Friday 24 March 2017

பகத்சிங்

“நான் இறந்தால், என் பிணத்தை வாங்காதே... அப்படி வாங்கினால், நீ அழுவாய்; அதனால், புரட்சிக் கனலும் தாக்கமும் குறைந்துவிடும். எனவே, என் உடலை வாங்காதே” என்று தன் தாயிடம் சொன்னவர், இந்திய விடுதலைக்காகப் போராடிய பகத்சிங். அவருடைய நினைவு தினம் இன்று.

இந்தியாவில் சுதந்திர வேட்கை 1857-ல் இருந்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கும் அவர்கள் நம்மிடம் நடந்துகொண்ட விதத்தையும் எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த காலம். பல உயிர்களை இந்தியா தியாகம் செய்துவந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராகப் பல போராட்ட வீரர்கள் களத்தில் இறங்கி, தங்கள் நாட்டுக்காகத் தங்கள் பங்களிப்பை அளித்து வந்தனர். ஆனால், போராட்டம் நமக்குச் சாதகமாக அமையும் என்றும், சுதந்திரம் கிடைத்துவிடும் என்றும் இந்திய மக்கள் நம்பினர். மகாத்மா காந்தி வருகைக்குமுன்... வருகைக்குப்பின் என்ற நிலை இந்திய வரலாற்றில் அமைந்தது என்றால், அது மிகையாகாது. காந்திஜியின் அஹிம்சை வழிப் போராட்டங்களில் ஒன்றான ஒத்துழையாமை இயக்கத்தில் இந்தியா முழுதும் பலர் பங்குபெற்றனர். அதில் ஈர்க்கப்பட்ட ஒரு 13 வயது சிறுவன்தான் பகத்சிங். ஆனால், சௌரிசௌரா நிகழ்வுக்குப் பிறகு, அஹிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது, வேறு வகையானப் போராட்டத்தினால் மட்டுமே சாதிக்க முடியும் என்று எண்ணிய பகத்சிங், மார்க்சீசியக் கொள்கைகளோடும் கம்யூனிசக் கொள்கைகளோடும் மீசையை முறுக்கி களத்தில் நின்றார். 1926-ம் ஆண்டு தன் நண்பர்களாகிய ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரோடு எழுச்சிப் பெற்று புரட்சி நாயகர்களாக உருவெடுத்து உயர்ந்து நின்றார். 1928, சைமன் கமிஷனில் சட்டவரையரைகள் கொண்டு வரப்பட்டபோது, அதனை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் தலைவர்கள் போராடினர். அதில், பிரிட்டிஷ் போலீஸார் கடுமையாகத் தடியடி நடத்த ஆணையிட... அந்தச் சம்பவத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் லாலா லஜபதிராய் உயிரிழந்தார்.

இதனால் கடும்கோபத்துக்கு ஆளான இந்தப் புரட்சியாளர்கள், சாண்டர்ஸ் என்னும் ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தலைமறைவாயினர். அதே வருடம், ஏப்ரல் 8-ம் தேதி தொழிலாளர்களுக்கு எதிராகப் பல சட்டத்திட்டங்களை அமல்படுத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். அதில், இந்த மூன்று நாயகர்களும் குண்டுகளை வீசினர். இதில், யாருக்கும் உயிர்ச்சேதம் இல்லை. காரணம், புரட்சி என்பது மக்களைக் கொல்வதிலோ, துன்புறுத்துவதிலோ இல்லை என்ற நிலையான நாட்டுப்பற்றைக் கொண்டிருந்தனர். இந்தக் குண்டுவீச்சு நடந்து முடிந்தபிறகு, மூவரும் சரணடைந்தனர். சாண்டர்ஸை கொலை செய்ததற்கும் குண்டுவீச்சில் ஈடுபட்டதற்கும் பிரிட்டிஷ் அரசு இவர்களுக்கு மார்ச் 24-ம் தேதி தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், சில காரணங்களுக்காக முதல் நாளே தூக்கிலிடப்போவதாக தகவல் வந்தது. அந்தச் சமயத்தில் பிரிட்டிஷ் அரசு ஓர் ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தது. அதன் பெயர்தான் காந்தி - இர்வின் ஒப்பந்தம். இதன் தலையாய காரணமே பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களை தூக்கில் போடலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்குத்தான். ஆனால், இந்த ஆலோசனையில் காந்திஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அதற்காகத்தான், 'இர்வின் – காந்தி ஒப்பந்தம் என்றுவைக்காமல் காந்தி – இர்வின் ஒப்பந்தம் என்று வைத்தனர்' என வரலாறு கூறுகிறது. ஆனால், காந்தியோ “உங்கள் சட்டம் என்ன சொல்கிறதோ, அதைச் செய்யுங்கள்..” என்றார். தூக்குத் தண்டனை முடிவான பிறகு, பகத்சிங்கின் தந்தை கிஷான் சிங், ஆங்கிலேய அரசுக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தை அனுப்பினார். இதனை அறிந்த பகத்சிங், “நீங்கள் செய்த செயல் இந்த நாட்டையும் என் தாத்தா அர்ஜுன் சிங்கையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இனி, நான் உங்களைத் தந்தை என்று எண்ணமாட்டேன். நீங்கள் செய்த காரியத்துக்கு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்று கடிதம் அனுப்பினார். அவர் சிறையில் இருந்தபோது, சுரண்டலற்ற சமநீதி கிடைக்கும் சமுதாயம் அமைய வேண்டும், மத வன்முறைகளை எதிர்ப்பதற்கும், மதவாதங்களை ஒழிப்பதற்கும் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என எப்போதும் சிந்தித்துக்கொண்டிருந்தார். அத்துடன் அங்கு, தினமும் டைரி எழுதும் பழக்கமுடைய பகத்சிங், 404 பக்கங்களை எழுதியிருந்தாராம். பகத்சிங் ஒரு புத்தகப் பிரியர். எப்போதும் கையில் ஏதேனும் ஒரு புத்தகத்தை வைத்திருப்பார். சிறையில் இருந்த காலத்தில், வசதிகள் இல்லை; தினமும் செய்தித் தாள் வேண்டும்; உணவு சரியில்லை என அனைத்துக்கும் உண்ணாநோன்பு இருந்து அதில் வெற்றியும் கண்டார்

“சாகப்போகிறோம் என்றாகிவிட்டது.. இந்த நேரத்தில் புத்தகம் எதற்கு” என்று ராஜ்குரு கேட்ட கேள்விக்கு,  “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்.” என்று புன்னகைத்துக்கொண்டே பதிலளித்தார் புரட்சி நாயகன் பகத்சிங். தூக்குத் தண்டனைக்காக... தூக்கு மேடையை நோக்கிவந்த மூவரில், பகத்சிங்... “எனக்கு ஒரு 10 நிமிடம் கால அவகாசம் கொடுங்கள்” என்றார். எதற்கு என்றதற்கு, “ஒரு புரட்சியாளன், இன்னொரு புரட்சியாளனிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்றார். எதுவும் புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பிறகுதான் அவர் கையை உற்றுநோக்கினர். ஆம், அவரது கையில்.. லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற புத்தகம் இருந்தது. இறுதியாக, அங்கிருந்த ஆங்கிலேயரைப் பார்த்து, “இந்த உலகில் நீதான் அதிர்ஷ்டக்காரன்.. ஏன் தெரியுமா? ஒரு 23 வயது இளைஞன், தன் நாட்டுக்காக மரணத்தை முத்தமிட்டு வரவேற்கும் காட்சியைப் பார்க்க, உனக்கு பாக்யம் இருந்திருக்கிறது” என்றார் புன்சிரிப்புடன். பின், தூக்கிலடப்பட்டார் அந்தப் புரட்சிவீரன. 23 வயது இளைஞனான பகத்சிங்கின் செயல்களும் தியாகங்களும் அவர் பெயரை என்றும் வரலாறு பேசும்படி செய்துவிட்டது.

No comments:

Post a Comment