Wednesday 12 February 2014

நேரடி, மறைமுக வரிகள் - என்றால் என்ன?

நேரடி, மறைமுக வரிகள் - என்றால் என்ன?

வரி வருவாய்களில் நேரடி வரி (Direct Tax) , மறைமுக வரி (Indirect Tax) என இருவகைகள் உள்ளதாகப் பார்த்தோம். தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி (Corporate Income Tax), தனிநபர் வருமான வரி (Personal Income Tax), சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும்.

பொருள்களை உற்பத்தி செய்யும்போது செலுத்துகின்ற கலால் வரி (Excise Duty), இறக்குமதி / ஏற்றுமதி செய்யும்போது செலுத்தப்படும் சுங்க வரி (Customs Duty), பொருள்களை வாங்கும் போது செலுத்துகின்ற மதிப்பு கூட்டு வரி, தொழில் வரி (Service Tax) போன்றவை மறைமுக வரிகளாகும்.

இதில், நேரடி வரிகளை மற்றவர்கள் மீது மாற்றவோ சுமத்தவோ முடியாது. உதராணமாக, ஒருவரின் வருமானம் அதிகமாகும்போது அவர் அதிகமான நேர்முக வரிகளையும், வருமானம் குறைவாக உள்ளவர்கள் குறைவான வரிகளையும் செலுத்துவார்கள். அதாவது, நேரடி வரிகள் ஒருவரின் செலுத்தும் திறனுக்கேற்றவாறு மாறுபடும்.

ஆனால், மறைமுக வரி அரசால் ஒருவர் மீது விதிக்கப்பட்டாலும், அந்தச் சுமையை தாங்குபவர் வேறு ஒருவராக இருப்பார். அதாவது, நீங்கள் ஏதாவது ஒரு பொருளை அல்லது சேவையினை வாங்கும்போது, அதன் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் மீது விதிக்கப்பட்ட வரியின் சுமை, இறுதி நுகர்வோர் ஆகிய உங்கள் மீது சுமத்தப்படும். இந்த வரிகள் பொருளின் விலையோடு சேர்த்தோ (உ.தாரணம் பெட்ரோலின் விலை) அல்லது சிற்றுண்டி சாலை உணவு பில்களில் சேவை வரி குறிப்பிடுவது போன்று தனியாகவோ குறிக்கப்பட்டிருக்கும். இந்த வரி நீங்கள் வாங்கும் பொருளின் விலையினை கூடுதலாக்குகின்றது.

ஏழை பணக்காரர் எல்லோரும் ஒரே விதமான மறைமுக வரிகளை செலுத்துவார்கள் என்பதால், பொருளாதாரத்தில் வருமான மறுபகிர்வுக்கு நேர்முக வரிகளை அதிகம் பயன்படுத்தவேண்டும், அதில்தான் வரி செலுத்தும் திறனுக்கேற்ப வரிவிகிதங்களை மாற்றி அமைக்க முடியும். எனினும் இந்த நேர்முக வரிகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாத வண்ணம் வரிக்கொள்கைகளை வடிவமைக்க வேண்டியதும் மிக முக்கியம்.

அதிகமாக உழைத்து பொருள் ஈட்டுவோர் மீது அதிக வரிச் சுமையை ஏற்றிக்கொண்டே போனால், அவர் மேலும் உழைப்பதற்கான ஊக்கம் இல்லாமலே போகும். மேலும் ஒரு பொருளாதாரம் வேகமாக வளரும் போது நேர்முக வரியும் அதிகமாக வளர்வது அவசியம். நம் நாட்டின் மொத்த வரி வருவாயில் 35 சதவீதம் நேர்முக வரிகளாகவும் 65 சதவீதம் (2010-11 நிதியாண்டில்) மறைமுக வரிகளாகவும் பெறப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment