Friday 24 March 2017

இறையன்பு ஐ.ஏ.எஸ்- 'வலி(மன)களைத் தாங்குவோம்'

இறையன்பு ஐ.ஏ.எஸ்- 'வலி(மன)களைத் தாங்குவோம்'

வடகிழக்கு மாகாணங்களில் யாராவது கீழே விழுந்தால் நம்மைப்போல் அவர்கள் 'அச்சச்சோ' என்று சூள் கொட்டுவதில்லை. விழுந்தவரைப் பார்த்து எல்லாரும் சிரிப்பார்கள். அவரும் வெட்கமாக சிரித்துக்கொண்டே எழுந்து வருவார். நம்மூரில் நாம் பரிதாபப்பட்டதும் சாதாரணமாக எழுந்தவர் அழுது கொண்டு வருவார். வலியை ஒட்டுமொத்த சமூகம் எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதே அச்சமுதாயத்தின் வலிதாங்கும் திறனை நிர்ணயிக்கிறது.

சின்னவயதிலிருந்தே வலியைப் பெரிதுப்படுத்தாத சூழலை உருவாக்கினால் அதற்காக மனம் உடைகிற வழக்கம் துளிர்விடாது. வலிகளைத்தாங்கும் போது தான் வாழ்க்கையில் நாம் எண்ணியதைச் சாதிக்க முடியும். உலகின் தலைசிறந்த நகைச்சுவைகள் யூதர்களிடம் புழங்குகின்றன. மிகுந்த துயரங்களுக்கு இடையே காலம் தள்ளியவர்கள் அவர்கள். அவர்களுடைய நகைச்சுவையே அவர்களுக்கு உயிர்கொடுத்தது. அந்தச்சிரமங்களை எருவாக ஆக்கிக் கொண்டு எண்ணற்ற கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அதிக நோபல் பரிசுகளை அவர்கள் தட்டிச் ​செல்கிறார்கள் . வலியைக்கூட சிரிக்க கற்றுக் கொண்டு புறந்தள்ள வேண்டும் என்பது அவர்கள் நெறி. வள்ளுவரும் இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்னது அதனால் தான்.

உடல்வலியைத் தாங்கி கொள்கிறவர்கள் கூட மனவலியைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. நாம் எப்போது நம்மை விட மற்றவர்கள் முக்கியம் என்று நினைக்கிறோமோ, அப்போது மனவலியைத் தவிர்க்க முடியாது. நம்மை நிருபிக்க நினைக்கிற போதும் நம்மைவிட அடுத்தவர்கள் முக்கியம் என்று நினைக்கிற போதும் நாம் மகிழ்ச்சியை காவு கொடுப்போம். இன்னொருத்தர் நம்மைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொன்னால் அதற்காக நாம் அவமானப்படவேண்டியதில்லை. உண்மையான அவமானம் நம்மிடம் இருந்து உருவாக்க வேண்டும். நாமே நினைத்துக்கூசுகிற மாதிரி ஒரு செயலைச்செய்தால் அது நம்மை வருத்த வேண்டும் பிறகு திருத்த வேண்டும். மாட்டிக் கொண்டால் உடல் கூசுவது அவமானத்தில் அடங்காது.

ஜப்பானில் உடல் வலியில் ஒப்பற்று விளங்கும் சாமுராய்கள் கூட தற்கொலை செய்து கொள்வது சகஜம். செப்புக்கு என்று அதற்குப்பெயர். மனவலி ஒரு விதமான கண நேர வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. நமக்கு உரைக்க வேண்டும் என்பதற்காக சிலர் வைவது உண்டு. அது நியாயமான குறையா என்று யோசித்து பார்க்க வேண்டியது நம்முடைய கடமை.

'நான் இறந்ததும் நீ வருத்தப்படுவாய்' என்கிற மனோபாவம் ஜப்பானில் அதிகமிருந்தது. இதற்கு 'மாயாஜாலசிந்தனை' என்றுபெயர். ஒருவர் அவமானப்படுத்திவிட்டால் அவருடைய வீட்டிற்குச் சென்று அவர் வாசலில் நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்வது பழைய ஜப்பானியமரபு. இன்றும் சில இடங்களில் நம்மூரில் மனவலியை ஏற்படுத்தியவர்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிற மாயாஜாலசிந்தனை இருக்கவே செய்கிறது. அவரவர்களுக்கு இருக்கிற பிரச்சனையில் இவையெல்லாம் அதிகத்தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதே யதார்த்தம்.

மாதவிலக்கு வலியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சில செய்திகளைப் பார்க்கலாம். மாதவிலக்குச் சுழற்சி மனச்சோர்வை ஏற்படுத்துவதால் அது ஏற்கனவே தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களை அதை நோக்கி தூண்டுகிறது. அதை மரணத்தை வரவழைக்கும் வலியாகக் கருத வேண்டியதில்லை. மருத்துவர் திருநாவுக்கரசு கூறுவதைப் போல பிரசவலியை விடவா மற்ற வலிகள் பிரமாண்டமானவை.

என​வே வலியும் (மன) ஒரு முக்கியமான அனுபவம். சிரிப்பைப் போல கண்ணீரும் தேவையான ஒன்று. அழுகிற போது துயரத்தினால் உடலில் உண்டாகும் ரசாயனங்கள் கண்களின் வழியாக கழிகின்றன. வலிகளைத் தாங்குகிறவர்களே வரலாறு படைக்கிறார்கள்.

நன்றி: தினமணி-இ​ளைஞர் மலர்.

No comments:

Post a Comment