Sunday 10 April 2016

திண்ணையை இடித்து தெருவாக்கு

 திண்ணையை இடித்து தெருவாக்கு

உட்கார் நண்பா நலந்தானா?-நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டுவிரல் நீ சுருங்குவதா?-உன்
சுய பலம் உனக்குள் ஒடுங்குவதா?

புல்லாய்ப் பிறந்தேன் நானென்றே இனி
புலம்ப வேண்டாம்-நெல்கூட
புல்லின் இனத்தை சேர்ந்ததுதான் -அது
பூமியின் பசியைப் போக்க வில்லை?

கடலின் நான் ஒரு துளிஎன்று
நீகரைந்து போவதில் பயனென்ன?
கடலில் நான் ஒரு முத்தென்று -நீ
காட்டு; உந்தன் தலைதூக்கு

வந்தது யாருக்கும் தெரியாது- நீ
வாழ்ந்ததை உலகம் அறியாது
சந்ததிகூட மறந்துவிடும் -உன்
சரித்திரம் யாருக்கு நினைவு வரும்?

உணவு ஆடை வீடென்று -உன்
உடைமையைப் பெருக்கிக் கொள்ளாதே!
மனைவி மக்கள் வீடென்று -உன்
மனதின் எல்லையை சுருக்காதே

திண்ணைதானா உன்தேசம்-உன்
தெருவொன் றேவா உன் உலகம்
திண்ணையை இடித்து தெருவாக்கு -உன்
தெருவை மேலும் விரிவாக்கு

எத்தனை உயரம் இமய மலை -அதில்
இன்னொரு சிகரம் உனது தலை
எத்தனை ஞானிகள் பிறந்த தரை-நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை?

பூமிப் பந்து என்ன விலை -உன்
புகழைத் தந்து வாங்கும் விலை;
நாமிப் பொழுதே புறப்படுவோம்-வா
நல்லதை எண்ணிச் செயல்படுவோம்

தெரியலையா? வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்-இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்காரர் யார்? உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும் அந்தக் கவிஞரின் பெயர் தாராபாரதி.
இந்த வரிகளே இப்படி என்றால் இந்தக் கவிதை முழுவதும் எப்படி இருக்கும்.

மூலையில் கிடக்கும் வாலிபனே-தினம்
முதுகில் வேலையைத் தேடுகிறாய்
பாலை வனந்தான் வாழ்க்கையென- வெறும்
பல்லவி எதற்குப் பாடுகிறாய்

விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலிநீ தூங்குவதா?
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று
எங்கே கிழக்கெனத் தேடுவதா?

விழிவிழி உன்விழி நெருப்பு விழி -உன்
விழிமுன் சூரியன் சின்னப் பொறி
எழு எழு தோழா உன் எழுச்சி -இனி
இயற்கை மடியில் பெரும்புரட்சி

நீட்டிப் படுத்தால் பூமிப்பந்தில்
நீதான் பூமத் தியரேகை-நீ
போட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான்
பூமி வலம் வரும் புதுப் பாதை

வெறுங்கை என்பது மூடத்தனம்-உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும்-உன்
கைகளில் பூமி சுழன்று வரும்

கட்டை விரலை விடவும் இமயம்
குட்டை என்பதை எடுத்து சொல்
சுட்டு விரலின் சுகமாய் வானம்
சுருங்கினதென்று முழக்கிச் செல்

தோள்கள் உனது தொழிற்சாலை -நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை
தோல்விகள் ஏதும் உனக்கில்லை-இனி
தொடு வானம்தான் உன் எல்லை

கால்கள் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடி வரும்-உன்
தோல்க ளிரெண்டும் தெற்கு வடக்காய்-
துருவங் களுக்குப் பாலமிடும்

மண்புழு அல்ல மானிடனே - நீ
மாவலி காட்டு வானிடமே!
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே-இவை
வேலை களல்ல வேள்விகளே!

No comments:

Post a Comment