Friday 24 January 2014

இந்திய மாநிலங்கள் - 2

இந்திய மாநிலங்கள் - 2
Posted Date : 11:12 (13/12/2013)Last updated : 12:12 (13/12/2013)
தெலுங்கானா - தனி மாநிலம்?
தெலுங்கானா, கடலோர ஆந்திரம் (ஆந்திரா), ராயலசீமா  என்னும் மூன்று பகுதிகளைக் கொண்ட ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலம்.
ஆந்திர மாநிலத்தின் பெரும் நிலப்பரப்பாகிய 'தெலுங்கானா’ பகுதியே தனி மாநில கோரிக்கையை பல ஆண்டுகளாக எழுப்பிவந்தது.
தெலுங்கானா பகுதி கிழக்கில்  கடலோர ஆந்திரத்தையும், மேற்கில் கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிர மாநிலத்தையும்,வடக்கில் மத்திய பிரதேசத்தையும், தெற்கில்  ராயலசீமாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
வரலாறு
தெலுங்கானாப் பகுதியை கி. மு. இரண்டாம்   நூற்றாண்டு முதல் சாதவாகனர்கள் தொடங்கி சாளுக்கியர்கள், காகதியர்கள் போன்ற பலரும் கரீம்நகரில் உள்ள தர்மபுரியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர்.
1518 ல் பாமினி சுல்தான்களிடமிருந்து குலி குதூப் என்பவர் ஆட்சியை கைப்பற்றி குதுப் ஷாஹி ஆட்சியை தொடங்கி வைத்தார்.
குலிகுதூப், தெலுங்கு பேசும் பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்தார். இவரைத் தொடர்ந்து ஜாம்ஷீத், இப்ராகிம் ஆகியோர் ஆட்சி செய்தனர்.
1580ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த வந்த குதுப்ஷா தலைநகரைக் கோல்கொண்டாவிலிருந்து ஹைதராபாத்துக்கு மாற்றினார்.
ஷாஜகான் அனுப்பிய படையினரிடம், குதுப் ஷாஹி வம்சத்தின் கடைசி மன்னனாகிய சயீத் அகமது தோல்வி அடைந்தார்.
1687 ல் அவுரங்கசீப்பின் படை கோல்கொண்டா கோட்டையைக் கைப்பற்றியது.
1713 ல் அவுரங்கசீப் மறைவுக்குப் பிறகு வந்த பேரரசர் ஃபரூக்சியர், மிர் கம்ருதீனுக்கு நிஜாம்உல்முல்க் ஃபெரோஸ் ஜங் என்னும் பட்டத்தை அளித்துத் தக்காணப் பீடபூமியின் வைசிராய் ஆக்கினார்.
ஹைதராபாத் நிஜாம்
1724 ல் மிர் கம்ருதீன், டெல்லியைச் சார்ந்திராத ஆட்சியாக தனது அரசை அறிவித்துக் கொண்டதுடன் நிஜாம் ஆட்சி தொடங்கப்பட்டது.
1799 ல் திப்பு சுல்தானை வீழ்த்துவதற்கு ஹைதராபாத் நிஜாம், ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உதவியதால்,திப்புவிடமிருந்து கைப்பற்றிய சில பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனி நிஜாமுக்கு அளித்தது.
நிஜாம் ஆண்டு வந்த பகுதியும் நிஜாமுக்கு பிரிட்டிஷார் வழங்கிய பகுதியும் இணைந்து ஹைதராபாத் சமஸ்தானம் உருவானது. ஹைதராபாத் சமஸ்தானத்தில் தெலுங்கானாப் பகுதி (50%), மராத்வாடா பகுதி (22%), கன்னடப் பகுதி (22%) உள்ளடங்கும்.
கடலோர ஆந்திரமும் ராயலசீமாவும் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் இருந்தபோது , தெலுங்கானாப் பகுதி மட்டும் ஹைதராபாத் நிஜாம்களின் ஆட்சியின் கீழ் இயங்கி வந்தது.
ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்ட ஆந்திரப் பகுதியில் முதலாளித்துவப் பொருளாதாரமும் மக்களாட்சியும் வளரத் தொடங்கியதுடன், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு சமூகத்தின் அனைத்து பிரிவினரும் முன்னேற வழிவகை செய்யப்பட்டது.
தெலுங்கானா போராட்டம்
நிஜாம் ஆட்சிக்குட்பட்ட தெலுங்கானாப் பகுதியில் நிலப்பிரபுத்துவப் பிற்போக்குத்தனங்கள் பெருகி,  கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்டது. தாய்மொழிவழிக் கல்வியும் (தெலுங்கு, கன்னடம், மராத்தியம்) மறுக்கப்பட்டு, நிஜாம்களும், முஸ்லீம்களும் பேசிய மொழியே ஆரம்பக் கல்வி முதல் பயிற்று மொழியாக இருந்தது.
அரசு நிர்வாகத்திலும் நீதித் துறையிலும் உருது பேசும் முஸ்லீம்களே பணியில் அமர்த்தப்பட்டனர்.
6 சதவீத மக்கள் மட்டுமே எழுத படிக்கத் தெரிந்தவர்களாய் இருந்தனர். அரசுப் பண்ணை நிலங்களில் வேலை பார்ப்பதற்குக் கூலி மறுக்கப்பட்டது. மக்கள் பண்பாட்டு அடிப்படையில் ஒடுக்கப்பட்டதுடன்,  தேஷ்முக் உள்ளிட்ட மேல் சாதியினரால் தலித்துகள் ஒடுக்கப்பட்டனர்.
சுரண்டலுக்குள்ளான  உழவர்கள் பண்ணையார்களை எதிர்த்து கிராம ராஜ்யங்களை அமைத்து பண்ணையார்களின் நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். இதுவே தெலுங்கானப் புரட்சி எனப்படும் போராட்டத்தைத் தொடக்கி வைத்தது.
உழவர்கள் தலைமையில் கம்யூனிஸ்டுகள் நடத்திய தெலுங்கானா  புரட்சி 1946 ம் ஆண்டிலேயே தொடங்கியது. 1947 ல் இந்தியா சுதந்திர தினத்தை கொண்டாடியபோது தெலுங்கானாப்பகுதி நிஜாம் மன்னராட்சிக்கு எதிராக போராடிக் கொண்டிருந்ததது.
முல்கிப் போராட்டம்
சமஸ்தானங்களின் விருப்பத்தைப் பொறுத்து தனித்தோ, பாகிஸ்தானுடன் இணைந்தோ, இந்தியாவுடன் இணைந்தோ செயல்படலாம் என இந்தியா ஆங்கிலேயருடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு இணங்க ஹைதரபாத் நிஜாம்  இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணையாது தனித்தே செயல்பட விரும்பினார்.
இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் ஆபரேஷன் போலோ என்ற ராணுவ நடவடிக்கை மூலம் தெலுங்கனாப் பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டு 1952 நடந்த தேர்தலில் புருகல் ராமகிருஷ்ண ராவ் முதலமைச்சர் ஆனார். 1952 முதல் 1956 வரையிலான காலம் தெலுங்கானா வரலாற்றின் பொற்காலம். ஹைதராபாத் குடி யிருப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
இந்திய அரசு ஆந்திராவைச் சேர்ந்த தனது அதிகாரிகள் பலரை ஹைதராபாத்தில் நியமித்ததை தொடர்ந்து முல்கி போராட்டம் வெடித்தது (முல்கி என்றால் உருது மொழியில் அரசைச் சேர்ந்தோர் அல்லது உள்ளூர்வாசிகள் எனப் பொருள்).
ஆந்திரா உருவானது
19.10.1952 அன்று பொட்டி ஸ்ரீ ராமுலு சென்னை மாகாணத்திலிருந்து ராயலசீமா உள்ளிட்ட ஆந்திரம் பிரிய வேண்டுமெனக் கோரி சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கி, கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் தொடர்ந்து உண்ணா விரதமிருந்து 15.12.1952 அன்று காலமானார்.  இதனால் தொடர் போராட்டங்கள் வெடித்தன.
1953 ம் ஆண்டு தெலுங்கானா நீங்கிய ஆந்திரப் பிரதேசம் கர்னூலைத் தலைநகராகக் கொண்டு உருவானது. தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட தெலுங்கானாப் பகுதியை ஹைதராபாத் சமஸ்தானத்திலிருந்து பிரித்துப் புதிதாக உருவாகியிருந்த ஆந்திரப் பிரதேசத்துடன் சேர்த்து பெரிய மாநிலமாக ஆந்திரத்தை உருவாக்க வேண்டும் என்னும் கோரிக்கை ஆந்திராவில் எழுந்தது.
ஃபஸல் அலி பரிந்துரை
ஃபஸல் அலி மாநில மறுசீரமைப்பு ஆணைக்குழு 1955-ல் சமர்ப்பித்த  அறிக்கையில் தெலுங்கானாவை ஆந்திராவுடன் சேர்க்க நேர்ந்தால் ஆங்கிலக் கல்வி பெற்று முன்னேறியுள்ள ஆந்திரப் பகுதியினர் தெலுங்கானா மக்களை ஒடுக்கக் கூடுமெனவும் தெலுங்கானாவின் வளங்களை ஆந்திரம் அபகரித்துக் கொள்ளக் கூடுமெனக் கருதி, தெலுங்கானா  ஆந்திரா சேர்க்கைக்குத் தெலுங்கானா சட்டமன்றத்தில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையைப் பெற வேண்டுமென பரிந்துரைத்தது.
குழுவின் பரிந்துரையையும், தெலுங்கானா மக்களின்  கருத்தையும் கேட்காமலேயே 1956-ம் ஆண்டு தெலுங்கானா ஆந்திராவுடன் இணைக்கப்பட்டு ஆந்திராவின் (கடலோர ஆந்திரம், ராயலசீமா ஆகியவற்றின்) தலைநகரம் கர்னூலிலிருந்து ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டது. இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமான ஆந்திர பிரதேசம் உருவானது.
தெலுங்கானா பகுதியின் கன்னடம் பேசும் பகுதி கர்நாடக மாநிலத்துடனும், மராத்தியம் பேசும் பகுதி மஹாராஷ்டிரா மாநிலத்துடனும் இணைக்கப்பட்டன.
பெருந்தகையாளர் உடன்படிக்கை
1956-ல் ஆந்திர முதலமைச்சர் கோபால் ரெட்டியும், தெலுங்கானா முதலமைச்சர் ராமகிருஷ்ண ராவும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். இது பெருந்தகையாளர்களின் உடன்படிக்கை  (Gentlemen’s  Agreement 1956)எனப்படுகிறது.
பெருந்தகையாளர்களின்  உடன்படிக்கையின்படி தெலுங்கானாப் பகுதி முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்குத் தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மண்டல நிலைக்குழு நியமிக்கவேண்டும். மண்டல நிலைக்குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்கி சட்டம் (12 ஆண்டுகள் ஹைதராபாத்தில் வசித்தவர்கள் மட்டுமே அங்கிருக்கலாம் என்னும் சட்டம்) ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதையும் இந்தக் குழு கண்காணிக்கும். மாநிலத்தின் மொத்த வரவு செலவுகளை மக்கள் தொகை அடிப்படையில் இரு பகுதிகளுக்கும் இந்தக் குழு பிரித்தளிக்கும். ஆந்திர, தெலுங்கானா அமைச்சர்களின் எண்ணிக்கை முறையே 60:40 என்றளவில் இருக்க வேண்டும்; ஒரு பகுதியைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருந்தால் மற்றொரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் துணை முதலமைச்சராக இருக்க வேண்டும்.
மண்டல நிலைக்குழுவின் பரிந்துரைகளும், பெருந்தகையாளர்களின்  உடன்படிக்கையின் நோக்கங்களும் புறக்கணிக்கபட்டது.
தெலுங்கானா இயக்கம்
ஆந்திரம், ராயலசீமாவை விட பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் பெரிய தெலுங்கானாப் பகுதி பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை, வேளாண்மை என அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியிருந்ததை எதிர்த்துத் தெலுங்கானா மாணவர்கள் 1968ம் ஆண்டு டிசம்பர் 6 அன்று ஹைதராபாத்தில் உள்ள விவேக்வர்த்தின் கல்லூரியிலிருந்து ஊர்வலம் சென்றனர்.இப்போராட்டம்  1969 ம் ஆண்டுவரை நீடித்தது. இதுவே 1969 தெலுங்கானா இயக்கம் என அறியப்படுகிறது.
தெலுங்கானா பிரஜா சமிதி  அமைப்பு வழக்குரைஞர் கி. மாதவன் தலைமையில் உருவானது. 1969 ம் ஆண்டு சார்மினார் பகுதியில் காவல்துறை விதித்திருந்த தடையையும் மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிக்களமிறங்கிப் போராடினர்.
போராட்டங்களின் விளைவாக 1969 ஆந்திர அரசு ஓர் அரசாணை வெளியிட்டு, அதன்படி 25,000 அயல் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்தது. ஆனால் ஆந்திர உயர் நீதிமன்றம் முல்கி சட்டம் தவறெனத் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றம் சென்றது.
ஆந்திர அரசின் மேல்முறையீட்டு வழக்குக்கான தீர்ப்பு 1972 ல் முல்கி சட்டத்துக்கு ஆதரவாக வெளியானது. இதனை எதிர்த்து ஆந்திராவில் 'ஜெய் ஆந்திரா’ என்னும் இயக்கம் உருவானது.
ஆறு அம்சத் திட்டம்
பிரதமர் இந்திரா காந்தி 1973 ல் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்து உச்ச நீதிமன்ற ஆணையை மீறி புதிதாக ஆறு அம்சத் திட்டம் ஒன்றை முன்வைத்தார். இது ஏற்கெனவே இருந்த பல ஒப்பந்தங்களையும்,மண்டல நிலைக் குழுவையும், முல்கி சட்டத்தையும் தூக்கி எறிந்தது. தெலுங்கானா மக்களுக்கு கல்வி நிலையங்களிலும் அரசு அலுவலகங்களிலும் குறிப்பிட்ட அளவு இடஒதுக்கீடு தருவதென முடிவானது.இதற்கு ஆதரவாகக் குடியரசுத் தலைவரின் ஆணை வெளிவந்தது. 1975இல் நாடாளுமன்றத்தில் இதற்கெனச் சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதற்கான அரசு அறிவிக்கை வெளியிடுவதற்கு  1986 ம் ஆண்டு வரை தாமதமானதால் இந்தச் சட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.
தெலுங்கானா அரசியல்
தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலையான கே. சந்திரசேகர ராவ் அன்றைய சட்டமன்றத்தில் துணை அவைத்தலைவராக இருந்த போது சந்திரபாபு நாயுடுவிடம் அமைச்சர் பதவி கேட்டு, பதவி கிடைக்காத ராவ் திடீரெனத் தெலுங்கானா பற்றாளர் ஆனார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சியை 2000 ல் நிறுவினார்.
2004 ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து அமைச்சர் பதவியும் பெற்றார் ராவ். தெலுங்கான பிரிவினைக் கோரிக்கையை காங்கிரஸ் கூட்டணி அரசின் குறைந்தபட்சப் பொதுத் திட்டத்திலும் சேர்த்தும் பலனில்லாமல் போகவே 2006 ல் காங்கிரஸ் கூட்டணி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதுடன். 2006 டிசம்பரில் டிஆர்எஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகினர்.
2008 ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு தனது கட்சி வரலாற்றில் முதல் முறையாகத் தனித் தெலுங்கானாவை ஆதரிப்பதாகக் கூறினார். ஆந்திராவில் 2009 நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிய நிலையில் அனைத்துப் பெரிய கட்சிகளும் தனித் தெலுங்கானாவை ஆதரித்தன.
2009 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் சந்திரசேகர ராவ், தெலுங்கு தேச கூட்டணி தோல்வியடைந்தது.
டிஆர்எஸ் கட்சியின் இளஞ்சிவப்பு நிறக் கொடியணிந்து வெற்றி பெற்ற ராஜசேகர ரெட்டி தனித் தெலுங்கானா கோரிக்கையை எதிர்த்துப் பேசத் தொடங்கிய நிலையில் சந்திரசேகர ராவ்  தனித் தெலுங்கானா என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இது தெலுங்கானாப் பகுதிகளில்  மாணவர் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களைத் தூண்டி விட்டது. தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் (74), நாடாளுமன்ற உறுப்பினர்களும் (4) பதவி விலகுவதாகக் கூறினர்.
போராட்டங்கள் அதிகரிக்கவே அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தனித் தெலுங்கானா குறித்து ஆந்திரச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து சந்திரசேகர ராவின்  உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
தெலுங்கானா மாநில உருவாக்க அறிவிப்பு
தெலுங்கானா போராட்டத்தில் ஜூலை 30, 2013 ஒரு மைல் கல். அன்று மத்தியில் ஆளும் தேசிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் வழங்கியது. இன்னும் நான்கைந்து மாதங்களில் தெலுங்கானா மாநிலம் அமைக்கப் படும். அதற்கான சட்டப்பூர்வமான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானம், ஆந்திர சட்டசபையின் கருத்து, அமைச்சரவை ஒப்புதல், மத்திய சட்ட அமைச்சகம் உருவாக்கும் தெலுங்கானா மசோதா, அந்த மசோதா குறித்து ஆந்திர சட்டமன்றத் தின் கருத்துகள், தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தால் மசோதாவுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி, அதன்பின் குடியரசு தலைவர் பார்வைக்கு சமர்ப்பித்தல், பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதல், நிறைவாக குடியரசு தலைவரால் மாநில உருவாக்கம் அறிவிக்கப்படுதல் போன்ற பணிகள் தொடர்ந்து நடந்தேறும்.
புதிதாக உருவாகும் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், மேடக், அடிலாபாத், கம்மம், கரீம்நகர், மக்பூ நகர், நால்கொண்டா, நிஜாமாபாத், ரங்காரெட்டி, வாராங்கல் ஆகிய 10 மாவட்டங்களைக் கொண்டதாக 3.5 கோடி மக்கள் தொகையுடன் உருவாகும். ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின் எஞ்சியுள்ள பழைய ஆந்திர பகுதி (ராயல சீமா உள்பட) சீமாந்திரா என்று அழைக்கப்படும். ராயல சீமாவின் அனந்த்பூர், கர்னூல் மாவட்டங்களை தெலுங்கானாவோடு இணைப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஹைதராபாத் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தெலுங்கானா மற்றும் சீமாந்திரா விற்கான பொது தலைநகராக இருக்கும். அதற்குள் சீமாந்திரா தனக்கென தனி தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இதற்கிடையே ராயல சீமாவை தனி மாநிலமாக உருவாக்குவது குறித்து போராட்டங்களும் தொடங்கி யுள்ளன. தெலுங்கானா மாநிலம் குறித்து ஆராய 2010ஆம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெலுங்கானா மாநிலம் உருவாகின்ற பட்சத்தில் ராயல சீமா மாநில உருவாக்கத்திற்கான கோரிக்கைகள் வலுப்பெறும் என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment