Saturday 25 January 2014

நூலாயுதம்

நூலாயுதம்
Posted Date : 19:12 (16/12/2013)Last updated : 19:12 (16/12/2013)
டாக்டர் ஆனந்தகுமார்
சுடும் முன் ...
இக்கட்டுரை நமக்கு நண்பராக உள்ள காவல் அதிகாரி ஒருவர் படித்த பத்து புத்தகங்களை அவரின் வாழ்க்கையோடு கலந்து உங்களுக்கு தருகிறது.
மளுக். ..! 
என்று சத்தம் வந்தது!
ஆனால்,
கை  உடைபட்டவன் கத்தவேயில்லை...
வேறு எந்த சத்தமும் இல்லை.
சம்பந்தமே இல்லாமல் ...
அடித்த கை வலி காரணமாக ..
இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் (??!)  வேர்த்து  ஊத்திக்கொண்டிருந்தார்...
சென்னையின் இந்தப்பகுதி ...
நோட்டோரியஸ்!
என்று உயரதிகாரிகள் சலித்துக் கொள்ளும் சபிக்கப்பட்ட பகுதி.
உடைவது , பத்தாவதோ  பதினைந்தாவது கையோ?  கணக்கு கிடையாது.  புது  துணை ஆணையர் சேர்ந்தபிறகு சாந்தகுமார் ... சாந்தமாகவே இல்லை...
சாத்து குமாராக மாறியிருக்கிறார்...
வட சென்னை வறுத்தெடுக்கப்படும் சென்னையாகியிருக்கிறது.!
நிற்க !
இது புத்தகங்கள் பற்றிய கட்டுரைதான் சந்தேகமில்லை. ஆனால் இதன் பின்புலம் ஒரு திரைக்கதை களம் போன்ற போர்க்களம் ஒன்று சேர்க்கப்பட்டு உள்ளது, சுவாரஸ்யம் கருதித் தான்.... காரசாரம் குறையாமல்... ஐயனாருக்குப் படைத்த படையல் போல... இருக்கட்டும்.   நூல் படிப்பது வறட்சியான விஷயம் அல்ல புரட்சியான சப்ஜெக்ட்.
வேலாயுதம் பார்த்திருப்பீர்கள்; சூலாயுதம் பார்த்திருப்பீர்கள்; ஆனால் நூலாயுதம்
பார்த்திருக்கிறீர்களா?
மேலேபடியுங்கள்...
உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்  அவர்கள் பிறந்த மாநிலத்தில் பிறந்துவிட்டு சதுரங்கம் ஆடாமல் இருந்தாலும் பராவாயில்லை, தெரியாமல் இருந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தோடு ஆரம்பிக்கிறதுங்க  நம்ப கட்டுரை.      சதுரங்க விளையாட்டு புது டி.சிக்கு மிகப் பிடிக்கும்ங்க . அதில்  பயிற்சி  பெறுதல்,  காவல் பணிக்கு மிக நல்லது.  ஹைதராபாத் தேசிய போலீஸ் அகடெமியில் இந்த டி.சி.தான் தனது பேட்ச்சில் சாம்பியன் இன் செஸ்.
மேனுவல் ஆரோன்  (‘Manuvel Aaron’ ) என்ற  இந்தியாவின் முதல் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் எழுதிய புத்தகம் 'பிகின் செஸ்' (Begin Chess)..  அவசியம் படிக்க வேண்டியது.  சதுரங்கம் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருந்தால்... உடனே தெரிந்துகொள்ளுங்கள் என 'அடித்து’ சொல்வார் இந்த போலீஸ்காரர்.  அர்ஜுனா விருது கொடுக்க ஆரம்பித்தபோதே முதலாவதாக வாங்கிய,  மேனுவல் ஆரோன் அவர்களது, இந்த புத்தகம் உடனே இருந்து 'கை’, பிடித்து விளையாட்டின் வழியே அழகாக அழைத்து செல்கின்றது.
செஸ்மேட் எனப்படும் மிகப்பிரபலமான ( தமிழக, சதுரங்க விளையாட்டு வீரர்களிடையே) பதிப்பகம், பயிற்சியகம் இணையதளம் மூலமாக வெளிவந்த இந்நூல், கற்றறிந்தோரின் பாசத்திற்குரியதாகப் பாராட்டத்தக்கது.  இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள் உலகத்தின் மிக கடினமான தேர்வுகளில் ஒன்று, என்று பிரசித்தி பெற்றவை.    தேர்வை  விளையாட்டு போல   தாண்டி   வரவும்,   வாழ்வே     விளையாட்டு போல வாழ்ந்திடவும்  உதவுவது சதுரங்கம்.  நாடே நாடக மேடை, நாமெல்லாம் நடிகர்கள் எனும் பொருள்பட ஷேக்ஸ்பியர் சொன்னது போல, 'காய்’ நகர்த்த கற்றுக்கொண்டால் வாழ்விலும் வெல்லலாம்  என்கின்ற நம்பிக்கையோடுதான், படிப்பவர்கள், படிக்கட்டும், பயன் பெறட்டும்,  ஆட்டம் ஆரம்பிக்கட்டும், என்று அடித்து விட்டு, இந்தப் புத்தகத்தில் தொடங்கி இருக்கின்றோம்.  சதுரங்கம் பற்றி இன்னொரு புத்தகம் ... 'லைஃப் இமிடேட்ஸ் செஸ்’ காரி காஸ்ப்பரோவ்  எழுதியது.  இந்தத் தலைப்பே வாழ்வைச் சொல்லிவிடுகின்றது பாருங்கள்.  வாழ்க்கை சதுரங்க காய்களை நகர்த்துவது போன்றதே என்கிறார்.   குழந்தைகளுக்குக்  கற்றுக்கொடுக்க உகந்த கேம்.  தியானம், யோகம் முதலான உன்னத விஷயங்களை உள்ளிட்டமைத்த ஒப்பற்ற கேம்.  அறிவாளிகளின் ஆட்டம் என்று பரவலாகக் கவுரவிக்கப்படும் ஒரே கேம், அடுக்கடுக்காகப், படிப்படியாகத்  திட்டமிட வைக்கும் அழகான கேம், வாழ்வைச் சிறப்பாக்கும் உன்னத விளையாட்டு.   இதை ஆரோன் வழி கற்க பரவசமாக இருக்கின்றது. 
இரண்டாண்டுகளாகப் படித்துவந்தாலும் ஒவ்வொரு விளையாட்டிலும் எந்த சிறு அச்சுப்பிழையுமின்றி அழகாக அடுத்தடுத்து திருப்பங்கள் நிறைந்த கிராண்ட் மாஸ்டர்களின் ஆட்டங்களை வருணித்துள்ளார்.  இவர் இந்திய செஸ் வரலாற்றில் ஒரு தந்தை ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கப்பட உகந்தவர்...
நவில்தோறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு (குறள் 783)  என்று திருக்குறள் உண்டு.
அதுபோல ஒவ்வொருமுறை எடுத்தாலும் இந்தப் புத்தகம் ... புதுமையைச் சொல்லித்தருகின்றது.
'வடசென்னையில் ஆரம்பத்துல சின்ன லெவல்ல தொடங்கி இப்ப ஐநூறு கோடி இருக்கும்யா!   அவன் சொத்து!  என் சொந்த பந்தம் எல்லாம் முடிஞ்சிட்டான்யா!  எனக்கு மட்டுந்தான் அவன் பயப்படுறான் ... ஐயா... என்னப் பாருங்க... எதுவுமேயில்லை.... என்ன கேஸு வேணாம் போட்டு ... தூக்கில கூட போட்டுக்கோங்க ... ஒரு முறை விடுங்கய்யா அவனைப் போட்டுட்டு வந்திடறேன்... எதுவுமே வேணாம்னு உதறிப்போட்டுட்டு திருப்பூர் போய் பனியன் கம்பெனில மெஷின் தொடச்சிட்டு வேலை செஞ்சாலும் போனப்போட்டு மிரட்டரான்யா!
ஈ.சி. ஆர்.ல பங்களா, கொல்லிமலைல நாற்பது ஏக்கர், காஞ்சிபுரம் பக்கம் ரியல் எஸ்டேட்னு எல்லாம் ரவுடித் தொழில்ல வந்ததுய்யா!  ஆனா, இப்போ 'டான்’... ஆயிட்டேன்றான்... விடமாட்டன்யா... கைய உடைச்சுக் கோங்கய்யா ஆனா அடுத்த வாரம்யா..' என்று மூச்சே விடாமல், ஏதோ ஆப்பிள் வாங்கும் கடை, போல பேரம்  பேசுகின்றான் ராசு,  'காதுவெட்டு ராசு’ என்று புனை?! பெயரோடு காய்கறி வெட்டுவது போல பேசுகின்றவனை, பிடித்து, அவன் கதையை, பிரமிப்போடு கேட்டுக்கொண்டு இருக்கிறார் நம்ம துணை ஆணையர். அவரு திருக்குறள் நெறிப்படி வாழ்றவர்.
வடசென்னை மாதிரி கச்சடா ஏரியால கூட கச்சிதமா பொருந்தி வருதுன்னா?  இரண்டாயிரம் வருஷமா நின்னு வெளயாடுதுன்னா, வள்ளுவர் பெரிய்ய வல்லுநர்னு போற்றிடத்தானே வேணும்.  நிறைய சாஃப்ட் மேட்டருங்க இருந்தாலும், அரசியல் பகுதில ' ஒற்றாடல்’ என்ற அதிகாரம் 58 ஆவதாக வருது... படிச்சுப் பாருங்க ... சாணக்யன் தோத்திடுவான்.  ஒரு இன்ஃபார்மர் சொல்ற மேட்டருக்கு இன்னொரு இன்ஃபார்மரை போட்டு, மங்காத்தா ஆடிராம உள்ளே வெளியே இருக்கறவனுங்க, டபுள் கிராஸிங் பண்றவங்க, அண்டர் கவர் ஆபரேஷன் எல்லாம் பற்றியும் தெரிஞ்சிக்கிட்டு, இன்பர்மேஷனை மட்டும் சலிச்சு எடுத்து பயன்படுத்திக்கோ... என்று 588 ஆவது குறள்ள சொல்லி இருக்காப்ல.
காதல் மேட்டருக்கு மூன்றில ஒரு பாகம் கொடுத்த கண்ணியமான காதலன்பா அவன். தெய்வீக காதலை அழகழகா சொல்லித்தர்ற தெய்வப் புலவன்யா.  மகளிர் காவல் நிலையம் போட்டு விசாரிச்சு மாளாம, நாளிதழ் பக்கம் பக்கமா திகில் நிறைச்சும் தாளாம, ஏராளமான மஞ்சப் பத்திரிக்கைங்க எப்பிடி எப்பிடியோ எழுதியும் தீராம ... இருக்கின்ற முக்கோண காதல், முடியாத காதல், கல்லூரி காதல், கன்ப்யூஸிங் காதல்,  பெருந்திணை, கைக்கிளை மாதிரி கட்டுப்படுத்த வேண்டிய காதல், அவசரக்காதல், அலங்கோலக்காதல், மாதிரியான எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க திருக்குறளை அமைதியா படிச்சாப் போதும்னு காவலரே சொல்லுமளவு மென்மையான காதலுடைய  மேன்மையைப் பேசியிருக்காரு பொய்யா மொழியார், படிச்சுப் பார்க்கலாம்ங்க. அதன்படி வாழ்ந்தா ஊர்ல முக்கா வாசி என்ன முழு போலிஸ்  ஸ்டேசனையும் மூடிரலாம்னு சாமி சத்தியமா சொல்லலாம்தான்.  உதாரணமா புலவி  நுணுக்கம் என்கிற 132 ஆவது அதிகாரத்துல கணவனை; காதலனை கட்டுப்படுத்த; சாப்பாட்டில  உப்பு மாதிரி வாழ்க்கையில எவ்வளவு ஊடல் போடணும்னு 1302 ஆவது குறள்ள சொல்லியிருக்காரு பாருங்க... தலையணை மந்திரம்; இது எல்லாருக்கும் உதவுவதுங்க.
ஆரம்ப காலங்கள்ல ஆங்கில புத்தகம், பெயர்கள்னாலே காவலருக்கு.. அலெர்ஜியாத்தான் இருந்தது... சமீபத்துல ' என் வாழ்க்கை கதைகள்’னு ஜெயமோகன்  எழுதின புத்தகத்தில இருந்து நகைச்சுவை பேச்சாளர்  பத்தின கமென்ட்ஸ் படிக்க நேர்ந்தது.. நுண்ணிமை தாங்கிய அரும்பெரும் கலைப்படைப்புக்களின் நுணுக்கம்  குறித்த சாதாரண மக்களின் புறக்கணிப்பு உணர்வு பற்றி எழுதியிருந்தார்.   அது ஒரு வகை, ஆஸ்கார் விருதுகள் அவங்க ஊருக்குதான் பொருந்தும் என்பதும்  உண்மையே.   ஜனநாயக நாட்டில் எல்லாம் 'ஜகஜம்’ என்று வாழ்கின்ற மக்கள் பெரும்பான்மை இருப்பது போல் ஒரு தோற்றம் இருந்தாலும்,  உன்னதம் எல்லோராலும் நேசிக்கப்படுவதென்னவோ  உண்மையே. அதனால்தான் தொடர்ந்து பார்க்கப்போகின்ற, இரண்டு நாவல்களைக் குறித்து எழுத சொன்னார் இவர். ஒரு எழுத்தாளர் வாசகர் கேட்பதையும் தரணும், வாசகரை நல்லதாய் கேட்கவும் வைக்கணும் என்று சொல்கின்றார் காவலர் ...
காவலர்களுக்குப் படிக்க நேரம் இருப்பதில்லை... என்கின்ற கவலைக் கிடையே... கிடைக்கின்ற நேரத்தில் படிக்க நல்ல இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பவர் நம்மவர். மார்கரெட் மிட்செல் என்னும் பெண் தன் அண்ணனை தொல்லை செய்து ஒரு நூலகம் முழுக்க படித்துவிடுகிறார்.  அவளுக்கு ஒரு விபத்தால் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை.  அண்ணன் அவள் படிக்காத புத்தகமாய்த் தேடி... களைத்து ... அம்மாடி... இனிமே நீ படிக்காததுன்னா? நீயாதான் எழுதணும்'... என்று, சொன்னதில் பிறந்தது, இந்த புத்தகம்,  என்று பின்புலம் சொல்லி தேர்ந்தெடுத்த புத்தகம் இதோ....
'காற்றோடு போனது’ என்கின்ற உலகின் ஒப்பற்ற காதல் பேசும் புத்தகம் இது நாம் சொன்ன பெண்ணால் அவளுக்காகவே எழுதப்பட்டது..  Gone with the Wind160; என்பது தேசிய போலீஸ் அகெடமி நூலகத்தில எடுத்துப் படிச்சுட்டு ஸ்கார் லெட் என்கின்ற கதாநாயகியோட  கிளியோபாட்ரா மனப்பாங்கை இரசிச்சுட்டு அந்தக்கையோடயே,  அதே பெயர்ல  1939ல் வந்த எட்டு ஆஸ்கார் அவார்டு வென்ற, திரைப்படத்தையும் பார்த்தாச்சு.  கிளார்க் கேபிள் என்கின்ற முப்பதுகளில் ஹாலிவுட்டில் பிரபலமான அந்த நடிகர் வரலாறு தனி.  விளம்பரம் குடுத்து 1400 பொண்ணுங்கள தேர்வுக்கு அழைத்து அதில் ஒருவரை ஸ்கார்லெட்டா நடிக்க வைத்தார் டைரக்டர். அவர்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்காம இருக்குமா?
இந்த புத்தகத்தில் கதாநாயகிக்கு மிகவும்  முக்கியத்துவம் கொடுத்திருப்பாங்க. அந்த காலகட்டத்தில் மட்டும் அல்ல பல வருடங்களாகச் சிறந்த நாவல் என்று, பாராட்டு பெற்றுவரும் புத்தகம் இது.  'ரெட் பட்லர்’,  என்னும் முரட்டு கதாநாயகன் ஒரு எதிர்மறை கலந்த பாத்திரம்.  அவன் 'எனக்கு உன்னைப் பற்றி தெரியும் ஏனெனில் உன்னை காதலித்தவன் நான்' ‘for, I loved you and I know you’ என்று சொல்கின்ற வரிகள், அந்த காலகட்டத்தில் பிரபலமானவை. 'நாளை என்பதும் மற்றொரு நாள் தான்’ ( tomorrow is another day) என முடியும் இந்த நாவல் ஒரு நல்ல தேர்வு  இதுபோன்ற உலகப் பிரசித்தி பெற்ற நாவல்கள் திரைப்படமாகும்பொழுது அதன் சுவை குறைந்துவிடுகின்றது என்று சொல்கின்றார்கள்.   இந்தப்படம் விதிவிலக்கு அப்படி ஒரு உன்னதமான முயற்சியை அடுத்த புத்தகத்திலும் படிக்கவும், பார்க்கவும் நேர்ந்தது. 
காவலர் கரடுமுரடாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கட்டுப்பாட்டை தாண்டி வாழ்க்கையின் மென்மையான பக்கங்களை ;  சுத்தமாகத் தொடர்பற்ற கோணத்திலிருந்து பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல் பிறந்த போதுதான் ஆப்பிரிக்க இலக்கியம் படிக்க தோன்றியது.  இது ஒரு ஆப்பிரிக்காவின் வன உயிரின சஃபாரி போன அனுபவத்தையும் முதல் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தின் வரலாற்று படப்பிடிப்பையும் ... (Chronicle- கிரானிகிள் என்று சொல்வார்கள்)  இந்தப்  புத்தகம் தந்துவிடுகின்றன.
கேரன் பிளிக்ஷன் உடைய அவுட் ஆஃப் ஆப்பிரிக்கா என்ற புத்தகமும் (1937) படமும் (1985).  இந்தப் பட கதாநாயகி மெரில் ஸ்ட்ரீப் என்னா கலக்கு கலக்கியிருக்காங்க. இவங்கதான், வாழும், திரைப்பட நடிகைகளில் நிறைய உலக சாதனைகள் செய்த ஒப்பற்றவர் (Meril Strip out of Africa) நடிகையாம். அந்தப்படத்தை டைரக்டர் எவ்வளவு சிரமப்பட்டு ஆப்பிரிக்கா போய்ட்டு ஷூட்டிங் பண்ணாரு. சிறந்த இயக்குநர் (சிட்னி பொல்லக்) என்பது உட்பட 7 ஆஸ்கார் வாங்கின படம் இது.  ஆனாலும் இந்தப்படத்துக்கு எப்படியெல்லாம் மெனக்கெட்டாரு என்றதெல்லாம் இணைய தளத்தில இருக்குது. படிச்சுப்பாருங்க.  கேரென்பிளிக்ஷன் டென்மார்க் நாட்டுக்காரங்க.  அவங்க முதல் உலகப் போர் சமயம் ஆப்ரிக்கால செட்டில் ஆகுறாங்க.  மறுபடி ஊர் திரும்பறாங்க.  அப்போ அவங்களுடைய சந்தர்ப்பவச கல்யாணம், ஆப்பிரிக்க விவசாயம், விவாகரத்து, இரண்டாவது   திருமண முயற்சி ;  முதல் காதல் பிறந்தது ... அவரோட காதலன் இறந்தது... என  உருக்கமா போற கதை இது...  உலகத்தில பிரபலமான பல கதைகள் இருந்தாலும்  கூடவே (சுமாரா பிரபலமானதுதான்)   வெச்சு பார்க்க வேண்டிய அளவு உணர்வு பூர்வமானதுதான். 
அயோத்தி அரியணைல ஏறுங்கன்னு சொன்னபோதும் நாட்டை விட்டு   காட்டுக்கு கிளம்புங்கன்னு சொன்ன போதும் ஒரே மாதிரி ஓவியத்துல எழுதி வெச்ச செந்தாமரை பூ (இயற்கை பூ வாடிடும்) மாதிரி இராமர் சிரிச்ச முகமாக இருந்தாருன்னு கம்பர்,   எழுதியிருக்காருங்க.... சென்னைக்குள்ளே செழிப்பான பகுதிலேர்ந்து, காட்டுத்தனமா குற்றம் நடக்கிற தோப்புப் பக்கமா   அப்படி தூக்கிப்போட்டபோது... 'இருபத்து நாலு மணி நேரமும் ஃபிரியா இருப்போம்!  ஆனா! எல்லா வேலையும் செச்சிடு வோம்'!  என்று 'பஞ்ச்’ டயலாக் பேசிட்டே இங்கேயும் ஒரு டீம் போட்டு, ஸ்கெட்ச் போட்டு வேலையக் காட்ட ஆரம்பிச்சுட்டாரு நம்ப  காக்கிச் சட்டை போட்ட கம்பஇராமன்.  மேலே சொன்ன பாட்டு,
'மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும் இத்திருத்துறந்ணத ஏகு என்ற போதினும்
சித்திரத்தின் உலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகத்தினையுண்ணுவாள்’
என்பது அயோத்யா காண்டத்திலே அறுநூற்றி எழுபதாவது பாடலாக வந்திருக்கின்றது.  அதுமட்டுமில்லீங்க, நம்ம டி.சி.க்கு ரொம்பப் பிடிச்ச புத்தகம் கம்ப ராமாயணம். தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமா எடுத்து ஐ.பி.எஸ். பரிட்சை எழுதினவராச்சே நம்ம டி.சி. அவருக்கு கம்ப ராமாயணம் பிடிக்காம இருக்குமா?
கம்ப இராமாயணம் முழுக்க நிர்வாக டிப்ஸா நெறச்சு வச்சிருக்காரு கம்பர்ன்னு நம்ம டி.சி. அடிக்கடி சொல்வாரு. விவாதம்; வழக்காடுதல் குறித்து வரும் போது  வாலி வதை படலம்னு ஒரு பகுதியில் வாலி, 'இராமா, இராவணனை, கொண்டு வாடான்னு ஒரு வார்த்தை என்கிட்டே, சொல்லி இருந்தா, நான் திரும்பி பார்த்திருந்தாலே,  உடனே வந்து விழுந்திருப்பானே, இதுக்குப்போய்,  சுக்ரீவனோடு சேர்ந்து என்னை  கொல்லனுமா?   என்று டெக்னிக்கல் கேள்வி எல்லாம் கேட்டு, சங்கடப்படுத்தும் பொழுது, இராம இலக்குவர்கள் எப்படி  எல்லாம் சமாதானமா பேசி சமாளிச்சாங்கன்னு எழுதியிருக்காரு பாருங்க... பார்த்தாதான், பக்குவமடைய முடியும்ங்க.  அரக்கினத்து அரசன் ஒரு தப்பு பண்ணினா?  குரக்கினத்து அரசனை கொல்வதுதான் உன் நியாயமா?  என்று கேட்கும் பொழுது ( பாடல்: வாலி வதை படலம்  : சுந்தர காண்டம்)  தேசிய சட்டப் பள்ளியில் படிக்கின்ற சட்ட நுணுக்கமெல்லாம் இதுக்குள்ளே மறஞ்சி நின்னு சிரிக்கிறா மாதிரி தெரியுதுங்க. 
கம்ப இராமாயணத்தை ஒரே ஒரு புத்தகமாக கணக்குல எடுக்க முடியாது.  மதுரை கம்பன் கழகம் வருஷந்தோறும், பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் கம்பன் விழாவில் பேசியதைத் தொகுத்து தருகின்ற ஆண்டு மலரையெல்லாம் தனிதனியே ஒரு புத்தகமா நினைக்கலாம்.  'கம்பன் காட்டும் தீராக் காதலன்' என்ற புலவர் அருணகிரியாரோட புத்தகத்தில், நட்பு என்றால் கற்பைப் போல, என்று நிருபிக்கவே பிறந்த குகனோடு ஐவராகி பிறகு குன்று சூழ்வான் மகனோடு அறுவர் ஆகி பின்னர் வீடணனோடு சேர்த்து ஏழு சகோதரர்களா மாறிவிட்டோம்', என்று யுத்த காண்டத்திலே ஒரு பாடலிலே சொல்லும் கம்பன், அங்கே நட்புக்கிடையே இரத்த பந்தத்தை உருவாக்கும் மேன்மை புரிகிறது.   இது போல  என்றும் நிலைத்து நிற்கும் நட்பு பாராட்டிய, பாங்கை, படிக்க நேர்ந்தால், கம்ப இராமாயணத்தைக் கரைத்துக் குடிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்துவிடும்.  பேசுவது மானம், இடைப்பேணுவது காமம் (பாடல்:  கும்பகர்ண வதை படலம் :  யுத்த காண்டம்)  என்ற பாடலில் கம்பன் இரட்டை வாழ்க்கை வாழ்வோரைப்பற்றி இதுக்குமேலே சொல்ல முடியுமா? ன்னு சொல்லி வச்சிருக்கார்.  ஒத்தைப்புத்தகத்தில பத்துப் புத்தகத்தை பதிச்சு வெச்சிருக்கார். ஷேக்ஸ்பியர் நூலகம்னு ஒன்றே இங்கிலாந்தில் உண்டாம்.  ஹேம்லட் நாடகத்துக்கு மட்டும்  50000  புத்தகம் உண்டாம். கம்ப ராமாயணத்துக்கும் அப்படி ஒரு நூலகம் வேணும்’.
ஆஸ்கார் விருது வாங்கிய Zero Dark Thirty (ஜீரோ டார்க் தெர்ட்டி)ங்கற பிரபலமான  ஓஸாமா பின்லாடனை புடிக்கிறது பத்தின திரைப்படத்துல தர்டு டிகிரி விசாரணை குறிச்சு காட்டுவாங்க.  கும்மிருட்டான ரூமில ஒரு 'பாலித்தீன்’ கவரை முகத்தில கட்டி, அதிலே மேலே ஓட்டை போட்டு தண்ணீரை ஊற்றி, பத்து செகன்ட் விட்டு 'ரிலீஸ்’ பண்ணுவாங்க ... மனுஷனுக்கு நீரில் மூழ்குகின்ற ஃபீலிங் வருமாம் ... அந்த மாதிரி ... ஈ.சி. ஆர்.ல  (E.C.R.Road)   ஆள்  இல்லாத அர்த்த இராத்திரில ... செயின் புல்லிங் ... கொள்ளைக்காரனோட ... கூட்டாளிங்க ... அவன் மோடஸ் ஆஃபரண்டி ( modus operandi)     எல்லாம் ... கடகடகடன்னு சொல்ல வைக்க... அவனை தலைகீழா காலை கட்டி கல்வெர்ட்டில (பாலம்) (culvert) இருந்து ... கீழே ஓடிக்கிட்டிருக்கிற தண்ணீர் பக்கம் வரைக்கும்... மெதுமெதுவா இறக்கிட்டே கேள்வி கேட்டா?  எப்படி பதில் வராமப் போகும்? எப்படியெல்லாமோ யோசிச்சு தப்புப் பண்றவங்களை ... நாங்க  இப்படித்தான் என்று பழைய 303  ரைஃபிள வெச்சிட்டு சிரிப்பு போலீஸ்  மாதிரியே விசாரிச்சிக்கிட்டிருந்தா? விடியுமா?ன்னு நம்ம காவலர் கேட்கிற கேள்விக்கு  பதில் யார் சொல்றது?  நாங்க நடக்கிறது கண்ணாடி கோபுரத்துக்குள்ள ... உள்ளேயிருந்து வீசினாலும் வெளிலயிருந்து தாக்குனாலும் உடையறது எங்க தலைல தான்  அப்படின்னு...  தெரிஞ்சிருந்தும்... பெர்ஸனலா ரிஸ்க் எடுக்கறதாலதான்... பொது நலத்துக்காக பொளந்து கட்ட முடியுதுன்னு நெனைக்கின்றோம்னு சொல்றாரு கனவு காண்கிற நம்ம காவலர். 
கனவு காணுங்கள்!  என்றவுடனே நினைவில் நிற்கின்றவர் ஒருவரே....  Dr.A.B.J அப்துல்கலாம்  அவர்,  தான் படித்த ஏராளமான புத்தகங்களில் திருக்குறளை இரண்டாவது பெஸ்ட் புத்தகமாக வைத்திருந்ததாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்ததாக நினைவு. அப்பேர்ப்பட்ட முதலிடம் பிடித்த புத்தகம் ... பல விளக்குகள் தந்த ஒளி (Light’ from many lamps) என்பது... இந்தப் புத்தகத்தில்; ஏராளமான புத்தகங்களில், மிகச்சிறப்பானது என்று கருதப்பட்டு வெளிவந்த நிறைய எழுத்தாளர்களுடைய படைப்புக்களிலிருந்து சில பாகங்களை பிரதிபலிச்சிருக்கிறாரு வில்லியம் எய்ஸ்லர் வாட்ஸன்.  இதை கண்ணதாசன் பதிப்பகத்தார் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட் டுள்ளனர். அருமையான 'கலெக்க்ஷன்’ என்று அச்சமின்றி சொல்லலாம். 'மகனுக்கொரு கடிதம்’ என்று ஷேக்ஸ்பியர் நாடகத்துல வர்றமாதிரி எழுதுற கடிதம் 'அப்பா... அப்பப்பா’ன்னு ஆச்சர்யப்படுமளவு இருக்கும். நம்பிக்கை,  அன்பு,  காதல்,  கண்ணியம்,  தைரியம்,  கம்பீரம்,  வீரம்  என்று  உணர்ச்சிகரமான தலைப்புக் களிலே நாம் என்றுமே இழக்கக் கூடாத, 'இதுவும் கடந்து போகும்’ என்கின்ற தத்துவக் கீற்றை நம்ப மனசுல ஒட்ட வைத்து வாழ்க்கைப் பந்தயத்தில  சந்தோஷமாக ஒட வைக்கிற புத்தகம் இது.
போலீஸ்ல உயரதிகாரி, கீழதிகாரி பிரச்சனை பத்தி எழுதினா பக்கம் போறதே தெரியாதுங்க.  அந்தப்பக்கம் போக வேணாம்னு நெனைச்சாலும் அவசியப்பட்டுப் போச்சு.  எல்லா மட்டத்திலும்  எல்லா மாதிரியானவர்களும் இருக்காங்க, இருக்கத்தான் செய்யறாங்க. 
தேசிய போலீஸ் அகடெமிக்கு 'டாக்டிக்ஸ்’ பயிற்சிக்காக போயிருந்த போது ஸீ ரங்க் பார்க்காம, ரகளையா பழகினவரு இந்தப் பக்குவப்பட்ட காவலர்.  இவரோடு பழகறவங்கள, சாமி, துப்பாக்கி, சிங்கம் அப்படி ஆரம்பிச்சு தங்கப்பதக்கம் வரை எந்த  சினிமா பார்த்தாலும் இவரு மாதிரி வருமான்னு யோசிக்க வெச்சவரு..
காலை ஐந்து மணி இருட்டுல... ராக் க்ளைம்பிங்... குதிரையேற்றம்...  Austria made) ஆஸ்த்ரியா மேடு ... (sniper gun) ஸ்னைபர் கன் பயிற்சி ...  என்று பலரகப்பட்ட மாடர்ன் தந்திரங்களை கற்றுக்கொண்டு தன்னை தரப்படுத்திக்கொண்டு, தனிப்டுத்திக்கொள்ள கிடைத்த பயிற்சி வாய்ப்பை 'பக்’கென பிடித்த பக்குவசாலி நம்மாள்.
ஸ்டீவன் கோவே (Steven Govey) 160; உடைய செவன் ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபக்டிவ் பீப்பிள் (Seven Habits of Highly Effective people)160; என்கின்ற புத்தகத்திலே ஏழாவது பழக்கமாக, மிகத் தெளிவாக கூறி இருக்கிறார்.  Sharpen the saw என்று.   அதாவது, அரத்தை கூர்மை செய், (ரம்பம் போடு!? அல்ல) என்று பொருள்   இடையே இசையில் கரைகாண வயலின் முதல், கீ போர்டு, பியானோ என்று இறங்கி மேஜர் / மைனர் என்று கண்ணை மூடி கணக்கு போட்டு இதய ஓட்டத்தை சீராக்கி ஹார்மோன்களை நேராக்கி நல்ல மனவளத்தை வளர்த்துக் கொண்ட கட்டுப்பாடான காவல்காரர் இவர். செவன் ஹேபிட்ஸ் ஐ தொடர்ந்து எட்டாவது பழக்கம் (8th Habit) 160; என இதே எழுத்தாளருடைய புத்தகம் வந்துள்ளது.  வாழ்வாங்கு வாழ் என்று வள்ளுவன்  சொன்னதையே ஸ்டீவன் கோவேயும் சொல்லுகின்றார். வாழ்ந்தபின் வாழ்வின் அடையாளமாக ஒரு பதிவை விட்டுச்செல்ல வேண்டும் என சொல்கின்றார்.     
அதிகாலை எழுவது மிக நல்ல பழக்கம் என்றாலும் பெரும்பாலான நேரங்களில் அப்போதுதான் காவலர்கள் உறங்கச் செல்வார்கள்.  இராபின் சர்மாவின் நீ இறந்தால் அழுபவர் யாரோ?  (தலைப்பு இப்படி இருக்கறதால ... அட்டைய மட்டும் படிக்கிறவங்க நிவீயீtஆக  வாங்கி   தருவாங்களா? ) என்ற ஒரு புத்தகத்துக்குள்ளேயிருந்து ஓராயிரம் புத்தகங்களை எடுத்துப்படிக்கலாம்.  காலை   ஐந்து  மணிக்கு எழுந்திரிக்க, ஐந்து டிப்ஸ்களை படிப்படியாக கொடுத்திருப்பார் இராபின்.  கற்றதும் பெற்றதும் மற்றும் தனது எண்ணற்ற நாடக, குறு, பெரு, நாவல்கள், சிறுகதைகளில் சுஜாதா அவர்கள் செய்தது போல, துணை எழுத்து புத்தகத்தில் எஸ்.ரா செய்தது போல     புதுப்புது (நமக்கு) எழுத்தாளர்களையும், அவர்தம் படைப்புகளையும் எழுதி அறிமுகப் படுத்தி, நம் இருவரையும் கூட உட்கார வைத்து கை குலுக்க வைத்து உடனே இருந்து படிக்கவும் வைத்து விடு கின்றார்.   சுஜாதா  குறித்த எஸ்.ராவின்  தொகுப்பு புத்தகம்  குறிப்பிடத் தகுந்தது.  இந்தப் புத்தகங்களுக்குள் நுழைந்தால் சுஜாதா,  தனக்கு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய   எழுத்தாளர்களைக் குறித்துப்பேசிக்கொண்டே செல்வது களைப்புத் தெரியாமல் சலிப்புத் தட்டாமல் படிக்க வைக்கின்றது.
உலகை உலுக்கிய புத்தகங்கள் என்று திரு உதய சந்திரன் இ.ஆ.ப அவர்கள்  ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேசிய பேச்சு மனதை உலுக்கும்.  அதில் உள்ள புத்தகங்கள் மனதை அள்ளும். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்கட்டும் என்று மற்றொரு கட்டுரையில் இவர் கூறிய மூன்று புத்தகங்கள் திருக்குறள், பாரதியார் பாட்டு மூன்றாவதாக வருகின்ற ஆச்சரியம் மோகமுள் படைத்த தி.ஜா அவர்களின் புத்தகங்கள்.  இதனை காஞ்சிபுரத்தில் கேள்விப்பட்டதும் அவசர அவசரமாக அதை வாங்கி அரக்கப்பரக்க படித்து முடித்தார் நம்ம காவலர்.  பின்னர் அடிக்கடி அசை போடவும் பட்டது மோகமுள்.  தொடர்ந்து அம்மா வந்தாள், மரப்பசு, நடந்தாய் வாழி காவேரி என்று தி.ஜாவின் எழுத்து நடந்த பக்கமெல்லாம் நடந்தாயிற்று. நடந்த களைப்பு எல்லோருக்கும் வருகின்றது,
நம்ம காவலர் உளவியலையும் ஒரு விருப்பப் பாடமா எடுத்து தேர்வு எழுதியவர்.  மனவலிமை கூடுவதற்காக 'ரேகி’ தொடுசிகிச்சை, தொலைபேசி வழி சிகிச்சை, மன சிகிச்சை, அக்கு பஞ்சர் என புரியாத பல சிகிச்சைகளைப் பற்றி புரியாமல் பேசிக் கேட்டிருக்கிறேன். 
தேனியின் மலைக் காடுகள், தர்மபுரியின்  மேகம் தவழும் கிராமங்கள், ஒஹேனக்கல்லின் நீர்த்துளி தூவும் காவிரி, விருதுநகரின் வீரியம் மிகு கிராமங்கள் என  பல இடங்களுக்கு  பயணம் போகின்ற பக்குவம் இந்த காவலருக்கு கண்ணிமை போல உடன் பிறந்தது.  பயண இலக்கியங்களை படித்துப் படித்து நேசிப் பதால் இந்த ஒன்பதாவது பகுதியில் இவர் படித்த மூன்று பயண இலக்கியங்களை  புத்தகங்களை சொல்கின்றார் கேட்போம்...
நடந்தாய் வாழி காவேரி...  என்பது தி.ஜானகிராமன், எழுத்தாளர் சிட்டி (சிவபாத சுந்தரம்) என்பவரோடு இணைந்து எழுதிய இனிய பயண இலக்கியம். காவிரி நதி குடகில் குழந்தையாயிருப்பது முதல் காவிரிப் பூம்பட்டினம் அருகே வயோதிகம் அடைந்து கடலில் சங்கமிப்பது வரை கூடவே நடந்து ... காரிலும் பயணித்து அனுபவித்து எழுதியிருக்கின்றார்.   அவரது செழித்த தமிழ், மோகமுள், மரப்பசு போன்ற  மற்ற புத்தகங்களில் தெரியும் கர்நாடக இசை, பரத நாட்டியம், சாஸ்த்திர, சம்பிரதாயம் முதலிய சிறப்பு அம்சங்களை ஒருமுறை நினைவுக்கு கொண்டு வருமாறு அமைந்தி ருக்கும்.
விகடன் பிரசுரத்தில் கைக்கு அடக்கமான ஆனால் கருத்துக்கு விரிவான அளவில் கையைப்பிடித்து சுட்டிக்காட்டி அழைத்துச் செல்வதுபோல், 'அடேங்கப்பா ஐரேப்பா' என்ற வேங்கடம் அவர்கள் எழுதிய புத்தகமும் நம்ம காவலருக்கு பிடித்த மற்றொரு பயண நூல். வாட்டிகன் நகர சிற்பங்களை அவை உருவான வரலாற்று பிண்ணனியோடு இப்புத்தகம் தருவதை வாயார பாராட்டலாம் என்பார்.
சேகுவாராவின் மோட்டர் சைக்கிள் பயணங்கள் என்ற ஒப்பற்ற ஆங்கில புத்தகத்தை பல நாளாக தேடிஅலைந்து படிக்க இயன்றது. அலைந்தது அர்த்தமுள்ளதே! ஏன்று மகிழ வேண்டிய  அளவு அற்புதமான புத்தகம்.  அமெரிக்க ஏகாதிபத்தியத்தை செஞ்சட்டையோடும் நெஞ்சுரத்தோடும் எதிர்த்து கியூபாவை விடுவித்த பின்னரும், லிபியா, கொலம்பியா என அடுத்தடுத்து போராட்டகளத்தைப் பூக்களமாக எண்ணி புகுந்து கலக்கிய சேகுவாராவின் நிழல் ஒவ்வொரு வீரனுக்குள்ளும் பிரதிபலிக்க காண்பதாகக் காவலர் சொல்கிறார். இந்த மோட்டர் சைக்கிள் பயணம் அதே பெயரில் திரைப்படமாகவும் வந்துள்ளது.  கிட்டத்தட்ட இருபதாயிரம் கிலோமீட்டர் இருபது வயதுகளில் நண்பனோடு பயணித்த அவரது அனுபவம் அலாதியானது. தொழு நோயாளிகளுக்கு வழியில் சிகிச்சை அளித்து அவர்களோடு வாழ்ந்த;  படிப்பால் மருத்துவர், சிறப்பால் 'மகத்துவர்’ இவர்.
மன அழுத்தம் இன்றைய கால கட்டத்தில் பணிச்சூழலில் பரவலாக இருப்பதாகப் பேசப்படுகின்றது. உயிரைப் பணயம் வைக்கும் காவல் பணியில் உள்ளத்தைக் கசக்கிப் பிழியும் காக்கிச் சட்டை சம்பவங்களை எப்படி கடந்து போகின்றீர்கள் என்று கேட்ட போது. நான் யார் என்ற இரமணர் கருத்தை அடையாளம் காட்டினார். இதோ...பதில்...   
அருணாச்சலம் வாழும் திருவண்ணாமலை குறித்து  பால் பிரண்டனின் 'இரகசிய இந்தியாவில் ஒரு தேடல் (A search in secret India)  என்ற ஆங்கில புத்தகத்தில் ரமணரின் அருமை பெருமைகுறித்து மிக அழகாக இந்த ஆங்கிலேயர் சொன்னது ஓர் அற்புதம்.  இது தத்துவ,  ஆர்வலர்களின் தாகம் தீர்ப்பதாய் அமையக் கூடும்.  தத்துவ ஆர்வலர் அல்லாதவர் இதனை படித்தால், அப்படி ஒருவராக மாறக்கூடும். பால் பிரண்டன் ஒரு யோக்கியமான யோகியை பார்க்க வேண்டுமென சிறு வயதிலிருந்து ஆசைப்பட்டு, இந்தியா வந்து தேடித்தேடி பல பேரை பரிசோதித்து பார்த்து அவர்கள் தத்துவமோ? தந்திரமோ? என்று அலசி, பிரித்து, அறிந்து இறுதியில் ரமணரைக்கண்டு பிரமித்ததும்,  அதனால், இரண்டாண்டு இங்கேயே தங்கி அனுபவித்து இயற்றியதும் தான் இந்தப் புத்தகம்.    நெப்போலியன் வரலாற்றை நெஞ்சுருகச் செய்த வரலாற்று ஆசிரியர் அவன் விதியைக் கண்டு வியந்ததைப் பேசியிருப்பதாக இவர் சொல்லி இரமணருடன் சமரசமாகி ஐக்கியமாகுமிடம் திருவண்ணாமலை....  படித்துப் பார்த்தால் பக்குவப்பட்டுப் போக வைக்கும் புத்தகம் என்கிறார் காவலர்.
அடிதடியில் ஆரம்பித்து புலவர் அருணகிரியின் தீராக்காதலன் வழியே பயணித்து முடிக்கிற இடத்துக்கு வந்திட்டோம் ....  தண்டனை சில சமயங்களில் 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களகட்டு அதனொடு நேர்'         -என்கின்ற குறளில் சொல்லியுள்ளதுபோல் மரண தண்டனை கொலை மாபாதகம் செய்தோருக்கு வயல்ல களையெடுக்கிற மாதிரி, அமைந்து விடுகிறது.  ஆனால் எல்லோரும்  நூலாயுதம் ஏந்தினால் வேறு ஆயுதங்கள் தாமாக இந்த உலகில் அழிந்துவிடும் என்பதை அழுத்திச் சொல்லும் நம் காவலர் ஒவ்வொருவரும் கண்டிப்பாக நூலாயுதம் ஏந்த வேண்டும் என்று அடித்தும் சொல்கிறார்.
எனவே ஏகப்பட்டதைப் படிப்போம்!  யதார்த்தமாக இருப்போம்!  என  இக்கட்டுரை முடிப்போம்!
சுட்டபின்..
இந்தக்  கதைவசனக் கட்டுரையை,  ஜெஃப்ரி ஆர்ச்சர் நாவல்களில் தொடங்கி தினந்தோறும் படிக்கும், டேல் கார்னேகி எழுதிய  படிச்சு சொல்லாம விட்டுப்போன புத்தகங் களுக்கும்,  படிக்காமலே விட்டுப்போன எண்ணற்ற பல புத்தகங்களுக்கும் பாசத்தோடு சமர்ப்பித்து மகிழ்கின்றோம்.

No comments:

Post a Comment