Friday 24 January 2014

தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் 2023

தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் 2023
Posted Date : 16:12 (15/12/2013)Last updated : 16:12 (15/12/2013)

டாக்டர் க.பிரபு - மாணிக்கவள்ளி கண்ணதாசன்
சமூக மேம்பாட்டிற்கான தொலைநோக்கு ஆவணம் 2023 தமிழக அரசால் தீட்டப்பட்டுள்ளது.
பொருளாதார மேம்பாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, எல்லோருக்கும் சுகாதாரம், உலகத்தர உட்கட்டமைப்பு, முதலீட்டுக்கு உகந்த ஆரோக்கியமான சூழல், இந்தியாவின் அறிவு மையம் மற்றும் புதுமை படைப்புகளின் தலைநகரமாக தமிழ்நாட்டைத் திகழ செய்தல், மனித முன்னேற்றத்திற்கு ஏற்றச் சூழலை உருவாக்குதல், பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், எந்தவிதமான விரும்பத்தகாத பாதிப்புகளுக்கும் உட்படாமல் இருத்தல், நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகத்திறனின் தகுதியை மேம்படுத்துதல் ஆகிய கருப்பொருட்களை தொலைநோக்கு ஆவணம் 2023 கொண்டுள்ளது.
2023ல் தமிழ்நாடு ஆறு மடங்கு வருமான பெருக்கத்துடன் இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் சிறந்த நாடாக உருவாக வேண்டும் என்றும் தனிநபர் வருமானத்தை 11000 அமெரிக்க டாலராக அதிகரிக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி விகிதத்தை ஆண்டுக்கு 11 சதவீதமாக உயர முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  இந்நோக்கம் 2016-17 ல் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
வாய்ப்புகள் மறுக்கப்பட்டோர்க்கும், கைவிடப்பட்டோர்க்கும் வேலை வாய்ப்பினை அளித்து தமிழ்நாட்டை ஏழ்மை அறவே அற்ற மாநிலமாக மாற்ற உறுதி பூணப்பட்டுள்ளது. குடிசைகள் அற்ற மாநிலம் உருவாகி 24 மணிநேரமும் குடிநீர் வசதி அளித்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
10 அதி நவீன சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு 150 கிலோமீட்டருக்குள் மாநிலத்தில் எந்த இடத்திலும் உள்ள மக்கள் பயன் அடையும் வகையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது .
மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியாவில் கேரளத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு முதலிடத்தினைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.
சுகாதாரம், கல்வி, குடிநீர்வசதி, வீட்டு வசதி, பாசனவசதி, போக்குவரத்து போன்ற அடிப்படை உட்கட்டமைப்புகளை இந்தியாவிலேயே சிறப்பாக மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடிப்படை உட்கட்டமைப்புகள் மூலம் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருட்கள் உற்பத்தி 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
கடந்த பத்தாண்டுகளில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையின் ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 15 சதவிகிதமாக இருக்கின்றது. மேலும் ஆண்டுக்கு 15 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்தவுள்ளது.
விவசாயத்தை நல்ல உறுதியான உட்கட்டமைப்புடன் உலகத் தர ஏற்றுமதியாளராக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் அகண்ட அலைக்கற்றை இணையம் மற்றும் மின் ஆளுகை சேவை வழங்கிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் 100 சதவிகித விவசாயிகளுக்கும் தகவல்தொடர்பின் பயன்கள் கிடைத்திடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் ஆய்வுப்படி தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் புயல் மற்றும் வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையில் உள்ளன.  இயற்கைப் பேரிடர்களைத் தடுக்க ஒருங்கிணைந்த திட்டத்தினை உருவாக்குவதும் தொலை நோக்கு ஆவணம் 2023ன் பணியாகும்.

No comments:

Post a Comment