Saturday 25 January 2014

புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகள்

புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகள்
Posted Date : 10:12 (12/12/2013)Last updated : 10:12 (12/12/2013)

(Millennium Development Goals)
அ. மாணிக்கவள்ளி கண்ணதாசன்

புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகள் (Millennium Development Goals) செப்டம்பர் 2000-ல் 189 நாடுகளின் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆண்டுக்குள் அடைதல் வேண்டும் என்று இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.
தீவிர வறுமை மற்றும் பசியிலிருந்து ஒழிப்பு, உலகில் உள்ள அனைவருக்கும் தொடக்கக் கல்வி, ஆண் பெண் ஏற்றத்தாழ்வு நீக்கி பெண்களுக்கு அதிகாரமளித்தல், குழந்தை இறப்பினைக் குறைத்தல், தாய்   நலத்தில்   முன்னேற்றம், ஹெச்.ஐ.வி , மலேரியா மற்றும் பிற நோய்களை எதிர்த்துப் போராடுதல், சுற்றுச்சூழலில் நீடித்த நிலைத்த வளர்ச்சியினை உறுதி செய்தல் , உலகளாவிய கூட்டுப் பங்காண்மையினை உலக முன்னேற்றத்திற்காக உருவாக்குதல் ஆகியவை புத்தாயிர மாண்டு வளர்ச்சி இலக்குகள் ஆகும். 
கொலம்பியாவின் பொகோடாவில் பிப்ரவரி 2013-ல் நடைபெற்ற மாநாட்டில்  2015-க்குள் அடைய வேண்டிய இலக்குகளில் காட்ட வேண்டிய உத்வேகம் குறித்தும் அதற்கு மேல் செய்ய வேண்டிய செயல்திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
1990-க்கும் 2010-க்கும் இடையில் வறுமையானது பாதியாக குறைக்கப்பட்டுள்ளமை உலக வரலாற்றின் வறுமை அத்தியாயங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால், இன்னும் 1.2  பில்லியன் மக்கள் பெரிதும் வறுமையில்  உழல்கின்றனர் என்பது தான் கவலை தரும் செய்தி. அதாவது ஒரு நாளில் 1.25 டாலர்கூட வருமானம் இல்லாமல் வாழ்கின்றனர் என்று 2013-ம் ஆண்டின் புத்தாயிரம் வளர்ச்சி இலக்குகள் அறிக்கை குறிப்பிடுகின்றது. உலகளவில் எட்டு பேரில் ஒருவர் இரவில் உணவில்லாமல் உறங்கச் செல்கின்றனர் என்று மேலும் அது வருந்துகின்றது.  எத்தகைய கொடுமையான நிலை இது! மேலும் ஏழ்மை நிலையானது மலேசியாவில் 0 சதவிகிதமாகவும் நேபாளத்தில் 52 சதவிகிதமாகவும் உள்ளது. வேறுபாடுகளின் வேர்கள் களைந்தெறியப்படுவது எப்பொழுது?
2000-த்திலிருந்து 2010-க்குள்  மலேரியாவில் இறப்போரின் எண்ணிக்கை உலகளவில் 25 சதவிகிதம் குறைந்துள்ளது.  காசநோயால் இறப்போரின் எண்ணிக்கை 1990 உடன் ஒப்பிடும்பொழுது 2015-ல் பாதியாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுகாதாரம் மற்றும் தொடக்கக்கல்வி முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. வறுமை, தாய்நலம், சுகாதாரம்,  சுற்றுச்சூழலில் உலகளாவிய அளவில் அதீத கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. வளரும் நாடுகளில் சுமார் 40 நாடுகள் மனித வளர்ச்சியில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றமடைந்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. 
உலகின் தெற்குப் பகுதியினர் 1990-ல் பொருளாதார பங்களிப்பில் உலகின் மூன்றில் ஒரு பகுதியிலிருந்து இப்பொழுது பாதியளவிற்கு அளிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளனர்.  இதற்கு மாறாக லத்தீன் அமெரிக்கா மட்டும் 2000 வருடத்திலிருந்து வருமான ஏற்றத்தாழ்வினைச் சந்தித்து வருகின்றது.
ஜனவரி 2013-ன் படி உலகின் பாராளுமன்றங்களின் பெண்களின் விழுக்காடு 20% ஆகும். இட ஒதுக் கீட்டின் மூலம் அவர்கள் ஊக்குவிக்கப் பட்டு ஆண் பெண் இடையேயான பேதம் போக்கப்பட்டு வருகின்றது. மேலும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை 1000-த்திற்கு 93-லிருந்து  31 ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முயற்சியினை இருமடங்காக்குவதன் மூலமே இலக்கினை அடைய முடியும்.
ஹெச்.ஐ.வியால் தாக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும் ஒவ்வொரு வருடமும் புதிதாக 2.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவது வேதனைக்குரியது. 2015-க்குள் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் எதிர் ரெட்ராவைரல் சிகிச்சை (antiretroviroltherapy)  அளித்திடும் சாத்தியம் அதிகம் உள்ளது.
உலகளாவிய கார்பன் டை ஆக்சைடின் வெளியீடு 1990 ஆண்டோடு ஒப்பிடும் பொழுது 46 சதவிகிதத்திற்கும் அதிகமாகி உள்ளது. மேலும் கடல் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அதிக பயன்பாட்டிற்கு ஆட்பட்டு விட்டது வேதனைக்குரியது.   
உலக அளவில் இன்றும் ஏழை நாடுகளுக்கு உதவி என்பது கிடைக்காமல் உலகளாவிய கூட்டுப் பங்காண்மை என்பது வெறும் வெற்று வார்த்தைகளிலேயே உள்ளது. 2012-ல் ஏழைநாடுகளுக்குக் கிடைத்த உதவித்தொகை 126 பில்லியன் டாலர் ஆகும். இது 2011-ஐக் காட்டிலும் 4 சதவிகிதம்  மற்றும் 2010-ஐக்காட்டிலும் 6 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு 400-லிருந்து  210-ஆக 1990-லிருந்து 2010-க்குள் குறைக்கப்பட்டுள்ளது. 1990-லிருந்து 2011-க்குள் சுகாதார வசதிகள் 1.9 பில்லியன் மக்களுக்குக் கிடைத்துள்ளது. ஆனால், இன்னும் 2.5 பில்லியன் மக்களுக்கு அவ்வசதிகள் தரப்பட வேண்டும் என்பது கவனத்துக் குரியது.
அண்மையில் ஜூலை 2013-ல் ஐ.நா சபையின் தலைநகரான நியூயார்க்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கில் இவ்வருடத்தின் கருப்பொருளாக மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வாழ்க்கைத் தரத்தினை உறுதி செய்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தின்படி அவர்களுக்கு அதிகாரம் அளித்து பங்கேற்கச் செய்தலே அதன் மைய நோக்கம் ஆகும்.
ஜூன் 2012-ல் நீடித்த நிலைத்த வளர்ச்சி குறித்து  ஐ.நா சபை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரேசிலில் உள்ள ரியோ டிஜெனிரோவில் 50000 நபர்களை அதாவது அனைத்து நாடுகளின் ஆட்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்களை உள்ளடக்கிய மக்களைக் கொண்டு ரியோ + 20  மாநாடு நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணமான நாம் விரும்பும் எதிர்காலம் (The furure we want)  அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இம்மாநாட்டின் மிக முக்கிய அடைவாக அனைத்து நாடுகளும் ஏழ்மையை ஒழித்து நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளை (ஷிustணீவீஸீணீதீறீமீ (Sustainable Development Goals -SDG) அடைதலை ஏற்றுக் கொண்டதினைக் கூறலாம்.
1992-ம் ஆண்டின் முதல் புவி உச்சி மாநாட்டிலேயே நீடித்த நிலைத்த வளர்ச்சி அரசாங்கத்தால் மட்டும் அடைய முடியாது என்றும், அதில் வெளியிடப்பட்ட ஆவணமான செயல்திட்டம் 21-ல் அனைத்துத் தரப்பு மக்களால் மட்டுமே அடைய முடியும் என்று உணரப்பட்டது.
ஆம்! அரசாங்கம் ஆயிரம் குறிக்கோள்களைத் தீட்டி நமக்காக பல திட்டங்களை வகுத்தாலும் அதன் மகத்தான வெற்றி மக்களின் பங்களிப்பிலே உள்ளது.  மக்கள் பங்களிப்பால் இந்த உலகம் உன்னதமான நிலையை அடையட்டும்.

No comments:

Post a Comment