Wednesday 5 February 2014

ராவணனுக்காக ராமர் கட்டிய கோவில்

ராம-ராவண யுத்தத்தில் ராமபிரானால் ராவணன் கொல்லப்பட்டான்.

அதன்பிறகு ராவணன் ஆன்மா இறைவனடி சேராமல் அலைந்து கொண்டிருந்தது.

இதை அறிந்தார் ராமபிரான். பரம எதிரியானாலும் பரம சிவபக்தனான ராவணனின் ஆன்மா சாந்தியடைய ஒரு கோயிலை உருவாக்கி, சிவபெருமானை பிரதிஷ்டை செய்தார். அவருக்கு மாம்லேஷ்வரர் மஹாதேவ் என்ற திருநாமத்தையும் சூட்டினார்.

இந்த மாம்லேஷ்வர் மஹாதேவரை ராவணனின் ஆன்மா சில காலம் வழிபட்டு முக்தியடைய வழி செய்தார் ராமபிரான்.

பகைவனுக்கும் அருளும் உயர்வான மனதோடு ராமர் கட்டிய இக்கோயில் மகாபாரதக் காலத்திலும் சத்ய யுகத்திலேயும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இப்பகுதியில் அகழ்வாராய்ச்சியின்போது சில சிவலிங்கங்கள் கிடைத்ததாம்.

இக்கோயிலிலிருந்து மேள ஒலி எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறதாம். மரப்பலகைகளைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள இந்த மாம்லேஷ்வர் மஹாதேவ் கோயில் இமாசலப்பிரதேசத்தில் கர்சோக் என்ற கிராமத்தில் உள்ளது.

இமயமலையின் பனிபடர்ந்த பிரதேசத்தில் இக்கோயில் உள்ளதால் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இங்கு பக்தர்கள் வரமுடியும்.



பலனை எதிர்பார்க்காதே!

காட்டின் வழியே குருவும் சீடனும் நடந்து சென்றனர். சீடனுக்குப் பசி எடுக்கவே ஒரு மரத்தின் உச்சியில் இருந்த மாங்கனியைப் பார்த்து கீழே கிடந்த கல்லை எடுத்து வீசினான். ஆனால் பழம் விழவில்லை. ``ஐயா, எவ்வளவோ முறை முயற்சித்தும் பழம் கீழே விழவில்லை. ஆனால் பசி வயிற்றைக் குடைகிறதே. என்ன செய்வது?'' என்றான் குருவிடம். குரு புன்னகைத்தபடியே, ``பழம்தானே வேண்டும் உனக்கு?'' என்று மரத்தின் அடியில் கிடந்த ஒரு கல்லை எடுத்து குறிபார்த்து எறிந்தார். குறி தவறவில்லை. பழம் தொப்பென்று தரையில் விழுந்தது. வியப்படைந்த சீடன், `` அது எப்படி?'' எனக் கேட்டான். ``சீடனே! நீ கல்லெறியும் போது பசியைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பழத்தின் பலன் மட்டுமே உனக்குத் தெரிந்தது! ஆனால் நானோ பழத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் கல் எறிந்தேன். பலனை எதிர்பார்க்கவில்லை'' என்றார் குரு.




கோயில் யானை

கோயில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் விபூதிப் பட்டையுடன் வந்து கொண்டிருந்தது.

ஒரு நெருக்கமான பாலத்தின் அருகே அது வரும்போது, எதிரில் சேற்றில் குளித்த பன்றியொன்று வாலை ஆட்டிக் கொண்டிருந்தது.

யானை நின்று அதற்கு வழிவிட்டது. இதைக் கண்ட அந்தப் பன்றி மற்றொரு பன்றியிடம், ``அந்தப் பெரிய யானையே என்னைக் கண்டு பயந்துவிட்டது!'' என்றது கர்வத்துடன்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மற்றொரு யானை, கோயில் யானையிடம், ``பன்றியைப் பார்த்து நீ பயந்து விட்டாயா?'' என்று கேட்டது.

அதற்குக் கோயில் யானை, ``நண்பா! நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றி மேலுள்ள சேறு என் மேல் விழுந்துவிடக்கூடாதே என்பதற்காக அப்போது ஒதுங்கி நின்றேன். நான் மிதித்தால் அது கூழாகிவிடும். ஆனால் என் கால் அல்லவா சேறாகும்!'' என்றது.

கோயில் யானையைப் போல் கயவர்களின் ஆணவத்தைக் கண்டு நாம் அடக்கத்தோடு ஒதுங்கிக் கொள்வதே நன்மை பயக்கும்!''





பிடித்ததும், பிடிக்காததும்

அறிவாளி ஒருவன் யாரை சந்தித்தாலும், அவர்களிடம் பேசிவிட்டு வரும்போது அவர்களிடம் உள்ள குறையைக் கண்டுபிடித்து பிறரிடம் சொல்லுவான். இப்படிக் குறையையே கண்டுபிடித்து எல்லோரிடமும் சொல்லி வந்ததால் உற்றார், உறவினர் அனைவரும் வெறுக்கத் துவங்கினர். இந்த நிலையைக் கண்டு மனம் வருந்தி ஒரு ஞானியிடம் சென்று, ``தன் நிலையைக் கூறி, இதற்குக் காரணம் என்ன? என் செய்கை தவறா?'' என்று கேட்டான்.

ஞானி புன்னகையுடன், ``சரி! பிறகு பேசலாம். முதலில் சாப்பிடலாம் என்று அழைத்துச் சென்று சாப்பிடச் சொன்னார். அவன் தனக்குப் பரிமாறிய உணவு வகைகளில் சிலவகை உணவுகளைத் தவிர்த்துவிட்டு மற்றவைகளை சாப்பிட்டான். ஞானி உடனே, ஏன் அந்த உணவுகளைத் தவிர்த்தாய்?'' என்றார். ``எனக்குப் பிடித்ததை சாப்பிடுகிறேன். பிடிக்காதவற்றைத் தவிர்க்கிறேன்'' என்றான் அவன்.

``அப்படித்தான் ஒவ்வொரு மனிதர்களிடமும் பிடித்ததை எடுத்துக்கொள். பிடிக்காததை விட்டுவிடு. பிறகு அனைவரும் உன்னை விரும்புவர்'' என்றார் ஞானி.

No comments:

Post a Comment