Saturday 25 January 2014

கற்க கசடற: TET தேர்வு கல்வியியல்

கற்க கசடற: TET தேர்வு கல்வியியல்
Posted Date : 11:12 (17/12/2013)Last updated : 17:12 (17/12/2013)
முனைவர் ஆர்.கே.பி.காளியம்மாள்
கல்வியும் உளவியலும் இரண்டறக் கலந்த ஒன்றாகும். இவற்றின் தன்மைகளையும், பண்புகளையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் இரண்டுக்கும் இடையே உள்ள பிணைப்பு நமக்குத் தெரியும்.
உளவியல் ஓர் அறிமுகம்
உளவியல் என்பது கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது. Psychology- Psyche-உயிரைக் குறிக்கும். Logus அறிவியலைக் குறிக்கும். அறிவியல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் மனித நடத்தை பற்றிய விவரங்களைத் திரட்டி தொகுக்க உளவியலாளர்கள் பல முறைகளைக் கையாளுகின்றனர். இவ்வாறு உளவியல் படிப்படியாக வளர்ச்சியுற்று இன்று சமூக அறிவியல் துறையில் முன்னிலை வகிக்கின்றது.இன்று உளவியல் என்பது மனித நடத்தையையும், அனுபவங்களையும் ஆராயும் அறிவியலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
1. தனது அனுபவத்தைத் தானே உள்நோக்கி ஆராய்ந்து பார்ப்பது அகநோக்குடைமையாகும்.
2. ஒரு நிகழ்ச்சியை அது நிகழும் இயற்கையான சூழ்நிலையில் உற்று நோக்கி ஆராய்தல் களஆராய்ச்சி முறையாகும்.
ஆரம்பத்தில் உளவியல் என்பது ஆன்மாவைப் பற்றியது, பின்பு மனம் பற்றியது, பின்னர் நடத்தை பற்றியது என்று உளவியல் அறிஞர் கூறுகிறார். Titchner என்பவர் வடிவமைப்பு (Structuralism) கொள்கையை உருவாக்கினார். J.P.Watson என்பவர் நடத்தைக் (Behaviourism) கொள்கையை உருவாக்கினார். Jung என்பவர் தனிநபர் (Individual) உளவியலை தோற்றுவித்தார்; Sigmund Freud என்பவர் உளப்பகுப்பாய்வு (psycho-analysis) கொள்கையை உருவாக்கியவர். Carl Rogers, Maslow ஆகியோர் மனித நேய (Humanistic Psychology) உளவியலை முதன்மைப் படுத்தி உள்ளனர்.
அறிவின் வாயில்கள்
மனிதனின்  புலன் உறுப்புகள் 'அறிவின் வாயில்கள்' (Gateway of Knowledge). ஏனெனில் மனிதன் வெளி உலகம் பற்றிய அறிவினை செய்தியாகத் தனது புலன் உறுப்புகள் வாயிலாகத்தான் பெறுகிறான். புலன்காட்சியின் அடிப்படை, புலன் உணர்வுகள் தாமெனினும் இவ்விரண்டையும் பிரித்துத் தனித்தனியே அனுபவிக்க முடியாது. புலன் உணர்வு என்பது புலன் ஒன்று தூண்டப்படுவதன் உடனடிப் பயனாகும். புலன்காட்சி = புலன் உணர்வு + பொருள் அறிதல்
குழந்தைகளின் கற்றலில் முதல் வழியாக அமைவது புலன்காட்சி. புலன் காட்சியின்றி நினைவும், கற்பனையும் தோன்றாது. புலன்காட்சி ஏற்படுவதில் பகுத்தறிதல், தொகுத்தறிதல் இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. புரூனரின் பொதுமைக்கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாடு மூன்று நிலைகளைக் குறிக்கும். EIS – E-Enactive(செயல்படுநிலை), I-Iconic(உருவகநிலை), S- Symbolic(குறியீட்டு நிலை) புலன்காட்சி, தூண்டல் இருக்கும் வரை ஏற்படும். பின்பு சாயலாக மனதில் பதிவு செய்யப்படுகிறது. காட்சிச்சாயல், கேள்விச்சாயல், சுவைச்சாயல், மனச்சாயல், தொடுசாயல்கள் போன்றவையாகும். சிலர் கண் உள்ளம் (Eye-Minded) வேறு சிலர் (Ear-Minded) செவியுள்ளம் படைத்தவர்களாகவும் இருப்பர். எனவே ஆசிரியர்கள் பாடங் கற்பிக்கையில் மாணவர்களின் பல புலன்களையும் பயன்படுத்திக் (Multisensory Approach) கற்பித்தல் நன்று. சிறு குழந்தைகளிடம் வெகு தெளிவான திருத்தமான, துல்லிய விவரங்களுடன் கூடிய சாயல்களைத் தோற்றுவிக்கும் திறன் காணப்படும். புலன்காட்சி போன்றே தோன்றக்கூடிய இத்தகைய சாயல்களை 'மீத்தெளி சாயல்கள்' (Eidetic Images) என்று உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அறிதிறன்
'நெய்சா’ என்ற அறிஞரின் கருத்துப்படி புலன் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகளைத் தொகுத்தல், சுருக்கியமைத்தல், விரிவுப்படுத்துதல், நினைவுகூர்தல் என்ற உளச்செயல்களின்  அடிப்படையில்  ஆராய்ந்து அதைப் பற்றி அறிந்து கொள்ளுதல் அறிதிறன் (Cognitive ability) எனப்படும். வெளி உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் உளச் செயல்களே 'அறிதிறன் செயல்கள்' (Cognitive process) எனப்படும். இவை அனைத்தும் நமது புலன்காட்சி,கவனம், சிந்தனை,ஆராய்ந்தறிதல், பிரச்னைகளுக்குத் தீர்வுகாணல், நினைவுபடுத்துதல் ஆகிய செயல்களுக்கு அடிப்படையாக அமைகிறது.
அறிதிறன் வளர்ச்சி
மனிதனிடம் இயல்பாகவே இரு அடிப்படைப் போக்குகள் இருப்பதாக பியாஜே கருதுகிறார். இவை ஒருங்கமைத்தல் (Organization), இணங்குதல் (Adaptation) இவ்விரு போக்குகளுக்கு இடையே சம நிலைப்படுத்தும் (Equilibrium) செயல்முறை படுத்த உதவுகிறது. இணங்குதலில் பொருந்துதல் (Accomodation) தன்வயப்படுத் துதல் (Assimilation) ஆகியன காணப்படுகின்றன. குழந்தை வளர்ச்சி அடைய, அடைய சூழ்நிலையினின்றும் அது பெறும் அனுபவங்கள் எவ்வாறு  ஒருங்கிணைக்கப்படுகின்றன, எவ்வாறு இணைக்கம் பெறுகின்றன என்பதை அக்குழந்தையின் மனவளர்ச்சி நிலையைப் பொறுத்ததாகும். பியாஜே அறிதிறன் வளர்ச்சியை நான்கு நிலைகளில் கூறுகிறார். புலன் இயக்கம் (0-2 yrs) செயலுக்கு முற்பட்டநிலை (2-7 yrs) புலனீடான நிலை (அ) பருப்பொருள் நிலை (7-11 yrs) கருத்தியல் நிலை (11yrs & above).. ஒரு பொருளைப் பற்றி அறிய, அதை உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ கையாள வேண்டும். இவ்வகை செயல்களின் தொகுப்பை 'ஸ்கீமா' என்று பியாஜே குறிப்பிடுகிறார்.
1. Ego centric செயலுக்கு முற்பட்ட (pre-operational stage) நிலையில் காணப்படுகிறது.
2. உடல் ரீதியாகவும், உளரீ தியாகவும் கையாளுவது ஸ்கீமா (Schema) ஆகும்.
புலன்வழிக் கற்பனையின் உயர்நிலையான ஆராய்ந்தறிதல் (Reasoning) என்பது பற்றி அறியும் முன்னர் 'தீர்மானித்தல்' (Judging) என்பது மனதிலுள்ள இரு கருத்துகள் (அ) எண்ணங்களின் தொடர்பை அறிவதே ஆகும். எ.கா: அந்த கூரை வீடு பற்றி எரிகிறது என்னும் தீர்மானித்தல் காட்சிப்பொருள் பற்றிய எண்ணங்கள் இணைக்கப்படுகிறது. ஆனால் 'வாய்மையே வெல்லும்' என்பதில் கருத்துப்பொருட்கள் பற்றிய எண்ணங்கள் இணைக்கப்படுகின்றன.
ஆய்வுச் செயல்
பிரச்னையின்றி ஆய்வு இல்லை. ஜான்டூயீ ஆய்வுச்செயல் ஐந்து முக்கிய படிகளைக் கொண்டது என்கிறார். அவை 1. புதிர் அறிதல் 2. செய்திகளைத் தேடித்தொகுத்தல் 3. கருதுகோள்களைத் தோற்றுவித்தல் 4. கருதுகோளைச் சரிபார்த்து உண்மையறிதல் 5. உண்மையென்று அறிந்த கருதுகோளைப் புதுநிலைகளுக்கு மாற்றுதல்.
1. ஆய்வு என்பது 'புதிர் தீர்த்தல்' (அ) பிரச்னைக்கு தீர்வுகாணுதல் என்பதாகும்.
மொழி
மொழி என்பது தனது எண்ணங்களைப் பிறருக்குத் தெரியப்படுத்த மனிதனால் விடுக்கப்பட்ட குறிகள் (அ) அடையாளங்களைக் (Signs and Symbols) கொண்ட ஒரு தொகுப்பாகும். மனிதனது அனுபவத்தில் பங்கு பெறக்கூடிய பொருட்கள், நிகழ்ச்சிகள், செயல்முறைகள் ஆகிய யாவற்றையும் குறிக்கக் கூடியவை 'சொற்கள்' எனப்படும். ஒலித் தொகுப்புகள் மொழியில் காணப்படும். மொழியிலுள்ள குறிகள் வாய்மொழிக் குறிகளாகவோ (அ) எழுதப்படும் எழுத்துக் குறிகளாகவோ இருக்கலாம். முதலில் ஒலிக்குறிகள் தோன்றி,  மொழி வளர்ச்சியடைந்தபின் அவை வரிவடிவத்தில் அமைக்கப்பட்டன.
சிந்தித்தல் என்பது நமது உடலில் உள்ள பேச்சுறுப்புகளின் அசைவு என்று வாட்சன் (Watson) கருதினார். ஆனால் மொழியும், சிந்தித்தலும் தனியான இரண்டுவேறுபட்ட அடிப்படைகளிலிருந்து எழுவன என்று வைகாட்ஸ்கி (Vygotsky) கருதினார். குழந்தைகளின் மொழி வளர்ச்சியில் ஆசிரியரின் பங்காவது குழந்தையின் முழுப் பரிமாண வளர்ச்சியில் மொழித்திறன் வளர்ச்சி என்பது மிகக் கடினமான செயல், ஆனால் குறிப்பிடத்தக்க செயலாகும். ஏனென்றால் செய்திகள், நோக்கங்கள், உணர்வுகள், கருத்துகள் ஆகியவற்றை வெளிப்படுத்த உதவும் முக்கிய கருவி மொழியே ஆகும். மொழி வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக அமைவது ஊக்குவித்தலே ஆகும்.
மனித வளர்ச்சி
வளர்ச்சி என்பது தொடர் நிகழ்வுகளின் தோற்றமாகும். 'வாழ்க்கை நிலைமை' (Life space) விரிவடைதலைக் குறிப்பதாகும். மனித வளர்ச்சியில் 5 வித முன்னேற்றங்கள் காணப்படுகிறது என்று ஆண்டர்ஸன் குறிப்பிடுகிறார். வளர்ச்சி நிலைகள் பற்றி ஃப்ராய்ட் (Freud) ஐந்து நிலைகளாகக் குறிப்பிடுகிறார். (Oral,Anal,Phallic,Latent and Genital stages). எரிக்சன் (E.H.Erickson) என்பவர் மனித வளர்ச்சியை 8 நிலைகளாக குறிப்பிடுகிறார்.
இரண்டு முக்கிய வளர்ச்சி பருவங்களாவது I  பிறப்புக்கு முந்தைய நிலை (Prenatal stage) 
(I). முளை நிலை (Germinal period) முதல் 2 வாரங்கள் (ii). பிண்ட நிலை (Embryonic stage) 2 முதல் 8 வாரங்கள்  (iii). முதுசூல் நிலை (Foetal stage) 9 வாரம் முதல் பிறப்பு வரை
ii. பிறப்புக்குப் பிந்தைய நிலைகள் (Postnatal stages)
1. குழவிப்பருவம் Infancy (birth to 2 yrs)
2. குழந்தைப்பருவம் (Childhood)-3 to 10 yrs
3. குமரப்பருவம் (Adolescence)-11 to 19 yrs
4. முதிர்பருவம் (Adulthood)-20 to 50 yrs
5. தளர்வுப்பருவம் (Senescence)  50 to 60yrs
6. முதுமைப்பருவம் (Old Age) 60 yrs above upto death
மக்டூகலின் (Mcdougalin)  எண்ணப்படி, மனித மனவெழுச்சிகள் இயல்பூக்கங்களிலிருந்து உருவாகுபவையாகும். இயல்பூக்க நடத்தை என்பது மூன்று கூறுகளைக் கொண்டது. 1.அறிவு (Cognition) 2.உணர்வு (Affection) உடலியக்கம் (Conation).
கோல்பர்க் (Kohlberg) குழந்தைகளின் ஒழுக்க வளர்ச்சியில் 3 நிலைகளைக் குறிப்பிடுகிறார். 1.மரபுக்கு முற்பட்ட நிலை (Pre-Conventional state) 2.மரபு நிலை (Conventional) 3.மரபுக்குப் பிந்திய நிலை (Post- Conventional stage).
கற்றலும் வளர்ச்சியும்
கற்றலுக்கேற்ற முதிர்ச்சியினையும் ஆயத்த நிலையினையும் வளர்ச்சி தோற்றுவிக்கிறது. பொருத்தப்பாட்டினைப் பெற்று (Adjustment) நல்வாழ்க்கை வாழ, கற்றல் ஒருவனுக்கு உதவுகிறது. எனவே வளர்ச்சி,கற்றல் பொருத்தப்பாட்டினைப் பெறுதல் ஆகிய மூன்று கருத்துக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகும். கற்றல் அனைத்து உயிரிகளிடமும் காணப்படுகிறது. இது தொடர்ச்சியானது கருவறை முதல் கல்லறை வரை தொடர்ந்து நிகழ்வது, கற்றலால் நடத்தை செம்மையுறுகிறது.கற்றல் நோக்கத்தோடு கூடியது, பன்முகம் கொண்டது. கற்றல் அனுபவங்களால் விளைவது. எனவே 'கற்றல் என்பது பிறரால் அளிப்பது அன்று சுய அனுபவங்கள் வாயிலாக ஒவ்வொருவரும் முயன்று அடைவதாகும். சித்திரமும் கைபழக்கமும் செந்தமிழ் நா பழக்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
1  தார்ண்டைக்கின் முயன்று தவறிக் கற்றலில் (Trial and Error) பூனை பயன்படுத்தப்பட்டது
2. விளைவு விதியே எல்லா வகைக் கற்றலுக்கும் அடிப்படை என்பது தார்ண்டைக்கின் நம்பிக்கை
மூன்று விதிகள். அவை 1.ஆயத்த விதி (Law of Readiness)  2. பயிற்சி விதி (Law of Exercise) 3. விளைவு விதி (Law of Effect).
கற்றல் பற்றிய கோட்பாடுகள்
தூண்டல் துலங்கல் கோட்பாடுகள்: தார்ண்டைக்கின் இணைப்புக் கோட்பாடு; பால்லோவின் ஆக்க நிலையிறுத்தக் கோட்பாடு, ஸகின்னரின் செயல்படு ஆக்கநிலையிறுத்தக் கோட்பாடு.
அறிவுப்புலக் கோட்பாடுகள்: முழுமைக்காட்சி கோட்பாடு (Gestalt) ,அறிவுக்களக் கோட்பாடு (Kurt lewin Theory), டால்மனின் கோட்பாடு.
எல்லாவகைக் கற்றல்களும் ஒரே மாதிரியானவை அல்ல,'எளிய கற்றலிலிருந்து சிக்கலான பிரச்னைகளையும் தீர்க்க கற்றுக் கொள்வது வரை கற்றலில் எட்டு வகைகள் என்று இராபர்ட் காக்னே கூறுகிறார்.
S,S-R,M,V,D,C,R,P- Signal, S-R Learning, Motor, Verbal, Discriminative, Concept, Rule and problem-Solving, learning
1.Gestalt என்பது ஜெர்மன் சொல், முழுமையான அமைப்பு (அ) முழுமைக் கோலம் என்று பொருள்.
2. உட்காட்சி வழிக்கற்றலை கோஹலர் மனிதக் குரங்குகளை வைத்து பரிசோதனை நடத்தினார்.
நினைவாற்றல்
நினைவும், மறதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். நினைவில் இல்லாதது ''மறந்துவிட்டது'என்றும் மறக்காமல் இருப்பது நினைவில் இருப்பது என்றும் கூறுகிறோம்.
சிறந்த நினைவின் வகைகள் (Types of Good Memory)
விரைவு, துல்லியம், கால அளவு,  எளிதாக வெளிக்கொணர்தல், பொருத்தமான பயன்படக்கூடிய தன்மை, கற்கும் பொருளின் தன்மை, கற்பவரின் இயல்புகள், கற்கும் முறைகள் ஆகிய மூன்றும் நினைவின் வகைகள் ஆகும். அவை: 1.புலனறிவு நினைவு (Sensory Memory) 2.குறுகியகால நினைவு (STM) 3.நீண்ட காலநினைவு (LTM)
மனதில் இருத்தலை அளவிடும் முறைகள்:
1.மீட்டுக் கொணர்தல் முறை (Recall Method) 2. மீட்டறிதல் முறை (Recognition Method)
நல்லொழுக்கம்
மனிதவாழ்க்கைக்கு நல்லொழுக்க நடத்தையின் தேவை மிக அவசியம். நல்லொழுக்கத்துடன் இணைந்து அதனைச் செயற்படுத்த உதவும் வலுவான மன உறுதியும் (strong will) மாணவர்களிடையே வளர்க்கப்பட வேண்டும். நல்லொழுக்க வளர்ச்சியில் ஆசிரியர், பெற்றோர்கள் ஆகியோரது முன் மாதிரி (Role Model) நடத்தை மிக முக்கியமானது.மாணாக்கரிடம் நல்லொழுக்கம் வளர்ச்சியுற ஆசிரியர் சில முறைகளைக் கையாளலாம்.குறிப்பாக அறநெறிப்போதனை (Moral Instruction) ஒழுக்கப் பயிற்சியினை மறைமுகமாகப் (Hidden Curriculum) பள்ளிகள் அளிக்கின்றன. மதிப்புக் கல்வி (value Education) etc.
கற்றல்
கற்றல் என்பது ஒருவன் தன் வாழ்வில் அறிவு பெற பழக்கவழக்கங்கள் எழ,மொழி வளர, மனப்பான்மைகள் உருவாக,செய்திறன்கள் ஆகியவற்றைப் பெறுகின்ற நிலையினைக் குறிக்கும்.
திரும்பக்கற்கும் முறை (அ) சேமித்தல் முறை (Relearning & Saving method) நமக்கு மறதி ஏற்படக்காரணம்.கற்ற ஒன்று நினைவில் தங்காததே ஆகும். மறத்தல் என்பது சிதைத்தல் மற்றும் குறுக்கீடு என இரு அணுகுமுறையாகும்.
1.முன்னோக்கத்தடை (Pro-Active Inhibition) 2. பின்னோக்கத்தடை (Retro-Active Inhibition)
நுண்ணறிவு
மனிதர்கள் விலங்குகளிலிருந்து பல்வேறு வகைகளில் மாறுபட்டு மேம்பாட்டுடன் திகழ்வதற்கும் தனித்தன்மைகளுடன் விளங்குவ தற்கும் அடிப்படைக்காரணம் நுண்ணறிவு. இவற்றின் இலக்கணம் பற்றிப் பல கருத்துகள் உளவியல் உலகில் நிலவுவது போன்று நுண் ணறிவின் அமைப்புப் பற்றியும் பல கோட்பாடுகள் காணப்படுகின்றன.
ஒற்றைக்காரணிக் கோட்பாடு (Unitary Or MonarchicTheory)-
Binet  இரட்டைக்காரணிக் கோட்பாடு (Two factor Theory)-Spearman
குழுக்காரணிக் கோட்பாடு (Group factor Theory)-Thurstone
பல்காரணிக் கொள்கை  (Multifactor Theory)-Thorndike
கில்போர்டின் வடிவமைப்பு நுண்ணறிவு கோட்பாடு (Triarchy Theory)- Guilford
ஓவ்வொரு மனிதனும் தனித்தன்மை பெற்று, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதையே தனியாள் வேற்றுமைகள் (Individual difference) என்கிறோம்.
1944ம் ஆண்டு வெஸ்லர் முதிர் பருவத்தினரது நுண்ணறிவு அளவுகோலை(WAIS - Wechsler Adult  Intelligence Scle) நியூயார்க்கில் வெளியிடப்பட்டது.இதில் 6 சொற்சோதனை (Verbal-test) 5 செயற்சோதனை (Performance test) படிக்க, எழுதத்தெரிந்தவர்களுக்கான சோதனை Army-Alpha test ஆங்கில மொழியறிவு இல்லாதவர்களுக்கான சோதனை Army- Beta test
1. குழுக்காரணிக் கோட்பாடு என்பது காரணி பகுப்புக் கோட்பாடு (அ)  அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்று கூறுவர்
2. நுண்ணறிவுக் கட்டமைப்பு கோட்பாட்டை 1966ல் கில்போர்டு (Guilford) என்பவர் வெளியிட்டார்.
3. நுண்ணறிவின் தந்தை ஆல்ப்ரட் பீனே (Alfred Binet).
ஆக்கத்திறன்
ஆக்கத்திறன் எனப்படுவது ஆக்கச்சிந்தனையுடன் தொடர்புடையது. பயனுள்ள முறையில் ஆக்கச்சிந்தனை அமைவதற்கு உதவக்கூடிய பல்வேறு பண்புகள், ஆற்றல்கள் ஆகியவற்றின் தொகுப்பை நாம் ஆக்கத்திறன் எனக்குறிப்பிடலாம். ஆக்கத்திறன் என்பது பல்வகைப்பட்டவை. அதாவது கவிதை புனைதல்,சிற்பங்கள் வடித்தல், ஓவியம் தீட்டுதல்,இசை அமைத்தல்,       உடை வடிவமைத்தல், உணவுப்பொருட்கள் தயாரித்தல் போன்றவையாகும்.
1.ஆக்கத்திறன் விரிசிந்தனையோடு (Divergent Thinking)
2. நுண்ணறிவு குவிசிந்தனையோடு (Convergent Thinking) தொடர்புடையது.
மாணவர்கள் அனைவரும் அவரவர் தத்தம் திறமைகளை முழு அளவில் பயன்படுத்திச் சிறப்பான வளர்ச்சியை அடைதலில் அவர்களுக்கு உதவ, ஆசிரியர்கள் ஊக்குவித்தலின் தன்மை பற்றியும், பல்வேறு வகைப்பட்ட ஊக்கிகள் பற்றியும் தெரிந்து வைத்திருத்தல் இன்றியமையாதது ஆகும். ஊக்கமின்றி கற்றல் இல்லை. ஒருவன் தான் மேற்கொள்ளும் எல்லாச் செயல்களிலும் சிறப்பு மிக்க சாதனையை அடைய முற்படுதல் (Striving for Excellence) இவ் வூக்கியின் இலக்கமாக அமைகிறது.
1. ஊக்குவித்தலை தோற்றுவித்தவர் ஆப்பிரஹாம் மாஸ்லோ (Motivation –need hierarchy Theory)
2. உந்தக் குறைப்பு கோட்பாட்டை உருவாக்கியவர் ஹல் என்பவர் (Hull’s drive reduction Theory)
வகுப்பறை கற்றல்  கற்பித்தலில் மாணவர்களை ஊக்குவிக்கும் வழிமுறைகளை ஆசிரியர்கள் திறம்படக் கையாள வேண்டும். அடைவூக்கத்தை மேம்படுத்த வேண்டும். வெற்றி - தோல்விகளின் பங்கு (Failure & Success) பரிசுகளும்தண்டனைகளும் (Rewards & Punishments) புகழ்வதும், இகழ்வதும் (Praise & Blame), பின்னூட்டம் வழங்குதல் (Feedback) போன்றவையாகும். மனிதன் தான் மேற்கொள்ளும் எல்லாச் செயல்களிலும் சிறப்புமிக்க உயர்சாதனையை அடைய முற்படுதல்.இதற்கு அடிப்படையாக அமைவது அவாவு நிலையே (Level of Aspiration) ஆகும்.
1.அவாவு நிலையை தோற்றுவித்தவர் டெம்போ ஆவார்.
2. வகுப்பறைக் கற்பித்தலுக்கு ஊக்கிகளாக செயற்படுவது ஒத்துழைப்பும் போட்டியும் (co-operation & Competition)
வகுப்பில் ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்படும் சூழ்நிலை வகுப்பறை சூழ்நிலை எனப்படும். ஆசிரியர் மாணவர்களிடம் பழகும் முறை,ஆசிரியர் மாணவரின் நிலைக்கேற்ப பாடத்தைக் கொண்டு செல்லும் திறன் பற்றி  நெட்பிளாண்டர் (Ned Flander) என்பவர் இருவருக்கும் இடையே உள்ள இடைவினையை அளக்க,ஒரு இடைவினைப் பகுப்பாய்வு (Interaction Analysis) என்பதனை ஏற்படுத்தியுள்ளார். இதில் பத்து பிரிவுகள் உள்ளன. அதில் 7ஆசிரியரின் பங்கு, 2மாணவர்களின் பங்கு மற்றும் 1பொதுவான பங்கு.
FIAC – (Flander’s Interaction Analysis Categories) பிளாண்டரின் இடைவினைப் பகுப்பாய்வுப் பிரிவுகள் கூலியின் வகைப்பாடுபடி (Cooley’s classification)குழுக்களை முதன்மைக்குழுக்கள் (Primary Group) மற்றும் துணைக்குழுக்கள் (Secondary Groups), ஸன்னரின் வகைப்பாடு குழுக்களை உட்குழு (In groups) மற்றும் வெளிக்குழு (Out groups) என்று பிரிப்பர்.
ஆளுமை என்பது லத்தீன் மொழியில் இருந்து பிறந்தது. இவை மனிதனின் உடலியக்கம், அறிவு, சிந்தனை, மனவெழுச்சி, சமூகம், நீதி ஆகிய பண்புகளின் கூட்டமைப்பு என்பதாகும். மனிதன் சிக்கலான சமூகத்தின் உறுப்பினர்.அவன் பிறக்கும் பொழுதே ஆளுமைக்கான சில பரம்பரைப் பண்புகளைப் பெற்றுள்ளான். அவன் வளரும் பொழுதே வெளியுலகைப் புரிந்து கொள்ளும் திறன் வளர்வதுடன், அவனுடைய ஆளுமையும் வெளிப்படுகிறது. தனிமனிதனுடைய ஆளுமையானது பரம்பரைக் காரணிகளைவிட, சூழ்நிலைக் காரணிகளாலேயே அதிக மாறுதல்களைக் கொண்டுள்ளது. ஆளுமை காரணிகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை: 1. உடலியல் 2.வேதியியல் 3. சூழ்நிலை 4. கற்றல் காரணிகள். ஆளுமையை அளவிடும் முறைகள் அகவய, புறவய மற்றும் புறத்தேற்று நுண்முறைகள் ஆகும். நுண்ணறிவு, ஊக்கம், மனவெழுச்சி, மனப்பான்மை உளவியல் காரணிகள் ஆகும். குடும்பம்,வீடு,பள்ளி,மொழி சமூகக்காரணிகள் ஆகும். உளப்பகுப்பாய்வு கொள்கையை அடிகோலியவர் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud) என்பவர். மைத்தடவுச் சோதனை (Ink Blot test) புறத்தோற்று நுண்முறை ஆகும்.
1. தைராய்டு சுரப்பியல் சுரக்கும் ஹார்மோன் தைராக்ஸின் (Thyroxin) எனப்படும்.
2.ஆண்களின் பாலூட்டி சுரப்பிகளான Testisலிருந்து ஆன்ட்ரோஜன் (Androgen) சுரக்கிறது.
3. பெண்களின் பாலூட்டி சுரப்பிகளான Ovary லிருந்து (Oestrogen & Prostrogen) ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கிறது.
நாட்டம் என்பது குறிப்பிட்ட ஒரு துறையில் கவர்ச்சியும் அத்துறையில் திறமையுடன் செயலாற்ற ஆர்வமும், அதில் தேர்ச்சி பெறக்கூடிய தகுதியும் ஒருவனிடம் உள்ளதைக் குறிப்பதாகும்.ஷோரின் இசை நாட்டச் சோதனை, பல்நாட்டச் சோதனையில் (DAT) 8 உள்சோதனைகள் உள்ளன.
மனப்பான்மை என்பது ஒருவர் தமது சூழ்நிலைக் கூறுகளான மனிதர்கள், பொருள்கள்,கருத்துகள் ஆகியன இவற்றில் பொதுவாக மூன்று அம்சங்களைக் குறிப்பிடலாம். அவை: சிந்தனை,உணர்வு,செயல் ஆகும். மனப்பான்மையின் சிந்தனைக்கூறு நம்பிக்கை (Belief) உணர்வுக்கூறு மதிப்பு (Value) செயல்கூறு தயார்நிலையைக் குறிக்கிறது.
1. மனப்பான்மையை அளவிடுவதற்கு தர்ஸ்டன் (Thurstone) முறை மற்றும் லிக்கர்ட் (Likert method) முறையைப் பயன்படுத்தலாம்.
கவர்ச்சி என்பது ஒன்றில் விருப்பம் (அ) ஒன்றினால் ஈர்க்கப்படுதல் ஆகும். சுய விருப்பத்தோடு ஈடுபடுதல் இதற்கு அடிப்படையாகும். கவர்ச்சியும், கவனமும் ஒன்றோடொன்று இணைந்தவை.
KPIR- Kuder Preference Interest Record என்பாரது விருப்பார்வப் பதிவேடு.
SVIB- Strong’s Vocational Interest Blank ஸ்டிராங் என்பாரது தொழிற் கவர்ச்சிப் பட்டியல்
மனநலவியல்
மக்களிடையே மனக்கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கவும், மனநலத்தைப் பேணி மனநோய்களிலிருந்து விடுபடச் செய்வதற்கு அறிவியலே மனநலவியல் ஆகும். மனநலவியல் என்பது வழிமுறையாக செயல்பட்டு மனநலம் இலக்கை அடைய முற்படுகிறது. மனநலம் எனப்படுவது, மனக்கோளாறுகள் இல்லாமை மட்டுமன்று, தனக்கும், பிறருக்கும் மகிழ்ச்சியும் பயனும் விளைகின்ற வகையில் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பொறுத்தப்பாட்டுடன் செயற்படுவதை இது குறிப்பதாகும். சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப ஒருவன் தொடர்ந்து இச்செயலில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் உளவியல் வலியுறுத்துகிறது.
மனமுறிவு (Frustration) என்பது செயலைச் செய்யவிடாமல் தடுத்தல் (அ) செய்யாத நிலையில் ஏற்படும் மனநிலையாகும் எனக் கூறலாம். சரியான இலக்குகளை (அ) மனவிருப்பங்களை முடிவெடுக்க முடியாத நிலையில் ஒருவருக்குத் தடுமாற்றம் ஏற்படுகிறது. இதனால் விளையும் கவலையும், துயரமும் மனப்போராட்டம் (Conflicts) ஆகும். இவை மூன்று வகைப்படும். 1. அணுகுதல்அணுகுதல் 2.விலகுதல்விலகுதல் 3. அணுகுதல்விலகுதல் மனப்போராட்டம் ஆகும்.
மனிதன் தன் சமூக, உளத்தேவைகளுக்கும், சூழ்நிலைகளின் யதார்த்த நிலைகளுக்கும் இடையே ஒரு சமரசப் போக்கை மேற்கொள்ள வேண்டிய சமூகப் பிராணியாகத் திகழ்கிறான்.இவ்வாறு வாழ்க்கையில் காணப்படும் பல்வேறு சூழ்நிலைகளுக்கும், மனிதத் தேவைகளுக்கும் ஏற்ப இணக்கமான முறையில் நடந்து கொள்வதைத்தான் பொருத்தப்பாடு அல்லது இணக்கம் என்று கூறுகிறோம். முக்கியமாக மனமுதிர்ச்சி பெறா இளம் பருவத்தினர் தங்களது பல்வேறு தேவைகளுக்கிடையே எழும் முரண்பாடுகளால் தோன்றும் மனப்போராட்டத்தையும் அதன் விளைவாக ஏற்படும் மன இறுக்கத்தையும் சமாளிப்பதற்காக பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர்.இவற்றையே தற்காப்பு நடத்தைகள் என்கிறோம்.
1. வாய் திக்கிப் பேசும் ஒருவன் பேச்சுப்போட்டியில் முதல்பரிசு பெறுவது பகற்கனவு காணல் (Fantasy (or) Day Dreaming) ஆகும்.
2. சீ.. சீ... இந்தப் பழம் புளிக்கும் (Sour Grapism) என்பது காரணம் கற்பித்தலுக்கு (Rationalization) உதாரணமாகும்.
3. வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்தும் செயல் பின்னோக்கம் (Regression) ஆகும்.
4. தன் மனைவி மீது கோபம் உள்ள ஆசிரியர் வகுப்பறையில் மாணவன் மீது தன் கோபத்தைக் காட்டுதல் இடமாற்றம் (Displacement) ஆகும்.
பள்ளிகளில் ஒழுக்கம் குன்றிய மாணவர்கள் சிலர் இருப்பர். இவர்களின் நடத்தையை ஆசிரியர் மனநலவியலின் மூலம் மாணவர்களுக்கு நல்வாழ்க்கை வாழும் முறைகளைக் கற்பித்தல் அவசியம் ஆகும். ஆகவே,உளவியல் பற்றிய அறிவு,மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ஆகிய அனைவருக்கும் இன்றியமையாததாகும்.
ஒரு தனிமனிதன் மற்றொரு தனிமனிதனுக்கு, அவனது உடல் மற்றும் சமூகச் சூழல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், சமுதாயத்தில் சிறப்பாக வாழ்வதற்கும் தரும் உதவிக்கு வழிகாட்டுதல் என்று பெயர். வழிகாட்டுதலில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. அவை கல்வியில் வழிகாட்டுதல் (Educational Guidance) தொழில் தேர்வில் வழிகாட்டுதல் (Vocational Guidance), தனிப்பட்ட வழிகாட்டுதல் (Personal Guidance) ஆகும். போட்டி மனப்பான்மை மற்றும் சிக்கலான சமுதாயத்தில் மாறிவரும் அறிவியல், அரசியல், பொருளாதாரம் இன்னும் பல சூழ்நிலைகளில் மனிதர்களுக்கு வழிகாட்டுதல் தேவைப் படுகிறது.
ஒருவர் தன்னுடைய பிரச்சினைக்குச் சிறந்த அறிவுத்திறன் வழி தீர்வுகாணும் மனப்பான்மையையும்,தன்னம்பிக்கையையும் பெற உதவுவது அறிவுரை பகர்தலாகும். அறிவுரை பகர்தல் ஆகும். மூன்று வகைப்படும்.அவை: நேர்முகம் (Directive). மறைமுகம் (Nondirective) மற்றும் சமரச முறை (Electric) அறிவுரை பகர்தல் ஆகும்.
வழிகாட்டுதல் முக்கியமானதும்,மிகவும் கடினமானதும் ஆகும். இதில் ஆசிரியரது சிறப்பான பண்புகளும்,அவர் மாணாக்கர்கள் பால் காட்டும் அன்பும்,பரிவும் முக்கிய பங்கினைப் பெறுவனவாம்.ஆறு படிகளை நேர்முக அறிவுரை பகர்தல் E.G.Williamson கூறியுள்ளார். பகுத்தறிதல்,தொகுத்தறிதல்,குறையறிதல், வருவதுரைதல், ஆற்றுப்படுத்துதல் மற்றும் பின்தொடர் செயல் போன்றவையாகும்.
மறைமுக அறிவுரை பகர்தல் அறிவுரை பெறுபவரை மையமாக கொண்டது. இம்முறையை தோற்றுவித்தார். எனவே மாணவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து ஆசிரியராகிய நாம் நேரிடையாகவும்,விளக்கமாகவும்,மனப்பூர்வமாகவும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும் இருக்க வேண்டும்.
1. நேர்முக வழிகாட்டுதல் அறிவுரை பகர்பவரை (Counsellor Centred) மையமாக கொண்டது.
2. சமரச முறை தோற்றுவித்தவர் எப்.சி.தார்ன் (F.C. Thorne).
நமது நாட்டில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைப் பெருக்கத்தினால் இன்றைய இளைஞர்கள் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் சிறந்த முறையில் அறிவுரை பகர்தலும் வழிகாட்டுதல் பணியும் தேவைப்படுகிறது.
பணியிலே சிறந்த பணி ஆசிரியர் பணி,அதில் என்னை முழுமையாக அர்ப்பணித்தேன். எனவே, ஒவ்வொரு ஆசிரியர்களும் தன் கடமையை திறம்படவும், உற்சாகத்துடனும், தெளிவுடனும் முன்வந்து பணிபுரிந்தால்; இவ்வுலகில் கல்வி நிலை, அறிதிறன் வளர்ச்சி நிலையும் சிறப்பாக செயல்பட்டு வந்து விடும் என்று உறுதியுடன் கூறுகின்றேன். தனிமனித  அமைதி,குடும்ப அமைதி சமுதாய அமைதியான உலக அமைதி இவை அனைத்தும் ஏற்படுத்தும் வழிமுறைகளில் ஒன்று தான் உளவியல்முறையாகும்.
கல்வி என்பது ஒருவனுடைய முழுமையான ஆளுமை பற்றியதே ஆகும்.முழுமையான வளர்ச்சி என்பது உடல், உள்ளம், சமூகம், நியதி, மனவெழுச்சி அனைத்தையும் குறிக்கும். மாணாக்கரின் தேவை, விருப்பம், அதிக ஆவல், புதியன புனையுமாவல், மனவெழுச்சி சார்ந்த பிரச்சினைகள், சமூகம் சார்ந்த சிறப்புப் பண்புகள், அவர்களுடைய நிறை குறைகள் ஆகியன யாவற்றையும் ஓர் ஆசிரியர் அறிந்திருந்தால் தான் மாணாக்கர்கள் ஒருங்கிணைந்த ஆளுமையைக் கற்கவும், பெறவும் விழைவர்.
கல்வி உளவியலறிவுடன் சிறந்த பாடப்பொருளறிவும் சீரிய ஆளுமை மற்றும் நடத்தைப் பண்புகளும் ஆசிரியருக்குத் தேவை. கல்விச் செயல் முறையில் எழும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கத் தேவைப்படும் உளவியல் பொருளறிவினையும், முறையறிவினையும் புதுப்பித்துக் கொள்ளப் பணியிடைப் பயிற்சி (In-service) திட்டங்கள் உதவுகின்றன. இன்றைய கல்வி, குழந்தைகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது.
ஆசிரியர் மாணாக்கரின் தலைவர்களாக மட்டுமின்றி குறிப்பிட்ட சமூகப் பொறுப்புகளுடைய நல்லதொரு சமூகத்தை உருவாக்குபவர்களாகவும் உள்ளனர். சமூக எதிர்பார்ப்புகளை நன்முறையில் நிறைவேற்றத்தக்க திறன்களைக் கல்வி உளவியல் ஆசிரியருக்கு அளிக்கின்றது.
ஆசிரியர் தம்மைப் பற்றிய அறிவு பெறவும், உளவியல் உதவுகிறது.எனவே சிறந்த வகுப்பாசிரியருக்குப் பாடப்பொருளின் தேர்ச்சியோடு,அதை மாணவர்களுக்கு முழுமையாக சேர்ப்பிக்க பொருத்தமான கற்பித்தல் முறைகளைக் கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியருக்கும் கல்வி உளவியல் பெரிதும் துணைபுரிகிறது ஆகையால் கல்வி உளவியல் மிகவும்  அவசியம் என்பதனை வலியுறுத்துகிறேன்.
(கட்டுரையாளர் தனியார் கல்வியியல் கல்லூரி ஒன்றில் முதல்வராக உள்ளார்)

No comments:

Post a Comment