Friday 24 January 2014

இந்திய வேளாண்மை

இந்திய வேளாண்மை
Posted Date : 08:12 (13/12/2013)Last updated : 08:12 (13/12/2013)
ரு நாட்டின் புவியியல் அமைப்பு, காலநிலை, மக்கள்தொகை , அரசின் கொள்கைகள் மற்றும் உணவு பழக்கவழக்க முறைகளுமே விவசாயத்தைத் தீர்மானிக்கின்றன.
உலகின் முன்னணி வேளாண் உற்பத்தி நாடுகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் சூழலில், இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பால், பருப்பு, சணல், நார் உற்பத்தியில் இந்தியா உலகிலேயே முதலிடம் வகிக்கிறது.
நெல், கோதுமை, கரும்பு, காய்கறிகள், பழங்கள், பருத்தி ஆகியவற்றின் உற்பத்தியில் இந்தியா, உலகில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
புகையிலை உற்பத்தியில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
இயற்கை ரப்பர் உற்பத்தியில் நான்காம் இடத்தில் இந்தியா உள்ளது
முட்டை உற்பத்தியில் ஐந்தாம் இடத்திலும், காபி, மீன் உற்பத்தியில் ஆறாம் இடத்திலும் இந்தியா உள்ளது.
புதிய தேசிய வேளாண் கொள்கை அடிப்படையில் ஆண்டு ஒன்றுக்கு 4%  என்ற இலக்கை நோக்கி செயல்பட்டதில் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 3.6%  வளர்ச்சியை வேளாண்துறை எட்டியுள்ளது.
வேளாண்துறை இந்திய அரசமைப்பின் மாநிலப்பட்டியலில் உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்துறையின் பங்கு 14.1% (201112 RE) ஆகும்.
வேளாண்துறை வளர்ச்சி
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 85 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தனர். சுதந்திரம் அடைந்ததில் இருந்து, விவசாயத் தொழிலை முன்னேற்ற ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களிலும் மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.
1900 முதல் 1950 வரையிலான ஐம்பது ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி தேக்க நிலையிலேயே இருந்தது. விடுதலைக்குப் பின் 1950-51 முதல் 1964-65 வரையிலான காலத்தில் வேளாண் உற்பத்தி ஆண்டுக்கு 3.3% என்ற அளவில் அதிகரித்தது.
1965-க்கு பிறகு இந்திய வேளாண் தொழில் மாறுதல்கள் ஏற்பட்டு வேளாண் பொருட்களின் உற்பத்தி அதிகரித்தது.
1966-67-ல் அதிக விளைச்சல் தரும் பயிர் திட்டம் (High yielding varieties programme) தொடங்கப்பட்டது.
1968-69-ல் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து, வேதியியல் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிக்க செய்ய ஆரம்பித்ததே பசுமை புரட்சி எனப்படும் புதுமையான வேளாண் தொழில் நுணுக்கம்.
1990-91-ல் மழையை நம்பியுள்ள பகுதிகளுக்கான தேசிய தண்ணீர் மேம்பாட்டு திட்டம் (National Watershed Development Project for Rainfed Areas) 28  மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டது.
பயிர்களும் பருவங்களும்
இந்தியாவில் பயிரிடப்படும் வேளாண்பயிர்கள் குறிப்பிட்ட மூன்று பருவங்களில் பயிரிடப்பட்டு வருகின்றது.
கரீஃப் (Kharif) பயிர்கள் : ஜூலை மாதத்தில் விதைக்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. எ.கா. நெல், சோளம், கம்பு, மக்காச்சோளம், பருத்தி, கரும்பு, எள், சோயாபீன்ஸ், நிலக்கடலை.
ரபி (Rabi) பயிர்கள் : இவ்வகைப் பயிர்கள் அக்டோபர் மாத இறுதியில் விதைக்கப்பட்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. எ.கா. கோதுமை, பார்லி, கடுகு, பருப்பு வகைகள்
ஜைத் (Zaid) பயிர்கள் : இந்தியாவின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இப்பருவப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. மார்ச் மாதத்தில் விதைக்கப்பட்டு ஜூன் மாதத்தில் அறுவடை செய்யப்படுகின்றது. எ.கா. காய்கறிகள், தர்பூசணி, வெள்ளரி, பாசிப் பயறு, உளுந்து.
வேளாண் உயிரி தொழில்நுட்பம் (Agri - Biotechnology)
அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்களை மேம்படுத்துதலே வேளாண் உயிரி தொழில்நுட்பம். (Agribiotechnology)
மூலக்கூறு குறிப்பான்கள் (Molecular Markers)
மூலக்கூறு குறியீடு சார்ந்த தேர்வு (Marker Assisted Selection) முறையினை  பயன்படுத்தி  குறுகிய காலத்தில் சூழ்நிலைக்கு தகுந்த பயிர் ரகங்களைக் கண்டுபிடிக்கலாம்.
எ.கா.வெள்ள நீரில் மூழ்கும் நெற்பயிர், அழுகி இறக்காமல் இருக்க பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பன்னாட்டு நெல் ஆராய்ச்சி மையம் (International Rice Research Institute-IRRI) வெளியிட்டுள்ள சொர்ணா  சப்1 (Swarna - Sub1) நெல் ரகம்.
மரபணு பொறியியல் (Genetic Engineering)
1982-ம் ஆண்டு களைக்கொல்லிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட மரபணு மாற்றப்பட்ட புகையிலைத் தாவரம் உருவாக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து 1987-ம் ஆண்டு பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus thuringiensis (Bt)) பாக்டீரியாவிலிருந்து பெறப்பட்ட புரத மூலக்கூறு கொண்டு பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற புகையிலைத் தாவரம் உருவாக்கப்பட்டது.
Bt பருத்தி காய்ப்புழுவிற்கு எதிர்ப்புத் திறன், Bt மக்காச்சோளம், Bt சோயாபீன்ஸ், Bt கடுகு களைக்கொல்லிகளுக்கு எதிர்ப்புத் திறன், பப்பாளி ரிங் ஸ்பாட் வைரஸ் (Papaya Ring Spot Virus) நோயிற்கு எதிர்ப்புத் திறன், தங்க நெல் (Golden Rice) - வைட்டமின் A அதிகம், வாழையில் முடிக்கொத்து வைரஸ் நோயிற்கு எதிர்ப்புத்திறனுடைய (Banana Bunchy Top Virus Resistant) வாழை என இதன் பட்டியல் நீள்கிறது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களைப் பயன்படுத்துவதில் இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது. 2009-ம் ஆண்டு Bt கத்தரி வணிகரீதியாக பயிரிடப்படுவதற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்த போது மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் தீமைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றது.
திசு வளர்ப்பு (Tissue Culture)
தாவரத்தின் பாகங்களிலிருந்து குறிப்பிட்ட சிறு பகுதியை வெட்டியெடுத்து புதிய தாவரங்களை/செடிகளை உற்பத்தி செய்து பயிரிடப் திசு வளர்ப்பு பயன்படுகிறது.
எ.கா. வாழை, எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி, காபி மற்றும் மூங்கில்(முள் இல்லாதது) ஆகியவை திசு வளர்ப்பு முறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய தேசிய வேளாண் கொள்கை 2000
அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஆண்டொன்றுக்கு 4% வளர்ச்சி, நில சீர்திருத்தங்கள், ஏழை விவசாயிகளுக்கு நிலம் அளித்தல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நில உரிமைகளை வரையறுத்தல், வேளாண்துறையில் தனியார் மூலதனத்தை அதிகரிக்க செய்தல், பயிர் காப்பீடு, உயிரி தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சிகளின் உதவியுடன் புதிய ரக பயிர்களை உருவாக்குதல் போன்றவை புதிய தேசிய வேளாண் கொள்கையின் முக்கிய அம்சங்கள்.
புதிய தேசிய வேளாண் கொள்கை, வானவில் புரட்சிகள் (Rainbow Revolution) எனவும் அழைக்கப்படுகிறது.
பசுமைப் புரட்சி ( Green Revolution)    விவசாயம் ( உணவு உற்பத்தி)
மஞ்சள் புரட்சி  ( Yellow Revolution)  எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி
வெண்மை புரட்சி ( White  Revolution) – பால்
நீலப் புரட்சி (Blue Revolution) மீன்
வெளிர்சிவப்பு புரட்சி  (Pink  Revolution) – இறால்
கருப்பு / பழுப்பு புரட்சி  ( Black/Brown Revolution) – மரபுசாரா ஆற்றல் மூலங்கள்
சிவப்பு புரட்சி  ( Red Revolution)– இறைச்சி / தக்காளி
தங்கப் புரட்சி  ( Golden Revolution)  பழங்கள் / ஆப்பிள்
சாம்பல் புரட்சி  (Grey  Revolution)    – உரங்கள்
சில்வர் புரட்சி  (Silver Revolution)– முட்டை
உருண்டை புரட்சி  ( Round  Revolution) – உருளைக்கிழங்கு
தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் (National Food Security Mission)
இந்தியாவின் வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு தானியத்தின் இருப்பு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு,  'தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம்' 2007-ம் ஆண்டு கொண்டுவரப் பட்டது.
11-வது ஐந்தாண்டு திட்ட கால (2007-2012)முடிவில் நெற்பயிரில் 10 மில்லியன் டன், கோதுமையில் 8 மில்லியன் டன் மற்றும் பயறு வகைகளில் 2 மில்லியன் டன் உற்பத்தியை அதிகரிக்க செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.
15 மாநிலங்களில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் நெல் பிரிவும், 9 மாநிலங்களில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கோதுமை பிரிவும், 16 மாநிலங்களில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் பயறுகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கான தேசிய கொள்கை  2007
வேளாண் உற்பத்தித் திறன் மற்றும் லாபத்தை அதிகரித்து, விவசாயிகளுக்கான நிலையான வருமானத்தை உருவாக்கும் நோக்கில் 2004-ம் ஆண்டு எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் விவசாயிகளுக்கான தேசிய குழு அமைக்கப்பட்டது.
இளைஞர்களை வேளாண்மையில் ஈடுபடுத்தவும், உணவு மற்றும் உணவூட்ட பாதுகாப்பிற்கான இடைக்கால திட்டங்கள் வகுக்கவுமான ஆலோசனைகளை அக்டோபர் 2006-ம் ஆண்டு விவசாயிகளுக்கான தேசியக் குழு சமர்ப்பித்தது.
தேசிய விவசாயக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் விவசாயிகளுக்க£ன தேசிய கொள்கை  2007 உருவாக்கப்பட்டது.
உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை பெருக்குவதோடு விவசாயி களின் பொருளாதார நலனிலும் அக்கறை செலுத்துவதே விவசாய கொள்கையின் முக்கிய நோக்கம்.
வேளாண் விலைகள்
1965-ம் ஆண்டு வேளாண் விலைக்குழு (Agricultural prices commission) உருவாக்கப்பட்டு, பின் 1985-ல் வேளாண்மைச் செலவு மற்றும் விலைக்குழு (Commission for Agricultural costs and prices) என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 
வேளாண்மைச் செலவு மற்றும் விலைக்குழு வேளாண் விலைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல் விலை, நுகர்வோர் விற்பனை விலை போன்றவற்றை நிர்ணயித்து நுகர்வோர் நலன் பாதுகாக்கப்படுவதுடன், உற்பத்தியாளருக்கு கட்டுபடியாகக் கூடிய விலையை கிடைக்கச்செய்கிறது.
குறிப்பிட்ட பயிருக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதால், உற்பத்தி அளவு, விலை சீராவதுடன் உற்பத்தி செய்யும் விவசாயிக்கும் வருவாய் உற்பத்தி செய்யப்படுகின்றது.
விளைச்சல் அதிகமாக உள்ள காலங்களில் விலைக் குறைவும், போதிய விளைச்சல் இல்லாத காலங்களில் விலை ஏற்றமும் ஏற்படுகிறது. இந்த நேரங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல் விலை, நுகர்வோர் விற்பனை விலை ஆகியவை விவசாயிகளுக்கு நியாயமான வருவாய் கிடைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support price)
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக அரசு நிறுவனமோ அல்லது தனியார் வணிகர்களோ விளைப்பொருள்களை கொள்முதல் செய்யக் கூடாது. இதனால் விவசாயிகளின் குறைந்தபட்ச விலை உறுதி செய்யப்பட்டு விவசாயிகளின் நீண்டகால நலன் உறுதி செய்யப்படுகிறது.
மொத்தம் 24 வேளாண் விளைபொருட்களுக்கு தரம் வாரியாக குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயித்து வருகிறது.
விவசாயப் பொருட்களுக்கான விலையை ஆய்வு செய்ய குழு
விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சம்பந்தப்பட்ட செயல்முறை சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்ய விவசாயப் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான (National Centre for Agricultural economics and Policy  Research ) தேசிய மையத்தின்இயக்குனர் தலைமையில் ஒரு குழுவை ஆகஸ்ட் 2013-ல் அமைத்துள்ளது.
வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் தற்போதைய ஆணையின் நிலையை ஆய்வு செய்யவும். தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் சூழல் காரணமாக வேகமாக மாறிவரும் புறச் சூழலை எதிர்கொள்ளும் ஒரு நடவடிக்கையாக இக்குழுவின் ஆய்வு அமையும்.
குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யும் விலைக்கொள்கை, போக்குவரத்து, சந்தைப்படுத்தல், பதனிடுதல் மற்றும் சேமிப்பு உட்பட பல்வேறு காரணிகளை ஆய்வு செய்வதுடன், நடைமுறையில் உள்ள கட்டணம், வரி, கடன், சந்தை போன்றவற்றின் நிலையையும் ஆய்வு செய்ய இருக்கிறது.
தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் சூழலில் விவசாயிகளுக்கு போட்டிகளை சமாளிக்கவும் மற்றும் லாபத்தை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொள்முதல் விலை (Procurement Price)
அரசு அல்லது அரசு சார்பில் தானியங்களைக் கொள்முதல் செய்யக்கூடிய நிறுவனங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சற்று அதிக விலைக்கு கொள்முதல் செய்யும் விலையே கொள்முதல் விலை.
இந்திய உணவுக்கழகம் (Food Corporation of India) நெல், கோதுமை, சிறு தானியங்களையும், இந்திய பருத்தி கழகம் ( Cotton Corporation of India) பருத்தியையும், இந்திய சணல் கழகம் ( Jute Corporation of India) சணலையும், தேசிய வேளாண்மைக் கூட்டுறவு விற்பனைக் கூட்டமைப்பு  (National Agricultural Cooperative Marketing  Federation of India) எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயறு வகைகளை யும் அரசு சார்பில் கொள்முதல் செய்கின்றன. இவை தவிர அந்தந்த மாநில அரசுகளும் வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்கின்றன.
பசுமைப் புரட்சி
நார்மன் போர்லாக் (Norman Borlaug) பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
இந்தியாவில் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்தியவர் M.S.. சுவாமிநாதன். தமிழ்நாட்டில் பசுமைப் புரட்சியை ஆதரித்தவர் சி.சுப்ரமணியம்.
பசுமைப் புரட்சி கொள்கைகள் தானிய உற்பத்தியை பெருக்கவும் வேளாண் வளர்ச்சியை சாத்தியமாக்கவும் முக்கிய பங்களித்தன.
பசுமைப் புரட்சி என்பது தானிய உற்பத்தியைப் பெருக்குதல்,  உயர் மகசூல் விதைகள், ரசாயன உரங்கள் உள்ளிட்ட ஒரு புதிய தொழில் நுட்பம், விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தானியங்களுக்கு குறைந்தபட்ச விலை உத்திர வாதம், அரசு கொள்முதல் ஏற்பாடு, வேளாண் ஆராய்ச்சி அமைப்பை வலுப்படுத்துதல், விரிவாக்கப் பணி அமைப்பினை வலுப்படுத்துதல், சாகுபடிச் செலவுகளுக்கும் நவீன வேளாண் உற்பத்திக் கருவிகளை வாங்கவும் வங்கி/கூட்டுறவு கடன் என்று பல வகைகளில் அரசு முன் முயற்சிகளை மேற்கொண்டதுமே ஆகும்.

1 comment: