Sunday 10 July 2016

மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?

தன்னை அறிந்தவன்
ஆசைப் பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோபப்பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்பப்பட மாட்டான்

- பகவத் கீதை.


மனித வாழ்வில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், வருத்தங்களும், துக்கங்களும், சோகமும் கூட ஏற்படுகின்றது. வெறும் இன்பம் மட்டுமே மனிதனின் வாழ்வு ஆகி விடுவதில்லை. அப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விட்டால் பிரச்சினை என்ற சொல்லே அகராதியில் இருந்திருக்காது. அதுபோல் வாழ்வு முழுவதுமே துக்கம், துயரம் என்றால் மனித சமுதாயம் என்ற ஒன்றே இன்று இருந்திருக்காது. ஆனால் ஈ, எறும்பு, புழு, பூச்சிகள், விலங்குகள் இவைகளுக் கெல்லாம் நம்மைப் போல் வாழ்க்கை போராட்டமாக இருப்பதில்லை.

மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?

காரணம் மனிதனுக்கு வசதிகள் வேண்டும். பணம் வேண்டும். பிற உறவுகள் வேண்டும். பணத்தினையும், சொத்தினையும் பதுக்கி பதுக்கி சேர்க்கும் குணம் மனிதனுக்கு மட்டுமே உண்டு. இதன் காரணம் பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் இவை பயன்படும் என்கிறான். வசதி இருக்கும்போது, வரும் முன் காப்போனாக பொருட்களை பத்திரம் செய்யும் மனிதன் தான் மகிழ்ச்சியாய் இருக்கும் போதே துக்கமும், துயரமும் வராதிருக்க ஏதாவது தடுப்பு முறை முயற்சிகளை மேற்கொள்கின்றானா என்ன? செய்வதில்லையே.

அதிக துக்கப்படும் மனிதனிடம் சென்று நீ இடைவிடாது இறைவனது பெயரைச் சொல்லிக் கொண்டு இரு. உன் கஷ்டம் நீங்கும் என்றால் அவனால் இதனைச் செய்ய முடியுமா? முடியாதே.

ஆக கஷ்டங்கள் இல்லாத பொழுதே கஷ்டத்தினை தடுக்கும் முறைகளை மனிதன் அறிய வேண்டும். நன்றாக உடல் இருக்கும் போதே இளம் வயதில் ஆரோக்கியம் இருக்கும் போதே உடலுக்கு முழு மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து செய்து கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது போலத்தான் மனதிற்கும் தேவைப்படுகின்றது. உடலுக்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்து என்பது போல் மனதிற்கு என்ன செய்ய வேண்டும்?

மனம் உணர்ச்சி மயமானது. முணுக்கென்றால் கோபத்தில் கொப்பளிக்கும், மகிழ்ச்சி வந்தால் தலை-கால் புரியாது ஆடும். காலத்திற்கும் நீங்காத மன வலியினையும், வேதனையினையும் தன்னுள்ளே அடக்கி அவஸ்தைபடும் சுயநலமும், பொறாமையும் ஒவ்வொரு திசுக்களிலும் ஏற்றி வைத்திருக்கும். என் வீடு, என் மனைவி, என் குழந்தை என எனது, நான் என்றே நினைக்கும். நினைத்தால் பிறரை மகிழச் செய்யும். பிறரை வார்த்தைகளால் கொல்லவும் செய்யும். தானும் பிறரிடமிருந்து இந்த பாதிப்புகளை பெறும். பொருளால் ஆன சொத்துக்களின் மீதே மோகம் கொண்டு அலையும்.

மனம், மனம், மனம் இந்த மனதால் தான் மனிதன் படும்பாடுதான் வாழ்க்கையை போராட்டமாக்கி விடுகின்றது. உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை இரண்டும் அவனுள் சுயநலம், குரோதம், காமம், பொறாமை என தீய குணங்களை அடுக்கி விடுகின்றன. மற்ற ஜீவ ராசிகளுக்கு இது போன்ற பிரச்சினைகள் எதுவும் இருப்பதில்லை. ஏனெனில் அவற்றிற்கு அறிவு என்ற ஒன்று இல்லை. அறிவு இருக்கும் மனிதனோ அதனை முறையாய் பயன்படுத்தவில்லை.

ஒரு நொடி நினைத்துப் பாருங்கள். துன்பமில்லாத மனித வாழ்க்கை எத்தனை சுகமானது என்று. நமக்கென்ன அறிவில்லையா என்று நினைக்கலாம். நாம் படிக்காத படிப்பா? நாம் பெறாத பட்டமா? நாம் பார்க்காத வேலையா? எனலாம்.

நினைத்துப்பாருங்கள், நமக்கு நம்மைப் பற்றிய அறிவு இருக்கின்றதா? இறைவனைப் பற்றிய தெளிவான அறிவு இருக்கின்றதா? நம்மை பற்றி நாம் சரியான எடை போட்டு வைப்பதில்லை. இறைவன் என்றாலே நாம் நினைத்தையெல்லாம் நடத்தி வைக்க வேண்டும். அதற்கு நம்மால் முடிந்த லஞ்சமாக பணம், காணிக்கை என பல வார்த்தைகளில் அவரோடு வியாபாரம் பேசுகின்றோம். ஆக நமது அறிவு கோணலான அறிவாக, விபரீதமான அறிவாக இருக்கின்றது. வாழ்வில் துன்பம், மேடு, பள்ளம் ஏற்படுவது இயற்கை. அதை சலனமின்றி தாண்டுவதுதான் சிறப்பு. அதுதான் அறிவின் பெருமை.

மனம் ஒரு நொடி எதனையும் நினைக்காது அமைதியாய் இருக்க மறுக்கின்றது. தூக்கத்தில் கூட பலருக்கு மனம் ஓடிக் கொண்டே இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த சுவாமி விவேகானந்தர் கூறுவது ஓர் இடத்தில் அமைதியாய் சிறிது நேரம் உட்கார். உன் மனதினைக் கவனி. நீயே ஆச்சர்யப்படுவாய். என்னென்னவோ நினைக்கும். எங்கெங்கோ ஓடும்.

அப்போது அதனுடன் நீயும் ஓடாதே. நான் மனம் அல்ல நான் அதனை கவனிக்கின்றேன் என்று உன்னுள் நீ சொல்லிக் கொள். அடிக்கடி சொல்லு. இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் நீ செய்வது வர மனதின் வேகம் அடங்கும். தறிகெட்டு ஓடாது. நாளடைவில் மனம் தானே அமைதிபடும் என்கிறார். மனம் அமைதி பட்டு விட்டால் மனிதனுக்கு மிகப்பெரிய சுமை இறங்கியது போல் இருக்கும். அதே போன்று உன் உடலை நல்ல சக்தியுள்ளவனாக நினை.

இப்படி நீ நினைக்க நினைக்க நீ அது போலவே ஆவாய். சக்தியற்றவனால் இந்த வாழ்வில் இருந்து விடுதலை பெற முடியாது என்றும் கூறியுள்ளார். நீங்கள் ஆன்மீக வழியில் திரும்புகின்றீர்கள் என்பதன் முதல் அறிகுறி நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எல்லோரையும் மகிழ்ச்சியுடனேயே பார்ப்பீர்கள். ஆக மனதை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனம் உங்களை கட்டுப்படுத்தக் கூடாது என்பதனை முதலில் உணர வேண்டும்.

மனம் அடங்கினால் ஐம்புலன்களும் அடங்கி விடும் என்கிறார்கள். நம்மால் ஒரு வேளை காபி இல்லாமல் இருக்க முடியவில்லை. உப்பு சற்று குறைவான உணவினை உண்ண முடியவில்லை. சிறிது நேரம் மின்சாரம் இல்லாவிட்டால் பேன் இல்லை. ஏ.சி. இல்லை, டி.வி.இல்லை என பரிதவித்து போய் விடுகின்றோம். ஆக எந்த அளவு மனக்கட்டுபாடு இல்லாமல் இருக்கின்றோம் என்பது இதிலேயே நமக்குத் தெரிந்து விடுகின்றது.

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று கூறுகின்றார்கள். உறவுகளின் மீதுள்ள ஆசையும், பணத்தின் மீதுள்ள ஆசையும் தான் இன்றைய உலகின் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது.

இந்த உடலை விட புலன்கள் உயர்ந்தது.
புலன்களை விட மனம் உயர்ந்தது

மனிதனை விட அறிவாற்றல் மிகவும் உயர்ந்தது என பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது.

ஆக புலன்களை அடக்கினால் மட்டுமே ஒருவன் தன்னை அறிய முடியும். மனதை கட்டுப் படுத்தினால் புலன்கள் அடங்கும். பிரணாயாமம் செய்வது அதாவது மூச்சு கட்டுப்பாடு பயிற்சி மன ஓட்டத்தினை கட்டுப்படுத்தி விடும். இடைவிடாது கடவுளையே நினைப்பது மனதினை கட்டுப்படுத்தி விடும். இவ்வாறு கடும் முயற்சி எடுத்து மனதை அடக்கி ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வைப்பதனை ‘வைராக்யா’ என்று சொல்வார்கள்.

* எல்லா ஆசைகளையும் துறந்து விட வேண்டும்.
* கெட்டவர்களின் சகவாசமே வேண்டாம்.
* தேவைகளை வெகுவாய் குறைத்துக் கொள்ளுங்கள்.
* யாருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.
* பிறரின் பாராட்டுதல்களையும், சுட்டிக் காட்டுதலையும் ஒதுக்கி விடுங்கள்.

எல்லாம் சரி, ஆனால் இதெல்லாம் ஒரு நொடியில் வந்து விடுமா என்ன? பத்து வருடங்கள் ஆனாலும் நாம் இதில் வழுக்கிக் கொண்டேதான் இருப்போம். இதற்கு என்ன செய்யலாம்? இப்படி வழுக்காதிருக்க நம் கையில் ஒரு பலமான ஆயுதம் தேவை. அந்த ஆயுதம் தான் ‘பகவத் கீதை’ எனும் புனித நூல்.

வேத வியாசரால் உருவாக்கப்பட்ட ‘மகா பாரதம்‘ என்ற இதிகாசத்தின் மத்தியில் ஸ்ரீகிருஷ்ண பகவான் அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக வரும் இந்த ‘பகவத் கீதை’ மனிதனுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம். சமஸ்கிருத மொழியில் உருவான இந்நூல் இன்று உலகின் பல மொழிகளில் வெளிவந்துள்ளது. தொன்று தொட்டு பல மகான்களும், பெரியோர்களும் இதற்கு விளக்க உரை கொடுத்துள்ளனர்,

சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. பகவத் கீதை 18 அத்தியாயங்களையும் 700 ஸ்லோகங்களையும் கொண்டது. இவ்வத்தியாயங்களில் 6 அத்தியாயங்கள் மனித வாழ்வியல் பற்றி கூறுகின்றது. மனிதனின் குழப்பங்களைப் பற்றி கூறுகின்றன. அடுத்த ஆறு அத்தியாயங்கள் பகவானை பற்றி கூறுகின்றன. அடுத்த ஆறு அத்தியாயங்கள் மனிதன் + பகவான் = ஜீவாத்மா + பரமாத்மா பற்றி கூறுகின்றன.

பகவத் கீதை ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகின்றது. புத்தி, ஞானம், மயக்கமின்மை, பொறுமை, சத்தியம், அடக்கம், அமைதி, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, அஞ்சுதல், அஞ்சாமை, அகிம்சை, திருப்தி, தனம், தானம், மகிழ்ச்சி, இகழ்ச்சி ஆகிய பல வித மனித குணங்கள் உயிர்களுக்கு என்னிடமிருந்தே உண்டாகின்றன.

- பகவத்கீதை 

No comments:

Post a Comment