Saturday 25 January 2014

பல்லுயிர் பரவல் (BIODIVERSITY)

பல்லுயிர் பரவல் (BIODIVERSITY)
Posted Date : 12:12 (13/12/2013)Last updated : 19:12 (14/12/2013)
டாக்டர்  ஙி. காளீஸ்வரன்
பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்விடம் மற்றும் ஒரு வாழ்க்கை முறை உள்ளது. இதில் ஒவ்வொன்றும் மற்றொன்றை ஏதோ ஒரு காரணத்திற்காகச் சார்ந்துள்ளது.
பல்லுயிரிகள் இருந்தால்தான் பூமியில் சமநிலை ஏற்படும். நமக்குத் தேவையான காற்று, உணவு, மருத்துவம் அனைத்துத் தேவைகளுக்கும் பல்லுயிர் பரவல் இன்றியமையாததாகிறது.
பல்லுயிர் பரவல் பலவாறு பிரித்து ஆய்வு செய்யப்படுகிறது உயிரின பல்லுயிர் வகைப்பாடு என்பது இப்புவியில் உள்ள சுற்றுச்சூழலான கடல், நன்னீர் மற்றும் நிலம் ஆகிய வாழிடங்களுக்கு தகுந்தாற்போல தகவமைப்பையும் அதன் செயல்பாடுகளையும் மாற்றிக் கொண்டு பல்வேறுபட்ட மாறுபாடுகளுடன் காணப்படும் உயிரினங்களையும் மற்றும் ஒரே வகைப்பாட்டியலில் உள்ள உயிரினம் இடத்திற்குத் தகுந்தாற்போல மாற்றிக் கொண்டு இருப்பதைக் குறிக்கும்.
வேறு விதமாக பல்லுயிர் பரவல் என்பது உயிர் மூலக்கூறிலிருந்து முழுமை பெற்ற உயிரினத்தையோ, ஒட்டுமொத்த உயிரினத்தையோ (population), ஒரு குறிப்பிட்ட இனத்தையோ (community) குறிக்கும்.
மேலும், பல்லுயிர் பரவல் என்பது சுற்றுச்சூழலையும், உயிரினங்களின் புவியியல் தகவமைப்பையும் மற்றும் உயிர் வளிமண்டலத்தையும் (Biosphere) குறிக்கும்.
இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமேயானால் ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழக்கூடிய பல்வேறு வகைப்பட்ட, எண்ணிக்கையில் மாறுபட்ட ஒட்டுமொத்த உயிரினத் தையும் அதாவது நுண்ணுயிரி களிலிருந்து தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வரையும் குறிக்கும் சொல்லே பல்லுயிர் பரவல்.
Biodiversity என்ற ஆங்கில சொல்லுக்கு பல்லுயிர்மை, உயிரியல் பன்மயம், பல்லுயிர் வேறுபாடு போன்ற பல சொற்கள் பயன்பாட்டில் இருந்தபோதிலும், இக்கட்டுரையில் பல்லுயிர் பரவல் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியத்துவம்
நாம் உண்ணும் உணவு, பயன்பாட்டில் உள்ள மற்றும் வரப்போகும் மருந்துப்பொருட்கள், அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள், காலநிலை மாற்றத்தால் உருவாகக்கூடிய மழை நீர் மற்றும் நம்மையும் நம் மனத்தையும் புதுப்பித்துக்கொள்ள இன்றைய சூழலில் மிகவும் அத்தியாவசியமான 'சுற்றுச்சூழல் சுற்றுலா’ (eco tourism) ஆகியன முக்கியக்கூறுகளாக உள்ளன. இவை அனைத்திலிருந்தும் நம் நாடு அன்னிய செலாவணியை ஈட்டிக்கொள்கிறது. மேலும் நம் தேவைகளுக்கும் 60%க்கு மேல் பல்லுயிர் பரவலினால் முழுமைப்படுத்தப்படுகிறது.
உதாரணமாக ஒரு முழுமை பெற்ற 30அடி உயரம் கொண்ட மரமானது தனது வாழ்நாளில் குறைந்தது 60இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆக்ஸிஜனை நமக்கு 30ஆண்டுகளில் தருகிறது.
பல்லுயிர் அழிவதனால் ஏற்படும் விளைவுகள்
கொசுக்கள், தவளையின் முட்டையில் இருக்கும் கருப் பொருளை தனக்கு உணவாக எடுப்பதனால் முட்டைகள் பொரிப்பது தடுக்கப்பட்டு தவளைகள் பெருகுவதும் தடைசெய்யப்படுகிறது. கொசு என்ற பூச்சியினம் இவ்வுலகை விட்டு அகன்றுவிட்டால் தவளைகள் எண்ணிக்கை பெருகிவிடும்.
யானைகளினால் காடுகளில் ஏற்படும் வழித்தடம் மற்ற சிறு விலங்கினங்களுக்கு பாதையாக அமைகிறது; அதன் சொரசொரப்பான தோலின் மூலம் சில தாவரங்கள் இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன (animal pollination); ஒருசில தாவரங்களின் அளவு கடந்த பெருக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது யானைகள் ஈரமான மண்ணைக் கிளருவதால் மண்ணில் உள்ள தாது உப்புகள் நன்கு சுழற்சி செய்யப்படுகின்றன. இதனால் மற்ற தாவர உண்ணிகள் (எ.கா: மான்) தனக்குத் தேவையான தாது உப்புத் தேவையை எளிய வழியில் பெற்றுக்கொள்கின்றன.
ஒவ்வொரு உயிரினமும் இவ்வுலகில் ஏதோ ஒன்றிற்கு பயன்படுகிறது. இதன் அழிவை ஏதோ ஒரு விதத்தில் செய்துகொண்டிருக்க நேரிட்டால் பல்லுயிர் பரவலின் நன்மைகள் அனைத்தையும் நாம் இழக்க நேரிடும்.
பல்லுயிர் பரவலின் காரணிகள்
1. ஈரநிலம் சார்ந்தச் சூழல் (Wet land ecosystem), 2. கடல் சார்ந்தச் சூழல் (Marine ecosystem), 3. காடுகள் சார்ந்தச் சூழல் (Forest ecosystem), 4. புல்வெளிச் சார்ந்தச் சூழல் (Grassland ecosystem), 5. பாலைவனம் சார்ந்தச் சூழல் (Desert ecosystem) ஆகியவை பல்லுயிர் பரவலின் காரணிகள் ஆகும்.
இதைத்தான் நமது சங்கத் தமிழ் இலக்கியத்தில் 'திணை' என்று குறிப்பிட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என வகைப்படுத்தினர்.
பல்லுயிர் பரவலை கணிப்பது எப்படி?
பல்லுயிர் பரவலை கணிப்பதற்கு முன் பரவலின் அளவு (Dispersal),  மொத்த எண்ணிக்கை (Population status), அரிதாக  இருப்பது (Rarity),  வாழ்நாளின் அளவு (Longevity), இனப் பெருக்கத்தன்மை (Reproductive ability),  மிகுதியான சிறப்புத்தன்மையின் அளவு (Degree of specialization) மற்றும் வாழிடத்தன்மை (Trophic status) ஆகியவற்றின் தற்போதய நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்வது அவசியம்.
பல்லுயிர் பரவலையும் அதனை விரிவாக விவரிக்கவும் பயன்படுவது, 1. ஆல்ஃபா பரவல் (α diversity), 2. பீட்டா பரவல் (β diversity), 3. காமா பரவல் (γ diversity), ஆகியனவாகும்.
ஆல்ஃபா பரவல் (α diversity) என்பது ஒரு குறிப்பிட்ட வாழிடத்திலுள்ள உயிரினப்பரவலை விளக்குவதற்கு உதவும்;
பீட்டா பரவல் (β பீவீஸ்மீக்ஷீsவீtஹ்) என்பது  இரு அல்லது சில வாழிடத்திலுள்ள உயிரினப்பரவலை விளக்குவதற்கு உதவும்
காமா பரவல் (γ diversity) என்பது பல்வேறு வகைப்பட்ட சுற்றுச்சூழலின் எல்லைகளைத்தாண்டி விரிவாக உயிரினப்பரவலை விளக்குவதற்க்கு உதவும்.
பல்லுயிர் பரவல் என்பதை மெய்ப்படுத்துவதற்கு உயிரின பரவல் சமநிலை (Equitability) மற்றும் அதனது எண்ணிக்கையின் அளவு ஆகியவற்றைக் கணிப்பது மிகவும் இன்றியமையாதது.
இவற்றை 1. ஷான்னன்வெய்னர் அளவீடு (Shannon’s index); 2. சிம்சன் அளவீடு (Simpson’s index) ஆகியவற்றின் மூலம் அறியலாம்.
இவ்வாறு இன்னும் பல புள்ளியல் கோட்பாடுகள் பல்லுயிர் பரவலை கணக்கிடவும், அவற்றைப் பற்றியதொரு தெளிவான முடிவுகளையும் எடுக்கப் பயன்படுகிறது. புள்ளியல் தகவல்களை சேகரி¢த்தவுடன் அதன் அடிப்படையில் பல்லுயிர் பரவலைப் பாதுகாக்க சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.
பல்லுயிர் பாதுகாப்பு
பல்லுயிர் பாதுகாப்பானது உட்சூழல் பாதுகாப்பு (In-situ conservation) மற்றும்  வெளிச்சூழல் பாதுகாப்பு (Ex-situ  conservation) இரு முக்கிய ஆகிய வழிகளில் ஆராய்ச்சியாளர்களாலும், அரசினாலும் செயல்படுத்தப்படுகிறது.
உட்சூழல் பாதுகாப்பு (In-situ conservation)
இயற்கைச் சூழலிலோ அல்லது நம்மால் உருவாக்கப்பட்ட இயற்கைச் சார்ந்த சூழலில் உயிரினங்களைப் பாதுகாப்பதாகும். இதனால் அமைந்ததே 'பாதுகாக்கப்பட்ட பகுதி' (Protected area).
இவைச் சட்டபூர்வமாக அமலாக்கப்பட்டு உயிரினங்கள் பலுகிப் பெருகுவதற்காகவும் அவைகள் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற் காகவும் உருவாக்கப்பட்டன.
அவை முறையே உயிர் வளமிகுவிடங்கள் (Biosphere reserve), தேசிய பூங்கா (National park), வன வாழ் அல்லது விலங்குகள் சரணாலயம் (Wildlife sanctuaries).
தற்போதய சூழலில் நம் நாட்டில் 11 உயிர் வளமிகுவிடங்களும், 80 தேசிய பூங்காக்களும், 420 வனவியல்  சரணாலயங்களும் உள்ளன.
தற்போது தமிழ் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட 4 முக்கிய வனவியல் சரணாலய மண்டலங்களான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்; திருநெல்வேலி; நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்; திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்கள் இணைத்து வன உயிரினச் சரணாலயப் பகுதிகளாக தமிழக அரசு கடந்த 2013 மே மாதம் 3ம் நாள் அறிவித்துள்ளது.
 வெளிச்சூழல் பாதுகாப்பு (Ex-situ  conservation)
ஒரு உயிரினத்தையோ அல்லது அவற்றின் மரபுப்பண்புகளையோ வெளிக்கொணரும் விதை, முட்டை, செல் மற்றும் ஜீன் ஆகியவைகளைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டச் சூழலமைப்பு. இவற்றில் விலங்கியல் பூங்காவும் (Zoo) ஒன்று.
வெளிச்சூழல் பாதுகாப்பின் மூலம் வருங்காலங்களில் அழியக்கூடிய மற்றும் அழியும் தருவாயில் உள்ள தாவரங்களையோ அல்லது விலங்கினங்களையோ பாதுகாத்து பிற்காலச் சந்ததியினருக்குத் தரலாம்.
1. ஜீன் வங்கி அல்லது நகலிக் களஞ்சியம் (Gene bank & clonal repositories); 2. விதைக் களஞ்சியம் (Seed repositories); 3. முட்டை வங்கி (egg bank)  ஆகியவற்றின் மூலம் அறியலாம். மேலும் இதன் மூலம் மரபியலில் மாறுபட்ட சூழலுக்குத் தகுந்த (Genetically Modified Organisms) தாவரங்களையும் மற்றும் விலங்கினங்களையும் உருவாக்கலாம்.
பல்லுயிர் பரவல் மிகுதியான இடங்களை கண்டறிவது என்பது பல்லுயிர் பரவலின் பாதுகாப்பை எங்கே செயல்படுத்தலாம்? என்பதற்கான தீர்வாக அமையும் என்று ஆராய்ச்சியாளர் மேயர் மற்றும் அவரது குழுவினரால் 1988ல் கூறப்பட்டது.
பல்லுயிர் பரவல் மிகுதியான பகுதிகளை ஆங்கிலத்தில் "Biodiversity Hotspots (BHSs)"  எனலாம். தற்போது உலகளவில் 34 biodiversity hotspots உள்ளன. எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நம் நாட்டில் கிழக்கு இமயமலைத் தொடர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய இரண்டு இடங்கள் biodiversity hotspots என கண்டறியப் பட்டுள்ளன. இவ்விரண்டும் தனக்கென்று மற்றும் வேறு எங்கும் காணமுடியாத சில தாவரங்களையும், விலங்கினங்களையும் கொண்டுள்ளது.
ஒரு உயிரினத்தின் வாழ்வியல் தன்மை அதாவது ஒரு உயிரினத்தைப்பாதுகாக்க அதனைப்பற்றிய முழு விவரங்களை அறிந்திருக்க வேண்டும். என்பது உலகளாவிய அமைப்பான “International Union for Conservation of Nature (IUCN)” ன் முக்கியக் கொள்கையாகும். அந்த கொள்கையின் வழிகாட்டலே “Red Data list”.
கடந்த ஆண்டு 'பல்லுயிர் பரவல்' ஆண்டாக (2012) அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் அக்டோபர் 2012, செப்டம்ர் மாதம்  18நாட்கள் நடைபெற்ற 11வது உலக பல்லுயிர் பரவல் மாநாடு நடைபெற்றது.
ஆண்டுதோறும் மே 22ல் பல்லுயிர் பரவல் தினம் கொண்டாடப்படுகிறது.
Save Nature, Save Life
(கட்டுரையாளர் கல்லூரி ஒன்றில் விலங்கியல் உதவிப் பேராசிரியர்)
பல்லுயிர் பரவலின் வகைகள்
பல்லுயிர் பரவலானது மரபின பரவல்(genetic diversity), உயிரின பரவல் (species diversity), சூழலியல் பரவல் (ecosystem  diversity), புவிதகவமைப்பியல் பரவல் (landscape diversity) மற்றும் கலாச்சார சமுதாய பரவல் (cultural diversity) என ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகிறது.
மரபின பரவல் (genetic diversity)  மரபணுக்களின் வேறுபாடுகளையும் அதனால் மாறுபட்டுள்ள உயிரினத்தையும் குறிக்கும்;
உயிரின பரவல் (species diversity)  ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழக்கூடிய பல்வேறு உயிரினங்களை குறிக்கும்; இங்கு ஷிஜீமீநீவீமீs என்பதை சிற்றினமாக எண்ண  வேண்டாம்
சூழலியல் பரவல் (ecosystem diversity)  சுற்றுச்சூழலான நிலம் மற்றும் நீரில் காணப்படும் வேறுபாடுகளையும் அதைச்சார்ந்த உயிரினங்களையும் அதற்குள்ள வாழ்வியல் வலைப்பின்னல்களையும் குறிக்கும்.
புவிதகவமைப்பியல் பரவல் (landscape diversity)  மாறுபட்ட புவிப்பரப்புகளான சிறு நிலம், அதனிடையே உள்ள தடுப்பு நிலம் மற்றும் இவையாவும் ஆக்கிரமித்துள்ள ஒட்டுமொத்த நிலப்பரப்புகளைக் குறிக்கும்.
கலாச்சார சமுதாய பரவல் (cultural diversity)  வாழ்க்கை முறை, கலாச்சாரம், உணவு, உடை, கலை, இசை, விவசாயம், சமுதாயக் கோட்பாடு மற்றும் இவற்றுடன் உள்ள தொடர்பு போன்றவற்றை குறிக்கும்.
பல்லுயிர் பரவல் அழிவதற்கான காரணீகள்
1. உயிர் வழிடங்களை அழித்தல் (Habitat destruction), 2. வேட்டையாடுதல் (Hunting), 3. தேவைக்கு அதிகமாக பயன்படுத்துதல் (Over exploitation), 4. வேற்று வாழிட உயிரினங்களை புது வாழிடத்தில் அறிமுகப்படுத்தல் (Introduction of exotic species), 5. பகுத்தறியாமல் கொடுக்கின்ற உயிர்க்கொல்லிப் பொருட்கள் (pesticides), 6. பல்வேறுவகையான மாசுபாடுகள் (Different types of pollution), 7. காடுகளை அழித்தல் (Deforestation), 8. ஆராய்ச்சிக்காகச் சேகரி¢க்கப்படும் உயிரினங்கள் (Species collection for research),
காணிக்கல் உயிரினம் (Keystone species)
   காணிக்கல் உயிரினம் என்பது தனக்குச் சற்றும் அளவில் பொருந்தாத பெரியதொரு நற்பயனை அவை சார்ந்துள்ள சுற்றுச்சூழலுக்குச் செய்யக்கூடியவை. மேலும் இவ்வகை உயிரினமானது ஒரு சூழலையும் அதிலுள்ள உயிரின சமுதாயத்தையும் அதன் அமைப்பையும் சமநிலைப்படுத்துகிறது, அச்சூழலிலுள்ள மற்ற உயிரினங்களிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் உயிரினங்களின் வகைகளையும் அதன் எண்ணிக்கையையும் நிர்ணயம் செய்யக்கூடிய தகுதிகளையும் கொண்டது. உதாரணம்:  புலி, நீர்க்கீரி (sea otter), ஆலமரம். காணிக்கல்  என்பது ஒரு கட்டடத்திலுள்ள பிரதானமான கல் ஆகும். இதில் சற்றே அழுத்தம் ஏற்பட்டு கல்லிற்க்குச் சிறு சேதமோ அல்லது மாற்றமோ ஏற்பட்டாலும் அக்கட்டடம் முழுவதும் சிதையக்கூடும். அப்படிப்பட்ட தன்மையை உயிரினங்களில் ஒப்பிட்டுப் பார்க்க உதவுவதே இந்த காணிக்கல் உயிரினம்.
குடை உயிரினம் (Umbrella / Flagship species)
ஒரு குடையானது எவ்வாறு அதைச் சார்ந்தவற்றை காப்பாற்றுகின்றதோ அதுபோல இவ்வகை குடை உயிரினத்தைப் பாதுகாக்க செயல்படுத்தும் நடவடிக்கைகள் மற்ற உயிரினங்களையும் மறைமுகமாகக் காப்பாற்ற உதவுகின்றன. சுருக்கமாகச் சொல்லவேண்டுமேயானால் 'ஒரு (கொ)குடையின் கீழ் வாழ்தல்' என்பதனைக் குறிக்கும். உதாரணம்: புலி, யானை. இவ்விரண்டு உயிரின வகைகளைக் கருத்தில் கொண்டோமேயானால் உயிரின பரவல் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் தீர்வுகளை மிக எளிதில் நடைமுறைப் படுத்தலாம்.

No comments:

Post a Comment