Saturday 25 January 2014

தமிழ் வழி ஐ.ஏ.எஸ் சாதனைகளும் சவால்களும்!
Posted Date : 16:12 (17/12/2013)Last updated : 16:12 (17/12/2013)
முனைவர் வீ.ப.ஜெயசீலன்

'நீ என்ன பெரிய கலெக்டரா?' இக்கேள்வியை எதிர்கொள்ளாத தமிழ் இளைஞர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிவப்புச் சுழல் விளக்கு, சமூக மதிப்பு, இளம் வயதில் உயர்ந்த பொறுப்பு, மக்கள் சேவைக்கான நேரடி வாய்ப்பு இவையனைத்தும்தான் பல இளைஞர்களை 'கலெக்டர் கனவு' காண வைக்கின்றன. ஆனால் 'எங்கப்பாதான் என்னை இங்கிலீஷ் மீடியம் படிக்க வைக்கலயே... நான்லாம் எப்படி ஐ.ஏ.எஸ். தேர்வெல்லாம் எழுதுறது?' என்ற பொதுப் பார்வையை உடைத்து, தீராத ஆர்வத்தாலும், ஓய்வில்லாத உழைப்பாலும் தாய்மொழித் தமிழில் தேர்வெழுதி இலக்கை எட்டியவர்கள் தமிழகத்தில் பலர்.
இந்திய துணைத் தலைமை தேர்தல் ஆணையர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., கர்நாடகத்தில் ஆட்சியராக இருக்கும் திரு.ராஜேந்திர சோழன் ஐ.ஏ.எஸ்., ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் திரு.நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., கோவையில் சுங்கவரித் துறை துணை ஆணையர் திரு.கோபால் ஐ.ஏ.எஸ். எனத் தமிழில் எழுதி வென்றவர்களின் பட்டியல் நீளும்.
என்னது! தமிழ் வழியில் எழுதலாமா?
நான் முதன்மைத் தேர்வை எழுதிக் கொண்டிருந்த போது தமிழில் விடையெழுதுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தேர்வுக்கூடக் கண்காணிப்பாளர், ஐ.ஏ.எஸ். தேர்வைத் தமிழில் எழுதலாமா? என்று கேட்டார். அந்தப் பரபர நிமிடங்களிலும் அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய சூழல். இந்த ஐயம் நிறைய மாணவர்களுக்கும் போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கும் உள்ளது. யு.பி.எஸ்.ஸி. நடத்தும் அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் எதில் வேண்டுமென்றாலும் எழுதலாம். முதன்மைத் தேர்வை மட்டுமல்ல, நேர்முகத் தேர்வையும் தமிழில் எதிர்கொள்ள முடியும். முதன்மைத் தேர்வை ஆங்கிலத்தில் எழுதி, நேர்முகத் தேர்வை மட்டும் கூட தமிழில் எதிர்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
மொழி என்பது அறிவல்ல, ஆனாலும் அவசியம்!
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற உயர்பணிகளுக்காக நடத்தப்படும் இத்தேர்வின் மூலம் மிகச் சிறந்த படிப்பறிவும், ஆர்வமும், உழைக்கும் ஆற்றலும் கொண்ட இளைஞர்களைத்தான் தெரிவு செய்கிறார்களே தவிர, ஆங்கில மொழிப்புலமை பெற்றவர்களை அல்ல. இந்த தேர்வை வட இந்திய மாணவர்களில் பலர் இந்தியில் எழுதுகிறார்கள். அதேபோல் வட்டார மொழிகளில் எழுதி வெற்றி பெறுவோரும் பலர் உள்ளனர்.
ஆனால் குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற ஒரு பட்டதாரி இளைஞருக்குரிய ஆங்கில அறிவு அவசியம். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும். அதைப் புரிந்து கொள்வதற்கும், முதன்மைத் தேர்வில் ஆங்கில மொழியறிவைச் சோதிக்கும் கட்டாயத் தாளை (Compulsory paper) எழுதி வெற்றி பெறுவதற்கும் ஆங்கில மொழியறிவு அவசியம். (ஆங்கில மொழித்தாள் மதிப்பெண்கள் இறுதி தரப்பட்டியலுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.)
எனக்கு ஆங்கிலம் வராது, தமிழ் மொழியின் மீது பற்று அதிகம் போன்ற காரணங்களை வைத்தே தமிழ் வழியில் தேர்வெழுதி வெற்றி பெறலாம் எனக் கருதுவது கானல் நீர்தான்.
ஆங்கில மொழியில் எழுதுவதை விட, தமிழில் எழுதினால் என்னுடைய கருத்துக்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்த முடியும், ஆங்கில மூல நூல்களை படித்துப் புரிந்து கொண்டு தமிழில் மொழிபெயர்த்து எழுத இயலும் என்ற ஆற்றலும்தான் வெற்றி வாகை சூடுவதற்கான வாய்ப்பைத் தரும் என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் திரு.நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.
வரிசை கட்டி நிற்கும் சவால்கள்
1. முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகியவற்றில் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் இருக்கும். முதனிலைத் தேர்வில் கொள்குறி வகையிலும் (Objective type) முதன்மைத்தேர்வில் விரிவான விடையளிக்கும் வகையிலும் (Descriptive type) இருக்கும். முதனிலைத் தேர்வில் குடிமைப் பணி திறனறித் தேர்வுத் (CSAT) தாளில் ஆங்கிலப் பத்திகளைப் புரிந்து கொண்டு வினாக்களுக்கு விடையளிக்கும் (Comprehensive test) பகுதியை எதிர்கொள்ள நல்ல ஆங்கில அறிவு அவசியம். இந்த நிலையில் தான் ஆங்கில புரிதிறன் குறைந்த மாணவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர்.
2. முதன்மைத் தேர்வில் ஆங்கிலத்தில் வினாத்தாள் இருக்கும். ஆனால் விடைகளைத் தமிழில் எழுதலாம். அப்படி எழுதும் போது முக்கிய கலைச் சொற்களை அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் எழுதுவது அவசியம். எடுத்துக்காட்டாக ஆழிப் பேரலை (Tsunami) என்று எழுத வேண்டும். இது சற்று நேரத்தை எடுக்கும்.
3. நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் வினாக்களையும் நாம் தமிழில் கூறும் பதில்களையும் மொழிபெயர்த்துச் சொல்வதற்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் இருப்பார். கடந்த ஆண்டுகளில் தமிழில் நேர்முகத் தேர்வை எதிர்கொண்டவர்களை முடிந்தவரை ஆங்கிலத்தில்தான் பேசச் சொல்லியிருக்கிறார்கள். இந்திய அளவில் உயர் பதவியை பெறத் துடிக்கும் இளைஞர்கள் முயற்சி செய்து ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
4. குடிமைப்பணித் தேர்வு இந்திய அளவில் போட்டியைக் கொண்ட தேர்வு என்பதால் இதற்கான சந்தையின் பொதுமொழியாக ஆங்கிலமே இருக்கிறது. தலைசிறந்த பார்வை நூல்கள், வழிகாட்டி நூல்கள், இதழ்கள் மற்றும் இத்தேர்வை நுணுகி ஆய்வு செய்து பாடக் குறிப்புகள் (Study Materials) தயார் செய்யும் பயிற்சி மையங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே வெளியிடுகின்றன. தேர்வுக்கான முக்கியத் தரவுகள் ஆங்கிலத்தில்தான் கிடைக்கும். அதைப் படித்துப் புரிந்து கொண்டு மொழிபெயர்த்து எழுதுவதுதான் தேர்வர்களுக்கான சவால்.
கடந்த ஆண்டுகளில் தமிழ் வழியில் எழுதி வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட நண்பர்கள் கூறும்போது தமிழ் எழுத்துருக்கள் வட்ட வடிவில் உள்ளதால் ஆங்கிலத்தில் எழுதும் வேகத்தைப் போல் தமிழில் வேகமாக எழுத இயலாததால் முழுமையாக விடையளிக்க முடியவில்லை என்றனர். மேலும் கல்லூரியில் ஆங்கிலத்திலேயே எழுதிப் பழகி, பள்ளிப் படிப்புக்குப் பிறகு நான்கைந்து ஆண்டுகள் தமிழில் எழுதும் தொடர்பே இல்லாமல் இருப்பதும் தமிழில் நன்கு தேர்வெழுதுவதைச் சாத்தியப்படுத் துவதில்லை.
6. முழுமையாகத் தமிழில் பயிற்சி அளிப்பதற்கு பயிற்சி மையங்களே இல்லை. மேலும் தமிழில் திறமையாக எழுதும் மாணவர்களால் ஆங்கிலத்திலும் எழுத முடியும். எனவே ஆங்கில நூல்களைப் படித்து ஆங்கிலத்திலே எழுதி வருகிறார்கள் என்கிறார்.
7. பொது அறிவுத் தாள்கள் தவிர, ஒரு விருப்பப் பாடத்தைத் தெரிவு செய்து, முதன்மைத் தேர்வை எழுத வேண்டும். இதில் பொது நிர்வாகம், சமூகவியல், புவியியல் போன்ற பாடங்களுக்குத் தமிழில் பல்கலைக்கழகப் பாடநூல்களைத் தவிர ஐ.ஏ.எஸ். தேர்வுத் தரத்திற்கு வேறெந்த நூல்களும் இதுவரையில் இல்லை. இதுபோன்ற விருப்பப் பாடங்களை தமிழ் வழியில் எழுத கடும் உழைப்பு தேவைப்படுகிறது.
தமிழ் வழியில் வென்றவர்கள் சொல்வதென்ன?
முதுகலைத் தமிழிலக்கியம் பயின்று, தினமணியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே, நத்தத்திற்கும் மதுரைக்கும் தினந்தோறும் பயணம் செய்யும் நேரத்தில் படித்து, முதல் நாள் சென்னையில் தேர்வெழுதி விட்டு இரவு பயணித்து மதுரை சென்று அலுவலகப் பணிகளை முடித்து, மறுநாள் சென்னையில் தேர்வெழுதி... இப்படித் தனது கடின உழைப்பால் முதல் தமிழ் மொழி ஐ.ஏ.எஸ். என்ற மகுடம் தாங்கியுள்ள ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்களின் வெற்றிக் கதை உழைப்பின் பெருமையையும், தமிழின் வளத்தையும் உலகுக்குச் சொல்கிறது.
தமிழில் தேர்வெழுதுவதால் நமது கருத்துக்களை, நிலைப்பாட்டை முழுமையாக வெளிப்படுத்த வேண்டிய பொதுக் கட்டுரைத் தாளில் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது. ஆங்கிலத்தை விடவும், தமிழில் சிறப்பாக எழுத முடியும் என்றால்தான் தமிழ் வழியில் எழுத வேண்டும் என்கிறார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.நந்தகுமார் ஐ.ஏ.எஸ். பொறியாளரான இவர் ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழ் வழியில் எழுதி வென்றவர்.
எதிர்கொள்வதும் வெல்வதும் எப்படி?
1) எனக்கு ஆங்கிலம் என்றாலே அலர்ஜி என்ற எண்ணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, தொடர்ச்சியான வாசிப்பின் மூலமும் ஆர்வத்தின் மூலமும் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ்வழி மாணவர்கள் முதனிலைத் தேர்வில் கூட வெற்றிபெற இயலும்.
2) தரமான தமிழ் நாளிதழ்களை, சஞ்சிகைகளை தொடர்ந்து வாசிக்க வேண்டும். 'தி இந்து', 'தினமணி' போன்ற நாளிதழ்களில் வரும் நடப்பு நிகழ்வுகள், அறிவியல் செய்திகள், பன்னாட்டு நிகழ்வுகள், சமூக, பொருளாதார, அரசியல் நடப்புகளைப் பற்றிய கட்டுரைகளை நன்கு வாசிக்க வேண்டும்.
3) விக்கிபீடியா போன்ற தகவல் தளங்களில் தமிழில் நிறைய அறிவியல் மற்றும் செய்திக் கட்டுரைகள் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
4) தமிழ் வழியில் எழுதும் மாணவர்கள் தமிழ் இலக்கியத்தையே விருப்பப் பாடமாகத் தேர்வு செய்யலாம் (எந்தப் பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும்). மற்றப் பாடங்களை எடுக்க விரும்புவோர் பல்கலைக்கழகங்களின் முதுநிலை அளவிலான பாடநூல்களைப் பெற்று யு.பி.எஸ்.ஸி. பாடத்திட்டத்திற்கு ஏற்ப குறிப்புகள் தயாரிக்க வேண்டும்.
ஐ.ஏ.எஸ். தேர்வை முதன் முதலாக தமிழில் எழுதி வெற்றி பெற்ற திரு.ஆர்.பாலகிருஷ்ணனில் தொடங்கி, ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுதியவர்கள் அனைவருமே தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாக எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கி யத்தை விருப்பப் பாடமாக எடுப்பதற்கு தமிழ் இலக்கியம் தான் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதால் தொழிற்கல்வி மாணவர் களும் தமிழ் ஆர்வம் இருந்தால் அவ்வாறு தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்து பயில்வது வெற்றியை எளிதாக்கும்.
5) எந்த மொழியாக இருந்தாலும் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம்தான் திறமையாகவும் பிழையில்லாமலும் எழுத முடியும். அதற்கு அவ்வப்போது மாதிரி விடைகளை எழுதி பயிற்சி பெறுவதன் மூலமே விரைவாகவும் பிழையின்றியும் எழுத முடியும்.
6) எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர்கள், நண்பர்கள் என பெரும்பாலானோரிடம் இருக்கும் ஆங்கில வழியில் படித்தால்தான் அறிவு என்ற பொதுப்புத்தியை நம்பாமல் தமிழில் தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும்.
தமிழ் கூறும் நல்லுலகம் செய்ய வேண்டியது என்ன?
1) தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இருப்பது நிச்சயம் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கான இயற்கை நீதிப் புறக்கணிப்பு என்றே சொல்லலாம். இதனால் கிராமப்புற ஏழை மாணவர்களின் கலெக்டர் கனவு முதன்மைத் தேர்வு அறையைக் கூட அடைவதில்லை.
2) அரசும், தமிழ் மொழியின் வளமையையும் வலிமையையும் உணர்ந்த அரசியல் கட்சிகளும் மத்திய அரசிற்கு அழுத்தம் தந்து யு.பி.எஸ்.ஸி.(UPSC)யின் விதிமுறைகளை மாற்றி மாநில மொழிகளில் முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வு வினாத்தாளைத் தர முயற்சிக்க வேண்டும்.
3) தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்புத் துறை குடிமைப்பணித் தேர்வுக்கான அடிப்படைப் புத்தகங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து குறைந்த விலையில் மாணவர்களுக்குக் கிடைக்க ஆவன செய்து ஒரு அறிவுசார் சமூகத்தை உருவாக்க வேண்டும்.
4) தாய்மொழிக் கல்வியின் அவசியம் குறித்து பேரறிஞர் அண்ணா முதல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வரை வலியுறுத்துவதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய குடிமைப்பணித் தேர்வுகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இடைவிடாத முயற்சியும், பொறுமையும், திட்டமிடலுமே இறுதி இலக்கை அடைய வைக்கும்.
''உயிர் அனைய தமிழ் உயரம் சேர்க்கும்''
(கட்டுரையாளர் 2012ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணித் தேர்வை தமிழில் எழுதி இந்திய வருவாய்ப் பணிக்குத் (ஐ.ஆர்.எஸ்.) தேர்வானவர்)

No comments:

Post a Comment