Friday 24 March 2017

வங்கதேசத்தின் தாய் மொழி பற்று

மனிதன் கண்டுபிடித்த அற்புதமான விஷயங்களில் மொழிகளுக்குதான் முதலிடம். தாய்மொழி இல்லையென்றால் நாம் என்ன செய்வோம்... யோசித்துக் கூட பார்க்க முடியாது. உலகில் செழுமையும் பழமையும் கலந்த பல மொழிகள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், சமஸ்கிருதம் போன்றவை முதன்மையானவை. எழுத்துரு இல்லாத மொழிகள் எளிதில் மக்களிடையே இருந்து மறைந்து விடும். புத்தர் பேசிய மகாதி மொழி கூட அப்படித்தான் அழிந்து போனது.

வங்கதேசத்தின் தாய் மொழி பற்று

இந்த நூற்றாண்டுக்குள், இன்னும் பல பழமையான மொழிகள் அழிந்து போகும் நிலையில் உள்ளன. மொழிகளைக் காக்க உலகம் முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.  ஒரு மொழியைத் திணிப்பது இன்னொரு மொழியை அழிப்பதற்குச் சமம் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. அதனால், தங்களது விருப்பத்தை மீறி ஒரு மொழி திணிக்கப்படும்போது போராட்டங்கள் வெடிக்கின்றன.

இன்று உலக தாய் மொழி தினம். இப்படி ஒரு தினம் பிறக்கக் காரணமாக அமைந்ததும், ஒரு போராட்டமும் உயிர்  தியாகமும்தான்.
வங்க தேசம் என்றால் உடனே 1971-ல் நடந்த போர்தான் நமக்கு நினைவுக்கு வரும். பாகிஸ்தானிடம் போரிட்டு வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கியது இந்தியாதான். ஆனால், அந்த பிரிவினைக்கான போராட்டம் வெடிக்க முக்கிய காரணமாக இருந்தது வங்கதேச மக்களின் தாய் மொழிப்பற்று. இயற்கையாகவே வங்க தேசம் நம் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள பகுதி. அதனால்தான் மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என முன்னர் அழைப்போம். இங்கு வசிக்கும் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் என்றாலும் அவர்களது தாய்மொழி வங்காளம். அதே வேளையில் பாகிஸ்தானில் வசிக்கும் மக்களின் தாய் மொழி உருது.

பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு, பாகிஸ்தான் முழுமைக்கும் உருது தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் இரண்டுக்குமே உருது மட்டுமே தேசிய மொழி என சட்டம் இயற்றப்பட்டது. பாகிஸ்தான் நாட்டு கரன்சியில் இருந்து வங்க மொழி அகற்றப்பட்டது. பாகிஸ்தான் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், வங்க மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியில் இருந்து நீக்கியது

இதனால் கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் கடும் கோபம் கொண்டனர். 1947 செப்டம்பர் 15-ல் தாய் மொழியைக் காக்க வேண்டுமென கருதி Tamuddun Majlish என்ற அமைப்பு உருவானது. வங்க மொழியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். இந்த அமைப்பின் தலைவராக டாக்கா பல்கலையின் இயற்பியல் பேராசிரியர் அபுல் காசிம் என்பவர் இருந்தார். மாணவர்களிடையே போராட்ட குணத்தை விதைத்தார். மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். களம் சூடானது.

போராட்டம் தீவிரமடையவே,  1948 மார்ச் 19-ல் பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னா, டாக்கா வந்தார். மார்ச் 24-ல் டாக்கா பல்கலைக்கழகத்தில்  மாணவர்களிடையே ஜின்னா உரையாற்றினார். அப்போது, ''முஸ்லிம்களைப் பொறுத்தவரை உருதுதான் ஒரே மொழி. அதனை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு விரோதிகள்''  என்றார். பின்னர் மாணவர்களிடத்திலும் தேசிய மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பேசினார். ஆனால், மாணவர்கள் மசியவில்லை. 1947-ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் நடந்து கொண்டேதான் இருந்தது. இந்தப் போராட்டத்தில் 'வங்கதேசத்தின் தந்தை ' என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானும் முக்கிய பங்காற்றினார்.

மாணவர்கள் போராட்டத்துக்கு டாக்கா மருத்துவப் பல்கலைக்கழகம்தான் முக்கிய ஸ்தலமாக இருக்கிறது என  பாகிஸ்தான் கருதியது. 1952 பிப்ரவரி 21-ம் தேதி அந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், முகமது சலாலூதீன், அப்துல் ஜபார், அப்துல் பெர்கத், ரிஃப்லுதீன் அகமது, அப்துல் சலாம் ஆகிய மாணவர்கள் பலியாகினர். உலகின் முதல் மொழிப்போர் தியாகிகள் இவர்கள்தான். மாணவர்கள் பலியானதையடுத்து, டாக்கா முழுவதுமே கலவரம் பரவியது. அடுத்த நாள் மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் குதித்தனர். அப்போதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 4 பேர் இறந்தனர். வங்கதேசமே ரணகளமாகிப் போனது. வங்க தேச அரசியல் தலைவர்களையும், மாணவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஆயிரக்கணக்கானோர் துன்புறுத்தப்பட்டனர். ஆனாலும் மொழிப்பற்று மிக்க மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. 1954 மே 7-ம் தேதி வங்க மொழியை பாகிஸ்தான், அரசு மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்தது. 1956-ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வங்க மொழியை ஆட்சி மொழிகளுல் ஒன்றாக அங்கீகரித்து சட்டம் இயற்றியது. ஒரு கட்டத்தில் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே போர் நடந்தது. 1971-ல் கிழக்கு பாகிஸ்தான் மேற்கில் இருந்து பிரிந்தது. தாய்மொழி மீது கொண்ட பற்றால் வங்கதேசம் என்ற புதிய நாடும் பிறந்தது.

இன்று உலக தாய் மொழி தினம்!

No comments:

Post a Comment