Saturday 25 January 2014

விகடன் விஷன் - 2013 நிகழ்வுகளும் மனிதர்களும் - உலகம்

விகடன் விஷன் - 2013 நிகழ்வுகளும் மனிதர்களும் - உலகம்
Posted Date : 15:12 (12/12/2013)Last updated : 19:12 (14/12/2013)
 ஐ.நா- ஏதாவது செய்ணா
sலகெங்கும் அதிகாரத்தால் பாதிக்கப்படும், சித்ரவதை செய்யப் படும், சொந்த பந்தங்களை இழக்கும் மக்களின் கடைசி நம்பிக்கை ஐக்கிய நாடுகள் சபை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 17 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் அந்தக் கண்ணாடி மாளிகை, பாதிக்கப்பட்ட மக்களுக் காகக் களத்தில் இறங்கியிருக்கிறதா? குரல் கொடுத்திருக்கிறதா? அதிகார சக்திகளைத் தண்டித்திருக்கிறதா?
முதலில் ஐ.நா. உருவான விதத்தைப் பார்த்துவிடுவோம். பிரிட்டனும், ஜெர்மனியும், பிரான்ஸும் புதிதாக வளர்ந்து வந்த அமெரிக்காவும் 'நாடு பிடிக்கும் போட்டி’யில் களம் இறங்கின. வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளை அபகரித்துக்கொண்டன. பிரிட்டன் இந்த உலகின் பெரும்பாலான தேசங்களைத் தன் காலனிப் பகுதியாக ஆக்கிக்கொண்டது. இவர்களின் நாடு பிடிக்கும் ஆசை தான் முதல் உலகப் போரை உருவாக்கியது. பல லட்சம் மக்களின் மரணத்துக்குப் பின், ஜெர்மானியப் பேரரசு முடிவுக்கு வந்தது. ஜெர்மனியின் காலனி நாடுகளை பிரிட்டன் ஆக்கிரமித்துக்கொண்டது. வென்றவர்கள் ஒன்றுசேர்ந்து 'தேசங்களின் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை (League of Nations) 1920-ல் ஜெனிவாவில் உருவாக்கினார்கள். பத்தே வருடங்களில் தேசங்களின் கூட்டமைப்பு’ எங்களை அவமானப் படுத்துகிறது என்று ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிலிருந்து வெளியேறின.
''நாங்கள் ஆளப் பிறந்தவர்கள்... ஆனால், நசுக்கப்படுகிறோம்!''என்று நாஜி ஜெர்மனியைக் கட்டியெழுப்பிய ஹிட்லர், போலந்து மீது படைஎடுக்க இரண்டாம் உலகப் போர் துவங்கியது. போர் ஆரம்பித்த வேகத்தில் 'தேசங் களின் கூட்டமைப்பு’ உடைந்து சிதறியது. 1945 - மே மாதம் ஜெர்மனி சரணடைந்ததும், ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டு பேரழிவு ஏற்பட்டதும், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போர், வென்றவர்கள்... தோற்றவர்கள் இரு தரப்புக் குமே பொருளாதார அவலங்களைத் தோற்றுவித்தது.
'உலகம் இன்னொரு போரைத் தாங்காது!’ என்பதைக் கடைசியாக உணர்ந்தவர்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பு என்ற ஒரு புதிய அமைப் பைத் தோற்றுவித்தார்கள். ஆனால், இதிலும் வெற்றிபெற்றவர்களின் கைகள்தான் ஓங்கியிருந்தன. நீதியின் அடிப்படையில் குற்றங்களை வரையறுத்த ஐ.நா., அதை ஒழிப்பதற்கான சட்டங்களை இயற்றியது. இனப் படுகொலை என்றால் என்ன என்பதை வரையறுத்தது. அதை விசாரிப்பதற் கான சர்வதேச நீதிமன்றங்களை உருவாக்கியது. அகதிகளுக்கான ஆவணங்களை உருவாக்கியது. உண்மையில் ஐ.நா. உருவானபோது, அது மனித குலத்துக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. இரண்டு உலகப் போர்களிலும் கொல்லப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் நினைவுகளில் இருந்து இந்தச் சட்டங்களும் தண்டனை முறைகளும் உருவாக்கப்பட்டன.
ஐ.நா. தோன்றிய பின் இந்த உலகம் மூன்றாவது உலகப் போர் ஒன்றைச் சந்திக்கவில்லைதான். ஆனால், உலகெங்கிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனித்தனியே போர்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இனத்தின், மொழியின், மதத்தின் பெயரால் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுகிறார்கள். இந்தப் போர்களை உள்நாட்டு அளவிலேயே முடித்துவைத்து உலக அளவில் பரவாமல் பார்த்துக்கொள்வதில் ஐ.நா-வின் பங்கு இருக்கிறது என்று சந்தோஷப்பட்டுக்-கொள்ளலாம். 1994-ல் ருவாண்டாவில் எட்டு லட்சம் சிறுபான்மை டுட்சிக்கள் அரசு ஆதரவுடன் கொல்லப்பட்டார்கள். இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பாளியான ராணுவத் தளபதி பிஸிமுங்கைக் கைதுசெய்த ஐ.நா., தான்சானியா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து, 30 ஆண்டு காலம் சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்தது. இந்தத் தீர்ப்பை வழங்கியவர் சிறீலங்காவின் நீதிபதியான அசோக் டி.சில்வா.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் உள்ள 10  லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை பழங்குடி மக்கள் அரசு ஆதரவுக் கூலிப் படையால் கொல்லப் பட்டு இருக்கிறார்கள். அதற்குக் காரணமாக சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் மீது போர்க் குற்ற வழக்கு தொடர்ந்து, 2008-ல் பஷீரைக் குற்றவாளி என அறிவித்து அவரைக் கைதுசெய்ய ஆணை பிறப்பித்தது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம். 'ஐ.நா-வில் உறுப்பு நாடுகளாக இருக்கும் எந்த நாடும் பஷீரைக் கைது செய்யலாம்’ என்னும் நிலையில், ஐ.நா -வில் வீட்டோ பவரில் இருக்கும் சீனா பஷீரைக் காப்பாற்றிவருகிறது. காரணம், சூடானின் பெருமளவு எண்ணெய் வயல்களால் ஆதாயம் அடைவது சீனா.
1995-ம் ஆண்டு ஜூலையில் ஐ.நா. வேடிக்கை பார்க்க... செர்பிய ராணுவம் போஸ்னியாவை ஆக்கிரமித்தது. ஸ்ரெப்ரெனிகா என்னும் இடத்தில் 8,000-க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். ஐ.நா. இந்தக் கொலைபற்றி அப்போது வாயே திறக்கவில்லை. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நடந்த துயரங் களை உலகம் கண்ணீர் வழிய வேடிக்கை பார்த்தது. இந்தப் படு கொலையை இனப்படு கொலை என அறிவித்தது, ஹேக்கில் உள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம். போஸ்னியப் படுகொலையின் காரண கர்த்தா ராட்கே மிலா டிக் கைது செய்யப்பட்டு, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருகிறார். 'அரபு வசந்தம்’ என்று அழைக்கப்பட்ட மக்கள் எழுச்சி, சிரியாவில் பற்றியபோது அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஐ.நா. சிரியாவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தபோது, ரஷ்யாவும் சீனாவும் தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிரியாவைக் காப்பாற்றியது. 
ஐ.நா-வையும், அப்போதைய ஐ.நா. செயலரான கோபி அன்னானையும் மீறி அமெரிக்கா வளைகுடாப் போரை முன்னெடுத்தது. அப்போது ஐ.நா-வால் வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர, வேறு எதுவும் செய்ய முடியவில்லை. 2001 - செப்டம்பரில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப் பட்டதற்குப் பதிலாக, ஆப்கானிஸ்தானில் இன்று வரை அமெரிக்காவால் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகிறார்கள். எண்ணைய் வளம் மிக்க அரபு நாடுகளை எண்ணெய் வளமே இல்லாத இஸ்ரேலைக் கொண்டு மிரட்டிவருகிறது
அமெரிக்கா. உலகம் எங்கும் அமெரிக்கா தலையிடாத நாடோ, செய்யாத மனித உரிமை மீறல் களோ கிடையாது. 
இது எல்லாம் தெரிந்தும் ஐ.நா. வாயே திறப்பது இல்லை. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் என வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளில் ஏதாவது ஒன்றின் ஆதரவு இருந்தால் போதும். எந்த நாட்டிலும், எந்தத் தவறையும் செய்துவிடலாம். இதுதான் ஐ.நா-வின் மனித  உரிமை அறமாக இருக்கிறது.
சரி... இலங்கையில் சர்வதேச நாடுகளின் லாபி என்ன? நேரடியாக இலங்கையில் எந்த ஆதாயமும் இல்லாத அமெரிக்கா, புவியியல்ரீதியாக சீனாவை எதிர்கொள்ள இந்தியாவைப் பயன்படுத்துகிறது. புவியியல்ரீதியாகத் தனக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்த இலங்கை... அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் என எல்லா நாடுகளையும் பயன்படுத்தி க்கொள்கிறது.
இத்தனை லாபி நடப்பதால், இலங்கைக் கொலைகள் தொடர்பாக ஐ.நா. இதுவரை நேரடியாக வாய் திறக்கவில்லை. அது மனித உரிமை அமர்வுகளில் மட்டும் பேசப்படுகிறது. இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலை ஈழத் தமிழர் கொலைகள்தான். ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தைத் தாண்டி, ஐ.நா. மன்றத்தில் ஈழத் தமிழர் படுகொலை பேசப் பட்டால், ஒருவேளை ராஜ பக்ஷே சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம். இந்தியா, சீனா, பாகிஸ்தான் என இலங்கைக்குப் பல நாடுகளின் ஆதரவு இருப்பதால், ராஜபக்ஷேவின் வெள்ளைச் சட்டையில் ஒரு கரும்புள்ளிகூட இப்போதைக்கு விழ வாய்ப்பு இல்லை. இது இலங்கைக்கும் தெரியும். ஐ.நா-வுக்கும் புரியும்!
என்ன நடக்கிறது சிரியாவில்?
sரியா’ என்ற நாட்டைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. ஆனால், சில நாட்களுக்கு முன் ரசாயனக் குண்டு தாக்குதலில் 600 குழந்தைகள் உள்பட சுமார் 1,429 பேர் கொலை செய்யப்பட்ட காட்சிகள்தான் உலகின் கவனத்தைச் சிரியா மீது திருப்பியது!
இப்படி ஒரு 'சம்பவத்துக்காக’ காத்திருந்த அமெரிக்கா, 'இதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. சிரியா மீது போர் தொடுப் பது நிச்சயம்’ என்று வெளிப்படையாக அறிவித்து, அதற்கான ஆயத்தங் களையும் தொடங்கி விட்டது. மறுபுறம், 'சிரியா மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்’ என்கிறது ரஷ்யா. சிரியாவை முன் வைத்து மூன்றாம் உலகப் போருக்கான அறிகுறிகள் தென்படும் வேளையில், அந்த நாட்டை இன்னோர் ஆஃப்கானிஸ்தானாக மாற்றுவதே அமெரிக்காவின் எண்ணமாக இருக்கிறது. எண்ணெய் வளம் மிக்க சிரியா, பற்றி எரிவதன் காரணம்தான் என்ன?
மத்தியக் கிழக்கு நாடுகள் சூழ அமைந்திருக்கும் சிரியா, ஒரு மேற்காசிய நாடு. இதன் அதிபர் பஷர்-அல்-ஆசாத். 1971-ம் ஆண்டு முதல் இப்போது வரை இவரது குடும்பத் தினர்தான் அதிபர் பதவியை அலங்கரித்து வருகின்றனர். ராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய இவரது குடும்பத்தினர், இன்றுவரை அதைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில், பெரும்பாலான அரபு நாடுகள் இஸ்ரேலுக்குத் தோள்கொடுத்து அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருக்க, சிரியாவோ, 'இஸ்ரேல், எங்கள் எதிரி’ என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதேபோல அறிவித்த ஈரான் நாட்டுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இதனால் அரபுலகின் மற்ற நாடுகளில் இருந்து சிரியா தனித்து நிற்கிறது.
இது ஒருபுறம் இருக்க, உள்நாட்டில் அதிபர் ஆசாத்தின் 42 ஆண்டுகால ஆட்சி, சர்வாதி காரமாக மாறி விட்டதால் மக்களிடையே வெறுப்பு உணர்வு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில்தான் 2011, ஜூலை மாதத்தில் 'சிரிய சுதந்திரப் படை’ என்ற குழு உருவானது. இவர்கள் அரசை எதிர்த்து ஆயுத வழியில் போராடினார்கள். சவுதி அரேபியா, கத்தார், துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவும் இந்தச் சுதந்திரப் படைக்கு ஆயுத மற்றும் நிதி உதவி அளித்தனர். சிரியாவில் போராடுவது முழுக்க முழுக்க மக்கள் இல்லை. அவர்களைவிட அதிக எண்ணிக்கை யில் அமெரிக்காவால் பயிற்று விக்கப்பட்ட ஆயுததாரிகளும் மத தீவிரவாத இயக்கங்களுமே ஊடுருவி யுள்ளன. இந்தப் போராட்டக் காரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஜோர்டானில் ஒரு முகாமையே அமைத்துள்ளது அமெரிக்கா. இந்த பலத்தின் காரணமாகவே கடந்த மூன்றே ஆண்டுகளில் சிரியாவின் பல பகுதிகளை புரட்சிப்படை கைப்பற்றியது.
தனது செல்வாக்கு எல்லை மிக வேகமாகச் சுருங்கி வருவதைக் கண்ட அதிபர் ஆசாத், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கடுமையான தாக்குதல் ஒன்றை நடத்த ராணுவத் துக்கு உத்தரவிட்டார். 'ரசாயன ஆயுதங்களால் நிகழ்த்தப்பட்ட அந்தத் தாக்குதலில், மொத்தம் 1,429 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 600 பேர் குழந்தைகள்’ என்கிறது அமெரிக்கா. இது தொடர்பாக வெளியிடப்பட்ட காட்சிகள், மனதைப் பதை பதைக்க வைக்கின்றன. ஆனால் அதிபர் ஆசாத், 'நாங்கள் அப்படி ஒரு ரசாயன தாக்குதலை நடத்தவே இல்லை’ என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். இதைத் தொடர்ந்தே சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான வேலைகளை அமெரிக்கா தொடங்கிவிட்டது. ஃப்ரான்ஸ் இதற்கு ஆதரவாக உள்ளது. சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா நேரடியாகக் களம் இறங்கியுள்ளது. இதனாலேயே இன்னோர் உலகப்போருக்கான அபாயம் தென்படுகிறது.
சிரியாவில் புரட்சிப்படை மட்டுமே கலகத்தில் ஈடுபடவில்லை. அங்கு 'ஜபாத் அல் நுஸ்ரா’ என்ற இஸ்லாமிய மத தீவிரவாத அமைப்பும் அரசுக்கு எதிரான தாக்குதலில் முக்கியமான பங்காற்றுகிறது. அல்கொய்தா பாணியிலான இந்த அமைப்புக்கு, அமெரிக்கா ஆசி உண்டு என்பது ஒரு முக்கியமான செய்தி.
சரி, அமெரிக்கா ஏன் சிரிய அரசை வீழ்த்த நினைக்கிறது? ஏனெனில், மத்தியக் கிழக்கில் தனது விசுவாசியாக இருக்கும் இஸ்ரேலுக்கு சிரியா எதிரி. அத்துடன் அமெரிக்காவின் நீண்டநாள் எதிரியான ஈரானுடன், சிரியா நட்பாக இருக்கிறது. இந்த இரண்டு பேரையும் ஒழித்துக்கட்டுவதன் மூலம் மத்தியக் கிழக்கை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம். முதலில் சிரியாவில் இருக்கும் சர்வாதிகாரத் தலைமையை அகற்றி, அங்கு ஒரு பொம்மை அரசைக் கொண்டுவந்துவிட்டால் அது நடந்துவிடும். அதன்பிறகு ஈரான் தனித்துவிடப்படும்; அதை வீழ்த்துவதும் எளிது. இதுவே அமெரிக்காவின் திட்டம் என்பது, சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து. அமெரிக்காவில் இந்தத் திட்டத்துக்கு சிரியாவின் சர்வாதி காரத் தலைமையும், அதன் மனிதாபி மானமற்றத் தாக்குதல்களும் ஓர் அடிப்படையை உருவாக்கித் தருகின்றன.
சிரியாவை முன்வைத்து உலகின் பல நாடுகளில் இருந்து உதிர்க்கப்படும் சவடால்களும் எச்சரிக்கைகளும், எஞ்சியிருக்கும் சிரிய மக்களை உயிரோடு கொன்று கொண்டி ருக்கின்றன! 
மீண்டும் அதிபர் ஆனார் ஒபாமா
We Can’ என்ற ஒற்றை ஸ்லோகன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி பதவியை மீண்டும் எட்டிப் பிடித்துவிட்டார் பராக் உசேன் ஒபாமா. அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றார். கிறிஸ்துவர் அல்லாத ஆப்பிரிக்கக் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்று ஆரம்பத்தில் ஒபாமா அடையாளப்படுத்தப்பட்டார். கென்யாவைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் தந்தைக்குப் பிறந்தவர் என்று இனத்தையும் மதத்தையும் காரணம் காட்டி, அவரை ஒதுக்கும்நிலை ஏற்பட்டது.
அப்போது, முன்பே அவர் கிறிஸ்துவராக மாறிவிட்டதையும் அவருடைய தாய் ஓர் அமெரிக்கர் என்பதையும் வெளிப்படுத்தவேண்டி இருந்தது. அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவில் அமெரிக்கா சிக்கித் தவித்த வேளையில் 2008ம் ஆண்டு முதல் கறுப்பின அதிபரானார் ஓபாமா.
உலகம் முழுவதும் ஒபாமா மீது வைத்திருந்த நம்பிக்கையை ஒர் அளவிற்கு நிறைவேற்றினார். அமெரிக்காவில் பொருளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம் காரணமாக ஒபாமா வின் செல்வாக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவலாக சரிந்த நிலையில் இருந்தது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல கருத்துகணிப்பில் ஒபாமாவின் செல்வாக்கு மேலும் சரிந்துள்ளதாக பலரும் கருத்துக் களை வெளியீட, ஓபாமாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதுபோலவே பரபரப்பான ஓட்டு எண்ணிக்கையில் குடியரசுக் கட்சியின் மிட் ரோம்னியை தொடர்ந்து முன்னணியில் இருக்க, கடைசி சுற்றில் முந்திக்கொண்டு ஜனநாயகக் கட்சியின் ஒபாமா ஐனாதிபதி ஆகிவிட்டார்.
அமெரிக்காவில் 4 ஆண்டுக்கு ஒரு முறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. ஒருவர் 2 முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். 2012 நவம்பரில் நடைபெற்ற  தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, 2013, ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி 2வது முறையாக அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
அமெரிக்காவுக்கு சவாலாக இருந்த ஒசாமா பின்லேடன், லிபிய அதிபர் கடாபி ஆகியோரைத் திட்டம் தீட்டி தீர்த்துக்கட்டியது அமெரிக்காவைப் பொறுத்தவரை ஓபாமா செய்த மிகப்பெரிய சாதனையாக தான் பார்க்கப்படுகிறது.
ஒபாமா ஒரு பல சீர்திருத்தங்களை வேகமாகச் செய்தார். ஒருபாலின திருமணத்தை ஆதரித்தார். ஓரினச்சேர்க்கையாளர் ராணுவத்தில் பணி​யாற்ற சட்டம் கொண்டு வந்தார். ஒபாமாவும் மிட் ரோம்னியும் சேர்ந்து தேர்தலுக்குச் செலவிட்ட தொகை 356 கோடி. அதேநேரம், ஒடுக்கப்பட்டவர்களையும் ஆட்சிக் கட்டிலில் உட்கார வைத்து விட்டோம் என்று பெருமைக்காக சொல்லாமல், இரண்டாவது முறையும் அவர் ஆட்சிக்கு வந்திருப்பது மறுக்க முடியாத ஓர் அங்கீகாரம்.
இதனையடுத்து வெள்ளை மாளிகையின் நீல அறையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், ஒபாமாவுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவரது குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். துணை அதிபர் முன்னதாக, அமெரிக்கத் துணை அதிபராக ஜோ பைடன் வாஷிங்டனில் பதவியேற்றார். தலைநகர் வாஷிங்டனில் பைடனின் அதிகாரபூர்வ இல்லத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்ற துணை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அமெரிக்க மக்கள் நிற வேறுபாடு களை கடந்து வாக்களித்திருக்கிறார்கள். ஒரு இஸ்லாமியருக்கு பிறந்த, கறுப்பு இனத்தை சேர்ந்த அமெரிக்க மக்களால் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.
பற்றி எரியும் உலகின் கூரை!

திபெத்... இமயத்தின் உச்சியில் இருக்கும் இந்த அழகிய பிரதேசம் இப்போது தீப்பற்றி எரிகிறது. ஒவ்வொரு நாளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு திபெத்தியன் தன் உடலில் தீ வைத்துக்கொள்கிறான். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இதுவரை சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தீக்குளித்த திபெத்தியர்களின் எண்ணிக்கை 99. அதில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 28 பேர். ஆனாலும், பிரச்னை இன்னும் அடங்கவில்லை.
இவர்களின் பிரதானமான கோரிக்கைகள் இரண்டு. 'திபெத்தை ஆக்கிரமித்து இருக்கும் சீனப் படைகள் வெளியேற வேண்டும். தலாய்லாமா, நாடு திரும்ப வேண்டும்’ என்ற இரண்டும் கேட்பதற்கு எளிமையாகத் தோன்றலாம். இதில் பல சிக்கல்கள் உள்ளன.
திபெத்தைப் பொறுத்தவரை, அது ஒரு மத அடிப்படைவாதமும், பிற்போக்குத்தனங்களும் நிறைந்த பூமி. திபெத்தில் 1950-களுக்கு முன்புவரை 'லாமாக்கள்’ என்று அழைக்கப்படும் மத குருமார்கள்தான் செல்வாக்கானவர்கள். அவர்களிடம்தான் நிலம் இருந்தது. மாட மாளிகைகளில் வாழ்ந்தனர். ஒரு மதகுருவின் மடாலயத்தில் 1,000 அறைகள் எனில், அந்த செல்வச் செழிப்பைப் புரிந்து கொள்ளலாம். இப்படி திபெத் முழுக்க 6,000 மடாலயங்கள் இருந்தன. இவர்கள் சாதாரண மக்களை வாட்டி வதைத்தனர். அந்த நிலையில்தான் 1950-களில் சீனாவில் ஆட்சிக்கு வந்தது, மாவோ தலைமையிலான சீன மக்கள் குடியரசுக் கட்சி. நிலவுடைமைக்கு எதிரானவர்களான கம்யூனிஸ்ட்கள் திபெத் மீது படையெடுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன் பிறகுதான் திபெத் பொரு ளாதாரரீதியாக வளர்ச்சி பெறத் துவங்கியது. மத குருக்கள்மட்டுமே கல்வி பெற்ற நிலைமாறி, சாதாரண மக்களும் படித்தனர். இன்று திபெத்தில் உருவாகி உள்ள வளர்ச்சிகள் அனைத்தும் சீனப் படையெடுப்பின் நேர்மறை விளைவுகளில் முக்கியமானது.
ஆனால், மாவோ காலத்து சீனா இன்று இல்லை. இன்றைய சீனா என்பது அனைத்து விதத்திலும் அமெரிக்காவுக்குச் சளைக்காத மேலாதிக்க தேசம். தனது ராணுவ பலத்தின் மூலம் திபெத்தைக் கட்டுப்படுத்திவைக்க நினைக்கிறது சீனா. தன் நாட்டின் அணுக் கழிவுகளைச் சேமித்துவைக்கும் இடமாக, திபெத்தைப் பயன் படுத்துகிறது. ராணுவ அத்துமீறல்களால் நடக்கும் உயிரிழப்புகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் கணக்கே இல்லை. ஒவ்வொரு நாளும் திபெத்தி யர்கள் அகதிகளாகத் தப்பித்துச் செல்கின்றனர். (திபெத் அகதி, சீன எல்லையைக் கடந்து செல்வது போன்ற வீடியோ கேம்கள் ஐரோப்பிய நாடுகளில் பிரபலம்) உலக ஊடகங்கள் திபெத்துக்குள் நுழைய சீனா தடை விதித்து இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் உயரத்தில் (4,900 மீட்டர்) திபெத், ஒரு தீவுபோலத் தனித்துவிடப்பட்டு இருக்கிறது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராகவே திபெத்தியர்கள் தீக் குளிக்கிறார்கள். இதுவரை தீக்குளித்த 99 பேரில் 13 பேர் பெண்கள், பாதிக்கும் அதிகமானோர் மாணவர் கள். 99 பேரில் 88 பேர் இறந்து விட்டனர்.
சீனா, 'தலாய்லாமா தற் கொலை களைத் தூண்டிவிடுகிறார்!’ என்று குற்றம்சாட்டுகிறது. இதை தலாய் லாமா உறுதியாக மறுக்கவில்லை. ''இத்தகைய உணர்வுமயமான நடவடிக்கைகளில் நான் தலையிட முடியாது'' என்று மட்டுமே சொல்கிறார்.
டென்சிங் கியாட்சோ என்ற இயற் பெயருடைய இப்போதைய தலாய் லாமா தனது 23-வது வயதில் 1959-ல் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்தார். இப்போது அவருக்கு 78 வயது. உலக நாடுகள் தோறும் சுற்றுப்பயணம் செய்யும் அவர், சீனாவின் அத்து மீறல்கள் குறித்துத் தொடர்ந்து பேசுகிறார். அதற்கு மேற்குலக நாடுகளும் மேடை அமைத்துக் கொடுக்கின்றன. நாடு கடந்த திபெத் அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கிய தலாய்லாமாவை, ஒபாமா சந்திக்கிறார். உலகின் வேறு எந்த ஒடுக்கப்படும் இனங்களுக்கும், அவர்களின் இயக்கங்களுக்கும் இத்தகைய வாய்ப்புகள் வழங் கப்படுவது இல்லை. அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசுகூடக் கொடுக்கப்பட்டது. ஆனால், உண்மை என்னவெனில், இந்தியாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ... யாருமே திபெத்தின் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாகப் பேசத் தயார் இல்லை. ஏனெனில், இவர்களுக்கு சீனாவின் நல்லுறவு தேவை. இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலில் அசைக்க முடியாத சந்தையாக சீனா உருவெடுத்துள்ள நிலையில், அமெரிக்காகூட சீனாவை நேரடியாகப் பகைத்துக் கொள்ளத் தயார் இல்லை. ஆனாலும், ஏன் இவர்கள் தலாய்லாமாவின் பிரசாரங் களுக்குக் காது கொடுக்கிறார்கள்? ஏனெனில், இவர்களின் நோக்கம், தலாய்லாமாவுக்கு மேடை அமைத்துக் கொடுத்து, சீனாவின் மனித உரிமை மீறல்களைப் பெரிது படுத்தி, அதை வைத்து சீனாவில் தங்களின் வர்த்தக நலன்களைச் சாதித்துக்கொள்வதுதான். இவை எல்லாம் தலாய்லாமாவுக்குத் தெரிந்திருந்தும் கூட, அவர் பள்ளம் இருக்கும் இடம் எல்லாம் பாய்ந்து ஓடுகிறார்.
இந்த அம்சத்தில் தலாய்லாமா மீது ஏராளமான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. '''தீக்குளித்த 99 பேரும் 'திபெத் விடுதலைஅடைய வேண்டும்’ என்பதைவிட, 'தலாய் லாமா நாடு திரும்ப வேண்டும்’ என்றுதான் முக்கியமாகச் சொல் கிறார்கள். 'அமைதியின் உருவமாக’த் தன்னைக் காட்டிக்கொள்ளும் அவர், உண்மையான அரசியல் கொள்கை களுடன் வரும் மாற்றுக்கருத் தாளர்களை ஈவு இரக்கமின்றி ஒழித்துக்கட்டுகிறார். திபெத் மக்களுக்கு சீனா வில்லன் என்றால், தலாய்லாமாக்களும் வில்லன்கள்தான். அங்கு புதிய அரசியல் இயக்கங்கள் பிறந்து வந்தால்தான், இதற்குத் தீர்வு கிடைக்கும்!'' என்கிறார்கள்.
ஒரு பக்கம் சீனா, தனது ராணுவ பலத்தின் மூலம் திபெத்தைக் கட்டுப் படுத்திவைக்க நினைக்கிறது. அதற்கு எதிராக மக்களைத் திரட்டி உண்மையாகப் போராட வேண்டிய தலாய்லாமா போன்றவர்களோ, மக்களை மதத்தின் பெயரால் தூண்டி விடுகின்றனர். இரண்டுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு பற்றி எரிகிறது 'உலகத்தின் கூரை’!
வாட்டிகனில் புதிய போப்
என்னுடைய பிரதிநிதியாக கடவுள் வானுலகில் இருப்பதுபோல, அவருடைய பிரதிநிதியாக நான் பூமியில் நியமிக்கப்பட்டு இருக்கி றேன்!'' - போப்பாகப் பதவியேற்ற கையோடு ஜார்ஜ் மரியோ பெர்                                      காக்ளியோ ட்வீட்டியது இது!
இதற்கு முன்னர் பதவியில் இருந்த போப் பதினாறாம் பெனடிக்ட் முதுமை காரணமாகப் பதவி விலகுவதாக அறிவித்தாலும், அவருடைய ராஜினாமாவுக்குப் பின்னால் பலத்த சர்ச்சைகளும் சந்தேகங்களும் இல்லா மல் இல்லை. இந்நிலையில், உலகின் போக்குகளுக்கு அசைந்து கொடுப்பவராகவும், கத்தோலிக்க மாண்பு களை அதன் உன்னதம் குலையாமல் காப்பவராகவும் இருக்கும் ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம் என்ற குரல்களுக்கு மத்தியில், வாட்டிகனின் புதிய போப்பாக லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  இதற்கு முன்னர் ஐரோப்பியர்கள் மட்டுமே அதிகாரம் மிக்க போப் பதவியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில்,  முதன் முதலாக மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில் இடம் பெறும் ஏழை நாடான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஒருவர் போப்பாகத்  தேர்வு செய்யப்பட்டிருப்பது, உலக கிறிஸ்துவர்களிடையே ஆச்சர்யம் விதைத் திருக்கிறது. ஐரோப்பியர்களை வெறுக்கும்  கால் பந்தாட்ட வீரர் மரடோனா, ''நான் அடுத்த முறை இத்தாலி செல்லும்போது புதிய போப்பைச் சந்திப்பேன்'' என்று உருகும் அளவுக்கு அமெரிக்க எதிர்ப்பாளர் களான லத்தீன் அமெரிக்கர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது புதிய போப் நியமனம்.
1936-ல் அர்ஜெண்டினாவில் பிறந்த ஜார்ஜ் மரியோ 1969-ல் ஒரு பங்குக் குருவாகப் பதவிஏற்றார். பின்னர், பேராயராக உயர்ந்து 2001-ல் கர்தினால் ஆனவர் இப்போது போப் பிரான்சிஸ் ஆகியிருக்கிறார். ஒரு இயேசு சபை பாதிரியாராகத் தன் வாழ்வை அர்ஜெண்டினா வின் பியூனஸ் அயர்சில் துவங்கிய ஜார்ஜ் மரியோ, அடித்தட்டு மக்களுடன் நெருங்கிப் பழகியவர், எளிமையானவர் என்று பெயர் பெற்றவர். இவர் மீதும் இயேசு சபைப் பாதிரியார்கள் இருவரைக் கடத்தினார் என்ற புகார் கூறப்பட்டு, பின்னர் அது எடுபடாமல் போனதெல்லாம் தனிக் கதை.
ஜார்ஜ் மரியோ ஒரு பங்குக் குருவாக வாழ்வைத் துவங்கியது முதல் இப்போது போப்பாக உயர்ந்தது வரை நவீனத் தொழில்நுட்பத்தைத் தேவாலயத்துக்குள் புகுத்தியவர். ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் லத்தீன், ஸ்பானிஷ், ஜெர்மானிய மொழியில் சகஜமாக உரையாடும் ஜார்ஜ் மரியோ தலைமை ஏற்றிருப்பது பழமையையும் பாரம்பரியத்தையும் மிக இறுக்கமாகப் பேணும் கத்தோலிக்கத் தலைமை பீடத்துக்கு.
முற்போக்கான பாதிரியார் களால் லத்தீன் அமெரிக்காவில் முன் மொழியப்பட்டதுதான் 'விடுதலை இறையியல்’ என்னும் கோட்பாடு. 'வெள்ளை இயேசுவை வெளியேற்றிவிட்டு கறுப்பு இயேசுவை வரவேற்போம்’ என்றும், 'இயேசுவைத் தேவாலயத்தில் இருந்து மீட்டு, அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்போம்’ என்பதும்தான் அந்தக் கோட்பாடுகளின் அடிப் படை. பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். கத்தோலிக்கப் பெண் துறவிகளுக்கும் ஆண் பாதிரியார்களுக்குரிய சகல உரிமை களும் வழங்கப்பட வேண்டும். ஓரினச் சேர்க்கை யாளர்களைக் கத்தோலிக்கத் தலைமை அங்கீகரிக்க வேண்டும் என்ப தெல்லாம் வாட்டிகனை நோக்கி எழுப்பப்படும் பல்வேறு கோரிக்கைகள். 
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த ஜார்ஜ் மரியோ, முதலாம் பிரான்சிஸாக அந்தக் கோரிக்கைகளை எப்படி எதிர்கொள்வார் என்பது இப்போது உலக கிறிஸ்துவர்களின் எதிர்பார்ப்பு!
இலங்கை காமன்வெல்த் மாநாடு
'தமில் சிங்கல முச்லிம் தென்சுரவ செயிய வெண்டாம்.’
'புலிக் கொசில் வ்ந்து போகும் மெக்கரோ, நீ சிறிலங்காவைத் தூண்டாடாதோ.’
- காமன்வெல்த் மாநாட்டுக்காக இலங்கைக்கு வந்த சேனல் 4 ஊடகக் குழுவினர் சென்ற இடங்களில் எல்லாம், தமிழைத் தப்பும் தவறுமாக எழுதிய அட்டைகளைப் பிடித்துதான் சிங்களர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். ராணுவத்தைக்கொண்டு தமிழ் மக்களைக் கொன்ற சிங்கள அரசு, இப்போது சிங்களர்களைக்கொண்டு தமிழைக் கொலை செய்கிறது!
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மற்றொரு சம்பிரதாய நிகழ்வாக, இலங்கையில் அரங்கேறி முடிந்திருக்கிறது காமன்வெல்த் மாநாடு. 'திட்டமிட்டபடி மாநாடு நடக்குமா... இந்தியா, அதில் பங்கேற்குமா?’ என்ற சர்ச்சைகளும் விவாதங்களும் நீடித்த நிலையில், இரு தரப்பினர்தான் மாநாட்டில் கவனம் ஈர்த்தனர். பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் குழுவினர் ஒரு தரப்பு; சேனல் 4 குழுவினர் மற்றொரு தரப்பு. சிங்கள அரசாங்கம் குறி வைத்ததும் இந்த இரு தரப்பைத் தான்!
ஆவணப்பட இயக்குநர் கேலம் மெக்ரே செல்லும் இடங்களில் எல்லாம், சிங்கள அரசுக் குழுக்கள் தப்புத் தப்பாக தமிழில் எழுதிய அட்டைகளை ஏந்தி நின்று, அவரை கொழும்புக்குத் துரத்துவதிலேயே குறியாக இருந்தன. ஒருகட்டத்தில் கடுப்பான மெக்ரே, 'எங்கு வேண்டுமானாலும் சென்று செய்தி சேகரிக்கலாம்’ என்றுதானே விசா கொடுத்தார்கள். ஆனால், அவர்கள் எங்களை நகரவே விடவில்லை. இது என் ரகசியப் பயணம். ஆனால், என் வருகையை வெளிச்சமிட்டுக் காட்டி, என் ஊடகப் பணியை முடக்கியிருக் கிறது சிங்கள அரசாங்கம். கருத்துச் சுதந்திரமும் ஜனநாயகமும் காமன் வெல்த்தின் அடிப்படைக் கோட்பாடு கள். ஆனால், அதற்குத் தலைவராக இருக்கும் ராஜபக்ஷேவே அதைக் காற்றில் பறக்க விடுகிறார்!'' என்று கொந்தளித்தார்.
இவருக்கு ஆக்ரோஷ எதிர்ப்பென் றால், இங்கிலாந்து பிரதமர் கேமரூனைச் சுற்றி விசுவாசத் துதிபாடிகளைக் குவித்திருந்தது சிங்கள அரசாங்கம். ஆனால், கேமரூனின் யாழ்ப்பாண நூலக வருகையின்போது, அரசாங்கக் கட்டுப்பாடுகளை மீறி ஆயிரக்கணக் கான தமிழர்கள் திரண்டு விட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் வழக்கமான வேட்டி- சட்டையைத் துறந்து பளிச் கோட்-சூட்டில் கேமரூனோடு நின்றபடி புகைப்படங் களுக்கு போஸ் கொடுத்தனர். நம்புவீர்களா..? மிக சமீபத்தில் தாங்களே வாக்களித்துத் தேர்ந் தெடுத்த விக்னேஸ்வரனுக்கு எதிராக அப்போது கோஷங்களை எழுப்பினார்கள் ஈழத் தமிழர்கள்!
வெளிநாட்டுப் பிரதமர் ஒருவர், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதன்முறையாக வருகிறார் என்பதால், வலிகாமம், நல்லூர் போன்று சில இடங்களில் கேமரூனின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள்.
வவுனியாவில் இருந்து கேமரூன் குழுவினரிடம் மனு அளிக்க வந்திருந்த சாந்தினியிடம் பேசினேன். ''யுத்தம் முடிந்த இந்த நான்கு ஆண்டுகளில், இதுவரை ஏகப்பட்ட மனுக்களை பல்வேறு மனித உரிமை அமைப்புகளிடம் கொடுத்திருப்போம். நவி பிள்ளையிடம் கொடுத்தோம், சேனல் 4 குழுவினரிடம் கொடுத் தோம். அவர்கள், மனுக்களைப் பெற்றுக்கொண்டு எங்களின் துயரங்களைக் காது கொடுத்தேனும் கேட்பார்கள். ஆனால் விக்னேஸ்வரன், எங்கள் மனுக்களை வாங்கக்கூட மறுத்து ஓடினார். கேமரூன், சேனல் 4 குழுக்களுக்கு இருக்கும் அக்கறைகூட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. தவிரவும் இந்தியா ஒவ்வொரு முறையும் எங்களை ஏமாற்றுகிறது. கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எங்கள் உறவுகளை விடுவிக்க, மேற்கத்திய நாடுகள்கூட அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், இந்தியா அதைத் தடுக்கிறது என்று எங்கள் மக்கள் குமுறுகிறார்கள்!'' என்று உணர்ச்சி மேலிடப் பேசினார்.
வடக்குப் பகுதியில் மக்களோடும் தலைவர்களோடும் நேரத்தைச் செலவிட்ட கேமரூன், தென் இலங்கையில் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் அறக்கட்டளையில் கிரிக்கெட் விளையாடினார். 'பிரிட்டன் பிரதமரை சிலர் தவறாக வழிநடத்துவதாகவும், வடக்கில் வசந்தம் வந்துவிட்டதாக வும் கேமரூனிடம் தெரிவித்தார் முரளிதரன்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

உதயன் நாளிதழ் அதிபரும் கூட்டமைப்பு எம்.பி-யுமான சரவண பவன் நம்மிடம் பேசும்போது, ''எங்கள் அலுவகத் துக்கு வந்த கேமரூன், எரிக்கப்பட்ட எங்கள் அச்சு இயந்திரங்களையும், கொல்லப்பட்ட ஊழியர்கள், தொடர்ச்சியாக நடைபெற்ற தாக்கு தல்கள் பற்றிய விவரங்களையும் விரிவாகக் கேட்டறிந்தார். ஊடகங்களைச் சுதந்திரமாக இயக்க முடியாத சூழலை அவரிடம் சுட்டிக் காட்டினோம். எங்கள் பிரச்னைகளைக் கேட்டவர், அதைக் கவனிப்பதாகக் கூறிச் சென்றார். இந்த மாநாடு, இந்தியாவின் மீது பெரிய சந்தேகங்களைக் கிளப்பிச் சென்றிருக் கிறது. எம்மக்களிடம் இந்தியா மீதான கோபம் அதிகரித்திருக்கிறது!'' என்று உள்ளூர்வாசிகளின் கொந்தளிப்பான மனநிலையைப் பிரதிபலித்தார்.
53 நாடுகள் அங்கம் வகிக்கும் காமன்வெல்த் கூட்டமைப்பின் 49 நாடுகளே, கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றன. அதிலும்  23 நாடுகளே மேல்நிலை பிரதிதிகளை அனுப்பிவைத்தன. ஏனைய நாடுகள், ஒப்புக்குச் சிலரைப் அனுப்பியதோடு அமைதி யாகிவிட்டன. இந்த மாநாட்டில் அதீதக் கவனத்தை ஈர்த்தது, மொரிஷியஸ் நாட்டின் புறக்கணிப்பு தான். காரணம், 2015-ம் ஆண்டு வரை இலங்கைதான், காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைமைத்துவ நாடு. அடுத்தபடியாக அந்தப் பொறுப்பை ஏற்க இருக்கும் நாடு மொரிஷியஸ். ஆனால், 'இலங்கையில் மனித உரிமைகள் கவலை அளிக்கும் விதத்தில் இருப்ப தால், இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாது’ என்று அறிவித்தது. அடுத்த மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்கக் கலந்துகொள்ளுமாறு காமன்வெல்த் செயலர் விடுத்த அழைப்பையும் நிராகரித்தார் மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம் கூலம்.
சர்வதேச அரங்கில் சிங்கள அரசுக்கு எதிரான மூக்கறுப்பாக மொரிஷியஸின் திடமான நடவடிக்கையைக் குறிப்பிடுகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். 'இன்னும் ஐந்து மாத காலத்துக்குள் உள்நாட்டு மனித உரிமை தொடர்பான நம்பத்தகுந்த உள்நாட்டு விசாரணை தேவை. நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற் றப்பட வேண்டும். இல்லையெனில், மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. அமர்வில் இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம்!’ என்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் காலக்கெடுவை சடுதியில் நிராகரித்தது இலங்கை அரசாங்கம்.
'இலங்கை மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏனென்றால், நாங்களே சொந்தமாக விசாரிக்க ஆணைக் குழுவை அமைத்துள்ளோம். புலிகளை அழித்தேன். அவர்களின் 80 சதவிகிதக் கட்டமைப்பை மீட்டேன். இதை யெல்லாம் செய்த என்னால், நம்பகமான விசாரணையை மட்டும் மேற்கொள்ள முடியாதா? எங்களுக்கு எவரும் கெடு விதிக்க முடியாது!’ என்று கேமரூனுக்கு உடனே பதிலடி கொடுத்தார் ராஜபக்ஷே.
டேவிட் கேமரூனின் அழுத்தம், மொரிஷியஸின் புறக்கணிப்பு, ஊடகங்களின் கூக்குரல் எல்லாம் நடந்தது காமன்வெல்த் அமைப்புக்கு வெளியில்தான். இலங்கைப் போரில் கொல்லப்பட்ட மக்கள் பற்றியோ, இப்போது எஞ்சியிருப்பவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியோ காமன்வெல்த் அமைப்பினுள் யாரும் வாய் திறக்கவே இல்லை.
பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளின் கூட்டமைப்பான காமன் வெல்த் அமைப்புக்கு ராஜபக்ஷேவைத் தலைவராக்கி ஓய்ந்துவிட்டது கொழும்பு மாநாடு. இனி அடுத்தகட்ட காட்சிகள் மார்ச் மாதம் ஜெனீவாவில் அரங்கேறும். அதற்குள் உலகை இன்னொருமுறை அதிரச் செய்யும் ஆவணப்படம் ஒன்றை சேனல் 4 தயாரித்திருக்கும். போருக்கு முன்னர் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்த அத்தனை நாடுகளும், இப்போது மனித உரிமை பாவனை காட்டுகிறது. ஆனால், இது எதையும் அறியாத ஈழ மக்கள், கைகளில் மனுக்களோடு அலைந்துகொண்டு இருக்கிறார்கள்... யாராவது வந்து தங்களின் துன்பங்களைத் தீர்க்க மாட்டார்களா என்று!

சைபர் குற்றங்கள்-உலகம் முதல் உள்ளூர் வரை

தொழில்நுட்பம் வளரவளர பிரச்னைகளும் கூடவே சேர்ந்து வளருகிறது. முன்பெல்லாம் காவல் நிலையங்​களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இப்போது, சைபர் க்ரைம் பிரிவு களில்தான் கூட்டம் நெட்டித் தள்ளுகிறது. செல்போனில் மிரட்டல், ஆபாச
எஸ்.எம்.எஸ்., நைஜீரியர்களின் மோசடியில் சிக்கி ஏமாறுகிறவர்கள் என்று இங்கே படை யெடுப்பவர்கள் ஏராளம். இதில் சிக்கிக்கொள் பவர்களும் ஏராளம். விடுபட முடியாமல் தவிர்ப்பவர்களும் ஏராளம். நாடும் நகரமும் டிஜிட்டல் வயப்படுவதைத் தொடர்ந்து அனுபவிக்கும் அவஸ்தைகள் ஏராளம்!
சைபர் வார்!
இந்தியாவில் உள்ள மத்திய மற்றும் பெரு நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புக்கான விசேஷ சாஃப்ட்வேர்களை தயார் செய்கிறது ஃபிக்ஸ்-நிக்ஸ் என்ற தனியார் நிறுவனம். சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சண்முகவேல் சங்கரன் நம்மிடம் பேசினார். ''உலகின் பெரிய நாடுகளுக்கு இடையே இந்த நிமிஷம்கூட சைபர் வார் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மூன்றாவது உலகப்போர் ஏற்பட்டால், நிச்சயமாக அது சைபர் போராகத்தான் இருக்கும். தரைப் படை, விமானப் படை, கப்பல் படை எதுவுமே  இல்லாமல் ஏ.சி. அறைக்குள் இருந்து கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்திப் பேரழிவை உண்டாக்க தயாராகி வருகிறார்கள். உதாரணத்துக்கு, 2010-ம் ஆண்டு 'ஸ்டக்ஸ்நெட்' என்ற வைரஸை அமெரிக்கா ஏவியது. அது, ஈரான் நாட்டு அணுமின் உலை ஒன்றை நோக்கிப் போனது. அங்குள்ள முக்கிய சிஸ்டத்தை தாக்கியது. இதனால், அது செயல் இழந்தது. அந்த அட்டாக் ரிவர்ஸ் ஆகி, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கிய கம்ப்யூட்டர் மையங்களையும் தாக்கி சேதப்படுத்தியது. ஈரான் விடுமா? பதிலுக்கு, அமெரிக்க வங்கிகள் மீது சைபர் போர் நடத்தியது. இப்படி மாறி மாறி போர் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் முக்கிய வெப்சைட்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4,191 சைபர் அட்டாக் நடந்திருக்கிறது (முழு விவரங்களுக்கு... பார்க்க  வரைபடம்). எந்த ஒரு அவசர சூழ்நிலையையும் எதிர்கொள்ள எல்லா வகையிலும் இந்தியாவும் தயாராகத்தான் இருக்கிறது. ப்ரிசம், எட்வர்ட் ஸ்நவ்டன் லீக்குக்கு பிறகு, இந்தியர்களால் தயாரிக் கப்பட்ட மென்பொருட்களை மட்டுமே மத்திய அரசு உபயோகப்படுத்த விரும்புகிறது. இந்தவகையில், சுமார் 20 இந்திய தகவல் பாதுகாப்பு(information security)   சாஃப்ட்வேர் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட மத்திய அரசின் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்'' என்றார்.
மெயிலைத் திறந்தால் வைரஸ் வரும்!
லாட்டரியில் நீங்கள் பரிசு வென்று இருக்கிறீர்கள் என்றோ, விலை உயர்ந்த கார் உங்களுக்கு காத்திருக்கிறது என்றோ வரும் மின்னஞ்சல்கள் உங்களுக்கு பரிச்சயமாக இருக்கக் கூடும். 'என் ராஜ் ஜியத்தில் பாதி தருகிறேன்’ என்றுகூட உங்களை வசியப்படுத்தலாம். ஆனால், அத்தனையும் டுபாக்கூர். உங்களை ஏமாளியாக்க செய்யப்படும் முயற்சிகள். தொடர்பே இல்லாத, முகமறியாத நபர் எதற்காக இப்படித் தர முன்வருகிறார் என நாம் யோசிப்பதில்லை. அந்த அஞ்சலுடன் இணைக்கப்பட்டிருக்கும் டாக்குமென்ட்களை நாம் தயக்க மின்றி திறந்து பார்த்தவுடன், Phishing என்று அழைக்கப்படும் தீங்கிழைக்கும் வைரஸ்கள் யாருடைய அனுமதியுமின்றி நம் கணினியில் வந்து அமரக்கூடும். நம் கணினியில் நாம் வைத்துள்ள மற்ற டாக்குமென்ட்கள் மற்றும் சாஃப்ட்வேர்களை அழிக்கக் கூடும். வங்கித் தளங்களில் நாம் பயன் படுத்தும் பாஸ்வேர்டை நமக்குத் தெரியாமல் பதிவுசெய்து, இந்த வைரஸை பரப்பியவருக்கு பரிமாற்றம் செய்யும். தவிர, அந்த வைரஸ் வெகுவேகமாக நம் கணினியையும் அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் மற்ற கணினிகளுக்கும் வேகமாகப் பரவக்கூடும். றிலீவீsலீவீஸீரீ என்று அழைக்கப்படும் தூண்டில் இன்னொரு வகை அட்டாக். நிஜமான இணையதளம் போன்றதொரு தோற்றத்தில் தயாரிக்கப்படும் போலி தளங்கள் Phishing site என அழைக்கப்படுகின்றன.
உதாரணத்துக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இணையத்தளம் போன்றதொரு போலியான தளத்தின் முகவரியுடன் உங்களுக்கு ஒரு மெயில் வரலாம். அத்தகைய இணைய தளங்களுக்குச் சென்று நாம் நம்முடைய பாஸ்வேர்டு கொடுத்து ஓப்பன் செய்யும்போது, நம் விவரங்கள் அந்தப் போலி தளத்தை இயக்கும் நபருக்குப் போய் சேருகிறது. பிறகென்ன? அந்த வசூல் ராஜாக்கள் நம்முடைய வங்கிக் கணக்குகளில் இருந்து சுல பமாகப் பணத்தைத் திருடுகின்றனர்.
இதிலிருந்து தப்பிக்க வேண்டு மெனில், போலி சாஃப்ட்வேர்களை எக்காரணம் கொண்டும் பயன் படுத்தாதீர்கள். தீங்குகள் தரக்கூடிய பல வைரஸ் மற்றும் நாசம் விளைவிக்கக் கூடிய சாஃப்ட்வேர்கள் அத்தகைய போலிகளுடன் மறைந்து வரலாம். ஆண்டாண்டு காலமாக நாம் சேர்த்து வைத்திருக்கும் தகவல்கள் ஒரு நொடியில் காணாமல் போய்விடும். எந்த பிரபல நிறுவனத்தின் சாஃப்ட்வேர்களை பயன்படுத்தினாலும் அவற்றின் லேட்டஸ்ட் வெர்சன்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
மெமரி கார்டு, பென்டிரைவ் ஆகியவை மூலமும் வைரஸ் பரவும் ஆபத்து உண்டு. உங்கள் கணினியில் வேறு நபர்களின் மெமரி கார்டு, பென்டிரைவ் ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிஃபென்டர் என்ற மென்பொருளை இலவசமாகத் தருகிறது. www.microsoft.com  என்ற முகவரியில் இருந்து நீங்கள் அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ் தடுப்பு சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்துவது சரியல்ல. அத்தகைய சாஃப்ட்வேர்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு, அதனால் சில சமயங்களில் பிரச்னைகள் ஏற்படும்.
சென்னையில் நடந்த சில குறிப்பிடத்தக்க சைபர் க்ரைம் குற்றங்களாக அ.தி.மு.க-வின் இணையதளத்தை சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த இன்ஜினீயர் ஈஸ்வரன் முடக்கி பிடிபட்டு தண்டனை பெற்றது. பெங்களூருவில் ஐ.டி. துறையில் பணிபுரியும் என்ஜினியர் ஒருவரின் மனைவி தனது சொந்த மாமியார் மற்றும் நாத்தனாரின் ஆபாச படங்களை நெட்டில் அப்லோடு செய்தது. சென்னை, சூளைமேட்டில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வில் ஹும்ஸ் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, சாக்லெட் கொடுத்து, அக்கம் பக்கத்து குழந்தைகளை கவர்ந்து, பின்னர் அவர்களை தகாத உறவுக்கு கட்டாயப்படுத்தி, அதை வீடியோவும் எடுத்து அப்லோடு செய்து இப்பொழுது பிடிபட்டு சிறையில் கம்பி எண்ணுவது போன்றவற்றை குறிப்பிடலாம்.
சென்னையில் உள்ள நாஸ்காம் (தகவல் தொடர்பு மற்றும் சாஃப்ட்வேர் தொழிற்சாலை​களின் கூட்​டமைப்பு) மண்டல இயக்குனர் புருஷோத்தமனிடம் இதுபற்றி கேட்டோம். ''இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் ஐ.டி. மற்றும் பி.பி.ஒ. துறைகளில் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். 1.2 கோடி பேர் இந்தத் துறைகளில் மறைமுக வேலைவாய்ப்பை பெற்று வருகிறார் கள். 100 பில்லியன் டாலர் புழங்கும் துறைகள் இவை. தமிழ்நாட்டில் மட்டும் மூன்றரை லட்சம் பேர் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி தரும் துறைகள் இவை. இப்போது, டேட்டா திருட்டு தான் பெரிய பிரச்னை. வெளிநாட்டு கம்பெனிகள் நம்ம ஊர் சாஃப்ட்வேர் நிறுவனங்களை நம்பித்தான் தங்களின் ரகசியங்களைத் தருகின்றன. இங்குள்ள சிலர் பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த ரகசியங்களைத் திருடுகின்றனர். இது தெரிந்தால், இந்திய சாஃப்ட் வேர் நிறுவனங்களின் நம்பகத்தன்மை பற்றி வெளிநாட்டினர் என்ன நினைப்பார்கள்? சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் எங்களிடம் வந்தார். வேலையை விட விரும்புவதாகவும் ஆனால், அவரை அந்த நிறுவனம் விடுவிக்க மறுப்பதாகவும் புகார் சொன்னார். விசாரித்தால், அவர் என்னென்ன ரகசியங்களை திருடியிருக்கிறார் என்று அந்த நிறுவனம் பெரிய பட்டியலே தருகிறது. இப்படிப்பட்டவரை என்ன செய்வது? இதேபோல், இன்னொரு நிறுவனத்தில் டேட்டா திருடிய நபரை பிடித்து ஜெயிலுக்கு அனுப்பினோம். பொதுவாகவே, ஐ.டி. துறையினரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும்தான் இந்தத் துறையில் ஈர்க்கப்படுகிறார்கள். அதேபோல், பாதிப்புகளும் இவர்களிடம்தான் அதிகம். அறிவு சார்ந்த தொழில்நுட்பத்தின் நல்லது கெட்டது குறித்து பள்ளியில் இருந்தே படிப்படியாக போதிக்க வேண்டும். அப்போது​தான், எதிர்காலத்தில் கெட்டது நடக்காது'' என்றார்.
கண்ணுக்குத் தெரிந்த எதிரியாக இருந்தால் சமாளிக்கலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை என்ன செய்வது? உஷாராக இருக்க வேண்டிய தருணம் இது.

No comments:

Post a Comment