Thursday 28 May 2015

மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள்

மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள்


நரேந்திர மோடி அரசின் ஓராண்டு நிறைவையொட்டி, இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட, அறிவிக்கப்பட்டுள்ள  முக்கியத் திட்டங்களைப் பற்றிய ஒரு தொகுப்பு:

மேக் இன் இந்தியா:

தொழில்முனைவோர்கள் வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவேண்டும். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும். உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தியாவில் பொருள்களைத் தயாரித்து, அதை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யவேண்டும். இதன்மூலம் இந்தியாவிலேயே பல கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதுதான் மேக் இன் இந்தியா திட்டத்தின் நோக்கம். இதற்கென பிரத்யேகமாக ஒரு இணையதளத்தையும் ஆரம்பித்துள்ளது மத்திய அரசு.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க 25 துறைகளைப் பரிந்துரை செய்துள்ளார் மோடி. இதன்மூலம் இந்தியாவில் தொழில் தொடங்க மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவி செய்யத் தயாராக உள்ளது என்கிற செய்தியை இந்தத் திட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க இந்தத் திட்டம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தி துறையின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள். (இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 16% மட்டும்தான். ஆனால், சீனாவின் உற்பத்தி அதன் ஜிடிபியில் 36%, தென்கொரியா 34%) சீனா அளவுக்கு உற்பத்தியைப் பெருக்க மேன் இன் இந்தியா சரியான வழிமுறையாக உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் நாடு முழுக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் உற்பத்தியை அதிகரிக்கவும், 30 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூய்மை இந்தியா திட்டம்:

இந்தியாவை 5 ஆண்டுகளில் தூய்மைப்படுத்தி ‘தூய்மையான இந்தியா’ என்னும் நிலையை ஏற்படுத்த எண்ணியுள்ளார் மோடி. அதன்படி, மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 அன்று, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு விளையாட்டு, சினிமா தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் இந்தத் திட்டப் பணிக்காக ரூ.20 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி இத்திட்டத்தைத் தொடங்கியபிறகு, நாடு முழுக்க பல இடங்களிலும் அமைச்சர்களும், அதிகாரிகளும், பிரபலங்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்கள்.

நலத்திட்டங்கள்:

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (வங்கிக் கணக்குகள்), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி (ஆயுள் காப்பீடு), பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா (விபத்துக் காப்பீடு), அடல் பென்ஷன் யோஜனா (அமைப்புசாரா துறையினருக்கான ஓய்வூதியம்) போன்ற நல்ல திட்டங்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா மிக முக்கியமான திட்டம். நாடு சுதந்தரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆன பிறகும் இந்தியாவில் 68 சதவிகித மக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் உள்ளனர். மோடி அரசு அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்கிற வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஏழை மற்றும் பின் தங்கிய மக்கள், அரசு நலத்திட்டங்கள் மூலம் பயன்பெறும் வகையில், 15 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்க திட்டமிடப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அடுத்தச் சில நாள்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.  இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் 7 நாள்களில் நாடு முழுவதும் 5.05 கோடி  மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. தற்போது 15 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் 15,800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சுகன்ய சம்ரிதி திட்டம் (செல்வமகள்): மோடியின் திட்டங்களிலேயே சூப்பர் ஹிட், செல்வ மகள் சேமிப்புத் திட்டம்தான். பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், இத்திட்டத்தில் இணையலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் இதுவரை இந்தியா முழுவதும் 27 லட்சம் பேர் இணைந்து உள்ளார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 9 லட்சம் பேர். சென்னை மண்டலத்தில் மட்டும் 3.50 லட்சம் பேர். செல்வமகள் திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

எரிவாயு மானியத் திட்டம்:

சமையல் எரிவாயுவுக்கான (எல்பிஜி) நேரடி மானியத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கே நேரடியாகக் கொடுத்து வந்தது. ஆனால் இந்தத் திட்டத்தின் மூலம் எரிவாயுக்கான மானியம் நேரடியாகப் பயனாளிகளுக்கே சென்று விடும். உலகின் மிகப் பெரிய நேரடி மானியத் திட்டம் என்று இத்திட்டம் பாராட்டப்படுகிறது.

அன்னிய முதலீடு
ராணுவம் மற்றும் ரயில்வே துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.  பாதுகாப்புத் துறைக்கு தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்வதில் அன்னிய நேரடி முதலீடு 49% சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை ஒரு சில சேவைகளில் 100% வரை அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. ரயில்வே துறையின் செயல்பாடுகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது என்றும் வளர்ச்சி, உள்கட்டமைப்புகளில் மட்டுமே அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 

ஸ்மார்ட் சிட்டி
மோடி அரசு நாடு முழுவதும் 'ஸ்மார்ட் சிட்டி' எனப்படும், அனைத்து நவீன வசதிகளை கொண்ட 100 நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுக்கு ரூ. 48,000 கோடி ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டிக்கும் ஆண்டுக்கு ரூ. 100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும்.  மத்திய அரசு உருவாக்கும் 'ஸ்மார்ட் சிட்டி', 21ம் நூற்றாண்டைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என பிரதமர் மோடி பெருமையுடன் கூறியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக,  மென்பொருள் துறைக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும், அடுத்த 5 முதல் 10 வருடங்களில் சுமார் 4,000 கோடி டாலர் மதிப்பிலான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று இந்திய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் இத்திட்டத்தை வரவேற்றுள்ளது.  

அதிவேக ரயில்கள்
மோடி தலைமையில், ரயில்வே துறை பல சிறப்பான திட்டங்களை நிறைவேற்ற உள்ளது. பெரிய நகரங்களையும், வளர்ச்சி மையங்களையும் இணைக்கும் வகையில் அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதிவேக ரயில்களுக்கான 'வைர நாற்கர' திட்டம் செயல்படுத்தப்படும். மும்பை - அஹமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு சீனா ஒத்துழைப்பு அளிக்க உள்ளது. இந்தியாவின் 'புல்லட் ரயில்' கனவு நிறைவேறும் காலம் வெகுவிரைவில்.

எய்ம்ஸ் மருத்துவமனைகள்
2015-16 நிதியாண்டில், தில்லியில் உள்ளதைப் போல ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, ஹிமாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி - மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,500 கோடி முதல் ரூ.1,800 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கதேசத்துடன் நிலப் பகிர்வு ஒப்பந்தம்
அஸ்ஸாம், மேற்கு வங்கம், மேகாலயம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே ஆங்காங்கே, அண்டை நாடான வங்கதேசத்தின் சில பகுதிகள் உள்ளன. அதேபோல, வங்கதேச எல்லைக்குள்ளும் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகள் உள்ளன. எல்லைகள் முறையாக வரையறுக்கப்படாததால், இரு நாடுகளிலும் ஊடுருவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இதற்குத் தீர்வு காணும் வகையில், வங்கதேசப் பகுதிகளுக்கு இடையிடையே இருக்கும் இந்தியப் பகுதிகளை அந்நாட்டிடம் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக இந்தியாவில் இருக்கும் வங்கதேசப் பகுதிகளை எடுத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு நில எல்லை வரையறைச் சட்டம் மோடி அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தமானது இந்தியா, வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடியதாகும்.

வங்க தேசத்துடனான எல்லைப் பிரச்னையைத் தீர்க்க வகை செய்யும், நில எல்லை வரையறை மசோதா, மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிறைவேற்ற உறுதுணையாக இருந்ததற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். ‘நில எல்லை வரையறை மசோதா நிறைவேறியிருப்பது இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு கிடைத்துள்ள வெற்றி’ என வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

கருப்புப் பணம்

வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சிறப்பு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்படும் என்று பாஜக, தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 3வது நாளில் இதற்கான குழு அமைக்கப்பட்டது. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை மோடி அரசு அமைத்தது.

யோகா தினம்

பிரதமர் நரேந்திர மோடி 2014 செப்டம்பரில் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது ஐ.நா. சபை.

மோடி - ஒபாமா - டைம்
மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தினவிழாவில் பங்கேற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா. குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்கிற பெருமையைப் பெற்றார். இந்தியாவுக்கு ஒபாமா வந்தபோது மரபுகளை விலக்கி வைத்து விட்டு, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று ஒபாமாவை ஆரத் தழுவி வரவேற்றார். அந்தத் தருணம் இரு நாடுகளுக்கும் இடையேயான புதிய உறவு மலர்ந்ததற்கான தொடக்கம் என்ற எண்ணம் அனைவருக்கும் எழுந்தது. கடந்த டிசம்பர் மாதம் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு மோடி சென்றிருந்தபோது அவரை "செயல் வீரர்' என்று ஒபாமா பாராட்டியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. மோடி பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதலே, அவரது தலைமைப் பண்புகளைப் பாராட்டி ஒபாமா பேசி வருகிறார்.
டைம் பத்திரிகை வெளியிட்ட உலக அளவில் புகழ்பெற்ற 100 பேரின் பட்டியலில் நரேந்திர மோடியின் பெயரும் இடம்பெற்றது. அதே பத்திரிகையில், இந்தியத் தலைமை சீர்திருத்தவாதி என்ற தலைப்பில் மோடி பற்றி ஒபாமா கட்டுரை எழுதினார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஒரு நாட்டின் பிரதமராக மோடி உயர்ந்ததைப் பற்றி அக்கட்டுரையில் ஒபாமா விவரித்திருந்தார். "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக மோடி விளங்குகிறார்; மோடியின் வாழ்க்கை எவ்வாறு அடிமட்டத்தில் தொடங்கி உச்ச நிலையை அடைந்ததோ அதைப் போலவே, இந்தியாவின் எழுச்சியும் அமைந்துள்ளது' என்று அந்தக் கட்டுரையில் ஒபாமா தெரிவித்திருந்தார்.
பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி:
இந்தியா, பிரேசில், சீனா, ரஷியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை அங்கமாக கொண்டது "பிரிக்ஸ்' அமைப்பு. கடந்த வருடம் ஜூலையில் பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் புதிய வளர்ச்சி வங்கியை ஆரம்பிக்க மோடி ஆலோசனை கூறினார். இந்தியாவின் வலியுறுத்தலை ஏற்று ஆரம்பக் கட்டமாக, 5 நாடுகளும் தங்கள் பங்களிப்பாக இந்திய மதிப்பில் தலா ரூ. 60 ஆயிரம் கோடி வீதம், ரூ.3 லட்சம் கோடியை முதலீடு செய்தன. இந்த வங்கியின் முதல் தலைவர் பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. புதிய வளர்ச்சி வங்கி தொடங்கப்பட்டது இது, இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக மதிப்பிடப்பட்டது. 'புதிய வளர்ச்சி வங்கி' என்ற பெயர் பிரதமர் நரேந்திர மோடியால் சூட்டப்பட்டது. பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி குறித்து பேசிய மோடி, இது குறிப்பிடத்தக்க முயற்சியாகும். 2012-ல் டெல்லியில் எடுக்கப்பட்ட முயற்சி இப்போது சாத்தியமாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். 
பள்ளிகளில் கழிப்பறை:
கோடை விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில் கழிப்பறைகளை கட்டுமாறு மாநில முதல்வர்களுக்கு மோடி வேண்டுகோள் விடுத்தார். குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியவர், பள்ளிகளில் கழிப்பிடங்களைக் கட்டித்தர இந்தியத் தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
உயர்கல்வி:
ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்படும் என மோடி அரசு அறிவித்தது. அதன்படி, முதல்கட்டமாக 18 உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது. 
முத்ரா வங்கி:
சிறு, குறு மற்றும் நடுத்தர ரகத் தொழிலுக்கு நிதி உதவி கிடைக்க முத்ரா வங்கி தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் மாதம் முத்ரா வங்கியைத் தொடங்கினார் பிரதமர் மோடி. (Micro Units Development Refinancing Agency Bank என்பதன் சுருக்கம்தான் முத்ரா வங்கி) சரியான நேரத்தில் பணவசதி இல்லாமல் அவதிப்படும் தொழில்துறையினருக்கு நிதி கிடைக்கச் செய்வதற்காகத் தொடங்கப்பட்டுள்ளதுதான் முத்ரா வங்கி திட்டம். இதில் ரூ. 10 லட்சம் வரை குறைந்த வட்டிக்குக் கடன் பெற முடியும்.
சிறு வணிகர்களுக்கான மேம்பாட்டுக்காக முத்ரா வங்கிக்கு இந்த பட்ஜெட்டில் 20,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது மத்திய அரசாங்கம். இதனால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்க முடியும். நாட்டில் 5.75 கோடி சுய தொழில் நிறுவனங்கள் உள்ளன. இத்துறைக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதற்காக முத்ரா வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment