Sunday 9 February 2014

சென் எனும் ஜனநாயகத் தூண்!

நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தைக் கொண்டாடுபவராக இருந்தால், அவசியம் சுகுமார் சென்னையும் நீங்கள் கொண்டாடத்தான் வேண்டும். தேர்தல், ஜனநாயகப் பாதையில் செல்ல அடித்தளம் அமைத்தது காந்தி; அதற்கான பாதையை வகுத்தது நேரு என்றால், அந்தப் பாதையைக் கட்டமைத்தவர் சுகுமார் சென். நாட்டின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர்.
வரலாற்றுச் சாதனை
இன்றைக்கெல்லாம் நம்முடைய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அஞ்சல் தலை அளவுள்ள ஒரு சின்ன படத்தோடு முடிந்துவிடுகிறது சுகுமார் சென்னைப் பற்றிய நினைவு. இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலைத் திரும்பிப் பார்க்கும்போது இந்த மனிதரைப் பற்றிய ஆச்சரியங்கள் சில்லிடவைக்கின்றன.
இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் பிரதமர் நேருவுக்கு மட்டும் அல்ல; ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே விடப்பட்ட சவால் என்று சொல்லலாம். இந்தியர்களுக்கு இந்தியாவை ஆளும் தகுதி இருக்கிறது என்று ஆங்கிலேயர்களுக்கும் மேற்கத்தியர்களுக்கும் நிரூபிப்பதற்கான சவால்.
இந்தியர்களுக்கு அதை எதிர்கொள்வதில் அலாதியான உத்வேகம் இருந்தாலும், தேர்தல் களம் அத்தனை எளிதானதாக இல்லை. மூன்று முக்கியமான காரணங்கள்:
1. இந்திய விடுதலை என்பது வெறுமனே ஆங்கிலேயர்களிடமிருந்து நடக்கும் ஆட்சி மாற்றமாக இருக்கக் கூடாது என்பதிலும், அது காலங்காலமாக இங்கு சாதியும் மதமும் போட்டு அழுத்திக்கொண்டிருந்த மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சமூக விடுதலையாக இருக்க வேண்டும் என்பதிலும் காந்தி, நேரு இருவருமே உறுதியாக இருந்தனர்.
ஆகையால், சுதந்திரத்துக்குப் பின் முதல் தேர்தலை நடத்தியபோது, வயது தகுதியை எட்டிய எல்லோருக்குமே வாக்குரிமை அளிக்கும் புரட்சிக்கு இந்தியா திட்டமிட்டது. அப்படிப் பார்த்தால், வாக்களிக்கத் தகுதிபெற்ற 17.6 கோடிப் பேரில் கிட்டத்தட்ட 15 கோடிப் பேர் கல்வியறிவற்றவர்களாக இருந்தனர்.
2. குறுக்கும் நெடுக்குமாக மொழி, இனம், கலாச்சாரத்தில் தொடங்கி சீதோஷ்ண நிலை வரை விரிந்தும் பிரிந்தும் கிடந்தது நாடு. ஆளுக்காள் பிரிந்து செல்ல நின்றார்கள்; ஆளுக்கொரு சித்தாந்தம் கையில் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலவரங்கள் வெடித்தபடி இருந்தன.
3. உலகிலேயே அதிகமானோர் பங்கேற்கும் இந்தத் தேர்தலின் பிரமாண்டமான அடிப்படைக் கட்டுமானம்.
ஆச்சரியங்களின் ஆச்சரியம்
நம்முடைய பத்திரிகைகளில் தேர்தல்கள்தோறும் வாக்குப் பதிவுக்கு மறுநாள் ஒரு செய்தியைத் தவறாமல் பார்க்க முடியும். வரும் தேர்தலிலும்கூட நமக்குக் காணக் கிடைக்கலாம்: தேர்தலை நடத்துவதற்காகப் பரிசலில் பயணிக்கும் அதிகாரிகள் படம் அல்லது தேர்தல் அதிகாரிகளின் உபகரணங்களைச் சுமந்து செல்லும் கழுதைகளின் படம். சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் நம்முடைய பல கிராமங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது என்றால், 63 ஆண்டுகளுக்கு முன் 2.25+ லட்சம் கிராமங்களைக் கொண்ட ஒரு நாட்டில், தேர்தல் நடத்துவது என்பது எவ்வளவு சிரமமான காரியமாக இருந்திருக்கும்?
முதல் பொதுத்தேர்தலையொட்டி, 22.11.1951 அன்று அகில இந்திய வானொலியில் ஆற்றிய உரையில் நேரு குறிப்பிடும் புள்ளிவிவரங்கள் தேர்தலின் உண்மையான பிரமாண்டத்தை நமக்குச் சொல்லும்: “ஒட்டுமொத்தமாக 3,293 தொகுதிகள். மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை என மூன்று அவைகளுக்கும் சேர்த்து 4,412 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏறத்தாழ 2.24 லட்சம் வாக்குச்சாவடிகள்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உத்தேசமாக ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, ஐந்து உதவியாளர்கள், நான்கு காவலர்கள் தேவை. ஆகக் குறைந்தது 16,500 உதவியாளர்கள், 56,000 அலுவலர்கள், 2.8 லட்சம் தன்னார்வலர்கள், 2.24 லட்சம் காவலர்கள்…”
வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு பெரிய அமைப்பில் உள்ள ஆகப் பெரும்பான்மையினர் தேர்தல்பற்றி ஏதும் அறியாதவர் கள். இவர்களுக்குப் போதிக்கப்பட்டு, இவர்கள் மூலமாக 17.6 கோடி மக்களையும் தேர்தல் அறிவு சென்றடைய வேண்டும். மேலும், இவர்கள் அவ்வளவு பேரையும் நேர்மையாகவும் திறமையாகவும் பணியாற்ற வைப்பதற்கான சரியான செயல்திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். யாவும் கச்சிதமாக நடந்தது. சுகுமார் சென் சாதித்தார்.
வரலாற்றில் புதையுண்டவர்
இந்தியப் பஞ்சம் சூறையாடிய 1898-ல், மேற்கு வங்கத்தில் பிறந்த சுகுமார் சென், அடிப்படையில் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (ஐ.சி.எஸ்). 1950-ல் நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பதவியேற்ற அவரைத் தேர்தல் ஆணையத்தின் தந்தை என்று சொல்லலாம். 1952,1957 ஆகிய இரு பொதுத்தேர்தல்களை முன்னின்று நடத்திய அவருடைய தேர்தல் நிபுணத்துவம் இந்தியாவைத் தாண்டியும் அவரை அழைத்துச் சென்றது.
சூடானின் முதல் தேர்தலுக்கான கட்டமைப்பு உருவாக்கத்தில் உதவினார் சென். தன்னுடைய பணி ஓய்வுக்குப் பின், மேற்கு வங்க அரசு நிறுவிய பர்த்வான் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராகப் பொறுப்பேற்று, கல்வியை நோக்கித் தன் பார்வையைச் செலுத்தினார். ஆனால், ஒருகட்டத்தில் இந்த நாட்டின் எண்ணற்ற முன்னோடிகளுக்கு ஏற்பட்ட அதே கதி சென்னுக்கும் ஏற்பட்டது. வரலாற்றின் இடுக்குகளில் சென்னும் அவரைப் பற்றிய ஞாபகங்களும் புதைக்கப்பட்டன.
வரலாற்றாய்வாளர் ராமச்சந்திர குஹாதான் அவரை மீட்டெடுத்தார். சென்னின் கணித மேதைமையும் தொலைநோக்கும் இந்தியத் தேர்தல் கட்டமைப்பை எப்படி வடிவமைத்தன என்பதையும் இந்திய ஜனநாயகத்துக்கு அவர் ஆற்றிய பணி எவ்வளவு முக்கியமானது என்பதையும் விரிவாக எழுதினார்.
இன்றைக்கும் தேர்தல் ஆணையம் வசமுள்ள சுகுமார் சென்னின் 269 பக்க அறிக்கை, உலகின் மாபெரும் ஜனநாயகத்தில் நடந்த அந்த மகத்தான நிகழ்வைப் பறைசாற்றுகின்றன; கூடவே, அதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும். நல்ல வேளையாக சென்னுக்கு ஒரு குஹா கிடைத்தார், இன்னும் எத்தனை முன்னோடிகள் குஹாக்கள் கிடைக்காமல் காத்திருக்கிறார்களோ?

No comments:

Post a Comment