Friday 24 January 2014

இந்திய தொழில்வளம்

இந்திய தொழில்வளம்
Posted Date : 09:12 (13/12/2013)Last updated : 09:12 (13/12/2013)
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய தொழில்துறையின் பங்கு 28.4 சதவீதமாகும். 17 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கிறது.
நாட்டின் 60%க்கும் மேலானோர் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டிருப்பதால் வேளாண்மையில் உற்பத்தித் திறன் எதிர்மறை அளவிலேயே உள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு வேளாண்மையே முக்கியத் தொழிலாகக் கருதப்பட்டு முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
தொழிற்துறையில் கொண்டுவரப்பட்ட தொழிற்கொள்கைகளும், திருத்தங்களும் இந்திய தொழிற்துறையின் வளர்ச்சிக்கு உந்துகோலாக அமைந்தது. தொழில் துறையில் உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகம். தொழில் வளம் பெருகினால் நாட்டின் மொத்த உற்பத்தியும், வருமானமும் அதிகரிக்கும்.
1991-ல் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப்பிறகு பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன் வருகின்றன.
உற்பத்தி நிலைகளின் அடிப்படையில் தொழில்களை நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தலாம்.
முதன்மைத் தொழில்கள்
இயற்கையிலிருந்து நேரடியாக இயற்கைவளங்களை பெற்று மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் தொழில்கள்.
இரண்டாம் நிலைத் தொழில்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கின்றன.
வேளாண் தொழில், சுரங்கத் தொழில், வேட்டையாடுதல்,மீன் பிடித்தல் ஆகியவை முதன்மை நிலைத்தொழில்கள்.
இரண்டாம் நிலைத் தொழில்கள்
இயற்கையிலிருந்து கிடைக்கும், மூலப்பொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழில்கள் இரண்டாம் நிலைத்தொழில்கள்.
கைத்தறி மற்றும் துணித்தொழில்கள், இரும்பு மற்றும் எஃகு ஆலை, பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், ரப்பர் தொழிற்சாலை போன்ற தொழில்கள் இரண்டாம் நிலைத் தொழில்கள்.
மூன்றாம் நிலைத் தொழில்கள்
போக்குவரத்து, வணிகம், வங்கி, தொலைதொடர்பு, பொழுது போக்கு ஆகியவை தொடர்பான தொழில்கள் மூன்றாம் நிலைத்தொழில்கள்.
நான்காம் நிலைத் தொழில்கள்
முதல் மூன்று தொழில்களும் நேர்த்தியாக அமைவதற்கு தேவைப்படும் உயர்தரத் திறமை, சிறப்புத் தன்மை மேலாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்.
நிர்வாகம், ஆராய்ச்சி, நிதி மேலாண்மை, மருத்துவம், வழக்காடுதல் ஆகியவை நான்காம் நிலைத் தொழில்கள்.
இந்தியத் தொழில்வளம்
இரும்பு மற்றும் எஃகுத் தொழில், துணித் தொழில், சர்க்கரை, தேயிலை, சணல், ஆட்டோமொபைல், கப்பல் கட்டுமானம், உரத்தொழிற்சாலை கள், எண்ணெய் சுத்திகரிப்பு, சிமென்ட் தொழிற்சாலைகள் ஆகியவை பெருந்தொழில்கள் ஆகும்.
இரும்பு மற்றும் எஃகுத் தொழில் வளர்ச்சி
இந்தியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை சேலத்துக்கு அருகில் 1830-ல் தொடங்கப்பட்டது.
 1875-ம் ஆண்டு வங்காளத்தில் உள்ள அசனூர் என்னுமிடத்தில் குல்டி இரும்பு ஆலை தொடங்கப்பட்டது.
 1907-ம் ஆண்டு பீகார் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் தொடங்கப்பட்ட (TISCO - Tata Iron and Steel Company) டிஸ்கோ கம்பெனி இந்தியாவின் இரும்பு-எஃகுத் தொழிலுக்கு அடித்தளம் அமைத்தது.
 1918-ல் வங்காளத்தின் ஹிராப்பூர் என்னுமிடத்தில் இந்தியன் இரும்பு மற்றும் எஃகுத் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
 1923-ல் கர்நாடக மாநிலத்தின் மைசூரில் இரும்புத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. இது தற்போது விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது.
 இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (1956-61) பொதுத் துறையில் மூன்று பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
 ரூர்கேலா - ஒடிசா மாநிலத்தில் ஜெர்மன் உதவியுடன் தொடங்கப்பட்டது.
 பிலாய் - சோவியத் யூனியன் உதவியுடன் மத்தியப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டது.
 துர்காபூர் - இங்கிலாந்து உதவியுடன் மேற்கு வங்காளத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் பொக்காரோ சோவியத் யூனியன் உதவியுடன் பீகாரில் தொடங்கப்பட்டது.
 HSL ஆலையை மத்திய அரசு எடுத்துக்கொண்டது.
 1973-ம் ஆண்டு இந்திய எஃகு ஆணையம் உருவாக்கப்பட்டது. (Steel Authority of India).
 1982-ம் ஆண்டு சேலம் எஃகு ஆலை உற்பத்தியைத் தொடங்கியது.
 1991-92-ல் இரும்பு எஃகு தொழிற்சாலைகளை அமைக்க இருந்த அனுமதி முறை ரத்து செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
இரும்பு தாதுக்களை வெட்டியெடுத்து, பல்வேறு ரக இரும்பு எஃகுகளை உற்பத்தி செய்வது வரை அனைத்து வசதிகளையும் உடைய ஆலைகள் ஒருங்கிணைந்த இரும்பு எஃகு ஆலைகள் எனப்படும். இவ்வகையான ஆலைகள்
(TISCO - Tata Iron and Steel Company - தனியார்)
Bilai, Rourkela, Durgapur, Bokaro, IISO முதலிய இடங்களில் அமைந்துள்ளது.
 1982-ம் ஆண்டு முதல் ராஷ்டிரிய இஸ்பட் நிகம் லிமிடெட் (RINL - Rashtriya Ispat Nigam Ltd.) 1992-ல் அமைக்கப்பட்டது.
மேலும் நூற்றுக்கணக்கான சிறிய இரும்பு எஃகு ஆலைகள் நாட்டில் செயல்பட்டு வருகின்றன.
பருத்தி துணித் தொழில் (Cotton Textile Industry)
 துணிகள் ஏற்றமதியில் ஜப்பான் முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.
 1947-ல் சுதந்திரம் அடைந்தபோது மொத்தம் 409 நெசவாலைகள் இருந்தன.
 1993-ல் துணி ஆலைகள் தொடங்குவதற்கு அரசு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
 1968-ம் ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்ட 16 துணி ஆலைகளை நடத்துவதற்கு தேசிய துணிக் கழகம் உருவாக்கப்பட்டது (NTC - National Textile Corporation).
சர்க்கரைத் தொழில்
 இந்தியாவில் மூன்றாவது பெரிய தொழில்.
 1982-ம் ஆண்டு மிக அதிக சர்க்கரையை உற்பத்தி செய்து உலகில் முதலிடத்தைப் பிடித்தது.
சர்க்கரை முன்னேற்ற நிதி (Sugar Development Fund)
1982-ம் ஆண்டு சர்க்கரை உற்பத்தியில் வரி விதிக்கப்பட்டு சர்க்கரை முன்னேற்ற நிதி உருவாக்கப்பட்டது. நலிவுற்ற சர்க்கரை ஆலைகளை நவீனபபடுத்த குறைந்த வட்டிக்கு கடன் அளிக்கிறது. கரும்பு வளர்ச்சி ஆய்வு, சேமிப்புக் கிடங்குகளைக் கட்டுவதற்கு உதவி அளிக்கிறது.
தேயிலைத் தொழில்
 தேயிலை உற்பத்தியிலும், பயன்பாட்டிலும் இந்தியா முதலிடம் வகிக்கிறது. உலகத் தேயிலை உற்பத்தியில் 25% இந்தியாவில் மட்டுமே உற்பத்தியாகிறது.
 தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது.
 இந்தியாவில் 7 இடங்களில் தேயிலை ஏல விற்பனை நிலையங்கள் உள்ளது. 1981 முதல் சிங்கப்பூரிலும இந்தியா தேயிலை ஏல விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டது.
சணல் ஆலைத் தொழில்
 இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் முக்கிய பணப்பயிர் சணல். 1865 வரை குடிசைத் தொழிலாக இருந்த சணல் தொழில் 1885 முதல் பெருந்தொழிலாக வளர்ந்தது.
 கொல்கத்தாவை சுற்றியே பெரும்பாலான ஆலைகள் அமைந்துள்ளன.
 1971-ம் ஆண்டு இந்திய சணல் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இது சணலுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம், சணல் பயிர் கொள்முதல், சணல் பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றை கவனித்து வருகிறது.
குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
நம் நாட்டின் மொத்த தொழில்களின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய மொத்த உற்பத்தியில் 8%, உற்பத்தி திறனில் 45% மற்றும் ஏற்றுமதியில் 40 சதவீதமும் இந்நிறுவனங்கள் பங்களிக்கின்றன.
வாகன உதிரிபாகங்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்களின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது.
சிறப்பு உற்பத்தி தொழில் பிரிவுகளை ஊக்குவிப்பதற்காக கீழ்க்கண்ட 13 தொழில்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மின் மற்றும் மின்னணு பொருட்கள், தோல் மற்றும் தோல் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், மருந்து மற்றும் மருந்து பொருட்கள், சூரிய சக்தி பயன்பாட்டு உபகரணங்கள், ஏற்றுமதிக்கான தங்கம் மற்றும் வைர நகைகள், மாசுக்கட்டுப்பாடு உபகரணங்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் உபகரணங்கள், சிக்கன கட்டுமான பொருட்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல்,  பிளாஸ்டிக் மற்றும் ரப்பர்.
தொழில் கொள்கைகள்
நாட்டின் தொழில் துறை நிறுவனங்களைத் தோற்றுவிப்பதற்கான கொள்கைகள், செயல் முறைகள், அவற்றைக் கட்டுப் படுத்தக் கூடிய சட்டங்கள், நிதி ஆதாரங்கள் பற்றிய கொள்கைகள், தொழிலாளர் சட்டங்கள் ஆகியவற்றை தெளிவாகக் கூறுவது தொழில் கொள்கைகள்.
1948 - தொழிற் கொள்கை
 தொழில்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. நாட்டுப் பாது காப்பு, அணுசக்தி உற்பத்தி, ரயில் போக்குவரத்து போன்ற முன் னுரிமை பெற்ற தொழில்கள்.
 இரண்டாம் வகைத் தொழில்கள் - நிலக்கரி, இரும்பு, எஃகு, விமானம், கப்பல் கட்டுதல், தொலைபேசி, தந்தி, வானொலி, நிலத்தடி எண்ணெய் எடுத்தல் இவற்றில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு.
 போக்குவரத்து வாகனங்கள், மின்னியல், பொறியியல், கனரக இயந்திரங்கள், வேதியியல் உரம், ரப்பர், பருத்தி, கம்பளி ஆடைகள், சிமெண்ட், சர்க்கரை, காகிதம், விமானம், கடல், போக்குவரத்து போன்ற தொழில்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு இருக்க அனுமதி அளிக்கப்பட்டது.
 மேற்கூறிய பிரிவுகளில் கூறப்படாத பிற தொழில்கள் நான்காவது பிரிவில் அடங்கும். இப்பிரிவில் கூட்டுறவு மற்றும் தனியார் துறைகள் தொழில்களை ஆரம்பித்து நடத்தலாம்.
தொழில் உரிமக்கொள்கை (INDUSTRIAL LICENCING POLICY)
 1966-ம் ஆண்டு R.K.ஹசாரி தொழில் அரசனுமதிக் கொள்கை தொழில் அரசு உரிமங்கள் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப் பரிந்துரைத்தார்.
ஹசாரி தனது அறிக்கைகள் பெரும்பான்மையான தொழில் உரிமங்களை பெரும் தொழில் நிறுவனங்களே கைப்பற்றிக் கொள்கிறது எனவும் சிறுதொழில்களுக்கான தொழில்களை அரசு ஒதுக்க வேண்டும எனவும் பரிந்துரைத்தார்.
 1987-ம் ஆண்டு திரு.சுபிமல் தட் அவர்களது தலைமையில் தொழில் அரசனுமதிக் கொள்கை ஆய்வுக் குழு (Industrial Licensing Policy Inquity Committee) அமைக்கப்பட்டது.
 1969-ம் ஆண்டு முற்றுரிமை, கட்டுப்பாடு, வணிக நடவடிக்கைகள் தடைச் சட்டம் (Monopoly and Restrictive Trade Practices  Act) கொண்டு வரப்பட்டது.
 1982-ம் ஆண்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில அடிப்படைத் தொழில்களுக்கு, கட்டுப்பாடு, வணிக நடவடிக்கைகள் தடைச் சட்டத்தில் (MRTP) விலக்கு அளிக்கப்பட்டது.
 1985-ம் ஆண்டு 25 வகையான தொழில்களுக்கு அனுமதி வழங்குவது தாராளமயமாக்கப்பட்டது. மேலும் 82 வகையான மருத்துவத் தொழில்களைத் தொடங்கவும் அரசு அனுமதி தேவை இல்லை என அறிவிக்கப்பட்டது.
 எந்தவொரு நிறுவனத்தின் சொத்து மதிப்பும் ரூ.20 கோடிக்கு அதிகமாக இருக்குமானால் அது MRTP சட்டத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படும். இந்த வரம்பு ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டது.
புதிய தொழில் கொள்கை (New Industrial Policy - 1991)
இந்திய தொழில் துறையை அரசு அதிகாரிகளின் பிடியில் இருந்து விடுவிப்பது. இந்தியப் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் ஒருமுகப்படுத்தும் வகையில் தாராளமயமாக்கல்,நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் உள்நாட்டு  நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது, பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிற பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது போன்றவை இதன் முக்கிய அம்சங்கள்.
 முன்னுரிமைத் தொழில்களில் தனியார் அனுமதிக்கப்படுதல், அயல்நாட்டு முதலீடு, சிறுதொழில் களுக்கு முக்கியத்துவம், தொழில் நுட்ப மேம்பாடு ஆகியவை புதிய தொழிற் கொள்கையின் முக்கிய அம்சங்கள்.
1. தொழில் அரசு அனுமதிக் கொள்கை - 18 தொழில்களைத் தவிர பிற தொழில்கள் தொடங்க அரசு அனுமதி தேவையில்லை.
2. அந்நிய முதலீடு
3. அன்னிய தொழில்நுட்ப ஒப்பந்தம்
4. அரசுத் துறை கொள்கை
5. முற்றுரிமைச் சட்டம்
அன்னிய முதலீடு : தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த தேனிரும்பு, கப்பல் கட்டுதல், உழும் இயந்திரங்கள், தானிய அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட 34 வகை தொழில்களின் மொத்த முதலீட்டில் 51% வரை அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டது.
பொதுத் துறை நிறுவனங்கள் ஒதுக்கீடு
1. தரைப் படை, விமானப் படை, கப்பல் படை போன்ற தேவையான ஆயுதங்கள், கருவிகள்.
2. அணு மின்சக்தி
3. நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி
4. கச்சா எண்ணெய்
5. இரும்பு, மக்னீசியம், குரோமியம், ஜிப்சம், கந்தகம், தங்கம், வைர சுரங்கங்கள்
6. செம்பு, ஈயம், துத்தநாகம், தகரம் ஆகிய சுரங்கங்கள்
7. அணு மின்சக்தி தயாரிக்கப் பயன்படும் உலோகங்கள்
8. ரயில்வே
ஆகிய தொழில்கள் மட்டும் பொதுத்துறை வைத்துக்கொள்ளலாம். பிற தொழில்களில் தனியார்த் துறை அனுமதிக்கப்படும்.
1993-94-க்கு பிறகு
 பொதுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட 13 வகை கனிமங்கள் தனியார் துறைக்கு திறந்துவிடப்பட்டது. இதனால் பொதுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்கள் ஆறாகக் குறைந்தது.
 1993-ல் கார், தோல், தோல் பொருட்கள் போன்ற தொழில்களுக்கு அரசனுமதி வாங்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. எனவே அரசனுமதி தேவை என்ற தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 15 ஆகக் குறைந்தது.
 நாட்டில் எந்த இடத்திலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கும், பின்தங்கிய மாநிலங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கும் முதல் 5 ஆண்டுகளுக்கு வரி கிடையாது (Tax holiday) என அறிவிக்கப்பட்டது.
 1998-99-களில் அரசு அனுமதி பெற்று தொடங்க வேண்டிய தொழில்களின் எண்ணிக்கை, ஆல்கஹால் தயாரிக்கும் நிறுவனங்கள், சிகரெட் மற்றும் புகையிலை தொடர்பான பொருட்கள் தயாரிக்கும் தொழில், பாதுகாப்புத் தளவாடங்கள், விண்வெளி மின் சாதனங்கள், தீங்கு விளைவிக்கும் (Hazardous) வேதியியல் பொருட்கள், மருந்துப் பொருட்கள் (Drugs Medicines) என ஐந்தாகக் குறைக்கப்பட்டது.
1991 முதல் 2010 வரை
 வேளாண்மை, நிலக்கரி, தங்கம், இரும்பு, எஃகு, சிமென்ட் உள்ளிட்ட தொழிற்சாலைகள், சேவைகளில்... விமானிகளுக்கு பயிற்சி நிலையங்கள், வானூர்தி பழுது நீக்கம், பொழுதுபோக்கு விடுதிகள், கல்வி நிலையங்கள், நகர் நிர்மாணம், வணிக வங்கிகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள், தொலைத் தொடர்பு ஆகிய தொழில்களில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது.
 தேயிலைத் தோட்டம், டைட்டானியச் சுரங்கம், செய்திகளை அறிவிக்காத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள், அஞ்சலக சட்டத்திற்கு உட்படாத பொருட்களை எடுத்துச் செல்லும் கூரியர் சேவை, சிறுதொழில் நிறுவன உற்பத்தி விற்பனை, அறிவியல் ஏடுகள் போன்ற தொழில்கள் தொடங்க அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (FIPB - Foreign Investment Promotion Board) அனுமதி பெற்று 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும்.
 சில்லறை வணிகம், லாட்டரி, அணுசக்தி, சூதாட்டம், பந்தயம், சீட்டு கம்பெனி, நிதி நிறுவனங்கள், தனியார் துறைக்கு அனுமதிக்கப்படாத தொழில்கள் ஆகியவற்றில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படவில்லை.
 பொதுத் துறைக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்ட தொழில்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு 2001-02ன் முடிவில் மூன்று தொழில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
1. அணு சக்தி
2. மரபுசாரா ஆற்றல் துறையின் பட்டியலில் இடம் பெற்றுள்ள பொருட்கள்
3. இந்திய ரயில்வே
சிறப்பு பொருளாதார மண்டலம் (Special Economic Zone (SEZ))
சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான சட்டம் 2005 நவம்பரில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.
மத்திய அரசு இதுவரை மொத்தம் 577 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதில், 389 இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 170 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இயங்கி வருகிறது. மீதமுள்ள 219 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் விரைவில் செயல்பட இருக்கிறது.

No comments:

Post a Comment