Saturday 25 January 2014

மேக வெடிப்பு (Cloud burst)

மேக வெடிப்பு (Cloud burst)
Posted Date : 12:12 (16/12/2013)Last updated : 12:12 (16/12/2013)
இரா.கனகராஜ்
16 மற்றும் 17 ஜூன் 2013, இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் பனி படர்ந்த உத்தரகாண்ட் மாநிலம், வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கிச் சின்னாபின்னமானது.
அன்று 24 மணி நேரங்களுக்குள்ளாக டேராடூன் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மட்டும் 370 மி.மீ. மழை பதிவாகியது. இந்தியாவின் ஆண்டுச் சராசரி மழையளவே 1120 மில்லிமீட்டர்தான் எனும்போது இதன் வேகத்தைக் கற்பனை செய்து பார்க்கவே கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக 100 மில்லிமீட்டர் மழையளவுக்கும் அதிகமாக பெய்வதையே நாம் 'மேகவெடிப்பு’ என வரையறுக்கலாம். மேகவெடிப்பானது மலைப் பகுதிகளில், குறிப்பாக இமயமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் அடிக்கடி நிகழக் கூடிய நிகழ்வாகும்.
இதற்கு முக்கிய காரணம் இப்பகுதிகளின் புவியியல் அமைவிடமும் மற்றும் நம் பருவமழை(Monsoon)யின் தன்மையும் ஆகும்.
இந்தியத் துணைக்கண்டம் முழுவதற்குமான மழையாதாரம் பருவ மழையே. இந்தியப் பெருங்கடலில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்தை நோக்கி நகரும் தென்மேற்குப் பருவக் காற்றானது அதிக ஈரப்பசையைக் கொண்டிருக்கும். இந்தப் பருவக் காற்றானது செங்குத்தான மலைமுகடுகளில் மோதும்போது அதிக விசையுடன் மிக மேல் எழுப்பப்படுகிறது.
இது தரை மட்டத்திலிருந்து சுமார் 15 கிலோமீடடர் உயரம் வரை செல்கிறது. மேல் எழுப்பப்பட்ட காற்றானது அங்கு நிலவும் மிகக் குறைந்த வெப்ப நிலையில் உடனடியாகக் குளிர்விக்கப்பட்டு குமுளோநிம்பஸ் (Cumulonimbus) எனப்படும் நீள்வாக்கிலான மிக அடர்ந்த பெருமழை மேகங்களாக உருவாகிறது. இவ்வகையான மழை மேகங்கள் மிக அதிக மழைப்பொழிவை ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்து விடும் ஆற்றல் உடையது. இதனால் எதிர்கொள்ள முடியாத அளவிற்குக் குறைந்த நேரத்தில் பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.
மேக வெடிப்பானது எப்போதோ ஒரு முறை மிக அதிசயமாக நடக்கக் கூடிய நிகழ்வல்ல. மழைப்பகுதி மாநிலங்களான உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீரம் போன்றவற்றிலும மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாநிலங்களிலும் வருடா வருடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் ஒவ்வொரு வருடமும் மேக வெடிப்பினால் உருவாகும் வெள்ளத்தினால் ஏற்படக் கூடிய உயிர் மற்றும் பொருட் சேதங்களின் அளவுகள் மாறுபடுகின்றன. எனவே நமக்கு மேக வெடிப்பைக் காட்டிலும் மிகவும் அச்சுறுத்தலாக அமைவது அதனால் திடீரென ஏற்படும் கணிக்க முடியாத பெரும் வெள்ளப் பெருக்குதான்.
சமீப காலங்களில் இந்த வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் விளைவுகள் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இம்மலைப் பகுதிகளில் காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப் படுவதும், வரைமுறை இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுவதும் தான்.
இதனால் ஆறுகள் மற்றும் சிற்றோடைகளின் இயற்கை வழித்தடம் மாற்றப்படுவதுடன் நீர் வடிகாலாவதும் தடுக்கப்படுகிறது. இதன் விளைவாக வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பெரும் உயிர் மற்றும் பொருட் சேதங்களை விளைவிக்கிறது.
மேக வெடிப்பையோ அல்லது பருவ மழையின் தன்மைகளையோ நம்மால் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் நம்முடைய வளர்ச்சித் திட்டங்கள் நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சியை நோக்கி (Sustainable Development) அமையுமானால் இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து நம்மை ஓரளவிற்குத் தற்காத்துக் கொள்ள முடியும்.
(கட்டுரையாளர் ஓர் அரசு ஊழியர் மற்றும் புவியியல் ஆர்வலர்)

No comments:

Post a Comment