Friday 24 January 2014

அமெரிக்கா மற்றும் இந்திய அரசமைப்பு - ஓர் ஒப்பீடு

அமெரிக்கா மற்றும் இந்திய அரசமைப்பு - ஓர் ஒப்பீடு
Posted Date : 17:12 (12/12/2013)Last updated : 17:12 (12/12/2013)
- அப்பல்லோ சாம் ராஜேஸ்வரன்
அரசமைப்புச் சட்டம் அல்லது அரசியல்சட்டம் (Constitution) என்பது ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட ஒரு அரசியல் அலகுக்கான, சட்ட விதிகள், கொள்கைகள் போன்றவற்றை விளக்கும் எழுத்து மூல ஆவணம் ஆகும்.
ஒரு அரசாங்கத்தின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் வரையறுக்கின்ற சட்டதிட்டங்கள், நெறிமுறைகள் பழக்க வழக்கங்கள் ஆகியவைகளின் தொகுப்பே அரசமைப்பாகும்.
ஆள்வோரின் அதிகாரங்கள், பொறுப்புகள், ஆளப்படுவோரின் உரிமைகள், கடமைகள் இவ்விருவருக்குமிடையே நிலவும் தொடர்புகள் போன்றவற்றை நிர்ணயிக்கும் கொள்கைகளின் தொகுப்பே அரசமைப்பு எனப்படுகிறது.
அரசாங்க உரிமைகளுக்கு உறுதியும் உத்தரவாதமும் அளித்தல், அரசாங்க அதிகாரத்திற்கான எல்லை வரையறை செய்தல் போன்றவை தற்கால அரசமைப்புகளின் முக்கியமான குறிக்கோள்களாகும்.
அரசியல் அமைப்புகளின் தன்மை நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது.
அரசமைப்பின் முக்கியக் கூறுகள்
அரசமைப்பு  என்பது நாட்டின் அடிப்படைச் சட்டங்களின் தொகுப்பு.
இது ஒரு நூலாகவோ பல ஆவணங்களின் தொகுப்பு நூலாகவோ இருக்கலாம். எழுதப்பட்டதாகவும் இருக்கலாம், எழுதப்படாததாகவும் இருக்கலாம்.
அரசாங்கத்தின் முக்கிய உறுப்புக்களின் அமைப்பு அவற்றின் அதிகாரங்களின் தொகுப்பு.
அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்குமிடையே உள்ள தொடர்புகளை விவாதிப்பது.

அரசமைப்பின் இயல்புகள்
அரசமைப்பு  அறுதியிட்டுக் கூறுவனவாக இருக்க வேண்டும். விதிகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது திட்டவட்டமானதாகவும் தெளிவான சொற்களைக் கொண்டும் அமைந்திருக்க வேண்டும்.
அரசமைப்பு  சுருக்கமானதாக அமைய வேண்டும். அவசியமற்ற விவரங்களைக் கொண்டிருக்கக் கூடாது.
நல்ல அரசமைப்பு  விளக்கமுடையதாக இருக்க வேண்டும். அரசின் முக்கியக் கூறுபாடுகளும் அடிப்படை நோக்கங்களும் தரப்பட்டிருக்க வேண்டும். அரசின் பணிகளும் அமைப்பும், நிறுவனங்களின் அதிகார வரம்புகளும் விளக்கமாக காட்டப்பட்டிருக்க வேண்டும்.
அரசமைப்பு  நிலைத்த தன்மையுடையதாக இருக்க வேண்டும். அடிக்கடி மாறக்கூடிய அரசமைப்பு  அரசியல்வாதிகளின் கைப்பாவையாகி விடும்.
நெகிழும் தன்மை கொண்டதாயிருக்க வேண்டும். கால மாறுதல்களுக்கேற்ப கருத்து மாறுதல்கள் ஏற்படும்போது அரசியலமைப்பிலும் அதற்கேற்ற மாறுதல்கள் செய்யப்பட வழிவகை இருக்க வேண்டும். அதாவது, அரசமைப்பில் திருத்த முறைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அமெரிக்க அரசமைப்பு
அமெரிக்கக் கூட்டாட்சியின் இயல்பு
எழுதப்பட்ட அரசமைப்பு 
 மைய அரசு, மாநில அரசு என்ற இருவகையான அரசுகள்.
 மைய, மாநில அரசுகளுக்கிடையில் அதிகாரப் பங்கீடு,
 நெகிழா அரசமைப்பு 
 சுதந்திரமாய் இயங்கும் நீதித் துறை
 இரண்டாவது அவை
 எழுதப்பட்ட அரசமைப்பு : உலகிலுள்ள எழுதப்பட்ட அரசமைப்பு க்களில் பழைய அரசமைப்பு  அமெரிக்க அரசியலமைப்பாகும்.
 நெகிழா அரசமைப்பு : அமெரிக்க அரசமைப்பு  நெகிழா அரசியலமைப்பாகும். சாதாரண சட்டம் நிறைவேற்றுவது போன்று அரசியலமைப்பை திருத்த இயலாது.
 அரசமைப்பின் மேம்பாடு: இங்கிலாந்தில் பாராளுமன்றத்தின் மேம்பாட்டைப் பார்க்க முடிகிறது. ஆனால்  அமெரிக்காவில் அரசமைப்பு  மேம்பாடு படைத்ததாய் காணப்படுகிறது. இம்மேம்பாடு அரசமைப்பின் ஆறாவது விதியில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
 கூட்டாட்சி அரசமைப்பு : அமெரிக்க அரசமைப்பு,  கூட்டாட்சி அரசியலமைப்பாகும். ஆரம்பத்தில் 13 மாநிலங்கள் ஒருங்கிணைந்து அமெரிக்க கூட்டாட்சியை உருவாக்கியது. இன்று ஐம்பது மாநிலங்கள் காணப்படுகின்றன.
 குடியரசு அரசமைப்பு : அமெரிக்கா குடியரசு அரசியலமைப்பைக் கொண்டது. நாட்டின் தலைவர்  தேர்ந்தெடுக்கப்படுகிறார்; அதைப்போன்று மாநிலங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
 அதிகாரப் பிரிவினைத் தத்துவம் : அமெரிக்க அரசமைப்பு  உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் மாண்டெஸ்கியூ எடுத்தியம்பிய அதிகாரப் பிரிவினைத் தத்துவம் உலகில் பிரசித்தம் பெற்று இருந்தது. அது அமெரிக்க அரசியலமைப்பை உருவாக்கியவர்களைக் கவர்ந்தது. எனவே அதிகாரப் பிரிவினைத் தத்துவத்தை அடிப்படையாய் வைத்து அரசியலமைப்பை உருவாக்கினார்கள். சட்ட உருவாக்கல், சட்ட செயல்படுத்தல், சட்ட நிர்வகித்தல் ஆகிய அதிகாரங்கள் தனித்தனி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டது. காங்கிரஸ் சட்டம் இயற்றுகிறது. குடியரசுத்தலைவர் அதை அமுலாக்குகிறார். நீதித்துறை சட்டத்திற்கு விளக்கம் அளித்து நீதியை நிலைநாட்டுகிறது.
 குடியரசுத்தலைவரின் அரசாங்க முறை: நாட்டின் தலைவராகவும் நிர்வாகத்தின் தலைவராகவும் அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் காணப்படுகிறார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (4 ஆண்டுகளுக்கு, அவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்ந்தெடுக்கப்படுகிறார். அவர் காங்கிரஸுக்கு பொறுப்புடையவர் அல்ல. நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் நிறைவேற்றி அவரை பதவியை விட்டு நீக்க இயலாது. குற்றவியல் விசாரணையின் மூலம் மட்டும் குடியரசுத் தலைவரை பதவியிலிருந்து நீக்க இயலும் குடியரசுத் தலைவரும் அவருடைய அமைச்சர்களும் சட்ட மன்றமாகிய காங்கிரஸின் அங்கத்தினர்கள் அல்ல.
 அதிகாரப் புனராய்வு: அமெரிக்காவில் அரசமைப்பு மேம்பாடு படைத்ததாய் திகழ்கிறது. அவ்வரசியலமைப்பின் பாதுகாவலனாக நீதித்துறை திகழ்கிறது.
 உரிமைகள் மசோதா: பில்டெல்பியாவில் வைத்து உருவாக்கப்பட்டு, மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட அரசியலமைப்பில் உரிமைகள் மசோதா இடம் பெறவில்லை. விடப்பட்ட மசோதாவை இணைக்கும் அவசியத்தை மக்கள் உணர்ந்தனர். அதனடிப்படையில் முதலாவது காங்கிரஸில் இதற்கான காரியங்கள் விவாதிக்கப்பட்டு, பத்து முன் வரைவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, உரிமைகள் மசோதா அமெரிக்க அரசிய லமைப்பில் இணைக்கப்பட்டது.
 இரட்டைக் குடியுரிமை: அமெரிக்க குடிமக்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளனர். மாநிலக் குடியுரிமை மற்றும் மைய அரசின் குடியுரிமை என இரு உரிமைகள் கொண்டுள்ளனர்.
 எஞ்சிய அதிகாரம் அரசியலமைப்பில் சொல்லாமல் விடப்பட்ட அதிகாரங்கள் அதாவது எஞ்சிய அதிகாரங்கள் (Residuary Powers) மாநிலங்களிடமே உள்ளன.
இந்திய அரசமைப்பு
இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள் (Salient Features of the Indian Constitution)
 எழுதப்பட்ட அரசமைப்பு
 நெகிழா அரசமைப்பு
 கூட்டாட்சி முறை
 பாராளுமன்ற மக்களாட்சி
 நீதிப்புனராய்வு
 வயது வந்தோர் வாக்குரிமை
எழுதப்பட்ட அரசமைப்பு (WRITTEN CONSTITUTION)
எழுதப்பட்ட அரசமைப்பு  என்பது பொதுவாக எழுதப்பட்ட நிலையில் விதிமுறைகளடங்கிய நூல் வடிவில் கிடைக்கக்கூடிய அரசியலமைப்பைக் குறிக்கும். இந்திய அரசமைப்பு  எழுதப்பட்ட ஒன்று.
இந்திய அரசமைப்பு  1950, ஜனவரி 26-ல் நடைமுறைக்கு வந்தது. இது மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும். பிரிட்டன், அயர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசமைப்பு களே இந்திய அரசமைப்புக்கு மூலாதாரமாக இருந்தன.
இந்தியாவின் தேவையையும், சூழ்நிலையையும் மனதில் கொண்டு, அரசியலமைப்பை வகுத்தவர்கள் மற்ற நாடுகளின் அரசமைப்புகளின் கருத்துக்களையும் எடுத்துக் கொண்டனர்.
நெகிழும் மற்றும் நெகிழா அரசமைப்பு (partly RIGID partly flexible  CONSTITUTION)
பேராசிரியர் டைசியின் (Dicey) கூற்றுப்படி நெகிழா அரசமைப்பின் விதிமுறைகளை, சாதாரண சட்டங்களைத் திருத்தும் வழிமுறையைப் பயன்படுத்தித் திருத்த முடியாது.
சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் சாதாரண சட்டங்கள் எனப்படும். அரசமைப்பு ச் சட்டம் சாதாரண சட்டத்தினின்றும் வேறுபட்டது. இந்திய அரசமைப்பின் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வருவதற்குச் சில சிறப்பு வழிவகைகள் வரையறுக்கப்படுகின்றன.
இந்திய அரசமைப்பின் சில வகையங்கள் எளிய முறையில் திருத்தப்படலாம் என்றும், சில வகையங்கள் அவ்வளவு எளிதாக திருத்தம் செய்யப்பட இயலாது என்றும் அறியலாம். ஆகவே நம்முடைய அரசமைப்பு  நெகிழும் இயல்பும், நெகிழா இயல்பும் கொண்டுள்ளது.
கூட்டாட்சி முறை (FEDERAL SYSTEM)
கூட்டாட்சி முறை என்பது, மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் என இருவகையான அரசாங்கங்களைப் பெற்று அவற்றின் அதிகார வரம்புகள் வரையறுக்கப்பட்டு செயல்படக்கூடிய முறையாகும்.
நமது அரசமைப்பு  பின்வரும் கூட்டாட்சி இயல்புகளைக் கொண்டுள்ளது.
 அரசமைப்பின் இறைமை
 நெகிழா அரசமைப்பு 
 அதிகாரப் பங்கீடு
 சுதந்திரமான நீதித்துறை
நாடாளுமன்ற மக்களாட்சி (PARLIAMENTARY DEMOCRACY)
இந்திய அரசமைப்பு, நாடாளுமன்றம் சார்ந்த அரசாங்க முறையை வழங்குகிறது. இது நாடாளுமன்றத்திற்கு பொறுப்புடைய அரசாங்கம் என்றும், 'கேபினெட்’ அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
நாடாளுமன்ற அரசாங்க முறையில் செயலாட்சிக் குழு சட்டமன்றத்துக்கு பொறுப்புடையதாகும். இந்திய செயலாட்சிக் குழு இரு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று பெயரளவிலானது. மற்றொன்று உண்மைத்தன்மை வாய்ந்தது. இந்தியாவில் பெயரளவு செயலாட்சித் தலைவர் இந்திய குடியரசுத் தலைவராவார். அவர் வாக்காளர்  குழு (Electoral College) மூலமாக ஐந்தாண்டுகளுக்குப் பதவி வகிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
உண்மையான செயலாட்சிக் குழு என்பது பிரதமரையும், அவரது ஏனைய அமைச்சர்களையும் கொண்டதாகும்.
நாடாளுமன்ற அரசாங்க முறையில் அமைச்சரவை உறுப்பினர்கள் தனிப்பொறுப்பும், கூட்டுப்பொறுப்பும் உடையவர்கள்.
இந்திய அரசமைப்பு  இரு அவை கொண்ட நாடாளுமன்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று மக்கள் அவை, மற்றொன்று மாநிலங்கள் அவை. மக்கள் அவை உறுப்பினர்கள் வயது வந்தோர் வாக்குரிமை என்ற அடிப்படையில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநிலங்கள் அவை மாநிலச் சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது.
நீதிப்புனராய்வு (Judicial Review)
நமது அரசமைப்பு  சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது. இந்திய உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டங்களை நீதிப்புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன.  ஒரு சட்டம் அரசமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே நீதிப்புனராய்வு என்று பெயர். அரசமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது.
இந்திய குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரங்களையும், நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.
 வயது வந்தோர் வாக்குரிமை (UNIVERSAL ADULT FRANCHISE)
இந்திய அரசிலமைப்பு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க உறுதியளிக்கிறது. பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும் சாதி, மதம், நிறம், பாலினப்பாகுபாடு இன்றி தேர்தலில் பங்குபெற உரிமை பெற்றுள்ளார்.
(கட்டுரையாளர் தனியார் போட்டித்தேர்வு மைய இயக்குனர்.)

No comments:

Post a Comment