Friday 24 January 2014

இந்திய மாநிலங்கள்- 1

இந்திய மாநிலங்கள்- 1
Posted Date : 11:12 (13/12/2013)Last updated : 17:12 (14/12/2013)
 - பா. பிரசன்ன குமார் - கு. தண்டபாணி
இந்திய மாநிலங்கள் உருவான கதை
ந்திய ஆட்சி அமைப்பு மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகள் (யூனியன் பிரதேசங்கள்), தேசியத் தலைநகர்ப் பகுதி ஆகிய மூன்று நிலப்பரப்புகளாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி இந்திய நிலப்பகுதிகளை தங்களது ஆளுமைக்கு கீழ்க்கொண்டுவர ஆரம்பித்தபோது , இந்திய நிலப்பரப்பு  565 சிற்றரசுகளாக இயங்கி வந்தன.
1857ஆம் ஆண்டு,முதல் விடுதலைப் போருக்குப் பிறகு, 1858ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் பேரரசி விக்டோரியா, கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்த இந்திய ஆட்சிப் பகுதிகளை, நேரடியாகத் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.
ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானம், மைசூர், திருவாங்கூர்கொச்சி சமஸ்தானம், புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகியவை ஆங்கில அரசின் நேரடி ஆதிக்கத்துக்கு உட்படாமல் தனித்தே சட்டங்களை இயற்றி, ஆட்சி நடத்தி வந்தார்கள்.ஆங்கில அரசுக்கு வரி கட்டி வந்தார்கள்.
புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலும், கோவா, டையூ  டாமன், தாத்ரா நாகர் ஹவேலி உள்ளிட்ட சில பகுதிகள் போர்ச்சுகல் ஆதிக்கத்திலும் இருந்து வந்தன.
பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள்,  மன்னர்கள் ஆண்ட குறுநில சாம்ராஜ்யங்கள் என இரு வேறு நிர்வாகப் பகுதிகளாக பிளவுபட்டுக் கிடந்த இந்திய நிலப்பகுதியை ஒன்றுபடுத்தும்  பெரும் சவாலை நிறைவேற்றியவர் இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல்.
1947 இந்திய விடுதலை மற்றும் இந்திய பிரிவினைக்கு பிறகு ஹைதராபாத் நிஜாம், திருவாங்கூர் மகாராஜா தங்களுடைய ஆட்சிப் பகுதிகளை பாகிஸ்தானோடு இணைக்கப் போவதாக அறிவித்தனர்.
வட இந்தியாவிலும் பல சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடு சேரப் போவதாகவும், ஒரு சில தொடர்ந்து தனித்து இயங்கப் போவதாகவும் அறிவித்தன.
காஷ்மீர் தனித்து இயங்க முற்பட்ட போது, பாகிஸ்தான் கைப்பற்ற முயன்றது. மன்னர் ஹரிசிங், இந்தியப் படைகளின் உதவியை நாடினார். மன்னர்  காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினாலும், மக்கள் அந்த இணைப்பை ஏற்காத நிலையில் காஷ்மீர் இணைக்கப்பட்டது. இன்றும்  மத்திய அரசு கொண்டு வருகின்ற சட்டத் திருத்தங்களை, காஷ்மீர் மாநிலச் சட்டமன்றமும் ஏற்றுக் கொண்டால்தான், அந்தச் சட்டங்கள் அங்கே நடைமுறைப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள், இந்திய அரசமைப்பின் 370வது உறுப்பின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு மொழி வாரியாக மாநிலங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை பல பகுதிகளில் இருந்தும் எழும்பியது. மொழிவாரியாக மாநிலங்களை மாற்றியமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஆய்வு செய்வதற்காக 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஷிரிதார் கமிஷனை மத்திய அரசு அமைத்தது.
தார் கமிஷனின் பரிந்துரைகளை பரிசீலனை செய்ய 1948 ஆம் ஆண்டு ஜெய்பூர் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தின் போது மூன்று உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் மூன்று உறுப்பினர்களின் பெயரால் இக்குழு JVP (ஜவர்ஹர்லால் நேரு. வல்லபாய் படேல், பட்டாபி சித்தராமையா) ஜெவிபி குழு என்று அழைக்கப்பட்டது.
தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலக் கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலு, காலமானதை தொடர்ந்து 1953 ம் ஆண்டு இந்தியாவில் மொழியின் அடிப்படையிலான முதல் மாநிலமாக ஆந்திரப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது.
1953 ம் ஆண்டு அமைக்கப்பட்ட பாஸல் அலி தலைமையிலான மாநிலங்கள் மறுசீரமைப்புக் கமிட்டி நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களை மனதில் கொண்டு பல புதிய மாநிலங்களுக்கு பரிந்துரைத்தது.
ஹரிதயநாத்குன்ஸ்ரு மற்றும் கே.எம். பனிக்கர் ஆகியோர் இக்குழுவின் மற்ற உறுப்பினர்களாவர். 1955ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இக்குழுவின் அறிக்கையின் மொழிவாரி மாநிலங்களை மாற்றியமைக்கும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1955ஆம் ஆண்டு, நேரு அமைத்த மாநிலங்கள் மறு சீரமைப்பு ஆணையம், A,B,C,D என நான்கு பிரிவுகளாக இருந்த இந்திய ஆட்சிப் பகுதிகளை 16மாநிலங்கள், 3 மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகள் என மாற்றியமைக்க அரசுக்கு பரிந்துரைத்தது.
பாஸல் அலி குழுவின்  பரிந்துரைகளை அமலாக்குவதற்காக இந்திய பாராளுமன்றம், மாநில மறுசீரமைப்பு சட்டம், 1956 என்னும் சட்டத்தை இயற்றப்பட்டது. இதன்படி ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், பம்பாய், ஜம்மு-காஷ்மீர், கேரளம், மத்தியப்பிரதேசம், மதராஸ், மைசூர், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் என்னும் 14 மாநிலங்களும்; அந்தமான் நிகோபர், டெல்லி, இலட்சத்தீவுகள், இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா எனும் ஆறு மத்திய ஆட்சிப் பகுதிகளும் உருவாக்கப்பட்டன.
ஹைதராபாத் என்ற தனி மாநிலத்தை அமைக்க வேண்டுமென  மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை.
1956ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி பம்பாய், ஹைதராபாத், மெட்ராஸ் மாகாணங்களின் சில பகுதிகளும்; கூர்க் மற்றும் மைசூர் மாநிலங்கள் முழுமையும் ஒன்றிணைக்கப்பட்டு மைசூர் மாநிலம் உருவாக்கப்பட்டது.
திருவிதாங்கூர் கொச்சி மாநிலத்தின் பெரும்பகுதியை உட்படுத்தி 1956ல் கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது.
1956ஆம் ஆண்டு மே மாதம், பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி இந்திய அரசுடன் இணைக்கப்பட்டு மத்திய ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.
1960 பம்பாய் மறு சீரமைப்புச் சட்டத்தின்படி பம்பாய் மாநிலம் குஜராத். மஹாராஷ்டிரா என்று இரு மொழி அடிப்படையிலான மாநிலங்களாகப் உருவாக்கப்பட்டன.
1961ஆம் ஆண்டு, போர்ச்சுகலின் பிடியில் இருந்து கோவா விடுவிக்கப்பட்டு, இந்தியாவோடு இணைக்கப்பட்டது.
1963ஆம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து 'நாகாலாந்து’ பிரிக்கப்பட்டது.
1966ஆம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலத்தின் கேரோ, காசி மலைப்பகுதிகளைத் தனியாகப் பிரித்து, 'மேகாலயா’ என்ற புதிய மாநிலம் அமைக்கப்பட்டது.
பஞ்சாபி சுபா’ என்ற பஞ்சாப் தனி மாநிலக் கோரிக்கை எழுந்தது
1966 ம் ஆண்டு பஞ்சாப் பகுதிகளில் இருந்து ஹரியானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது.
1971ஆம் ஆண்டு, பஞ்சாப் மாநிலத்தின் மேலும் சில பகுதிகளைத் தனியாகப் பிரித்து ஹிமாச்சல் பிரதேஷ் உருவாக்கப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலத்தின் பகுதிகளைப் பிரித்து மணிப்பூர், திரிபுரா ஆகிய புதிய மாநிலங்கள் அமைக்கப்பட்டன. மேலும் சிக்கிம், அருணாச்சல் பிரதேஷ் ஆகிய மத்திய ஆட்சிப் பகுதிகள் உருவாக்கப்பட்டன.
1975ஆம் ஆண்டு, சிக்கிம், மத்திய ஆட்சிப் பகுதி நிலையிலிருந்து தனி மாநிலம் என்ற தகுதிக்கு உயர்த்தப்பட்டது.
2000ம் ஆண்டு, பீகாரில் இருந்து ஜார்கண்ட், உத்தரப் பிரதேசத்தின் மலை மாவட்டங்களைப் பிரித்து உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசத்தைப் பிரித்து சத்தீஷ்கர் ஆகிய மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, 2013ஜூலை மாதம், ஆந்திர மாநிலத்தின் பத்து மாவட்டங்கள், 17நாடாளுமன்றத் தொகுதிகள், 119சட்டமன்றத் தொகுதிகள் பிரிக்கப்பட்டு , 'தெலுங்கானா’ புதிய மாநிலம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இது இந்தியாவின் 29வது மாநிலமாக அமையவிருக்கிறது.
தனி மாநில கோரிக்கைகள்
உத்தரப் பிரதேச மாநிலத்தை அவாத், பந்தல்காண்ட், பூர்வாஞ்சல், மேற்கு மாநிலம் (பஸ்சிம் பிரதேஷ்) என நான்கு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என, மாயாவதி அரசு, உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மேற்கு மாநிலத்துக்கு, 'ஹரீத் பிரதேஷ்’ எனப் பெயர் சூட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளைப் பிரித்து, 'விதர்பா’ என்ற தனி மாநிலத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக் கொண்டு இருக்கின்றது. அப்பகுதி மக்களைச் சமாதானப்படுத்த, ஆண்டுதோறும் மராட்டிய மாநிலச் சட்டமன்றத்தின் ஒரு கூட்டத் தொடர், விதர்பா பகுதியின் தலைநகரான நாக்பூரில் நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் நேபாளி மக்கள் பெரும்பான்மையாக உள்ள டார்ஜிலிங் பகுதியின் மூன்று மலை மாவட்டங்களைப் பிரித்து, 'கூர்க்காலேண்ட்’ என்ற தனி மாநில கோரிக்கை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அஸ்ஸாம் மாநிலத்தின் போடோ இன மக்கள் வாழும் பகுதிகளைப் பிரித்து, 'போடோலாண்ட்’  என்னும் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment