கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகள் மற்றும் கடமைகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகள் மற்றும் கடமைகள்
பகுதி நேர கிராம அலுவலர்களுக்கு மாற்றாக
முழு நேர கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்ட பின்னர்
இவர்களுக்கான பணிகள் மற்றும் கடமைகள் குறித்தான விவர அட்டவணை ஒன்று அரசாணை
எண் 581, நாள்: 3-4-1987-ல் நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டது. அதன்படி
கீழ்க்கண்ட கடமைகளைச் செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் பொறுப்பானவர்கள்
ஆவார்கள்.
1. கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
4. பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன்கள் பெற சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்கள் வழங்குதல்.
5. பிறப்பு, இறப்பு பதிவேடுகளைப் பராமரித்தல்.
6. தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின்போது உடனுக்குடன் மேல்
அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புதல் மற்றும் இயற்கை இன்னல்களால் ஏற்பட்ட
சேதத்தை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடும் போது உதவி செய்தல்.
7. கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல் மற்றும் விசாரணைக்கு உதவி செய்தல்.
8. காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள் போன்ற தொற்று நோய்கள் பற்றி அறிக்கை அனுப்புதல்.
9. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
10. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
11. புதையல் பற்றி மேல் அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தல்.
12. முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்தான பணிகளைக் கவனித்தல்.
13. பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டைப் பராமரித்தல்.
14. முதியோர் ஓய்வூதியப் பதிவேட்டைப் பராமரித்தல்.
15. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைத்தல்.
இது தவிர கிராம நிர்வாக அலுவலர்கள் கீழ்க்கண்ட பணிளும் செய்ய கடமைப்பட்டவர்களாவார்கள்:
16. கிராமப் பணியாளர்களுடைய பணியினை கண்காணிப்பது.
17. நில ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது மற்றும் மேல் அலுவலர்களுக்குத் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுப்பது.
18. சர்வே கற்களை பராமரிப்பது, காணாமல் போன கற்களைப்பற்றி அறிக்கை அனுப்புதல்.
19. கிராமத்தில் நிகழும் சமூகவிரோத செயல்கள் குறித்தான அறிக்கை அனுப்புதல்.
20. குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் சந்தேகத்திற்கிடமான அந்நியர்கள் வருகையை தெரிவிப்பது.
21. வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தல்.
22. சட்ட-ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதன் மூலம்
குற்றங்களை தடுத்தல், குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல்,
சட்ட-ஒழுங்கு பேணுவதற்காக கிராம அளவில் அமைதி குழு கூட்டி முன்னெச்சரிக்கை
நடவடிக்கை எடுத்தல்.
23. கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்.
24. தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகள் செய்வது.
25. கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் ஒத்துழைத்தல்.
26. அரசு அவ்வப்போது தொடங்கும் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
27. மனு நீதி நாள் நிகழ்ச்சி நடத்த வட்டாட்சியருடன் ஒத்துழைத்தல். நிலப்
பட்டா, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை வழங்குதல், மனுக்கள் மீது
அறிக்கை அனுப்ப உரிய ஆவணங்களைத் தயாரித்தல்.
28. பாசன ஆதாரங்களைக் கண்காணித்தல் - ஏரிகளிலும் நீர்வழங்கும் பாசனக்
கால்வாய்களிலும் ஆக்கரமிப்புகள் இல்லாமல் தடுப்பது - அவற்றை முறையாக
பராமரித்தல்.
29. கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் (Sale
Statistic Register) எடுத்து ஒரு பதிவேடு நாளது வரை பராமரித்தல்.
30. பதிவு மாற்றம் (Transfer of Registry) அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை நாளது வரையில் பராமரித்தல்.
31. நிலப் பதிவேடுகளைக் கணினிமயமாக்குதலுக்குண்டாண (Computerisation) பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது.
32. அரசு ஆணை எண் 212, வருவாய்த் துறை, தமிழ்நாடு 29-4-1999-ன்படி நாட்குறிப்பு பராமரித்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.
33. கிராம அளவில் கடன் பதிவேடு (Loan Ledgers) மற்றும் இதர வசூல்
கணக்குகளைப் பராமரித்து இது சம்பந்தமாகக்க காலாண்டுக்கு ஒரு முறை வட்ட
கணக்குகளுடன் சரிபார்த்தல்.
34. கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அறிக்கை அனுப்புதல்.
35. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
36. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
35. உயர் அலுவலர்கள் அவ்வப்போது இடும் பணிகளைச் செய்வது.
No comments:
Post a Comment