Friday 24 January 2014

இந்திய பருவக்காற்றுகளும் எல் நினோவும்

இந்திய பருவக்காற்றுகளும் எல் நினோவும்
Posted Date : 21:12 (12/12/2013)Last updated : 21:12 (12/12/2013)
- பால் சுரேந்தர்
ந்தியா தனது பெரும்பான்மையான மழையைப் பருவ மழையின் மூலம் பெறுகிறது. பருவப் பெயர்ச்சிக் காற்று என்பது நிலத் திற்கும் கடலிற்கும் இடையேயுள்ள வெப்ப நிலை வேறுபாட்டினால் பருவந் தோறும் உருவாகும் காற்றுப் பெயர்ச்சி ஆகும். இது பருவந்தோறும் மழையைக் கொணர்வதால் பருவமழை எனவும் கூறப்படுகிறது. இந்தியாவுக்குத் தென்மேற்குப் பகுதியில் இந்துமகா சமுத்திரத்தில் இருந்து வீசும் காற்று தென்மேற்குப் பருவமழை எனவும், வங்காள விரிகுடாப் பகுதியில் இருந்து வீசும் காற்று வடகிழக்குப் பருவமழை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இவற்றில் நமது நாடான இந்தியா 75 விழுக்காடு மழையை தென் மேற்குப் பருவ மழையின் மூலம் பெறுகின்றது. தென் மேற்குப் பருவக் காற்று இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் வீசும் காற்றாகும். கோடைக் காலத்தில் தார் பாலைவனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இந்தியாவின் வட மற்றும் நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது. அதேநேரத்தில் பூமியின் வட துருவத்தில் குளிர்காலம் நிலவும். அதனால் இந்தியப் பெருங்கடலில் குளிரின் காரணமாக உயர்ந்த காற்றழுத்தம் உருவாகிறது. இந்தியாவின் வடக்குப் பகுதியில் கோடையினால் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத்தை ஈடுசெய்ய பூமியின் வடதுருவ உயர் அழுத்தப் பகுதியில் காற்று தெற்கு நோக்கி இருந்து வீச ஆரம்பிக்கிறது. அவ்வாறு வீசும் காற்று பூமத்திய ரேகையைக் கடந்த உடன் பூமியின் சுழற்சி காரணமாக தென்மேற்குத் திசையில் வீசுகின்றது. இக்காற்று கடலின் பரப்பில் இருந்து ஈரப்பதத்தை ஈர்த்துக்கொண்டு இந்தியாவை வந்தடைகிறது.
இந்தியாவின் நிலப்பரப் பினால் இது இரு கிளைகளாகப் பிரிகின்றது. அரபிக் கடல் கிளை இந்தியாவின் மேற்குக் கடலோரப் பகுதிகளையும், வங்காள விரிகுடாக் கிளை கிழக்கு கடலோரப் பகுதிகளையும் மழையால் குளிர்விக்கின்றது. அரபிக் கடல் கிளை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மோதி கேரளாவிலிருந்து கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரா, குஜராத் வரை மழை பொழிகின்றது. வங்காள விரிகுடாக் கிளை ஆந்திரம், ஒடிசா, வங்காளத்திற்கு மழை அளிக்கின்றது. பின்னர் வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் மழை பெய் விக்கின்றது. பின் இமயமலையினால் மேற்கு நோக்கி திசை திருப்பப்பட்டு கங்கைச் சமவெளி முழுவதும் மழை தருகிறது. மேற்குத் தொடர்ச்சி மழையின் கிழக்கே உள்ள நிலப்பகுதி கள் மலையினால் தடுக்கப்படுவதால் பெரும்பாலும் மழை பெறுவதில்லை. இவை மழை மறைவுப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன.
இந்தியப் பருவமழை இவ்வாறு பூமியின் தட்பவெப்ப சூழலினால் உருவாக்கப்படுகின்றது. இவை மட்டும் பருவ மழையை உருவாக்கி னால், ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை காலம் தப்பாமல், பொய்க்காமல் பெய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லையே, ஏன்? எதனால் பருவமழை பொய்க்கிறது? எதனால் காலம் தப்பி மழை பெய்கிறது? எதனால் குறைந்த அளவாக சீரில்லாமல் மழை பெய்கிறது? இக்கேள்விகளுக்குப் பதில் பருவமழையைப் பற்றி ஆழமாக அறிவதில் கிடைக்கிறது.
பருவமழை இன்றைக்கும் விஞ்ஞானிகளையும், வானிலை ஆராய்ச்சியாளர்களையும் விந்தைக்குள்ளாகச் செய்கின்றது. ஆனாலும் அவர்கள் பருவமழைக்குத் தட்பவெப்பக் காரணிகளுடன் வேறு சில காரணங் களும் உள்ளன எனக் கண்டறிந்துள் ளனர். அவற்றில் முக்கியமான காரணமாக எல்நினோ, லாநினோ எனப்படும் வானிலை மாற்றங்கள் கூறப்படுகின்றன.
எல்நினோ என்பதற்கு 'சின்னப்பையன்’ என்பது ஸ்பானிய மொழியில் பொருளாகும். குழந்தை இயேசுவைக் குறிக்கும் வகையில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவின் கிழக்குப் பசிபிக் பெருங்கடலில் பெரு, ஈகுவேடார் நாடுகளின் கடலோரப் பகுதிகளில் ஏற்படும் வானிலை மாற்றமே எல் நினோ என அழைக்கப்படுகின்றது. வழக்கமான சூழலில் இந்தக் கடற்பகுதி சற்று குளிராக இருக்கும். ஏனென்றால் கடல் மட்டத்தில் பூமியின் மேற்பரப்பில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசக் கூடிய காற்று கிழக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள சூடான நீரை மேற்குக் கரைக்குக் கவர்ந்து செல்கிறது. இதன் காரணமாக கடலின் அடியில் உள்ள குளிர்ந்த நீர் மேற்பரப்பிற்கு வருகிறது. இதனால் இப்பகுதி குளிரானதாக இருக்கும். இதற்கு நேர்மாறாக மேற்கு பசிபிக் பெருங் கடலில் வெப்பமான நீர் நிறைந்து இருக்கும். இதன் காரணமாக இப்பகுதியில் இருக்கும் காற்று சூடாகி மேலேழுகின்றது. இது இப்பகுதியில் குறைந்த காற்ற ழுத்தத்தைத் தோற்று விக்கின்றது. மேலெழும் காற்று உயரே சென்று கிழக்கு திசையில் வீசி கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கீழே இறங்குகிறது. மேலும் குளிர்ந்த நீரும் காற்றைக் கீழிருந்து குளிர்வித்து கீழே இறக்கச் செய்கிறது. எனவே இப்பகுதியில் உயர் காற்றழுத்தம் ஏற்படுகிறது. மேற்கு பசிபிக்கில் ஏற்படும் குறைந்த காற்றழுத்தம் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோரப் புகுதியில் இருக்கும். இக்குறைந்த காற்றழுத்தம் ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடலோரத்தில், அதாவது இந்தியப் பெருங்கடலில் அமைந்த இயல்பான உயர் காற்றழுத்தத்தைப் பாதிக்காது. இதன் மூலம் இந்தியாவின் தென்மேற்குப் பருவ மழையும் இயல்பானதாக அமையும். இந்தியா முழுவதும் பரவலான சராசரி அளவு மழை காலம் தப்பாமல் பெய்யும்.
ஆனால் எல் நினோ எனப்படும் வானிலை மாற்றம் ஏற்படுகையில் இச்சூழலில் மாற்றம் ஏற்படுகிறது. இம்மாற்றம் 3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுகிறது. எல் நினோ என்பது வெப்பநிலை ஏற்றத்தாழவைக் குறிக்கும். பெரு மற்றும் எக்குவடோர் மற்றும் தென் அமெரிக்கப் பகுதி களின் கடற்கரை அருகே வழக்கத் திற்கு மாறான வெப்பத்தைத் தோற்று விக்கிறது. இதனால் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தம் ஏற்படுகிறது. ஈரப்பதமிக்க காற்று மேலெழுந்து பெரு, எக்குவடோர் கடற்கரைப் பகுதிகளில் மழையைப் பெய்விக் கிறது. வழக்கமாக மழை இல்லாத காலத்திலும் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்வதால் முதலில் இப்பகுதி மக்கள் மகிழ்ந்து இதற்குக் 'குழந்தை இயேசு' எனப் பெயர் சூட்டினர். ஆனால் பின்னரே இம்மக்கள் இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புகளை உணர்ந்தனர். இப்பகுதி வெப்ப மாவதால் மீன்களுக்கு ஊட்டப் பொருட்கள் கிடைக்காமல் மீன்கள் இறந்து அவற்றின் எண்ணிக்கை குறைகிறது.
மேலும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தம் ஏற்படுவதால் மேற்கில் உயர் காற்றழுத்தம் ஏற்படுகிறது. இந்த உயர் காற்றழுத்தமானது இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் உயர் காற்றழுத்தத்தை வீரியமிழக்கச் செய்கிறது. இதன் மூலம் வழக்கத் திற்கும் குறைவான பருவ மழை பெய்வதும் அல்லது பருவ மழை பொய்ப்பதும் ஏற்படுகின்றது. எனவே எல் நினோ இந்தியாவில் பருவ மழையைப் பொய்ப்பித்து வறட்சியை உருவாக்குகிறது. மேலும் மேற்கு பசிபிக் கடலோரத்தில் குறைந்த காற்றழுத்தத்தால் ஏற்படும் மழையையும் பாதிக்கிறது. இதனால் இப்பகுதியிலும் வறட்சியை அதிகரிக்கிறது. இவ்வாறு எல்நினோ உலகம் முழுவதும் மழைப் பொழிவைப் பாதிக்கிறது.
லா நினோ (La Nino) என்பது எல் நினோவிற்கு எதிர்மறையான தாகும். லா நினோ என்றால் சின்னப் பெண் என்று பொருளாகும். இது கிழக்கத்திய பசிபிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியைக் கொண்ட தாகும். இதன் மூலம் மேற்கு பசிபிக்கில் வெப்பம் அதிகரித்து குறைந்த காற்றழுத்தம் வலுப்பெறும். இதனால் மேற்கு பசிபிக் கடலோரத்தில் மழை அதிகரிக்கும். மேலும் இந்தக் குறைந்த காற்றழுத்தம் இந்தியப் பெருங்கடலின் வட துருவத்தில் அமைந்த உயர் காற்ற ழுத்தத்தை வலுப்படுத்துகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் பருவமழை வழக்கத்திற்கும் அதிகமான அளவில் பெய்கிறது. இது இந்தியாவின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து விவசாயத்தையும் செழிப் படையச் செய்கிறது.
இவ்வாறு உலக அளவில் எல் நினோவும் லா நினோவும் மழைப் பொழிவில் தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. மேலும் நமது நாட்டின் பருவமழை சரியாகப் பெய்வதும் சிறப்பாகப் பெய்வதும் லா நினோவால் நிகழ்கிறது. அதுபோல பருவ மழை பொய்ப்பது எல் நினோவால் நிகழ்கிறது. இவ்வாறு எல்நினோ நம் நாட்டிற்கு வறட்சியை யும் லா நினோ மலர்ச்சியையும் அளிக்கிறது.

இந்தியாவில் தலக்காற்றுகளும், அவற்றின் முக்கியத்துவமும்
நார்வெஸ்டர் எனப்படும் தலக் காற்றுகள் அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலத்திற்கு மழையைத் தருகின்றன.
மாங்காய் காற்றுகள் (Mango shower) எனப்படும் தலக்காற்றுகள் இந்தியாவில் தெற்கு பீடபூமியில் இடியோடு கூடிய மழையை பெய்வித்து, மாங்காய் விளைச்சலுக்கு உதவுகின்றன.
செர்ரி ப்ளாசம்ஸ் (Cherry Blossoms) எனப்படும் தலக்காற்றுகள் கர்நாடகாவில் இடியுடன் கூடிய மழையைப் பெய்வித்து, காபி பயிரின் பூப்பூத்தலுக்கு உதவுகின்றன.
கல் பைசாகி (Kalbaisakhis) என்னும் புயல் காற்று கோடைக்காலத்தில் மேற்கு வங்காளத்தில் உருவாகிறது.
இந்தியாவின் காலநிலை மண்டலங்கள்
டாக்டர் திரிவர்த்தா இந்திய காலநிலை மண்டலங்களை A, B, C, H என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். இந்த கால நிலைகளின் வகைப்பாடு கப்பன் காலநிலை வகைப்பாட்டை மாற்றியமைத்து உருவாக்கப்பட்ட தாகும்.
திரிவர்த்தா வகைப்பாட்டின்படி A வகை என்பது வெப்ப மண்டல மழைக்கால நிலையை குறிக்கும். இது அதிக வெப்ப நிலை கொண்ட இந்திய பகுதிகளில் நிலவுவது. B வகை என்பது வறண்ட காலங் களையும், அதிக வெப்ப நிலையையும் மிகக் குறைந்த மழையையும் கொண்ட பகுதகளைக் குறிப்பது. C வகை என்பது வறண்ட குளிர்காலம், மிகக் குறைந்த வெப்ப நிலை அதாவது 0 டிகிரி முதல் 18 டிகிரி வரை கொண்ட பகுதிகளைக் குறிக்கும். H வகை என்பது மலைப் பிரதேச கால நிலை பகுதிகளைக் குறிப்பதாகும்.
A  நிலை காலங்களை வெப்ப மண்டல மழைக்காட்டு காலநிலை (AM) என்றும், வெப்ப மண்டல சவானா காலநிலை (AW) என்றும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. AM  காலநிலை மேற்கு தொடர்ச்சி மலை, அசாமின் சில பகுதிகள், மேற்கு கடற்கரை சமவெளி போன்ற இடங் களில் நிலவுகிறது. AW காலநிலை மழை மறைவு பிரதேசத்தில் அமைந்துள்ள பகுதி தவிர மீதமுள்ள தீபகற்ப பகுதிகளில் நிலவுகிறது.
B காலநிலையை வெப்ப மண்டல ஸ்டெப்பி காலநிலை (BS) என்றும், வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல ஸ்டெப்பி (BSh), வெப்ப மண்டல பாலைவன காலநிலை (BWh) என்றும் மூன்று வகையாகப் பிரிக்கலாம். BS காலநிலை மத்திய மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் நிலவுகிறது. BSh காலநிலை பஞ்சாப், ஹரியானா, குஜராத்தின் கட்ச் பகுதிகளில் நிலவுகிறது. BWh காலநிலை தேசால்மர், பைக்கானர் ஆகிய ராஜஸ்தான் பகுதிகளிலும் கட்ச்சின் ஒரு பகுதியிலும் காணப் படுகிறது. C காலநிலை ஈரப்பதம் மிக்க துணை வெப்ப மண்டல காலநிலையாக தெற்கு இமாலயா பகுதிகளில் காணப்படுகிறது. மலைக்காலநிலை எனப்படும் H காலநிலை 6000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட மலைப்பகுதிகளில் காணப்படும் H காலநிலை நிலவும் பகுதிகளில் மழையளவு சுமார் 63 செ.மமீ.யில் இருந்து, 250 செ.மமீ. வரை இருக்கும். இப்பகுதியில் பெய்யும் மழை பெரும்பாலும் தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் பொழியும்.

No comments:

Post a Comment