Tuesday 5 May 2015

முடியும், முடியாது இரண்டும் நிஜம் தான்-

முடியும், முடியாது இரண்டும் நிஜம் தான்-தி இந்து நாளிதழ்

மனிதக் குலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது: நம் எண்ணத்தை மாற்றினால் நம் வாழ்க்கையை மாற்றலாம் என்பது தான். மனித மனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச் சாதிக்க முடியும் என்பதுதான் மனிதக் குல வரலாறு. வேளாண்மை முதல் வாட்ஸ் அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது தான்.

பிளேடைத் தின்பது, விமானத்தைப் பற்களில் இழுப்பது, தேனீக்களை முகத்தில் வளர்ப்பது, அரிசிக்குள் சித்திரம் வரைவது, பார்வையற்றோர் மலை ஏறுவது, என நிறையச் செய்திகள் படிக்கிறோம். இவை அனைத்தும் எண்ணம் செயலாகிய சாதனைகள் தான். இது தவிர மரணத்தை மனப் பலத்தால் வென்றவர்கள் கதைகள் நிறைய நமக்குத் தெரியும். வாழ்க்கையில் சகலத்தையும் இழந்து பின் தன்னம்பிக்கையோடு போராடி ஜெயித்த பலரின் வரலாற்றைப் பாடமாகவே படித்திருக்கிறோம். இருந்தும் எண்ணம் தான் வாழ்க்கை என்பதை நமக்குப் பிரச்சினை வரும் போதெல்லாம் மறந்து விடுகிறோம்.

“எங்க குடும்ப நிலமை மோசம் சார். ஒண்ணுமே பண்ண முடியலை.” “எங்க அப்பா சரியில்லை. இவ்வளவு தான் முடிஞ்சது.” “இந்தக் கோர்ஸ் படிச்சா இது தான் சார் கதி.” “நம்ம நாட்டுல இதுவே ஜாஸ்தி”. “ நம்ம ராசி அப்படி. சாண் ஏறுனா முழம் சறுக்கும்.” “தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இதுக்கு மேல முடியாது!”

இவை எல்லாம் சத்திய வார்த்தைகள். சொன்னவர் வாழ்க்கையில் அவை பலிக்கும். இந்த எண்ணங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் ஏற்படும். இந்த எண்ணங்கள் மீண்டும் வலுப்படும். “என்னால் முடியும்” என்று சொன்னாலும் “என்னால் முடியாது” என்று சொன்னாலும் இரண்டும் தனி நபர் நிஜங்கள். இரண்டும் பலிக்கும்.

நம் உள்ளே உள்ள நோக்கமே நம் வாழ்வின் சகல நிகழ்வுக்கும் விதை என்கின்றன நவீன ஆராய்ச்சிகள். அனைத்து மதங்களும் அனைத்துக் கோட்பாடுகளும் இதையே வலியுறுத்துகின்றன. “என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள். அதை எப்படி மாற்றுவது? “என்று கேட்கலாம். உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களையே ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?

நம் எண்ணம் எப்படி நம் செயல்பாட்டை மாற்றும் என்பதற்கு ஒரு கிரிக்கெட் உதாரணம் சொல்லலாம். தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆடுவதும் ஜெயிக்கணும் என்ற எண்ணத்தில் ஆடுவதும் வேறு வேறு முடிவைத்தரும்! எல்லாருக்கும் வெற்றி வேண்டும்.

ஆனால் உங்கள் மனதில் தோல்வியைத் தடுக்கும் வழி முறைகளை யோசிக்கிறீர்களா அல்லது ஜெயிக்கும் உத்திகளை யோசிக்கிறீர்களா? கவிஞர் கண்ணதாசன் அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப் பாடல் வரியில் சொல்லிவிட்டார்: “பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!”

No comments:

Post a Comment