Friday 24 January 2014

தேசிய அடையாளங்கள்

தேசிய அடையாளங்கள்
Posted Date : 11:12 (12/12/2013)Last updated : 11:12 (12/12/2013)
தேசிய கீதம் - National Anthem
ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் இயற்றிய 'ஜன கண மன’ என்ற பாடலின் இந்தி வடிவம் நம் தேசிய கீதமாக 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24-ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 தேசிய கீதம் தாகூர் நடத்திய 'தத்வபோதினி பத்ரிகா’ என்ற பத்திரிகையில் 'பாரத் விதாதா’ என்ற தலைப்பில் 1912-ல் வெளியானது.
 'ஜன கண மன’ பாடல் முதன் முதலாக 1911, டிசம்பர் 27-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.
 ஐந்து பத்திகள் (13 வரிகள்) கொண்ட நம் தேசிய கீதத்தை 52 நொடிக்குள் பாடவேண்டும்.
 முதல், கடைசி பத்திகளை மட்டும் கொண்ட தேசிய கீதத்தின் குறுகிய வடிவத்தை பாடுவதற்கான நேரம் 20 நொடிகள்.
 நம் தேசிய கீதத்தில் இரு நதிகள், இரு மலைகள், ஏழு மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற் றுள்ளன.
 தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 'திராவிட’ என்ற ஒரே சொல்லால் குறிக்கப்படுகின்றன.
 'உத்கல்’ என்ற சொல் ஒடிசாவைக் குறிக்கிறது.
 தேசிய கீதத்தில் குறிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பஞ்சாபின் ஒரு பகுதியும் சிந்து மாநிலம் முழுமையும் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது.
 தேசிய கீதத்துக்கு இசை அமைத் தவர் ஹஃபீஸ் ஜலந்தாரி.
 1919 ல் ரவீந்தரநாத் தாகூர் Morning Song of India என்ற தலைப்பில் தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
நாட்டுப்பண்
ஜன கண மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜயஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே ஜய ஹே ஜய ஹே
ஜய ஜய ஜய ஜய ஹே!
-ரவீந்திரநாத் தாகூர்
நாட்டுப்பண்னின் தமிழாக்கம்
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீதான். வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப் பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒடிஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக்கொண்டிருக்கின்றன..
உனது மங்களகரமான திரு நாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்களகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக் கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ... வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ...
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!
தேசியப் பாடல் - National Song
 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபையில் தேசியகீதமாக 'ஜன கண மன’ பாடலை ராஜேந்திர பிரசாத் அவர்கள் அறிவித்தபோது, தேசிய கீதத்துக்கு உரிய சமமான அந்தஸ்து வந்தே மாதரம் பாடலுக்கும் அளிக்கப்பட வேண்டுமெனக் கூறினார். 
 தேவநகரி எழுத்துருவில் அமைந்த 'வந்தே மாதரம்’( தாய் மண்ணே வணக்கம்) எனத்தொடங்கும் வங்காள மொழிப்பாடலே இந்தியாவின் தேசியப் பாடலாகும்.
 1876 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இப்பாடல், 1882 ல் வெளியான பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்த மடம் என்ற நூலில் முதன்முதலில் இடம்பெற்றது.
 சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக வந்தே மாதரம்   பாடல் விளங்கியது. இந்தியர்கள் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்கமாக இப்பாடல் கருதப்படுகிறது.
 வந்தே மாதரம் பாடல் முதன் முதலாக 1896 ல் கல்கத்தாவில் நடைபெற்ற  காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்தரநாத் தாகூரால் பாடப்பட்டது.
 லாகூரில் வந்தே மாதரம் என்ற பெயரில் இதழ் ஒன்றை லாலா லஜ்பத் ராய்  தொடங்கினார்.
 வந்தே மாதரம் பாடலை அரவிந்த கோஷ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
பாரதியாரின் மொழிபெயர்ப்பு
மகாகவி பாரதியார், 'வந்தே மாதரம்' பாடலை இரண்டு விதங்களில் மொழி பெயர்த்துள்ளார்.
பாரதியாரின் முதல் மொழிபெயர்ப்பு
இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனி நறு மலயத் தண் காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத் திகழ் மரன் பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம் பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
பாரதியாரின் இரண்டாம் மொழிபெயர்ப்பு
நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந்தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
தெண்ணிலவதனில் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளிரும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வந்தே மாதரம் பாடல் குறித்த சர்ச்சைகள்
 இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பல ஆண்டுகள் வந்தே மாதரம் பாடல் கருதப்பட்டு வந்தாலும், இஸ்லாமியர்கள் இப் பாடலை  நாட்டை தாய்க்கும், அதன் மூலம் மறைமுகமாக இந்து தெய்வமான  துர்கைக்கும் ஒப்புமைப்படுத்துவதாக கருதியதால், சமய சார்பற்ற நாட்டுப்பண்ணை தேர்ந்தெடுக்கும் வகையில்  ஜன கண மன... நாட்டுப் பண்ணாக அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 இப்பாடலின் முதல் இரு பத்திகள் தாய்மண்ணின் அழகைப் போற்றிப் பாடுவதாக இருந்தாலும், பிற பத்திகள் தாய் மண்ணை துர்கையுடன் ஒப்புமைபடுத்துவதாக கருதப்பட்டது. எனவே, பாடலின் முதல் இரு பத்திகளை மட்டும் தேசியப் பாடலாக அறிவிப்பது என  இந்திய தேசிய காங்கிரஸ் 1937-ஆம் ஆண்டு முடிவு செய்தது.
 வந்தே மாதரம்  நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு நூறு  ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 7, 2006 அன்று இந்தியா முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் பகல் 11 மணிக்கு இப்பாடலைப் பாட வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்தபோது சர்ச்சை எழுந்தது.
தேசிய சின்னம் - National Emblem
 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய தேசிய சின்னம் அங்கீகரிக்கப்பட்டது. 
 நம் தேசிய சின்னம் அசோகரின் சாரநாத் சிம்மத் தூணிலிருந்து பெறப்பட்டது.
 தேசிய சின்னத்தில், அபாகஸ் என்ற வட்ட வடிவ பீடத்தின் மேல் ஒன்றுக்கொன்று முதுகுப்புறமாக அமைந்த நான்கு சிங்கங்களும் சக்தி, தைரியம், பெருமை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை குறிக்கிறது.
 இந்திய தேசிய சின்னத்தை நாட்டின் தேசிய அடையாளமாக தேர்ந்தெடுத்த பெருமை நேருவுக்கு உண்டு.
 1950 ல் மாதவ் சானே (Madhav Sawhney ) தேசிய சின்னத்தை வடிவமைக்க  சாரநாத் சிம்மத்தூணை மாதிரியாக ஏற்றார்.
 தேசிய சின்னத்தில் உள்ள நான்கு சிங்கங்களில் மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரியும், பின்னால் உள்ள சிங்கம் பார்வைக்கு புலப்படுவதில்லை.
 பீடத்தின் நடுவில் தர்ம சக்கரம் (wheel  of  Law) அமைந்து சக்கரத்தின் இடப்புறம் சீறிப்பாயும் குதிரையும், வலப்புறம் காளையும், இரு புறங்களிலும் தர்ம சக்கரத்தின் சிறு பகுதிகள் தெரியுமாறும் பொறிக்கப்பட்டுள்ளது.
 சாரநாத் சிம்மத்தூணில் இருக்கும் தாமரை, யானை நம் தேசிய சின்னத்தில் இடம்பெறவில்லை.
 பீடத்துக்கு கீழே இந்து வேத  முண்டக உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்ட 'வாய்மையே வெல்லும்’ என்னும் பொருள் கொண்ட  'சத்யமேவ ஜெயதே’ என்ற வாசகம் தேவநாகரி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
 இந்திய அரசாங்கத்தின் அலுவலக எழுதுதாள்கள் (Letter Head), பாஸ்போர்ட், இந்திய ரூபாய் நாணயம், பண நோட்டுகளில் நீங்காமல் இடம்பிடித்து இந்தியாவுக்கான அடையாளத்தை குறிக்க இந்திய தேசிய சின்னம் பயன்படுத்தப்படுகிறது.
 இந்திய தேசியச் சின்னத்தில் உள்ள அசோக சக்கரம், நமது தேசிய கொடியின் மையத்தை அலங்கரித்து வரும் சின்னமாகவும் உள்ளது.
 தேசியச் சின்னத்தை இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்களின் அலுவலக நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
 இந்திய குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள்,  இந்திய தூதரகங்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள், மாநில அமைச்சர்கள் மற்றும் துறைகளின் அதிகார பூர்வ முத்திரையாக இந்திய தேசிய சின்னம் விளங்குகிறது.
 அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில்  நீலவண்ண நிறத்திலும், அதிகாரிகள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் சிவப்பு நிறத்திலும் , மக்களவை உறுப்பினர்கள் பச்சை வண்ணத்திலும் தேசியச் சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.
 ஒரு சில குறிப்பிட்ட அதிகாரிகள், வெளிநாட்டு அரசுடனான தொடர்புக்கு  நீலவண்ண தேசியச் சின்னம் அச்சிடப்பட்ட எழுது தாள்களைப் பயன்படுத்தலாம்.
இந்திய தேசிய சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், இந்திய தேசிய சின்னம் (ஒழுங்கு முறை  தடைச் சட்டம்) (State Emblem of India (Prohibition of Improper Use) Act, 2005) விவரிக்கிறது.
தேசியக் கொடி - National Flag
1947 ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் நாள் அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 நீள்சதுர வடிவில் உள்ள மூவர்ணக்கொடியில், மேலிருந்து கீழாக, அடர் காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களும், கொடியின் நடுவில், கடல் நீல வண்ண நிறத்தில் 24 ஆரங்களைக் கொண்ட அசோகச் சக்கரம் ஒன்றும் காணப்படுகிறது. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது.
 கொடியின் உயரம், நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். (நீள, அகல விகிதம் : 3:2)
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்களி வெங்கைய்யா. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் காதி என்கிற கைத்தறித் துணியில் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும்.
 காதி என்பது சாதாரண துணி போல் இரண்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது.
பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம் இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகவும் இருக்கலாம்.கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதிபண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதிடக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.
 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் நாள் தேதி இந்தியா சுதந்திரமடைந்தபோது, தற்போது ராஷ்டிரிய பவன் என்று அழைக்கப்படும் டெல்லி வைஸ்ராய் ஹவுஸில்  31 குண்டுகள் முழங்க இந்திய தேசியக் கொடி முதன்முதலாக பறக்கவிடப்பட்டது.
 டெல்லியில் உள்ள செங்கோட்டையில் ஜவஹர்லால் நேரு முதன் முதலாக தேசியக் கொடியை  1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு  16 அன்று ஏற்றினார்.
 1948 முதல் அனைத்து வருடங்களிலும் டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றப்படுகிறது.
 1971 ஆம் ஆண்டு இந்திய தேசியக் கொடி முதன்முதலாக விண்வெளிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.  அமெரிக்காவின் அப்போலோ  15  என்னும் செயற்கைக்கோள் இதை விண்வெளிக்கு சுமந்து சென்றது.
 1951-ஆம் ஆண்டு இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17-ல் இந்த அளவு முறை மேம்படுத்தப்பட்டது.
 தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும், வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும் பச்சை நிறம் நம்பிக்கையையும், வீரத்தையும் குறிக்கிறது.
கொடியின் அளவுகள்
அளவு மி.மீ
1. 6300 x 4200
2. 3600 x 2400
3. 2700 x 1800
4. 1800 x 1200
5. 1350 x 900
6. 450 x 300
7. 900 x 600
8. 225 x 150
9. 150 x 100
கொடி உணர்த்தும் உண்மைகள்
 1930-ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியை எந்த சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக ஏற்றது.
 1931-ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியை இந்திய தேசிய காங்கிரஸ் தன் கொடியாக ஏற்றது.
 காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன.
 அரசியல் நிர்ணய சபை, சிறு மாறுதலுக்குட்படுத்தப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், முன்னர் இருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் பயன்படுத்தப்பட்டு இந்திய தேசியக்கொடி ஆக ஏற்றது.
 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள்பட இவ்வாறு கூறினார்.
 'சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துயிலுற குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துயிலுண்டு, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியைக் குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருமத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலைக் குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னெறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்’.
தேசிய நாட்காட்டி - National Calender
நமது தேசிய காலண்டர் சக காலண்டர். இது சக சம்வாட் எனவும் அழைக்கப்படுகிறது.
 கனிஷ்கர் பதவியேற்ற கி.பி.78-ல் சக ஆண்டு தொடங்குகிறது.
 நாட்காட்டி சீரமைப்பு குழுவினரின் பரிந்துரையின்படி 1957-ஆம் ஆண்டு மார்ச் 22 முதல் சக காலண்டர் தேசிய காலண்டராக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 தேசிய நாட்காட்டி சக ஆண்டு 1879-ல் சைத்ரா முதல் நாளில் (கி.பி 1957, மார்ச் 22) தொடங்கியது.
 மத்திய அரசு அறிவிப்புகள், மத்திய கெஸட்கள், ஆகாஷவாணி ஒலிபரப்பு ஆகியவற்றில் சக காலண்டர் பயன்படுத்தப்படுகிறது.
 சக ஆண்டு 365 நாட்களைக் கொண்டது.
 சாதாரண ஆண்டில் சக ஆண்டின் முதல் தேதி மார்ச் 22
 சூரியன் மெதுவாக நகரும் ஆண்டின் முன்பகுதியில் உள்ள மாதங்கள் அனைத்துமே 31 நாட்களைக்கொண்டிருக்கும்.
தேசிய விலங்கு - National Animal
 இந்தியாவின் தேசிய விலங்கு  ராயல் பெங்கால் புலி ( Panthera tigris tigris) வலிமையின் அடையாளமாகப் புலி விளங்குகிறது.
 இந்திய வனவிலங்கு வாரிய பரிந்துரையின் படி 1969-ல் இந்திய தேசிய விலங்காக சிங்கம் தேர்வு செய்யப்பட்டது.
 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கம் இருந்தது. சிங்கங்கள்  குஜராத் மாநிலத்தில் மட்டுமே காணப்பட்டதால், இந்தியாவின் வடமேற்குப் பகுதியைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காடுகளில் காணப்படும் பெங்கால் புலிக்கு இந்தத் தகுதி அளிக்கப்பட்டது.
 1972-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி இந்திய தேசிய விலங்காக புலி தேர்வு செய்யப்பட்டது.
 உலக அளவில், புலிகள் ஆசியாவில் தான் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், சீனா, ஈரான், கொரியா ஆகிய நாடுகளில் பரவலாக புலிகள் காணப்படுகிறது.
 புலிகளை பாதுகாக்க இந்தியாவில் புலி பாதுகாப்பு திட்டம் (PROJECT TIGER) 1973-ல் துவங்கப்பட்டது.
 இந்தியா முழுவதும் தற்போது 53 புலிகள் சரணாலயம் அமைக்கப்பட்டு அழிந்துவரும் புலிகளை காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
 மொத்தம் உள்ள 9 வகை புலி இனங்களில், பலி புலி (  Bali tiger), காஸ்பியன் புலி (Caspian Tiger), ஜவான் புலி ( Javan tiger)  3 வகை இனங்கள் அழிந்துவிட்டன. மீதமுள்ள 6 இனங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகிறது.  பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் IUCN (International Union for Conservation of Nature) வகைப்படுத்துதலின் படி அருகிவரும் இனம் என புலிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 புலிகளின் சராசரி ஆயுட் காலம் 18 - 20 ஆண்டுகள்.
 புலிகளின் சினைப்பருவக் காலம் 104 - 109 நாட்கள்
 ஆண்புலி - TIGER

 பெண்புலி - TIGERESS
 சிங்கம் X புலி கலப்பினம்
ஆண்புலி X பெண்சிங்கம் = TIGON
பெண்புலி X ஆண்சிங்கம் = LIGGER
தமிழத்தில் உள்ள புலிகள் சரணாலயங்கள்
 களக்காடு, முண்டந்துறை
 ஆனைமலை
 முதுமலை
 சத்தியமங்கலம் (மார்ச் 2013)
தேசிய நீர் விலங்கு - டால்பின்
ன்னீர் அல்லது நதி நீர் டால்பின் என்று அழைக்கப்படும் கங்கை நதி டால்பின் இந்தியாவின் தேசிய நீர் விலங்காக 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 5 ம் நாள் அறிவிக்கப்பட்டது. இதன் விலங்கியல் பெயர் 'பிளாடனிஸ்டா கேஞ்சடிகா’ '(Platanista gangetica).
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இவ்வகை நன்னீர் டால்பின்கள் காணப்படுகின்றன.
நன்னீர் டால்பின்களின் இரண்டு சிற்றினங்கள் கங்கை நதி டால்பின்கள் மற்றும் இந்துஸ் நதி டால்பின்கள்.
நதிகளில் வாழும் டால்பின்கள், கடல் டால்பின்களுடன் ஒப்பிடுகையில் உருவம், அளவு மற்றும் குணத்தில் அதிகமாகவே மாறுபடுகிறது.
பெருகி வரும் மக்கள்தொகையின் காரணமாக நதிநீர் மாசுபடுதல் மற்றும் மனித வேட்டைகளின் காரணமாக நதிகளில் வாழும் டால்பின்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
நதிகளில் வாழும் டால்பின்களுக்கு பார்வைக் குறைபாடு உண்டு. எனவே  மனிதர்கள் பயன்படுத்தும் படகுகளிலும், மீன்பிடி வலைகளிலும் மாட்டிக்கொண்டு உயிரிழக்கின்றன.
இந்தியாவில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகளில் நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில் நதிகளில் வாழும் டால்பின்கள் வாழ்கின்றன.
கங்கையில் வாழும் டால்பின்கள்  சுவாசிக்கும்போது உண்டாகும் சத்தத்தை கொண்டு 'சூசு’ (Susu) என அழைக்கப்படுகின்றன.
சிந்துவில் வாழும் டால்பின்கள் 'புலான்’ (Bhulan) என்று அழைக்கப்படுகின்றன.
1993-ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் கங்கையில் 600 டால்பின்களும்  பிரம்மபுத்ரா நதியில் 400 டால்பின்களும் இருந்தன.
இந்திய நதிநீர் டால்பின்கள்  பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில், நீண்ட மூக்கு, பெரிய தலையுடன் காணப்படுகின்றன.
நதி நீர் டால்பின்கள் அதிக பட்சமாக எட்டு அடி நீளமும் சராசரியாக நூறு கிலோ எடையுடனும். மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் மிகக்கூர்மையான, ஒரு தாடைக்குக்கு 28 பற்களுடனும் காணப்படுகின்றன.
உடலின் இருபுறமும் அகலமான துடுப்பு காணப்படுகிறது.
திமிங்கலத்தைப் போலவே டால்பின்களும் பாலூட்டிகள் என்பதால் நுரையீரல் மூலமாகவே சுவாசிக்கிறது.
30 முதல் 50 நொடிகளுக்கு ஒருமுறை நீர்மட்டத்துக்கு மேலே வந்து சுவாசித்துவிட்டு நீருக்கு அடியில் செல்லும்.
டால்பின்களின் கர்ப்பக்காலம் ஒன்பது மாதங்கள். புதியதாக பிறக்கும் டால்பின் குட்டிகள் 65 செ.மீ நீளம் இருக்கும். குட்டியாக இருக்கும்போது தாய்ப்பாலும், வளர்ந்த பிறகு சிறுமீன்கள், இறால் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ளும்.
நதிநீர் டால்பின்களின் சராசரி ஆயுட்காலம் 35 ஆண்டுகள் .
பார்வைக் குறைபாடு கடல் டால்பின்களுக்கு பயிற்சியளித்து, மனிதர்கள் பயன்படுத்திக்கொள்வது போல நதிநீர் டால்பின்களை பயன்படுத்த முடியாது.
நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட கடல் டால்பின்கள் அமெரிக்க ராணுவத்தில் உளவுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.
டால்பின்களுக்கு  ஒலியலைகளை (Sonar sense) கேட்கும் திறன் கொண்டுள்ளன.
நீரில் வாழும் பாலூட்டிகளில் டால்பின்கள் மட்டுமே ஒலியலைகளை உணர்வதன் மூலம் இரை தேடுகின்றன.
டால்பின்களால் 2,00,000 ஹெர்ட்ஸ் அளவுக்கான அல்ட்ரா சோனிக் ஒலியலைகளை ஏற்படுத்த முடியும் (நம்மால் 18,000 ஹெர்ட்ஸ் அளவுக்கே கேட்கும் சக்தி கொண்டது). பார்வைக் குறைபாட்டை ஒலிகள் மூலமாகவே டால்பின்கள் தவிர்க்கின்றன.
'பைஜி’ என்ற சீனநதி டால்பின் அழிந்துவிட்டதாக கருதப்படுகிறது.
 
ஹிந்தி தேசிய மொழியல்ல-குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
2010-ம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றம், கச்சாடியா என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில், ஹிந்தியை மத்திய அரசின் அலுவல் மொழி என்றே இந்திய அரசமைப்பின் 343-வது உறுப்பு குறிப்பிடுகிறது என்றும், ஹிந்தியை இந்தியாவின் தேசிய மொழி (National language) என்று குறிப்பிட்டு எவ்வித சட்டப்பூர்வமான ஆவணமும் இல்லாத நிலையில், ஹிந்தியை தேசிய மொழி என்று அழைப்பது சட்ட ரீதியாக ஏற்புடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளது.
நீதியரசர்கள் S.J  முகர்ஜி மற்றும் A.S. தேவ் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியது. மேலும் அந்தத் தீர்ப்பில் 'இந்திய அரசமைப்பு அவைக்கு (constituent assembly)  அரசமைப்பு சட்டவரைவை எழுதி வழங்கிய, துணைக் குழுக்களில் ஒன்றான 'அடிப்படை உரிமைகள் மீதான துணைக்குழு’ (Sub-committee on fundamental rights) தனது பரிந்துரையில் 'பாரசீக அல்லது தேவநகரி எழுத்து வடிவில் அமைந்த ஹிந்துஸ்தானி மொழி, குடிமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேசிய மொழியாக – மத்திய அரசின் முதல் அலுவல் மொழியாக இருக்கும் என்றும், மத்திய அரசு சட்டத்தால் தீர்மானிக்கின்ற காலம் வரை ஆங்கிலம் இரண்டாவது அலுவல் மொழியாக இருக்கும் என்றும்’ தெரிவித்து இருந்ததாகவும், ஆனால் இந்திய அரசமைப்பு ஹிந்தியை மத்திய அரசின் அலுவல் மொழியாக மட்டுமே பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் தேசிய மொழியாகப் பிரகடனப்படுத்தவில்லை' எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment