Saturday 25 January 2014

கடல்சார் வளங்கள்

கடல்சார் வளங்கள்
Posted Date : 19:12 (16/12/2013)Last updated : 19:12 (16/12/2013)
பழநி பாண்டியன்
கடல்சார் வளங்கள் என்பது கடலிலுள்ள இயற் தொகுதி, ஆற்றல்சார் மற்றும் உயிரியல் வளங்களை உள்ளடக்கியது. பொதுவாக உயிரியல் வளங்களைப் பற்றியே பரவலாக அறியப்பட்டாலும் மற்ற இரு வளங்களும் மிகவும் முக்கியமானவை. கடலிலுள்ள இயற்தொகுதி வளங்கள் புதுப்பிக்க இயலாதவை. ஆனால் ஆற்றல்சார் மற்றும் உயிரியல் வளங்கள்புதுப்பிக்கத் தகுந்தவை. கடல் சட்டதின் படி ஒவ்வொரு நாடும் அதன் எல்லையிலிருந்து 200 கடல் மைல்கள் வரை உள்ள கடல் வளத்தின் மீது ஒரு உரிமையைப் பெற்றுள்ளது. இந்தப் பகுதிதான் தனித்துவப் பொருளாதார மண்டலம் (EEE) என வரையறுக்கப்பட்டுள்ளது.
 அ) இயற்தொகுதி வளங்கள்
நிலவியல் தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும் அனைத்து இயற்கை வளங்களும் இயற்தொகுதி வளங்களாகும். இவற்றை உலோக வளங்கள் மற்றும் உலோகம் அல்லாத வளங்கள் எனப் பிரிக்கலாம்.
(1) உலோக வளங்கள்
கனிம வளங்களை வெட்டியெடுப்பதில் உள்ள முக்கிய சவால்கள் அதன் உற்பத்திச் செலவும், சுற்றுச் சூழல் மீதான தாக்கமும்தான். கடலில் உலோகங்களை வெட்டி எடுப்பது பொருளாதார ரீதியில் லாபகரமாகவும் அமைகிறது. எடை குறைந்த உலோகமான மாங்கனீசு கடல் நீரிலிருந்து இயற்கை மற்றும் வேதி வினைகள் மூலம் கோல்ப் பந்து வடிவ உருண்டைகளாகப் பெறப்படுகிறது.
இதில் 30% மாங்கனீசு, 20% இரும்பு, 1.25% நிக்கல், 1% கால்பர் மற்றும் 0.25% கோபால்ட் உள்ளது. இதில் நிக்கல், காப்பர், கோபால்ட் ஆகிய மூன்றும் நிலத்தில் மிக குறைவாகக் கிடைப்பதால் இதன் கடல் மூலங்கள் முக்கியமானது. அதிலும் கோபால்ட் உலோக மூலம் கடலிலிருந்துதான் அதிகம் கிடைக்கிறது. இந்தக் கனிமங்கள் கிழக்கு பசிபிக் கடலில்தான் அதிகம் கிடைக்கிறது. ஆனாலும் அதிகச் செலவு மற்றும் உரிமை மீதான நிலையற்ற தன்மையால் புதிய இடங்களைக் கண்டறிவதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
உலோக சல்ஃபைடு படிவுகள் கடலில் இருக்கும் முக்கிய வளமாகும். இது நிலவியல் பலகைகளின் எல்லையில் அமைந்துள்ள நீரியல் வெப்ப திறப்புகளுக்கு அருகில் அதிகம் காணப்படுகிறது. இந்த சல்ஃபைட் படிவுகள் செங்கடல், கலிபோர்னியா, வளைகுடா, கலாபோகஸ் முகடுகள் போன்ற பகுதிகளில் உள்ளது. இதில் இரும்பு, தாமிரம், காரீயம், வெள்ளி, காட்மியம் மற்றும் ஜிங்க் அதிகம் உள்ளது. ஆனால் போதுமான தொழில் நுட்பங்களின்மையாலும், அதிக செலவாலும், உரிமைப் பிரச்சனைகளாலும் இதை பிரித்தெடுப்பது பெரும் சவாலாக இருக்கிறது.
(2) உலோகம் - அல்லாத வளங்கள்
பாஸ்போரைட் முடிச்சுகள், உலோக மணல் போன்றவை வட அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடற்கரையின் கண்டச்சரிவு மற்றம் கண்டத் திட்டுகளில் காணப்படுகிறது. பாஸ்பேட்டானது தாவர வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது வேதி உரங்கள் மூலம் பெறப்படுகிறது. கடலில் உள்ள பாஸ்போரைட் முடிச்சுகளில் 30% பாஸ்பேட் காணப்படும். ஆனால் ஆழமான பகுதிகளில் மட்டுமே இது காணப்படுவதால் இதைப் பிரித்தெடுப்பது பொருளாதார ரீதியில் லாபகரமானதாக இல்லை. மேலும் பல உலோகம் அல்லாத கனிமங்கள் கடல் சூழலில் கிடைக்கிறது. அவை,
உப்பு
கடல் நீரை ஆவியாக்குவதன் மூலம் பெறப்படும் சாதாரண உப்பு (33%) கால்சியம் கார்பனேட்டால் ஆனது சிமெண்ட் தொழிற் சாலைகளிலும், ஜிப்சம், புரோமின், கேசோலின் மற்றும் மருந்துப் பொருட்கள் உற்பத்தியிலும் பயன்படுகிறது.
மண் மற்றும் கடற் கற்கள்
கடலில் தோண்டியெடுக்கப்படும் பொருட்களில் எண்ணெய் மற்றும் வாயுவிற்கு அடுத்த பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது மண் மற்றும் கடற்கற்கள் ஆகும். கான்கிரீட் உருவாக்கம், சாலையிடுதல், நில மேம்பாடு போன்றவற்றில் கடற்கற்கள் பயன்படுத்தப்படுகிறது. ஐஸ்லாந்து, இஸ்ரேல், லெபனான், ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் இத்தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. நமீபியா மற்றும் ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் வைரம் வெட்டியெடுக்கப்படுகிறது.
எண்ணெய் மற்றும் வாயு
உலகின் 30% பெட்ரோலியம் மற்றும் 25% இயற்கை வாயு கடலில் இருந்தே பெறப்படுகிறது. ஆனால் நிலப் பகுதிகளில் ஏற்படும் உற்பத்திச் செலவை விட இங்கு அதிகமாகிறது. இதுவரையில் மிகக் குறைந்த அளவே எண்ணெய் மற்றும் வாயு மூலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் எண்ணெய்த் தேவைகளை சமாளிப்பதில் கடல்வளம் முக்கியப் பங்காற்றும். நவீன தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து உற்பத்திச் செலவைக் குறைப்பதுதான் முக்கிய சவால். பெர்சியன் வளைகுடா, வடக்குக் கடல், மெக்சிகோ வளைகுடா, கிழக்கு கனடா, வடக்கு ஆஸ்திரேலியா, தெற்கு கலிபோர்னியா போன்ற பகுதிகள் எண்ணெய் மற்றும் வளங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
வாயு ஹைட்ரைடுகள்
உறைந்த மீத்தேன் கட்டிகளை வாயு ஹைட்ரேடுகள் எனப்படும் மீத்தேன் 37 டிகிரி பாரன்ஹீட்டில் உறைநிலையை அடைந்து பனி படர்ந்து காணப்படும். இது எண்ணெய் மற்றும் வாயுவை விட அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நன்னீர்
கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டமானது ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா மற்றும் சென்னையிலும் செயல்பட்டு வருகிறது. நன்னீரில் 0.01% அளவு உப்பும் கடல் நீரில் 3.5% அளவு உப்பும் காணப்படும். கடல் நீரின் உப்பின் அளவைக் கறைத்து பயன்பாட்டுக்கு ஏற்ற நீராக மாற்றும் தொழில்நுட்பம் நன்கு வளர்ந்து வருகிறது. வடித்தல், உறைவித்தல், எதிர் சவ்வூடு பரவல் ஆகிய தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படுகிறது. இதில் எதிர் சவ்வூடு பரவல் முறையே எளிமையானது.
ஆ) கடல் ஆற்றல் வளங்கள்
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தவிர, புதுப்பிக்கத் தகுந்த மின் ஆற்றலையும் கடலில் இருந்து பெற முடியும். கடல் நீரோட்டங்கள், அலைகள், ஓதங்கள், வெப்பச் சரிவளவு போன்றவற்றின் மூலம் மின் ஆற்றலை உற்ப்பத்தி செய்யலாம். பிரான்சில் ரான்சி ஆறு கடலில் கலக்கும் லாரேன்ஸ் கழிமுகத்தில் உள்ள கடல் ஓத ஆற்றல் நிலையம் உலகின் முதல் மையமாகும். ரஷ்யாவின் கிசால்யகுபா, கனடாவின் பன்புவளைகுடா போன்ற பகுதிகள் ஓத ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடலின் மேல்மட்ட மற்றும் கீழ்மட்ட வெப்ப வேறுபாட்டைப் பயன்படுத்தியும் மின்சாரம் தயாரிக்க முடியும்.
(இ) உயிரியல் வளங்கள்
பவளப் பாறைகள், அலையாத்திக் காடுகள், கடற்புற்கள் போன்ற கடல்சார் சூழலியல் அமைப்புகளில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கிறது. கடல் தாவரம் மற்றும் விலங்குகள்தான் மனிதர்களின் 4% புரதச் சத்துத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. மனித உணவுப் பயன்பாட்டில் உள்ள மீனில் 85% கடலிலும், 15% நன்னீரிலிருந்தும் பெறப்படுகிறது.
ஏஞ்சல் மீன், பரகுடா மீன், கோமாளி மீன், நண்டு, டால்பின், ஈல், ஜெல்லி மீன், சிங்க மீன், கணவாய் மீன், பஃபர் மீன், செயில் மீன், கடல் பஞ்சு, கடல் குதிரை, கடல் ஊமத்தை, சில் சுறா, நட்சத்திர மீன், ஸ்புங் திருகை, வால்ரஸ் திமிங்கலம் போன்றவை முக்கிய கடல் உயிரினங்கள் ஆகும்.
கடல் மாசடைதல், எண்ணெய்க் கசிவு, பன்னாட்டு கடல் வளத்தின் மீதான உரிமை, இரு நாடுகளுக்கு இடையேயான கடல் பரப்பில் உள்ள உரிமை போன்றவற்றில் கடல்சார் வளங்கள் பல பிரச்சனைகளைக் கொண்டிருந்தாலும் கடல் சூழலியலானது மனித வாழ்க்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நன்மைகளைச் செய்கிறது.

No comments:

Post a Comment