Saturday 1 March 2014

அய்யா வைகுண்டர்

‘உபகார நாதனாகிய நான் ஆணையிட்டுச்
சொல்கிறேன். என்றைக்கும் மலையின் மீது
ஏற்றிய தீபம் போலும், கன்றுக்குப் பால் போலும்,
கண்ணுக்குப் புருவம் போலும்
என்றைக்கும் மக்கா உங்களிடம் இருந்து  அரசாள்வேன்’
– அய்யா வைகுண்டர்.
இறைவன் ஒருவனே, எல்லா தெய்வங்களும் நாராயணருக்குள் அடக்கம் என்ற ஓரிறை கோட்பாட்டையும், உருவ வழிபாடு அற்ற கண்ணாடி தத்துவத்தையும் அடிப்படையாக கொண்டது அய்யா வழி. கலியுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச் செய்ய வைக்கும் நோக்கில் இறைவன் மனு அவதாரம் எடுத்து வந்ததாக அய்யா வழி புராண வரலாறு தெரிவிக்கிறது. கடலில் இருந்து தோன்றி வந்த ஒப்பற்ற அவதாரம் என்று அகிலம் விளக்குகிறது.
நீடிய யுகத்தில் குறோணி என்ற அரக்கன் தோன்றினான். அவனது பசிக்கு இந்த உலகம் இறையாகாமல் தடுக்க ஈசனும், மாயவனும் சேர்ந்து அவனை ஆறு துண்டுகளாக்கினர். இந்த ஆறு துண்டுகளும் ஒவ்வொன்றாக, ஒவ்வொரு யுகத்திலும் அரக்கர்களாக மாறி தேவர்களையும், உலக மக்களையும் துன்புறுத்தின. நீடிய யுகம், சதுர் யுகம், நெடிய யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகிய ஆறு யுகங்களிலும் தோன்றிய அரக்கர்களை நாராயணமூர்த்தி பல அவதாரங்கள் எடுத்து அழித்தார். 7–வதாக இப்போது நடந்து கொண்டிருப்பது கலி யுகம். அடுத்து இனி வரப்போவது தர்ம யுகம் ஆகும்.
கலியை அழிக்க மனு அவதாரம்
கலியுகத்தில் மாயையாக தோன்றி மக்களின் மனதில் குடிபுகுந்து உலகை அழிக்க நினைத்தான் கலி என்ற அசுரன். கலியுகத்தில் பிறப்பெடுத்த கலியன் ஈசனிடம், மும்மூர்த்திகளின் அடிப்படை சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய வரங்களை கேட்டு பெற்றிருந்தான். எனவே இந்த யுகத்தில் கலியனை நேரடியாக நின்று இறைவனால் அழிக்க முடியவில்லை. இதனை, ‘முன்னின்று கொல்ல மூவராலும் அரிது’ என்று அகிலம் கூறுகிறது.
எனவே தான் இறைவன் கலியுகத்தில் மனு அவதாரம் பூண்டு, தவ முனியைப் போல் வாழ்ந்து மக்களிடம் பல போதனைகளை எடுத்துரைத்தார். அன்பு, பொறுமை, தர்மம் இவற்றை ஆயுதமாக மக்களுக்கு கொடுத்து அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, தர்மம் செய்பவர்களாக, சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக வடிவப்படுத்துவதன் மூலம் கலி தன்னாலேயே அழிந்துபோகும், தர்மயுகம் பிறக்கும் என்று அய்யா வைகுண்டர் நம்பினார்.
கடலில் தோன்றினார்
இதற்காகவே கொல்லம் ஆண்டு 1008 மாசி 20–ல், வைகுண்டர் திருச்செந்தூர் பதியில் கடலிலிருந்து வெளிப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமி தோப்பை அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. முதல் இரண்டு வருடங்கள் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் தரையில் இருந்து மேலெழுந்த நிலையிலும் தவம் இருந்தார். அவர் தவம் செய்த இடமே வடக்கு வாசல் ஆகும்.
அய்யா வைகுண்டர் அடிமைத்தனத்தில் இருந்து சான்றோர் மக்களை விடுவிக்க போராடினார். அவர்களுக்கு பல போதனைகளை வழங்கினார். அதன்காரணமாக எதிரிகளால் பல துன்பங்களையும் அவர் அனுபவிக்க நேர்ந்தது. அந்த துன்பங்கள் வைகுண்டரின் சக்திக்கு முன்பு ஒன்றுமில்லாமல் தவிடு பொடியாகிப்போனது. வைகுண்டர் 1851–ம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார்.
மணலிபுதுநகர் தர்மபதி
சுவாமி தோப்பு, திருச்செந்தூர் பதி தவிர பல்வேறு இடங்களிலும் அய்யா வைகுண்டருக்கு பதி அமைந்துள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக விளங்குகிறது சென்னை அருகே மணலி புதுநகரில் அமைந்த அய்யா வைகுண்டர் தர்மபதி.
‘பல்லக்கேறித் தெருவீதி பகலத் தேரு நீ நடத்தி
செல்லப் பதிகள் மிக முகித்துத் திருநாள் கண்டு மகிழ்ந்திரு நீ
வல்லக்கொடிகள் மரம் நிறுத்தி வருவாய் நித்த வாகனத்தில்
பொல்லாக்கலியன் கண்டுளைந்து பொடி வானித்த மடிவானே’
– அகிலத்திரட்டு
மேற்கண்ட உத்தரவை செயல்படுத்தும் விதமாக மணலிபுதுநகர் அய்யா வைகுண்டர் தர்மபதியில் நித்தம் வாகனத்தில் அய்யா பதிவலம் வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சுவாமி தோப்பு பதியை அடுத்து தினந்தோறும் வாகனத்தில் அய்யா பதிவலம் வருவது இங்கு மட்டுமே என்பது இந்த தர்மபதியின் சிறப்புக்களில் ஒன்றாகும்.
சிறப்பு மிக்க ராஜகோபுரம்
மேலும் அய்யா வழி கோவில்களிலேயே முதன் முதலில் ராஜகோபுரம் கட்டப்பட்டது இங்குதான் என்பதும் மணலிபுதுநகர் தர்மபதிக்கு சிறப்பு சேர்ப்பதாகும். அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 யுகங்களை தெரிவிக்கும் விதமாக இந்த ராஜகோபுரம் 7 நிலைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
தர்மத்தை முன்னிறுத்திய அய்யா வைகுண்டரின் சொல்படி, தர்மபதியில் தினமும் மூன்று வேளைகளில் அன்ன தர்மம் நடைபெறுகிறது. பலர் செய்யும் தர்மங்களில் மூலமாகவே இந்த அன்னதர்மம் செய்யப்படுகிறது.
தேர்த் திருவிழா
மணலி புதுநகர் அய்யா வைகுண்டர் தர்மபதியில் 10 நாள் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகிற 13–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்த் திருவிழா நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு திருத்தேரில் அய்யா வீதி வலம் வருவார். அய்யா வைகுண்டர் பதி அமைந்த இடங்களிலேயே மிகப்பெரிய தேர் இருக்கும் இடம் என்ற சிறப்பை மணலிபுதுநகர் தர்மபதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 36 டன் எடையுடன், 36 அடி உயரம் கொண்டதாக இந்த தேர் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்த் திருவிழாவை தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும், பின்இரவு 1.45 மணிக்கு பூப்பல்லக்கு வாகனத்தில் அய்யா பதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
சென்னை அடுத்த திருவொற்றியூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மணலிபுதுநகர்.
உயர்வு  தரும்  தர்மம்
‘தர்மம் செய்து தழைத்திருங்கோ கண்ணு மக்கா’
– அகிலத்திரட்டு
மணலி புதுநகர் அய்யா வைகுண்டர் தர்மபதியின் திருவிழாவை முன்னிட்டு 8 நாட்கள் ஊர் மக்களிடம் அய்யாவுக்கு திருநாள் பிச்சை ஏற்கச் செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது பொதுமக்கள் தங்களின் வீட்டில் உள்ள தானியங்கள், உணவு பொருட்களை அய்யாவின் திருநாளுக்காக வழங்குவார்கள்.
அய்யா வைகுண்டர் மனு அவதாரம் எடுத்திருந்தபோது, மக்கள் பலரும் தங்கள் நிலங்களில் என்ன பயிரிடுவது?, எது பயிரிட்டாலும் சரியான விளைச்சல் இல்லை என்பது போன்ற கவலையை அவரிடம் தெரிவித்து வந்தனர். அப்போது தன் மக்களுக்கு என்ன பயிர் செய்வது?, எப்போது பயிர் செய்வது? என்றெல்லாம் அய்யா வழிகாட்டுவார். அவர் கூறியபடி பயிர் செய்யும் போது அது அமோக விளைச்சலை அல்ல, அதையும் தாண்டிய விளைச்சலை மக்களுக்கு கொடுத்து அவர்களின் உயர்ந்த வாழ்வுக்கு வழிவகுக்கும். இதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மக்கள் அனைவரும் குழந்தைகளின் கல்வி, திருமணம் அனைத்தையும் செய்து வளம் பெற்றனர்.
இதற்காக அய்யாவுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களின் முதல் விளைச்சலை எடுத்து வைத்து அய்யா வைகுண்டருக்கு காணிக்கையாக கொடுத்து வந்தனர். அந்த தானியங்களை வைகுண்டர், சமைத்து வறுமையில் வாடும் மக்களுக்கு தர்மம் செய்து வந்தார். இதை நினைவு கூறும் விதமாகத்தான் மக்கள் அனைவரும் தங்கள் நிலங்களில் விளைந்த முதல் விளைச்சலை எடுத்து வைத்து, அய்யா வைகுண்டர் திருநாளின் போது வழங்குகிறார்கள்.
பேதங்களை  களைந்தவர்
அய்யா வைகுண்டர் அடிமைப்பட்டு கிடந்த சான்றோர்களை சுயமரியாதையுடன் வாழும் வகையில் அவர்களை மீட்டெடுத்தார். அவர்களுக்கு பல போதனைகளை வழங்கினார். உலக மக்கள் அனைவரும் சாதி வேறுபாடின்றி வாழும் வகையில் ஒரே கிணற்றில் குளிக்க போதித்தார். மேலும் அவர்களை அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும் அறிவுறுத்தினார். நம் நாட்டின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
சுடரை  தாங்கும்  தாமரை
அய்யா வழியின் சமயச் சின்னமானது, சுடரை தாங்கும் தாமரையாகும்.
இதில் தாமரை, 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் நம்முள் இயங்கும் ஆன்மஜோதியாகிய பரப்பிரம்மம் அய்யா வைகுண்ட பரம்பொருளை யும் குறிக்கும்.
இந்த தாமரை சஹஸ்ராரச் சக்கரமாதலால் இதற்கு தண்டு வரையப்படாது. 
இந்து ஆகமங்களின்படி சஹஸ்ராரச் சக்கரத்தின் இதழ்களின் எண்ணிக்கை 1000 ஆகும். ஆனால் அய்யாவழி சின்னத்தில் இது 1008 ஆக கருதப்படுகிறது.
 

No comments:

Post a Comment