Tuesday 4 February 2014

கொள்வதா?கொடுப்பதா?

துரோணாச்சாரியார் கங்கையில் நீந்திக்கொண்டிருக்கிறார்.
கரையில் அவருடைய மாணவர்கள் நூற்றியாறுபேரும் வரிசையாக நிற்கிறார்கள்.
துரியோதனன் மற்றும் அவன் சகோதரர்களாகிய கவுரவர்கள் நூறுபேர்; தருமன் முதலிய பாண்டவர்கள் ஐந்துபேர்; கர்ணன் ஒருவன் - ஆக நூற்றியாறு பேர்.
தொடக்கத்தில் கர்ணன் துரோணரிடம்-தான் கலைகள் கற்றான்.

கங்கையில் ஒரு முதலை நீந்துவதைத் துரோணர் கண்டார் ஒரு சாதனை செய்வதற்காக அம்முதலை தன்னைப் பிடிக்கட்டும் என்று யோக சிந்தனையில் இருந்தார்.
முதலை துரோணரைப் பிடித்துவிட்டது. ஆசிரியரைக் காப்பாற்ற அர்சுனன் மட்டும் கங்கையில் குதித்தான்.
மற்ற 105 பேர்களும் வேடிக்கை பார்த்தனர். ‘முதலை வெற்றிபெற்றால் ஒருநாள் விடுமுறை கிடைக்கும். ஆசிரியர் வெற்றிபெற்றால் என்ன நடக்கும்?’ என்று சிந்திப்பவர்கள்போல் பேசாமல் இருந்தனர்.
முதலையின் வயிற்றைக் கிழித்து ஆசிரியரைக் காப்பாற்றினான் அர்ச்சுனன். எல்லோரும் கரையில் கூடினர். “அர்ச்சுனா! மற்றவர்கள் முன்வராதபோது, நீ மட்டுமே வந்து என்னைக் காப்பாற்றினாய். இதற்கு ஒரு பரிசு தரப்போகிறேன்” என்றார் துரோணர்.
‘பிரம்மசிரஸ்’ என்று ஓர் மந்திர அம்பு என்னிடம் உள்ளது. இதுவரை யாருக்கும் அதைக் கற்றுக்கொடுக்கவில்லை. இனி மேலும் அர்ச்சுனனைத் தவிர, வேறு யாருக்கும் அதைக் கற்றுக்கொடுக்கமாட்டேன்” என்று துரோணர் சபதம் செய்தார்.
அர்ச்சுனனுக்கு மட்டும் அந்த அம்பைக் கற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே, முதலை வாயில் புகும்படி ஒரு யோக நாடகம் ஆடியிருக்கிறார் துரோணர்.
அந்த அம்பைப் பற்றியும் அதன் ஆற்றல் பற்றியும் அதற்கென்று உள்ள மந்திர உச்சாடணம் பற்றியும் ஆசிரியர் எல்லோருக்கும் விவரித்தார்.
அந்த அரிய அம்பு தனக்குக் கிடைத்ததால் அர்ச்சுனன் நெஞ்சை உயர்த்தி நின்றான்.
அந்த வாய்ப்புக் கிடைக்காமல் மற்றவர்கள் முகம் சோர்ந்து போனார்கள்.
இது நடந்து பல மாதங்கள் சென்றபின் ஒரு வேடன் வந்தான்.
அவன் உடல்வாகு மிகப்பெரிய வீரர்களுக்கு உரிய அமைப்புக் கொண்டிருந்தது.
துரோணரை வணங்கினான் அவன் உடல் அமைப்பைப் பாராட்டி அவர் வாழ்த்தினார். வீரர்களுக்கு வீரர்களைக் கண்டால் வரும் பெருமிதம் அவருக்கு வந்தது.
“ஆச்சாரிய திலகரே, எனக்கும் எல்லா வீர விளையாட்டையும் தாங்கள் கற்றுத்தர வேண்டும்” என்று மீண்டும் பணிந்தான்.
அவனை ஆதரவோடு தழுவி எடுத்தார் துரோணர்.
“நான் இந்த அரசகுமாரர்களுக்கு வில்வித்தை முதலிய கலைகளைக் கற்றுத் தருவதற்காக நியமிக்கப் பெற்றுள்ளேன். ஆகவே, பிறருக்கு அந்தக் கலைகளைக் கற்றுத் தருவது முறையாகாது” என்றார்.
‘’நான் இக்கலைகளைக் கற்பதற்கு வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.”
“நீ வேடன் காட்டில் உன் தொழில். இக்கலைகள் நாடாளுபவர்களுக்குத் தேவையானவை. நீ ஏன் இதற்கு ஆசைப்பட வேண்டும்?”
“ஸ்வாமி வீரனாகப் பிறந்தவன் நான். வீரக்கலைகள் எல்லாம் கற்பதில் எனக்கு ஆசை வரக்கூடாதா?”
“அதற்காக நான் ஒன்றுதான் செய்யலாம். நீ விரும்பும் எல்லாக் கலைகளும் உனக்கு வரட்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன்.”
மீண்டும் வணங்கி வேடன் போய்விட்டான்.
பலவருடங்களுக்குப் பின்... காட்டில் அந்த வேடன் ஓர் அம்பை ஆலமரத்தில் ஏவினான். ஒரு வெடியிலிருந்து பல வெடிகள் புறப்படும் சிவகாசிப் பட்டாசுபோல, ஓரம்பிலிருந்து பல அம்புகள் புறப்பட்டன.
அர்ச்சுனன் வியந்தான். அந்த அம்பு தனக்கு மட்டும் தெரிந்த ‘பிரம்மசிரஸ்’ என்பதை உணர்ந்தான்.
“உன் குரு யார்” அர்ச்சுனன் வினா.
“என் குரு துரோணாச்சாரியார்” வேடன் பதில்.
புயல் வேகத்தில் அர்ச்சுனன் துரோணரைப் பார்க்கப் புறப்பட்டான்.
“ஸ்வாமி எனக்கு மட்டும் கற்றுத் தருவதாகச் சொல்லிய பிரம்மசிரஸை, ஒரு வேடனுக்கும் தாங்கள் கற்றுக்கொடுத்துள்ளீர்கள்.”
“இருக்காது அர்ச்சுனா!”
இருவரும் வேடன் குடிசைக்குப் போனார்கள். வேடன் குருநாதரைப் பணிந்து வணங்கினான்.
“நீ ஏகலைவன்தானே” துரோணர் கேட்டார்.
“ஆமாம் சுவாமி, இதோ என் குருநாதராகிய தங்கள் உருவம்” என்றான் வேடன். பொம்மையைக் காட்டினான்.
“தினமும் இதை வணங்குவேன். யோகத்தில் அமர்வேன் இந்த வீரக் கலைகளும் அதற்குரிய மந்திரங்களுக்கும் தானாக எனக்குள் வந்து பதிந்தன” என்று அவன் தன் நடைமுறையக் கூறக் கூற அவனுக்கு மனதார ஒருநாள் வாழ்த்தியதை, மனத்தில் படமாக ஓடக்கண்டார் துரோணர்.
“அர்ச்சுனா என்னைக் குருவாகக் கருதி யோகத்தில் ஈடுபட்டதால் நான் கொடுக்காமலேயே, அவன் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுவிட்டான்” என்றார் குருநாதர்.
“ஏகலைவா! நான்தானே குரு. நான் எதைக் கேட்டாலும் கொடுப்பாயா?”
“சுவாமி, குருதட்சிணையைக் கொடுக்காதவன் கல்வி, ஏழுபிறவிக்கும் பயன்படாது அழியும் என்பது எனக்குத் தெரியும். கேளுங்கள்”
“உன் வலது கை கட்டை விரல்தான் வேண்டும்.”
அரை நொடியில் விரல் கீழே விழுந்தது. துரோணரும் அர்ச்சுனனும் திரும்பினர்.
“சுவாமி! கட்டை விரலை ஏன் கேட்டீர்கள்?”
“முடியாத ஒன்றைக் கேட்டு, அதையும் அவன் தந்துவிட்டால் எல்லாப் பிறவியிலும் அவன் யோகசாதனையில் வெற்றி பெறுவான்” என்றார் குரு.
கொடுப்பது முக்கியமல்ல; கொள்வதுதான் சிறந்தது என்று அர்ச்சுனனுக்கும் தெரிந்தது. அர்ச்சுனனிடம் கட்டை விரலைக் கேட்டிருந்தால், அவன் கொடுத்திருப்பானா...?

No comments:

Post a Comment