலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் தொடங்கும் 'ஆதி சங்கர ஜெயந்தி’ விழாவைக் கொண்டாட, இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவார்கள். அவர்களும் இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கிதவித்தனர்.
உத்திரகாண்ட்டில் நிலச்சரிவு காரணமாக சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சுமார் ஆயிரம் பாலங்கள் உடைந்து நொறுங்கி 200க்கும் அதிகமான கிராமங்கள் துண்டிக் கப்பட்டன. கங்கோத்ரி, யமுனோத்ரிக்கு ஆன்மீகப் பயணம் சென்ற சுமார் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் உத்தரகாண்ட் மா நிலத்தில் தவிப்புக்குள்ளாகி பின்னர் ராணுவத்தால் பத்திரமாக மீட்டனர். உத்தரகாண்ட்டில் உள்ள உத்ரகாசி, தெக்ரி, அரித்துவார், டேராடூன் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. அரியானா மாநிலத்திலும் பல ஊர்கள் மழை வெள்ளத்தில் மிதந்தன.
அந்த மாநிலத்தில் உள்ள யமுனா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் பல இடங்களில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. யமுனா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட தால் லபரா என்ற கிராமமே நீரில் மூழ்கியது. அந்த கிராமத்தை இணைக்கும் சுமார் 2 கிலோ மீட்டர் சாலையை மழை வெள்ளம் அரித்து கொண்டு சென்றது. அங்கு ராணுவ வீரர்கள் மீட்பு பணிக்கு அனுப்பப்பட்டு அங்கு வசித்த மக்களை பத்திரமாக பின்னர் மீட்டனர்.
இதுதவிர கங்கை கரையோரம் இருந்த பல மாடி கட்டிடங்கள் வெள்ள அரிப்பில் சிக்கி இடிந்து விழுந்தன. ஜங்கிள்சாட்டி, ராம்படா, கவுரிகான் மற்றும் பீம்பாலி பகுதியில் பல மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உத்தரகாண்டில் ராணுவம், துணை ராணுவம், எல்லையோரப் பாதுகாப்புப் படை, விமானப் படை, பேரிடர் மீட்புக் குழு என சுமார் 8,500 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன. 40 ஹெலிகாப்டர்கள் இந்த மீட்பு பணியில் பயன்படுத்தபட்டன. இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய மீட்புப் பணி இதுதான் என்கிறது ராணுவம். எனினும், ராணுவத்தாலும் சென்று சேர முடியாத அளவுக்குக் கிராமங்கள் துண்டாடப்பட்டன. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இந்தப் பகுதியில் ஏராளமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்றபோதிலும், இந்த முறை மொத்த ஊரையுமே இழுத்துச் சரித்துவிட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக 24 ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளில் 10 பெரிய நீர் மின் நிலையங்களும், 100க்கும் அதிக மான சிறிய நீர் மின் நிலையங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இவை ஆற்றின் போக்கையே திசை திருப்புகின்றன. இதனாலும் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று அம்மாநில அரசு தெரிவித்து இருக் கிறது.
இன்னொரு பக்கம் புவியியல் ரீதியாகவே உத்தரகாண்ட் பலவீனமாக இருக்கிறது. அலக்நந்தா நதியின் கோமுக் என்ற இடத்தில் இருந்து உத்தர்காசி வரையிலான 130 கி.மீ. தூரத்தில்தான் அடிக்கடி நிலச் சரிவும், வெள்ளப் பாதிப்பும் நிகழ்கின்றன. தேசிய கங்கை நதிப் பாசன ஆணையம், இந்தப் பகுதி யைப் 'புவியியல் முக்கியத் துவம் வாய்ந்த பகுதி’யாக அறிவித்தது. ஆனால், உத்தரகாண்ட் அரசு இதை ஏற்றுக்கொள்ளவில்லை. வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கும் என மறுத்துவிட்டனர். இப்போது விபத்து நடந்திருக்கும் பகுதிகள் பலவும் அபாயகரமானவை என்று 2001ம் ஆண்டே மத்திய அரசு உத்திரகாண்ட் அரசிற்கு அறிக்கை அளித்திருந்தது. அதற்கான பாதுகாப்புத் திட்டங் களும் அப்போதே வரையறுக்கப் பட்டுவிட்டன. அதைச் செயல்படுத்த அரசு தவறிவிட்டதால்தான் இவ்வளவு பேரழிவு என்றும் சொல் கிறார்கள்.
உத்தரகாண்டில் இயற்கையின் இந்த ருத்ரதாண்டவத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் மீண்டு வர, இன்னும் 10 ஆண்டுகளாவது ஆகும் என்கிறார்கள் நிபுணர்கள்.
 இந்திய சினிமா நூற்றாண்டு விழா
இந்தியாவின் முதல் திரைப்படமான’ராஜா ஹரிசந்திரா’வை 1913ல் இயக்கி வெளியிட்டார் தாதாசாகேப் பால்கே. அன்று பயணத்தை துவங்கிய இந்திய சினிமாவின் வயது தற்பொழுது 100 ஆகிவிட்டது. ஊமைப்படங்களாக பயணத்தை தொடங்கி இந்திய சினிமா பேசும் படம், வண்ணப்படம் என பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை பெற்று இன்று தொழில் நுட்பத்தால் புகழின் உச்சியில் இருக்கிறது. 
 நூறு ஆண்டுகள் கடந்து விட்டதை முன்னிட்டு தமிழக அரசும், தென்னிந்திய சினிமா வர்த்தக சபையும் இணைந்து பிரமாண்டமாக நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னையில் கோலாகலமாக கொண்டாடியது.
விழாவையட்டி ஒரு வாரம் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பாக 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்தது. சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இந்த விழா. விழாவையட்டி சென்னை தியேட்டர்களில் சில தென்னிந்திய மொழித் சினிமாக்கள் திரையிடப்பட்டன.
விழாவின் நிறைவு நாளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கவர்னர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் திரையுலகம் சார்பாக ரஜினி, கமல் முதல் பல முன்னனி நடிகர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து 59 திரைக் கலைஞர் களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. 
'பராசக்தி’, 'மனோகரா’ படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தன் இருப்பை அழுத்தமாகப் பதித்திருக்கும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, விழாவுக்கு முந்தைய நாள்தான் அழைப்பிதழே சேர்ப்பிக்கப்பட்டது. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜய காந்துக்கோ, அழைப்பே இல்லை. பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் உட்பட பலருக்கு அழைப்பிதழே அனுப்படபடவில்லை.
பல குழப்பக் குளறுபடிகளுக்கு இடையில் அரங்கேறியது 'சினிமா 100’ விழா. தமிழக அரசுடன் இணைந்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்திய இந்த நிகழ்ச்சி, முழுக்க முழுக்க ஆளும்கட்சியினரைத் திருப்திப்படுத்தும் நோக்கத்திலேயே நிகழ்ந்து முடிந்ததாக குற்றசாட்டுகளும் இருக்கிறது இந்த 'சினிமா 100’ விழாவில்.
இந்தியாவின் மார்ஸ் மிஷன்-மங்கள்யான்
சூரியனைச் சுற்றிவரும் மூன்றா வது கிரகம், பூமி. நான்காவது கிரகம், செவ்வாய். ஆங்கிலத்தில் 'மார்ஸ்’ என்றால் போர்க் கடவுள் என்று பொருள். யுத்தம், கோபம், ரத்தம் இவற்றின் குறியீடாக விளங்கும் செந்நிறத்தில் தகதகக்கும் கிரகத்துக்கு, பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே நம் புராணங்கள் அங்காரகன், செம்மீன், செவ்வாய் என்று பெயர் சூட்டிவிட்டன!
இந்த செவ்வாய் கிரகத்தை நோக்கிய ஒரு சாதனைப் பயணத்தை ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத் திலிருந்து, இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் நவம்பர்- 5ம் தேதி துவங்கியது. புறப்படத் தயார் நிலையில் காத்திருக்கிறது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ணிஷிகி (ஃப்ரான் ஸைத் தலைமையாகக்கொண்ட 13 ஐரோப்பிய நாடுகள்), ஜப்பான், சீனா... ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியுள்ளன. இவற்றில் ஜப்பானும் சீனாவும் தோல்வி அடைந்துவிட்டன. எனவே, இந்தியா செவ்வாய்க்கு அனுப்பும் விண்கலத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால், வெற்றிபெற்ற நான்காவது நாடு என்ற பெருமையும், ஆசியாவின் முதல் வெற்றி நாடு என்ற பெருமையும் கிடைக்கும்!
பூமிக்கும் செவ்வாய்க்கும் நிறைய ஒற்றுமைகள்...
பூமி ஒருமுறை தன்னைத் தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் பிடிக்கும்; செவ்வாய்க்கு 24 மணி நேரமும் 37 நிமிடங்களும் பிடிக்கும். பூமி, தன் சுற்றுப்பாதையில் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் ஆகும்; செவ்வாய்க்கு 687 நாட்கள் தேவைப்படும். 
பிரம்மாண்ட ஆழமும் அகலமும் கொண்ட பள்ளத்தாக்குகள், எரி மலைகள் பூமியில் இருப்பதைப் போல செவ்வாயிலும் உண்டு. செவ்வாயில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கின் ஆழம் 7 கி.மீ., அகலம் 4,000 கி.மீ.; பூமியின் மிகப் பெரிய பள்ளத்தாக்கின் ஆழம் 1.8 கி.மீ., நீளம் 400 கி.மீ. (அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கன்யான்). செவ்வாயில் இருக்கும் மிகப் பெரிய எரிமலையின் உயரம் 26 கி.மீ., இதன் விட்டம் 602 கி.மீ; பூமியில் உள்ள மிகப் பெரிய எரிமலையின் உயரம் 10.1 கி.மீ., விட்டம் 121 கி.மீ.
செவ்வாய் கிரகத்தின் பரப்பில் கரியமில வாயு 97 சதவிகிதம், பிராண வாயு 0.13 சதவிகிதம் என்ற அளவில் உள்ளன. பூமியில் நைட்ரஜன் 77 சதவிகிதமும் பிராண வாயு 21 சதவிகிதமும் உள்ளன.
2008-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து 'சந்திராயன்-1’ அனுப்பப்பட்டதற்கு பிறகு, அடுத்த சாதனைப் பயணத்துக்கு 'இஸ்ரோ’ தயார். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரம் 3,850 லட்சம் கி.மீ. இந்தத் தூரத்தை இந்திய விண்கலம் கடந்து செவ்வாய் சுற்றுப்பாதையை அடைய சுமார்
10 மாதங்கள் பிடிக்கும். 2013-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி பி.எஸ்.எல்.வி.: சி-25 ராக்கெட்டை ஏவுவதற் கான 56 மணி நேர கவுன்ட் டவுன் நவம்பர் 3-ம் தேதி காலை தொடங்கியது. நவம்பர் 5-ம் தேதி பயணத்தைத் தொடங்கிய இது, 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி அதிகாலை 4.27 மணிக்கு செவ்வாய்க்குப் போய்ச் சேருமாம். எவ்வளவு வியப்பூட்டும், துல்லிய மானத் தகவல்!
எம்.ஓ.எம். ('மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்’) என்ற இந்தத் திட்டத்தின் பட்ஜெட், ரூ.450 கோடி. 1,350 கிலோ எடைகொண்ட இந்த விண்கலம் ஒரே வருடத்தில் தயாரிக்கப்பட்டது.
பெங்களூரூவில் உள்ள 'இஸ்ரோ’ மையத்தின் திட்ட இயக்குநரான சுப்பையா அருணன், ஒரு தமிழர். ''இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி யின் உச்சம் இது. செவ்வாய் கிரகத் தில், உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்று ஆராய்வ தும், அந்தக் கிரகத்தின் சுற்றுச்சூழலை ஆராய்வதுமே நமது நோக்கங்கள். இவற்றுக்கு மேலாக, கிரகம்விட்டு கிரகம் பயணிக்க இந்தியா எடுக்கும் முயற்சிக்கு இந்தப் பயணம்தான் ஒரு வழிகாட்டியாக இருக்கும். 
அக்டோபர் 2-ம் தேதி அதிகாலை, பெங்களூரூ 'இஸ்ரோ’விலிருந்து பலத்த பாதுகாப்புடன், விண்கலம் சாலை வழியாக தன் முதல் பயணத் தைத் தொடங்கியது. 345 கி.மீ. தொலைவில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு, மணிக்கு சுமார் 10 கி.மீ. வேகத்தில் அது பயணித்துப்  பத்திரமாக வந்து சேர்ந்தது. சாலை வழியாக 10 கி.மீ. வேகத்தில் பயணம் செய்த விண் கலம், விண்வெளியில் மணிக்கு 25,000 கி.மீ. வேகத்தில் பறக்க இருக்கிறது!
நாம் அனுப்பும் விண்கலம் செவ்வாயில் தரை இறங்கப்போவது இல்லை. செவ்வாயின் சுற்றுப் பாதையில் சுற்றி வரப்போகிறது. இது ஒரு தொழில்நுட்ப சோதனைத் திட்டமே தவிர, அறிவியல் ஆராய்ச்சித் திட்டம் அல்ல. கிரகம் விட்டு கிரகம் பயணிக்கும் சாத்தியக் கூறு நம்மிடம் இருப்பதை உறுதிசெய்யும் திட்டம். பல்வேறு விதமான நோக்கங்களுடன் ஐந்து முக்கியக் கருவிகளை இந்த விண்கலத்தில் பொருத்தியுள்ளோம்.
பூமியில் இருக்கும் நமக்கு, ஒரு சந்திரன்தான் உபகிரகமாக உள்ளது. ஆனால், செவ்வாய்க்கு இரண்டு உபகிரகங்கள். இந்தியா அனுப்ப உள்ள விண்கலத்தில் பொருத்தப் பட்டுள்ள கருவி மூலம், செவ்வாயி லிருந்து தரையையும் உப கிரகங் களையும் கண்காணித்து, உயிரினம் வாழத் தேவையான மீத்தேன் வாயு, தாதுக்கள், நீர் போன்றவை இருக் கின்றனவா என்று விண்கலத்தில் இணைத்து அனுப்பப்படும் கருவிகள் சொல்லும்.
விண்கலத்தின் எடை 1,350 கிலோ என்றாலும், அதனுள் 852 கிலோ எரிபொருள் அடங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து புறப்படவுள்ள விண்கலத்தை ஏற்றிச் செல்ல பி.எஸ்.எல்.வி. சி 25 என்ற ராக்கெட், நான்கு எரிபொருள் நிலைகளுடன் தயார். இது இந்தியாவின் சில்வர் ஜூப்ளி ராக்கெட்!'' என்று பெருமிதமாகச் சொல்கிறார் சுப்பையா அருணன்.
செவ்வாய் கிரகத்தை ஆராய, அட்லஸ் மற்றும் டைட்டன்ஸ் எனும் மிகப் பெரிய, ஏராள பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட, ராக்கெட்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. அவற்றை ஒப்பிடுகையில் குறைந்த செலவிலான இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டைப் பயன் படுத்துவது இந்திய விண்வெளி ஆய்வுச் சிறப்புகளில் ஒன்று. பூமியின் ஈர்ப்பு சக்தி முடிவுபெறும் இடத்தை அடைய 9,18,347 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். 'இஸ்ரோ’ செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் விண்கலத்தில் மிகக் குறைவான எரிபொருளையே பயன்படுத்தி இந்தச் சாதனையைச் செய்திருக்கிறது.
''ஒருகாலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. காலக்கிரமத்தில் சுற்றுச்சூழல் மாசுபட்டு, அங்கு உயிரினம் வாழமுடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது. பூமியிலும் நாம் பல தவறுகளைச் செய்து வருகிறோம். தூய்மையான நீர், கழிவு நீரால் அசுத்தமாகி வருகிறது. சுவாசிக்கும் பிராண வாயு, நச்சுப்புகையால் மாசுபடுகிறது. ஓஸோன் மண்டலம் பழுதுபட்டு வருகிறது. சுனாமி, புயல் போன்றவை பூமியில் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளன. இப்படி பூமியை நாம் பாழ்படுத்திவருகிறோம். ஓர் அனுமானத்தில் நாம் மேற்கொள்ளும் செவ்வாய் கிரக ஆராய்ச்சி, பூமிக் கிரகத்தை அழிவில் இருந்து பாதுகாக்க வழிகாட்டலாம்!'' என்கிறார் விஞ்ஞானி சுப்பையா அருணன். 
'நவம்பர் 5’ என்று நாள் குறித்ததில் ஒரு நுட்பம் இருக்கிறது. இந்த நாளில் இந்தியாவைவிட்டு விண்கலம் புறப்பட்டால்தான் அது பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, செவ்வாயின் ஈர்ப்பு விசையில் செலுத்தப்பட்டு, செவ்வாயின் சுற்றுப்பாதையைச் சரியாக அடைய முடியுமாம். சூரியன், பூமி, செவ்வாய் மூன்றும் 44 டிகிரியில் ஒன்றுசேருதல் (மிகக் குறைந்த எரிபொருள் செலவில்) சாத்தியமாவது அக்டோபர் 28 முதல் நவம்பர் 15 வரைதானாம். நவம்பர் 5 அன்று மங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பு ம் திட்டத்தின் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை ஒட்டிய கோதைச்சேரி கிராமத்தில் பிறந்தவர்.
வந்தது தீர்ப்பு: போனது பதவி

குற்ற வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டணை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருக்க மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வர முயற்சித்தது.
ஆனால் கடும் எதிர்ப்பின் காரண மாக இச்சட்டம் கொண்டு வரப்பட வில்லை. இந்த தீர்ப்பின் உத்தரவுக்குப் பிறகு தண்டனை பெற்ற எம்.பி-க் களின் பதவிகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த பதவி பறிப்பில் லாலு பிரசாத்துவுடன் சேர்ந்து மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கி, ஜனதா தள கட்சி எம்.பி ஜெகதீஷ் சர்மாவின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கு விசாரணை கடந்த 1996ல் சிபிஐ தொடங்கியது. வழக்கில் லாலு பிரசாத், பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன்னாத் மிஸ்ரா உள்பட 44 பேர்கள் குற்றவாளி என்று ராஞ்சியில் உள்ள சிபிஐ கோர்ட் நீதிபதி பிரவாஸ்குமார் தீர்ப்பளித்தார். இதில் லாலுவிற்கு 5 ஆண்டுகளும், ஜெகதீஷ் சர்மாவிற்கு 4 ஆண்டுகளும் தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து மாநில தேர்தல்கள் ஒரு முன்னோட்டம்
அந்த ஐந்து மாநிலங்களிலும் முக்கியமானது டெல்லி சட்டமன்றத் தேர்தல். செங்கோட்டை இருக்கும் ஊரைக் கைப்பற்றினாலே, செங் கோட்டையை நெருங்கிவிட்டதாக அர்த்தம் என்பதால், டெல்லி சட்ட மன்றம் அனைவரின் கவனத்தையும் அதிகமாக ஈர்த்துள்ளது. மூன்றாவது முறையாக டெல்லி முதல்வர் நாற்காலியில் ஷீலா தீக்ஷித் அமர்ந் திருக்கிறார். பொதுவாக யாரையும் தனித்து வளரவிடாத காங்கிரஸ் தலைமை, அவரை மட்டும் அனுமதித்திருப்பதற்கு சோனியாவின் நட்பே காரணம். அமைதியானவர், அடக்கமானவர், சர்ச்சையில் சிக்காதவர் என்ற நல்ல பெயர் ஷீலாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. ஆனால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மோசடிகள் அதை அதளபாதாளத்துக்கு இறக்கிவிட்டன. அந்த மோசடி வர்த்தகத்தின் பின்னால் ஷீலாவின் மகன் இருந்தார் என்பது சிக்கலை இன்னும் அதிகப் படுத்தியது. இந்தக் கால கட்டத்தில் கிளர்ந்தெழுந்த அண்ணா ஹஜாரே, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் டெல்லியை தங்களது போராட்ட மையமாக அமைத்தார்கள். அரசியல் கட்சிகள் மீதான கசப்பால் ஒதுங்கி இருந்த இளைய சமுதாயம், இவர்கள் பின் திரண்டது ஷீலாவை இன்னும் தர்மசங்கடப்படுத்தியது.
ஆனால், 'இதெல்லாம் எம் மாத்திரம்’ என்பதுபோல ஷீலாவுக்கு பெருந்துயரம் கொடுத்த சம்பவம், டெல்லியில் நிகழ்ந்த மருத்துவ மாணவியின் பாலியல் பலாத்காரம். 'பெண்கள் வாழ முடியாத நகரம்’, 'ஒரு பெண் ஆட்சியில் பெண் களுக்கே பாதுகாப்பு இல்லை’ என் றெல்லாம் நடு வீதியில் இறங்கி மாணவ-மாணவியர் போராடியபோது, வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், 'பெண்கள் ஏன் நேரங்கெட்ட நேரத்தில் வேலைக்குப் போகிறார்கள்?’ என்று ஷீலா கேட்டது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் முதல்வர் பதவியைத் தக்கவைக்கப் போராடுகிறார் ஷீலா.
பா.ஜ.க., தனது முதல்வர் வேட்பாளராக ஹர்ஷ வர்தனை அறிவித்துவிட்டது. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை முழுமையாக ஹர்ஷ வர்தன் பிடித்தால், நிச்சயம் ஷீலாவுக்கு சிக்கல்தான். ஆனால், காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் பா.ஜ.க-வுக்கு முழுமையாகப் போய்விடாமல் பிரிக்கும் கட்சியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி’ இருக்கிறது. 'அரவிந்த், அதிக வாக்குகளை வாங்குவது நமக்குத்தான் நல்லது’ என்று நினைக்கிறது காங்கிரஸ். ஆக, தலைநகர் அரசியல் தற்போது தள்ளாட்டத்தில் இருக்கிறது!
டெல்லிக்கு அடுத்த முக்கியத்துவம் மத்தியப் பிரதேசத்துக்கு அளிக்க வேண்டும். இங்கு மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கிறார் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சிவராஜ்சிங் சவுகான்.
அத்வானியின் அசைக்கமுடியாத சிஷ்யர். 'மோடி திறமைசாலி, குஜராத்தை முன்னேற்றியவர். அதனால் அவர் பிரதமர் ஆகலாம்’ என்று ஒரு கோஷ்டி மேளம் கொட்டியபோது, 'சவுகானும் திறமைசாலிதான். அவரும் மத்தியப் பிரதேசத்தை முன்னேற்றியவர். அதனால் அவர் பிரதமர் ஆகலாம்’ என்று கட்சிக் கூட்டத்தில் அத்வானி பேசும் அளவுக்குப் பெயர் வாங்கியவர். ஆனால், 'மோடி என் அண்ணன், அத்வானி என் தலைவர்’ என்று சொல்லித் தப்பித்த சாமர்த்தியசாலி சவுகான்.
எல்லா மாநிலங்களைப் போலவே கனிமவளக் கொள்ளை, சவுகானுக் கும் சிக்கலைக் கொடுத்தது. நரேந்திர குமார் என்கிற ஐ.பி.எஸ்.அதிகாரியை, லாரி ஏற்றிக்கொன்று விட்டுத் தப்பிக்கும் அளவுக்கு கொள்ளை நடக்கும் மாநிலம் அது. இந்தக் கெட்ட பெயர் அனைத்தை யும் 'முதியோர் நலன்’ என்ற அஸ்திரம்கொண்டு வீழ்த்திவிட்டார் சவுகான். ஆண் வாரிசு இல்லாத முதியோருக்கு மாதம் 500 ரூபாய் மாத ஊதியம் கொடுத்தார். மாவட்டம்தோறும் முதியோர் இல்லம் தொடங்கி, இரண்டு வேளை சாப்பாடு போடுகிறார். 60 வயதானவர்களுக்கு தீர்த்த யாத்திரை அறிவித்து, ஹரித்வார், பத்ரிநாத், அமர்நாத்... தொடங்கி ராமேஸ்வரம் வரை அழைத்துச் செல்கிறார். இந்துக்களுக்கு இப்படியென்றால், முஸ்லிம்களுக்கும் அஜ்மீர், கிறிஸ்தவர்களுக்கு வேளாங்கண்ணி, சீக்கியர்களுக்கு அமிர்தசரஸ் என்று 'எம்மதமும் சம்மத’க் கொடி பிடிக்கிறார். இந்தக் 'கடவுளுடன் கூட்டணி’ வியூகத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி திண்டாடுகிறது!
ராஜஸ்தானை, 'மகாராஜாக்களின் மாநிலம்’ என்பார்கள். அதனால்தான் அங்கிருந்து வரும் தகவல்கள் அனைத்தும் மகாராஜா சேட்டைகளாக இருக்கின்றன. மாநிலத்தை இப்போது ஆள்வது காங்கிரஸ். அதன் முதலமைச்சர் அசோக் கெலாட். இவர் மீது    100 பக்கங்களுக்கு ஊழல் புகாரை வெளியிட்டுள்ளார் பாரதிய ஜனதாவின் ஸ்டார் வேட்பாளர் வசுந்தரா ராஜே சிந்தியா. இவர் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர். 'வசுந்தரா 22 ஆயிரம் கோடி முறைகேடு செய்துவிட்டார்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்தான் இந்த அசோக் கெலாட். இப்போது இவர் மீதும் ஊழல் புகார்.
இந்த நிலையில் தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கிக்கொண்டே இருக்கிறார்கள் ஆளும் கட்சிக்காரர்கள். நர்ஸ் ஒருவர் கொலையில் கைதாகி இரண்டு அமைச்சர்கள் சிறையில் இருக்கிறார்கள். உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சரான பாபுலால் நாகர், ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளார். 'அந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர் சொல்வதுமாதிரி எதுவும் செய்யவில்லை’ என்று பாபுலால் சொல்வதை ம.பி. மக்கள் நம்பவில்லை. 'என்னைத் திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி விட்டார்’ என்று எம்.எல்.ஏ-வான உதய்வால் அஞ்சானா மீதும் ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். இப்படி தொடர்ந்து பாலியல் புகார்கள் வர, 'ராஜஸ்தான் மானமே போய்விட்டது’ என்று முதல்வர் அசோக் கெலாட்டே புலம்பும் அளவுக்கு நிலைமை விபரீதம்!
இலவச மருந்து விநியோகத் திட்டம் கொண்டுவந்தவர் கெலாட். குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் அரசு ஊழியர் சம்பளத்தில் பாதியை, அவர்களது மனைவியிடம் கொடுக்கும் சட்டம் கொண்டுவந்து பெண்கள் ஆதரவைப் பெற்றவர். ஆனாலும் சமீபத்திய பாலியல் புகார்கள் அவரை ஆட்டம் காணவைத்துள்ளன!
மத்தியப்பிரதேசத்தில் சவுகான் போல சட்டீஸ்கரில் ராமன்சிங் கொடி பறக்கிறது. பா.ஜ.க-வின் தவிர்க்க முடியாத இன்னொரு சக்தி இவர். 'மத்திய அரசாங்கத்திடம் பல்வேறு முதல்வர்கள் கையேந்தி நிற்பார்கள். ஆனால், ராமன்சிங் அப்படி அல்ல’ என்று நரேந்திர மோடி இவரைக் கொம்பு சீவிவைத்துள்ளார். இருந்தாலும், 'நக்சலைட் வேட்டை’ என்ற பெயரால் மலை இன மக்களை ராணுவமும் போலீஸும் வேட்டையாடிவருவது ராமன்சிங் பதவிக்கு சிக்கல் கொடுத்துள்ளது. இந்தியாவின் கனிம வளத்தில் 40 சதவிகிதமும், எஃகு உற்பத்தியில் 25 சதவிகிதமும் உள்ள மாநிலம் இது. அதனால் பன்னாட்டு நிறுவனங் கள் சட்டீஸ்கரைக் குறிவைக்கின்றன. இந்த இடங்களைத் தாரைவார்க்க மலை இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அந்த நிறுவனங் களை எதிர்த்துப் போராடும் மாவோயிஸ்ட், நக்சலைட் அமைப்பு களுக்கு, மக்கள் முழுமையான ஆதரவைத் தருகிறார்கள். மலை இன மக்களிலேயே ஒரு பிரிவினரைப் பிரித்து அந்த மக்களோடு போலீஸும் அரசாங்கமும் மோதவிடுவது மா நிலம் எங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஏதோ மத்திய அரசு எடுப்பதாகவும், தனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்பதுபோலவும் ராமன்சிங் காட்டிக்கொள்கிறார். 'நக்சல் பகுதிகளில் ராணுவம் குவிக்கிறார்கள். ராணுவம் குவிப்பது தேவையில்லாத ஒன்று. இது ஒன்றும் போர்க்களம் அல்ல’ என்று ராமன்சிங் சொல் கிறார். ஆனால், இந்த அச்சுறுத்தல்களைச் செய்வதே அவர்தான் என்று மக்கள் சொல்கிறார்கள். மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40-ல் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்க இருப்பது இந்த விவகாரம்தான்!
மிசோரம் எப்போதும் காங்கிரஸின் கோட்டை. அங்கு தொடர்ந்து அந்தக் கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது. கிறிஸ்தவ மக்களே அதிகம் வாழும் இந்த மாநிலத்தில் முதல்வராக இருக்கிறார் லால்தன் ஹவ்லா. மொத்தமுள்ள 40 இடங்களில் 32 தொகுதிகள் காங்கிரஸ் வசம். அந்தளவுக்கு இவர்களுக்குச் செல்வாக்கு. இங்கு பா.ஜ.க.-வுக்குச் செல்வாக்கே இல்லை. மிசோரம் தேசிய முன்னணிக்கு பரவாயில்லாத செல் வாக்கு இருக்கிறது. கிறிஸ்தவர்கள் மாநாடு ஒன்று நடக்க இருக்கிறது என்று சொல்லி, தேர்தல் தேதியையே மாற்றி அமைக்கும் அளவுக்கு  அந்த மதத்துக்கு அங்கே முக்கியத்துவம் உண்டு. தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் விலைவாசி உயர்வு, உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. ஆனாலும், மாற்று அரசியல் கட்சிகள் இல்லாததால்... காங்கிரஸ் கோட்டையாகவே தொடர்கிறது மிசோரம்!

No comments:

Post a Comment