Thursday 19 March 2015

ஒருநாளே வாழ்ந்தாலும் வீரனாக

ஒருநாளே வாழ்ந்தாலும் வீரனாக
உலகத்தில் பெருமிதமாய் வாழ வேண்டும்!
திருநாளே இதுவென்று மகிழ்ச்சி பொங்கத்
திசைவியக்கும் சாதனைகள் புரிய வேண்டும்!

வரலாறு படைத்திடவே வந்தோம் என்று
வலிமையுடன் காலடிகள் பதிக்க வேண்டும்!
அருமைமிகும் மானுடத்தில் சிகரம் காண
அடியெடுத்துப் புகழ்நோக்கிச் செல்ல வேண்டும்!

வழிநெடுக முள்ளிருக்கும்; இருந்தால் என்ன?
வசந்தம் இதோ அருகிலெனும் எண்ணம் வேண்டும்!
பழிச்சொற்கள் ஏளனங்கள் வதைத்தால் என்ன?
பட்டுமலர் தாமரைதான் வேண்டு மென்றால்
இழிவான சேற்றினையும் தீண்ட வேண்டும்!

இரவதனைத் தாண்டாமல் பகலே இல்லை!
விழுமியநற் சிந்தனையை மனத்தில் கொண்டு
வேகம்வி வேகமுடன் தொடர்தல் வேண்டும்!
தனக்குள்ளே உள்ளதுபே ராற்றல் ஒன்று
தன்னம்பிக் கையென்றே அறிந்தால் போதும்
நினைக்கின்ற நினைப்பெல்லாம் வெற்றி யாகும்!

நிமிடத்தில் கனவுகளும் நனவாய்ப் பூக்கும்!
எனக்கிங்கே யாரென்று சோர்ந்து விட்டால்
இன்பங்கள் ஓடிவந்து தொடுவ தில்லை!
தனக்குவமை இல்லாத மேன்மை வாழ்க்கை
தனித்தன்மைப் பண்புகளால் மட்டும் வாய்க்கும்!

கவிஞர் நிலவுசேகரன்
அம்மாபேட்டை, சேலம்

No comments:

Post a Comment